பிணங்கள்/இரு பிணங்கள்
இரு பிணங்கள்
அவன் கொலைகாரன்! இவன் திருடன்! இப்படிச் சுலபமாகத் தீர்ப்புத் தரப்படுகிறது, சட்டத்தின் பெயரால். ஆனால், அவன் கொலைகாரனா? திருடனா? இந்தக் கவலை, வெறும் எழுத்துக்களால் கோர்க்கப்பட்ட வார்த்தைகளுக்குள் அடங்கிய சட்டத்திற்கு இருப்பதே இல்லை. சட்டம் ஓர் வட்டத்தை (Circle} போன்றது! அந்த வட்டத்திற்குள்ளே, வக்கீலின் வாதம்—வறண்ட சாட்சியம்—எதிர்பாராத தீர்ப்பு ஆகியவைகளைத்தான் காண முடியும்.
சட்டத்தின் மூலம் சமாதானத்தை நிலை நாட்டலாம்; ஆனால், சரியான நீதியை? முடியவே முடியாது. நீதி என்பது அகராதிக்குள் அடங்கியதல்ல, ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது.
“நான்தான் குற்றவாளி! நான்தான் கொலை செய்தேன்!” கொஞ்சமும் பயமோ, சஞ்சலமோ இன்றி மோகன் கோர்ட்டிலே இப்படி சொன்னான். செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பு; மோகனுக்குத் தூக்குத் தண்டனை.
“என்னை சீக்கிரம் தூக்குங்கள்! உயிரோடு வைக்காதீர்கள்!”“கொல்லுங்கள் என்னை! பயமாக இருந்தால்… நானாவது செத்து மடிகிறேன்…”— இப்படியே கதறிக் கொண்டிருந்தான் மோகன்.
சிறைச்சாலை பூராவும் மோகனைப் பற்றி பேசாத வார்டரோ, கைதியோ, அதிகாரியோ கிடையாது. மோகன் இருக்கும்… தூக்குக் கைதிகளின் இடமான ‘கண்டம்’ அருகே செல்வதற்கு எல்லோருக்கும் பயம்.
சிங்கம், புலி போன்ற மிருகங்களுக்கு சர்க்கஸ்காரன் கூட, தைரியமாகக் கூட்டுக்குள்ளே சென்று, ஆகாரம் வைப்பான். ஆனால், மோகனுக்கு? கம்பிக்கு வெளியே எட்டி நின்றபடியேதான் சாப்பாடும், தண்ணீரும் தினமும் தரப்பட்டது.
சீக்கிரம் சாகப் போகிறார்கள் என்ற காரணத்தாலோ என்னவோ, ஜெயிலிலே தூக்குக் கைகளுக்கு அதிக சலுகை உண்டு. அவர்கள் விருப்பப்படி கூட சாமான் வகைகள் தருவதுண்டு. ஆனால் மோகன் இவைகளில் எதையுமே விரும்புவதில்லை,
“செஷன்ஸ் கோர்ட்டில் உனக்குத் தூக்குத் தண்டனை தந்து விட்டார்கள். ஹைகோர்ட்டுக்கு தர்ம அப்பீல் செய்ய இந்தப் பாரத்தில் ஒரு கையெழுத்துப் போடு” என்று ஜெயில் சூப்ரெண்ட் மோகனை கெஞ்சிக் கேட்டார். “எனக்கு அப்பீல் தேவையில்லை; என்னை சீக்கிரம் கொல்லுங்கள்” என்று பிடிவாதமாக மோகன் கூறினான். ஜெயில் சூப்ரெண்டுக்கு ஒரே ஆச்சரியம். அவர் வாழ்நாளில் சாகத் துணிந்த கைதியை அவர் அன்றுதான் கண்டார். “சரி; இதிலே கையெழுத்துப் போடு; நாளையே உன்னைத் தூக்கிலிட ஏற்பாடு செய்கிறேன்” என்று சூப்ரெண்ட் சொன்னதும், மகிழ்ச்சியோடு கையெழுத்துப் போட்டான் மோகன்.
அன்று இரவு மோகனுக்கு ஒரே குஷி! “நாளை சாகப் போகிறேன்! அப்புறம் ஆனந்த வாழ்க்கை! சாவே சீக்கிரம் வா!” சிரித்துக் கொண்டே “சாக சித்தமாய் இருக்கிறேன், வா!” இப்படிக் கூறிக் கொண்டிருந்தவன், திடீரென்று பாட ஆரம்பித்தான். அந்தப் பாட்டு இரண்டே அடிதான்!
