பாலைப்புறா/அத்தியாயம் 36
டாக்டர் சந்திரா, நோயாளியாய் தவித்தாள்… தனக்குத் தானே, மானசீகமாக மனோதளத்தில், மருந்துகளை எழுதினாள். ஆனாலும், அதைப் படிக்க முடியாமல், அல்லாடினாள். அந்தச் சூழலிலும், அசோகனிடம் யோசனை கேட்கலாமா என்று ஒரு அனிச்சையான சிந்தனை… அந்த சிந்தனை அவளுக்கு லேசாய் சிரிப்பைக் கூட கொடுத்தது… ஆனாலும் கோழியா அல்லது முட்டையா என்ற குழப்பம் நின்றபாடில்லை. இருதலைக் கொள்ளி எறும்பு என்பார்களே, அது எப்படி இருக்கும், எப்படி தவிக்கும் என்பது அவளுக்குத் தெரியாது. ஆனாலும், அந்த எறும்பு, தன்னைப் போல், தவித்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.
விழிப்புணர்வு மையத்திலிருந்து, வீட்டுக்கு வந்த சந்திராவையும், சங்கரனையும், அம்மா வீட்டுக்குள் விடாமலேயே, விரட்டினாள்; ‘அப்படியே நில்லுங்க… கோயிலுக்கு போயிட்டு வரலாம்…’ என்று சொல்லி விட்டு, உள்பக்கமாகத் திரும்பி,தட்டு பழத்தோடு வெளிப்பட்டாள். ‘வராமல் வந்த என் அண்ணன் மகன் வந்திருக்கான். சிவன் கோவிலுல ஒரு அர்ச்சனை செய்யணும்… அப்படியே கல்யாணத்திற்கு அய்யர் கிட்ட நாள் குறிச்சுட்டு வரலாம்’ என்றாள். அவள் வாயில் நீரூற்றாய் தோன்றிய சிரிப்பு, முகமெங்கும் பிரவாகமானது… அம்மாவை ஏறிட்டுப் பார்த்த சந்திரா, அப்படியே பார்த்தபடி நின்றாள். அந்த வாஞ்சை, அவளை நெகிழ வைத்தது. கல் பிளந்து காட்டும் வாஞ்சை… அதைப் பார்த்தவுடனேயே, அவள் மனம் சங்கரன் பக்கம் தாவியது. அந்தச் சமயம் பார்த்து, ‘அத்தே… நான் டில்லியிலிருந்து வாங்கிட்டு வந்தேன் பாருங்க, ராஜஸ்தான் பட்டு, அத சந்திராவைக் கட்டிக்கிட்டு வரச் சொல்லுங்க’ என்று, அந்தக் காலத்து மணமகன் போல் நாணிப் பேசினான். அந்த நாணத்தோடு, அவன் நின்றிருக்கலாம்… நிற்கவில்லை… “பட்டுன்னு வச்சது சரியாத்தான் தோணுது… கையில இருக்கிற பணத்தை பட்டுப் போகச் செய்யுதே” என்றான். சந்திரா, அவனை எரிச்சலோடு பார்த்தாள்.
அந்தச் சமயம் பார்த்து ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து ஒரு ஆயா சேதி கொண்டு வந்தாள்… சஸ்பெண்டாகி இருக்கும் சந்திராவை விசாரிக்க, விசாரணை அதிகாரி, நெல்லையில் இருந்து வந்திருக்காராம்… இஷ்டப்பட்டால் விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ளலாம் என்று டாக்டர் முஸ்தபா சொன்னாராம்… சந்திராவுக்கு, பத்து நாட்களுக்கு முன்பு வந்த குற்றப்பட்டியலும், விசாரணைக்கு வரும்படி வந்த தாக்கீதும் நினைவுக்கு வந்தன… அப்போது புறக்கணிக்க நினைத்தவள், இப்போது முசுடன் முஸ்தபாவின் மோசடிகளை, விசாரணை அதிகாரியிடம், ஒப்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள்… சங்கரன் அவளுக்கு உபதேசித்தான்… குற்றங்களை ஒப்புக் கொள்ளும்படி வாதித்தான். துர்போதனையால் அப்படி நடந்து கொண்டதாக மன்னிப்பு கேட்கச் சொன்னான்… இதனால், சென்னைக்கு அவளை முழு டாக்டராக கொண்டு போகும் தன் பணியில் சிக்கல் இருக்காது என்றான். உடனே சந்திரா வெகுண்டாள். ‘நற்போதனையால்தான்.அப்படி நடந்து கொண்டேன்… எப்படி வாதாடணுமுன்னு எனக்குத் தெரியும்’ என்றாள்… அம்மா “கட்டிக்கப் போறவனை இப்படியா எடுத்தெறிந்து பேசுறது” என்ற போது, சந்திராவின் பார்வை சூடானது. அதே சமயம் ‘விடுங்கத்தே… இப்படிப் பல தடவை எடுத்தெறிந்து பேசியிருக்காள்; ஆனாலும், இந்த ராட்சசியை என்னாலே மறக்க முடியலியே,’ என்று சொல்லிச் சிரித்தான். சங்கரன்; எரிந்து நின்ற சந்திரா மெழுகாய் குழைந்தாள்… தனக்கு வேண்டியவன் சங்கரனே என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு, எங்கேயோ தூக்கி எறிந்த வெள்ளைக் கோட்டை தேடுவதற்காக வீட்டிற்குள் போனாள்…
அந்த சுகாதார நிலையத்திற்கு, டாக்டர் சந்திரா வந்த போது, இரவுக் காவலாளி மட்டுமே இருந்தார். ஏதோ ஒரு அரசாங்க கடனுக்காக, இன்சார்ஜ் டாக்டர் முஸ்தபாவின் மோவாயை தாங்குவதற்காக முன் கூட்டியே வந்து விட்டார். சந்திராவைப் பார்த்ததும், ஒப்புக்கு கை தூக்காமல், ஒப்புதலாய் கும்பிட்டு விட்டு விவரம் சொன்னார்… டாக்டர் முஸ்தபா, அரைமணி நேரத்திற்கு முன்பே, விசாரணை அதிகாரியை கூட்டிக் கொண்டு போய் விட்டாராம்… இவள் வர மாட்டாள் என்று அடித்துச் சொல்லி, ஏதோ ஒரு விடுதிக்கு அழைத்துப் போயிருக்கிறாராம்.
