பாலைப்புறா/அத்தியாயம் 31
கலைவாணி கால் இருப்பது வரைக்கும் நடப்பது போல், நடந்தாள். மனோகரை மனதுக்குள் திட்டிக் கொண்டே நடந்தாள். உடம்புக்குள் இருக்கும் எய்ட்ஸ் கிருமிகள் அத்தனையும், மனித அவதாரங்களாகி, அந்தப் பகுதியில் நடமாடுவதைப் பார்த்து விட்ட கோரம். இதோ எத்தனையோ மனிதர்கள் அருகருகே போகிறார்கள். ஆனால், ஒருவரிடமும் ஒட்டிக் கொள்ள முடியாது. இதோ எத்தனையோ வீடுகள். பெயர் என்னமோ அன்பு இல்லமாம்… முருக சரணாலயமாம்.. ஆனால், ஒன்றில் கூட இருக்க முடியாது. யதார்த்தவாதி, வெகு ஜன விரோதி என்பது எவ்வளவு உண்மை…
கண்களை அரைகுறையாய் மூடி நடந்த, கலைவாணியை உரசுவது போல் ஒரு மாருதி கார் நின்றது.
“கலையம்மா… கார்ல ஏறிக்கோ”
கலைவாணி, அசோகனை பிரமித்துப் பார்த்தாள். அசையாமல் நின்றாள். அவன் சர்வ சாதாரணமாய் சொன்னான்.
“பயப்படாதே… இந்த வில்லன் ஒன்னை கடத்திட்டுப் போக வர்ல. அப்படி ஒனக்கு சந்தேகம் வந்தால், இதோ ரோட்டுலே போகிறவர்களில் ஒருத்தரை கை காட்டு… அவரையும் ஏற்றிட்டு போகலாம்… சரி ஏறிக்கோ கலையம்மா… பிரமாதமாய் வெளுத்து வாங்கிட்டே… ஏன் அப்படி பார்க்கே… நிசமாத்தான்… டாக்டர் சுமதியோட சுயரூபமே… இன்னிக்குத்தான் எனக்கே தெரியுது… ஹெச்.ஐ.வி.க்காரன் கல்யாணத்துக்கா போறாள்…?”
“ஆமாம்… நீங்க போகலியா…?”
“ஒன் கிட்ட எனக்குப் பிடிச்சது இதுதான் கலையம்மா… நீ… உண்மையை அடக்க நினைச்சாலும், அது ஒன்னால முடியாது… நீ என்னை சுமாரான நல்லவன்னு நினைத்தால், நீ இப்போ கார்லே ஏறணும்… பச்சையாய் சொல்லப் போனால், ஒனக்கு ஒரு இடம் கொடுக்கணும் என்கிறத விட, என்னைப் பற்றி நான் தெரிஞ்சுக்கணும் என்கிறதுதான் என்னோட நோக்கம். சத்தியமாய் சொல்றேன். சுமதிக்கும், எனக்கும், அவள் அனுப்புற ஹெச்.ஐ.வி. கேஸ்களை, டெஸ்ட் செய்து ரிசல்ட் கொடுக்கிறதோட சரி… ஒரு டெஸ்டுக்கு நூற்று ஐம்பது ரூபாய் ஆகும். அதைக் கூட நான் வாங்கியது இல்லை… நீ எனக்கு ‘பெனிபிட் ஆப் டவுட்’ கொடுத்தால், கார்ல ஏறு”
கலைவாணி, காரில்… ஏறிக் கொண்டாள்… அசோகன் அருகே முன்னிருக்கையில் ஏறிக் கொண்டாள். சிறிது நேர மௌன ஓட்டம். பின்னர், கலைவாணி குனிந்த தலையை நிமிர்த்தாமலே… ஆண்டறிக்கையில், தான் படித்ததை, ஒன்று விடாமல் ஒப்பித்தாள். பேசி முடித்து விட்டு, அவனை நிமிர்ந்து பார்த்தாள்; அவனோ முகம் இறுகிப் போனான். காரை தாறுமாறாக ஓட்டினான்.
