புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்/எஸ்ரா பவுண்ட்

விக்கிமூலம் இலிருந்து

அமெரிக்கா-
ஒரு பயித்தியக்காரவிடுதி





எஸ்ரா பவுண்ட்
(1885-1972)


எஸ்ரா பவுண்ட் ஒரு புதிர். முரண்பாடுகளின் முடிச்சு யேட்ஸ், ஃப்ராஸ்ட் போன்ற மனிதாபிமானம் மிக்க கவிஞர்களோடு நெருங்கிப்பழகிய அவர் மனித சமுதாயத்தின் விடுதலை உணர்வை முற்றிலும் அழிக்க முயன்ற ஃபாசிசவாதியான முசோலினியோடும் நெருங்கிப் பழகினார். பவுண்ட் சிறந்த கவிஞர்; அறிஞர்; சீர்திருத்தவாதி.

“கவிஞர்களுள் ஒரு சிலரே வாழக்கூடிய துணிச்சலான வாழ்க்கையை நம் காலத்தில் வாழ்ந்து காட்டியவர்” என்று அமெரிக்கக்கவிஞர் வில்லியம் கார்லோஸ் வில்லியம் எசவிம், “இந்தநூற்றாண்டில் அல்லது இதற்குமுந்திய நூற்றாண்டின் இறுதியில் பிறந்த கவிஞர்கள் எல்லாரும் பவுண்டினால் பாதிக்கப்பட்டு அவர் எழுத்துக்களிலிருந்து நிறையக்கற்றுக் கொண்டனர். அதை எந்தக் கவிஞனாவது மறுத்துக் கூறினால், அவன் கண்டனத்தைதைவிடப் பரிதாபத்திற்கே உரியவன்” என்று ஹெமிங்வேயும் கூறியுள்ளார்.

அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற கவிஞரான ஃபிராஸ்ட் பவுண்டை ஒரு ‘புயற்பறவை’ என்று கருதினார். பவுண்டிற்காக அவர் எழுதிய கவிதையொன்றில், ‘உண்மையைக் கூறுகிறேன்; உன்னைக் கண்டு நான் மிகவும் அஞ்சுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்'

இப்படி உலகப்பேரறிஞர்களால் ஒருமுகமாகப் பாராட்டப்பட்ட எஸ்ரா லூமிஸ் பவுண்ட் (Ezra Loomis, Round) 1885 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் நாள் ஐக்கிய அமெரிக்காவில் இதாஹோ மாநிலத்தில் ஹெய்லி என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தாயார் அமெரிக்க கவிஞர் ஹென்றி வோர்ட்ஸ் வொர்த் லாங்ஃபெல்லோவின் உறவினர். தந்தை அரசாங்க அலுவலர்; ஹெய்லியில் முதன் முதலாகக் காரைக் கட்டிடம் கட்டியவர்.

இளமையிலேயே ஓயாமல் படிக்கும் குணமுடையவர் பவுண்ட், நியூயார்க் ஹேமில்டன் கல்லூரியில் ஒப்பிலக்கியத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர் ஸ்பெயின் நாடகாசிரியர் லோப்-டி-வேகாவின் படைப்புக்களை ஆய்வு செய்வதற்காக ஓராண்டு ஸ்பெயின், பிரான்சு, இத்தாலி ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற் கொண்டார். மீண்டும் அமெரிக்கா திரும்பி இண்டியானாவில் ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியேற்றார். ஆனால் கல்லூரி மரபுகளுக்கு மாறாகவும், மனம் போன போக்கிலும் நடப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுப் பணியிலிருந்து விலக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்ட பவுண்ட், “நான் மேற்கொண்ட கட்டுப்பாடற்ற வாழ்கை (the Latin Quarter type life) கல்லூரி நிர்வாகத்துக்குப் பிடிக்கவில்லை” என்று குறிப்பிடுகிறார்.

பவுண்டுக்கு அமெரிக்காவையும் பிடிக்கவில்லை; அமெரிக்க மக்களையும் பிடிக்கவில்லை. அமெரிக்கா குடியேற்ற நாடு. அங்கு பலநாட்டு மக்களும் குடியேறி, நிலையான ஒரு பண்பாட்டு வளர்ச்சியை அடையாத நிலையில் இருந்தனர். அங்கிருப்பதை விடத் தொன்மைச் சிறப்பும், கலை இலக்கியப் பண்பாட்டுச் சிறப்பும் மிக்க ஐரோப்பிய நாடுகளில் சென்று வாழ்வது சிறந்தது என்று பவுண்ட் கருதினார். அமெரிக்காவை ‘அரைக் காட்டு மிராண்டி நாடு’ (half-savage country) என்று இகழ்ந்து கூறிவிட்டு இங்கிருந்து வெளியேறினார். அவ்வாறு வெளியேறிய வேறிரு கவிஞர்கள் ஹென்றி ஜேம்ஸாம், டி.எஸ். எலியட்டும் ஆவர்.