பிரேமராஜ ராணியே நீ கண்கலங்காதே.
விரைவில் இன்ப சாந்தியிலே~
ஒன்றாய் சேர்ந்திடுவோம் நாமே
என்ன பிரேமாவா? யார் அந்த ராணி? சாகப் போகிறவனுக்கு எங்கே சாந்தி? எப்படி ஒன்றாய் சேர்வது?
ராணி அவன் மாமன் மகள். மழலை பேசும் காலத்திலிருந்து, மங்கையான பருவம் வரை மோகன் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள் ராணி! உடைக்க முடியாத மலையாக இருந்தது அவர்களின் காதல் உள்ளம்.
ராணியை ஒரு நாள் பார்க்கா விட்டால், செத்தவன் போல, சலனமற்று காட்சியளிப்பான் மோகன். ராணிக்கு இது நன்கு தெரியும். ஆனால், கன்னிப் பெண் ராணி நினைத்த நேரமெல்லாம் வெளியே வர முடியுமா? சொந்தக்காரிதானே என்ற கருத்தில் மாமா வீடே சதமென்று, எந்த நேரமும் மோகன் இருக்க முடியுமா? சந்திப்பில் சங்கடங்கள் இருக்கத்தான் செய்தன.
இந்த நிலையில் கூட ராணி துணிந்து, மோகன் வீட்டுக்கு சில சமயம் வருவாள். ராணி தன் மகனுக்கு முறைப் பெண்தானே என்று எண்ணி, மோகனின் தாய் இருவர் பேச்சுக்கும் இடையூறாக என்றுமே இருந்ததில்லை. ஆனால், காதல் விஷயங்களைத் தாயின் கண் எதிரே பேச முடியுமா?
‘காதல்’ என்றால், அது ஒரு கருநாகம் என்று கருதுகிற நாடு இது! இயற்கையின் சிருஷ்டியிலே, எந்த இதயத்திலும், எந்த வயதிலும், காதல் உதயமாக இடம் இருக்குமேயானால், அந்தக் காதலை வெளியிடும் உரிமை இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் அபிப்பிராயம் கேட்டு, அதன்படி நடக்கும் வசதியையும் வழங்க வேண்டும். இது இல்லாத நாட்டிலே, ‘கள்ளத்தனம்’ இருக்கத்தான் செய்யும்.
ராணியும், மோகனும் ஒருவரை ஒருவர் காதலித்தும், அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள—சந்தித்து, சந்தோஷமாக இருக்க; பாழும் சமூகம் இடந்தரவில்லை. இங்கும், அங்கும் கடிதங்கள் பறந்தன. அந்தக் கடிதங்கள் வெறும் வார்த்தைகளால்தான் எழுதப்படுகின்றன. ஆனால், அவை வெறும் எழுத்துக்களா? இல்லவே இல்லை. சிதறிக் கிடக்கும் இரு உள்ளத்தை சேர்த்து இழுக்கும் ஜீவன்!
ராணி அனுப்பிய கடிதத்தை விரிப்பான் மோகன். மல்லிகையின் நறுமணம் ‘கமகம’ என்று வரும். அன்று அலர்ந்த மலர் ஒன்று உள்ளே இருக்கும். அதைக் கையில் எடுப்பான்; கண்களிலே ஒத்திக் கொள்வான்; ‘இச்’ என்று முத்தம் வைப்பான்; அப்புறம் மூக்கால் நுகருவான். இரவெல்லாம் அந்த மலருடன் உறங்குவான்; மாதோடு உறங்கும் நாள் எந்நாளோ—என்று விதவிதமான கனவெல்லாம் காண்பான்; கண் விழித்துப் பார்ப்பான்; கருகிய மலர் கையில் இருக்கும். காதலும் இப்படியாகுமோ? மோகனின் கண்களில் நீர் நிரம்பும்.
அன்று ராணி வந்த சமயம், மோகன் தனியாக இருந்தான்: “அன்பே” என்று சொல்லி, அணைத்து ஒரு முத்தமும் கொடுத்தான். அதுதான் முதல் முத்தம். இருவருக்கும் மூச்சு நின்றது போன்ற உணர்ச்சி! இதழோடு இதழ் இணைவதிலே இத்தனை இன்பமா? இந்த இரகசியம் அவர்களுக்கு அன்றுதான் தெரியும். அப்புறம் பல சந்திப்பு; பல முத்தம்! ஆனால் அப்புறம்?
