பிள்ளையார் சிரித்தார்/பொன் வாத்து

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பிள்ளையார் சிரித்தார்-சிறுகதைகள்.pdf
7
பொன் வாத்து

மேனகா மில்ஸ் அதிபரான பசுபதியின் முன்னால் அவரது ஆலையில் பணிபுரியும் அத்தனை ஊழியர்களும் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருந்தனர். பசுபதி அவர்களையெல்லாம், மொத்தமாகவும் தனித்தனியாகவும் விசாரித்தார். திரும்பத் திரும்ப அதே கேள்விகளைக் குணமாகவும் கோபமாகவும் கேட்டார்.

"இப்பொழுது எதற்காக இந்த வேலை நிறுத்தம்? வாசு உங்களிடம் என்ன சொன்னான் ? இதுவரை உங்களுடைய நியாயமான எத்தனை கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். எதற்கும் ஒர் அளவு உண்டில்லையா? பொன் முட்டை இடுகிறதென்றால், வயிற்றையே கிழித்து விடுவதா? இப்பொழுதாவது சொல்லுங்கள், வாசு உங்களிடம் என்ன சொன்னான்? எதைச் சொல்லி உங்கள் மனத்தைக் குலைத்துவிட்டு ஊருக்கு ஒடிப் போயிருக்கிறான், சொல்லுங்கள்." முதலாளியினுடைய இந்த நீண்ட நேரப் பேச்சையும், அவருடைய ஆணையையும் மதித்து ஒருவராவது ஒரு வார்த்தை பேச வேண்டுமே! ஊஹூம், அவர்கள் வாயே திறக்கவில்லை. இது முதலாளியின் ஆத்திரத்தை இன்னும் அதிகமாக்கியது.

"வயிற்றுக்கு அளக்கிற என்னைவிட, உபதேசம் செய்கிற உங்கள் தலைவன் பெரியவனாகிவிட்டானா? போங்கள், என் முன் யாரும் நிற்க வேண்டாம், போங்கள்."

தொழிலாளர்கள் அமைதியாகக் கலைந்து சென்று விட்டனர். ஆனால், பசுபதியின் உள்ளத்தில் மட்டும் அமைதி ஏற்படவில்லை. வாசு இப்படித் தமக்கெதிராக மாறுவான் என்று அவரால் எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை. "எத்தனை பெரிய துரோகம்-எவ்வளவு இழிவான நன்றி கொன்ற செயல்! சே! பாம்பிற்குப் பாலை வார்த்தேன்" என்று தம்மையே மிகவும் நொந்து கொண்டார். எத்தனை சமாதானம் செய்துகொண்டாலும் அவர் மனம் ஆறுதல் பெற மறுத்தது.

மேனகா மில்லை ஆரம்பித்துப் பூஜை போட்ட அன்றையிலிருந்து வாசு அவர் கம்பெனியில் இருக்கிறான். அன்று மில் இத்தனை பெரிய வளர்ச்சியில் இவ்வளவு ஊழியர்களுடன் தொடங்கவில்லை. அதன் முன்னேற்றம் படிப்படியாக ஒரு குழந்தையின் வளர்ச்சியை ஒத்திருந்தது.

பெற்ற பிள்ளையைப் போல் பசுபதிக்கு வாசுவினிடம் அளவற்ற அன்பு. அவனும் தன்னை அங்கு சம்பளத்திற்கு மட்டும் வேலை செய்யும் ஒரு ஊழியனாகக் கருதிக்கொள்ளவில்லை. ஏற்படும் லாப நஷ்டங்களில் பங்கு பெறுபவனைப்போல், மில்லின் முன்னேற்றத்திற்காக, நேரம் காலத்தை மீறி உண்மையுடன் உழைத்தான். இதனால் நாளடைவில் முதலாளி அவனிடம் மிகப்பெரிய பொறுப்புக்களையெல்லாம் ஒப்படைத்து விட்டுத் தொழிலைப்பற்றிக் கவலைப்படாமலே இருக்கத் தலைப்பட்டார்.

