உள்ளடக்கத்துக்குச் செல்

பிணங்கள்/நடைப் பிணம்

விக்கிமூலம் இலிருந்து

நடைப் பிணம்
1 காதல் கடல்

தைத் திருநாள்! தமிழர்களுக்கு நல்ல நாள்! பொங்கல் விழா தமிழர் வாழும் மேதினி எங்கும் புனித விழாவாகக் கருதப்பட்டது. கோலாகலம்! கொண்டாட்டம்! கும்மாளம்! மக்களிடத்திலே மகிழ்ச்சி.

ஆனால், நாகராஜனிடத்தில்?

மகிழ்ச்சி அல்ல, மனவேதனை! இன்பமல்ல, துன்பம்! கோலாகலமல்ல, அலங்கோலம்! கொண்டாட்டமல்ல, திண்டாட்டம்! சோபிதமல்ல, சோகம்! கும்மாளமல்ல, குடலைப் புரட்டுவது போல் உள்ளத்திலே நினைவுச் சுழல்! புயல்! கொந்தளிப்பு! எரிமலை!

ஏன்?

இதே பொங்கல் விழா ஐந்து வருடங்களுக்கு முன், அவனுக்குத் தந்த ஆனந்தம் கொஞ்சமா? பேரானந்தம்! பரமானந்தம்!

“தை பிறந்தால் வழி பிறக்கும்! இந்தப் பழமொழி என் மட்டிலும் பலித்து விட்டது. என் வாழ்க்கை வளம் பெற, கனிமொழியாளை—காதல் கிளியாளை… ஏன் என் இன்பக் கிழத்தியைக் கண்டு விட்டேன்! இனி இன்ப வாழ்க்கை! மோட்ச வாழ்க்கை! இப்படி இன்பக் கோட்டை கட்டினான் நாகராஜன். ஐந்து வருடங்களுக்கு முன் தைத் திருநாளில்!

ஆனால், இன்று?

அத்தனையும் தகர்ந்து விட்டது! மனக்கோட்டை, கானல் காட்சியாகி விட்டது! நினைப்பெல்லாம் நெருப்பாகி விட்டது. மண வாழ்க்கை பிண வாழ்க்கையாகி விட்டது!

காரணம் என்ன!

நாகராஜனை வறுமை சூழ்ந்து கொண்டதா? இல்லை! வற்றாத செல்வம் இன்னும் இருக்கிறது.

பெரும் வியாதி பீடிக்கப்பட்டு, மூப்படைந்து விட்டானா?

இல்லவே இல்லை! இளைஞன் என்ற பட்டம் இன்னும் மாறவில்லை. திடகாத்திரமானவன் என்பதற்கு அவனது திரண்ட தோள்களே சாட்சியாயிருந்தன.

காதல் கைகூடவில்லையா?

காதல் கைகூடுமா, கூடாதா? என்ற கவலை இன்றல்ல, ஐந்து வருடங்களுக்கு முன் அவனுக்கு இருந்தது. நாயகியைப் பொதுமேடையிலே பிரசங்கம் செய்யும் போது, கண்டு, கண்ணால் காதல் மொழி பேசும் போது, இருக்கத்தான் செய்தது.

ஆனால்—ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த பொங்கல் திருநாளிலே—நாயகியைச் சந்தித்துத் தன் கருத்தைத் தெரிவித்ததும்… அந்தக் காதல் கவலையும் தீர்ந்தது.

“நாகு! நான் மனப்பூர்வமாக காதலிக்கிறேன். உயிருள்ள வரை, உங்கள் நினைவு மாறாது! நீங்கள் என் காதலைப் புறக்கணித்தால் கூட, நான் இன்னொருவனுக்குக் கட்டாயப் படுத்தப்பட்டு, வாழ்க்கைப்பட்டால் கூட, சாகும் போது ‘நாகு’ என்று சொல்லிக் கொண்டுதான் சாவேன்!”

இப்படி நாகராஜனிடம் நாயகி சொல்லும் போது, இன்பத்திற்கு எல்லை ஏது? தான் காதல் தெய்வமாக நினைத்த நாயகி வாயில் இருந்து வந்த வார்த்தைகள்… அத்தனையும் தேன் துளிகள்! ஒரே தித்திப்பு! இந்த நினைப்பு நாகராஜனை எந்த லோகத்திற்கோ இழுத்துச் சென்றது.