தம்மை ஓர் எழுச்சி மிக்க புரட்சிக் காரனாகக் கருதிய பவுண்ட் பழமையையும் பரம்பரை பரம்பரையாகப் பழமையில் மூழ்கிக் கிடந்த அமெரிக்க நடுத்தர மக்களின் மடமையையும் வெறுத்தார். ‘புல்லிதழ்களின்’ (Leaves of Grass) ஆசிரியராகிய கவிஞர் வால்ட் விட்மனைக் கூடப் பவுண்டுக்குப் பிடிக்காது. பவுண்டுக்கு அவர் ஒரு குமட்டும் மாத்திரை. விட்மனின் கவிதைகளில் தொழில் நுட்பம் இல்லை என்பது அவர் கருத்து.

“விட்மனே! நீ ஒரு முட்டாள் தந்தை. ஒரு வளர்ந்த குழந்தையாக நான் உன்னைச் சந்திக்க வருகிறேன். உன்னை நான் நீண்ட நாட்களாக வெறுத் திருந்தாலும், உன்னிடம் நட்புச் செய்து கொள்ளும் அளவுக்கு
வயதானவன். எப்படியிருந்தாலும் புதிய கட்டையை வெட்டிக் கொடுத்தவன் நீதானே! அதைச் செதுக்கும் காலம் வந்து விட்டது. நமக்கு ஒரே மூலம்; ஒரே உயிர். நம் தொடர்பு நீடிக்கட்டும்”

என்று பவுண்ட் விட்மனிடம் சமாதானம் செய்து செய்துகொள்கிறார். இது உண்மைதான். விட்மனும் அமெரிக்கக் கவிதை, தாம் விட்ட இடத்திலேயே நிற்க வேண்டும் என்று சொல்லவில்லை; தாம் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து அது முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றே விரும்பினார்.

ஐரிஷ் கவிஞரான யேட்சைப் பவுண்ட் மிகவும் மதித்துப் போற்றினார். கடந்த ஒரு நூற்றாண்டில் யேட்சுக்கு இணையான கவிஞர்கள் யாருமில்லை என்ப்து அவர் கணிப்பு எனவே யேட்சைச் சந்தித்து அவரோடு பழக வேண்டும் என்ற ஆர்வத்தோடு பவுண்ட் இலண்டன் வந்து சேர்ந்தார். பவுண்டுடன் பழகிய யேட்ஸ் அவருடைய அறிவுநுட்பத்தை வியந்து பாராட்டினார். தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் இலண்டனில் உள்ள இளைய தலைமுறைக் கவிஞர்களுள் பவுண்ட் முதன்மையானவர்: தீவிர படைப்பாற்றல் மிக்கவர். இவர் பாலுணர்வற்ற ஓர் அமெரிக்கப் பேராசிரியர்; உணர்ச்சியை விட உழைப்புக்கு முதலிடம் கொடுப்பவர்; நினைத்தவுடன் பாடவல்ல சிறந்த ஆசு கவி; இவர் கவிதையில் உருவத்தை விட நடை நன்றாக இருக்கும்; அந்த நடையும் இடையிடையே உடைந்தும் தடைப்பட்டும் கொடுங்கனவாகவும், குழப்பம் மிக்க வலிப்பாகவும் முடிந்து விடும். அவருடைய சோதனை முயற்சிகள் தவறானவையாக இருக்கலாம். ஆனால் எழுச்சியில்லாத மரபைவிட, முன்னேற்றமான, தவறுகள் பரிசுக்குரியவை” என்று யேட்ஸ் குறிப்பிட் டுள்ளார்.

