புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்/ஆர்தர் ரெம்போ

விக்கிமூலம் இலிருந்து

என்னால் காதலைச்
சாளரத்துக்கு வெளியே
தூக்கி எறிய முடியாது.

 



ஆர்தர் ரெம்போ
(1854–1891)


ரெம்போ பிரெஞ்சு நாட்டு ஞானசம்பந்தன் பிஞ்சுப்பருவத்தில் எழுதத் தொடங்கித் தனது 19 ஆம் வயதில்-கவிதைத் தொழிலை முடித்துக் கொண்டவன். ஐந்தாண்டுக் காலத்தில் அவன் எழுதிய சொற்பக் கவிதைகள் ஐரோப்பியக் கவிதைப் போக்கையே மாற்றியமைக்கும் ஆற்றல் பெற்றவையாக விளங்கின. அவன் கவிதை வாழ்க்கை கண நேரத்தில் மின்னலைப் போன்றது; சீறும் புயலைப் போன்றது. கோடை மழையைப் போல் திடீரென்று கொட்டி விட்டு ஓய்ந்து போனவன் ரெம்போ இந்த வாமன வசந்தத்தைப் பாராட்டாத மேலை நாட்டு இலக்கியவாதி யாருமில்லை.

பிரெஞ்சு நாட்டின் வட பகுதியில் சார்லிவில் என்ற சிறிய நகரில் 1954-இல் பிறந்தான் ரெம்போ. இவன் தந்தை ஃப்ரெட்ரிக் ரெம்போ பிரெஞ்சுப் படையில் ‘கேப்டன்’ பதவி வகித்தவர். அவர் இராணுவப் பணி பெரும்பாலும் அல்ஜீரியாவில் கழிந்தது. ஃப்ரெட்ரிக் ரெம்போ அரபு மொழியை நன்கு கற்றவர். குரானை பிரெஞ்சில் மொழி பெயர்த்தவர்.

கவிஞன் ரெம்போவின் தாய், கண்டிப்பும் அடங்காப் பிடாரித் தனமும் மிக்கவள். அவளோடு வாழத் தாக்குப் பிடிக்க முடியாமல், கவிஞன் ரெம்போ ஆறுவயதுச் சிறுவனாக இருக்கும் போதே, அவன் தந்தை ஃப்ரெட்ரிக் வீட்டை விட்டு ஓடி விட்டார். அதன் பிறகு ரெம்போவோ, அவன் தாயோ அவரை மீண்டும் சந்திக்கவே இல்லை.

ரெம்போ பத்து வயதுப் பள்ளிச் சிறுவனாக இருக்கும் போதே அதி நுட்பமும், பிடிவாதமும், புதுமை விருப்பமும் போக்கிரித்தனமும் உடையவனாகக் காணப்பட்டான். பன்னிரண்டாம் வயதில் முதன் முதலாக அவன் எழுதிய இலத்தீன் கவிதை அவனுக்குப் பள்ளிப் பரிசைப் பெற்றுக் கொடுத்தது. அது இடையர் வாழ்க்கையைக் கூறும் நாட்டுப் புறப்பாடல்[1], பதினான்காம் வயதில் அவன் எழுதிய ‘ஏழுவயதுக்கவிஞன்’ (Seven-year-old poet) என்ற கவிதையில் தன் அறிவு நுட்பத்தைத் தானே பாராட்டி எழுதியிருக்கிறான். எதிர் காலத்தில் அவன் நிகழ்த்தவிருக்கும் பிரமிப்பூட்டும் சாதனைகளுக்கு இக் கவிதைகள் கட்டியங் கூறுவதோடு, அவன் ஒரு நவீன ஆர்ஃபிஸ்[2] என்பதையும் நிலை நாட்டுகின்றன.

இயற்கையிலேயே விடுதலை வேட்கையும் பிடிவாதமும் கொண்ட ரெம்போவுக்குத் தாயின் கண்டிப்பும் அடக்கு முறையும் அடியோடு பிடிக்கவில்லை, பழமையில் ஊறிப் போன நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையில் அவனுக்கு வெறுப்பும் சலிப்பும் ஏற்பட்டன. அடிக்கடி தாயிடம் சொல்லாமல் ஊரை விட்டு ஓடுவதும், திரும்புவதுமாக இருந்தான். இந்தச் சமயத்தில் தான் கவிதை வெறி அவனைப் பற்றிக் கொண்டது.

1871 ஆம் ஆண்டு தன் பதினேழாம் வயதில் பாரிசுக்கு ஓடிய போது, அங்கிருந்த புகழ்பெற்ற கவிஞராகிய பால்வெர்லேனைச் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு ஏற்பட்டது. ரெம்போ வெர்லேனின் குடும்பத்தில் ஒருவனாகவே இடம் பெற்றான். ஆனால் வெர்லேனின் தாயும் மனைவியும் ரெம்போவை வெறுத்தனர். அவனுடைய விசித்திரமான பேச்சும், கொள்கையும், ஒழுங்கீனமான நடை முறைகளும், படுக்கையில் இருந்தபடியே புகைபிடிக்கும் பழக்கமும் அவர்களுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. இதனால் வெர்லேனின் தம்பதியாரிடையே மணமுறிவு ஏற்பட்டது. ரெம்போவுக்கும் வெர்லேனுக்கும் இடையில் ஏற்பட்ட தகாத பாலுறவுப் பழக்கம், கடைசியில் துப்பாக்கிச் சண்டையில் முடிந்தது. 1974 ஆம் ஆண்டில் இவர்கள் இடையில் ஏற்பட்ட இந்த உறவு முறிவு ரெம்போவின் கவிதை வாழ்க்கைக்கு அடியோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. வெர்லேனுடைய கவிதைப் பணியிலும் சரிவு ஏற்பட்டது.

