உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 39

விக்கிமூலம் இலிருந்து

ருக்குப் புறம்பாய் உள்ள சுடுகாடு. வாழ்கிறவர்களைத் தலையில் சுமந்தும், வாழ்ந்தவர்களை வயிற்றுக்குள் சுமந்தும், பூடகமாய்ப் பேசும் மயானம். எந்த பகுதியையும் போல், அந்தப் பகுதியில் இருப்பவர்களின் எண்ணிக்கையை விட, இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதை, எலும்பு சாட்சியாய் நிரூபிக்கும் சமத்துவ பூமி.

இந்த சுடுகாட்டின் எல்லை முடியும் மேட்டில், ஒரு பனந்தோப்பு. நேராய் நிமிர்ந்த பனைகளில், மார்பில் தோல் கவசத்தோடு ஏறும் பனையேறித் தொழிலாளர்கள்… பனை நாரை, கால் நாராய் போட்டு கரடிப் பிழைப்பு நடத்துபவர்கள்… ஆங்காங்கே உள்ள ‘விடிலிகளில்’ கல் அடுப்புக்களில் பதனீர் காய்ச்சி, காய்ச்சியதை, சிறட்டைகளில் ஊற்றி, அவற்றைக் கருப்பட்டிகளாய் ஆக்கும் பெண்கள்.

இப்படிப்பட்ட, பச்சை ஓலையும், பழுத்த ஓலையும் விழும் இடத்தில் பனைமரக் கம்புகளில், ஓலை மறைப்புக்களைக் கொண்ட ‘விடிலி’ எனப்படும் சுவரில்லாத குடிசை, அதில் ஒரு சேலை விரித்த பனங்கட்டிலில், மனோகர், ஈரப்பட்ட விறகாய்க் கிடந்தான். கண்கள் மட்டும், மின்மினிப் பூச்சிகளாய் துடித்துத் துடித்து துள்ளின. மற்றபடி, உடலில் எந்த அசைவும் இல்லை.

இந்த விடிலிக்கு வெளியே, ஒரு கருங்கல்லில், சீதாலட்சுமி விறைத்துப் போய்க் கிடந்தாள். அழுதழுது முகம் வீங்கி விட்டது. கதறிக் கதறி, குரல் கட்டி விட்டது. அவள் பக்கத்தில், மூத்த மகள் சகுந்தலா; அந்தப் புடலங்காய் உடம்பு. செத்துக் கொண்டு இருக்கும் தம்பிக்காகவும், சாகப் போகிற கணவனுக்காகவும், ஒரே சமயத்தில் துடித்தது. பிள்ளைத்தாச்சியான மீரா, எங்கேயோ பராக்குப் பார்த்துக் கொண்டு நின்றாள். மோகன்ராம், முகத்தில் ஈயாடாமல், ஒரு பனை ஓலையில் உட்கார்ந்திருந்தார். அந்த சமயத்தில், ஒரு பனையேறி வந்தார். அர்ச்சுனன் வைத்திருந்த அம்பராத் துணி மாதிரி ஒரு பாளைக் குடுவை… அதில் ஒரு பாளை அரிவாள். தோளில் தொங்கும் கலசங்கள். மனோகரைப் பார்த்து விட்டு, மனங்கேளாமல் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது பார்த்து, கட்டாந்தரையில் துண்டைப் போட்டு உட்கார்ந்திருந்த தவசிமுத்து எச்சரித்தார்.

“ஏலே…மாடக்கண்ணு…முறைப் பயனியை சரியா ஊத்தாட்டா… நான் ஆள மாற்ற வேண்டியதிருக்கும்.”

“தூ…”

“எதுக்குல துப்புறே…?”

“நீரு சொன்ன சொல்லு, காது வழியாய் வாய்க்குள்ளே போய் வெளியிலே விழுது…தூ… இந்தச் சமயத்திலயா… அந்த பேச்சு…?”

தவசிமுத்து, மாடக்கண்ணுவை சாடப் போனார். தகாத வார்த்தைகளால் விமர்சிக்க போனார். அதற்குள், மருமகன் மோகன்ராம் கத்தினார்.

