உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 30

விக்கிமூலம் இலிருந்து

ரு வார காலமாக, டாக்டர் சுமதியின் பி.ஏ.வான நேர்முக உதவிப் பெண்ணைக் காணவில்லை. விசாரித்துப் பார்த்ததில், அவளே இப்போது குருவுக்கு மிஞ்சிய சிஷ்யையாகி, தனியாட்சி செய்யப் போவதாகக் கேள்வி… போட்டி விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை அமைக்கப் போவதாக வதந்திகள்… இதனால் சுமதியம்மா, படபடப்பாய், பரபரப்பாய் இருப்பதாகச் செய்தி… ஆனாலும், கலைவாணியை, அங்கேயே உட்கார வைக்கவில்லை. அவ்வப்போது கூப்பிட்டு, பொதுப்படையான விவகாரங்களை ஒப்படைத்தாள். இன்றும் அப்படித்தான்… காலையிலேயே வரச் சொல்லி விட்டாள். முன்னெச்சரிக்கையாக, ஆண்டறிக்கை நோட்டை, போன வாரமே எடுத்து, தனது அறைக்குள் எங்கேயோ வைத்து விட்டாள். முந்தாநாள், வேறு எவனோ ஒருத்தன், இந்த உள்ளறைக்குள் அதை டைப் செய்து கொண்டிருந்தான். ஆனாலும், கலைவாணி, அந்த ஆண்டறிக்கையைப் பொறுத்த அளவில் ஒரு கணிப்பொறியாகி விட்டாள். டாக்டர் அசோகன், கிட்டத்தட்ட ஒரு பினாமி… அங்குள்ள எய்ட்ஸ் நோயாளிகளைப் பராமரிக்க, சுமதிக்கு மூன்று லட்சம் ரூபாய் செலவாகிறதாம். இது அல்லாமல், அசோகனுக்கு மாதா மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளமாம். செத்துப் போகும் எய்ட்ஸ் நோயாளிகளை கௌரவமாக அடக்கம் செய்வதற்கு முப்பதாயிரம் ரூபாய் ஆண்டுச் செலவாம். இதே போல், எய்ட்ஸ் விழிப்புணர்வு இயக்கங்கள், எய்ட்ஸ் பெண்களுக்கு மறு வாழ்வு வழங்குதல், அவர்களின் குடும்பங்களுக்கு நிதியளித்தல் போன்ற பல்வேறு செலவினங்கள். அத்தனைக்கும் ரசீதுகள்…

இன்னும் உள்ளே இருக்கும் சுமதி, அவளுக்கு வேலை கொடுக்காததால், கலைவாணியின் சிந்தனை, டாக்டர் அசோகனையே சுற்றி வந்தது. அவனை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை… இல்லையானால், இந்த பிராடோடு அவனுக்கு இவ்வளவு தொடர்பு தேவையில்லை. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு எல்லாமே டாக்டர் சுமதிதான் என்பது போல் வீடியோ படம் எடுக்க அனுமதித்திருக்க மாட்டான். அதே சமயம், அவன், தன்னிடம் காட்டிய கரிசனத்தை மறக்க முடியவில்லை. அந்த அசோகனைப் பார்த்தால், அப்படித் தெரியவில்லை. எந்த வரம்பு மீறிய செலவையும், அவன் செய்ததாகத் தெரியவில்லை. உடம்பில் உடையைப் பற்றிக் கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை… அவன் தங்கி இருக்கும் அறையும் சின்னது… பஞ்சு மெத்தை கட்டிலுக்குப் பதிலாய், ஒரு போர்வை போர்த்தப்பட்ட டேப் கட்டில்… ஆனாலும், எந்த புற்றில் எந்த பாம்போ…! எத்தனை சினிமாக்களை பார்த்தாச்சு…! எத்தனைக் கதைகளைபடிச்சாச்சு…! இந்த மாதிரி எளிமையாய் காட்டிக் கொள்ளும் ஆட்கள்தான், இந்திர சித்துகளாக இருப்பார்கள்.

“எக்ஸ்யூஸ் மீ… சிஸ்டர்…”

கலைவாணி, நிமிர்ந்து பார்த்தாள். அதே சேலத்துப் பையன் ரகோத்தமன். பெயர் தெரியாத தொழிலபதிரின் மகன். கண்ணைப் பறிக்கும் பொம்மைச் சொக்கா போட்டிருக்கிறான். அதற்குள்ளே நீளமான தங்கச் செயின்… பால் வடியும் முகம்… சோகம் சுமந்த பார்வை… வாட்ட சாட்டமான உடம்பு… இருபது வயதிருக்கலாம்.

கலைவாணி, அவனைக் கண் துடிக்கப் பார்த்தாள். எய்ட்ஸ் கிருமிகளை எப்படியோ வாங்கிக் கட்டிக் கொண்டான். வெளியே நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை நிர்வகிக்க வேண்டியவன், இப்போது உள்ளே லட்சக்கணக்கான கிருமிகளால் நிர்வகிக்கப்படுகிறான். கலைவாணி, கரிசனத்தோடு கேட்டாள்…

“என்ன வேணும் தம்பி…?”

“டாக்டரம்மாவைப் பார்க்கணும். இந்த அழைப்பிதழைக் கொடுக்கணும்…”

“என்ன அழைப்பிதழ்…?”