தனது பத்தொன்பதாம் வயதில் கவிதை எழுதுவதை விட்டுவிட்டு, ஐரோப்பாவிலும் மத்தியக் கிழக்கு நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் சுற்றியலைந்தான். அப்போது பிழைப்புக்காக அவன் மேற்கொண்ட பணிகள் பல. கொஞ்சநாள் இசைப்பயிற்சியும், பிறமொழிப் பயிற்சியும் மேற்கொண்டான்; டச்சுக் காலனிப் படையில் சேர்ந்து சிலகாலம் பணி புரிந்தான். சைப்ரசில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்தான். கடைசியில் அபிசீனியாவில் ‘அராரே’ என்ற இடத்தில் நிலையாகத் தங்கி காஃபி, கள்ளத்துப்பாக்கி, யானைத் தந்தம் முதலியவற்றை விற்பனை செய்ததோடு, நீக்ரோ அடிமைகளையும் பிரெஞ்சு வணிகர்களுக்கு விற்பனை செய்தான். இங்கு வாழ்ந்த சமயத்தில் இவன் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

1891-ஆம் ஆண்டில் முழங்காலில் புற்றுநோய் ஏற்பட்டு, அதற்கு மருத்துவம் செய்து கொள்வதற்காக பிரான்சு திரும்பினான். மார்சேல்ஸ் மருத்துவமனையொன்றில் கால் துண்டிக்கப்பட்டு இறந்தான். அப்போது-அவனுக்கு வயது முப்பத்தேழு. தங்களிடையே உறவு முறிந்த நிலையிலும், வெர்லேன் ரெம்போவினுடைய கவிதைகளைத் திரட்டி ஒழுங்கு செய்தார். ரெம்போ இறப்பதற்கு ஓராண்டுக்குமுன், வெர்லேன் அராரேவுக்குக் கடிதம் எழுதி, ஏதாவது புதிய கவிதைகள் எழுதியிருந்தால் அனுப்பிவைக்கும்படி ரெம்போவைக் கேட்டுக் கொண்டார். அதற்கு ரெம்போ, அந்தக் குப்பையை நான் தீண்டுவது கூட இல்லை’ என்று பதில் எழுதியிருந்தான். ரெம்போ இறந்தபிறகே அவன் கவிதைகள் முறையாகத் தொகுத்து வெளியிடப்பட்டன. அவன் வாழ்கையைப் பற்றியும், கவிதைப் பணிபற்றியும் பல கற்பனைகளும் கட்டுக் கதைகளும் பரவலாக வழங்குகின்றன.

ஒரு முறை பிரெஞ்சு நாட்டின் பெருங் கவிஞரும் நாவலாசிரியருமான விக்தர் ஹ்யூகோ ரெம்போவைக் ‘குழந்தை ஷேக்ஸ்பியர்’ என்று குறிப்பிட்டதாக அவனிடம் கூறிய பொழுது ‘எனக்கு இணையாக யாரையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது’ என்று பெருமிதமாகச் சொன்னானாம்.

ரெம்போ தனது இறப்புக்குப் பிறகு, தனது கவிதைகளோடு நிறையக் கடிதங்களையும் குறிப்புக்களையும் விட்டுச் சென்றிருக்கிறான். என்றாலும் மேலை நாட்டு இலக்கியவாதிகளுக்கு இவன் பெரிய புதிராகவே விளங்குகிறான். ரெம்போவின் சார்லிவில் நகரில், அவ்வூர் மக்கள் அவனுக்குச் சிலையெடுத்துச் சிறப்பித்திருக்கின்றனர்.

ரெம்போவுக்குச் சற்று முன்பு வாழ்ந்த கவிஞர் போதலேர், இவனுக்கு வாழ்க்கைத் துறையிலும், இலக்கியத் துறையிலும் முன்னோடி என்று சொல்லலாம். வாழ்க்கையைக் கட்டுப்பாடின்றி விருப்பம்போல் சுவைத்துச் ‘சிறப்புக் கெட்டவர்’ என்ற பெயரைத் தாமே ஏற்றுக் கொண்ட பிரெஞ்சு அருணகிரி போதலேர். ரெம்போ அவரை அப்படியே பின்பற்றினார். தாயின் இரக்கமற்ற அடக்குமுறையும், கட்டுப்பாடற்ற இளமையும், பிடிவாதமும் போக்கிரித்தனமும் பாலுறவு வக்கிரமும் ரெம்போவின் படைப்புக்களில் பிரதிபலிக்கக் காணலாம்.

