பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்
5
வழுக்கி விழுந்தவர்கள்
"போடா, சோமாரி! என்கிட்டவே "டூப்"பா! எவண்டா காலை ஒடிச்சுது, சொல்லுடான்னா.."
"அடச்சே! நெஜத்தைச் சொன்னா நம்பாம, குத்திக் கிளறிக் கேக்கறியே. வழுக்கி விழுந்துட்டதாலே ஏற்பட்டது தாண்டா இது..."
"யாரடா நம்பச்சொல்றே... டேய்! சும்மா சொல்லுடா தம்பி..."
"உன்னோடு மாரடிக்க நம்மாலே முடியாது டோய்...சொன்னா நம்புவயா, பெரிய 'கிராஸ்' போடுறியே வக்கீல் மாதிரி. இரண்டு நாளா நல்ல சாப்பாடு கிடையாது...களைப்பு... ஒரு இடம் குறிபார்த்து வைத்து இருந்தேன்...நாலடிதான் உயரம். சுவரு... சும்மா ஒரு எட்டு எட்டி மேலே தாவிட்டேன்...குத்துக்கால் போட்டு உட்கார்ந்து ஒரு நோட்டம் பார்த்தேன் ... சாப்பாடு இல்லாத களைப்பு. ஒரு மாதிரியா இருந்துது மயக்கம் போல! கால் தன்னாலே வழுக்கி விட்டது... கீழே பாரேன் கருங்கல்லு, சனியனாட்டம்...முட்டி முகம் எல்லாம் இரத்த காயம்..."
"அடப் புல்தடுக்கி! நாலடிக்கேவா இந்தக் கதி! காது வரைக்கும் வாய் இருக்குது..."
"உன்னோட சொல்றதுக்கு என்னடா... இப்ப பழைய மாதிரி வலிவு, தெம்பு, தைரியம் இருக்கறதில்லே..."
"கிழமாயிட்டயா! வயது என்னடா உனக்கு? ஒரு நாப்பது இருக்குமா?""அவ்வளவுதான் இருக்கும்... வயது ஆயிடலேன்னா கூட இப்ப எனக்கு பழைய தெம்பு இல்லை.. அவளுக்குப்போன மாசம்தான் மூணாவது பொறந்துது ராஜாக்குட்டி மாதிரி..ஆம்பளைப் பையன்...இவன் பொறக்கற வேளையாவது உனக்கு நல்ல புத்தி பொறக்கணும்னு வேறே சொன்னா என்னோட வூட்டுக்காரி...மனசு குழம்பிப் போச்சு. முன்னே ஒண்டிக் கட்டை...என்ன ஆனாலும் பரவாயில்லேன்னு ஒரு தைரியம்...இப்ப நமக்கு ஏதாச்சும் ஆயிட்டா அவ கண் கலங்குவா, குடும்பம் அவதிப்படும், நாலுபேர் முகத்திலே எப்படி அவ முழிப்பா..அதை எல்லாம் எண்ணிக் கொண்டா மனசு 'பகீல்'னு ஆயிடுது. அதனாலே இந்தத் தொழிலுக்கே முழுக்குப் போட்டுட வேணும்னு ஒரு முடிவுக்கே வந்துவிட்டேன்."
"அடச்சீ! பயந்தாங் கொள்ளி. போ, போ! எதாச்சும் குழைச்சிப்போடு காயம்பட்ட இடத்துக்கு. இந்தா எட்டணா இருக்கு, ஏதாச்சும் வாங்கித் தின்னு...ஏய்! என்னடா மடியிலே பணத்தை முடிச்சுப் போட்டுக் கொள்றே..."
"கொழுந்தைகளுக்கு எதாச்சும் வாங்கிக் கிட்டுப் போய்க் கொடுக்கணும்பா...அப்பா வரட்டும், அது வாங்கி கிட்டு வருவாரு, இது வாங்கிகிட்டு வருவாருன்னு அவ சொல்லி அதுகளைச் சமாதானப்படுத்திக்கிட்டு இருப்பா...நான் வரட்டுமா..."
"போ! போ! பார்த்து நடந்து போ! வழியிலே வேறெ வழுக்கி விழுந்துவிடப் போறே...
‡‡‡
"போறாத வேளைங்க, போறாத வேளை.. இத்தனை காலமா ஏறலியா இறங்கலையா ... ஒரு நாளும் நேரிட்ட தில்லையே, இதுபோல..."
