பிள்ளையார் சிரித்தார்/மாயக்கண்ணன்

விக்கிமூலம் இலிருந்து



6
மாயக்கண்ணன்

டைரக்டர் சம்பூர்ணம் ஐந்தாவது முறையாகச் சோர்ந்துபோய்த் தமது நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார். தம்முடைய இத்தனை வருட அனுபவத்தில் ஒரு காட்சியைப் படமாக்க அவர் இத்தனை சிரமப்பட்டதே கிடையாது.

ஆம்! குழந்தை நட்சத்திரம் கலா அவரை அத்தனை பாடு படுத்திவிட்டது. பாடுபட்டும் பலன் இல்லையே! காலையிலிருந்து அதனுடன் டைரக்டர் பட்ட பாட்டைப் பார்த்துவிட்டு, சக நடிகர்கள், ஒளி, ஒலிப்பதிவாளர்கள், ஊழியர்கள் அனைவருமே வியந்தனர்.

அவர்களும் சளைக்காமல் டைரக்டருக்குத் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் அளித்து உதவினர்.

ஆனல், அவர்களுடைய உதவியெல்லாம் யாருக்கு வேண்டும்? நடிக்க வேண்டிய குழந்தை நடித்தால் அல் லவா மற்றவர்களுடைய பணி சிறக்கும்? குழந்தையுடன் துணைக்கு வந்த கலாவின் பாட்டியை டைரக்டர் ஒரு முறை அலுப்புடன் திரும்பிப் பார்த்தார். அந்தப் பார்வையின் வேகம் தாளாமல் பாட்டி பத்மாஸனி அம்மாள் டைரக்டரைச் சிறிது சாந்தப்படுத்த முயன்றார்.

"டைரக்டர் சார், கலா இந்த மாதிரி இதுவரை அடம் பண்ணினதே கிடையாது. இதுவரை எத்தனை படங்களில் நடித்து வெளுத்து வாங்கியிருக்கிறாள்! இன்று அவளுக்கு 'மூட்' இல்லையோ என்னவோ தெரியவில்லை. இன்னும் ஒருமுறை 'டிரை' பண்ணுங்கள், இல்லாவிட்டால் கலா எப்படியும் நாளைக்கு நன்றாக நடித்துவிடுவாள்" என்று கூறினாள்.

இதைக் கேட்டதும் டைரக்டருக்குக் கொஞ்சம் நஞ்சம் தணிந்திருந்த கோபமும் கிளறியெழுந்தது. ஆயினும் அவர் தம்முடைய நீண்ட காலத் தொழில் துறை அனுபவத்தினாலும், இயற்கையான பொறுமையினாலும் அதை அடக்கிக் கொண்டார்.

"குழந்தைக்கு 'மூட்' வர வேண்டுமாக்கும்! அதை எதிர்பார்த்து அத்தனை காரியங்களும் காத்திருக்கவேண்டும்; அவசியமானால் ஷூட்டிங்கையே ஒத்தி வைக்க வேண்டும் அல்லவா? ஹூம்...இன்னும் ஒரு முறை பார்க்கிறேன். ஒத்து வராவிட்டால் கலாவையே கான்சல் செய்துவிடுகிறேன்!" என்று ஒரு முடிவிற்கு வந்தார்.

டைரக்டர் சம்பூர்ணம் தமிழில் பல வெற்றிப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு ஏராளப் புகழும் பொருளும் ஈட்டியவர். உணர்ச்சி கொந்தளிக்கும் கட்டங்கள் அவரது படத்தில் சிறந்து விளங்கும். காட்சிகளை அப்படியே தத்ரூபமாக எடுக்க வேண்டும்; அமைய வேண் டும் என்பதில் பிடிவாதமும், அதிக அக்கறையும் காட்டுபவர்.

இப்போது, அவர் ‘தமது எட்டாவது குழந்தை' என்னும் படத்திற்காகவே, சில வெளிப்புறக் காட்சிகளுக்கென அந்த வளமான கிராமத்தைத் தேர்ந்தெடுத்தார்.