“யார் யாருக்கோ… எய்ட்ஸ் வருது… வர வேண்டிய முடிச்சுமாறிகளுக்கு வர மாட்டக்கு… பாரு… தூ”

தவசிமுத்து, எச்சில் பட்டது போல், வேட்டி முனையால் முகத்தைத் துடைத்த போது, ஆங்காங்கே, கம்மாக் காட்டில் அல்லாடி விட்டு, வீட்டுக்குத் திரும்பிய விவசாயிகள், அந்த பக்கமாய் வந்தார்கள். இதற்குள், சாவு விழுந்திருக்கும் என்ற அனுமானத்தில், ஊரில் இருந்தும் பலர் துஷ்டிகேட்க வந்திருந்தார்கள். என்ன இந்த மனோகர். சட்டுப் புட்டுன்னு போகாமல்… கூட்டத்தினர் சிறிது விலகியே நின்றனர். காற்றடிக்காத திசையாய் சில புத்திசாலிகள் போன போது, கூட்டமும் அங்கே போனது.

மனோகரைப் போல், பகலும் செத்துக் கொண்டிருந்தது. சூரியன், மேற்கு பக்க சமாதியில் இறங்கிக் கொண்டிருந்தான். ஆகாய அடிவார புதைகுழிக்குள் சுருங்கப் போனான். சுடுகாட்டில் ஒரு பிணப் புகைச்சல்! அதே காட்டில் இன்னொரு பக்கம், இரும்புக் கம்பியோடும், மண் வெட்டியோடும் இரண்டு வெட்டியான்கள்; ஆகாயத்தில் கழுகுகள் வட்டமடித்தன. பிணங் கொத்தி அண்டங்காக்கைகள் கரைந்தன. பக்கத்து சௌக்குத் தோப்பில், நரிகள் ஊளையிட்டன. தூரத்து சோளச் செடிகள் கதிர் கதிராய் வளைந்து வளைந்து மாரடித்தன. எருக்கலைச் செடிகள், இடுக்கிய கண்கள் போன்ற ஒடுங்கிப் போன பூக்களோடு முட்டி மோதின. மேலே ஒரு பனையில் சட்டிக் கலசத்தில், ஒரு கரிச்சான் குருவி விழுந்து, மாலைப் பதநீருக்குள் சிக்கி, மேலே ஏற முடியாமல் கதறிக் கொண்டிருந்தது.

அந்த விடிலியையும் தள்ளி வைத்தது போல் நின்ற கூட்டத்தில், பெரும் பகுதியினர், மனோகருக்காக மனவருத்தப்பட்டார்கள். அதிகமாய் பேசாதவன். ஆனால் பல் தெரியச் சிரிப்பவன். கேட்ட கேள்விக்கு, போகிற போக்கில் பேசாமல், நின்று நிதானித்து பதிலளிப்பவன், ‘ஒங்க பிள்ளைகளை நல்லா படிக்க வையுங்க… மீதியை நான் பார்த்துக்குவேன்’ என்று வலியச் சொல்பவன். ‘வண்டிக்கார’ மூக்கையா சத்தம் போட்டே கத்தினார். “என்னய்யா அநியாயம்… ? இந்த ஆண்டவனுக்கு யாருய்யா புத்தி சொல்றது?”

அங்கு நின்றவர்கள் நிமிர்ந்தார்கள். இடம் கொடுப்பது போல், சிறிது விலகி நின்றார்கள். ஓடி வந்த ஜீப்பையும், அதன் பின்னால் வந்த ஆம்புலன்ஸ் வேனையும் ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள். அதற்குள் அசோகனும், சந்திராவும், அந்த வேனில் முன் பக்கம் இருந்தும், ஒரு பச்சைச் சேலை நர்சும், எய்ட்ஸ் வார்டு ஆயாவும், அவள் மகனும் பின் பக்கம் இருந்தும் கீழே இறங்கினார்கள். இதே போல ஜீப்பின் பின்பக்கம் இருந்து, வாடாப்பூவும், எஸ்தரும், காமாட்சியோடு இறங்கினார்கள். முன்பக்க இருக்கையில் இருந்த கலைவாணி, மெள்ள இறங்கி, தரை தட்டி நின்றாள்.

இதற்குள், உள்ளே ஓடிப் போய், மனோகரைப் பார்வையிட்ட அசோகன் வெளியே வந்து, ஆணைக் குரலில் பேசினான்.