“எக்பார்ட்டே என்னமோ ஒரு இழவாமே. அப்படி ஒங்கள டிஸ்மிஸ் செய்யப் போறாங்களாம்,” என்று சொல்லி விட்டு, காவலாளி கண்ணீர் சாட்சியாய் விம்மினார்… அவர் கைகளை எடுத்து, கண்களில் ஒற்றிக் கொண்ட சந்திரா, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக, தனது பழைய இருக்கையில் உட்காரப் போனாள்… பிறகு, அதன் எதிரே உள்ளே நோயாளிப் பெஞ்சில் உட்கார்ந்தாள்… ஐந்து மணிக்கு வர வேண்டியவள்தான்… சங்கரனின் உபதேசத்தாலும், வெள்ளைக் கோட்டை தேடியதாலும், கால் மணி நேரம் தாமதமாகி விட்டது. ஆனாலும், விசாரணை அதிகாரி சட்டப்படி ஆறு மணி வரை காத்திருக்க வேண்டும்… அதுதான் சாக்கு என்று போய் விட்டார். இதோ, இந்த காவலாளிப் பெரியவரை சாட்சியாக வைத்து, மேலதிகாரிக்கு மனுப் போடலாம்… ஆனாலும், பயன் இல்லை… ஒரு முகமூடியை, முகமே அற்றுப் போன இன்னொரு மூடி விசாரிக்கும்… தீர்ப்பளித்து விட்டு, விசாரிக்கும்… இப்போது இதுவல்ல பிரச்சினை…
டாக்டர் சந்திராவிற்கு, மீண்டும் கோழியா, முட்டையா என்ற குழப்பம் வந்தது… அந்தக் குழப்பத்தில் சுயமரியாதை குறைந்தது போல், தன்னை மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்டாள்… ஒருத்தி, ஒருவனை நினைத்து விட்டால், அவனை, ஆயுள் வரைக்கும் மறக்க மாட்டாளாம்… இதுதான் தமிழ் பண்பாடாம்… ஆனால், “சங்கரனிடம் நிலைத்த என் மனம் அசோகனிடம் ஏன் தாவுகிறது… நான் சஞ்சலக்காரியோ… சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப நடப்பவளோ… சீ… சீ… நினைக்கவே வெட்கமாக இருக்குதே…”
“இதில் வெட்கப்பட ஏதுமில்லை… சங்கரன் மீது கொண்ட நேயம் உறவின் அடிப்படையிலானது… அவனுக்கு இவள்… இவனுக்கு அவள் என்று சின்ன வயதிலேயே பெரியவர்கள், அவள் அடி மனதில் பதித்த முடிச்சு… இதை வெளி மனம் அவிழ்க்கப் பார்க்கிறது… இதுதான் பிரச்சினை… ஆனால், அசோகனிடம் ஏற்பட்டபிடிப்பு, காலம் கணித்த தத்துவார்த்த நேயம்… காதலிப்பது தெரியாமலேயே காதலித்த நேயம்…
“இருக்கலாம்தான்… ஆனாலும், இந்த சங்கரனை உதறுவது எந்த வகையில் நியாயம்? ஏற்கெனவே, பெருவிரலைப் பிடித்துக் கொண்டு, பாதி மனோ நோயாளியாய் ஆகிப் போனவர்… ஆயிரம் நடந்தாலும், தன்னை மனதார நேசிப்பவர்… அவருக்கு மனைவியாய் இருந்து, ஒரு மருத்துவச்சியாய், அவரது பெருவிரலைப் பிடித்த பிரச்சினையை படிப்படியாய் தீர்க்க வேண்டும்… அதோடு, திருமணம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் மட்டும் நடக்கும் உறவல்ல… ஒவ்வொரு திருமணமும், இரு குடும்பங்களுக்கான இணைப்புப் பாலம்… ஆயிரம்தான் இருந்தாலும், அசோகன் அந்நியன்,… அவன் மீது இவள்தான் ஒரு தலை ராகம் பாடுகிறாள். அதோடு அம்மா முக்கியம்… தாய் மாமா மகன் சங்கரன்தான், அம்மாவை மாமியாராக வெறுத்தாலும், அப்பாக் கூடப் பிறந்த அத்தையாக அரவணைப்பார்…