பேபி கலாவுக்குத்தான் எட்டாவது குழந்தையான கண்ணன் வேடம். ஆயர்பாடியில் ஆயர் குல மங்கையர்கள், தலையில் தயிர்க்குடத்துடன் வியாபாரத்திற்காக அருகிலுள்ள கிராமங்களுக்குப் புறப்படுகிறார்கள். மரங்கள் நிறைந்த பாதை வழியாக அவர்கள் சென்று கொண்டிருக்கும்போது, கண்ணன் மறைந்து இருந்து கற்களை அவர்கள் தயிர்க்குடத்தின் மீது வீசுகின்றான். பானை பொத்துக்கொண்டு தயிர் ஒழுகி, அவர்களை அபிஷேகம் செய்கிறது. கண்ணன் அதைப் பார்த்துவிட்டு எதிரில் வந்து கை கொட்டிச் சிரிக்கிறான். பிறகு, அவர்களை ஏமாற்றி ஓடுகிறான். இப்படி ஆரம்பிக்கிறது காட்சி.

இந்தக் காட்சிக்காகத்தான் கலாவுடன் டைரக்டர் சம்பூர்ணம் படாத பாடு பட்டார். ஆயர் குல மங்கையரும் மற்றவர்களும் சோர்ந்து போய்விட்டனர். ஒவ்வொரு முறையும், டைரக்டர் "ரெடி" என்று கூறி, அவர்கள் நடிக்க ஆரம்பித்ததும், கண்ணன் வேஷத்திலிருந்த கலா, கதைக்குச் சம்பந்தமில்லாத குறும்புகளிலே ஈடுபட்டிருந்தாள்; அத்துடன் டைரக்டரோ அவளது பாட்டியோ சொல்லிக் கொடுப்பதைக்கூட லட்சியம் செய்யவில்லை.

சம்பூர்ணம் மீண்டும் தம்மை உற்சாகப்படுத்திக் கொண்டு எழுந்தார். இறுதியாக ஒரு முறை பார்த்துவிடுவது என்று 'டேக்' கிற்கு எல்லோரையும் தயார் செய்துவிட்டார். ஆயர் குல மங்கையர்கள் ஒத்திகைப்படி ஒயிலாகக் காட்டுப்பாதையில் சுவாரஸ்யமாக சம்பாஷித்தவண்ணம் சென்றுகொண்டிருந்தனர். ஆனால், அப்போது மரத்தின் மறைவிலிருந்து பானைமீது கல்லெறிய வேண்டிய கண்ணனோ...?

கலா பழைய சண்டித்தனத்தையே தொடர்ந்து செய்தாள்; அழுதாள்; அடம் பிடித்தாள். டைரக்டர் அதட்டினார். அவ்வளவுதான்——

கையிலிருந்த கல்லைப் பாட்டிமீது வீசி எறிந்து விட்டு ஓட்டம் பிடித்துவிட்டாள்.

டைரக்டர் பொறுமையை இழந்தார். சிப்பந்திகள் கண்ணனைத் துரத்திக்கொண்டு ஓடினர். கலாவோ அவர்கள் கையில் அகப்படாமல் வளைந்தும் திரும்பியும் அவர்களுக்குப் போக்கு காட்டியபடியே அந்தக் கிராமமெல்லாம் ஓடிக்கொண்டிருந்தாள். ஆனால், துரத்திச் சென்றவர்கள் விடுவார்களா?

குறுக்கு வழியில் புகுந்து, எங்கோ பராக்குப் பார்த்துக்கொண்டு தெருமுனையில் நின்ற கண்ணனை 'லபக்' கென்று பிடித்துக் குண்டுக்கட்டாய்க் கொண்டுவந்து விட்டார்கள்.

ஆத்திரத்தோடு பேத்தியை அறைய வேண்டும் என்று கையை ஓங்கிக்கொண்டு வந்த பாட்டி பத்மாசனி அம்மாளை டைரக்டர் தடுத்து, "நீங்கள் அவள் கண்ணிலேயே படக்கூடாது. எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இன்று அவளை நான் விடுவதாக இல்லை." என்று அனுப்பிவிட்டார்.

பிறகு, குழந்தை கண்ணன் அருகில் சிரித்தபடியே வந்து நின்றார். சட்டென டைரக்டர் தம் ‘பாண்' டினுள் கையை விட்டார். சாக்கலேட்டும் டாபியும் கைநிறையக் கொடுத்தார்.

