புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்/சார்ல் போதலேர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பசி, இன்பம், அன்புக்கினிய தாய்
ஆகிய எல்லாவற்றுக்கும் மேலாக
நான் நேசிப்பது இலக்கியமே.

சார்ல் போதலேர்
(1821-1867)


எட்கார் ஆலன்போ என்ற அமெரிக்க எழுத்தாளரின் படைப்பின் மீது போதலேருக்கு அளவு கடந்த ஈடுபாடு உண்டு. இலக்கியத் துறையில் அவரைத் தம் குருவாகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டார். அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை; அவருடைய பழக்கங்களையும் ஏற்றுக் கொண்டார்.

ஆலன்போ ஒரு அபின் பிரியர்: போதலேர் கஞ்சாப் பிரியர். அபினும் கஞ்சாவும் பயன்படுத்துபவரைத் தூக்கத்தில் ஆழ்த்துவதில்லை. அவர்கள் உள்ளத்தில் ஒருவிதக் கிளர்ச்சியை ஏற்படுத்தி, விரும்பி ஏற்றுக் கொண்ட கனவு நிலைக்கு ஆட்படுத்துகின்றன. அவற்றைப் பயன்படுத்தியவுடன் அவர்கள் உள்ளம் எந்தப் போக்கில் பயண்ம் செய்கின்றதோ, அந்தப் போக்கிற்கு அவர்களை எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் செலுத்துகின்றன.

கஞ்சா மயக்கம் ஏற்படுத்தும் குழப்பமான அற்புதம் பற்றிப் போதலேர் பின்கண்டவாறு குறிப்பிடுகிறார்: "கஞ்சாப் போதையின் துவக்கத்தில், வழக்கத்திற்கு மாறான வண்ணத்தின் ஆதிக்கம் நமக்குப் புலப்படும். கண்ணைப் பற்றிக்கும் ஒளியுடம்போடு காட்சி தரும் மோகினிப் பெண்கள், நீல வானை விடத் தெளிவான ஆழமான விழிகளால் நம்மை உற்றுப் பார்ப்பார்கள். அப்போது ஏற்படும் இனம் புரியாத க்ஷணநேர மனநிலைகளில் நம் வாழ்க்கையின் ஆழ அகலங்களும் நெளிவு சுழிவுகளும், அற்புதங்களும் நம் கண்முன் பளிச்சிடும். நம் கண்ணுக்கு முதன் முதலில் எந்தப் பொருள் தென்படுகிறதோ, அதுவே நம் அறிவை நடத்திச் செல்லும் குறியீடாக அமையும். தெளிந்த நீர்நிலைகளும், நிலைக் கண்ணாடிகளும் கனவுலகத்தை நமக்குத் திறந்துவிடும்; சோகமயமான ஒரு பேரின்பத்தில் நம் உள்ளம் ஆழ்ந்து, எல்லையற்ற காட்சிகளில் திளைக்கும்."

இத்தகைய அனுபவத்தில் திளைத்து மிகவும் நூதனமான உணர்ச்சி வெளிப்பாடுகளுடன் கூடிய அரிய கவிதைகளைப் படைத்த கவிஞர் போதலேர் மட்டும் அல்லர்; வேறுபலரும் இருந்திருக்கின்றனர். மகாகவி பாரதியாருக்கும் கஞ்சாப் பழக்கம் உண்டு; குயில்பாட்டும் இந்த அடிப்படையில், அவர் விரும்பி ஏற்றுக் கொண்ட கனவு நிலைக் கற்பனை தான். கோலரிட்ஜின் 'குப்ளாய்கான்' என்ற கவிதையையும், இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்.

பியர் சார்ல் போதலேர் (Baudelaire Piere Charles) 1821 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற சட்டமன்ற உறுப்பினரின் மகனாகப் பாரிசில் பிறந்தார். இவர் சிறுவனாக இருக்கும் போதே தந்தை இறந்தார் தாய் ஓர் இராணுவ அதிகாரியை மறுமணம் செய்துகொண்டார். போதலேர் பள்ளிக் கல்வியை முடித்துக்கொண்டு சட்டக்கல்லூரியில் நுழைந்தார்.