“இந்தாங்க”

கலைவாணி, அதை வாங்கிப் பார்த்தாள். கவரைப் பார்த்தவுடனேயே கவலையுற்று, உள்ளே இருந்ததை எடுத்துப் பிரிக்கிறாள். தங்க பிரேம் போட்ட அட்டை ஒரு அட்டையே ஐம்பது ரூபாய் பெறும். பளபளப்பான அச்சுக் கோர்ப்பு: ஆமாம். இந்த ரகோத்தமனுக்கும், கோவையில் உள்ள இன்னொரு தொழில் அதிபரின் மகள் சாந்திக்கும் திருமணம். சான்றோரால் நிச்சயிக்கப்பட்டது… மேளதாளம், பிரபலமான பெயர்கள், மூன்று நாள், மூன்று விதமான இசைக் கச்சேரிகள். அத்தனையும் பத்திரிகைகளில் அடிபடும் பெயர்கள். எல்லாவற்றிற்கும் மேல், பல்வேறு தலைவர்களின் வாழ்த்தரங்கம்…

கலைவாணி, அந்த அழைப்பிதழைப் படிப்பதும், படிக்கப் படிக்க, அவனை நிமிர்ந்து பார்ப்பதுமாக இருந்தாள். படித்து முடித்ததும், அவனிடம் ஏதோ சொல்லப் போனாள். பிறகு, தன் சொல் எடுபடுமா என்று யோசித்துப் பார்த்தாள். இந்தத் திருமணத்தை தடுத்தே ஆக வேண்டும் என்று உறுதி… இன்னும் நான்கே நான்கு நாட்கள்தான் உள்ளன. அசோகனிடம் சொல்லலாமா…? அந்தக் கூட்டுக் களவாணியிடமா… வேண்டாம்… சந்திராவிடம் சொன்னால், அவள் பட்டதே போதும் என்பாள்… பத்திரிகையாளர்களிடம் சொன்னாலும், அவர்கள் பெரிய இடத்து சமாச்சாரங்களை எழுத மாட்டார்கள். விளம்பரம் போய் விடுமாம்… அப்போ யாரிடம் சொல்வது… எப்படி தடுப்பது…?

எதுவும் பதில் பேசாமல் இருப்பவளை, ஒரு முறைப்பு முறைத்துக் கொண்டே, ரகோத்தமன், கதவைத் திறந்து உள்ளே போனான். அதைக் கூட கலைவாணி பார்க்கவில்லை. இதற்குள் இன்டர்காம் இரைந்தது.

“நான்…சேலத்துக்கு… ரகோத்தமனோட கல்யாணத்தில கலந்துக்கிறேன். டேட்டையும், டைமையும் நோட் செய்துக்கோ… ஒரு நாளைக்கு முன்னால ஞாபகப்படுத்து”

கலைவாணி, வழக்கம் போல் எஸ் மேடம் போடவில்லை. அயோக்கிய ராட்சஸி… தொட்டிலையும் ஆட்டி, குழந்தையையும் கிள்ளி விடும் அரக்கி… எப்படி இப்படிப்பட்ட மனம் வரும்? ஒரு எதிர்கால எய்ட்ஸ் நோயாளியின் திருமணத்தை தடுக்க வேண்டியவள், இவனை வாழ்த்தப் போகிறாள். இவன் கல்யாணத்தில் வாழ்த்தி, ஒரு அப்பாவிப் பெண்ணின் எதிர்கால ஈமச் சடங்கிற்கு இப்போதே கொள்ளி வைக்கப் போகிறாள். இப்படியும் ஒருத்தி இருப்பாளா… இருக்காளே… காரோடும், பேரோடும் இருக்காளே…!

கலைவாணி, கைகள் இரண்டையும் மேசையில் ஏவி விட்டாள்; குத்தினாள்; நொந்த உதடுகளுக்கு எதிராய், சொந்தப் பற்களையே ஏவி விட்டாள். உள்ளே கதவை உடைத்துக் கொண்டு போய், அந்த பம்மாத்துக்காரியிடம் மன்றாடலாமா… அல்லது அவளைத் துண்டாடலாமா… என்பது போல், அந்தக் கதவுப் பக்கம் போனாள். உடனே, யதார்த்தம் அவளை அந்த ‘பி.ஏ.’ நாற்காலிக்கு இழுத்து வந்தது… பின் விளைவுகளை யோசிக்க வைத்தது. வீடற்றுப் போனவள்… இவளைப் பகைத்தால், இவளின் பினாமியாக இருக்கக் கூடிய அந்த அசோகன் கூட இடம் கொடுக்க மாட்டான். எவளும், எவனும் எக்கேடும் கெடட்டும்… எனக்கென்ன… நான் ஒரு சின்னஞ்சிறு குருவி…பனங்காயை சுமக்க முடியாது…

கலைவாணி, லேசாய் நிதானப்பட்டு உட்கார்ந்த போது, டாக்டர் சுமதியே, ரகோத்தமனுடன் வெளியே வந்தாள். அவனுடன் சிரித்துப் பேசிய முகத்தை சிறிது கடுமையாக்கியபடியே, கலைவாணியிடம் கேட்டாள்.

“இன்றைக்கு… நடக்கப் போகுதே… எய்ட்ஸ் விழிப்புணர்வு இயக்கம்… ஆடியன்ஸ், பேச்சாளர்கள் வந்துட்டாங்களான்னு செக்கப் செய்துட்டியா…?”