போதலேரின் மாநகரக் கொள்கையையும் ரெம்போ அப்படியே ஏற்றுக் கொண்டான். தனது நண்பர் வெர்லேனுடன் இலண்டன், பிரஸ்ஸல்ஸ், பாரிசு நகர வீதிகளில் சுற்றித்திரிந்தான். சாக்கடை யோரத்திலும், மதுப்புரைகளிலும் விபச்சார விடுதிகளிலும் இரவைக் கழித்தான். மாநகரங்களின் இருட்டு வாழ்க்கை அவனுக்குப் பழகிப்போன ஒன்று. நீலவானிலும், குளிர் சோலையிலும், அருவியிலும், சிலிர்க்கும் தென்றலிலும், சிரிக்கும் பூக்களிலும் பொதுவாகக் கவிஞர்கள் உள்ளத்தைப் பறிகொடுத்துக் கவிதைகள் எழுதுவது வழக்கம். ஆனால் மனித வாழ்வின் உயிர்த்துடிப்பை நகர வாழ்க்கையின் அவலங்களின் நடுவில் ரெம்போ கண்டான். நகரின் அழுகல் அவனுக்குக் கவிதை நாகரிகமாகிவிட்டது. நகரங்களின் இயற்கைக்கு மாறான நடைமுறை, அமைதியின்மை, சுறுசுறுப்பான இரவு வாழ்க்கை, சேரிகளின் இழிந்த நிலை, தொழிற் சாலைகளின் ஓசை, புகை படிந்த சுற்றுச் சூழல் யாவும் அவன் கவிதையின் கருப்பொருள்களாக இடம் பெற்றன.

பிள்ளைப் பருவத்திலும் விடலைப் பருவத்திலும் தாயின் அடக்கு முறைக்கு ஆட்பட்டு வருந்திய போது அவனையும் அறியாமல் அவன் அடிமனத்தில் பெண்களின் மீது ஒரு வெறுப்புணர்ச்சி படிந்திருந்தது. முதன் முதலில் வீட்டை விட்டு ஓடியபோது பெண்மையைப் பற்றி ஒரு வியப்பார்வமும், இனம்புரியாத குறுகுறுப்பும் அவனுள்ளத்தில் குடி கொண்டிருந்தன. பெண்கள் கூட்டத்தில் நுழையும் போது புறச்சமய உலகத்தில் தேவதைகளுக்கு ஒப்பாக நுழையும் வீரனாகத் தன்னைக் கற்பனை செய்து கொண்டான். ஆனால் அப்போது அவன் ஆர்வத்தோடு சந்தித்த பெண்கள் முரண்டு பிடிப்பவர்களாகவே அவனுக்கு வாய்த்தனர். அவர்கள் சந்திப்பால் ஏற்பட்ட அனுபவங்களைச் சூரியனும் தசையும் (Sun and Flesh) கேலி (The Tease) பச்சை நடனச் சாலையில் (At the Green Cabaret) அலைச்சல் (Wandering) நினா என்ன பதிலிறுத்தாள் (What Nina Answered) ஆகிய கவிதைகளில் பதிவு செய்கிறான்.

இரண்டாவது முறை வீட்டை விட்டுப் பாரிசுக்கு ஓடியபோது பிரெஞ்சுப் புரட்சி முடிந்து கம்யூன்களின் ஆட்சி அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவ்வாட்சியால் பாரிசில் ஏற்பட்ட குழப்பமும், கொலையும், பட்டினியும் ரெம்போவின் உள்ளத்தில் ஒரு வறட்சியையும் நம்பிக்கையின்மையையும் தோற்றுவித்தன. மக்களாட்சியின் அடிப்படையில் தோன்றும் எந்த அமைப்பையும் அவன் வெறுத்தான். தனிமையும் அவநம்பிக்கையும் அவனுள்ளத்தில் ஒரு வகை அராஜகத்தத்துவத்தைத் தோற்றுவித்தன. பாரிசு நகரமெங்கும் சாவையும் கண்ணீரையுமே சந்தித்தான். வழியில் இறந்து கிடந்த ஒரு படைவீரனின் பிணத்தைப் பார்த்து உள்ளம் கசிந்தது. சமவெளியில் தூங்குபவன் (The Sleeper and The Valley) என்ற பாடலை எழுதினான்.

1871-இல் மூன்றாம் முறை வீட்டை விட்டு ஓடியபோது மிகையான காதற் களியாட்டத்தில் மூழ்கியதால் பெண்மையின் மீது சலிப்பும் விரக்தியும் அவனுக்கு ஏற்பட்டது. காத்திருப்பவர்கள் (Sitters) என் சிறிய காதலிகள் (My Little Loveiies) அனத் யோ மென் ரதி (Wenus Anadyomene) என்ற கவிதைகளில் பெண்கள் மீது கொண்ட வெறுப்பைப் பதிவு செய்வதோடு, அவர்கள் போலித்தனத்தையும், சாகசத்தையும் தோலுரித்துக் காட்டுகிறான். காதலுக்குப் புதுப் பொருள் கண்டறிய வேண்டும் என்று கூறுகிறான். அப்போதுதான் வெர்லேனின் புதிய உறவு அவனுக்கு ஏற்படுகிறது.

முதிரிளமைப் பருவத்தில் ஏற்படக் கூடிய முழுமை பெறாத பாலுணர்வு விருப்பங்களும் அச்சங்களும் முதன்முதலாக ரெம்போவின் கவிதைகளில் மிக நுணுக்கமாக இலக்கிய வடிவம் பெற்றன. ஒரு பாடல்:

அவன்
தனது ஏழாவது வயதில்
பாலைகளிலும்
வனாந்தரங்களிலும்
இளமரக் காடுகளிலும்
கடற்கரைகளிலும்
சுதந்தரமாகச் சுற்றித்திரியும்
உயிர்களைப்பற்றிய
இன்பக்கற்பனைகளில் ஈடுபட்டுக்
கவிதைகள் வடித்தான்.