அன்று நாகராஜனுக்கு மூன்று பரிசுகள் வந்தன. ஒன்று வாழ்த்துரை! இரண்டாவது வெண் பொங்கல்! மூன்றாவது கரும்பு! யார் அனுப்பி இருக்க முடியும்? சாட்சாத் நாயகியேதான். இந்த நிகழ்ச்சி, அவன் மனதிலே புத்துணர்ச்சியை ஊட்டியது, அந்த பொங்கல் நாளில்,

ஆனால் —இன்று:

கரும்பு வேம்பாகி விட்டது! புத்துணர்ச்சி ஈட்டி குத்தும் உணர்ச்சியாக மாறி, வாட்டி, வதைத்தது.

காதலுக்காகக் கவலைப்பட்ட நாகராஜன், காதல் உள்ளம் என்பது கபடர்கள் நடமாடும் உலகம் என்று வர்ணித்தான்.

பொன்னையும், பெண்ணையும் கண்ணால் கூட தீண்டேன் என்று கடும் விரதம் கொண்டான். பணக்கார நாகராஜன் பராரியானான்! மேடைப் பிரசங்கி நாகராஜன் அடையாளம் தெரியாத நடைப் பிணமானான்! இருந்த இடத்தை வேண்டுமென்றே துறந்தான்! அரசியல் வாழ்க்கையிலிருந்து ‘அஞ்ஞாத வாசம்’ பெற்றான்.

2. நாகராஜன்

நாகராஜன் அவ்வளவு அழகனல்ல; ஆனால், அந்தஸ்து உள்ள குடும்பத்திலே பிறந்தவன். தாயோ, தந்தையோ இல்லாத தனிக்கட்டையாக இருந்தான்.

அவன் ஆஸ்தி, பூஸ்தி எல்லாம் லட்ச ருபாய் வரை இருந்தது. அவன் லட்சாதிபதியாக இருந்தும்… பணக்காரர்களுக்குள்ள படாடோப லட்சணம் எதுவும் அவனிடம் இருந்ததில்லை.

தன் கையால் நூற்ற கதர் கட்டுவதே ஒரு மகத்தான காரியம் என்று கருதினான். எளிய வாழ்க்கை நடத்தினான், ஏழையை விட மோசமாக. மகாத்மாவின் சீடன் என்று சொல்லிக் கொள்வதிலே… அவனுக்கு ஒரு தனி ஆனந்தம்

அவன் உயர் நிலைப் பள்ளியிலே படிக்கும் போதே, காந்தியக் கொள்கையால் கவரப்பட்டிருந்தான். தேசீய திட்டத்தை பின்பற்றவும், பள்ளிக்கூடத்திலே தீவிரமாகப் பரப்பவும், நாகராஜன் பின்வாங்கியதே இல்லை.

இதன் பயனாக, ஒரு சமயம் அவன் பள்ளியிலிருந்தே ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டான். ஆனால், அவன் தோழர்களின் கட்டுப்பாடான ‘ஸ்டிரைக்’ அவனை மீண்டும் பள்ளிக்கூடத்திலே சேர்த்தது.

இந்த சமயத்தில்தான் எஞ்சியிருந்த அவன் தாயும் பத்து நாள் படுக்கையிலிருந்து விட்டு ‘பரலோக யாத்திரை’ சென்றாள்.

அதோடு பள்ளிப் படிப்பை அவன் நிறுத்தி விடவில்லை. காலேஜிலே சேர்ந்து, படிக்க ஆரம்பித்தான். கல்லூரியிலே ‘இண்டர்’ படித்து முடித்து விட்டு, வீட்டுக்கு வந்தான்.

அதற்கு மேல் படிக்க அவனுக்கு ஆர்வம் இவ்லாமல் போயிற்று. நாட்டுக்குத் தீவிர தொண்டு செய்ய திட்டம் போட்டான். தேசீய இயக்கத்திற்கு அவ்வப்போது தேவைப்பட்ட பணத்தை நூறு, ஆயிரமாக கொடுத்து பலப்படுத்தி வந்தான். உள்ளூர் தேசீய இயக்கத்தின் ‘தலைவர்’ பதவியும் அவனுக்குக் கிடைத்தது.