“இன்னும் இல்ல…”

“ஒனக்கு கொஞ்சமாவது அறிவிருக்குதா… உள்ளூர்ல நடக்கிற பங்ஷன்களை, முன் கூட்டியே செக்கப் செய்யனும்… என்கிறது தெரியாதா…? இதில வேற நான் துவக்கி வைக்கறேன்… நாளைக்கு நான் கூப்பிட்டாலும், நீ வரப்படாது. அப்புறம், மிஸ்டர் ரகோத்தமன்… முடியுமானால், காண்டோம் யூஸ் பண்ணுங்க. ஒங்க ஒய்ப்பையும் ஆறு மாசத்துக்கு ஒரு தடவை… இங்கே கூட்டி வந்து செக்கப் செய்துக்கணும்… இந்தா ஒன்னைத்தான்… நான் கீழே நிற்கேன்… அந்த பிளாஸ்டிக் பையைத் தூக்கிட்டு வா… எய்ட்ஸ் கேம்புக்கு போகணும்… ஏன் சரின்னு கூட பதில் சொல்ல மாட்டங்கறே?”

இதற்கும், கலைவாணி பதில் பேசவில்லை. அதை, பய பக்தியாக எடுத்துக் கொண்டு, சுமதி நடந்த போது, ரகோத்தமன் ஒரு கவரில் டாக்டர் சுமதியின் உதவியாளர் என்று எழுதி, அவளுக்கும் ஒரு அழைப்பிதழை மேசையில் போட்டு விட்டு, முன்னால் போன சுமதியை நோக்கி ஓடினான்.

கலைவாணி,… மேஜையில் உள்ள டெலிபோனை திரிசூலம் போல் எடுத்தாள். அழைப்பிதழைப் புரட்டினாள். மணப் பெண்ணின் தந்தையின் பெயரும், முகவரியும் தெளிவாகவே போடப்பட்டிருந்தன. அவள் எண்களை சுழற்றினாள். ‘போனோ கிராம்’ என்று கேட்டாள். பிறகு இவளே ஆங்கிலத்தில் படுவேகமாய்ச் சொன்னாள். அப்படியும் திருப்தியுறாமல், கோவைக்கு, ‘எஸ்.டி.டி.’ போட்டாள். “மிஸ்டர் பத்மநாபன் இருக்காரா…? நீங்கதானா… ஒங்களோட எதிர்கால மருமகன் ரகோத்தமன்… எய்ட்ஸ் கிருமிகள் உள்ளவர் சார். கல்யாணம், கருமாந்திரத்தில முடியும் சார்… நான் சொல்வதில் சந்தேகம் வந்தால், நம்பிக்கையான டாக்டர் கிட்டே அந்தப் பையனை டெஸ்ட் செய்து பாருங்க… என் பேரா… கோணச்சத்திரத்தில் இருக்கிற கலைவாணி. டாக்டர் சுமதியோட தாற்காலிக உதவியாளர்.”

கலைவாணிக்கு, ஒரு அசுர திருப்தி… அழகான இளைஞனாய் அவதாரம் எடுத்த ஒரு மகிஷாசுரனை வதைக்காமலே, முடக்கிப் போட்ட நிறைவு. அவளுக்கே இப்போது தன்னை நினைக்க ஒரு ஆச்சர்யம்… ஒரு ஆனந்தம்… எனக்கும் இவ்வளவு தைரியமா? என்னாலும் இப்படி முடியுமா?

அப்போதுதான் அலுவலகம் வந்த மீசைக்கார இளைஞன், கலைவாணியிடம் அடித்துப் பிடித்து ஓடி வந்தான். “அம்மா… கத்துறாங்க… பிளாஸ்டிக் கூடையை தூக்கிட்டு உடனே போகணுமாம்…”

கலைவாணி சிரித்தாள்… அலட்சியமாய் சிரித்தாள்.ஆனாலும், உள்ளே போய், அந்த பிளாஸ்டிக் கூடையைத் தூக்கினாள்… அதற்குள் மினரல் வாட்டர் பாட்டில், மருந்து மாத்திரைகள், ஒரு சின்னத் துண்டு… பொன்னாடையோ, சந்தனை மாலையோ போடப்படுவதை உள் வாங்கும் அளவுக்கான பெரிய கூடைதான்…

கலைவாணி, அதைத் தூக்கிக் கொண்டு, கீழே போனாள், சுமதியை. கீழ் நோக்கிப் பார்த்தபடியே போனாள். உள்ளே இருப்பவர்களை அடையாளம் காட்டாத தங்க முலாம் விளிம்பு கொண்டு பெரிய கார்… பக்கத்தில் நின்ற ரகோத்தமனோடு சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டே நின்ற டாக்டர் சுமதி, கலைவாணியை பல்லைக் கடித்துப் பார்த்தாள்… என்ன வழக்கம். கார்க் கதவைத் திறந்து விடாத பழக்கம்…

“நான் வேணுமுன்னால், ஒனக்கு காரைத் திறந்து விடட்டுமா… கவைாணி?”

கலைவாணி, அப்படியே நின்ற போது, டிரைவர் ஓடி வந்து கதவைத் திறந்தார். சுமதி, ரகோத்தமன் போட்ட கும்பிடை அங்கீகரித்தபடியே, பின்னிருக்கையில், ஏறினாள். கலைவாணி, முன்னிருக்கையில், ஏறினாள். நேற்றுப் பின்னால் ஏறப் போன போது, முதலாளியம்மாள் முன் பக்கத்து இருக்கையைக் காட்டினாள்.