குழந்தையும் ஆவலோடு அதைப் பிரித்துப் பிரித்து ஒவ்வொன்றாகத் தின்று தீர்த்து ஜிகினாப் பேப்பர்களை பறக்கவிட்டது.

பிறகு, டைரக்டர் மெதுவாகக் குழந்தையின் முதுகைத் தட்டிக் கொடுத்து, அது செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் நிதானமாக விளக்கினார். குழந்தை எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டது. டைரக்டரின் முகம் மலர்ந்தது. அதன் எதிரொலி எல்லோர் முகத்திலும் பிரதிபலித்தது.

தெருவெல்லாம் ஓடிப் போய்க் கலைந்திருந்த ‘மேக்அப்பைச்' சரிசெய்து, இடையில் ஒரு புல்லாங்குழலையும் செருகிச் சட்டென்று அனுப்பி வைத்தார். மேக்கப் நிபுணர். கூற வேண்டிய வசனத்தையெல்லாம் டைரக்டர் ஒரு முறை சொல்லிக் கொடுத்தார். குழந்தை "பளிச்" சென்று கூறியது. சம்பூர்ணத்தின் மனம் களிப்பில் மூழ்கியது. வாய் விசிலை ஊதியது.

எல்லோரும் 'டேக்' குக்கு 'ரெடி!' கண்ணனும் கையில் கூழாங்கற்களுடன் தயாராய் மரத்தின் பின்னால் நின்றுகொண்டிருந்தான். டைரக்டர் 'ரெடி' என்று குழந்தையைப் பார்த்து குஷிப்படுத்துவதற்காகக் கேட்டார். குழந்தை கன்னம் குழியச் சிரித்துக்கொண்டே. மயில் பீலி அசையத் தலையை ஆட்டியது. அந்த அழகில் டைரக்டர் பூர்த்துப் போனார்.

குழந்தையின் முகக்களையும் வேஷப் பொருத்தமும் சிரிக்கையில் பளிச்சிட்ட முத்துப்பற்களும், அவரைப் பரவசத்தில் ஆழ்த்தின. கண்ணனையே மரத்திற்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் போது பார்ப்பது போலிருந்தது. "இப்படியே குழந்தை சீன் முழுவதும் நடித்து முடித்துவிட்டால், எவ்வளவு நன்றாயிருக்கும்?"

எண்ணங்கள் இதயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் போதே சட்டென்று பத்மாசனி அம்மாள் கூறிய 'மூட்' ஞாபகத்திற்கு வந்தது. மறு கணம் டைரக்டர் பரபரப்புடன் விசிலை ஊதினார்.

'ஷாட்' ஆரம்பமாயிற்று.

ஆயர்குல மங்கையர்கள் தலையில் குடத்துடன், வசனம் பேசியபடி ஒய்யார நடை போட்டுக் சென்று கொண்டிருந்தனர்.

மெல்லிய பின்னணி இழையோடிக்கொண்டிருந்ததது.

மறு கணம்? “டொக்......டொக்....."

தயாராகவே காத்திருந்த கண்ணன், கையிலிருந்த கற்களை வீசி நிறுத்தினான். விளைவு...?

பானைகளில் பொத்தல். ஆயர் குல மங்கையருக்குத் தயிர் அபிஷேகம்.

இது கண்ணனின் வேலைதான் என்று அவர்களுக்குப் புரிந்தது. அதை அவர்களது முக பாவம் காட்டியது.. ஆத்திரத்துடன் பானைகளைக் கீழே இறக்கி வைத்தனர். ஆளுக்கொரு மூலையாய்த் தேடுகையில் எதிரில் வந்து இதோ, இங்கே என்று கூறினான். எட்டிப் பிடிக்குமுன் கைகொட்டிச் சிரித்து ஓடிய மாயவனைத் தேடும் பணியில் முனைந்தனர். ஆனால், தேவகி மைந்தனா அவர்கள் பிடியியில் சிக்குபவன்? எல்லோரையும் ஏமாற்றிவிட்டுத் வந்து பானைகள் அருகில் வந்தான். முழங்கை வரை பானையில் கையை விட்டு, இரு கடைவாயும் வழிய வெண்ணெயை வாரி வாரி உண்டான். அந்த இன்பத்தில் திளைத்திருக்கையில் ஆயர் குல மங்கையர் கண்ணனைப் பிடித்துவிட்டனர்.

