உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 4

விக்கிமூலம் இலிருந்து

டாக்டர் சந்திராவுக்கு, காத்திருப்பதோ அல்லது காக்க வைப்பதோ, அறவே பிடிக்காது. இதனால்தான், அவள் சினிமாவுக்குக் கூட போவதில்லை. ஆனாலும், மனோகருக்காக அவள் காத்திருந்தாள். நல்ல வேளையாய், இந்தக் கோணச்சத்திர, அச்சகக் கூடத்திற்கு அருகேயே, அவனைப் பாத்து விட்டாள். திருமண அழைப்பிதழை, புரூப் பார்க்க வந்தானாம்… எவனை, ஆளனுப்பி, வெள்ளையன்பட்டியில் இருந்து கூப்பிட நினைத்தாளோ, அவன், தானாய் கிடைத்ததில், அந்த அதிருப்தியிலும் ஒரு திருப்தி.

சந்திராவின் கண் முன்னாலயே, மனோகரும் கலை வாணியும் ஒன்றாய் சோடி சேர்ந்து இன்னமும் நிற்கிறார்கள். ராமபிரான், சீதாப்பிராட்டி சோடி மாதிரி; போன வாரம், அந்த மருத்துவ முகாம் முடிந்ததும், கலைவாணி, தன்னையும், சக டாக்டர்களையும், வலுக் கட்டாயமாக வீட்டிற்குக் கூட்டிப் போய் உபசரித்த விதத்தை, மறக்க முடியவில்லை… ஒரே குடும்பத்தில் எல்லோருமே நல்லவர்களாக இருக்க முடியுமா… இந்த மனோகர் மட்டும் என்ன… கலைவாணி வீட்டில், பசுமாடு சத்தியாக்கிரகம் செய்ததால், இவன் தன் வீட்டிற்கோ அல்லது எங்கேயோ போய், ஒரு செம்பு நிறைய பால் கொண்டு வந்தவன்; அந்தத் தெருவிலேயே, அந்த பாடி பில்டர் மைத்துனரிடம் பாற்செம்பை நீட்டியவன்… அந்தத் தெருவிலேயே, தங்களுக்காகக் காத்திருந்து, வழியனுப்பியவன்; கல்யாண மாப்பிள்ளை, நிச்சய தாம்பூலத்திற்கும், திருமணத்திற்கும் இடையே, பெண் வீட்டுக்குள் நுழையக் கூடாது என்ற பத்தாம்பசலி உருப்படாத வழக்கத்தை, இந்த மனோகருக்காவது விட்டுக் கொடுத்திருக்கலாம். ஒரு வேளை அப்படி தெருவில் நின்றதே ஒரு அபசகுனம் மாதிரியோ…

50 பாலைப்புறா

டாக்டர் சந்திரா, இருக்கையில் எழுந்து, மனம் கனக்க, அங்குமிங்குமாய் சுற்றினாள். அவன் அழைப்பிதழை சரி பார்த்து, மோட்டார் பைக்கில் ஏறி, கோணச்சத்திரம் பிரதான சாலையில் ஒடி, ரயில் நிலையப் பாதைக்குத் திரும்பி, வடக்குப் பக்க மண்சாலையில் தாவி, சுடுகாட்டுக்குப் பக்கமாய் உள்ள, இந்த சுகாதாரநிலைய வளாகத்திற்குள் வருவதை, சின்னச்சின்ன கால அவகாசத்துடன் கணக்குப் போட்டாள். அவள் தலைக்குள் அந்த மோட்டார் பைக், சுடுகாட்டை நெருங்குவதுபோல ஒடியது.