வீட்டுக் கடங்காத பிள்ளையாக இருந்த இவரைக் கப்பலேற்றிக் கல்கத்தாவுக்கு அனுப்பினர் பெற்றோர். ஆனால் நடுவழியில் மொரீஷியஸ் தீவில் இறங்கிக் கொண்டார். வெப்பமண்டலத்தில் இருந்த மொரீஷியஸ் தீவில் சிலகாலம் தங்கியிருந்து வெதுவெதுப்பான அனுபவங்களோடு பாரீஸ் திரும்பினார் போதலேர்.

சுதந்தரமான பணவசதியோடு இருந்த போதலேர், பாரீசின் நவநாகரிகக் கேந்திரமான 'லத்தீன் குவார்ட்டர்ஸ்' என்ற பகுதியில் கட்டுப்பாடற்ற உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டார். 'சிறப்புக் கெட்டவர்' (decadent) என்ற பெயரை விரும்பி ஏற்றுக் கொண்டார். நீக்ரோக் கலப்பு இனக் காரிகை, கருப்பு ரதி ழான் துய்வால் (Black Venus Jeanne Duval) என்பவள் இவருக்கு நிரந்தரக் காதலியாகக் கிடைத்தாள். சீமாட்டி சபர்த்தியர் என்ற நடிகையிடமும் அவருக்குத் தொடர்பிருந்தது. போதலேரின் சொர்க்க நரகக் கற்பனைகள், இவ்விருவர் மீதும் அவர் கொண்ட காதற் சுழியிலே சுழன்றடிக்கின்றன.

இளமையில் அவர் விரும்பி ஏற்றுக் கொண்ட கொள்கை 'டாண்டியிசம்'. தன் விருப்பப்படி வாழ்தல், தன்முனைப்போடு முதன்மையாக இருத்தல், நட்பு, நாடு, குடும்பம் என்ற பற்றுக்களை அறுத்துச் சுதந்தா மனிதனாக வாழ்தல், பிரபுக்களை வெறித்தல் என்பன டாண்டியிசத்தின் குறிக் கோள்கள்

“பசி, இன்பம், அன்புக்கினிய தாய் ஆகிய எல்லாவற்றுக்கும் மேலாக நான் நேசிப்பது இலக்கியமே” என்று குறிப்பிடும் போதலேர் 'கலை கலைக்காகவே' என்று கொள்கையுடையவர். ரொமாண்டிக் கவிஞர்கள் விரும்பிப் போற்றும், 'பொங்கவரும் மனவெழுச்சிக் கொள்கையை' இவர் ஏற்றுக் கொள்வதில்லை. கலைக்கு ஒரு தெய்வீக மரியாதையும் இவரிடத்தில் கிடையாது.

"அழகு, அறம், கலை யாவும் செயற்கையானவை; அவை கலைஞன் அல்லது கவிஞனின் திட்டமிட்ட சிந்தனையிலிருந்து தோன்றுபவை. கவிதையை எந்தவிதப் பிரசாரத்துக்கும் பயன்படுத்தக் கூடாது. அழகின் மீது அடங்காக்காதல் கொள்ளுதலும், உள்ளத்தின் ஆழத்திலிருந்து புறப்படும் அழைப்புகளுக்கு அடிபணிதலும் தவிர்க்க முடியாதவை என்ற காரணத்தால், கலைஞனும் கவிஞனும் தாம் மேற்கொண்ட படைப்புப் பணிக்கு நிரந்தர அடிமை" என்ற சிந்தனைப் போக்குடையவர் போதலேர்.