இந்தப் பதவி அவனுக்கு மேலும், மேலும் உணர்ச்சியை ஊட்டுவதாய் இருந்தது. ‘பேச்சாளி’ ஆக வேண்டும் என்ற ஆசை அவனுக்கு நாளுக்கு நாள் வளர்ந்தது.

மனம் இருந்தால், மார்க்கம் உண்டு என்பார்கள். இதோடு பணமும் இருந்தால்? கேட்கவா வேண்டும். பாதையில்லா ஊருக்குப் பாலமே அமைத்து விடலாம்! அப்படியிருக்க, நாகராஜன்-ஆசை வீண் போகுமா?

சிறந்த பேச்சாளர்கள் பட்டியலிலே நாகராஜனுக்கும் ஒரு இடம் ஒதுக்கப் பட்டது. மாகாணம் பூராவும் மக்களிடத்திலே, அவனுக்கு நல்ல மதிப்பு இருந்தது.

அவன் ஊர் ஊராகச் சொற்பொழிவு செய்ய வந்த இடத்தில்தான் நாயகியைக் கண்டான்; காதல் கொண்டான்; காதல் கை கூடுமா என்று கவலைப்பட்டான்; பல இடங்களிலே நாகராஜனும், நாயகியும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இருவர் காதலும் நாளுக்கு நாள் வளர்ந்தது.

நாயகியை சந்திப்பதிலே எப்போதாவது ஏமாற்றம் ஏற்பட்டால்… ஏக்கத்திற்கு எல்லையே இருக்காது. காதல் என்ன இலேசானதா? சிந்தனையைக் கெடுத்து, சிறுகச் சிறுக சித்திரவதை செய்து, மனிதனைப் பைத்தியமாக்கி, பிணமாக்கும் மகா சக்தி காதலைத் தவிர வேறு எதற்கு உண்டு?

ஆனால், அந்த நிலையெல்லாம் நாகராஜனுக்கு வரவில்லை. தன் உள்ளத் துடிப்பையெல்லாம் கடிதத்திலே எழுதி நீட்டி விட்டான்; நாயகியும் நல்ல பதிலையே கொடுத்தாள். அதன் பின்னர்தான், இருவரின் இன்பச் சந்திப்பு. அந்த சந்திப்பிலேதான் ஒருவரை ஒருவர் கருத்தையறிந்து… கட்டி அணைத்துக் கொண்டனர். அந்த சுகத்தை… என்றுமே மறக்க முடியாது.

இவர்கள் காதல், அடுத்து உள்ளவர்களுக்கும் தெரிய ஆரம்பித்தது. தெளிவுள்ள நெஞ்சம் நாகராஜனுக்கு இருக்கும் போது, யாருக்குத் தெரிந்தால் என்ன? காதல் திருமணம் செய்து கொள்ள காதலர்கள் முடிவு செய்தனர்.

ஐந்தாண்டுகளுக்கு முன் வந்த தைத் திருநாளில்—பொங்கல் புதுநாளில், நாகராஜனுக்கும், நாயகிக்கும் கதர்த் திருமணம், சீர்திருத்த முறையிலே நடந்தேறியது. மிஸ் நாயகி, மிஸஸ் நாகராஜனாக மாறினாள்.

3. நாயகி

நாயகியும் சாதாரண ஆளல்ல. பி.ஏ. படித்தவள்; படிக்கும் போதே தேசீய இயக்கத்திலே நாகராஜனைப் போல் பங்கு பெற்றிருந்தாள். பி.ஏ. பட்டம் பெற்ற உடனே, நாயகி படிப்பை நிறுத்தி விடவில்லை. பி.எல். படிக்கவும் ஆரம்பித்தாள். பி.எல். முடிக்கிற வரையிலும் தீவிரமாக அரசியலிலே பிரசாரம் செய்து வந்தாள்.