கிளிப்பச்சை சேலையும், வெள்ளைக் கோட்டுமாக, வீணைக்குப் பதிலாக ஸ்டெதாஸ்கோப் பிடித்த சரஸ்வதி தேவிபோல் தோன்றிய சந்திரா, கடிகாரத்தை, படபடப்பாய் பார்த்தாள், இந்த இன்சார்ஜ் டாக்டர். முஸ்தபா, அசல் முசுடு, லீவ் லட்டரை எழுதி வைத்துவிட்டு, எங்காவது தொலைந்து போகும். போய்விட்டு, திரும்பி வந்ததும், அந்த லீவு லட்டரைக் கிழித்துப் போடும். போகும் போது மட்டுமே பல்லை இளிக்கும். மற்ற சமயங்களில், பல்லைக் கடிக்கும் ஆசாமி. எழுதுவதே கிழிப்பதற்கு என்பது மாதிரி, ஒரு விடுமுறை விண்ணப்பத்தை, இன்றைய தேதியோடு நேற்றே எழுதி வைத்துவிட்டது. இன்று காலையிலே இவளை டூட்டிக்கு வரச் சொன்னது. இவ்வளவுக்கும், இவளுக்கு இன்று ‘ஆப்’. ஆனாலும் அதுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. இவள்தான் மெட்ராஸ் அத்தான் சங்கரன் வரப் போவதைக் கணக்கில் வைத்து 'காலையில் லேட்டாகும் பத்து மணி வரைக்குமாவது இருங்க டாக்டர்’ என்று சொல்லிவிட்டாள். இப்போதே பத்தே கால். இப்போது இவளும் அவசரமாய் போய், மனோகரும், இங்கே வந்துவிட்டு, கல்யாண அவசரத்தில் ஊருக்குப் போய்விட்டால், ஒரேடியாய்க் கதை முடிந்திடும்... அம்மாவிடம் சொல்லி, அவரை சுகாதார நிலையத்திற்கும் வரச்சொல்லமுடியாது. தனித்துப் பேசவேண்டிய விவகாரம். இந்நேரம் இந்த முஸ்தபா, நோயாளிகளுக்கு வலிக்கும் படியாக ஊசி போடும். என்ன சுகாதார நிலையமோ, ஆரம்பக்கட்டத்திலேயே நிற்கிறது.

டாக்டர் சந்திரா, எந்த நேரத்தில் தற்காலிகமாக அந்த மனோகரை மறந்தாளோ, அந்த நேரத்தில் மோட்டார் பைக் சத்தம். டாக்டர் முஸ்தபா மீதுள்ள எரிச்சலையும் மறந்தவளாய் வெளிக் கதவைத் திறந்தாள்... மனோகர்தான்.

“வணக்கம் டாக்டர்".

"அங்கேயே வணக்கம் போட்டுட்டமே... உள்ளே வாங்க”.

டாக்டர் சந்திரா, ‘வருகிறாரா’ என்பது போல் திரும்பத் திரும்பப் பார்த்து விட்டு, அவனை உள்ளறைக்குள் கூட்டிப் போனாள். சு. சமுத்திரம் 51

குண்டுங்குழியுமான தரையையும், பாச்சான், பல்லி வகையறாக்களையும் பார்த்த மனோகர் ஆச்சரியமாய்க் கேட்டான்.

‘என்ன டாக்டர். இந்த குவார்ட்டர்ஸ் இப்படி மாட்டுத் தொழுவம் மாதிரி இருக்குது'?

‘ஆயிரம் ரூபாய் கொடுத்து குதிரை வாங்குவாங்க. அதைக் கட்டிப் போட ஐந்து ரூபாய்க்கு கயிறு வாங்க மாட்டாங்க. இதுதான் கவர்ன்மென்ட்’.

‘அப்போ நம்ம வீட்டுக்கு அறுத்துட்டு வந்திடுங்க. இல்லன்னா கலைவாணி வீட்டில் அவள் அறையில் இருங்க. அவள் மெட்ராஸ் காரியாய் ஆகப் போறவள் பாருங்க. இந்த குவார்ட்டர்ஸ் பார்க்கவே சகிக்கல’.

"எதைவிட முடியாதோ... அதை சகித்துத்தானே ஆகணும். எப்படி நம்ம உடம்புக்குள்ளே நமக்குத் தெரியாமல், நல்லதும், கெட்டதும் நடக்கிற மாதிரி, ஒரு குடியிருப்புக்குள்ளயும், பல்லி, பாச்சான், பாம்புகூட வந்துடுது. நாம்தான் அதோட சேர்ந்து வாழப்பழகிக்கணும். எம்மா ஹார்லிக்ஸ் கொண்டுவாங்க”

"காபி இல்லியா டாக்டர்?”

“இனிமேல்... நீங்க காபி குடிக்கக் கூடாது. உடம்பிலே நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிற... இல்லாவிட்டால், குறைகிற அந்த சக்தியை ஒரளவுக்கு தடுக்கிற வேர்க்கடலை, முட்டை போன்ற சத்துணவு பொருட்களையும், சக்தித் தரக்கூடிய வாழைப்பழம், கோதுமையையும், கிருமிகளைத் தடுக்கிற மொச்சைக் கொட்டை, பாசிப்பருப்பு வகையறாக்களையும், நீங்க அதிகமாய் சாப்பிடணும்".