கவிதையின் கருப்பொருள் உயர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தில் போதலேருக்கு உடன்பாடு கிடையாது. அன்றாட வாழ்க்கையில் தட்டுப்படும் சாதாரணப் பொருள்களும், இழிந்த பொருள்களுமே அழகானவை என்றும், அப்பொருள்களை அழகிய சொல்லோவியத்தால் அலங்கரிப்பதே மேலான கவிதை உத்தி (Grand Style of Poetry) என்று குறிப்பிட்டார். ஏழை, குடிகாரன், தெருப் பிச்சைக்காரன், விபசாரி, அபலை ஆகியோரும் பழி, பாவம் தீவினை, பொல்லாங்கு ஆகியவையும், அவர் கவிதைக்கு விரும்பி ஏற்றுக் கொண்ட கருப்பொருள்கள். இக்கொள்கைக்கு அவர் பாடியுள்ள 'சூரியன்' என்ற கவிதை சிறந்த எடுத்துக் காட்டு, மேற்கு வாயிலில் படியும் மாலைச் சூரியனின் வர்ண ஜாலத்தால் உலகின் சாதாரணப் பொருள்களும் எப்படிப் பேரழகு பூணுகின்றன என்பதை அப்பாட்டில் சிறப்பித்துப் பாடுகிறார். இத்தகைய ரசவாதத்தை ஏற்படுத்தக் கவிஞனானவன் மப்புமந்தாரமற்ற மேல் வானத்துக்குத் தன் ஒளிபடைத்த கண்களை உயர்த்த வேண்டும்; அப்போது பொருளற்ற அற்பப் பொருள்களும் நுட்பமான பொருள் விளக்கம் பெறும் என்று கூறுகிறார் போதலேர். போதலேரின் இக் கொள்கையை மாநகர்க் கொள்கை (The religious intoxication of great cities) என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

‘the spantaneous cverflcw of powerful feelings’

மேலைநாட்டுக் கலை இலக்கியப் போக்கை அடியோடு மாற்றியமைத்த ஆற்றல்மிக்க இயக்கங்களான அடிமனவியம், குறியீட்டியம் ஆகியவற்றின் ஊற்றுக் கண்ணே போதலேர்தான் என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை. அவருடைய கவிதை நூலான 'நச்சுப் பூக்கள்' (Les Fleurs du Mal) 1857 ஆம் ஆண்டு முதன்முதலாக வெளியிடப்பட்டது. அதில் தெய்வ நிந்தனை காணப்படுகிறது என்று கூறிச் சமயவாதிகள் கண்டனக் குால் எழுப்பினர். படிப்பவர் உள்ளத்தில் கீழ்த்தரமான உணர்ச்சிகளை அவர் கவிதைகள் தூண்டுவதாகக் குற்றம் சாட்டி பிரெஞ்சு அரசாங்கம் 300 பிராங்க் அவருக்கு அபராதம் விதித்தது.

அவருக்குப் பின் வந்த சந்ததியினரிடையே நச்சுப் பூக்களைப் போல் அபரிமிதமான செல்வாக்குப்பெற்ற வேறு கவிதை நூல் மேலை நாட்டில் எதுவுமில்லை என்று சொல்லலாம். மேலை நாட்டின் கவிதைப் புதுமையே (Modernism in Poetry) இந் நூலில் தொடங்குகிறது.

புதுக் கவிஞர்களின் முன்மாதிரியே (Archtype) போதலேர்தான். புதுக் கவிஞர்களின் பண்புகளான வரையறுக்கப்பட்ட தனிமை, எதிர்ப்புணர்ச்சி, மனச் சஞ்சலம், தன்னையே அழித்துக் கொள்ளும் ஆத்திர உணர்ச்சி யாவும் போதலேரிடமிருந்து பெற்றவையே. “பிறர் தூற்றும்படி புரட்சிகரமாக வாழ்ந்த போதலேருடைய வாழ்க்கையின் அடிக்குறிப்புப் பற்றிய வரலாறே, புதுக் கவிதையின் தோற்றம், வளர்ச்சி பற்றிய வரலாறாகும்” என்று மேலை நாட்டுத் திறனாய்வாளர் குறிப்பிடுவது பொருத்தமே.

“கற்பனை என்பது அறிவியல் அடிப்படையில் அமைந்த பேராற்றல். பேரண்டத்தின் ஒழுங்கையும் இயக்கத்தையும் கற்பனை ஆற்றலால் தான்உணர முடியும்” என்று போதலேர் குறிப்பிட்டார். ஸ்வீடன்பர்க்கும் ஆலன்போவும் இதே கொள்கையுடையவர்கள்.

போதலேர் ஓர் ஐயுறவாளர் (Sceptic). கற்பனை ஒரு பேராற்றல் என்று குறிப்பிட்டாலும் அது கை கொடுத்து உதவாத சில நேரங்களில் அதன் மீது அவருக்கு ஐயறவு ஏற்பட்டது. அந்த நேரங்களில் கற்பனைக்கு ஊக்கம் கொடுப்பதற்காக மதுவையும், கஞ்சாவையும் நாடினார். அவற்றின் தூண்டுதலால் ஒரு செயற்கைச் சொர்க்கத்தை அவரே படைத்துக்கொண்டு அதில் திளைத்தார்.