“சந்திரா, ஏன் கிளவ்ஸ் போடாம நிற்கே… இந்தாப்பா… பேண்டேஜ் துணிகளை எடு… போதாது… நிறைய தேவைப்படும்… பார்வதி! ஸ்கிரீனை எடு. பிளிச்சிங் பவுடர் என்னாச்சு…? கமான். இருட்டுறதுக்குள்ள எடுத்துப் போயிடணும்… வாஸ்லினை எடுங்க…”

அசோகனோடு, சந்திராவும் உள்ளே ஓடினாள். வார்டு பையன், கண் கண்ணாய் காட்டும் பேண்டேஜ் துணிகளை எடுத்துக் கொண்டு, வேகவேகமாய் உள்ளே போனான். அவன் தாய்க்காரியான ஆயா, ஒரு பெட்டியைத் தூக்கி கொண்டு, உள்ளே ஓடினாள்.

அப்படியே நிலை குலைந்து நின்ற கலைவாணியை, வாடாப்பூ, பிடித்துக் கொண்டு மருவினாள். எஸ்தர், அவள் கையைப் பிடித்து, முன் பக்கமாய் இழுத்தாள். காமாட்சி, அவள் காதில் ஏதோ பேசினாள். பாம்படக் கனகம்மா… அவளைச் சுற்றி, சுற்றியே வந்தாள்.

கலைவாணி, தன் மீது மொய்க்கும் ஊர்க் கண்களைப் பார்க்காமலே, அப்படி ஒரு கூட்டம் நிற்பதை அறியாமலே, உள்ளே போனாள். முன்னாள் கணவனைப் பார்த்ததுமே, கண்களை மூடிக் கொண்டாள். அய்யோ… இது என்ன கொடுமை…? வாயில் இருந்து சளி ஒழுகல், மண் தரையில் ரத்தச் சளிக் கட்டிகள். அங்கங்கே கொப்புளங்களாகவும், செதில் செதிலாகவும், படை படையாகவும் உள்ள உருவத்தில், மனோகர் எங்கே இருக்கிறார்… அவர் தெம்மாங்கு முகம் எங்கே போனது…? அவர் தேக்குமர மேனி எங்கே போனது… இது மனோவா…? என்னுடைய பழைய மனோவா…? இருக்காது… இருக்கவே இருக்காது.”

கலைவாணி, கண் திறந்தாள். மனதைக் கல்லாக்கி, அவனை, வெறும் நோயாளியாகவே பார்க்கப் போனாள். பார்க்கப் பார்க்க… நோயாளியை மீறி, மனோகரே மேலோங்கிப் போனான். முதலில், அவளை ஏமாற்றி தாலி கட்டிய வஞ்சக மனோகரானான். அப்புறம் எஃகின் உறுதியும், வாழையின் நளினமும் கொண்ட, அந்த அந்தரங்க மனோகர் தோன்றினான். தூக்கத்தில் கூட, கால்களைச் சுருட்டி, வயிற்றுக்குள் திணிக்காமல், கம்பீரம் கலையாமல் படுப்பவன்; காலையில் தன்னை முத்தச் சத்தத்துடன் எழுப்புகிறவன், எழ வைப்பவன். என்னை ஏமாற்றியவன்தான். ஆனாலும், இவனுக்கு இது நல்லா வேணும் என்று நினைக்க முடியலியே…? மனம் என்பது மாறக் கூடியதா…? அல்லது மாறாத மரச் சட்டத்திற்குள், அடுக்கடுக்கான ரகசிய அறைகளைக் கொண்டதா…?

மனோகரும், கலைவாணியை பார்த்து விட்டான். உடனே, கண்கள் உருளைகளாகின்றன. வாய் அகல்கிறது. கை லேசாய் மேலோங்கிறது. கன்ன மேடுகள் ஈரப்படுகின்றன. மூச்சே குரலாகிறது. குரலே மூச்சாகிறது. வாய் துடிக்கிறது. பற்கள் விலகுகின்றன. வார்த்தைகள் திக்கித் திக்கி, திணறித் திணறி, அவனைப் போல் குற்றுயிரும் குலையுயிருமாய் துடிக்கின்றன.

‘கல்… கலை… நா…நான்…த… ப்ப… தப்…பு… டேன்… மன்… மன்…”

மனோகர், கலைவாணியை நன்றாகப் பார்க்கட்டும் என்பது போல், மருத்துவக் குழு, விலகி நிற்கிறது. அவன் பேசுவதற்கு முயற்சி செய்யச் செய்ய, கவைாணியின் ஐம்பொறிகளும் கலங்குகின்றன. ஆதரவாக, வாடாப்பூவின் மேல் சாய்கிறாள். எஸ்தர், அவள் முதுகைத் தட்டிக் கொடுக்கிறாள். காமாட்சி அவளைப் பிடித்துக் கொள்கிறாள். கனகம்மா கையைப் பிடிக்கிறாள். இப்போது, சீதாலட்சுமி, அங்கே வந்தாள். ஆத்திரமாகவும், அழுதழுதும், கலைவாணியைப் பார்த்து சீறினாள்.