மனோகர், அவளைக் கண் நிறுத்திப் பார்த்தான். ஒரு கப் காபி கேட்டதுக்கு, இவ்வளவு பெரிய பாட்டி உபதேசமா...? ஆனாலும் சிரித்துக் கொண்டான். வேலைச்சுமையை நினைத்ததும், உடல், அந்த நாற்காலியில் உட்கார்ந்தபடியே, மானசீகமாய் பறந்தது. இந்த கோணச் சத்திரத்திலேயே, ஒரு மியூசிக் பார்ட்டி இருக்குதாம். கண்டுபிடித்து, அட்வான்ஸ் கொடுக்க வேண்டும். தென்காசியில் போய் வீடியோக்காரனுக்கு முன் பணம் நீட்ட வேண்டும். அப்புறம் சாமியானா பந்தல்... அப்பா, அம்மா வழியாய்ச் சொன்னதை நிராகரிக்க வேண்டும். மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தாக வேண்டும். அப்பா கிடக்கார். ஊர்க்காரன் நம்மையும் சேர்த்துச் சாப்பிடுவான். ஒரு வேளை சோறு போட்டால் போதும், என்றாராம். அசல் காட்டுமிராண்டி... ஏதோ பிறந்த கடனுக்கு பிள்ளையாய் இருக்க வேண்டியதாய்தான் உள்ளது. இன்னும் ஹார்லிக்சைக் காணுமே... 52 பாலைப்புறா

வீடியோக்காரன், வேறு எதுக்காவது ‘புக்' ஆகிடப் போறான். கலைவாணிக்கு வாக்கு கொடுத்தாகி விட்டது. முதலிரவிலேயே திருமணக் காட்சிகளைப் போட்டுக் காட்டுவதாக; முன்னாலா.. பின்னாலா என்பது அவள் மூடைப் பொறுத்த விஷயம்.

மனோகர். தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான். பிறகுதான் டாக்டரம்மா சந்திரா என்பவள் இருப்பதைக் கண்டுபிடித்தான்.

"என்ன டாக்டர். இன்னும் ஹார்லிக்ஸைக் காணோம்?”

‘இப்படியெல்லாம் எமோஷனலாய் ஆகப்படாது. எதையும் தாங்கிக்கணும். எது வந்தாலும் ஏத்துக்கணும்’

அவளை ஏறிட்டுப் பார்த்த மனோகர், தன்னைப் பார்க்காமலேயே மேஜையைப் பார்த்தவளை சந்தேகமாய் நோக்கினான். இவள் என்ன மென்டலா.. ஊரில் பார்த்தப்போ அப்படி தெரியலியே?

இதற்குள், ஒரு வயதான அம்மா, முக்காடு போடாத குறையாக உள்ளே வந்து ஒரு தட்டில் ஆவி பறக்கும் காபியையும், ஆடை படர்ந்த ஹார்லிக்சையும் கொண்டு வந்து மேஜையில் வைத்தாள். வந்த கையோடு ‘சங்கரைக் காணோமே' என்றாள்; அவனை சந்திராவின் மனதுக்குள் திணிப்பது போல். ‘வந்தால் வரட்டும். வராட்டால் போகட்டும். நீங்க போங்கம்மா. யாருடனாவது பேசிட்டு இருக்கும் போது நிற்கப்படாதுன்னு எத்தனை தடவ சொல்றது', என்றாள் சந்திரா. அந்த அம்மா, மனோகரை, கடித்துக் குதறப் போவது போல் பார்த்தாள். இது என்ன புது சிநேகம்...

டாக்டர் சந்திரா, ஹார்லிக்ஸ் தம்ளரை, அவன் பக்கமாகத் தள்ளிவிட்டு யோசித்தாள். எப்படிச் சொல்வது? இந்த டாக்டர், தாடிக்கார அசோகன் மட்டும் இருந்திருந்தால், அவரிடம் பொறுப்பை விட்டிருக்கலாம். ‘கன்வின்சிங்காய்' சொல்வார். மனிதர், இந்நேரம் டில்லியில் இருப்பார். அப்புறம் நியூயார்க், எய்ட்ஸ் சிகிச்சை பற்றி ஒரு கருத்தரங்கு. ஒரு உலக மாநாடு. எவரையும் எதுக்கும் அணுகாத, இந்த கோணங்கி டாக்டருக்கு எப்படித்தான் சான்ஸ் கிடைத்ததோ!

டாக்டர், சந்திரா, பேச்சை லைட்டாக ஆரம்பித்து, படிப்படியாய் சீரியஸாக கொண்டு போக நினைத்தாள். எங்கேயோ படித்ததுபோல்...

"நீங்க பேச்சுலரா... அன் மேரீடா?”

"என்னம்மா என்கிட்ட போய் சு. சமுத்திரம் 53

"நான் அம்மா இல்ல... டாக்டர்; சொல்லுங்க... நீங்க கல்யாணம் ஆகாதவரா... பிரம்மச்சாரியா? ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு”.