மோகனின் தாய், அவள் கணவன் சென்ற வழி நோக்கிப் போய் விட்டாள். மோகன் அனாதையானான்; வறுமை அவனை வாட்டியது; இந்த நிலையில் ராணியை அடைய முடியுமா? வேலையற்றனுக்கு பெண் தர மாமா இசைவாரா? ஒருகாலும் இசைய மாட்டார். இந்தக் காரணத்தை வைத்து, மோகன் பட்டாளத்தில் சேர்ந்தான்.
மோகன் ஊரை விட்டுப் பிரியும் போது, ராணி ‘ஓ’வென அழ ஆரம்பித்தாள்; சீக்கிரம் வருகிறேன் என்று ஆறுதல் சொல்லி அகன்றான் மோகன். ராணியின் நினைவு, மோகனை தினமும் கொன்று கொண்டே வந்தது.
ராணியை அடைய தன் மாமா மறுப்பு கூறாதிருப்பதற்காக, தான் பெற்ற சம்பளத்தில் மாதம் நூறு ரூபாயைத் தன் மாமாவிற்கே மோகன் அனுப்பி சேமித்து வைக்க எழுதியிருந்தான்; இடையிடையே ராணியைப் பற்றியும் விசாரிப்பான்.
பத்து மாதங்கள் கடந்தன. மோகன் ஊருக்கு வந்தான்; மாமா வீட்டிலேயே நேராகப் போய் இறங்கினான். ஆசையாகக் காத்திருந்த ராணியின் கண்கள், மோகன் மீது பாய்ந்தன; இருவர் உள்ளமும் எக்களித்தது.
மோகன் வந்து 14 தினங்கள் ஓடி மறைந்தன; நாளை அவன் புறப்படவேண்டும். அந்த இரவில் உண்மையிலேயே இருள் சூழ்ந்திருந்தது. உண்மைக் காதலர்கள் கொல்லைப் புறத்திலே ஒன்று கூடினர். அடுத்த தடவை வந்து உன்னை மணக்கிறேன்; அதற்குள் பணமும் சேர்ந்து விடும்—என்று சொல்லி, ஆசை முத்தம் கொடுத்து, சட்டைத் துணி ஒன்று பரிசளித்தான் மோகன். கண்ணீர் வழியும் முகத்தோடு, அந்தப் பரிசை ராணி பெற்றுக் கொண்டாள்.மறுநாளும் மப்பும், மந்தாரமுமாகவே இருந்தது. மோகன் பிரிந்தான்; தன் இருப்பிடம் வந்து சேர்ந்தான். தன் நினைவின்றித் தத்தளித்தான். ‘ராணி! ராணி!’ என்று சதா உச்சரித்தான். ஆணி வேரைப் போல, ராணி அவன் மனதிலே ஆழப் பதித்திருந்தாள். அவளை விட்டு, அரைக்ஷணங் கூட இருக்க முடியாது என்று அவன் மனம் கூறியது.
ராணியை மறக்க என்னவெல்லாமோ செய்து பார்த்தான்; எதுவும் பலனளிக்கவில்லை; முடிவில் குடிப்பதென்று அளவுக்கு மீறிக் குடிக்கவும் செய்தான்! அப்போதும், ராணி அவனை விட்டு அகலவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல், திகைத்து நின்றான் மோகன். பைத்தியம் பிடித்து விடுமோ என்று கூட பயப்பட்டான் மோகன்.
நல்ல வேளையாக, ஐதராபாத் சண்டை வந்தது. மோகன் போரில் ஈடுபட்டான். சஞ்சலம் நிறைந்த அவன் மனதிற்கு போர் ஆறுதலை அளித்தது. எதிர் பார்த்ததற்கு மேல், ஐதராபாத் யுத்தம் சீக்கிரம் வெற்றியுடன் முடிந்தது.
மோகனுக்கு ஒரு மாதம் லீவு கிடைத்தது; அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை; ஊர் போனதும் ராணியை மணந்து விடலாம் என்று பேரானந்தத்தில் துள்ளிக் குதித்து, ஊர் வந்தான் மோகன்.
“சீக்கிரம் வண்டியை ஓட்டு” என்று வண்டிக்காரனிடம் கோபத்தைக் காட்டினான், ராணியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மோகன். வண்டி வீட்டு முன் வந்து நின்றது. வீடு பூட்டிக் கிடந்தது. பக்கத்து வீட்டில் விசாரித்தான்.