போதலேர் கடவுட்பற்றோ மதப்பற்றோ இல்லாதவர். என்றாலும் அவர் உள்ளத்தில் படிந்துவிட்ட சமயக்கருத்துக்கள் சிலவற்றை அவரால் உதற முடியவில்லை. கிறித்துவ சமயக் கொள்கைப்படி, மனிதன் பாவியாகவே இருக்கிறான் என்ற உணர்வும், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்குமுன் வாழ்ந்த 'ஏதேன்' என்ற் சொர்க்கத்தை மனிதன் மீண்டும் அடையமுடியாது என்ற உணர்வும், இவ்வுலகின் துன்பமாகிய கோரப்பிடியிலிருந்து யாரும் விடுபடமுடியாது என்ற உணர்வும் போதலேரை ஆட்டிப்படைக்கின்றன. இத்துன்ப உலகின் பிடியிலிருந்து விடுபட்டுத்தன் ஆன்மாவைப் பரவசப்படுத்துவதற்காக, அவரே படைத்துக் கொண்டதுதான் செயறகைச் சொர்க்கம்!'

போதலேரின் நச்சுப்பூக்கள்மூன்றுகொத்தாக மலர்ந்திருக்கின்றன. முதல்கொத்து அவர் உளச்சோர்வையும், இரண்டாவது கொத்து பாரிஸ் நகரக் காட்சிகளையும், மூன்றாவது கொத்து செயற்கைச் சொர்க்கத்தை நோக்கிய அவர் பயணத்தையும், விவரிக்கின்றன. இளமையில் கட்டுப்பாடின்றி வாழ்ந்த தம் இழித்த வாழ்க்கையைப் பலபாடல்களில் அவர் திரும்பிப் பார்த்து உளச்சோர்வு கொள்கிறார். தம்மை வாட்டும் உளச் சோர்வில் அழுந்திப்போவதா அல்லது செயற்கைச் சொர்க்கத்தில் பறப்பதா என்ற ஊசலாட்டம் பல பாடல்களில் கற்பனை நயத்தோடு எடுத்துரைக்கப்படுகின்றது. பல பாடல்களில் செயற்கைச் சொர்க்கத்தில் அவர் அடையும் பரவசநிலை பேசப்படுகின்றது. பெண்ணால் பெறும் ஐம்புலன் இன்பத்தைக் கற்பனை செய்யாமல் ஒலி, ஒளி, மணம் இவற்றால் பெறும் இன்பங்களையே கற்பனைசெய்கிறார் போதலேர். அவருடைய சொர்க்கத்தில் வரும் அடிமைகளும் ஏவலர்களும் நிர்வாணமாகக் காட்சிதருகின்றனர். அவர்களுடைய நிர்வாணம், இவ்வுலக நாகரிகத்தின் தீக்கரங்களால் தீண்டப்படாத தூய்மையின் உருவகம்.

செயற்கைச் சொர்க்கத்தில் போதலேர் அடிக்கடி திளைத்துப் பரவசப்பட்டாலும், சாவைப் பற்றிய எண்ணம் அவர் உள்ளத்தை விட்டு நீங்கவில்லை. நச்சுப்பூக்களின் இறுதியில் உள்ள 'பயணம்' என்ற பாட்டில் தாம் கடலின் அலை வயிற்றில் ஆழ்ந்துவிட விருப்பம் தெரிவிக்கிறார். தாம் சென்றடையவிரும்பும் குறிக்கோள் சொர்க்கமாகஇருந்தாலும் சரி, நரகமாக இருந்தாலும் சரி, இனந் தெரியாத ஒன்றன் ஆழத்தில் தாம் மூழ்கிவிட விரும்புகிறார். 'ஏழையின் சாவு' எனற பாடலில் சாவை மகிழ்ச்சி தரும் இன்ப உணர்வோடு வரவேற்றுப் பாடுகிறார்.

சாவே!
தெய்வீகப் பெரும்புகழே!
தேடலுக்குப் புலப்படாத
கற்பனைக் களஞ்சியமே!
ஏழை விரும்பும் போது
எடுத்துச் செல்விடும்
பரம்பரைச் சொத்தே!
புரிந்து கொள்ள முடியாத
வானுலகின் வாயிற் கதவே!