‘சொல்லமாட்டேன்’.

‘கலைவாணி ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு. அவளை கண்கலங்காமல் வைக்கிறதுதானே ஒங்க லட்சியம்’.

‘இது ஒரு நெகட்டிவ் அணுகுமுறை. அவளை கண்கலங்காமல் மட்டுமல்ல, எப்போதுமே, அவளை சிரிப்பும் கும்மாளமுமாய் வைக்கணும். இதுதான்.... என்னோட லட்சியம்’.

"அதுக்காக ஒரு சின்ன தியாகம் செய்வீங்களா?”

“சொல்லுங்க”.

"கல்யாணத்த மூன்று மாதம் ஒத்தி வைக்க முடியுமா?”

மனோகர் நிமிர்ந்து உட்கார்ந்தான். இவள் மென்டல் மட்டுமில்ல. மென்டல் ஆக்குகிறவள்;

"அது எப்படி முடியும்?”

“எப்படியோ முடியணும்!”

"இப்படி... உத்தரவு போடுறது மாதிரி பேசினால் எப்படி டாக்டர்? எங்க ஊர் முழுக்கும், எங்க கல்யாணப் பேச்சுத்தான் அடிபடுது. இந்த சுபகாரியம், வேற மாதிரி அடிபடுறதை, கலையே விரும்ப மாட்டாள்”.

‘இப்போ அவள் விரும்புறாளா விரும்பலியா என்கிறது இல்ல பிரச்சினை. அவளுக்கு எது தேவை என்கிறதுதான் முக்கியம். விருப்பத்தை தேவையாக்கினால், அது விவகாரத்தில கொண்டு போய்விடும். மூணேமூணு மாசம்... அப்புறம் யோசிக்கலாம்’.

‘அவளுக்கு ஏதும் நோய் இருக்குதா டாக்டர்’.

"நோ... நோ. நல்ல ஆரோக்கியம். அதனாலதான் சொல்றேன்”.

"மூணு மாதத்திற்கு யோசிக்கலாம்னு சொன்னிங்க. இப்போ வேற மாதிரி பூடகமாய் சொல்றீங்க. பச்சையாவே கேட்கிறேன் டாக்டர். இதுக்கும், ஒங்களுக்கும் என்ன சம்பந்தம்?”

“பாத்தீங்களா! இப்பவே இப்படி உணர்ச்சி வசப்பட்டால், அப்புறம் 54 பாலைப்புறா

எப்படி? ஒங்க ஹெல்த் கண்டிஷன் அப்படி இருக்குது".

"என்னோட ஆரோக்கியத்தைப் பற்றி எனக்குத் தெரியாதா டாக்டர்? போன வாராம், சோளிங்கருக்கு பிக்னிக் போனோம். பலர் மலை ஏற முடியாமல் தவித்தபோது, ஒரே மூச்சிலே உச்சிக்குப் போனவன் நான்!”

"ஒங்க ரத்தம் அப்படிச்சொல்லலியே?”

"ஒஹோ, மருத்துவ முகாம் சமாச்சாரமா? என் ஹார்ட் நல்லாயிருக்குதுன்னு நீங்கதானே சொன்னிங்க...!”

‘ஆனால் ரத்தத்தை சோதித்ததில் ஒரு இன்பெக்ஷன்’.

"சரி அதையாவது சொல்லுங்க”.

‘இப்போ சொல்லப்படாது; இன்னொரு டெஸ்ட் எடுத்துத்தான் உறுதி செய்யணும்’.

‘ஓ.கே. நீங்க பாட்டுக்கு உங்க வேலையைப் பாருங்க... நானும் என் வேலைய பார்க்கேன். ஒரு டாக்டரோட கடமை டென்ஷன் கொடுக்கிறது இல்ல. சரியான மென்டல்’.

மனோகர், அப்படிச் சொல்லிட்டு எழுந்தான். பிறகு உதட்டைக் கடித்தான். கல்யாண டென்ஷனில், அவனது ஜென்டில்மேன் பேச்சும், பறிபோய்விட்டது. ஆனாலும் இந்தம்மா அறுக்கிற அறுவைக்கு அதுதான் பதில்.

மனோகர் எழுந்தான். சந்திராவை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, பிறகு முதுகு காட்டி நடந்தான். பிறகு திரும்பி, ‘கல்யாணத்துக்கு கண்டிப்பாய் வாங்க' என்று சொல்லிவிட்டு மீண்டும் நடந்தான்.