அந்தக் கார், சாலை முழுவதையும் அடைத்துக் கொண்டு ஓடியது. கலைவாணி, அவளைப் போலவே காற்றில் துடித்த எய்ட்ஸ் விழிப்புணர்வு அழைப்பிதழை தூக்கிப் பிடித்துப் பார்த்தாள்; அரை நாள் கூத்து… நேற்று எய்ட்ஸ் விழிப்புணர்வு பட்டறை, இன்றைக்கு பயிற்சி முகாம்… அதே ஆரம்ப சுகாதார நிலையம். அதே பேச்சாளர்கள்… அநேகமாய் அதே கூட்டம். அழைப்பிதழில்தான் வித்தியாசம்… நேற்று நடந்தது தமிழக அரசின் மக்கள் தொடர்பு துறையின் ஏற்பாடு… இன்று நடப்பது இந்திய அரசின் கள விளம்பரத் துறையின் கூப்பாடு… அதே சாமியானா பந்தல்… பேனர் மட்டும் வித்தியாசம்… நேற்று மூன்று வேளை சாப்பாடு… இன்றைககு ஒரு வேளை சாப்பாடு… தலைமை வகிப்பவர் பெயரில் மட்டும் மாற்றம்… டாக்டர் அசோகன், நேற்று வரவில்லை. நேற்றைய பட்டறையை துவக்கி வைத்த டாக்டர் முஸ்தபா, இன்று முக்கிய உரை ஆற்றுகிறார். நேற்று முக்கிய உரை ஆற்றிய டாக்டர் சுமதி, இன்று துவக்கி வைக்கிறார்…

அந்தக் கார், அதே மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்னால் வந்தது. இந்திய அரசின் கள விளம்பரத் துறை மாவட்ட அதிகாரி சந்தானக்குமார், டாக்டர் சுமதியை கை கூப்பி வரவேற்றதுடன், சென்னையில் இருந்து வந்திருக்கும் தனது மேல் அதிகாரியான இணை இயக்குநரிடம் அவளை அறிமுகம் செய்தார். உடனே அவள் ‘ஒங்க ஆபீசர் பிரமாதமாய் வேலை பார்த்தார்,’ என்று அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னாள். உடனே அந்த இணை ‘ஐ நோ…’ என்றது. அவள், தனது ஜூனியர் சகாவுக்கு வழி காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.

எல்லோரும், மேடையில் ஏறினார்கள். டாக்டர் அசோகன், தன்னந்தனியாக கூட்டத்தை நடத்தப் போவது போல கால் மேல் கால் போட்டு, முன் கூட்டியே உட்கார்ந்து இருந்தான். டாக்டர் சந்திரா, முன் வரிசையில். நர்சம்மா மாலதியும் அதே வரிசையில்… நாற்காலிகளிலும், பெஞ்சுகளிலும், உட்கார்ந்திருந்த அதே நேற்றையக் கூட்டம் என்ன வேணுமுன்னாலும் பேசுங்கடா… எங்க காது ஒங்களுக்கு இல்லை என்பது மாதிரி, தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தது.

மேடையில் இருந்தபடியே டாக்டர் அசோகன், சந்திராவின் பக்கத்தில் இருந்த கலைவாணியைக் கூப்பிட்டான். அவள் முகத்தை வேறு பக்கமாக திருப்பினாள். இதனால், அசோகனே மேடையில் இருந்து இறங்கி, அவள் பக்கமாகப் போனான். பட்டும் படாமலும் பார்த்தவளிடம்,பரவசத்தோடு கேட்டான்.

“என்ன கலைம்மா… வழக்கம் போல்… இந்த ஞாயிற்றுக்கிழமை வர்ல”

“சொல்லுங்க டாக்டர்…”

“ரொம்ப கட் அன்ட் ரைட்டா இருக்குது…? அப்புறம், இன்னிக்கி நீ பேசினால்… நல்லது; மெட்ராஸ்லே… சேகர் என்கிற இளைஞர் தனக்கு எப்படி ஹெச்.ஐ.வி. வந்ததுன்னு கூட்டம் கூட்டமாய் பேசுறார். இந்த வகையில் நீ ஒரு பாவமும் செய்யாதவள். நீ ஏன் ஒனக்கு எப்படி… இந்த நோய் வந்ததுன்னு பேசப்படாது. ஏன் பதில் பேச மாட்டக்கே…? மௌனம் சம்மதம்; சரிதானே… கலைம்மா…?”

கலைவாணி, அசோகனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். அவன் பாம்பா… இல்லை பழுதா… பேசலாமா… என்பது போல் டாக்டர் சந்திராவைப் பார்த்தாள். அவளே சங்கடமாக நெளிந்தாள்…

அந்தப் பயிற்சிப் பட்டறை, ‘நீராடும் கடலுடுத்து’டன் துவங்கியது. டாக்டர் சுமதி, காற்றோடு போராடிப் போராடி குத்து விளக்கை ஏற்றும் போது, வீடியோ கேமிரா வெளிச்சம் போட்டது… பத்திரிகை காமிராக்கள் ஒன்ஸ்மோர் கேட்டன. பட்டறைத் தலைவரான டாக்டர் அசோகன், முன்னுரையை முடிவுரையாய் பேசப் போவதாய்க் கூறி விட்டான். வரவேற்புரை நல்கிய இணை இயக்குநர், நெல்லையில் இருந்து வேனில் கூட்டி வந்த செய்தியாளர்களையும், அந்த ரெடிமேட் கூட்டத்தையும் பார்த்தபடியே, இறுதியாக ஒன்று… என்ற பல இறுதி ஒன்றுகளை சேர்த்து, அவற்றின் எண்ணிக்கையை பத்துக்கு மேல் கொண்டு போய் விட்டார். அப்புறம் டாக்டர் சுமதியின் துவக்க உரை… இடை இடையே…'செட்டப்’ செய்த ஜோக்குகள். சின்னச் சின்னக் கதைகள்… ஆனாலும், கூட்டம் சிரிக்கவில்லை… கை தட்டவில்லை. அத்தனையும் அரைத்த மாவு. அதுவும் புரிந்த மாவு, புளித்த மாவு; என்றாலும், இந்த நோயால் பெண்கள் எப்படி பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று சுமதி சொன்ன போதும்… அப்பாவிக் குழந்தைகள் எப்படி பலியாகிறார்கள் என்று நேற்று சொன்னதையே இன்று விளக்கிய போதும், கூட்டம் அமைதிப்பட்டுக் கேட்டது. ஆனாலும், அவள் எல்லை தாண்டி என்னவெல்லாமோ பேசினாள்.