அசோகன், அந்த மருத்துவமனையின் முன்பக்கம் காரை நிறுத்தினான். கலைவாணிக்குக் கூட காத்திராமல், அலுவலக அறைக்குள் ஓடினான். நாற்காலியை கீழே விழத் தட்டுவது போல் உட்கார்ந்தான். டெலிபோனை சுழற்றினான்.
“ஹெலோ… சுமதியா… ஆமா… கலைவாணி விஷயமாத்தான் பேசுறேன். ஒங்க ஆண்டறிக்கையில்… எனக்கு மாதா மாதம் பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதாய் கணக்கு இருக்குதாம்… என்னோட மருத்துவமனை கூட ஒங்களுக்கு சொந்தமாம். நோ… நோ… கலைவாணி பொய் பேச மாட்டாள். இப்பவே நீங்க… போன வருடத்து ஆண்டறிக்கை… இந்த வருடத்து ஆண்டறிக்கையோட வரணும்… என் கிட்டே காட்டணும்… என்ன… என் கிட்ட காட்ட வேண்டிய அசிவயம் இல்லியா…? ஓகே…? அப்போ… போலீஸ்லே கம்ப்ளைன்ட் கொடுப்பேன்…நோ சால்சாப்பு…”
டாக்டர் அசோகன், எதிரே நின்ற கலைவாணியை அங்கீகாரமாய்ப் பார்த்தான். ஏற்கனவே அங்கே உட்கார்ந்திருந்த சந்திராவை, அப்போதுதான் பார்ப்பது போல் பார்த்தான். ஏதோ பேசப் போனான். அதற்குள் ஒரு டெலிபோன்.
“ஹெலோ… சொல்லுங்க… இந்தா பாரும்மா… நீ எவனை வேண்டுமானாலும் ஏமாற்று… ஆனால், என்னை ஏமாத்திடலாம்னு நினைக்காதே! ஒன் கிட்டே ஒரு பைசாவாவது வாங்கியிருப்பேனா…? என்னை எதுக்குடி விற்கிற? ஒன்னைத்தான்… ஏடின்னு சொல்லிட்டு… அதுக்கு மேல் பேசாமல் போனதுக்கு காரணம்… இங்கே ரெண்டு பெண்கள் இருக்காங்க… பால் கொடுத்த மாட்டையா… பல்லைப் பிடிச்சுப் பார்க்கிறே… இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆண்டறிக்கையோட நீ வரலன்னா… அப்புறம் நீ இருக்க போற இடம் ஜெயிலு… நான் உணர்ச்சி வசப்படல… இப்போதான்… கலைவாணி என் கண்ணைத் திறந்திருக்காள். சரிதான் போன வச்சிட்டு… இங்கே வாடி…”
கலைவாணியும், சந்திராவும், வாயாடாமல் போனார்கள். அசோகனை அதிர்ந்து பார்த்தார்கள்… இந்தத் தாக்கத்தில், ஒருவரை ஒருவர் அனுதாபமாகவும் பார்த்துக் கொண்டார்கள். இப்போதுதான், அசோகன் பற்களைக் கடிப்பதை முதல் தடவையாக பார்க்கிறார்கள்… இந்த மாதிரி, அவன் கோபப்பட்டு பேசியதை, முதல் தடவையாகக் கேட்கிறார்கள். அவனை, ஆமோதிப்பாய் பார்த்தார்கள். சந்திரா, தான் வந்ததன் நோக்கத்தை சொல்லலாமா, வேண்டாமா என்று யோசித்த போது, இன்னொரு டெலிபோன். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், டெலிபோனை எடுத்து விபரங்கள் கேட்டு, அதை அசோகனிடம் நீட்டும் சந்திரா, சும்மாவே இருந்தாள். அசோகனே, சிறிது நேரம் கடந்து டெலிபோனை எடுத்தான்.