“குனிந்த தலை நிமிராத என் மகனை இப்படிஆக்கிட்டியேடி… பாவி… எவன் கிட்டல்லாமோ படுத்து… என் பிள்ளைய படுக்க வச்சுட்டியேடி… சண்டாளி… கைகேயி… கூனி… இப்போ… ஒனக்கு திருப்திதானாடி… சந்தோஷந்தானாடி…? இங்க எதுக்குடி வந்தே? வெளில போடி… கல்யாணத்திற்கு முன்னால… எவன்… எவனுக்கு முந்தானை விரிச்சியோ… அவனவன் கிட்ட போடி… உனக்கு என்னடி இங்க வேல?”

எதிர்பாராத இந்தத் தாக்குதலால், உள்ளே நின்ற எல்லோருமே பிரமித்துப் போனார்கள். எஸ்தர் மட்டும், சீதாலட்சுமியின் இடுப்பை நோக்கி காலைத் தூக்கினாள்… காமாட்சி பிடிக்கவில்லையானால், கிழவி இந்நேரம் கீழே விழுந்திருப்பாள். ஆனாலும், கலைவாணி, பழைய மாமியார்க்காரி சொன்னதை காதில் வாங்காதது போல், நின்றாள்…அசைவற்று நின்றாள்.

திடீரென்று, மனோகரிடம் இருந்து இன்னுமொரு சத்தம்… மற்றொரு சமிக்ஞை… கண்கள் அம்மா மீதும், கலைவாணி மீதும் மாறி மாறி நிலை கொள்ள, தாறுமாறாய்ப் பேசினான்.

“அம்… அம்… நான் …தான் தப்… தப்… கலை… இல்… இல்…”

மனோகர் சொன்ன சொல்லுக்கு படம் வரைவது போல, வலது கையைத் தூக்க முடியாமல் தூக்கி, மறுப்பு தெரிவிப்பது போல் ஆட்டினான். பிறகு அதே கையை, தனது மார்பில் தட்டி ‘நான்… நான்… தப்… தப்…’ என்றான். கவைாணியைப் பார்த்து, அந்த ஒற்றைக் கைவிரல்களைக் கும்பிடுவது போல் ஒன்று திரட்டி ‘மன்… மன்…’ என்றான்.

கலைவாணி, அவன் மீது அப்படியே விழப் போனாள். கரங்களை, அவன் பக்கமாய் வீசினாள். அவள் கண்ணீர், மனோகருக்கு பால் வார்த்தது போல், அவன் வாயில் விழுந்தது. கீழே விழப் போனவளை, காமாட்சி தாங்கிக் கொண்டாள். வாடாப்பூ, கண்ணீரும், கம்பலையுமாய் பிடித்துக் கொண்டாள். எஸ்தர்தான், அவளை தள்ளிக் கொண்டு வெளியே வந்தாள்.

வெளியே, மனைவி உட்கார்ந்த கருங்கல்லில் இடம் மாறி இருந்து, உள்ளே கண்களை ஊசலாட விட்ட தவசிமுத்து, கலைவாணியைக் கண்டதும், சாடை மாடையாகப் பேசினார்.

“நல்லாத்தான் ஜாலம் போடுறாளுவ… புருஷன் இறந்தால்… பொண்டாட்டி வாரிசுன்னு சட்டம் இருக்குல்லா… அதை வச்சி சொத்தை அமுக்க வந்திருக்காளுவ… இது நானாய் உழச்சி சம்பாதிச்ச சொத்து; ஒருத்திக்கும் உரிமை இல்லை…”

எஸ்தர், ஏதோ கோபமாகப் பேசப் போனாள். கையைக் கூட ஓங்கி விட்டாள். அதற்குள், ஆளுக்கு ஆள் தவசிமுத்துவை உலுக்கினார்கள், தூர நின்றே திட்டினார்கள்.