பொதுவாக அரசியலிலே பெண்கள் அதிகமாகப் பங்கு பெறுவதில்லை; அதற்குக் காரணம் பல பல இருந்தன. அரசியல், சினிமா, நாடகம் போன்ற பொதுத் துறையிலே ஈடுபடுகிற பெண்கள் ஒழுக்கத்தோடு வாழ்க்கை நடத்தினாலும், அவள் அப்படிப்பட்டவள், இப்படிப்பட்டவள் என்று ‘கயிறு’ திரிக்கப் பலர் இருந்தனர்.

அது மட்டுமல்ல, இப்படித் துணிந்து வருகிற பெண்களைக் கெடுக்க, வலை வீச கூடச் சேர்ந்தவர்களே முயற்சி செய்வதும், சில இடங்களிலே சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது. இதனால்தான், எத்தனையோ பெண்களுக்கு பொது வாழ்வில் ஈடுபட ஆசையிருந்தும், அது கனவாகி விடுகிறது.

பொதுவாக, அரசியவிலே மட்டுமல்ல, ஆண், பெண் சந்திக்க வசதி உள்ள எந்த இடத்திலும் ஒழுக்கக் குறைவு ஏற்படத்தான் செய்கிறது. ஆலயமும், திருவிழாவும் புனிதமானதுதான்… அங்கே ஆண், பெண் சேர்க்கை ஏற்படுவதில்லையா? எல்லாம் சூழ்நிலையைப் பொறுத்ததுதான்.

மனிதனின் வாழ்வும், தாழ்வும் சூழ்நிலையை ஒட்டித்தான் இருக்கிறது. இதைத்தான் ‘ஆண்டவன் அருள்’ என்றும் ‘விதி’ என்றும் வைதீகர்கள் கூறுகிறார்கள்.

பஞ்சுக்குத் தன்னைத் தானே பற்றிக் கொள்ளும் சக்தி கிடையாது. ஆனால், நெருப்போடு சேரும் போது… எரிவது மட்டுமல்ல, இருக்கிற இடம் தெரியாமல் ஒரு நொடியில், மடிந்து மறைந்து விடும்! இதை போலத்தான் ஆணும், பெண்ணும்! பருவம் என்ற புயல் வீசும் போது… சாதாரண பஞ்சு என்ன செய்ய முடியும்?

அரசியலிலே ஈடுபட்ட நாயகியை, நாகராஜன் பல இடங்களிலே சந்திக்க நேரிட்டது. சில ஊர்களிலே இருவரும் சேர்ந்து, ஓரிடத்திலேயே தூங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தன. இந்த நிலையிலே, இருவருக்கும் காதல் ஏற்பட்டது ஆச்சரியமா? காதல் கைகூடி, கல்யாணம் நடந்ததுதான் ஆச்சரியம்!

நாயகிக்கு அரசியலிலே நல்ல ஆதரவு இருக்கத்தான் செய்தது. நாயகி பேசுகிற கூட்டத்திலே, ஆயிரம் பேர் அதிகமாகக் கூடுவதோடு நில்லாமல், பெண்களும் ஏராளமாகக் கூட்டத்திற்கு வர ஆரம்பித்தனர்.

“நாயகி துணிச்சல்காரிதான்” கூட்டத்திற்கு வரும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இப்படி வியப்புடன் கூறினர். கொஞ்சமும், கூச்சமோ, வெட்கமோ எதுவுமின்றி, விஷயங்களைப் பேசினாள். சுருக்கமாகச் சொன்னால், பெண்சுளுக்குத் தேவையான நான்கு குணங்கள் நாயகியிடத்திலே கிடையாதோ என்று சந்தேகிக்க வேண்டியதாக இருந்தது.

உள்ளபடியே நாயகி இன்று நேற்றல்ல, கல்லூரியிலே படிக்கும் போதே, ‘வாயாடி’ என்ற பட்டம் பெற்றவள். ‘சோசியல்’ என்ற வார்த்தையை, வாழ்க்கையிலே அப்படியே கடைப்பிடித்தவள்.

கல்லூரி மாணவர்களிடம் பழகுவதற்கோ, பேசுவதற்கோ, சினிமா, பீச் போன்ற இடங்களுக்கு, அவர்களுடன் செல்வதற்கோ, நாயகி பின் வாங்கியதே இல்லை. இன்று ஒருவனோடு, நாளை இன்னொருவனோடு என்றபடி சதா ‘குஷி’யாக இருப்பாள் நாயகி.