இலண்டனில் வாழ்ந்த காலத்தில், எழுத்தில் தீவிரப் புரட்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துடைய இளைஞர்களை ஒன்று சேர்த்துப் பவுண்ட் அவர்களுக்குத் தலைமை தாங்கினார். இங்கு வாழ்ந்த காலத்தில் இவர் மேற்கொண்ட பணிகளில் குறிப்பிடத் தக்கது. அமெரிக்க அறிஞர் எர்னெஸ்ட் ஃபென்னலோசா (Ernest Fennelosa) வின் கையெழுத்துப் படிகளை ஆய்ந்து சீன, ஜப்பானியக் கவிதைகளையும், நோ (Noh)[1] நாடகங்களையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பதிப்பித்ததுதான். ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் பண்புகளையும், சிறப்புக்களையும் மேலை நாடுகளில் விளம்பரப் படுத்திய பெருமையும் இவரையே சாரும்.

பவுண்டுக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர்களின் தாக்கமும், ப்ரவென்கல் பாடகர்களின்[2] (Provencal Singers) தாக்கமும் மிக அதிகம், ஆங்கிலக் கவிஞர்களுள் பிரௌனிங்கை இவருக்கு மிகவும் பிடிக்கும். பிரெளனிங் கவிதைகளில் காணப்பட்ட கலைநுட்பம் இவரைப் பெரிதும் கவர்ந்தது. கிட்டத்தட்ட இருவருடைய கவிதை உத்திகளும் ஒன்றே.

ருசிய இலக்கியங்கள் இவரைக் கவரவில்லை. சிறந்த ருசிய எழுத்தாளர்களான தால்ஸ்தாய், தாஸ்தாவ்ஸ்கி, செக்காவ் ஆகியோரின் படைப்புக்கள் கூட பவுண்டின் நூலகத்தில் இடம்பெறவில்லை. இலண்டனில் வாழ்ந்த காலத்தில் ஆர்னாட்டேனியல், காதியர், கேவல் கேண்டி, ஹென்றி ஜேம்ஸ் ஆகியோரின் நூல்களை விரும்பிப்படித்தார்.

பவுண்டின் நட்பால் அதிகப்பயன் பெற்றவர் கவிஞர் டி. எஸ். எலியட். அவர் பவுண்டின் திறனாய்வினை ஏற்றுப் ‘பாழ்நிலம்’ என்ற தமது கவிதையைப் பாதியாகச் சுருக்கிக் கொண்டார். அதுவே அக்கவிதையின் வெற்றியாக அமைந்து அவருக்கு நோபெல் பரிசையும் தேடிக் கொடுத்தது. இந் நன்றிக்காகவே சிறந்த தொழில் வல்லுநருக்கு (the better Craftsman) என்று சொல்லி அக்கவிதையைக் பவுண்டுக்குப் படைத்திருக்கிறார். எலியட்டின் வெற்றிப் படைப்புக்களான ‘ஒரு பெண்ணின் வரலாறு’ (Portrait of a Lady), ப்ருஃப்ராக் (Prufrock) ஆகிய இரண்டுமே பவுண்டின் படைப்புக்களைப் படித்த தாக்கத்தால் உருவானவை.

சம காலக் கவிதைகளில் காணப்பட்ட மிகு புனைவியக் (Romantic Excess) கொள்கையைத் தீவிரமாக எதிர்த்த இளங்கவிஞர்களை யெல்லாம் ஒன்றுதிரட்டி ஓர் அமைப்பை நிறுவினார். மற்ற கவிஞர்களிடமிருந்து அவர்களை வேறு பிரித்துக் காட்டுவதற்காக அவர்களுக்குப் படிமக்கவிஞர்கள் (imagists) என்று பெயர் சூட்டினார். பிறகு படிமக்கவிஞர்களின் கொள்கை அறிக்கை (the manifesto of imagists) ஒன்றையும் வெளியிட்டார். அவ்வறிக்கை வருமாறு:

(1) பேச்சு வழக்குச் சொற்களும் கவிதையில் இடம் பெற வேண்டும்; கவிதைக்கு அலங்காரச் சொல்லைவிடச் சரியான சொல்லே தேவை.

(2) ஒரு கவிஞன் தனது தனித் தன்மையை மரபைவிடக் கட்டற்ற கவிதையில்தான் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்று.நம்புகிறோம். எனவே யாப்பிலக்கண அடிப்படையில் எழுப்பப்படும் சந்தங்களை விட கருத்துத் தொனியின் அடிப்படையில் எழுப்பப்படும் சந்தங்களே சிறந்தவை. அவையே கவிஞனின் மனநிலையைத்தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

(3) கடினமாக இருந்தாலும் சரியாக எழுதப்படும் கவிதையில் தெளிவின்மையோ, கருத்துறுதியற்ற தன்மையோ இருக்காது.