“இந்தா பாரும்மா சுமதி… ஸாரி.எம்.எல்.ஏ.வா… நானேதான் பேசறேன் சார். சுமதி விஷயமா… வெளிநாட்டு நிறுவனங்களுக்கு என்னை விற்று இருக்காள் சார். அவள் ஒரு கிரிமினல்… என்ன சார்… நீங்க நான் என்ன சொல்லப் போறேன் என்கிறதைக் கூட கேட்க மறுக்கிறீங்களே… ஒரு மோசடிப் பேர்வழியோட எப்படி சார் ஒத்துப் போக முடியும்…? நோ, நோ, ஐயாம் ஸாரி… நீங்க பேசுறது ஒரு எம்.எல்.ஏ. பேசறது மாதிரி தோணல. ஓகே நீங்க வைக்கும் முன்னாலயே, நானே டெலிபோனை வச்சிட்றேன்…”
அசோகன், டெலிபோனை வைத்து விட்டு, சிறிது நேரம் அப்படியே குமைந்து கிடந்தான். பிறகு, அந்தப் பெண்களை பொதுப்படையாய்ப் பார்த்தபடி பேசினான்…
“இந்த எம்.எல்.ஏ.வைப் பாருங்க! இங்க வந்து ஓசியிலே மெடிக்கல்… செக்கப் செய்த மனுஷன். இப்போ அசல் கொம்பன் மாதிரி பேசுறான். சுமதி மேல நான் ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அது எனக்கே விபரீதமாய் போய் விடுமாம்… எம்.எல்.ஏ., மக்கள் பிரதிநிதின்னுதானே அர்த்தம். ஒரு வேளை மாக்கள் பிரதிநிதின்னு ஒரு அர்த்தம் இருக்கா…?”
“என்னைக் கூட, அந்த சுமதி.போகிற போக்கில் மிரட்டி விட்டுப் போறாள்… அசோக். கலைவாணியை அப்படிப் பேசும்படி நான்தான் தூண்டி விட்டேனாம். இன்னும் மூன்று நாளையில் எனக்கு சஸ்பென்ஷன் வாங்கிக் கொடுக்கா விட்டால், அவள் பேரை மாற்றிக் கூப்பிடலாமாம். முஸ்தபா… என்னடான்னா, ரெண்டு நாள் போதும் என்கிறான்…”
கலைவாணி,… இருவரையும் மாறி, மாறிப் பார்த்தாள். டாக்டர் சுமதியின் சுய ரூபத்தைத் தொட்டுக் காட்டி விட்டால், ஆளுக்கு ஆள் பிடித்துக் கொள்வார்கள் என்று நினைத்தது, எவ்வளவு தப்பாய் போயிற்று… நியாயத்தை வெளிப்படுத்தினால், அநியாயந்தான் அதிகமாகுமோ… இல்லன்னா…இந்த எம்.எல்.ஏ…
“டாக்டரய்யா… ஒங்களுக்கோ, டாக்டரம்மாவுக்கோ ஏதாவது நடக்கிறதாய் இருந்தால், நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். இல்லாட்டி, தீக்குளித்து சாவேன். இது சத்தியமான வார்த்தை”
சந்திரா, கலைவாணியின் கைகளைப் பிடித்து, தன் கைக்குள் வைத்துக் கொண்டாள். அசோகன், அங்குமிங்குமாய் தலையை ஆட்டி விட்டு, ஒரு சிரிப்பு சிரித்தான். பிறகு கலைவாணி எதையோ ஒன்றைக் கண்டு பிடித்த குதூகலத்தோடு பேசினாள்.
“நெசமாவே சுமதி ஒரு டாக்டரா?”
“ஆமா… நீ சொல்றதை நினைத்தால், அப்படிக் கூட ஒரு சந்தேகம் வருது. ஆனாலும், அந்த சுமதியை, தனிப்பட்ட முறையில் எதிர்க்கிறது கொஞ்சம் சிரமந்தான். அவள் கிட்ட ஆள் பலம் இருக்குது… பண பலம் இருக்குது… அழகு பலம் இருக்குது… அதனால், அவளை நிறுவன ரீதியாய் எதிர்க்கணும்… நாமே ஒரு விழிப்புணர்வு அமைப்பை ஏற்படுத்தினால் என்ன…? எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு… இதையே ஏமாற்றுப் பேர்வழிகள் மேல் ஒரு பழிப்புணர்வாய் ஆக்குவோம்.”
“நடக்குற காரியமா அசோக்…?”