"வா, இப்பொழுது உன்னை இப்படியே யசோதை அம்மாவிடம் அழைத்துப் போய் என்ன செய்கிறோம், பார்! எத்தனை தரம் இப்படி நீ ஒவ்வொரு மாதிரி விஷமம் செய்து எங்களுக்குத் திரும்பத் திரும்பத் தொல்லை தந்திருக்கிறாய்? இவற்றையெல்லாம் நாங்கள் விற்றுக் காசாக்கி, வயிறு பிழைக்க வேண்டியவர்கள் அல்லவா?"

"வீட்டிற்கு வந்து ஒழுங்காகக் கேட்டால் ஒரு பந்து வெண்ணெய் கொடுத்துத் தொலைத்திருக்க மாட்டோமா? இப்போது எல்லாம் போயிற்றே!"

இப்படி ஆளுக்கொரு பக்கம் கேள்விகளை மாறி மாறிக் கேட்டுத் துளைத்தனர்.

உடனே, கண்ணன் அவர்களைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் பளிச்சென்று கூறினான்.

"கண்டிப்பாக மாட்டீர்கள். நீங்கள் இப்படித் தொலைப்பீர்களே தவிர, மனசாரக் கொடுத்துத் தொலைக்க மாட்டீர்கள்."

"ஆ..கா, அப்படியா? அதற்காக இப்படித்தான் எங்கள் பானையை உடைத்துத் தொழிலைப் பாழ் செய்வதா? வா உன் அம்மாவிடம், இந்த வாயைப் பார்த்த பிறகாவது உன் அம்மாவின் வாய் மூடட்டும்" என்று கண்ணனை எல்லோருமாகச் சேர்த்துக் கட்டிப் பிடித்துக் கரகரவென்று இழுத்தனர்.

வேறு வழியின்றி வசமாக மாட்டிக்கொண்ட கண்ணன், சட்டென்று தன்னுடைய பாணியை மாற்றிக் கொள்கிறான். "சுஜாதா, சுகந்தி, பிரியமாலா" என ஒவ்வொருவர் பெயரையும் செல்லமாக அழைத்துத் தன்னை விட்டு விடும்படி வேண்டினான். 'அம்மாவிடம் அழைத்துப் போனால் கொன்றுவிடுவாள்' என்று கூறிக் கெஞ்சினான்.

"இந்தத் தடவை நீ எத்தனை அழுது புரண்டாலும் நடவாது. உன்னை இந்தக் கோலத்தோடு கொண்டு போய்க் காட்டினால் தான் உன் அம்மா நம்புவாள்" என்று எல்லோருமாகச் சேர்ந்து பிடிவாதமாக இழுத்துச் சென்றனர்.

'ஓகோ....அப்படியா...' என்று எண்ணிய கண்ணன், சட்டென்று இடையிலிருந்த புல்லாங்குழலை எடுத்து இதழில் பொருத்தினான்.

மறுகணம்...?

குழலோசை தேவகானமாக ஒலித்தது. மரம், செடி, கொடி ஆநிரைகளே அந்த இன்னிசையில் செயலிழந்தன வென்றால் ஆயர்குல மங்கையர்கள் மயங்குவதா அதிசயம்? அனைவரும் அந்த இனிய நாதத்தில் மெய்மமறந்து சிலைகள் போல் நின்றுவிட்டனர். மெல்லப் பிடி நழுவியது.

மறுகணம்.......?

கண்ணன், கை நழுவிச் சென்றுவிட்டான். வேணு கானம் மட்டும் எங்கிருந்தோ அவர்கள் செவிகளில் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. ஏமாந்தது அறியாமல் ரசித்துக்கொண்டிருந்தனர், ஆயர் குல மங்கையர்.

"கட்....கட்...." என்று டைரக்டர், மகிழ்ச்சி பொங்க உரக்கக் கத்தினார் 'டேக்' பிரமாதமாக அமைந்துவிட்டது. குழந்தை கண்ணனை வாரி அணைத்துக் கொஞ்சாதவர் பாக்கி இல்லை. டைரக்டர் குழந்தையை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சினார். 'ஐஸ் கிரீமும்' 'புரூட்சாலட்டும்' எதிரில் கொண்டுவந்து வைக்கப்பட்டன. கண்ணனின் வாயில் சம்பூர்ணமே ஐஸ் கிரீமை ஸ்பூனால் ஊட்டினார்.