“உழைச்சி சம்பாரிச்ச சொத்து… தெரியாதாக்கும். ஒம்ம மகன் பேரைச் சொல்லி வாங்கின கமிஷன் சொத்து… ஏழைப் பாளைகளுக்கு அநியாய வட்டியாய் கடன் கொடுத்து அமுக்கிப் போட்ட சொத்து”

எல்லோரும் திட்டி முடிக்கட்டும் என்பது போல், காத்திருந்த மோகன்ராம் துள்ளி வந்தார்;

“இனி மேல்… என் தங்கச்சியைப் பற்றி எதாவது பேச்சு வந்தால், அப்புறம் நான் கொலைகாரனாயிடுவேன். புருஷன் சொத்து, பொண்டாட்டிக்குத்தான் வரும். இதில என்ன சந்தேகம்…”

மூத்த மகள் சகுந்தலா, கணவனைக் கடிந்தாள்.

“எங்கப்பாவை… ரொம்பத்தான் திட்டுறீக… புருஷன் கிட்ட வாழாதவளுக்கு சொத்து எப்படிக் கிடைக்கும்…?”

“எங்க அக்கா சொல்றதுதான் சரி”

“எம்மா… நீங்களே சொத்தை அமுக்குங்க… மவராசியா தின்னுங்க. கலைவாணியம்மா கேட்க மாட்டவ…”

“ஒனக்கென்ன வந்துட்டு மூக்கையா…”

“எனக்கா… ஒங்களைப் பார்த்த பிறவும், எதுவும் வரலியேன்னுதான் வருத்தப்படுறேன். மீராம்மா… பொம்பளையாமா… நீங்க… எந்த இடத்தில என்ன பேசறதுன்னு தெரியாண்டாம்…?”

கலைவாணி, காதுகளைப் பொத்திக் கொண்டாள். இந்த மாதிரி நடக்கலாம் என்று எதிர் பார்த்து, பங்காளி பலத்தோடு அப்போது பார்த்து ஓடி வந்த அப்பா சுப்பையாவைப் பார்த்ததும், அவரை, கண்களால் தடுத்தாள். இதற்குள், உள்ளே நின்ற சீதாலட்சுமி வெளியே வந்து, கவைாணியின் பக்கத்திலேயே நின்றாள்… அவளைப் பார்த்துப் பார்த்துக் கைகளைப் பிசைந்தாள். கலைவாணி நகரும் பக்கமெல்லாம் நகர்ந்தாள். அவள் முன்னால் போய் நிற்பதும், ஏறிட்டு ஏறிட்டுப் பார்ப்பதுமாய் நின்றாள். வாய் கெஞ்சுவது போல் அசை போட்டது. தலை குனிந்தும், நிமிர்ந்தும் இயங்கியது. கால்கள் நிற்கும் போது, தரையில் கோடுகள் போட்டன. ஒரு கட்டத்தில் கலைவாணி, அவளை நோக்கி நேருக்கு நேராய் பார்க்க வேண்டியதாயிற்று. “நான் பாவி… தராதரம் தெரியாத பாவி” என்று சீதாலட்சுமி அவளை ஏறிட்டுப் பார்த்து புலம்பினாள். அதைப் புரிந்து கொண்டது போல், கலைவாணி, அவள் கையைப் பிடித்தாள். அவ்வளவுதான். சீதாலட்சுமி கலைவாணியை ஆரத் தழுவினாள். இடைவெளி இல்லாத தழுவல்… இனிமேல் விடப் போவதில்லை என்பது போன்று பிடிப்பு… சுடுகாடே கத்துவது போன்ற கதறல்.

டாக்டர் அசோகன் உள்ளே போட்ட சத்தம், சீதாலட்சுமி போட்ட சத்தத்தை அடக்கியது.

“நல்லா துடைம்மா… கையுறையை டைட்டாப் போட்டுக்கோ சந்திரா… புண் இருக்கிற இடத்தை விட்டுட்டு, இல்லாத இடத்தில ஏன் பேண்டேஜ் போடுறே…? பாலா… ஸ்க்ரீனை எடுத்து வாசல் பக்கம் வை…”

அந்தக் குடிசையின் வாசலில், இரண்டு சட்டங்களாய் மடித்து வைக்கப்பட்ட திரைத் துணி, அகலப்படுத்தப்பட்டு, அங்கேயே வைக்கப்பட்டது. பச்சை சேலைக்காரியும், வார்ட் வாலிபனும், வெளியே வந்து ஆம்புலன்ஸ் வண்டிப் பக்கமாய் ஓடுவதும், அதற்குள் ஏறி, எது எதையோ எடுத்துக் கொண்டு உள்ளே பாய்வதுமாக இருந்தார்கள்.