கல்லுரி மாணவர்கள்தான் குறும்புக்காரர்களாயிற்றே! ‘வாயாடி’ என்ற பட்டத்தோடு ‘கலியுக பாஞ்சாலி’ என்ற புதுப் பட்டத்தையும் சூட்டினார்கள். இந்தப் பட்டத்திற்கெல்லாம் நாயகி பயந்துவிடவில்லை. “ஆணுக்கு இங்கு பெண் இளைப்பில்லை காண்” என்று ஆணவமாகக் கூறினாள்.

அந்த நாயகிதான் அரசியலில் ‘அவதாரம்’ எடுத்தாள்; முழங்கினாள்; கர்ஜித்தாள்; நாகராஜனின் நாயகியாக, மனைவியாக மாறினாள், ஊரும் நாடும் அறியும்படி.

4. நாகராஜனும் நாயகியும்

நாகராஜன்—நாயகி திருமணத்திற்கு நாலா பக்கத்திலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தார்கள். வாழ்த்துத் தந்திகள் நூற்றுக்கணக்காக வந்திருந்தன. இந்தத் திருமணத்தைப் பற்றி பிரமாதமாக எழுதப் பட்டிருந்தன பத்திரிகைகளில்.

பரிசாக வந்த புத்தகங்களுக்கும், வெள்ளிச் சாமான்களுக்கும் கணக்குப் பார்த்தால், ஐயாயிரம் ரூபாய் மதிப்பிடலாம். நாகராஜனுக்கு வந்த பரிசுகளை விட, நாயகிக்குத்தான் அதிகமாக வந்தன; அதிலே பெண் நண்பர்கள் கூட குறைச்சல்தான்; நாயகிக்கு ஆண் நண்பர்கள்தான் அநேகர் இருந்தனர். அவர்கள் அளித்த பரிசுப் புத்தகங்கள் பெரும்பாலும் ஆண், பெண் உறவைத் தெளிவுபடுத்தும் ‘செக்ஸ்’ (Sex) சம்பந்தப்பட்டவைகளாக இருந்தன.

இது மட்டுமா? கல்யாணத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பே நாயகி பி.ஏ,பி.எல், ஆகி, வக்கீல் தொழிலை ஆரம்பித்திருந்தாள். கட்சிக்காரர்கள் பரிசுகளுக்கும் கணக்கு வழக்கில்லாமல் இருந்தது.

இவைகளைக் கண்டு, நாகராஜனே மலைத்து விட்டான். நாயகிக்கு இவ்வளவு சிநேதம் ஊர் ஊருக்கு இருக்குமென்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

கல்யாணமான இரண்டொரு வாரத்திலேயே, நாகராஜனுக்கு வாழ்க்கையில் ஏமாற்றம் தோன்ற ஆரம்பித்தது.

‘முதல் இரவு’ முடிந்த மறுநாள், நாயகி ஊரிலே இருக்கவில்லை. தேச சேவை செய்ய வெளியூர் போய் விட்டாள். நாகராஜனுக்கு ஒரே கோபம். ஆனால்—நாயகிக்கு நல்ல புகழ்! வாழ்க்கையின் சுகத்தையே விட்டு விட்டு, சேவை செய்ய வந்து விட்டாள், சேவகி! அவள் ஒப்பற்ற தியாகி! இப்படிச் சிலர் கூறினர்.

ஆனால்…

நாகராஜனுக்கு இந்தப் போலி தியாகமெல்லாம் பிடிக்கவில்லை. நாயகியைக் கட்டுப்படுத்த நினைத்தான். கூட்டங்களுக்குச் செல்வதாய் இருந்தால், என் கூடத்தான் வர வேண்டும்; மற்றபடி கூட்டங்களுக்குப் போகக் கூடாது என்று கட்டளையிடவில்லை, நயமாகச் சொன்னான்.

நளினமாகப் பேச நங்கையர்களுக்கு, குறிப்பாக நாயகிக்குத் தெரியாதா?