அடிக்கடி டாக்டர் சுமதியையும், கைக்கடிகாரத்தையம் மாறி மாறிப் பார்த்த அசோகன், அவள் பேசி முடிந்ததும், ‘முக்கிய உரை’ ஆற்றுவதற்காய் எழுந்த டாக்டர் முஸ்தாபாவைக் கையமர்த்தி விட்டு, ‘எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெண் கலைவாணி, இப்போது பேசுவார்’ என்றான்…

கூட்டம் அரை நிமிடம் வரை, கசா முசாவாய் பேசியது… பிறகு பேரமைதி. எல்லோர் கண்களிலும் ஒரு பரபரப்பு; குனிந்து, ரகசியம் போல் பேசிக் கொண்டிருந்தவர்களின் தலைகள் நிமிர்ந்தன. பின் வரிசைக்காரர்களில், சிலர், எழுந்தே விட்டார்கள். டாக்டர் சுமதி, பேச வேண்டாம் என்று கலைவாணியிடம் சமிக்ஞை செய்யப் போனாள். அவள் பார்த்தால்தானே…

கலைவாணி, இருக்கையை விட்டு எழுந்தாள். மேடைப் படிக்கட்டை இரண்டு படிகளாகத் தாவினாள். போடியத்தில் பொருத்தப்பட்ட மைக் முன்னால் நின்றாள். பெரும்பான்மையாய் பெண்களைக் கொண்ட அந்தக் கூட் டத்தை நேருக்கு நேராய்ப் பார்த்து, கைகூப்பி வணங்கினாள்… தலைவரையோ, பிரமுகர்களையோ அவர்களே போட்டு விளிக்காமல் பேசினாள்.

“ஆமாம்…நண்பர்களே! டாக்டர். அசோகன் சொன்னது போல், நான் ஒரு எதிர்கால எய்ட்ஸ் நோய்க்காரி… ஒரு வருடத்திற்கு முன்பு, என் கணவர் என்று சொல்லப்பட்டவரால், இந்த நோயை சீதனமாக வாங்கிக் கொண்டவள். சர்வ தேச பத்திரிகைளில் இடம் பெற்றவரின் அப்போதைய மனைவி. ஹெச்.ஐ.வி. இருப்பது தெரிந்தும், திருமணம் செய்த ஒரு பேடியின் துணைவி… இந்த ஆரம்ப — அதுவும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, எய்ட்சின் பெயரால் தூக்கி எறியப்பட்டவள். குற்றம் செய்யாமலே தண்டிக்கப்பட்டவள்…”

“இங்கே இருக்கிற டாக்டர்களில், ஒரு வேளை ஒரு சிலர் தவிர்த்து, அனைவருமே மோசடிக்காரர்கள். இவர்கள் தோளில் தொங்கப் போட்டிருக்கும் ஸ்டெதாஸ்கோப்புகள், நம்மைப் போன்ற அப்பாவிப் பெண்களுக்கு தூக்கு கயிறுகள்! இவர்கள் போட்டிருக்கும் வெள்ளைக் கோட்டுகள், பிணங்கள் மேல் போர்த்தப்படும் வெள்ளைத் துணிகள்! இப்போது ஒரு முக்கியமான கேள்வி… ஒரு இளைஞனுக்கு, எய்ட்ஸ் கிருமிகள் இருப்பதாக ஒரு டாக்டருக்கு தெரிய வருகிறது. ஆனால், அந்த டாக்டரோ, அந்த இளைஞருடைய திருமணத்தில், சந்தோஷமாகக் கலந்துக் கொள்கிறார். ஒரு அப்பாவிப் பெண், சிறுகச் சிறுக சித்திரவதைக்குள்ளாகி, சின்னா பின்னமாவாள் என்று தெரிந்தும், அப்படிப்பட்ட திருமணத்தில் கலந்து கொள்கிறவர் டாக்டரா?… இல்லை… கொலைகாரியா?… இது, கைத்தட்டுவதற்குரிய விஷயமில்லை… எச்.ஐ.வி. கல்யாண மாப்பிள்ளைகளையும், அவர்களது உற்றார், பெற்றோர்களையும், ஸ்டெதாஸ்கோப்பை பாசக் கயிறாகப் பிடித்திருக்கும் டாக்டர்கள் எனப்படும் கொலையாளிகளையும் என்ன செய்தால் தகும் என்று தீர்மானிக்க வேண்டிய விவகாரம்…”

டாக்டர் சந்திரா, இருக்கையில் குன்றிப் போய் கிடந்தாள். மேடையில் டாக்டர் முஸ்தபா, தலையை அங்கும் இங்குமாய் ஆட்டினார். டாக்டர் சுமதியால் பொறுக்க முடியவில்லை… எழுந்தாள்… கத்தினாள்…