ஒளிப்பதிவாளர், காட்சிகள் பிரமாதமாகப் படமாக்கப்பட்டுவிட்டனவென்றும், பேபி கலா வெளுத்து வாங்கிவிட்டதாகவும் வானளாவப் புகழ்ந்தார்.

"சும்மாவா இத்தனை பேரும் புகழும் வந்திருக்கின்றன? அவற்றையெல்லாம் தெரிந்துகொண்டுதான் கலாவும் நம்மைக் கொஞ்ச நேரம் ஆட்டி வைத்தாள்" என்று பெருமையுடன் கூறிக்கொண்டே பத்மாசனி அம்மாளும் அங்கு வந்து நின்றாள்.

"எத்தனை அடம் பண்ணினால் என்ன? எப்படியோ குழந்தை இறுதியில் பிரமாதமாக நடித்துவிட்டாள். பட்ட பாடெல்லாம் மறந்து போய்விட்டது" என்று குழந்தையின் உச்சந்தலையில் ஒரு முத்தம் கொடுத்தார் டைரக்டர். மறு விநாடி அவரது முகம் சுளித்தது. “இது என்ன....இது.....? வேப்பெண்ணெய் வாசனை..... வீசுகிறது....?"

மயில்பீலிகளை விலக்கி மறுபடியும் மோந்தார் அந்த வாசனையை.

'சீ..சீ..என்ன தைலமிது? இந்த வாடை தாளாமல்தான் குழந்தை இத்தனை அடம் பண்ணியதோ என்னவோ...?' என்று மேக் - அப் நிபுணரைப்பற்றிக் குறைவாக எண்ணிக்கொண்டிருக்கும் போதே, முகாமுக்கு வெளியிலிருந்து யாரோ உரக்க அழைக்கிற குரல் கேட்டது. எல்லோரும் விரைந்து சென்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி....? யாரோ ஒரு கிராமத்து ஸ்திரீயின் கையில் மற்றொரு கண்ணன்....! ஆனால், மேக்-அப் கலைக்கப்பட்ட கண்ணன்——கொண்டையும் மயில் பீலியும் அவிழ்க்கப்பட்ட நிலையில் காட்சியளித்த கண்ணன்.

பத்மாசனி அம்மாளைப் பார்த்ததும், அத்தனை நேரம் அந்தக் கிராமத்து ஸ்திரீயின் பிடியிலிருந்த கண்ணன் கையைச் சட்டென்று உதறிக்கொண்டு, 'பாட்டீ' என்று ஓடிவந்து கட்டிக்கொண்டது.

பார்த்தால் குட்டி நட்சத்திரம் கலா...!

அனைவருடைய கண்களும் ஆச்சரியத்தினால் அகல விரிந்தன. ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. டைரக்டரின் அருகிலிருக்கும் கண்ணனைக் கண்டதும், "குஞ்சம்மா" என்று அழைத்தவண்ணம் அந்தக் கிராமத்து ஸ்திரீ ஓடிச் சென்று, வாரி அணைத்து, வேப்பெண்ணெய் தடவிய உச்சியில் முத்தமாரி பொழிந்தாள்.

அதன் பிறகு, அந்த ஸ்திரீ கூறிய விஷயங்களைக் கேட்ட பிறகுதான் எல்லோருக்குமே எப்படிக் குஞ்சம்மா ‘கலா'வாக மாறினாள்; அல்லது கண்ணனாகவே தக்க சமயத்தில் வந்து தங்களையெல்லாம் ஆட்கொண்டு தங்கள் தொழிலையும் காப்பாற்றினாள் என்பது புரிந்தது.

"ஐயா, இதுதான் என் பெண் குஞ்சம்மா. நேற்று தெருக்கூத்து பார்த்துவிட்டு வந்ததிலிருந்து, அதிலே வருகிற கிருஷ்ணன் மாதிரி தனக்கும் வேஷம் போட வேண்டும் என்று அடம் பிடித்தாள். இவள் எனக்குச் செல்லப்பெண். இவளுடைய அப்பாவும் இப்படித்தான். அவருக்கு நாடகப்பித்து. எங்கே போனாலும் இவளையும் அழைத்துக்கொண்டு செல்லுவார். கிராமத்தில் அவர் இல்லாத பெரிய தெருக்கூத்தே கிடையாது.