எல்லோருக்குமே திருப்தி… இப்படி பாடாய் படுகிறவர்களைப் பார்த்ததும், கூட்டம் நெருங்கி வந்தது. சிலர், ஏதாவது ஒத்தாசை செய்யலாமா என்பது போல் உள்ளே பார்த்தார்கள். தவசிமுத்துதான், தாள முடியாமல் தவித்தார். கலைவாணி, இந்த ஆட்களை கூட்டிக்கிட்டு வந்து, மனோகரை எடுத்துட்டு போறதாய் இருந்தால், அதுல எதாவது சூட்சுமம் இல்லாமலா இருக்கும்…? சொத்துக்கு வில்லங்கம் வந்துடப்படாதே…

தவசிமுத்து எழுந்து, தலையில் துண்டை போட்டுக் கொண்டே அழுதார்…

“என் பிள்ளைய… யாரும் எடுத்துட்டுப் போவப்படாது. அவன் இங்கயே, என் கண் முன்னாலயே கிடக்கட்டும்…”

எஸ்தர் அதட்டினாள்…

“யோவ்… பெரிசு… மனோவ ஒன் பிள்ளன்னு சொல்ல, உனக்கு என்னய்யா யோக்யதை இருக்குது… ? உன் கிட்ட எவ்வளவு கெஞ்சி இருப்பேன். வீட்டுக்குள்ளே சேர்த்தியா…? இப்போ இந்த குடிசையிலே… மனோவ வச்சதுக்கு, வாடகை தருவேன்… வாங்கிக்கோ… குடிசையாவது, உன்னிதுதானே…?”

“இந்தப் பய மவள்… என்னென்னமோ பேசுறாள். யாருமே தட்டிக் கேட்க மாட்டக்கியளே…”

“தட்டுறதாய் இருந்தால், ஒம்மத்தான் தட்டணும்…”

இதற்குள், குடிசைத் திரை விலக்கப்பட்டது. மனோகர் என்கிற பேண்டேஜ் உருவம், துணிக் கட்டிலில் தூக்கி வரப்பட்டது. அவன் கண்கள் மட்டுமே வெளியில் தெரிந்தது. அந்தக் கட்டிலை ஆம்புலன்சில் வைத்த போது, கலைவாணி, ஏங்கினாள்; சீதாலட்சுமி அலை மோதினாள். கீழே விழுந்தாள். மேலே எழுந்தாள்… சகுந்தலா, மீரா ஆகியோர் இரு பக்கமும் பிடித்துக் கொண்டாலும், அவள் குனிந்து, குனிந்து எழுந்து காவடி போல் சுழன்றாள்.

“என் செல்வமே… மேல் லோகத்தில போய் இருடா…! அங்கிருந்து எங்கேயும் போயிடதடா… இந்த அம்மா… சீக்கிரமா வந்துடுறேன்டா… அய்யோ… என் எஞ்ஜினியரு மவனே… நான் செத்து, நீ இருக்கப்படாதா…?”

இதற்குள், ஆம்புலன்ஸ் வண்டி புறப்படப் போனது. அசோகனும், சந்திராவும் முன்னிருக்கையில் உட்கார்ந்தார்கள். வாடாப்பூ, அந்த வேனை வழி மறிப்பது போல் நின்று கொண்டு, கெஞ்சினாள்.

“என் வீட்டு மொட்டயனுக்கும் இந்த நோய்தான்… அந்த கரி முடிவானையும் தூக்கிட்டுப் போங்கய்யா… வீட்லதான் கிடக்கான்…”

“சரி… பின்னால ஏறிக்கோ”

ஊரார் திகைத்தார்கள்… லாரிக்கார மாரியப்பனுக்கும் இந்த நோயா…? அடக் கடவுளே… ஊர்ல. எவனுக்கு இருக்கு, எவளுக்கு இல்லன்னு சொல்ல முடியாது போலுக்கே…

ஆம்புலன்ஸ் வேன், ஊரைப் பார்த்து ஓடியது. மயக்கம் போட்டு விழுந்த சீதாலட்சுமியை, நான்கு பேர் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள். கூட்டம், மாரியப்பன் வீட்டைப் பார்த்து ஓடியது. சுப்பையா மட்டும், கலைவாணிக்காக காத்து நின்றார்.