வண்ணப்பட வார இதழ்கள்
அவன் கற்பனையைத்
துண்டிவிட்டன.
அவற்றுள் வெளியாகியிருந்த
ஸ்பெயின் இத்தாலியப்
பெண்களின் அணிவகுப்பு
அவனை-
நாணப் படுத்தியது.

சீட்டித்துணி ஆடையணிந்து
அடுத்தவீட்டு
எட்டு வயது முரட்டுச்சிறுமி
ஓடிவந்து-
அவன் மீது தாவி விழுந்தாள்
அவனை-
ஓரங்கட்டினாள்,
அவன்மீது
சவாரி செய்தாள்,
தொங்கும் கூந்தலை
அசைத்துச் சிரித்தாள்,

அவளடியில்
அகப்பட்டுக் கொண்டஅவன்

[ஏழுவயதுக் கவிஞன்]

‘சிறப்புக் கெட்டவர்’ என்று பெயரெடுத்தாலும் கிறித்தவரான போதலேர், தன் சம்யத்தையோ, ஆன்மாவையோ, முக்திப் பெருவாழ்வையோ தியாகம்செய்யத் தயாராக இல்லை, ஆனால், ‘ரெம்போ தனிமனித ஆளுமை, ஆன்மா, முக்தியாவும் காலத்திற் கொவ்வாத தற்பெருமைகள்’ என்று சொன்னான். ஒரு பிடிவாதமான உணர்வோடும், துறவு மனப்பான்மையோடும் லெளகீக ஆன்மீகப் பெருமைகளை அவன் வெறுத்தொதுக்கினான். கடைசி மூச்சு இருக்கும் வரை மனித நேர்மைக்கு மதிப்புக் கொடுக்காத, கட்டுப்பாடற்ற வாழ்க்கையே வாழ்ந்தான்.

என்றாலும், ‘ஏமாற்றப்பட்ட இதயம்’ (The Cheated Heart) என்ற கவிதையில் ‘எனது மீட்சிக்கு என்ன வழி?’ என்ற பாவியின் வினாவை அவனே எழுப்பிக் கொள்கிறான். கிறித்தவ சமயத்தை ஏற்றுக் கொள்ளாத அவனுக்குச் சமயத்தீர்வு எப்படிக் கிடைக்கும்? எனவே அவன், தானே தன்னையொரு ஞானியாக்கிக் கொண்டு, தனது பாவ விமோசனத்திற்கான வழியை 15-5-1871-இல் தனது நண்பன் பால்டெம்னிக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:

ஒரு கவிஞனாக மாற விரும்பும் மனிதன் தன்னை முழுமையாக ஆய்ந்து அறிகிறான்; தன் ஆன்மாவைத் தேடி அதைக் கண்காணிக்கிறான்; பின்னர் சோதித்துப் பார்க்கிறான்; கற்றுக் கொள்கிறான். ஆன்மாவை உணர்ந்து கொண்டபின் அதைப் பண்படுத்துகிறான்”

இதுதான் ரெம்போ தன் மீட்சிக்கும் முக்திக்கும் வகுத்துக் கொண்டதிட்டம், என்றாலும் பிரஸ்ஸல்ஸ் மருத்துவமனையில் சாவுக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது கத்தோலிக்க சமயத்தை ஏற்றுக் கொண்டு பாவ மன்னிப்பு பெறுகிறான்.

ரெம்போவின் கவிதைகள் ‘நரகத்தில் ஒரு பருவம், [3](A Season In Hell) வெளிசங்கள் (Illuminations) என்ற இரண்டு தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. நரகத்தில் ஒரு பருவத்தைத் ‘தன் படைப்புக்களின் வெற்றி’ என்று தன் நண்பன் பால் டெர்னிக்கு எழுதிய கடிதத்தில் அவன் குறிப்பிடுகிறான். 1873 ஆம் ஆண்டுக் கோடையில் இந்நூல் எழுதப்பட்டு, 1875 ஆம் ஆண்டில் அவனுடைய சொந்தச் செலவில் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலை அச்சில் காண அவன் மிகவும் விரும்பினான். கவிதைத் தொழிலைக் கைவிட்டுவிட்டுப் பிழைப்புக்காக மத்தியக் கிழக்கு நாடுகளில் அவன் சுற்றித் திரிந்த போது, அவனுடைய நண்பர்களும் பாரிசு நகர இலக்கியவாதிகளும் கூடி 1868-இல் ‘வெளிச்சங்கள்’ என்ற அவனது இரண்டாம் கவிதைத் தொகுதியை வெளியிட்டனர். அப்போது ரெம்போவின் நடமாட்டத்தைப் பற்றி அறியாத காரணத்தால் அவன் இறந்துவிட்டதாகவே எல்லாரும் நினைத்தனர்.

ரெம்போவின் இரண்டு கவிதைத் தொகுதிகளில் எது முதலில் எழுதப்பட்டது என்ற சர்ச்சை பிரெஞ்சு இலக்கிய வாதிகளிடையே நீண்ட நாட்களாக இருந்து கொண்டிருக்கிறது. வெளிச்சங்களில் சில கவிதைகளை எழுதிய பிறகு, நடுவில் நரகத்தில் ஒரு பருவத்தைத் தொடங்கி முடித்துவிட்டு, மீதி வெளிச்சங்களைப் பிறகு எழுதியிருக்க வேண்டும் என்று பொதுவாகக் கருத இடமிருக்கிறது.