“தில் இஸ் டூ மச்… இது அதிகப் பிரசங்கித்தனம்…”

“பேசி முடித்த பிறகு சொல்லுங்க”

“நோ நோ…”

கலைவாணியும், சுமதியும் மேடையில் காரசாரமாய் பேசிக் கொண்டு நின்ற போது, டாக்டர் அசோகன் எழுந்து “கலைம்மா… கலைம்மா” என்றான். அவளை நிதானப்படுத்துவது போல் கையமர்த்தினான். கலைவாணி, உடனே அவனையும் சாடினாள். மைக் வழியாய், கூட்டம் முழுவதற்கும் கேட்கும்படியாய்க் கத்தினாள்…

“என்னை பேச விடாமல்… தடுப்தற்கு, ஒங்களுக்கும் யோக்கியதை இல்லை அசோகன் சார்… ஏனென்றால், நீங்களும் இந்த மோசடியில் ஒரு பங்காளி. பசுத் தோல் போர்த்தியப் புலி…”

கூட்டத்தில் ஒரே பரபரப்பு… ஒப்புக்கு வந்த போலீசார் கூட, கண்களைத் துப்பாக்கியாய் ஆக்கினார்கள்…

கூட்டம் கிட்டத்தட்ட எழுந்து விட்டது. வெளியே போகாமல், முன் பக்கமாக முண்டி அடித்தது. தலைமை வகித்த அசோகன். தன்னைப் பற்றி கலைவாணி அப்படி ஒரு அபிப்ராயத்தை சொல்லாமல் இருந்தால், ஒரு வேளை, ஜனகணமண பாடியிருப்பான். இப்போது கூட்டத்தை முடித்தால், அது கோழைத்தனம்… அதோடு, கலைவாணி தொடுகிற பிரச்சினையும் முக்கியமானது. இதற்குள் கூட்டத்தினர் ‘பேசுங்கள்… பேசுங்கள்’ என்று கோஷம் போல் குரலிட்டார்கள். அதை தனக்கு விடுத்த அழைப்பாகக் கருதி, மேடையில் நின்ற கலைவாணியை இன்னமும் ஒரு உதவியாள் என்ற இளக்காரத்தோடு, டாக்டர் சுமதி, மைக்கை தன் பக்கமாய் வளைத்துப் பேசினாள்…

“கலைவாணி பேசுவது அப்சர்ட்… அபத்தம்… திருமணம் என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விவகாரம்… ஒரு ஹெச்.ஐ.வி. ஆண் அல்லது பெண், திருமணம் செய்து கொள்ள நினைத்தால், அதில், இதைக் கண்டு பிடித்த டாக்டர் தலையிட முடியாது… வேண்டுமானால், திருமணம் ஆன பின்பு, அவன் மனைவியையும் டெஸ்ட் செய்து, உரிய ஆலோசனை வழங்கலாம்… இதைத்தான் டாக்டர்களாகிய நாங்கள் செய்கிறோம்…”

கலைவாணியால், தாள முடியவில்லை… சுமதியின் கையோடு சேர்த்து அந்த மைக்கைத் தன் பக்கமாய் இழுத்தாள். அவள், அங்கேயே அப்படியே நிற்கிறாள். ஏதோ ஒன்று, அவள் வாய் வழியாய்ப் பேசுகிறது. சுமதியிடம் நேரடியாய்க் கேட்கிறது.

“ஒங்களுக்கும் இன்னொரு நோயாளி கிடைத்த சந்தோஷம்… இல்லியா சுமதியம்மா?”

கூட்டம் ஆர்ப்பரித்தது. ‘ஷேம்…ஷேம்…’ என்றது. பேசுவதற்காக மைக் அருகே வந்த டாக்டர் சுமதியைப் பார்த்து ‘ஏய்… ஏய்’ என்றது. பேசுவதற்காக மைக் அருகே வந்த டாக்டர் முஸ்தாபாவைப் பார்த்து ‘போ, போ…’ என்றது. டாக்டர் சுமதி இதனால் ஓய்ந்து போனாள். கலைவாணி… தொடர்ந்தாள்…

“ஆமாம்… சகோதரிகளே… உங்கள் ஒருத்தரை திருமணம் செய்யப் போகிறவன், இதே டாக்டர் சுமதியிடம் ஆலோசனை பெறும் ஒரு ஹெச்.ஐ.வி. நோயாளியாக இருக்கலாம். இந்தத் திருமணத்தில், இந்த அம்மாவும் கலந்து கொள்வார்கள். ஆலோசனை வழங்குவதற்கு, புதிதாய் ஒரு எய்ட்ஸ் நோயாளி கிடைக்கப் போகிற மகிழ்ச்சியில் கலந்து கொள்வார். இந்த நாட்டில், கொலையாளிக்கு தண்டனை உண்டு. கொலைக்கு உடந்தையாய் இருப்பவர்களுக்கும் தண்டனை உண்டு. ஆனால், சுமதியம்மா போன்ற புதிய கொலையாளிகளுக்கு தண்டனை கிடையாது. மாறாக, கார் கிடைக்கும். பங்களா… கிடைக்கும்… பாரீன் டூர் கிடைக்கும். இதோ இந்த டாக்டர் சுமதி, கோவையில் ஒரு ஹெச்.வி.ஐ. நோயாளியின் திருமணத்தில் கலந்து கொள்கிறார். ஒரு புதிய பெண் நோயாளியை உருவாக்கப் போகிறார். இந்த லட்சணத்தில் இவரும் ஒரு பெண்ணாம்…”