மேலே குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் நல்ல கவிதையிலக்கியப் படைப்புக்களுக்கு இன்றியமையாதவை என்றாலும், இலண்டன் இலக்கிய வாதிகளிடையே இக்கருத்துக்களுக்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. போராட்டக் குணம் மிக்க அமி லோவல் (Amy Lowell) என்ற பெண்மணி இவருக்கு எதிராகக் கிளம்பி, இளங்கவிஞர்களைத் தம் பக்கம் ஈர்த்துக் கொண்டு படிம இயக்கத்துக்குத் தலைமை ஏற்றார். இதனால் வெறுப்பும் சலிப்பும் அடைந்த பவுண்ட் அவர்களை நெல்லிக் காய் மூட்டை என்று வெறுத்தொதுக்கிவிட்டு, இலண்டனை விட்டு வெளியேறிப் பாரிசு நகரம் வந்து சேர்ந்தார்.

எங்கு சென்றாலும் அவரைப் பின்பற்றும் ஓர் இளைஞர் கூட்டம் அவரைப் சுற்றிக் கொள்வதுண்டு. ஆனால் பவுண்டு அவர்களைச் சட்டை செய்வதில்லை. இவருடைய விமர்சனங்களும் மிகக் கடுமையானவையாக இருக்கும். எப்படியிருந்தாலும் இவர் ஒரு வியப்பிற்குரிய மனிதராக எல்லாராலும் கருதப்பட்டார். ஓவியரும் நாவலாசிரியருமான விண்ட்ஹாம் லூயிஸ் Wyndham Lews இருபது வயது இளைஞரான பவுண்டைப் பற்றிக் குறிப்பிடும் போது “சகித்துக் கொள்ள முடியாத விறைப்பும், அலட்டலும், துள்ளலும் மிக்க அமெரிக்கச் செந்தாடி இளைஞன், தண்ணீரில் மிதக்கும் எண்ணெய்த் துளியாக அவன் யாரிடமும் ஒட்டாமல் இருந்தான். அவன் விருப்பமெல்லாம் பிறர் உள்ளத்தில் தன்னைப் பற்றிய முத்திரை பதிக்க வேண்டுமென்பதே” என்றுகூறுகிறார்.

பவுண்டின் பிடிவாதமும் புலமைச் செருக்கும் மேலைநாட்டு இலக்கிய வட்டாரத்தில் மிகப் பிரசித்தம். இலக்கிய வாதிகள் அவரை நெருங்கவே அஞ்சுவர். மேடையில் பேசும் போது கரகரத்த குரலில் கலைப் புரட்சிக் கொள்கையை உரக்கப் பேசுவார். அவருடைய முரட்டுத் தாடியும், யாரையும் மதிக்காத தன்மையும், குத்தலுடன் கூடிய கிண்டல் பேச்சும் ஒரு சர்வாதிகாரப்புரட்சித் தலைவனாக அவரை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தின. என்றாலும் கலைப்புரட்சியை முன்னின்று நடத்தவும், கவிதைப் புதுமையை நிலைநாட்டவும், கவிதை (Poetry) ஊழிக்காற்று (Blast) போன்ற சிறிய விடிவெள்ளிப் பத்திரிகைகளை நடத்தவும் அவர் தேவைப்பட்டார்; அவர் புயல் உழைப்பாளி.

தமது 27 ஆம் வயதிற்குள் பவுண்ட் ஐந்து படைப்புக்களை வெளியிட்டார்.அவருடைய துவக்ககாலக்கவிதைகள், பழமையான பிரெஞ்சுக்கவிதை மற்றும் ஆங்கிலப் புதுக்கவிதைகளின் கலவையாக அமைந்திருந்தன; மேலும் ப்ரவென்கல் கவிஞர்கள், இடைக்காலத் தன்னுணர்ச்சிக் கவிஞர்கள், பிரெளனிங், வில்லியம் மோரிஸ், ஸ்வின்பர்ன், லயனல் ஜான்சன் போன்றோரின் படைப்பின் சாயலையும் அவற்றில் காணலாம். பழமையும் செழிப்பும் மிக்க நாட்டுப் பாடல்களும், பிரெஞ்சு மடக்குப் பாடல்களும் இவருடைய கன்னிப் படைப்புக்குக் கடைக் காலாக அமைந்தன. பவுண்ட் தமது 29 ஆம் வயதில் ‘டோரதி ஷேக்ஸ்பியர்’ என்ற பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது.