‘நரகத்தில் ஒருபருவம்’ என்ற கவிதைத் தொகுதி உளவியல் பூர்வமான அவனுடைய தன்வரலாறு என்று குறிப்பிடலாம். பிள்ளைப் பிராயத்திலும், பள்ளிப்பருவத்திலும், அடக்கு முறையால் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பும், தனிமையிலும் வெர்லேனுடனும் நகரங்களில் பொறுப்பின்றிச் சுற்றித்திரிந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், அவற்றின் பாதிப்பால் அடிமனத்தில் ஏற்பட்ட அதிர்வுகளும் மிகநுட்பமாக இப்பாடல்களில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. பதினான்கு வயதுச் சிறுவனின் முதிர்ந்தும் முதிராத விடலைக் கனவுகளும், எதிர்காலத்தில் வெடிக்கவிருக்கும் அவனது பூகம்பக் கவிதையாற்றலும், கட்டுக்களை அறுத்துக் கொண்டு பாயத்துடிக்கும் அவன் சுதந்திர வெறியும் இக்கவிதைத் தொகுதியில் போட்டியிடுகின்றன. இத்தொகுதிக்கு ரெம்போ சூட்டிய பெயர் ‘கதைகள்’ (Stories)

இந்நூலின் பாயிரத்தில் சைத்தானிடத்தில் அவன் பேசுவதாக ஒரு பகுதி இருக்கிறது. அதில், தான் தெய்வீகக் காதலைக் கண்டறியவும், அழகை ஆராதிக்கவும் இந்த நூலை எழுதுவதாகக் குறிப்பிடுகிறான். அப்பணிகளைச் சிறந்த முறையில் செய்து முடிக்க நரகத்துக்குப் பயணம் மேற்கொண்டு, தன் பரிதாப முடிவைத் தானே தேடிக் கொண்ட ஓர் ஆன்மாவைச் சந்தித்து, அதன் உள்ளத் திருட்டையும், வலிப்புப் பிதற்றல்களையும் அறிந்து கொள்ள விரும்புவதாகக் கூறுகிறான். அந்தப் பரிதாப ஆன்மா வேறு யாருமில்லை; இவனேதான், இப்பயணம் இறப்பிற்குப் பிறகு மேற்கொள்வது போன்ற ஒரு கற்பனை.

‘வலிப்புப் பிதற்றல்’ என்று அவன் குறிப்பிடுவது இரவும் பகலும் அவன் உள்ளத்தை ஓயாமல் வருத்திக் கொண்டிருக்கும் இரு குற்றங்கள், ஒன்று வெர்லேனுடன் கொண்டிருந்த தகாத உறவு; மற்றொன்று 'சொல் ரசவாதம்* (Verbal Alchemy) பற்றியது. இத் தொகுதியில் அடங்கியுள்ள கவிதைகளில், சீரான சந்தமோ, எதுகை மோனையோ இல்லை. எதிர்பாராமல் மின்னும் படிமங்களை வரிசையாக அடுக்கிக் கவிதை விளைவுகளை ரெம்போ தோற்றுவித்திருக்கிறான்.

இந்நூலின் இறுதியில் உள்ள' ‘காலை’ (Morning), பிரிவு (Farewell), ஆகிய பாடல்களில் உள்ளத்திற்கு இதமான ஓர் இனிய விடியலை அவன் வரவேற்றுப் பாடுகிறான். “இவ்வளவு நாட்கள் என்னிடம் ‘நான்’ என்பது வேறு ஓர் பொருளாக இருந்தது. அந்த எண்ணத்தைக் களைந்து விட்டு, ‘நான்’ என்ற என் ஆன்மாவையும் என் உடலில் அதன் இருப்பையும் உணர்ந்து கொண்டேன். இதுவே நான் கண்டறிந்த அழகுக் கனவு; இதுவே என் வெற்றி” என்று உணர்ச்சி வசப்பட்டுப் பாடுகிறான்.

மற்றொரு தொகுப்பான ‘வெளிச்சங்களை’ வெர்லேன் வண்ணத்தகடுகள் (Coloured Plates) என்று குறிப்பிடுகிறார் ரெம்போவின் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களுக்கும் குழப்பங்களுக்கும், வக்கிரங்களுக்கும் தப்பி 'வெளிச்சங்கள் இலக்கியவாதிகளின் கைகளில் இன்றும் ஒளிகுன்றாமல் இருப்பதற்கு அவற்றின் தெளிவும், பொருளமைதியும், புரியும்படியான மறைபொருள் உத்தியும் காரணங்களாகும். இத்தொகுப்பில் உள்ள கவிதைகளின் தலைப்புகள் ஒரே சொல்லாக அமைந்திருக்கின்றன. அவற்றுள் பெரும்பாலானவை பன்மைச் சொற்கள் இத்தலைப்புகள் மிகவும் கவர்ச்சியானவை, கவிதையின் ஒவ்வொரு வரியும் படிமங்களின் கருவூலம்; அவை குறிப்பிடும் இடங்களும் மயங்கவைக்கும் பொய்த் தோற்றங்கள்.

Verbal alchemy: I flattered myself that I have invented a poetic language accessible, some day or other to at; the senses I adopted the most absurd and exaggerated more of expression conceivable...That is all past. I now know how to salute beauty-Rimbaud.

இத்தொகுப்பில் உள்ள எல்லாக் கவிதைகளுமே சிறந்தவை என்று சொல்ல முடியாது. ஆனால் கடைசி மூன்று வெளிச்சங்களும் மிகவும் ஒளிமிக்கவை. அவற்றுள் மேதை (Genie) என்ற தலைப்பில் கூறப்பட்ட கருத்துக்கள், ரெம்போவின் படைப்புக்களில் ஆதிக்கம் செலுத்தும் காதல் உணர்வின் திறவுகோலாக விளங்குகின்றன.