கூட்டத்தினர் அலை மோதினார்கள்…

“வெட்கம்… வெட்கம்… ஷேம்… ஷேம்…ஏய் சுமதி… நீயெல்லாம் ஒரு பெண்ணாடி… நீயெல்லாம் ஒரு டாக்டராடி…”

கலைவாணி, அங்குமிங்குமாய் எழுந்த கூட்டத்தைக் கையமர்த்தினாள். ஒரு போலீஸ்காரர், மேடையில் ஏறி நின்று கொண்டார். ஆங்காங்கே, ‘தன்னார்வத் தொண்டர்கள்’ கூட்டத்தை அமைதிப்படுத்தினர். அதே கூட்டம் அமைதிப்பட்டாலும், ஆங்காங்கே, கலைவாணியைப் பார்த்து ‘பேசுங்க’… ‘பேசுங்க’… என்றதும், அவளும் தொடர்ந்தாள். -

“ஆனாலும் பெரியோர்களே! கோவையில் நடைபெற இருந்த அந்தக் கல்யாணக் கொலையை, அநேகமாக நான் தடுத்து விட்டேன்; மாப்பிள்ளைக்கு ஹெச்.ஐ.வி. இருப்பதை, மணமகளின் தந்தைக்கு டெலிபோன் மூலமாகவும், தந்தி மூலமாகவும் தெரிவித்து விட்டேன்”

பலத்த கைதட்டல்… பின் வரிசைக்காரர்கள் எழுந்து நின்றே கைதட்டினார்கள். அழைத்து வரப்பட்ட கூட்டம் இப்போது ஆர்ப்பரித்து, சுமதியைப் பார்த்து ‘கொலையாளி…கொலையாளி’ என்றது. சில பெண்கள், ஆவேசப்பட்டு, மேடைப் பக்கமாகக் கூட ஓடி வரப் போனார்கள். ஆனாலும், கலைவாணி கையமர்த்தியதும், அப்படியே உட்காரவில்லையானாலும், நின்ற இடத்திலேயே நின்றார்கள். இப்போது அந்தக் கூட்டம், கலைவாணியின் பக்கம் வசப்பட்டு விட்டதால், டாக்டர் சுமதியின் முகம் இருண்டு போனது. அவள், மானசீகமாய் கோவைக்கும், இந்த மேடைக்குமாய் போக்குவரத்து செய்து கொண்டிருந்தாள்… கலைவாணி தொடர்ந்தாள்.

“இன்னொரு கொடுமை… கணவனுக்கு எய்ட்ஸ் கிருமிகள் இருப்பதாக ஒரு மனைவிக்கு தெரிந்தாலும், அவளால் சட்டப்படியான விவாகரத்து வாங்க முடியாது. இளங் காதலர் திருமணத்தைத் தடுக்கும் காவல் துறையினரால், ஒரு ஹெச்.ஐ.வி. திருமணத்தைத் தடுக்க முடியாது… இதனால் அப்பாவிப் பெண்களும், அவர்களின் தலைமுறையும் பூண்டற்றுப் போகிறார்கள். இதைத் தடுக்க நாட்டில் நாதி இல்லை… இந்த லட்சணத்தில் விழிப்புணர்வு இயக்கங்கள்… விழிப்புணர்வு அமைப்புகள்… எய்ட்ஸைக் குணப்படுத்தி விடலாம்… ஆனால், இந்த எய்ட்ஸ் ஒட்டுண்ணிகளை குணப்படுத்தவே முடியாது.”

கூட்டம், மீண்டும் அலை மோதியது. செய்தியாளர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்… காமிரா வெளிச்சங்கள், கலைவாணியை, ‘குளோஸப்பில்’ காட்டின. ஆனால், அவளோ, உணர்ச்சிப் பெருக்கில் பேச முடியாமல் நின்றாள். இதற்குள், அதுதான் சாக்கு என்று டாக்டர் முஸ்தபா மேடையை விட்டுக் கீழே இறங்கினார். உடனே, அவரை, டாக்டர் சுமதியும் பின் தொடர்ந்தாள். அசோகன் மட்டும், பெண் அகலிகை மாதிரி குத்துக்கல்லாய் இருந்தான்.

கூட்டம், அங்குமிங்குமாய் அல்லோகல்லோலப்பட்டது. ஆளுக்கு ஆள் பேச்சு… கும்பல் கும்பலாய் விவாதம்… காரில் ஏறிய சுமதியை மறிக்கப் போவது போல் ஒரு ஓட்டம். கலைவாணியை வியப்பாய் பார்த்தபடியே பேச்சற்று நின்ற ஒரு கூட்டம். இவர்களை முந்தி, செய்தியாளர்கள் அவளை மேடையிலேயே சூழ்ந்தார்கள். கோவை எய்ட்ஸ் திருமணம் பற்றி அடுக்கடுக்காய்க் கேள்வி கேட்டார்கள். பரப்பரப்பான செய்தி கிடைத்த திருப்தி… எடிட்டோரியல் வில்லன்கள், வில்லங்கம் செய்ய முடியாத செய்தி…

கலைவாணி மேடையை விட்டு இறங்கினாள்… இன்னும் ஆவேசம் அடங்கவில்லை… ஆத்திரம் தீரவில்லை… அவளுக்கும் தான் யார் என்று, ராமனுக்கு ஏற்பட்டது போன்ற சுய மயக்கம். சுற்றிச் சூழ்ந்து, ஏதேதோ கேட்ட பெண்களிடம், கோர்வையாகப் பேச முடியவில்லை. கடின உழைப்பிற்கு பின்னர் ஏற்படுவது மாதிரியான களைப்பு… கலைவாணி, அந்தப் பந்தலை விட்டு வெளியே வந்தாள்.