பாரிசு நகர நண்பர்களையும், இளைஞர்களையும், இலக்கியவாதிகளையும் பவுண்ட் தன் பேச்சாலும், கருத்தாலும், அசாத்தியப் புலமையாலும், படைப்பு வேகத்தாலும், வக்கர புத்தியினாலும், முரட்டுத்தனத்தாலும் எரிச்சலூட்டிக் கொண்டும் திகைக்க வைத்துக் கொண்டுமிருந்தார். நாளாக ஆக அவர் கண்டிப்புமிக்க முரட்டு ஆசிரியராக மாறித் தம் அறிவுரைகளை எல்லாருக்கும் வழங்கிக் கொண்டிருந்தார். அதேசமயத்தில் புதுவிதமான படைப்பாற்றல் ஒன்று அவரிடம் கால்கொள்ளத் தொடங்கியது. குத்தலும் கிண்டலும் கூடிய உரையாடல் பாணியில் அவர் கவிதை எழுதத் தொடங்கினர் மொழிபெயர்ப்புகள் தனித்தனிச் சிறிய கவிதைத் தொடர்ச்சிகள் என்ற நிலையிலிருந்துமாறிச் சிக்கலான வடிவமைப்பையுடைய நீண்ட கவிதை முறைக்கு மாறினார். 35ஆவது வயதில் அவர் எழுதி வெளியிட்ட ஹக்கில்வின் மாபெர்லி (Hug Selwyn Mauberly) என்ற கவிதைத் தொடர் அவர் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைநதது.

‘மாபெர்லி’ பன்னிரண்டு கவிதைகள் அடங்கிய தொடர். இக் கவிதைத் தலைவன் மாபெர்லி விளம்பரமில்லாத ஒரு கற்பனைக் கவிஞன்; தனக்கு முற்பட்ட கலை இலக்கியச் சாதனைகளை நன்கறிந்த அழகியல்வாதி. ஆனால் தன்னைச் சுற்றியுள்ள கலை இலக்கிய வாதிகளின் போலித்தனங்களோடும், சமுதாயத்தின் கொச்சைத் தன்மையோடும் அவனால் ஒத்துப்போக முடியவில்லை. தனக்கென்று படைத்துக் கொண்ட தற்காப்பான நுண்ணிய தனிமை உலகில் அவன் தன்னைச் சுருக்கிக் கொள்கிறான். ப்ருஃப் ராக்கின் பாத்திரப் படைப்பு டி. எஸ். எலியட்டுக்கு எப்படி ஒரு முக மூடியாக அமைந்ததோ அதேபோல மாபெர்லி பாத்திரம் பவுண்டின் முக மூடியாக அமைந்துள்ளது. மாபெர்லி பாத்திரத்தின் வாயிலாகத் தன் சொந்தக் கருத்துக்களையும், கொள்கைகளையும், விருப்பு வெறுப்புக்களையும் குத்தலும் கேலியும் கலந்து கொட்டித்தீர்க்கிறார். தமக்கு அந்நியமாகிப் போன ஆங்கிலக் கலாச்சாரத்தின் கோணல்களையும், வியாபாரத் தன்மை மலிந்து போன போலிக் கலை இலக்கிய உலகையும் கடுமையாகச் சாடுகிறார். மாபெர்லி வாழ்ந்த இங்கிலாந்தின் கவிதை இலக்கியச் சூழல் பற்றிக் குறிப்பிட்ட பவுண்ட்,

இந்த நேரத்தில்
இவர்களின் அவசரத்தேவை
வசன மென்னும காரைப் பூச்சு:
சலவைக் கல்லோ
சந்தச் சிற்பமோ அல்ல.

என்று கூறுகிறார்.

மாபெர்லி கவிதை, சங்கிலித் தொடரான கலை நுணுக்கச் சாதனைகளும், முரட்டு வேகம் கலந்த காட்டாற்றுக் கருத்தோட்டமும், ஒழுங்குக்குட்பட்ட நினைவலைகள் இடைவெட்டும் உணர்ச்சிமயமான மேற்கோள்களும் நிறைந்தது. பவுண்ட் இக்கவிதையைப் பற்றிக் குறிப்பிடும்போது இது உணர்ச்சியின் சரியான பதிவு. “இது குறிப்பிட்ட ஒரு காலத்தில் குறிப்பிட்ட ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட அனுபவம்; இது வாழ்க்கையின் இன்பியல் துன்பியல் இரண்டையும் குறிப்பிடும் காவியம். ஆர்னால்டின் தேய்ந்துபோன தொடரான வாழ்க்கையின் ஆய்வு (Criticism of life) என்பது இதற்குச் சிறப்பாகப் பொருந்தும்” என்று கூறுகிறார்.