கல்லு சேறு தூக்கிக்கிட்டு மேலே கொண்டு போற சித்தாளுங்க சரியா வேலை செய்யணுமேன்னு, இப்படியா அன்னநடை ஆமை நடை போடறதுன்னு சொல்லிக்கிட்டே ஏணியிலே ஏறினேன். பாதி தூரம் போயிருப்பேன். காலு வழுக்கிட்டுது; கட்டை மாதிரி விழுந்துட்டேன்....பதறிப் போச்சுங்க, வேலை செய்துகிட்டு இருந்ததுகளெல்லாம்..."
"என்ன பதறிவிட்டாங்களோ மத்தவங்க? இந்த மாதிரி எதுவும் ஆகக் கூடாதுன்னுதான் காலையிலே பொறப்படற போது சகுனம் பார்க்கச்சொல்றது...அந்தப் பேச்சை காதிலே வாங்கிக் கொள்ள மாட்டேங்கறிங்க... இந்தக் கண்றாவியை எப்படி சகிச்சிக்கச் சொல்றிங்க... கீழே விழுந்ததும் மொதலாளி வந்து பார்த்தாரா? என்ன சொன்னாரு?"
"நல்ல கேள்வி கேட்டயே...நல்ல வேளையா அவர் கண்ணிலே படலே...பட்டிருந்தா...'டேய் சின்னான், உனக்கு வயசாயிடுச்சுன்னு தலைப்பாடா சொன்னா கேட்டாத்தானே... இனி நீ மேஸ்திரி வேலைக்கு இலாயக்கில்லை; வேறே மேஸ்திரியைப் பார்த்துக் கொள்கிறேன்...நீ கீழே விழுந்து உயிரு போயிட்டா, என் தலைக்குத் தீம்பு வரும். இந்தா உன்னோட பணம் இருவது. போ! போ! நாளையிலே இருந்து, உன் வேலையை பொன்னன் பார்த்துக் கொள்ளட்டம்னு சொல்லி, நம்ம வயத்திலே மண்ணைப் போடுவானே மனுஷன்..."
"மாடா உழைக்கறிங்க...வஞ்சகம் துளிக்கூட இல்லாம..."
"ஆமா...மாடு எலும்புந் தோலுமாயிட்டா அடிமாட்டுகுத்தானே துரத்தறாங்க...அந்தக் கதிதான் நமக்கும்..."
"எதை எதையோ நினைச்சி மனதைக் கொழப்பிக் கொள்ளாதிங்க... ஏங்க! கேட்கறனேன்னு கோபம் செய்து கொள்ளாதீங்க! நெஜத்தைச் சொல்லுங்க, கண்பார்வை கொஞ்சம் மட்டுதானே உங்களுக்கு..."
"பழைய ராமாயணத்தை எடுத்துக்கிட்டயா...உன்னை எனக்கு முடிக்கக் கூடாது என்கிற கெட்ட எண்ணத்தாலே அந்தப் பட்டாபி கட்டிவிட்டான் கதை, எனக்கு மாலைக் கண்ணுன்னு...உங்க அப்பன்கூட முதலிலே நம்பிட்டாரு...பிறகு நான், சிரிசிரின்னு சிரிச்சி விஷயத்தை விளக்கின பிறகுதான் உங்க அப்பாருக்குப் பயம் போச்சி...கண்ணுக்கு ஒரு குறையும் கிடையாது எனக்கு..."
"என் வயத்திலே பால் வார்த்தீங்க...காலையிலே நல்ல டாக்டரிடம் காட்டி கட்டுப் போடுங்க... நாலு நாளிலே குணமாயிடும்..."
"தலைக்குத் தீம்புதேட அதைவிட வேறே வேண்டாம்...பைத்யக்காரப் பொம்பளே...எதையாவது ராத்திரிக்குத் தடவி, கட்டுப்போட்டு, காலையிலே பல்லைக் கடிச்சிகிட்டு வேலைக்குப் போயாகணும்...எழுந்திருக்க முடியல்லேன்னா தீர்ந்தது, மனுஷன் நம்ம சீட்டைக் கிழிச்சிடுவான்."
"இந்த வலியைப் பொறுத்துக்கிட்டு வேலைக்குப் போகணும்னா மனசு பகீல்னு இருக்குதுங்க..."