வாசுவும் அதை உணர்ந்து நடந்தான். முதலாளி தனக்கு அளித்துள்ள விசேஷ உரிமைகளையும், அதிகாரங்களையும் அத்துமீறி உபயோகிப்பதில்லை. அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரையும் வாசு தன் உடன் பிறந்த சகோதரர்களைப் போலவே நேசித்து அவர்களிடம் அன்பு பாராட்டினான். இதனாலேயே மேனகா மில்ஸ் தொழிலாளர்கள் அனைவரும், முதலாளியைத் தந்தையாகவும், வாசுவைத் தலைமகனாகவும் மதித்தனர்.

ஆனால், வாசு இதுவரை தனக்கென்று எதையும் முதலாளியிடம் சென்று கேட்டதில்லை. கம்பெனி லாபமாக நடப்பதால் தொழிலாளருக்கு ஒரு மாதப் பொங்கல் போனஸ் கொடுக்கலாமென்று சிபாரிசு செய்தான். முதலாளி சிரித்துக்கொண்டே இசைந்துவிட்டார்.

நான்கு வருஷங்கள் கழித்து, போனஸை இரண்டு மாதமாக்கினான் வாசு. சிரிக்காமலே அவர் அதற்கும் மறுக்கவில்லை. ஆனால், இப்போது இந்த வருஷமும் பொங்கல் நெருங்குகிற சமயத்தில், 'மீண்டும் வாசு தொழிலாளர்களைக் கூட்டிக்கொண்டு ஏதோ தீவிரமாகப் போனஸ் விஷயமாகப் பேசுகிறான்' என்று பசுபதி அறியவுமே, 'சே, இவர்களது ஆசைக்கு ஓர் அளவே இல்லையா? ஏற்கனவே இந்த வருஷம் கம்பெனிக்கு ஏக நஷ்டம். வழக்கமான போனசை கொடுப்பதே சிரமம். இவற்றையெல்லாம் சற்றும் உணராமல், சுவரை இடித்து விட்டுச் சித்திரம் தீட்ட முயல்கிறார்களே இவர்கள்' என்று அவருக்குப் பிரமாத கோபம் வந்துவிட்டது. ஆனால், இந்தச் சமயத்தில் வாசு ஊரில் இல்லை. நான்கு நாள் லீவில் சென்றிருந்தான். அதனால்தான் அவர் தமது தொழிலாளர்களை அழைத்து, "வாசு உங்களுக்கு என்ன போதனை செய்தான்?" என்று விசாரித்தார். ஆனால், அவர்கள் யாராவது அவருடைய வார்த்தையை மதித்துப் பதில் கூறினால்தானே!

"சரி, உங்களுக்குள் அவ்வளவு ஒற்றுமையா? வாசு வரட்டும். அவனையே கேட்டில் நிறுத்தி வைத்துக் கேட்கிறேன்" என்று தம்மைச் சமாதானப்படுத்திக்கொண்டு விட்டார். ஆனால்—–

மறுநாளே ஊரிலிருந்து திரும்பி வந்துவிட்ட வாசு, தன் அறையில் வந்து அடக்கமாக நிற்பதைக் கண்டதும் பசுபதிக்கே ஒரு கணம் 'திக்' கென்றது.

"என்ன?"--என்கிற பாவனையில், முதலாளி அலட்சியமாக அவன் மீது பார்வையைச் செலுத்தினார்.

வாசு ஜேபியிலிருந்த ஒரு கடிதத்தைப் பணிவுடன் முதலாளியிடம் நீட்டினான். 'வெடுக்' கென்று அதைப் பெற்றுக்கொண்ட அவர், வெறுப்புடனேயே பிரித்துப் படித்தார். அதில்--

"அன்புள்ள முதலாளி அவர்களுக்கு,

நமது மில்லில் இந்த வருஷம் உற்பத்திக் குறைவினால் ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக, வழக்கமாக தாங்கள் அளித்து வரும் பொங்கல் போனசை, வாசு அவர்களின் சொற்படி இவ்வாண்டு விட்டுக் கொடுக்க நாங்கள் சம்மதித்து இருக்கிறோம்" என்று எழுதப்பட்டு, அதன்கீழ் அத்தனை தொழிலாளர்களும் தங்கள் பூரண சம்மதத்தைத் தெரிவித்துக் கையெழுத்திட்டிருந்தனர்.