பவுண்டின் படைப்புக்களில் எல்லாராலும் அதிகம் பேசப்படுவதும், திறனாய்வுக்கும், கண்டனத்துக்கும், பாராட்டுதலுக்கும் உட்படுத்தப்படுவதும் அவருடைய காண்டங்கள்[3] (Cantos) ஆகும். இக்காண்டங்கள் பவுண்டின் ஆழ்ந்த சிந்தனையில் முளைத்த தனிமொழிகள் (Monologues). இவற்றை எழுதிமுடிக்கப் பவுண்டுக்குக் கால் நூற்றாண்டுகள் பிடித்தன. முதல் பதினாறு காண்டங்கள் 1925-ஆம் ஆண்டிலும், மற்ற காண்டங்கள் அடுத்த இருபது ஆண்டுகளிலும் வெளியிடப்பட்டன. பைசா நகருக்கு அருகில் சிறை வைக்கப்பட்டபோது, அவர் பத்துக் காண்டங்கள் எழுதினார். அவை பைசா காண்டங்கள் (Pisan Cantos) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டன. எல்லாமாகச் சேர்த்து எண்பத்தைந்து காண்டங்கள் இந்நூலுள் அடங்கும்.

இக்காண்டங்கள் வெளியான புதிதில் இதைப்படிக்க முயன்றவர்கள். ஏதும் புரியது விழித்தனர். இவை ஏதேர் மறை சொற்களால் (Code) எழுதப்பட்டவை என்றும், ஏற்றதிறவு கோல் இல்லாமல் இவற்றுக்குள் நுழைய முடியாது என்றும் கூறினர். இக்கூற்றினை முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. இக்காண்டங்கள் புரிய வேண்டுமானால் ஹோமரின் ஒதீசியத்தை (Odyssey) உள்ளத்தில் நினைத்துக் கொண்டு படிக்கத் தொடங்க வேண்டும். கிரேக்கக் காப்பியத்தலைவன் ஒதீசியஸ் திராய் நகரப் போருக்குப்பின் கப்பலில் தன் தாய் நாடு திரும்புகிறான். ஆனால் வழிதவறிப் பல இடங்களிலும் சுற்றியலைந்து பல விதமான சோதனைகளுக்கும் அல்லல்களுக்கும் ஆளாகிப் பலதரப்பட்ட புதிய அனுபவங்களைப் பெற்று இறுதியில் தன் நாடான இதாகாவை அடைகிறான். இங்குக் காண்டங்களின் நாயகன் எஸ்ரா பவுண்ட், ஒதீசியஸின் கடைசிக் குறிக்கோள் மனைவியையும், மகனையும் சென்றடைவது. காண்டங்களின் குறிக்கோள் ‘தான் யார்’ என்பதையும், ‘உலகம் என்ன?’ என்பதையும் கண்டறிவது தான். இவ்வினாக்களுக்கு விடையறியப் பார்வையற்றுத் திரியும் நாடோடியாக அலைகின்றார் பவுண்ட்.

பவுண்ட் இந்தக் காண்டங்களைத் தாந்தேயின் தெய்வீகக் காப்பியத்திற்கு (Divine Comedy) ஒப்பிட்டுப் பேசுகிறார். தாந்தேயின் காப்பியம் மூன்று காண்டங்களாக அமைந்துள்ளது. முதல்காண்டம் நரகம் (inferno) இரண்டாவது காண்டம் கழுவாய் (Purgiaiorio.) மூன்றாவது காண்டம் சுவர்க்கம் (Purgiatouo). தாம் எழுதியுள்ள கிரேக்கம், மறுமலர்ச்சி, முதல் உலகப்போர் பற்றிய காண்டங்கள் நரகத்திற்கும், பொருளாதாரம் கடும் வட்டி பற்றிய காண்டங்கள் கழுவாய்க்கும், இறுதிக் காண்டங்களைச் சொர்க்கத்திற்கும் ஒப்பிடுகிறார் பவுண்ட்.