கள விளம்பரத் துறையின் மாவட்ட அதிகாரியை, இணை இயக்குனர் தாளித்துக் கொண்டிருந்தார். இந்த விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தி, இதன் மூலம் வெளியாகும் பத்திரிகை செய்திகளை டெல்லி மேலிடத்திற்கு அனுப்ப நினைத்த இணை இயக்குனர், பதறிப் போனார். இதற்காகவே வேனில் கொண்டு வரப்பட்ட செய்தியாளர்கள், இப்போது வேறு மாதிரி செய்தி எழுதுகிறார்கள்.

கலைவாணி, அந்தப் பக்கமாக வந்த போது, இணை இயக்குனர் தாங்க முடியாமல் கேட்டார்.

“டாக்டர்சுமதியை ‘அட்டாக்’ செய்யுறதுக்கு எங்க மேடை தானாம்மா… ஒனக்கு கிடச்சுது…?”

“நீங்க ஏன்… அப்படிப் பேச மாட்டீங்க… அந்தம்மா சார்பில் நீங்க நடத்துற ஒவ்வொரு பிலிம் சோவுக்கும். ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கி இருக்கீங்களே… அந்தமாவுக்கு வக்காலத்து வாங்கத்தான் செய்வீங்க”…

ஆடிப் போன இணை இயக்குனர், தனது சபார்டினேட்டான மாவட்ட அதிகாரியை, மிரட்டலோடு பார்த்தார். அந்த ஜூனியரோ, கிட்டத்தட்ட வாயிலும், வயிற்றிலும் அடித்தார். அவர்கள் உரையாடலில் சிபிஐ என்கொய்ரி, சஸ்பென்ஷன் போன்ற வார்த்தைகள், இணை இயக்குனரின் வாயில் இருந்து விழுந்து, மாவட்ட அதிகாரி சந்தானக்குமாரின் காதுகளில் ஏறின.

கலைவாணியின் கண் முன்னாலயே, கூட்டம் கலைந்தது. செய்தியாளர்கள் வேனில் போய் விட்டார்கள். அங்குமிங்குமாய் வட்டமடித்துப் பேசிக் கொண்டு இருந்தவர்களும் போய் விட்டார்கள். கொண்டு வரப்பட்ட பெண்கள் என்பதால், அவர்கள் கூட்டத்தில் கை தட்டியதோடு சரி… கலைவாணியை ஆறுதலாய்ப் பார்த்ததே ஒரு சலுகை… ஆதரவாய் நிற்பது தனிப்படுத்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் அதிகப்படியான காரியம்.

கலைவாணிக்கு, அப்போதுதான்.யதார்த்தம் புரிந்தது.

கூட்டம், நிறுவனப் படுத்தப்படாத வரை, அது வெறும் ஒற்றை ஆட்களே… இன்று கேட்டு, நாளை மறக்கும் வகையினர். சினிமாக் கூட்டம் மாதிரி, தியேட்டருக்கு உள்ளேதான் ஒரு முகப்பட்ட கைதட்டல்.

டாக்டர் சந்திரா கிடைப்பாளா என்பது போல், அங்குமிங்குமாய் கலைவாணி பார்த்தாள். காணவில்லை. ஒருவேளை, அவளும் தப்பாக எடுத்துக் கொண்டாளோ… என்னமோ…இனி மேல் எங்கே போவது… திருடனுக்குக் கூட கன்னக்கோல் சாத்த ஒரு இடம் உண்டு. ஆனால்… திருத்தப் போனவளுக்கு எந்த இடம்…? சுமதியை சொல்லால் தொலைத்தாகி விட்டது… அசோகனையும் பகைத்தாகி விட்டது. எங்கே போவது? நிற்பதற்கு நிழல் கூட வேண்டாம்… வெயில் கூட கிடைக்காமல் போய் விட்டதே…

கலைவாணிக்கு, மேடைப் பேச்சின் வெறுமை இப்போது நன்றாகவே உறைத்தது… கைதட்டியவர்கள் போய் விட்டார்கள். அவளுக்கு தோள் கொடுப்பது போல் மேடை நோக்கி வந்தவர்கள் கூட, வீடு நோக்கிப் போய் விட்டார்கள். இனி மேல், அவர்கள் யாரோ, இவள் யாரோ. முகமறியா மனிதர்களிடம் பேசி… முகம் போகவில்லையானாலும், முகமூடி போய் விட்டது! பழையபடியும் அனாதரவான நிலை… அனாதையாய்ப் போன தனிமை. தனிப்படுத்தப்பட்ட தனிமை… தனது நிழலை வெட்டுவதற்காக, தன்னையே வெட்டிக் கொண்ட துயரம்…ரத்தம் வராத ரணம்…

கலைவாணி, அந்த ஆரம்ப சுகாதார வளாகத்தில் இருந்து, வெளியே வந்தாள். சந்திரா வீட்டுக்குப் போகலாம், என்றால், அங்கே அவள் அம்மா… மோகன்ராம் வீட்டுக்கு என்றால், அங்கே மனோகரின் அக்கா… சொந்த வீட்டிலோ… சொந்தமில்லாமல் போன உடன் பிறப்புக்கள்…

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_30&oldid=1641716" இலிருந்து மீள்விக்கப்பட்டது