“என்னால் காதலைச் சாளரத்துக்கு வெளியே தூக்கி எறிய முடியாது” என்றும் “நான் காதலிசையின் மூலக் குறிப்பைக் கண்டறிந்த கலைஞன்” என்றும் ரெம்போ பெருமிதமாக வெளிச்சங்களில் ஓரிடத்தில் குறிப்பிடுகிறான்.

ரெம்போ தான் கண்டறிந்ததாகக் குறிப்பிடும் ‘காதலிசையின் மூலக்குறிப்பு’[4] எதுவாக இருக்க முடியும் என்று திறனாய்வாளர்கள் மூளையைக் குழப்பிக் கொண்டனர். வாழ்க்கை முழுவதும் நாத்திகனாக வாழ்ந்த ரெம்போ, தன் செய்த குற்றங்களிலிருந்து மீட்சிபெற ஒரு வழிகாட்டியைத் தேடினான். அந்த வழிகாட்டியைத் தேவன் என்றோ, தேவமகன் என்றோ, மெசைய்யா என்றோ, நபி என்றோ குறிப்பிடவில்லை. அன்பின் வடிவமாக அவனைக் குறிப்பிடுகிறான்:

"அவன் நம்மை அறிவான்; அவன் நம் எல்லாரையும் விரும்புகிறான். இந்தக் குளிர்கால இரவில், நிலத்தின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிவரை, பூமியின் கொந்தளிக்கும் முனைகளிலிருந்து கோட்டை கொத்தளம் வரை, நெரிசலான குடியிருப்பிலிருந்து அமைதியான கடற்கரை வரை, பார்வைக்கு எட்டிய தூரம் வரை, வலிமைக்கும் வாட்டத்திற்குமிடையில் கூடியிருந்து அவனைத் தரிசிக்கவும், அவனை மீண்டும் வழியனுப்பவும் வேண்டும். அலைகளின் நடுவிலும், பரந்த பனிப்பாலையின் உச்சியிலும் அவன் உடலையும், உயிர் மூச்சையும், அவன் ஞானப் பேரொளியையும் பின் பற்றிச் செல்ல வேண்டும்!"</poem>

பெரும்பாலான கவிஞர்கள் கற்பனையுலகில் சஞ்சரித்துப் பழக்கப்பட்டவர்கள். நடைமுறை உலகின் வெளிப்படையான உண்மைகள் மிகவும் கசப்பானவை. அவற்றைக் கவிஞர்கள் ஏற்றுக் கொள்ளத்தயங்குவதோடு, அவற்றிலிருந்து தப்பியோடவும் விரும்புகின்றனர். நடைமுறை உலகிலிருந்து தப்பிச் செல்ல, முதலில் தம்மை மறக்க வேண்டும். தம்மை மறக்கக் கவிஞர்கள் மது, அபின், கஞ்சா போன்ற பழக்கங்களில் ஈடுபடுகின்றனர். அப்பழக்கங்கள் உளக்கட்டுப்பாட்டைத்தளர்த்தி, அதை அதன் விருப்பப்படி செலுத்துகின்றன. உள்ளம் விரும்பும் கற்பனை உலகமொன்றைத் தாமே படைத்துக் கொண்டு, இவ்வுலகத் துன்பங்களை மறந்து தம் விருப்பம் போல் கவிஞர்கள் அதில் வாழ்கின்றனர். இதை ‘மருள்மயக்க நிலை’ என்பர். போதலேரைப் போலவே ரெம்போவும் ஒரு கற்பனைச் சொர்க்கத்தைப் படைத்துக் கொண்டு, அதில் பயணம் செய்கிறான்.

ரெம்போவின் படைப்புக்களில் குடிபோதைப் படகு[5] (The Drunken Boat) என்ற கவிதை மிகவும் விளம்பரம் பெற்ற்து. இது ஒரு குறியீட்டுக் கவிதை. இளமையில் தாயின் கண்டிப்பாலும் அடக்கு முறையாலும் ஏற்பட்ட குமுறல்களும், வெர்லேன் உறவால் ஏற்பட்ட மனவிகாரங்களும், நகரத்தின் இருண்ட வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கங்களும், வன்முறையும் ஆரவாரமும் மிக்க பெருங்கடலாக இக்கவிதையில் உருவகப்படுத்தப்படுகினறன. அக்கடலில் மிதக்கும் ஒரு துடுப்பில்லாத படகு ரெம்போவுக்குக் குறியீடாக வருகிறது. கடலில் தக்கைபோல் தள்ளாடி வரும் இப்படகு பெரும்புயலோடும், குன்றைப்போல் கொந்தளிக்கும் அலையோடும் பனிப்பாறையோடும், திமிங்கிலம் கடற்பாம்பு போன்ற கொடிய கடல் உயிரிகளோடும் போராடி முன்னேறுகிறது. இனமையில் கிடைக்காத சுதந்திரம் இந்தக்கற்பனைப் பயணத்தில் ரெம்போவுக்குக் கிடைக்கிறது. வீட்டைவிட்டு மூன்று முறை ஓடியபோது, அவனுக்கு ஏற்பட்ட மனக்கோளாறான மகிழ்ச்சியையும் இப்பயணம் படிப்பவர்க்கு உணர்த்துகிறது. ‘குடிபோதைப்படகு’ எழுதப்பட்டபோது ரெம்போ கடலையே பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போதலேர் குறியீட்டியத்தின் (Symbolism) முன்னோடி, வெர்லேன் அத்துறையில் சாதனைகள் நிகழ்த்தியவர். கிரம்போ அவரையும் தாண்டிச் சென்றவன்.