ஆனால் இலககியவாதிகள் இவைபற்றி வெவ்வேறுபட்ட கருத்துக்களைக் கூறியுள்ளனர். காண்டங்கள் பவுண்டின் உன்னதப் படைப்பு என்றும், உயிரோட்டமுள்ள வற்றாத காப்பியம் என்றும் ஒரு சாரார் குறிப்பிடுகின்றனர். ஒரு சாரார் ‘கிறுக்குப் பிடித்த, சிறு பிள்ளைத்தனமான கருத்துக்களைக் குவித்துவைத்திருக்கும் படுகுழி’ என்று பழித்துரைக்கின்றனர்.

ஒரு முறை சிலர் பவுண்டைச் சந்தித்து, “தனித் தனிக் காண்டங்கள் எதைக் கூறுகின்றன? ஒட்டு மொத்தமாக எல்லாக் காண்டங்களும் கூறும் மையக்கருத்தென்ன?” என்று கேட்டனர். அதற்குப் பவுண்ட் பின்வருமாறு விடையிறுத்தார்:

(1) “தனித் தனிக் காண்டங்கள் அறிவு ஜீவிகளின் பேச்சைப் போல், ஒழுங்கிற்கு உட்படாத ஒழுங்குடன் காணப்படும்.

(2) மொத்தக் காண்டங்களும் படிப்போரைத் துன்புறுத்தும் உருவகக்குப்பை. படிப்பவர்கள் என்ன நினைக்கிறார்களோ அவற்றை யெல்லாம் எற்றுக்கொள்ளும்”.

இந்தக் காண்டங்களைப் படித்தபிறகு ஆலன் டேட் (Allen Tate) என்ற அறிஞர் ‘இவை எதைப் பற்றியும் இல்லை’ என்ற முடிவுக்கு வந்தார்.

‘மனித வாழ்க்கையைப் பல குரல்களிலும், பல பரிமாணங்களிலும் கூறும் காப்பியமே காண்டங்கள்’ என்று பவுண்ட் குறிப்பிட்டாலும், இவற்றில் பொதிந்துள்ள மிகைப்பட்ட வருணனைகளையும், மறைமுகமான கேலிகிண்டல்களையும், திடீர் மகிழ்ச்சிப் பரவசத்தையும், வியப்புரைகளையும், வேறுபட்ட பொருள் வழங்கும் சுட்டுச் சொற்களையும், குழப்பும் குறும்புத் தனங்களையும் புரிந்து கொள்ளச் சாதாரண அறிவுள்ளவர்களால் முடியாது. பல்மொழியறிவும், பன்முகப்பட்ட இலக்கிய வரலாற்றுப் புலமையும், கிரேக்க இதிகாசத் தெளிவும் பெற்றிருக்க வேண்டும். சீன ஜப்பானியக் கவிதைப் போக்கும், கன்பூசியத் தத்துவமும், பர்சிசமும் புரிந்திருக்க வேண்டும். பேரகராதி (Encyclopaedia) மற்றும் பன்மொழிச் சிற்றகராதிகளின் துணையும் வேண்டும். பவுண்டின் சமகால நண்பர்கள், அவர்களிடம் அவர் கொண்டிருந்த நட்பு, அந்தரங்கம் யாவும் தெரிந்திருக்க வேண்டும். இவ்வளவும் போதா. இன்னும் இசையறிவும், சிற்ப ஓவியக் கலையறிவும் வேண்டும். இவ்வளவு முஸ்தீபுகளுடன் காண்டங்களை நெருங்கினாலும், ‘அவற்றின் பொருளின் மணம் குருதியில் பரவுவதற்கு ஒவ்வொருமானவனும் ஆறுமுறையாவது படிக்க வேண்டும்’ என்று பவுண்டின் வி‘சிறி கவிஞர் ரிச்சர்டு பெர்ஹார்ட்’ என்பவர் குறிப்பிடுகிறார்

“காண்டங்கள் நாகரிகத்தின் கரையிலிருந்து கூர்ந்து நோக்கி எழுதப்பட்ட உலக வரலாறு” என்று ஃபோர்டு மேடாக்ஸ் ஃபோர்டு' என்பவர் குறிப்பிடுகின்றார்.

“காண்டங்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமானால், முடிவற்ற குழப்பம் சலிப்பூட்டும் மூடுபனியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது” என்று ஃபிட்ஜரால்டு குறிப்பிகிறார்.