என்று சாவைத் தன் சங்கீத வரிகளால் அலங்கரிக்கி செயற்கைச் சொர்க்கத்துப் பரவச நிலையைக்கூட மரணத் துன்பத்தைக் கலந்துதான் அனுபவித்தார். [1]'சிதிரியாப் பயணம்' என்ற கவிதையில், காதல் தீவே அவருக்குக் கறை படிந்து காட்சியளிக்கிறது.

வானம்—
தெளிந்த அழகோடு
காட்சியளிக்கிறது.
கடலும்—
ஆழ்ந்த அமைதியுடன்
படுத்திருக்கிறது.
ஆனால்—
எங்கும் இருள்:
திட்டுத் திட்டான
ரத்தக் கறைகள்
என் இதயம்—
ஒரு முரட்டுக் காகிதத்தில்
சுருட்டப் பட்டுப்
புதைந்து கிடப்பதாக
எனக்குள் ஓர் உருவகம்.

ஓ வினஸே!
உன் காதல் தீவில்
ஒரு கற்பனைத்
தூக்கு மரத்தில்
என உருவம்
தொங்கிக் கொண்டிருக்கிறது.
ஆண்டவனே!
என் உடம்பையும்
இதயத்தையும்
வெறுப்பில்லாமல் பார்க்க
எனக்கு ஆற்றலைக் கொடு!

என்று வேண்டுகிறார் போதலேர்.

அவர் எழுதியுள்ள கடற்புறவை (Albatross) என்ற பாடல் அவருடைய அவஸ்தையின் குறியீடாகவும், நச்சுப் பூக்களின் மையக் கருத்தாகவும் அமைந்துள்ளது. ஆல்பட்ராஸ் என்ற கடற்பறவை நீண்ட இறக்கைகளை உடையது, அதை வானமண்டலத்தரசன் (The prince of the clouds) என்று குறிப்பிடுவர். வானத்தை அனாயாசமாக அளக்க உதவும் அப்பெரிய சிறகுகளே. பூமியை அடைந்ததும் அதற்குப்பெரிய சுமையாக மாறிவிடுகின்றன. அவற்றைத் தூக்கிக்கொண்டு அப்பறவையால் அடியெடுத்து நடக்கமுடிவதில்லை.

போதலேர் தமது ஆற்றல் மிக்க கற்பனையின் உதவியோடு சொர்க்கமண்டலத்தில் பறந்தாலும், இவ்வுலகப் பற்றும், சிற்றின்ப இச்சையும் தம்மைப் பிணித்து முடக்கி விடுவதாக எண்ணி வருந்துகிறார்; தாம் ஆழ்ந்திருக்கும் துன்பக் கடலிலிருந்து மீட்சியே கிடையாது என்ற வருத்தம் அடிக்கடி அவரிடம் மேலோங்கி நிற்பதுண்டு.

பாரிஸ் நகரம்
மாறிக் கொண்டிருக்கிறது
என்னை அழுத்தும்
துயரச் சுமை
சிறிது கூட அசையவில்லை

என்று அவருடைய துயரப் பெருமூச்சு ஒருபாடலில் கேட்கிறது. மற்றொரு பாடலில்,

என் துயரமே
அறிவோடு நடந்துகொள்;
அமைதியாக இரு!
இரவின் கொடுமைக்கஞ்சி
நீ கதறுகிறாய்?
இரவு விழுந்துவிட்டது
இதோ—
விடியல் தலை தூக்குகிறது:

என்று ஞானிபோல் தமக்குத்தாமே ஆறுதல் கூறிக் கொள்கிறார்.

என்றாலும் அவர் வாழ்வில் மிஞ்சியது ஏமாற்றமே. அவர் எழுதியுள்ள உரைப் பாடல்களில், வாழ்வின் இறுதியில் அவர் கொண்ட சலிப்பும், ஏமாற்றமும் உருக்கமாகப் பேசப்படுகின்றன.