"உன் மனசு இருக்குது அதுபோல...முதலாளி மனசு எதுக்காகப் பகீல்னு ஆகப்போகுது..."
"நம்ம எழுத்து அப்படி. வேலைக்குப் போனாக்கூட உடம்பை அலட்டிக் கொள்ளாம இருங்க..."
"ஆகட்டும்!நீ எதுக்கும் போயி, நம்ம கோடி வீட்டிலே புதுசா ஒரு வைத்தியர் வந்து இருக்கிறாராமே. அவரை கூட்டிகிட்டு வாயேன், காட்டுவம்...."
"இதோ கூட்டிகிட்டு ஓடியாந்துடறேன், ஒரு விநாடியிலே..."
🞸🞸🞸
"போடா, மடயா! இப்படியா ஓட்டை டின்களிலே எண்ணெயை ஊற்றி வைக்கறது... எவ்வளவு எண்ணெ பாழாகிப் போச்சி! இருக்குமேடா, பத்து இருவது ரூபா நஷ்டம்..."
"டின்னு ஓட்டை இல்லிங்க...எண்ணெயும் தன்னாலே ஒழுகிப் போகலே. நீங்க அவசரமா வந்ததாலே எனக்கு விஷயத்தைச் சொல்ல முடியல்லை. அதுக்குள்ளே நீங்க வழுக்கி விழுந்து விட்டீங்க ஏனுங்க! ரொம்ப வலிக்குதுங்களா... இந்தக் கோடியிலே இருந்து அந்தக் கோடிக்குப்
போயிட்டிங்களே, கண்மூடிக் கண் திறக்கறதுக்குள்ளே...""ஏண்டா, காலை வைச்சதும் வழுக்கிட்டுதே! இங்கே தான் எல்லா இடமும் எண்ணெயாக் கிடக்குதே, எப்படிச் சமாளிக்கறது.. நல்ல வேளையா பீப்பாய்களை அந்தப் பக்கம் வைத்திருந்ததாலே அத்தோடு போச்சி. நீ ஒழுங்கா வேலை பார்க்கற இலட்சணமா இது? வலிக்குதான்னு கேட்டு விட்டா என் உச்சி குளிர்ந்து போய்விடுமா! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு, உன்னோட உருக்கம் உபசாரம் கிடக்கட்டும்; எதுக்காக இப்படி எண்ணெ இந்த அளவுக்குக் கீழே வழிந்து ஓடணும்."
"ஓட்டையாலே கசியலிங்க...நானேதான் ஒரு அஞ்சாறு டின்களிலே ஓட்டை போட்டு எண்ணெயை வழிய விட்டேன்..."
"அடப்பாவி! என் சொத்தை நாசமாக்கறதுன்னு தீர்மானித்துவிட்டயா... டின்களிலே நீயே பொத்தல் போட்டயா..."
"போட்டதாலே தாங்க, நம்ம சரக்கு—பீப்பாய்களுக்குக் கீழே இருக்கற சரக்கு... இன்ஸ்பெக்டர் கண்களுக்கு படாதுபோச்சு. வர இருந்த ஆபத்திலே இருந்து தப்பிக்க முடிந்தது."
"என்னடா, என்னென்னமோ உளறிக் கொட்றே"
"உரக்கக் கூவாதிங்க. சிலோன் சரக்கு கீழே இருக்குதுங்களே, பீப்பாய் இருக்கிற இடத்துக்குக் கீழே..."
"ஆமா, இருக்குது. அது எனக்குத் தெரியாதா! அதனாலே...?"