மாருதி ஜீப்பில் சாய்ந்தபடி நின்ற கலைவாணி, காமாட்சி சுட்டிக் காட்டிய இடத்தைப் பார்த்தாள்.அந்த மேட்டிற்குக் கீழே உள்ள ஒரு பள்ளத்தில் நின்ற எஸ்தர், கலைவாணியைக் கையாட்டிக் கூப்பிட்டாள். உடனே இவளும் அங்கே ஓடிப் போய்க் கேட்டாள்.

“என்னது எஸ்தர்…?”

“நீ… என் பேரை… நினைவிலே வைத்திருக்கிறதுக்கு சந்தோஷம். இந்தா பிடி… பெட்டிய திறந்து பாரு…”

எஸ்தர், ஜோல்னாப் பையில் உள்ள ஒரு மரப் பேழையை எடுத்து, கலைவாணியிடம் கொடுத்தாள். அதைத் திறந்த கலைவாணி, அதிசயித்தாள். அத்தனையும் தங்க நகைகள்… பெற்றோர் போட்ட நகைகள். வைர நெக்லஸ். தலைசுத்தி, ஆரம்… இரட்டை வடச் செயின்… ஒரு நகை கூட குறையவில்லை.

புரியாமல் பார்த்தவளுக்கு, எஸ்தர் புரிய வைத்தாள்.

“மனோ… காசுக்கு வழியில்லாம எவ்வளவோ கஷ்டப்பட்டான். இந்த நகையை எப்படியும் வாங்கிடணுமுன்னு, போலீஸ்காரங்க… முட்டிக்கு முட்டி தட்டினாங்க. அந்தப் பாவிகளாலதான், இவன் பாதி செத்துட்டான். ஆனாலும், லாக்கர் இருந்த பேங்கை சொல்லல… அவனுக்கும், எனக்கும் எவ்வளவோ கஷ்டம். கம்பெனிப் பணம் தீர்ந்ததும், சொல்லத் தகாத மனிதர்கள் கிட்டே, விரும்பத்தகாத உறவுகளை வச்சி சம்பாதிச்சான். நானும் அப்படித்தான். ஒரு கட்டத்தில், நானும், அவனும், பிச்சை கூட எடுத்தோம். படுக்கையிலே விழுந்த போது, இதில ஒரு நகையை விற்று… டாக்டர் கிட்ட காட்டலாமுன்னேன். என்னை அடிக்கவே வந்துட்டான். ‘கலைவாணியைத் தொட்டு, என் நோயை அவளுக்கு கொடுத்திட்டேன். அவள் நகையையாவது தொடாமல் இருக்கேன்’னு, சிரிச்சான்… பிறகு அழுதான்…”

எஸ்தர், வாய் வழியாய் மூச்சு விட்டாள். கலைவாணி, அவளை கண்களால் தட்டிக் கொடுத்த உற்சாகத்தில், மீண்டும் பேசினாள்.

“நானும் காலேஜ் படித்தவள்தான். ஆனாலும் பட்டம் வாங்கும் முன்னே, பீடா வாங்குனேன்… பீடா, மாத்திரையாச்சு… அப்புறம் அதுவே ஊசியாச்சு, சரி விடு… நான், நல்லவளாய் இல்லாட்டாலும், கெட்டவளாய் இல்லன்னு நினைக்கேன். மனோ… இந்த நகைப் பெட்டியை ஒன் கிட்ட ஒப்படைக்கச் சொன்னான். ஒன் ஆபீஸ்லேயே இந்தப் பெட்டியை, நான் கொடுத்திருந்தால், அது, ஒன்னோட இந்த வருகையை கொச்சைப்படுத்தி இருக்கும். அதனாலதான் இப்போ தாறேன்.

“இறுதியா… ஒன்று. கடைசிக் காலத்தில இந்த மனோவால எனக்கு எதுவும் ஆக வேண்டியது இல்ல. இவன் மட்டுமே, எனக்கு கீப்பும் இல்ல… ஆனாலும், நான் அவனை விட்டு விலகல… அவனோட, இங்க வந்த பிறகு கூட, நான் நினைத்திருந்தால், இந்த நகைப் பெட்டியோட மெட்ராஸ்க்கு ஓடியிருக்கலாம். மதுரையைப் பார்த்து போயிருக்கலாம். இது, எனக்கு ஒரு வருட ஊசி மருந்து. மூன்று வருட பிராந்தி. ஆனாலும், நான் ஓடல. அதுதான் ஏன்னு எனக்கே புரியல…’

“ஏன்னா… நீ மனுஷி… மனுஷிம்மா…”

இருவரும், ஒருத்தரை ஒருத்தர் அன்பொழுகப் பார்த்தார்கள். ஊனுருகத் துடித்தார்கள்… எஸ்தர் தொடர்ந்தாள்.