டாக்டர் சந்திரா தடுமாறிப் போனாள். கூடவே கலைவாணியின் பளப்பளப்பான முகத்தின் கலகலப்பு, நெஞ்சைக் குத்தியது. அன்று, அவள் வீட்டு விருந்தோம்பலில் ஒரு லட்டுத்துண்டை எடுத்து இவள் வாயில், கலைவாணியே போட்டாள். பிறகு அய்யோ கையக்கடிச்சட்டிங்களே என்று கையை உதறி, பாசாங்கு பயம் காட்டினாள். அவள் வாழ்க்கையை இவர் கடிக்கப்படாது. தங்க ஊசி என்பதற்காக, அதைக் கண்ணில் குத்த முடியாது. போய்க் கொண்டிருந்தவனை நிறுத்துவதற்காகக் கத்தினாள்.

“மிஸ்டர் நீங்க கல்யாணம் செய்யப்படாதுன்னா... செய்யப்படாது. ஏன்னா ஒங்களுக்கு ஹெச்.ஐ.வி. இன்பெக்ஷன் இருக்கிறது மாதிரி தெரியுது." சு. சமுத்திரம் 55

அதுதான் எய்ட்ஸ் கிருமிகள்...ஒங்கரத்தத்தில் ஊடுருவி இருக்குது...’

மனோகர், நின்ற இடத்திலே நின்றான். அவளுக்கு முதுகு காட்டி நின்றான். கீரிக்குப் பயந்து போய், பாம்பு காட்டுமாமே... பின் தலையை அப்படி, நின்ற இடத்திலேயே உறைந்து போனான். கால்கள், தரையில் பதியம் போட்டது போல், அசைவற்று நின்றன. தரையில் காலே வேரானது போன்ற மனித மரமாய் நின்றான். ஆலமரமாய், அரசமரமாய் அல்ல. கள்ளி மரமாய்... கருவேல மரமாய்... 'எனக்கா? எய்ட்ஸ் எனக்கா? இருக்காது.... இருக்கவே இருக்காது’.

மனோகர், மெள்ள மெள்ள, உடல் திருப்பினான். அவனைப் பார்க்க சங்கடப்பட்டு, வேறு பக்கமாய் முகம் திரும்பியவளை ஒட்டு மொத்தமாய்ப் பார்த்தான். எய்ட்ஸைப் பற்றி பொத்தாம் பொதுவாய், அரைகுறையாய் தெரிந்து வைத்திருந்தவன், எல்லோரையும் போல் அதை எள்ளி நகையாடியவன்தான். ஆனால், டாக்டர் அசோகன், வெள்ளையன்பட்டி மருத்துவமுகாமில், படம்படமாய் போட்டுப் பேசியதில் இருந்து, ஒருநாள் வரை தூக்கமற்றுப் போனவன்... தனக்கு வரும் என்று அல்ல... எத்தனைபேர் தவியாய் தவித்து, துடியாய்த் துடிக்கிறார்களோ என்ற மனித நேயத்தில்... ஆனால், இன்று, இந்தக் கணத்தில், கண்களை மூடிக் கொண்டான். கற்பனையும் கற்பிதமும், தானாய் அவன் மனதை வரித்துக் கொள்கின்றன.

டாக்டர் அசோகன் விளக்கியதுபோல், உடலின் ஒரு அணுவின் லட்சக் கணக்கான மடங்கு சிறிய இந்த அற்ப ஹெச்.ஐ.வி. கிருமிகள், அற்புதமான உடல் கட்டமைப்புக்குள் ஒடும் ரத்தத்திற்குள் ஊடுருவி, வெள்ளை அணுக்களின் தளபதி அணுக்களில் குடிகொண்டு பல்லாயிரத்து பல்லாயிரமாய்ப் பல்கிப் பரவுகின்றன. இதோ யுத்தம் நடக்கிறது. இதில் எறும்பு ஊர, இரும்பும் தேயும் கதையாக, சிற்றுளி மலையை உடைக்கும் யதார்த்தமாக, இந்தக் கிருமிகள், மத யானைகள் போன்ற காவல் வீரர்களான வெள்ளை டி.நான்கு தளபதி அணுக்களை சிறுகச் சிறுகக் கொல்கின்றன. இதிலும் திருப்தி அடையாமல், இதோ அவன் உடம்புக்குள் ஊடுருவல்... பாரசைட் கிருமிகளைத் திறந்துவிட்டதால் அவனுக்கு மனிதக்கால், யானைக்காலாகியது. பங்கஸ் கிருமிகளை ஆடவிட்டு, அவனை தொழு நோயாளியாக ஆக்கிக் காட்டுகின்றது. பாக்டீரியா கிருமிகளை படரவிட்டு, நிமோனியாவில் எரிய வைக்கின்றன. மூளைக்குள்ளும், இந்த புத்திசாலிகள் ஊடுருவி, அவனுக்கு ஒரு கையும், காலும் விழுகின்றன. கக்குவான் பிடிக்கிறது. தொண்டை எங்கும், வாய் எங்கும், வெள்ளை வெள்ளையாய், ஏதோ ஒன்று ஆக்கிரமித்து, எச்சிலைக் கூட விழுங்க முடியாத கொடுமை. டாக்டர் அசோகன் குறிப்பிட்டதுபோல், இல்லாதவனின் ஏழைப் 56 பாலைப்புறா