“என்ன இப்படி பேசுகிறீர்கள்? பொதுநலவாதி பேசுகிற பேச்சா இது? என் கூட தாங்கள் இல்லாவிட்டாலும், என் தந்தை தங்கராயர் இருக்கிறார் அல்லவா?”

இந்த சமாதானத்தைக் கேட்ட நாகராஜன் எதுவுமே பேச முடியவில்லை. அப்பாவும், மகளும் சேர்ந்து செய்யும் அரும்பணியை அரசியல்வாதி நாகராஜன் ஆட்சேபித்தால்… உலகம் சிரிக்காதா?

“நாயகியின் தந்தையா தங்கராயர்? தங்கராயரால், சுவீகாரம் செய்யப்பட்டவள்தானே நாயகி? அப்படியிருக்க, தங்கராயர் பிற புருஷனே தவிர, பெற்ற தகப்பனல்ல!” இந்த எண்ணம் நாகராஜன் மனதில் இருந்து என்ன பயன்? மெல்லவும், விழுங்கவும் முடியாமல் விழித்தான். கட்டிய மனைவி சதா சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டு, எட்டியே இருப்பதைக் கண்டு வருந்தினான்; வாடினான்.

இந்த வேதனையின் காரணமாகத்தான், அரசியலில் அதிகமாக ஈடுபடுவதை நிறுத்தினான். ஆடிக்கொரு தரம், அமாவாசைக்கொரு தரம் என்பதைப் போல, எப்போதாவது, எங்காவது கட்டாயத்தின் பேரிலே செல்வான்.

அப்படி அவன் சென்று கொண்டிருந்த போது, ஒரு செய்தியைக் கேட்டுத் திடுக்கிட்டான். மனம் பதறினான். காற்று வாக்கிலே வந்த செய்திதான் அது; ஆனால், கர்ண கொடூரமானது! வதந்திதான்; ஆனால், வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியது.

“ஏண்டா! தங்கராயரும், நாயகியும் என்னதான் ‘அப்பா, மகள்’ என்றாலும்… தங்கராயர் மடியிலே நாயகி கிடப்பதும்… ஒரே கட்டிலில் இருவரும் படுப்பதும்… சேச்சே… பிரசங்கம் செய்ய வந்த இடத்தில், இந்த லீலாவிநோதமா?”

இந்தச் செய்தி நாகராஜனுக்கு அதிர்ச்சியாக இருந்தது; பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது. இந்த உண்மையை எப்படி அறிவது? அதுவும் காற்று வாக்கிலே வரத்தான் செய்தது.

இந்த நாயகியை ‘தத்து’ எடுத்தவன் தங்கராயர்; படிக்க வைத்து வளர்த்தவன் அவன்தான். நாயகி பருவமடைந்ததும், வீட்டோடு அவளை வைத்துக் கொண்டு, தந்தை—மகள் நாடகம் நடத்தியவன்தான் தங்கராயர். உண்மையிலேயே, தங்கராயரும், நாயகியும் அந்தரங்கக் காதலர்கள். பன்னிரண்டாவது வயதிலேயே, நாயகியைக் கெடுத்து விட்டானாம் பாவி!

இவ்வளவு அறிந்த பின்னும், மானமுள்ளவன் சும்மா இருப்பானா? பொதுக் கூட்டங்களுக்கே போகக் கூடாது என்று உத்தரவு போட்டான். தங்கராயர் இருக்கிற பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது என்றான். பி.ஏ.பி.எல். படித்த வக்கீல் நாயகி, இதற்கெல்லாம் வளைவாளா?

“சந்தேகம், சந்தோஷ வாழ்வின் சத்ரு” இப்படி வேதாந்தம் பேசினாள் நாயகி. ஆனால்… நாயகி பப்ளிக் பிராசிகூட்டராக நியமிக்கப்பட்டாள். அதற்கப்புறம், அவள் கட்சி பிரசாரத்திற்கு போக முடியவில்லை.

இதனால், நாகராஜன் திருப்தி அடைந்தானா? எப்படி அடைய முடியும்? கோர்ட் விஷயம் என்று கூறிக் கொண்டு, வீட்டுக்கே வராமலிருந்தாள், நாயகி; கணக்கற்ற ஆண்களோடு, கண்ட கண்ட இடங்களிலே, சுற்றித் திரிந்தாள். கண்டித்துக் கேட்டால்… வழக்குக்கு வேண்டியவர்கள் என்று பதில் சொன்னாள்.