செம்போ முதலில் கவிதையை மரபில் எழுதினான்; இடையில் கட்டிலாக் கவிதைக்கு வந்தான்; பின்னர் வசனத்தையே கவிதையாக்கினான். ‘பிரெஞ்சுக் கவிதையனைத்தும் எதுகை மோனையமைந்த உரைநடை’ என்று ஓரிடத்தில் குறிப்பிட்டான்.

சமயம், சமுதாயம், அரசியல் ஆகியவற்றை அவன் எப்படி எதிர்த்துப் புரட்சிசெய்தானோ அதேபோல் கவிதை நடையையும் எதிர்த்துப் புரட்சி செய்தான். கவிதைச்சொற்களின் இயல்பான பொருளையே மாற்றி, சொற்களின் தன்னியக்கம், சொல்மயக்கம், சொல்விளையாட்டு, ஓசை வேறுபாடு இவற்றின்மூலம் மொழியின் தொடக்கநிலைப்பண்புகளைக்கிளப்பிப் படிப்பவர் உள்ளத்தில் பல்வேறு உணர்ச்சி வேறுபாடுகளைத் தோற்றுவிக்க முயன்றான். தான் வெளிப்படுத்தும் ஒவ்வோர் உணர்ச்சிக்கும் ஒரு புதிய கவிதை மொழியை உருவாக்க முடியும் என்று கனவு கண்டான். அதற்காக முயற்சியும் செய்தான். ‘கடற் பக்கம்’ என்ற கவிதையில் தன் சொல்லாற்றலால் நிலப்பரப்பை நீர்ப்பரப்பாகவும், நீர்ப்பரப்பை நிலப்பரப்பாகவும் மாற்றிக் காண்பிக்கிறான். இந்தச் ‘சொல்ரசவாத’ வித்தையைத் தொடங்கிப் பின்னர் கைவிட்டு விட்டான்.

“கவிஞனுக்குக் கட்டுப்பாடு கூடாது, கவிதை கவிஞனுள்ளத்தில் தானாகக் கருக் கொண்டு, கற்பனை வடிவம் பெற்றுப் பக்குவமடைந்து பொங்கி வரவேண்டும். கவிஞன் தனது உள்ளத்தில் கருத்துக்கள் மலர்ந்து வருதலைக் கண்டு சுவைத்து, அதை அப்படியே அனுமதிக்க வேண்டும்” என்று தனது புகழ் பெற்ற கடிதத்தில் குறிப்பிடுகின்றான் ரெம்போ. இக்கொள்கை அவனைச் சர்ரியலிசத்துக்கு இட்டுச் செல்கிறது, சர்ரியலிசத்தின் ஊற்றுக் கண் ரெம்போ.

‘தீர்க்க தரிசனம்’ வாய்க்கப் பெற்றவன் கவிஞன் என்றார் போதலேர். தீர்க்கதரிசிதான் (Seer) கவிஞன் என்று சொன்னான் ரெம்போ, சாதாரண மக்களின் கண்களுக்குப் புலப்படாத அகக் காட்சிகள் தீர்க்கதரிசிகளின் கண்களுக்குப் புலப்படும். இந்த அகக் காட்சி இன்பங்களில் ஈடுபட்டுத் தம்மை மறந்திருப்பதற்காகவே சிலர் செயற்கை முறையில் மருள் மயக்க நிலையை நாடுவதுண்டு. போதலேர் அப்படி மருள் மயக்க நிலையில் ஆழ்ந்திருந்து அகக் கட்சிகளை அதீதமாகக் கண்டவர்,

போதலேரின் தீர்க்கதரிசனங்களை ஏற்றுக்கொண்ட ரெம்போ அவருடைய கவிதையின் வடிவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதைப்பற்றிக் குறிப்பிடும்போது, “ஆவியுலகைக் கூவியழைத்துக் காண முடியாதவற்றைக் கண்டு, கேட்க முடியாதவற்றைக் கேட்டவர்போதலேர். அவர் ஒரு தீர்க்கதரிசி! கவியரசர்! உண்மையான கடவுள்! ஆனால் துரதிருஷ்ட வசமாக அவர் கலை நுட்பத்திலேயே கருத்தாக இருந்தார்; அவருடைய இலக்கியம் சிறப்பானதென்று புகழப்பட்டாலும், அதன் வடிவம் மிகச் சாதாரணமானது. கருத்தில் புதுமை செய்யும்போது வடிவத்திலும் புதுமை செய்ய வேண்டும்” என்று கூறுகிறான் ரெம்போ.