பெண்டாட்டி எல்லோருக்கும் பெண்டாட்டி என்பது மாதிரி, வெள்ளை அணுக்கள் இல்லாத அவன் உடம்பை, நான்கு வகைக்குள் அடங்கும் ஆயிரக் கணக்கான ரகரகமான கிருமிகள் ஆக்கிரமிக்கின்றன. ஆக மொத்தத்தில் யானைக்கால் குஷ்டரோகியாய், ஒரு கை ஒரு கால் விழுந்தவனாய், பெரியம்மை பட்டு பார்வை அற்றவனாய், உப்பளம் போன்ற கொப்பளக்காரனாய், மலேரியா தூக்கிப் போட, சயரோகம் ரத்தம் ரத்தமாய் வெளிப்பட, குடலைப் புற்றுநோய் தின்று தீர்க்க, உற்றார் பெற்றோர் விலக, மருந்தற்றுப் போனதால், மரணம் நிச்சயமாகி, சிறுகச்சிறுக, பல்லி கவ்விய பாச்சானை, அந்த பல்லியைக் கெளவிய பாம்பாய், பாம்பைத் தூக்கிய கழுகாய், ஒரு உறுப்பை இன்னொரு உறுப்புதின்ன, அப்படியே கிடக்கிறான். அநாதையாய்க் கிடக்கிறான். பறவைகள் கொத்த வருகின்றன. நாய்கள் மோப்பம் பிடித்து கிட்டே வருகின்றன.

‘நோ... நோ... நோ...’

மனோகர் வீறிட்டுக் கத்துகிறான். கண்களைத் திறக்கிறான். மெள்ள மெள்ள பார்வை வருகிறது. காலை ஆட்டுகிறான். நடக்க முடிகிறது. எச்சிலை விழுங்குகிறான். உள்ளேபோகிறது. உடம்பைப் பார்க்கிறான். ஒரு மரு கூட இல்லை. இல்லவே இல்லை. ஒரு நிமிடத்தில், ஏழாண்டு கால உச்சக் கட்டத்தைத் தாண்டி, மறு நிமிடம் பிழைத்துக் கொள்கிறான். டாக்டர் சந்திராவை, அச்சுறுத்துவதுபோல் பார்க்கிறான். அதே சமயம், முற்றிய எய்ட்ஸ் நோயாளிகள் எப்படி இருப்பார்கள் என்று டாக்டர் அசோகன் போட்டுக் காட்டிய விதவிதமான ஸ்லைட் படங்கள், அவனைப் பேயாய்ப் பிடித்துக் கொள்கின்றன.

டாக்டர் சந்திரா, அவனருகே வருகிறாள். அவன் முதுகைத் தட்டிக் கொடுக்கிறாள். உபதேசிக்கிறாள்.

‘ரமணரிஷிக்கும் புற்று நோய் வந்தது. ராமகிருஷ்ணபரமஹம்சருக்கும் அதே நோய், விவேகானந்தருக்கு பிளவை; இந்த மகான்கள், தங்களுக்கு வந்த நோய்களை ஏளனமாய் பார்த்தார்கள். போனால் போகிறது என்பதுபோல், எமனுக்கே அடைக்கலம் கொடுத்தார்கள்.’

மனோகர்...பைத்தியமாய்க் கத்தினான்.

‘எனக்கு எய்ட்ஸ்.... எல்லா நோயையும் விடக் கொடிய நோய்.... அப்போது நான் மனோகர் அல்ல, மகான் நல்லாயிருக்குது டாக்டர்’.

டாக்டர் சந்திரா பயந்து விட்டாள். இதுதான், அவள் முதல்தடவையாக கையாளும் எய்ட்ஸ் கவுன்சலிங். ஆழந்தெரியாமல் காலைவிட்ட கதை... சு. சமுத்திரம் 57

‘இப்போ கூட குடி முழுகிடல மனோகர்... உறுதிப்படல. வெறும் சந்தேகந்தான். இரண்டாவது டெஸ்டுதான் இறுதியானது; ஒங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லாமல் கூட இருக்கலாம்.’