“ஆரம்பத்தில… நான் ஒன்னைத் திட்டுனேன்… புருஷன. இப்படி விட்டுட்டுப் போயிட்டியேன்னு பொருமினேன்… ஆனால், எப்போ ஒருத்தன், ஒருத்தியை ஏமாற்றி தாலி கட்டுறானோ, அப்பவே அந்த தாலிக்கு மரியாதை இல்ல. இது ஒரு ஐரனி… அதுதான் முரண்பாடான விசித்திரம். மனோ கிட்ட இருந்த பணத்தை கறக்குறதுக்குத்தான், நானும், அன்புமணி என்கிற போக்கிரியும் திட்டம் போட்டு பழகுனோம். கடைசியிலே ஏமாற்றப் போன நான். இவன் கிட்ட ஒன்றிட்டேன். ஒன்னை… ஏமாற்றி தாலி கட்டின மனோ, ஒன் கிட்டயே ஒன்றிட்டான். வாழ்க்கை நேர் கோடுலயே போகாதோ… எப்படியோ, வாழ்க்கை நம்மை சுமக்கிறதுக்குப் பதிலாய்… அதை நாம சுமக்க வேண்டியதாய் போயிற்று… முடியுமானால், இருநூறு ரூபாய் கொடு.”

“எதுக்கு?”

“மெட்ராஸ் போகத்தான். கள்ள டிக்கட்டுல போய் கண்டுபிடித்தால், ஒன்று என்னை முட்டிக்கு முட்டி வாங்குவான். இல்லாவிட்டால், பிடிக்கிறவனுக்கு எய்ட்ஸ் வரும். நான் சொல்றது புரியுதா…?”

எஸ்தர், கண்ணைச் சிமிட்டினாள். முகமெங்கும் பருத்துப் போன பருக்கள். கண்களுக்கு, கீழே கருமேகத் திட்டுக்கள். காதோரம் செம்படைகள்… உடைக்கு மேல் இப்படியென்றால், உடைக்குள்ளே எப்படியோ…?

கலைவாணி, அவளைப் பார்த்து படபடப்பாய் கேட்டாள்.

“எஸ்தர்… நானும் மனுஷியா…?”

“என்ன பேச்சு பேசிட்டே…? நீ மனுஷி இல்ல. மகா மனுஷி. செந்தமிழில் சொல்லப் போனால், சிறியன சிந்தியாதாள்.”

“ஆனாலும், நான் நிசமாவே மனுஷி என்கிறதை நீதான் நிரூபிச்சுக் காட்டணும்”

“எப்படி…?”

“நீ என் கூடவே இருக்கணும். இனி மேல், ஒனக்கு அந்தத் தொழில் வேண்டாம்…”

“கலை… கலை… நான் மோசமானவள்…”

“இல்ல. நீ மோசமாக்கப்பட்டவள். மோசடிக்குள் சிக்கியவள்…”

“சக்களத்தியா… கூப்புடுறியா…?”

“அடிப் போடி… நமக்கு வாழ்க்கைத்தான் சக்களத்தி, வம்புக்கு இழுக்கிற எய்ட்ஸ் கிருமிகள்தான் சின்னச் சக்களத்தி”

“வாணாண்டி… என்னோட ஒன்னை சேர்க்காதே…”

“அப்போ ஒன்னோட என்னை சேர்த்துக்கோ”

மேட்டில் நின்ற கலைவாணி, பள்ளத்தில் நின்ற எஸ்தரை நோக்கி வலது கரத்தை சரித்து நீட்டுகிறாள்… எஸ்தர், அதைப் பற்றிக் கொள்ளுகிறாள். கையைப் பற்றியவள், கை கொடுத்தவளை, கீழே இழுத்தடிக்காமலே, மேட்டுக்கு வருகிறாள்…

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_39&oldid=1641725" இலிருந்து மீள்விக்கப்பட்டது