“ராணியின் மாப்பிள்ளை ஊருக்கு எல்லோரும் போயிருக்கிறார்கள்!” என்ற பதில் கேட்டு மோகன் திடுக்கிட்டான். “என் ராணிக்குக் கல்யாணமாகி விட்டதா?” இப்படி அவன் உள்ளம் படபடத்தது. வண்டியைத் திரும்பினான்; சத்திரத்துக்குச் சென்றான். அவன் மனம் அலை மோதியது; அன்று பூராவும் தூக்கம் இல்லை. மறுநாள் காலை 10 மணிக்குத் திடீரென்று விழித்தான். மறந்து போன விஷயமெல்லாம் நினைவுக்கு வந்தன; பித்து பிடித்தவனைப் போல் ஊருக்கு வெளியே உள்ள தோட்டத்தை நோக்கி, அவன் கால்கள் நடந்தன. அவன் தலை சுழன்றது; மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்தான்; தூரத்தில் ராணியைப் போல ஒரு பெண் கையில் குடத்துடன் வருவதைக் கண்டான்; நிமிர்ந்து பார்த்தான்; ராணிதான்; சாட்சாத் ராணியேதான்; எழுந்து நின்றான். அவள் பக்கத்தில் வந்ததும், முன்னால் போய் நின்றான்; ராணி திடுக்கிட்டாள்;
“ஆ! நீங்களா?”
“துரோகி! காதலை மறந்தாய்! எழுதிய கடிதங்களை மறந்தாய்! கொடுத்த முத்தங்களை மறந்தாய்! இன்று இன்னொருவனின் மனைவியாகி, நம்பிய என்னை நலிய வைத்து விட்டாய்! இதோ பார்! இதோ பார் நீ எழுதிய காதல் கடிதங்கள்! இப்படி எழுதிய நீயா, எனக்குத் துரோகம் செய்து விட்டாய்?”
“அத்தான்! என் மேல் குற்றமில்லை. நான் உங்களைத் தவிர வேறு யாரையும் மணக்க முடியாது என்று சொன்னேன்! ஆனால், என்னைக் கட்டாயப்படுத்தி, இக்கதிக்கு ஆளாக்கி விட்டார்கள்.”
“இது உண்மையானால், நான் சொல்கிறபடி நீ செய்; செய்ய வேண்டும். உன் கழுத்தில் தாலி இருந்தாலும் கவலை இல்லை. இப்படியே என்னுடன் வா. எங்காவது போய்ப் பிழைத்துக் கொள்ளலாம்.”
“அதெப்படி முடியும்? அத்தான்! ஊரும், சமூகமும் என்னை ஏசும்? அப்பா, அம்மாவுக்குக் கெட்ட பெயர் வரும்! வேண்டாம் அத்தான்!”
“நான் சொல்வதை மறுக்கவா செய்கிறாய்? என் காதல் செத்து விட்டது. இனி நீ உயிரோடு இருக்க வேண்டியது எதுவும் இல்லை”—இப்படி மோகன் கூறி முடித்தானோ, இல்லையோ, அடுத்த வினாடி மோகன் கையிலே ராணி இருந்தாள். ‘விட்டு விடு’ என்று ராணி அலறினாள்! ஆனால், ‘தொப்’ என்ற சப்தம் கேட்டது, காதல் கடிதங்களுடன் ராணி மூழ்கி, மூழ்கி எழுந்தாள்.
மோகன் ஒரு பயங்கரச் சிரிப்புச் சிரித்தான். காதல், காதல் என்று கத்திக் கொண்டே ஓடினான்; போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான்; அங்கிருப்போர் மோகனைப் பைத்தியம் என்றனர்; மோகனும், தான் பைத்தியந்தான் என்று ஒப்புக் கொண்டதோடு, ராணியைக் கொலை செய்து விட்டதாகக் கூறினான்; வழக்கு நடந்தது; மோகன் குற்றத்தைத் தானே ஒப்புக் கொண்டான்.
மோகன் சாவதற்கு சந்தோஷப்பட்டான். சீக்கிரமாகச் செத்து பிரேமராஜ ராணியோடு ஒன்றாகச் சேர வேண்டும் என்று ஆசைப் பட்டான்; ஆனால்,
சாக. விரும்பிய மோகனுக்கு, ராணி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், பைத்தியத்தில் தானே கொன்றதாக மோகன் ஒப்புக் கொண்டிருக்கலாம் என்று ஹைக்கோர்ட் அப்பீலிலே கூறப்பட்டு, விடுதலை கிடைத்தது; மோகன் வெளியே பிடித்துத் தள்ளப்பட்டான். ஆனால், ராணி இறந்த அதே கிணற்றில் மோகனின் பிரேதமும் மிதந்து விட்டது.