பசுபதி ஒருகணம் ஒன்றும் புரியாமல் வியப்பால் திகைத்துப் போனார். வாசு விளக்கினான்.

‘முதலாளி, இப்போ நம்ம மில்லுக்கு ஏற்பட்டிருக்கிற நிலைமையை---நெருக்கடியை-- எடுத்துக் கூறி இதைச் சொன்னபோது, பாதிப்பேர், என் வார்த்தைகுக் இணங்கினர். மற்றும் சிலர் 'வியாபாரம் என்றால் லாபம் நஷ்டம் இரண்டும்தான் இருக்கும். இதற்கெல்லாம் நாம் பாத்தியப்பட முடியுமா?' என்று கட்சி பேசினார்கள். பணத்திற்கு மட்டும் வாயைத் திறக்கிற அவர்களுடைய பேச்சு என் மனத்தைப் புண்படுத்தியது. ஆயினும் நான் அவர்களிடம் வாதாட விரும்பவில்லை. மனமுடைந்து இங்கிருக்கப் பிடிக்காமல்தான், லீவ் போட்டுவிட்டு ஊருக்குப் போய்விட்டேன். ஆனால், ஏனோ தெரியவில்லை, நேற்றிரவு இவர்கள் எல்லாரும் கிராமத்திற்கு என் வீடு தேடி வந்துவிட்டனர். அதுமட்டுமல்ல; நான் முன்பு கூறியதற்கு இணங்கி, இந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போட்டு என்னை, இங்கு அழைத்து வந்துவிட்டனர்" என்று கூறி முடித்தான்.

இதைக் கேட்டதும் முதலாளியின்கண்கள் உணர்ச்சிப் பெருக்கால், அன்பின் மிகுதியால், பளபளத்தன. 'அவசரப்பட்டு, வாசுவை எவ்வளவு தவறாக எடைபோட்டு விட்டேன்' என்று வருந்தியவர், மறுகணம் கையிலிருந்த கடிதத்தைத் தாறுமாறாகக் கிழித்துக் குப்பைக்கூடையில் போட்டார்.

---ஆம்! அந்த ஏழைத் தொழிலாளருடைய பெருந்தன்மையைவிட அவரது கௌரவம் சிறுத்தா போய் விட்டது? 'ஆலமரத்திற்கு ஒரு கிளை முரியலாம்-பாதகமில்லை. ஆனால், தென்னைக்கு இந்தக் கதி நேரலாமா? இத்தனை அருமை தெரிந்த நம்முடைய தொழிலாளருடைய மகிழ்ச்சிக்குப் பயன்படாத பெரும் சொத்து இருந்து என்ன பயன்?'--- இப்படி எண்ணியபடியே எழுந்த பசுபதி, வாசுவின் முதுகைத் தட்டி, "நீதான் பெரும் தவறு செய்துவிட்டாய்" என்று சிரித்தபடியே கூறினார். வாசு ஒரு கணம் ஒன்றும் புரியாமல் விழித் தான். "ஆம், உன்னுடைய சிநேகிதர்கள் கூறியதுதான் சரி. தொழில் என்றால், அதில் லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். லாபமில்லாமலே, நஷ்டமும் சில சமயம் ஏற்படும். இந்த இரண்டையும் ஏற்க வலிமையுள்ளவன் தான் முதலாளி" என்று சிரித்தபடியே கூறிக்கொண்டு ஒரு பெரும் தொகைக்கான செக்கைக் கிழித்து வாசுவின் கையில் கொடுத்தார்.

அதை வாங்கிப் பார்த்த வாசுவின் விழிகள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. ஆம்!–

அதில், எல்லோருக்கும் வழக்கத்தைவிட அதிகமான போனசுக்குப் பணம் இருந்தது. வாசுவின் இமைகள் நன்றிப் பெருக்கால் நனைந்தன.

இப்படித் தங்கமான ஒரு முதலாளியையும், அவரது தொழிலையும் போற்றி, உண்மையோடு உழைக்கத் தயாராக இருக்கும் விசுவாசமுள்ள தொழிலாளர்களையும் கொண்ட மேனகா மில்லை ஒரு ஸ்தாபனம் என்பதைவிடச் சிறப்பு மிக்கதொரு குடும்பம் என்றே அழைக்கலாம் அல்லவா?