"அப்... அப்போ மூன்று மாதத்திற்குப் பிறகு சொல்லி இருக்கலாமே!”

‘அதுதான் சரியானது... ஒங்களுக்கு, அடுத்தவாரம் கல்யாணம் நடத்த நிச்சயம் செய்யாமல் இருந்தால், இதைப் பற்றி மூச்சு விட்டிருக்கக்கூட மாட்டேன். இதுல கலைவாணியோட வாழ்க்கையும் அடங்கியிருப்பதால், நான் சொல்லும்படியாய் ஆயிற்று... பெண் என்கிற முறையில், இன்னொரு பெண் - அதுவும் ஒரு அப்பாவிப் பெண், பாழாகிடப்படாதேன்னு பயந்து சொன்னேன். ஒங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டதுக்கு எனக்குக்கூட மனசு கேட்கல. பாவம் கலைவாணி’

பொறி கலங்கி நின்ற மனோகரின் மூளையில் ஒரு பொறி - எதற்கு எடுத்தாலும் கலைவாணிதானா? என்னைப் பார்க்க, இவளுக்குப் பாவமாய் இல்லியா? இருக்காது. ஏன்னா இதில் ஒரு சூழ்ச்சி தெரியுது. பக்குவமாய் கேட்போம்.

‘டாக்டர், எனக்கு எய்ட்ஸ் கிருமிகள் இருக்கிறதை காட்டும் டெஸ்ட் ரிசல்ட் ரிப்போர்ட் இருக்குதா? பாதிக் காகிதத்தில் என் பெயரை கருப்பு மையிலும், ஹெச்.ஐ.வி. ஆன்டிபாடி பாஸிட்டிவ் என்று சிவப்பு மையிலும் எழுதின ரிப்போர்ட்; இது எப்படித் தெரியும் என்கிறீங்களா? அன்றையக் கூட்டத்தில் டாக்டர் அசோகன் பேசுனதை ஒரு வார்த்தைக்கூட விடாமல் கேட்டேன். ரிப்போர்ட்ட காட்டுறீங்களாடாக்டர்...?’

‘இன்னும் அதிகாரபூர்வமாய் அனுப்பல சார். எனக்கு அனுப்புவாங்களான்னும் தெரியாது. மாவட்ட மருத்துவமனைக்கு, வேற ஒரு விஷயமாய் போயிருந்தப்போ, தற்செயலாய் ஒங்க ரிப்போர்ட்டைப் பார்த்தேன்’

மனோகருக்கு லேசாய் தெம்பு; மனதில் தெளிவு, மூச்சு சீரானது; இவள் ஏமாற்றுகிறாள். சர்டிபிகேட் இல்லாமலே சாகஸம் செய்கிறாள். இது ஒரு சூழ்ச்சி. பயங்கரமான சூழ்ச்சி; அந்தக் கேடு கெட்ட கலைவாணியும், இந்த சந்திராவும் விரித்த வலை. கல்யாணப் பேச்சுவந்தபோது அழுததாய், அதுவும் ஒரு நாள் முழுக்க அழுததாய், அவளே ஒப்புக் கொண்டாள். கல்யாணம் பிடிக்கவில்லை என்பதும், கல்யாண மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்பதும் ஒன்றுதான். ஊர் சுற்றவும், கண்டவர்களோடு பல்லைக் காட்டவும், படிப்படியாய் தலைவியாகவும், இந்தத் திருமணம் தடையாய் இருப்பதாய் அவள் நினைத்து, இந்த சூழ்ச்சியில் இறங்கிவிட்டாள். இடித்த புளி 58 பாலைப்புறா

கணவனாய் இருக்க மாட்டேன், என்பதால், இந்த சந்திராவோடு சேர்ந்து வலை பின்னிவிட்டாள். பெற்றவர்களிடம் அழுகை பலிக்காமல் போனதால், இப்படி ஒரு சூழ்ச்சி; இப்போதுதான் புரிகிறது. நல்லாவே புரிகிறது. இவளும் அவளும், சுப்பையா மாமா வீட்டில் இருந்து வெளியேறும் போது, என்னைப் பார்த்தே ரகசியம் பேசினார்கள். ஜீப்புக்குள் ஏறிய இவள், மீண்டும் என்னை நோட்டம் போட்டுவிட்டு, கலைவாணியிடம், 'நின்னுடும் நின்னுடும்’ என்றாள். 'எது நின்னுடும்?’ என்றாள்.

