பிணங்கள்/பிணத்தின் முன்……!
பிணத்தின் முன்……!
பிணம்! மனித வாழ்க்கையின்—நடமாடும் மனித உயிரின்—மழலை மொழி பேசித் தவழ்ந்து விளையாடி—காளைப் பருவத்திலே, ஆடி ஓடி விளையாடி—கல்வி பல கற்று—திருமணம் நடந்து—இல்வாழ்வில் இன்பம் சுவைத்து—இன்பத்தின் எல்லை கண்டு—இளஞ் சிறாரைப் பெற்றெடுத்து—எதிர்காலச் சிங்கத் தமிழ்ப் பரம்பரையை உண்டாக்கி வைத்து—நல்ல குடும்பமாக—நல்லதொரு முன் மாதிரியை நாட்டுக்குத் தந்திடப் போகும்—எதிர்கால உலகுக்கு—பிணங்கள் என்ற தலைப்பு—ஒரு துன்பச் செய்திதான்!
வாழ்வின் முடிவு—பிணம்! பிணமாவதற்கு முன்னர்தான் மனிதன் வாழ்கிறான்!
வாழ்க்கைப் பாதை—வளமற்றதாக அமைந்துவிடின்—குறிப்பாகக் காதல் பாதை தவறி விட்டால்—வாழ்விலேயே—வாழ்வின் ஒவ்வொரு மூச்சிலுமே—வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது.
இத்தகைய ‘சூழ்நிலைகள்’, நாட்டினரின் ஒரு பகுதியை, மக்களாக வாழ விடாது, நடைப் பிணங்களாய் வாழ விடும் நாட்டின் பற்பல கோணங்களின் படப்பிடிப்பே,—எதிரொலியே இந்நூல்!
மனித வாழ்வின் துயர ஏடுகளைப் புரட்டி, புரையோடிப் போன புண்ணைக் கிளறிக் காட்டி— நம்மைச் சுற்றிலும் நமது சிந்தனையைக் கிளறி விட்டு—நாட்டைக் காணுங்கள் என்று அழைக்கிறார் ஆசைத்தம்பி!
இந்நூலை எங்கள் நிலைய வாயிலாக வெளியிட இசைவு தந்த ஆசிரியர் அவர்களுக்கு எங்கள் நன்றி உரியது.
பதிப்பாளர்.