"எவனோ திருட்டுப்பய, இன்ஸ்பெக்டருக்கு 'வத்தி' வைத்துவிட்டு இருக்கிறான். நாலைந்து போலீசோடு வந்து விட்டாரு... கிடங்கைச் சோதனை போடணும்னு...பார்த்தேன்... உட்காருங்க...எதுக்கும் முதலாளிக்குப் போன் செய்துட்டு வந்துவிடறேன்னு சொல்லிவிட்டு வந்தேன். திடீல்னு ஒரு யோசனை தோணிச்சி... போலீசை இந்தப் பக்கம் வரவிடாமத் தடுத்தாகணும். மளமளன்னு குத்துக்கோலை எடுத்து அஞ்சாறு டின்களை ஓட்டை செய்துவிட்டேன். எண்ணெ குபுகுபுன்னு வழிய ஆரம்பிச்சுது. வாய்க்கால் போல வந்துது... இடம் பூரா ஒரே எண்ணெய்...வெளிப்பக்கம் சோதனையை முடிச்சிகிட்டு இந்தப் பக்கம் வந்தாரு ... தரை முழுவதும் ஒரே எண்ணெய் மயம்... சேச்சேச்சேன்னு சொல்லிக் கொண்டே, இங்கே என்னய்யா இருக்குதுன்னு கேட்டாரு...இது அவ்வளவும் அனுமார் கோயில் அபிஷேகத்திற்காக எண்ணெயினு சொன்னேன். ஒரே ஆத்திரம் அவருக்கு...ஏன்யா! இப்படித்தான் கோயில் கைங்கரியத்துக்கான எண்ணெயைப் பாழாக்கறதான்னு கேட்டாரு, கோபமா. கேட்டுவிட்டு, இப்படியும் அப்படியுமா பார்த்துவிட்டு, வெளியே போயிட்டாருங்க. இந்த எண்ணெதான் நம்மைக் காப்பாத்தி விட்டுதுன்னு சொல்லணும்..."
"அட அப்படியா! ஆபத்தான வேளையிலே உனக்கு இந்த யோசனை உதிச்சுதே, அதைச் சொல்லு. எண்ணெயிலே நடந்தா வழுக்கி விழுந்துவிடப் போகிறோம் என்கிற பயம் இன்ஸ்பெக்டருக்கு... அதனாலேதான் பிப்பாய்கள் இருக்கற பக்கம் சோதனை போடல்லே..."
"கோயில் அபிஷேகத்துக்கான எண்ணெய்ன்னு சொன்னதும் அவர் பயந்துவிட்டாருங்க...ஏன்னா! கோயில் அபிஷேகத்துக்கான எண்ணெயைக் காலாலே மிதிக்கக் கூடாது பாருங்க... பாவமில்லையா!"
"ஆமாமாம்! நம்ம இன்ஸ்பெக்டருக்கு பக்தி அதிகம்; தெரியும். உன் யுக்தி பரவாயில்லைய்யா... சரி, சரி; டின்களிலே உள்ள ஓட்டைகளை அடைத்துவிடு..ஆகட்டும்..கீழே கிடக்கற எண்ணெயை ஒரு சொட்டு விடாம வழிச்சி எடுத்து தனியா ஒரு டின்னிலே போட்டுவை. சனீஸ்வரன் கோயிலிலே இலட்ச தீபமாமே, அதுக்கு நம்ம விலாசத்தின் பேர்லே அனுப்பிவை..."
"ஆகட்டும்ங்க... வீட்டிவே இருந்து வேறே துணி சட்டை வரவழைக்கட்டுங்களா..."
"ஏன்! இதுக்கு என்னவாம். பரவாயில்லே...""வலி எப்படி இருக்குதுங்க? அடி பலமானதா இல்லிங்களே..."
"காலிலே இரத்தம் கசியுது; நெற்றியிலே வீக்கம்..."
"உள் காயம் இருந்துவிடப் போகுதுங்க...உடனே கவனிக்க வேணும்..."
"டாக்டருக்கு ஒரு போன் போடு...பயந்துவிடப் போறாரு...சும்மா இலேசான காயம்தான்னு சொல்லு...எதுக்கும் உடனே வரச் சொல்லு....ஏன்யா! சிலோன் சரக்கு, இராத்திரி போயிடுமேல்லோ..."
"ஆமாங்க...அந்த ஏற்பாட்டை நான் கவனித்துக் கொள்றேன்...நீங்க உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்க...காலுக்கு ஒண்ணுமில்லிங்களே..."
"பரவாயில்லைய்யா!...எதுக்கும் ஒரு வாரம் நர்சிங் ஹோமிலே இருக்கலாம்ன்னு பார்க்கறேன்"
"தங்கமான யோசனைங்க. நானே சொல்லலாம்னு; வாலிப வயதல்ல பாருங்க. ஒருவாரம் என்னங்க, உடம்பு சரியாகற வரைக்கும் இருக்கறது. நம்ம உடம்புக்கு மிஞ்சியா, மத்தது..."
"ஒரு வாரம் போதும்யா... இந்த வாரத்திலேதான் காலேஜ் நிதிக் கமிட்டிக்காரனுங்க, பணம் தண்டக் கிளம்பறானுக...உசிரை வாங்கிடுவானுங்க, நம்மைக் கூடச் சுத்தச் சொல்லி! இப்ப அந்தத் தொல்லை இருக்காது. நிம்மதியாச்சி..."