இதைக் கூட கொஞ்ச நாள் பொறுத்தே வந்தான். ஆனால், அன்று இரவு அவன் கண்ட காட்சி…

எவனோ கல்லூரியிலே கூடப் படித்தவனாம், நாயகியைக் கட்டி அணைத்து, முத்தமிட்ட காட்சியைக் கண்ணாடியிலே பார்த்து விட்டான் நாகராஜன்.

வெளியே சொன்னால் வெட்கம்! சொல்லாமல் இருந்தால் வேதனை! வீட்டை விட்டே வெளியேறி விட்டான்.

5. இது என்ன உலகம்

காடு, மலை எல்லாம் சுற்றினான்; வருடங்கள் ஒன்று, இரண்டு என்று மூன்றுக்கு மேல் ஓடின. நாகராஜன் நடைப் பிணமாக அலைந்து கொண்டிருந்தான். வாடிய முகத்திலே தாடி வளர்ந்து, பிச்சைக்காரனிலும் கேடு கெட்டவனாகக் காட்சியளித்தான் லட்சாதிபதி நாகராஜன்.

காதல் என்பது கற்பனை! காதலின் பெயரால், நாட்டிலே தினமும் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்!

இந்த உடலைத் தீண்டும் உரிமை உங்களுக்குத்தான் என்று கூறிய நாயகி, அடுத்தவன் அணைப்பிலே இருக்கிறாளே, இதுவா காதல்?

கல்யாணம் நடப்பதற்கு முன், காய்ச்சலாகப் படுத்திருந்த நாயகியிடத்திலே, “நாயகி! நாலு நாள் காய்ச்சலிலே மெலிந்து விட்டாயே… மருந்தும், டானிக்கும் சாப்பிடு” என்று சொன்னதற்கு… உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலே, இரத்தம் என் உடம்பில் ஊறுமே என்று சொன்ன நாயகி, இன்று என்னை உதாசீனம் செய்து விட்டு வாழ்கிறாளே, இதுவா காதல்?

“காதலுக்கும் கடவுளுக்கும் பேதமில்லை” என்பார்கள்! உண்மைதான். எப்படி இல்லாத கடவுளை இருப்பதாகக் கூ.றி, அதற்கு ஆலயங் கட்டி, அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்களோ, அதைப் போலத்தான் இல்லாத காதலை, அழகுபடக் கூறி, கண்ணிலே மண்ணைத் தூவுகிறார்கள்.

இப்படி ஏதோ சொல்லி, நாகராஜன் புலம்ப முடிந்ததே தவிர, வாழ முடியவில்லை, பிச்சை எடுத்தான்; வீதியிலே படுத்தான்.

இந்தச் சமயத்தில்தான் தைப் பொங்கல் வந்தது. பட்சியினங்களுக்காவது வெண் பொங்கல் கிடைத்தது. நாகராஜனுக்கு அன்றைய உணவுக்கே பஞ்சம்.

இதே பொங்கல் திருநாளில், ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம்! ஆனால் இன்று…? நடைப்பிணம். நாளையோ, மறுதினமோ மரணம்!

அன்று இரவு, கையிலே கிடைத்த பிச்சைக் காசுடன் ஒரு குடிசையில் நுழைந்தான் நாகராஜன். கையிலே இருந்த பணத்தை, அந்தக் குடிசையில் இருந்த பெண்ணிடம் கொடுத்தான். “ஐயா! கொஞ்ச நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். சாப்பாடு தயார் செய்கிறேன். ஆனால்…”

அப்போது நுழைந்த போலீசார், அந்தப் பெண்ணையும், நாகராஜனையும் கைது செய்தனர். ‘விபசாரக்’ குற்றம் சாட்டி, கோர்ட்டிலே நிறுத்தினர்.