"சில சமயங்களில் என்னை ஒரு ஞானியென்று நான் முட்டாள்தனமாக நினைத்துக் கொள்வதுண்டு. ஒரு மருத்துவனுக்கு இருப்பதுபோல், அருளுள்ளம் என்னிடத்தில் அமையவேண்டும் என்று நான் அவாவுவதுண்டு; அப்பேறு எனக்குக் கிடைக்கப்போவதில்லை. இவ்வஞ்சக உலகில் என்னை நானே தொலைத்துவிட்டு, மக்கட் கூட்டத்தின் புறங்கையால் இடித்துத் தள்ளப்பட்டு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன். என் கடந்தகால நினைவுகளின் ஆழத்தை அடிக்கடி எட்டிப் பார்த்து நான் மிகவும் களைத்துப் போய்விட்டேன். ஏமாற்றமும், கசப்புணர்ச்சியும், துன்பமா-மீட்சியா என்று உணர முடியாத குழப்பமுமே எனக்கு மிஞ்சியவை என்று புலம்புகிறார் போதலேர்.

மேகத்தின் உச்சியில் பறப்பதற்கு உதவிய பெரிய சிறகுகளின் சுமை, பூமியில் கடற்பறவையைச் செயலற்றதாக்குவதுபோல், கற்பனைச் சொர்க்கத்தில் பறப்பதற்கு இவருக்கு உதவியாக இருந்த இவரது சிறகுகளே (கஞ்சா, அளவற்ற மதுப்பழக்கம்) கடைசி நாட்களில் இவரை முடக்கிப் போட்டு விட்டன. பக்கவாதம், இவரை முடக்கிப்போட்டுப் படுக்கையில் தள்ளிவிட்டது. 'சிபிலிஸ்' இவரைச் சிதைத்து விட்டது.

நீண்டநாள் கஞ்சாப் பழக்கத்தின் கடைசி மைல்கல், தலை சுற்றலும் (Vertigo) பைத்தியமும்தான். தன் கடைசி நிலையைப்பற்றிக் குறிப்பிடும்போது "இன்பமும் அதிர்ச்சியும் கொண்ட இழுப்பு நோய் (Hysteria) எனக்குப் பழக்கமாகிப் போய்விட்டது. தொடர்நது தலைசுற்றலால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். 23-1-1862 ஆம் நாளாகிய இன்று, எதிர்பாராத ஓர் எச்சரிக்கை எனக்குக் கிட்டியது. பறந்து செல்லும் பைத்தியச் சிறகு வீச்சின் காற்று, என்மீது படிந்து சென்றதை நான் உணர்ந்தேன்" என்று குறிப்பிடுகிறார்.

தன்பெயரைக்கூட நினைவுகூர முடியாத நிலையிலும், நிலைக் கண்ணாடியில் தன் சொந்த முகத்தையே அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையிலும், புறக்கணிப்புக்கு ஆளாகி, ஆதரவற்றுத் தமது கடைசி நாட்களைப் பாரிசில் கழித்தார். மிகச் சிறந்த கவிஞரான போதலேரைப் புகழ்பெற்ற பிரெஞ்சு இலக்கியக் கழகம் (French Academy) உறுப்பினராக ஏற்றுக் கொள்ள மறந்துவிட்டது. அந்த வேதனையைத் தாளாத அவர், பாரிசை விட்டு நீங்கி பெல்ஜியத்தில் சொற்பொழிவுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அலைச்சல் அவர் உடலை மிகவும் பாதித்தது. 1867இல் பாரீஸ் மருத்துவமனையொன்றில் உயிர்துறந்தார்.

தாம் செய்யும் எந்தப் பணியையும், செப்பமாகவும், திருத்தமாகவும் செய்யவேண்டும் என்ற கொள்கையுடையவர் போதலேர். நிறைய எழுதுவதை அவர் விரும்பவில்லை. ஒன்று செய்தாலும், ஒப்பற்றதாக இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். நச்சுப்பூக்களை 1850-இல் தொடங்கினார். அதன் குறைகளைக் களைந்து, பத்தாண்டுகள் திருத்தம் செய்து, மேன்மேலும் அழகுபடுத்தினார். 1861-இல் அதன் இறுதி வடிவம் உருப்பெற்றது.