“சரிதாண்டி… சங்கரனை நல்லவனாக்குவதற்காக, உனக்கு தோன்றாத் துணையாய் நிற்கும் அசோகனை அந்நியமாக்குவதா… அவர் மீது நம்பிக்கை இழப்பதா… திருமணம், இரு குடும்பத்தின் இணைப்பு என்றால், அசோகனோடு நடக்கும் திருமணம், பல குடும்பங்களை இணைக்கும் சமூகப் பாலம்… கோழியான அசோகனா… முட்டையான சங்கரனா…
பேசாமல் திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கலாம்… எப்படி முடியும்… ஆரம்பத்தில் வீறாப்பாய் திருமணம் செய்யாமல், கடைசி காலத்தில் அவஸ்தைப்படும் எத்தனை பெண்களைப் பார்த்தாச்சு… கழுதை வயசாகிறது… இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும்… கலைவாணியோடு, கடைசி வரைக்கும் இருந்து கழுவாய் தேட வேண்டியது அவசியம்… ஆனாலும் அம்மா… அவளை வளர்த்து - வார்த்தெடுத்த தாய் மாமா, அவர்களது நம்பிக்கையை பொய்ப்பிக்கலாமா… அதே சமயம் தாட்சண்யம் கருதி, திருமணம் செய்வது வெறுமணம் அல்லவோ… என்ன செய்யலாம்…
எத்தனையோ பேர், தன் தலையை உருட்டிய போதும், அதை தாங்கிக் கொண்ட சந்திரா, இப்போது தன் தலையைத் தானே, உருட்டிக் கொண்டாள்… அனுதாபத்தை காதலாக அனுமானிக்க கூடாது… அதே போல், மரியாதை உணர்வை, காதலாக மதிப்பிடக் கூடாது… காதலை, கண்களில் தேடாமல், இதயத்தில் தேட வேண்டும்… ஒருவருக்கு, ஒரு இதயம்தான் உண்டு… காதலைப் பொறுத்த அளவில், அதில் பைபாஸ் சர்ஜரி கூடாது…
டாக்டர். சந்திரா, வெறும் சந்திராவாய் சிந்தித்து, சிந்தித்து, சிந்தனை அற்ற போது, மருத்துவமனை தொலைபேசி அலறியது… நமக்கேன் வம்பு என்பது போல் சந்திரா சும்மாவே இருந்தாள்… ஆனாலும், விசாரணை அதிகாரி, மனச்சாட்சி போதையில், தொலைபேசியில், தான் வந்திருப்பதை உறுதி செய்ய நினைத்திருக்கலாம்…
சந்திரா, டெலிபோனை எடுத்தாள்…
‘சங்கரன் இருக்காரா…’
‘இல்லை நான் அவரோட அத்தைப் பொண்ணு சந்திரா பேசுறேன்… நீங்க யாரு… என்ன வேணும்?’
‘நான் சென்னையிலிருந்து பேசுறேன்… சங்கரோட, கம்பெனி சகா; பெயர் கார்மேகம்… அவனோட, நான், இப்போ பேசியாகணும்; அவசரத்துக்காக இந்த நம்பரைக் கொடுத்தான்… பாவிப் பயல் எங்கே போயிட்டான்…”
“எங்கேயும் போகல. கோயிலுக்குத்தான் போயிருக்கார்… திரும்புறதுக்கு ஒரு மணி நேரம் ஆகும்… ஒங்க டெலிபோன் நம்பரைக் கொடுங்க… அவரைப் பேசச் சொல்றேன்… இஷடப்பட்டால், என் கிட்ட சேதி சொல்லலாம்…”
“முக்கியமான சமாச்சாரம்… அவன் கிட்ட மட்டுமே பேச வேண்டிய விவகாரம்…”
“ஒங்கள விட, அவர் மேல, எனக்கு அதிக அக்கறை உண்டு… ஆபத்துக்கு தோசமில்ல. சொல்லுங்க…”
“சொல்றேன் மேடம்… மனோகருக்கு எய்ட்ஸ் வந்துருக்கிறதாய், அமெரிக்க ஏர் போர்ட்டுக்கு, சங்கரன்தான், தகவல் கொடுத்தானாம். கம்பெனி விசாரணையில் தெரிய வந்திருக்குதாம். இதனால, கம்பெனி, சங்கரனை சஸ்பெண்ட் செய்திருக்கு… ஆர்டர் கையெழுத்து ஆகிட்டு… அது டெஸ்பாட்ச் ஆகு முன்னால, அவனை ஏதாவது செய்யச் சொல்லுங்க”
டாக்டர் சந்திராவுக்கு மனம் லேசானது; ஆனால், தலை கனத்தது…