‘நிரபராதி’ என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் நாகராஜன். ஆனால், அந்தப் பெண் எப்போதோ விபசாரக் குற்றத்திற்காக முன்பு, அபராதம் கட்டியவளாம்! இதை வைத்து, நாகராஜனுக்கும், அந்தப் பெண்ணுக்கும் ஆறு மாதத் தண்டனை என்று சொல்லி விட்டு, நீதிபதி எழுந்து நின்றார்.

சிலை போல் ஸ்தம்பித்து நின்ற நாகராஜன், நீதிபதி செல்வதைப் பார்த்துக் கொண்டே இருந்தான். நீதிபதி ஆணல்ல, பெண்!

“யார் அந்த நீதிபதி? நாயகியா அந்த நீதிபதி? நான் விபசாரம் செய்தேன் என்று விபசார நாயகியா தீர்ப்பளிப்பது? இது என்ன உலகம்?”

விழித்துப் பார்த்தான். அவன் இருந்த இடம் சிறைக்கூடம்.

முற்றும்


எமது சிறந்த வெளியீடுகள்


அறிஞர் அண்ணாதுரை


மாஜி கடவுள்கள் 3 8 0
பார்வதி பி.ஏ. 3 0 0
காதல் ஜோதி 2 8 0
ரங்கோன் ராதா 2 8 0
ஓர் இரவு 1 4 0
அண்ணாவின் சொற்செல்வம் 1 0 0
சூழ்நிலை 1 0 0

தில்லை-வில்லாளன்


மல்லிகைத் தோட்டம் 1 0 0
மனப் போர் 1 0 0
தங்கத் தாமரை (அச்சில்}

பாரி நிலையம்,
59, பிராட்வே, சென்னை-1



ஏ.வி.பி. ஆசைத்தம்பி


கசப்பும் இனிப்பும்
மனித தெய்வம்
பிணங்கள்
வெறுங்கூடு
நினைவுச் சுழல்
தியாகச் சுடர்
கிழக்கும் மேற்கும்
1 08 0
1 04 0
1 00 0
1 00 0
0 12 0
0 12 0
(அச்சில்)

கே.ஜி. இராதாமணாளன்


நீரோ
கானல் நீர்
அரக்கு மாளிகை
இளவரசி
அன்னம்
சபதம்
வீணை
பூக்குடலை
சிந்தனைத் துளிகள்
1 00 0
1 00 0
3 00 0
2 00 0
1 00 0
(அச்சில்}
2 08 0
2 00 0
0 04 0

பாரி நிலையம்,
59, பிராட்வே, சென்னை-1



எமது சிறந்த வெளியீடுகள்



மாஜி கடவுள்கள் (அட்டை)
பார்வதி பி.ஏ.
ரங்கோன் ராதா
காதல் ஜோதி
ஓர் இரவு
அண்ணாவின் சொற்செல்வம்
அண்ணா
அண்ணா
அண்ணா
அண்ணா
அண்ணா
அண்ணா
3 50
3 00
2 50
2 50
1 25
1 00
கசப்பும் இனிப்பும்
மனித தெய்வம்
வெறுங்கூடு
பிணங்கள்
கிழக்கும் மேற்கும்
தியாகச் சுடர்
நினைவுச் சுழல்
ஆசைத்தம்பி
ஆசைத்தம்பி
ஆசைத்தம்பி
ஆசைத்தம்பி
ஆசைத்தம்பி
ஆசைத்தம்பி
ஆசைத்தம்பி
1 50
1 25
1 00
1 00
1 00
0 75
0 75
வீணை
இளவரசி
அரக்கு மாளிகை
பூக்குடலை
நீரோ
கானல் நீர்
சிந்தனைத் துளிகள்
இராதாமணாளன்
இராதாமணாளன்
இராதாமணாளன்
இராதாமணாளன்
இராதாமணாளன்
இராதாமணாளன்
இராதாமணாளன்
2 50
2 00
2 00
2 00
1 00
1 00
0 25
டெக்காமெரான் I
டெக்காமெரான் II
பொக்காலியோ
பொக்காலியோ
3 50
3 50

பாரி நிலையம்,
59, பிராட்வே, சென்னை-1


"https://ta.wikisource.org/w/index.php?title=பிணங்கள்/நடைப்_பிணம்&oldid=1742965" இலிருந்து மீள்விக்கப்பட்டது