"கம்சன் வேஷத்தில் தோன்றி, கதையை எடுத்துச் சுழற்றினால் கிராமமே நடுங்கும். வேஷத்தைக் கலைத்து விட்டு வந்தால் கிராமமே புகழும். அந்த திருஷ்டிதானோ என்னவோ,குஞ்சம்மாவையும் என்னையும் அனாதையாக்கி விட்டு, அவரை மட்டும் தெய்வம் கொண்டுபோய்விட்டது. அதிலிருந்து இது என்ன சொன்னாலும் நான் மறுக்கிறதில்லை. வேஷத்தைப் போட்டுவிட்டு அரிதாரத்தைப் பூச, வந்து பார்த்தேன் பெண்ணைக் காணோம். ‘குஞ்சம்மா குஞ்சம்மா' என்று கத்தினேன்; பதில் இல்லை. அக்கம் பக்கம் எல்லாம் தேடினேன். தெரு முனையில் பார்த்தேன். இந்தப் பெண் நின்றுகொண்டிருந்தாள். அசப்பில் குஞ்சம்மாள்தான் என்று குடிசைக்குள் அழைத்துச் சென்றுவிட்டேன். அரிதாரத்தைப் பூசக் கொண்டு போனேன்; கையைத் தட்டினாள். வேஷத்தைக் கலைக்கலாம் என்று தலையைப் பிரித்தால் என் பெண்ணின் நீண்ட கூந்தலைக் காணோம்; டோப்பா தலையாக இருந்தது.

"முகத்தைப் பார்த்தேன்; குரலைக் கேட்டேன். அதே அழகு, அதே சிவப்பு; ஆனால், என் பெண் எங்கே? இவள் யார் என்று என்னைப் பயம் பிடித்துக்கொண்டது.

"நீ யார்?" என்றேன். பதிலுக்கு "நீ யார்?" என்று அதே கேள்வியைத் திரும்ப என்னைக் கேட்டாள். பிறகு, என்னை "ஷூட்டிங்குக்கு அழைத்துப்போ ...." என்றாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு வழியில் யாரோ கூறினார்கள், 'சினிமாக் கம்பெனிக்காரர்கள் நம் கிராமத்துக்கு வந்து படம் பிடிக்கிறாங்க' என்று.

"இதுதான் கதை; அதோ உங்கள் குழந்தை. நான் குஞ்சம்மாவை அழைத்துப் போகிறேன்" என்று அந்த ஸ்திரீ கூறி நிறுத்தினாள்.

உடனே டைரக்டர் பளிச்சென்று "அது தான் முடியாது. இனிமேல் குஞ்சம்மாள் உங்கள் பெண் அல்ல!" என்றார். "என்ன.....?" ஸ்திரீயின் விழிகள் வியப்பால் விரிந்தன.

"ஆமாம்; உங்கள் மகளிடம் கலையும் நடிப்பும் கொஞ்சி விளையாடுகின்றன. அவை அவளிடம் இயற்கையிலேயே அமைந்துவிட்டன. பெரிய கலைஞருடைய பெண் என்பதை நிரூபித்துவிட்டாள். இனி இவள் கலைக்குத்தான் சொந்தம். எப்படியோ இவள் மட்டும் இங்கு வந்து சேராவிட்டால் இன்று எங்கள் படமே முடிந்திருக்காது! இந்தாருங்கள், உங்கள் பெண்ணினுடைய இன்றைய நடிப்பிற்காக" என்று கூறி, ஆயிரம் ரூபாயைத் தூக்கி அந்த ஸ்திரீயிடம் கொடுத்தார்.

"பிறகு நான் இவளைப் பட்டணத்துக்கு அழைத்துப் போய், இன்னும் நிறையப் படங்களில் நடிக்க வைக்கப் போகிறேன். நீங்களும் வந்துவிடுங்கள். இனிமேல் உங்கள் குடும்பம் இவளால் பிரகாசமடையும், மறுக்காதீர்கள்!" என்று கூறினார் டைரக்டர்.

அந்த ஸ்திரீ மறுக்கவில்லை.

ஆம். ஏன் மறுக்க வேண்டும்? கண்ணனது லீலைகளை அறிய வல்லவர் யார்?