ரெம்போ கவிதை இலக்கணத்தையும், வடிவத்தையும் ஒதுக்கித் தள்ளியது போல, சொற்களின் அகராதிப் பொருளையும் ஒதுக்கிவிட்டு அவனுடைய முதிர்ச்சி பெற்ற வசன கவிதைகளை எழுதினான். அவற்றில் அவன் கண்ட அகக்காட்சிகளை மட்டும் வரிசைப் படுத்தினான். இக்காட்சிகளை இணைக்கும் சொற்றொடர்களைக் கூட நீக்கி விட்டான். என்றாலும் அவ்வசனங்கள் கவிதை நிலையிலிருந்து தாழ்ந்து போகாததற்குக் காரணம், அதில் கூறப்படும் அகக்காட்சிகளுக்கு ஏற்ற புறக்காட்சிப் படிமங்களைக் கலைநுட்பத்தோடு ரெம்போ கையாண்டதுதான்

ரெம்போவின் அகக் காட்சிகள் பலதரப்பட்ட விபரீத வடிவங்களோடு குடிபோதைப் படகில் அதீத கற்பனையாக உருவகிக்கப் படுகின்றன. ஆன்மாவின் உள்ளுணர்வுக் காட்சிகளின் பண்புகள் கூடப் படிம உத்தியால் விளக்கம் பெறுகின்றன. அவனுடைய இளமைக்கால நினைவுகள் அவன் உள்ளத்தைத் தட்டும் போது கவிதைகள் படைப்பாற்றலின் உச்சத்தையே தொடுகின்றன.

நான்
ஓயாமல் அழுதேன்.
உண்மை!
இந்த விடியல்கள் என்னை
வேதனைப் படுத்துகின்றன.

ஒவ்வொரு நிலவும்
எனக்குத் துன்பம்;
ஒவ்வொரு சூரியனும்
எனக்குக் கசப்பு.

கடு கடுப்பான அன்பு
என்னைக்
கொஞ்சங் கொஞ்சமாக
விழுங்கிக் கொண்டிருக்கிறது.

என் முட்டுக்கள்
முறியட்டும்;
என் கப்பல்
கவிழந்து போகட்டும்.

நான் கரையேறுவது
ஓர்
ஐரோப்பியக் கடற்கரையாக
இருக்கட்டும்,

அங்கே
கரிய குளத்தில்
மாலை மணத்தில்
ஒரு குழந்தை
மேமாதப்
பட்டுப் பூச்சியைப் போல்
மெல்லிய படகுவிட்டுத்
தன் கவலைகளைக்
குத்துக் காலிட்டுக்
கழிப்பதைக் காணவேண்டும்

[குடிபோதைப்படகு]

மிக இளம் வயதில் அபரிமிதமான கவிதை ஆற்றல் பெற்று விளங்கிய ரெம்போ, தன் பத்தொன்பதாம் வயதில் கவிதை எழுதுவதை ஏன் நிறுத்தி விட்டான் என்பது எல்லாருக்கும் பெரிய புதிர். அவன் சந்தர்ப்ப சூழ்நிலையாலோ, எதிர் பாராமலோ கவிஞன் ஆனவன் அல்லன்; இலக்கியத் துறையில் பெரிய சாதனைகளைச் செய்து முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு கவிஞன் ஆனவன்; அதற்காகக் கடுமையாக உழைத்தவன்; கலை வாழ்க்கைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லை என்று கருதித் தன் கவிதைப் பணியைத் தொடங்கியவன். ஆனால் உண்மை வேறு விதமாக இருந்தது.

தன் கவிதை நெம்புகோலால் உலகையே புரட்டி விடலாம் என்று புறப்பட்ட ரெம்போவுக்கு நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களும், ஏமாற்றங்களும் தாங்கிக் கொள்ள முடியாதபடி இருந்தன. அதனால் தான் தனது ‘வெளிச்சங்களைக்’ கடைசி விற்பனை (Clearance Sale) என்ற கவிதையோடு முடித்துக் கொள்கிறான். தன் கடைசி இலக்கிய சரக்கை விற்றுவிட்டுக் கடையையும் மூடிவிட்டான். கடை விரித்தேன்; கொள்வாரில்லை! என்று வடலூர் வள்ளல் வருந்திக் கூறியது இவனுக்கும் பொருந்தும்.


  1. Pastoral theme
  2. கிரேக்கப் புராணத்தில் வரும் ஆர்ஃபிஸ், ஆண்டவன் அப்போலோவின் அருள் பெற்ற பாடகன் தன் இசையால் எல்லா உயிரினங்களையும் மயக்க வல்ல ஆற்றல் பெற்றவன். அவன் மனைவி யூரிடிஸ் இறந்த போது அவளை மீளப் பெறச் சாவுலகம் செல்கிறான். சாவுலகின் அதிதேவதை ஹேட்ஸ். அவனுடைய யாழிசையில் மயங்கி, அவன் மனைவியை ஒரு நிபந்தனையின் பேரில் அழைத்துச் செல்ல அனுமதிக்கிறான். இருள் சூழ்ந்த சாவுலகை விட்டு இருவரும் வெளியே சென்ற பிறகுதான் ஆர்ஃபிஸ் தன் மனைவியைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதே நிபந்தனை. ஆர்ஃபிஸ் சாவுலகைவிட்டு வெளியில் வந்ததும் ஒளி அவன் மீது விழுந்தது: உடனே அவன் திரும்பிப் பார்த்தான். அப்போது யூரிடிஸ் சாவுலகின் எல்லைக்குள் இருந்தான். ஹேட்ஸின் நிபந்தனையை மீறிய காரணத்தால், ஆர்ஃபிஸ் தன் மனைவியை மீண்டும் இழந்தான்.
  3. பிரெஞ்சில் 'உய்ன் செசோம் ஆஆம்பேர்’ என்று உச்சரிக்கவேண்டும்.
  4. the key-signature of love
  5. பிரஞ்சுப் பெயர் Bateau lvre.