போதலேரின் படைப்புகள் பற்றி ஆர்தர் சைமன்ஸ் என்ற திறனாய்வாளர், தாம் எழுதியுள்ள "இலக்கியத்தில் குறியீட்டு இயக்கம்' (The Symbolist Movement in Literature) என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"ஒரே ஒரு கவிதை நூலை எழுதுவதில் போதலேர் தமது வாழ்க்கை முழுவதையும் செலவிட்டார்; அதன் பிறகுதான் பிரெஞ்சு மொழியில் உயர்ந்த கவிதைகள் எல்லாம் தோற்றம் எடுத்தன.

"ஓர் உரை நடை நூல் எழுதினார்; அந்த உரைநடை அழகுக் கலையாக (Fine Art) மதிக்கப்படுகிறது.

ஒரு திறனாய்வு நூல் எழுதினார். அவர் வாழ்ந்த காலத்தில் தோன்றிய திறனாய்வு நூல்களில் இதுவே உயர்ந்ததும் உண்மையானதும் நுட்பமானதும் ஆகும்.

ஒருமொழிபெயர்ப்புச் செய்தார்; அது மூலத்தை விடச் சிறப்பானது”.

போதலேர் எழுதியுள்ள உரைப்பாக்கள் (பாரிசின் இழி நிலை’[2]) ஐம்பது இருக்கும். அவை எதுகையோ, இசையொழுங்கோ இல்லாமல் எழுதப்பட்டவை ; உள்ளததின் உணர்ச்சிகளுக்கேற்ற ஓசையொழுங்கும் தன்னை மறந்த சிந்தனையின் அலைவீச்சும் கொண்டவை; யாரும் எளிதில் பின்பற்ற முடியாதபடி கலைநுணுக்கமும், வேலைப்பாடும் மிக்கவை; உரைப்பாக்கள் வரலாற்றில் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவை; சில பண்புகளில் ஒப்பற்றவை; இலக்கியச்சோதனை முயற்சியில் பாராட்டத்தக்க அரிய வெற்றி.

திலாக்ரிக்ஸ் என்ற ஓவியர் பற்றியும், தாமியர், மானெட், ஃப்ளாபர்ட், வேக்னர் என்ற எழுத்தாளர்கள் பற்றியும் அவர் எழுதியுள்ள கட்டுரைகள், திறனாய்வுக்கலை வளர்ச்சிபெறாத காலத்தில் எழுதப்பட்டவை. அக்கட்டுரைகளைப பெரும இலக்கிய சாதனையாகப் பிற்கால அறிஞர்கள் பாராட்டியுள்ளனர்.

அமெரிக்க எழுத்தாளர் ஆலன்போவின் கதைகளைப் போதலேர் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். மூலத்தின் சிறப்புக் குன்றாமலும், மூலத்தைவிடச் சிறந்த கலையம்சத்துடனும் அது செய்யப்பட்டிருப்பதாக எல்லாரும் குறிப்பிடுகின்றனர். அமெரிக்க மக்களிடையே இந்த மொழி பெயர்ப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

1865 ஆம் ஆண்டில் தமது படைப்புக்கள் பற்றித் தம் தாயிடம் குறிப்பிடும் போது “என் படைப்பின் அளவு சிறியதாக இருக்கலாம்; ஆனால் அச்சிறிய படைப்பு என் துயரம் மிக்க கடின உழைப்பின் வெளிப்பாடு” என்று கூறியிருக்கிறார்

1920 ஆம் ஆண்டில் ஆந்திரேகைட் என்ற அறிஞர் போதலேரைப் பற்றிப் பத்திரிகையில் குறிப்பிடும்போது “அவருடைய ஒவ்வொரு முயற்சியும், அவரது ஆன்மாவின் பரிதவிப்பாகவும், ஒப்பற்ற போராட்டமாகவும் அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார். படித்தவர் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கும்படி எட்கார் ஆலன் போவைப் பற்றிப் போதலேர் உணர்ச்சி பூர்வமாக ஒரு கருத்தை வெளியிட்டார். “இன்று நம் மகிழ்ச்சிக்கு ஊற்றாக இருப்பது (அவர் படைப்பு) எதுவோ, அதுவே அவரைக் கொன்றுவிட்டது” என்றார். அந்தக் கருத்து போதலேருக்கும் பொருந்தும்.


  1. சிதிரியா-கிரேக்கக் காதல் தேவதை வீனஸ் வீற்றிருக்கும் தீவு.
  2. Spleen de Paris.