"டாக்டருங்க! மோட்டார் சத்தம் கேட்குது..."
🞸🞸🞸
மூன்றுபேர் வழுக்கி விழுந்துவிட்ட சம்பவங்களைத் தொடர்ந்து மூன்று நிகழ்ச்சிகள்.
முதலாவது நிகழ்ச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னுத்துரை, மூன்று போலீஸ்காரர்களைக் கூப்பிட்டு உத்திரவு பிறப்பித்தது.கேடி கண்ணன் கொடுத்த உளவினாலே கன்னக்கோல் குப்பன் நேற்று இரவு கலியப் பெருமாள் வீட்டுச் சுவற்றின் மீது ஏறி கீழே வழுக்கி விழுந்துவிட்டிருக்கிறான் என்று தெரிகிறது. உடலிலே காயம் ஏற்பட்டிருக்கிறது. உடனே போய் அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து கொட்டடியில் போடவேண்டும்.
கலியப் பெருமாள் வீட்டு தோட்டச் சுவற்றிலே குப்பனுடைய கை அடையாளம் விழுந்து இருக்கும். அதைப் போட்டோ படம் எடுத்துக் கொண்டு வரவேண்டியது. இரண்டாவது நிகழ்ச்சி கட்டடக் காண்ட்ராக்டர் திண்ணாயிரம், தம்முடைய காரியக்காரன் கொண்டய்யாவுக்கு எழுதி அனுப்பிய அவசரக் கடிதம்.
நாளையிலே இருந்து மேஸ்திரி சின்னான் வேலைக்கு வரவேண்டியது இல்லை. வேலையும் சுத்தமில்லை. ஆளுக்கு வலியும் இல்லை; புத்தியும் இல்லை. நேற்று ஏணியில் ஏறும் போதே கால் நடுக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துவிட்டான் என்று தெரிகிறது. இப்படிப்பட்டதுகளை வேலைக்கு வைத்துக் கொண்டால் நம்முடைய திட்டப்படி கட்டடம் பூர்த்தியாகாது. அவனுக்குத் தரவேண்டியதைக் கொடுத்துவிட்டு, பொன்னனை மேஸ்திரியாகப் போட்டுக் கொள்ளவும். உடனே அவசரம்.
திண்ணாயிரம்.
மூன்றாவது நிகழ்ச்சி, "திருக்கோயில்" என்ற பத்திரிகையின் நிருபர், தமது பத்திரிகைக்குச் செய்தி அனுப்பியதுடன், 'தர்மதாதா' என்ற பத்திரிகைக்குத் தந்த (தனிக் கட்டணம் பெற்றுக் கொண்டு) விசேஷச் செய்தி.
சிறந்த பக்திமானும் தர்ம சிரேஷ்டரும், பிரபல குடும்பத்தைச் சேர்ந்தவருமான எண்ணெய் வியாபாரம் ஏகாம்பர பாரதியார். (ஜாதிப் பெயரை விட்டு விட்டு வரும் இந்தியர் என்ற தேச பக்திக்காகத் தம்முடைய ஜாதி,பாரதியார் ஜாதி என்று கூறிக்கொண்டவர்) அனுமார் கோயில் அபிஷேக சம்பந்தமான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தபோது கால் வழுக்கிக் கீழே விழுந்துவிட்டார். ஆபத்து இல்லை என்றாலும் பாரதியார் (செட்டியார்) ஒருவார காலமாகியும் படுக்கையில் இருந்தாக வேண்டும் என்று டாக்டர் சுந்தரம் கண்டிப்பாகக் கூறிவிடவே, சுந்தரா நர்சிங் ஹோமில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
எனக்குள்ள ஒரே கவலை காலேஜ் நிதி சேர்க்கும் சிலாக்கியமான காரியத்திலே பங்கு எடுக்க முடியாமல் போய்விட்டதே என்று செட்டியார் (பாரதியார்) அவர்கள் நம் நிருபரிடம் சொன்னது மனதை உருக்குவதாக இருந்தது.
எக்ஸ்ரே எடுக்கப்பட்டு இருக்கிறது. அது பற்றிய விவரம் நாளை இதழில் வெளிவரும்.★