“ஏன் நடக்கப்படாது…? கலைவாணி கிட்ட பேச்சுத் திறன் இருக்குது… ஒன் கிட்ட வைத்தியத் திறன் இருக்குது… என் கிட்ட மருத்துவமனை இருக்குது… எல்லாவற்றுக்கும் மேலே… நம்ம கிட்ட நியாயம் இருக்குது… விசுவாசம் இருக்குது; இன்றைக்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல வெளிநாட்டு அமைப்புகளிடமும், அரசாங்கத் துறைகளிடமும் தங்களுக்கே தெரியாத திட்டங்களோட பெயர்களைச் சொல்லி, பணம் கறக்குறாங்க… இந்த நிறுவனங்களுக்கு எங்கிருந்து பணம் வருது…? எதற்காக வருது என்பது பற்றி கணக்கு, வழக்கே கிடையாது. ஆனால், நாம் அமைக்கப் போகிற அமைப்பு… தனியார் அமைப்பு இல்ல… இதுல உறுப்பினர்களைச் சேர்ப்போம். சந்தா வசூலிப்பேம். ஆண்டு தோறும், நம் கணக்கு விபரத்தை… ஜெனரல்பாடிக் கூட்டத்தில் ஒப்பிப்போம்… நோட்டீஸ் போர்ட்ல ஒட்டுவோம்… இந்த முறையைக் கொண்டு வந்தால், இந்த அமைப்புக்களை வைத்திருக்கிற பாதிப் பேர் ஜெயிலுக்கு போக வேண்டியவங்க என்கிறதாவது தெரிய வரும்.”
“டாக்டரய்யா… நிச்சயமாய் இப்படி ஒரு அமைப்பு தேவைதான். ஆனால், இதனோட நோக்கம், ஹெச்.ஐ.வி. திருமணங்களை தடுப்பதாய் இருக்கணும்… சரியா?”
“சரியேதான்…”
“அய்யோ… எனக்கு எப்படி சந்தோஷமாய் இருக்குது தெரியுமா?”
கலைவாணி எழுந்து நின்று, கைகளை ஆட்டி, ஆட்டி தோள்களைக் குலுக்கினாள். இப்போது, அந்த மூவருக்கும், சுமதி ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. சிந்தனை முழுவதும், எதிர்பாராமல் கருவான விழிப்புணர்வு அமைப்பின் மீது ஒருமுகப்பட்டது. அப்போது பார்த்து அடுத்த டெலிபான்…
“ஹெலோ… நான் டாக்டர் அசோகன்தான் பேசறேன்… சொல்லுங்க… இன்ஸ்பெக்டர் சார். டாக்டர் சுமதிதானே… அசல் பொம்பளைக் கேடி. சார்… நானா…? நான் எதுக்கு ஸ்டேஷனுக்கு வரணும்…? சுமதியை சத்தம் போட்டது உண்மை. ஆனால், கொலை செய்யப் போறாதாய் மிரட்டலியே… இந்தாப் பாருங்க இன்ஸ்பெக்டர்… ஒங்களாட லத்திக் கம்பை விட, என்னோட ஸ்டெதாஸ்கோப் உயர்வானது. புனிதமானது. இந்த மிரட்டுகிற வேலை… என் கிட்ட வேண்டாம். சட்டம் கத்துக்கிறது முக்கியம்தான். அதை விட முக்கியம் மரியாதை… கத்துக்கிறது”
டெலிபோனை வைத்த அசோகன், முகமெங்கும் வியர்வைத் துளிகள். எதிர்பாராத எதிரியைச் சந்தித்த பிரமிப்பு. அசையாது கிடந்தான். சந்திரா அவன் தோளைப் பிடித்த உலுக்கிய போதுதான், அவன் மீண்டும் அசோகனானான்.
“இந்த சுமதி… என்னால் அவள் உயிருக்கு ஆபத்துன்னு புகார் கொடுத்திருக்காளாம். அதனால, நான் போலீஸ் நிலையத்திற்கு போகணுமாம்… போகாட்டால், கையிலே விலங்கு போட்டு, தெருவுல என்னை நாய் மாதிரி இழுத்துட்டுப் போவானாம்… இன்ஸ்பெக்டர், காட்டு மிராண்டியாய் ஆகிட்டான்…”