டாக்டர் சந்திரா, அவன் பித்துப்பிடித்து நிற்பதாக அனுமானித்து, 'ஐ அம் ஸாரி வேற எந்த வழியும் தெரியல... அதனாலதான் கல்யாணக் கட்டாயத்தால்தான் சொல்லிட்டேன். ஒங்க மனதை சிதைத்துட்டேன்’ என்றாள். அவனைப் பார்த்தால் அழுகை வரும் போல இருந்தது. அவனைப் போலவே, அவளும் வியர்வையில் வெம்பினாள்.

மனோகர், டாக்டர் சந்திராவை, மூர்க்கமாய்ப் பார்த்தான். அடிக்கப் போவது போலப் பார்த்தான். பிறகு, தனது உடல் முழுவதையும், பெருமிதமாய் 'பாதாதி கேசமாய்ப்' பார்த்துக் கொண்டான். தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். ‘எனக்கு எய்ட்ஸ் எப்படி வரும்? இதுவரை மனதால் கூட எவருக்கும் கெடுதல் நினைக்காதவன்... கம்பெனியில் எனக்குப் பெயரே ஜென்டில்மேன் எஞ்சினியர்... அதே கம்பெனியில், என் பேச்சுக்கு மதிப்பளித்து, ஊர்க்காரன் இரண்டு பேருக்கு நிர்வாகம் வேலை கொடுத்திருக்கிறது. இவர்களிடம் ஒரு பைசா எதிர் பாராதவன், கம்பெனி டிரைவர், பியூன் எல்லோருமே என்னிடம்தான் கடன் கேட்பார்கள். அவர்கள் கொடுத்தால் வாங்கிக் கொள்வேன். வாயால் திருப்பிக்கேட்டதில்லை. ஊரில் கூட வயதான அநாதைக்கிழவர் பாண்டித்துரை தாத்தாவுக்கு நூறு ரூபாய் கொடுத்தேன்... மனிதர் அழுதழுது கும்பிட்டுக் கும்பிட்டு என்னை ஆசிர்வதித்தார். தொழுநோயில் அவதிப்படும் ராமக்கா பாட்டியை, மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தவனே நான்தான், எந்த தாசியையும் ஏறெடுத்துப் பார்க்காதவன் நான்... அப்படிப்பட்ட எல்லோருக்கும் நல்லவனான எனக்கா வரும்? வரவே வராது. இது சூழ்ச்சி, ஆழமான சூழ்ச்சி. இந்த சூழ்ச்சிக்காரிகளான மேனாமினுக்கி கலைவாணிக்கும், சேடிஸ்டான இந்த சந்திராவுக்கும் எய்ட்ஸ் வரும். இவர்களை விட்டுவிட்டு எப்படி எனக்கு வரும். ஐயாம் ஆல் ரைட் ஆரோக்கியமானவன் நான்...'

மனோகர், சொல்லாமல் கொள்ளாமல் வெளியே வந்தான். வந்ததும் வராததுமாய், மோட்டார் பைக்கில் ஏறினான். ஆச்சரியப்பட்டுப் போன சந்திரா, பின்னால் ஓடினாள். நம்பிக்கையோடு விடை கொடுத்தாள். சு. சமுத்திரம் 59

“ஐ அம் ஸாரி... மனோகர் ஒங்களுக்கு வந்தது, கலைவாணிக்கும் வந்துடப்படாது பாருங்க. அதனாலதான் சொன்னேன். ஊருக்குப் போன உடனேயே கல்யாணத்தை நிறுத்திடுங்க..."

‘பார்க்கலாம்’.

"இப்படி பட்டும் படாமலும் சொன்னால் எப்படி? உங்க காலுல விழுந்து கேட்கிறதாய் நினைத்து, ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுங்க”

"என்ன வாழ்க்கை... ஊர் ஊராய்ச்சுற்றுகிற வாழ்க்கையா...? தானைத் தலைவியாய் ஆகிற வாழ்க்கையா?”

டாக்டர் சந்திராவுக்கும், இப்போது கோபம் வந்து விட்டது. பேச்சின் போக்கே சரி இல்லையே... எச்சரித்தாள்.

'லுக் மிஸ்டர் மனோகர் நீங்களா, இந்தக் கல்யாணத்தை நிறுத்தினால், ஒங்க கெளரவத்துக்கு நல்லது. இல்லாவிட்டால், நானே அதை நிறுத்திக் காட்டுவேன். எதிர்கால எய்ட்ஸ் நோயாளிக்கு, ஒரு அப்பாவிப் பெண் கழுத்தில் தாலிகட்ட உரிமை இல்லை’

மனோகருக்குப் பதிலாய், அவன் மோட்டார் பைக் தான் பதில் சொன்னது- காட்டுக்கத்தலாய் ஆவேசப்பாய்ச்சலாய்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_4&oldid=1641690" இலிருந்து மீள்விக்கப்பட்டது