பவுண்டின் படைப்புக்கள் பற்றி எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவருடைய ஆர்வலர்கள் அவருடைய எழுத்தைப் புதிய வேதமாக எற்றுப் போற்றுகின்றனர். பவுண்ட் தம் கவிதைகளோடு, பிரெஞ்சுக் கவி வில்லன் பற்றி இசை நாடகம் ஒன்றும் (Opera), பல கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார். அளவிறந்த மொழி பெயர்ப்புகளும் செய்திருக்கிறார். இந்த நூற்றாண்டின் சிறந்த மொழி பெயர்ப்பாளர் என்று பவுண்டைக் கூறலாம.

பவுண்ட் பாரிசை விட்டு 1924- ஆம் ஆண்டு இத்தாலி நாட்டு ரிவைராவில் சற்று வெதுவெதுப்பான ரேபல்லோ என்ற இடத்துக்குக் குடிபெயர்ந்தார். 1939-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று கொஞ்சநாள் தங்கினார். அப்போது ஃபாசிசத்தைப் புகழ்ந்தும், அமெரிக்க ஜனாதிபதி ஜெஃபர்சனை முசோலினியோடு ஒப்பிட்டுப் பேசியும் அமெரிக்க மக்களின் எதிர்ப்புக்கு ஆளானார். இவரை ஆதரித்த நண்பர்களும் செய்வதறியாது திகைத்தனர். ‘டக்ளஸ் ணமுதாயக்கடன் திட்டத்தை’ (Douglas Social Credit System)ij பற்றிப் பேசி யூதர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டார். அமெரிக்காவை விட்டு வெளியேறி நீண்டநாள் நாடோடியாகத் திரிந்த தனிமை வெறுப்பு அவரை அவ்வாறு பேச வைத்துவிட்டது என்று எல்லாரும் எண்ணினர். தம்மைக் குறை கூறி விமர்சிப்பதைப் பவுண்ட் எப்போதும் தாங்கிக் கொள்ளமாட்டார். மீண்டும் இத்தாலிக்கே திரும்பிவிட்டார்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. ஃபாசிஸ வாதிகளுக்கு ஆதரவாகவும், அமெரிக்கர்களுக்கு எதிராகவும் ரோம் நகர வானொலியில் வாரம் இரு முறை பிரசாரத்தில் ஈடுபட்டார் பவுண்ட். அமெரிக்க நாட்டையும், அதன் மக்களாட்சி முறையையும், ஆட்சித்தலைவர் ரூஸ்வெல்ட்டையும் கடுமையாக விமர்சித்து வசைமாரி பொழிந்தார். அவர் பேச்சில் யூதவெறுப்பு கொப்பளித்தது; அவர் கவிதைகளிலும் இவ்வெறுப்புக்கள் பொங்கி வழிந்தன.

இரண்டாம் உலகப்போரில் நேசநாடுகள் வெற்றி பெற்றதும், 1945-ல் தேசத்துரோகக்குற்றத்துக்காக அமெரிக்கப்படையினரால் கைது செய்யப்பட்டு, பைசா நகருக்கு அருகில் இருந்த இராணுவச் சிறைச்சாலைக்குக் (Army Disciplinary Barracks) கொண்டு செல்லப்பட்டார். அங்கே கடும் குற்றவாளிகளுக்கெனப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட எஃகு வலைக் கூண்டில் அடைக்கப்பட்டார். அப்போது பவுண்டுக்கு வயது அறுபது. ஆறு திங்கள் இக்கூண்டில் அடைக்கப்பட்ட பவுண்டின் உடலும், உள்ளமும் பாதிக்கப்பட்டன. மறதியாலும், தனிமை நோயாலும் (Claustro phobia) மிக வருந்தினார். என்றாலும் சிறைக் கூண்டிலும் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. சிறையிலிருந்து எழுதிய காண்டங்களில் சிறையனுபவம், தனிமைத்துன்பம், ஆன்மத்தேடல் ஆகியவற்றைப்பதிவு செய்கிறார். தமது சிறையனுபவத்தைக் குறிப்பிட்ட பவுண்ட்,

என்னை-
ஆபத்தான கொடூர மனிதன்
என்றெண்ணி
எல்லாரும் வெறுத் தொதுக்கினர்
இரவும் பகலும்
எனக்குக்
காவல் இருந்தது

சிப்பாய்கள்-
அடிக்கடி என்னை வந்து
எட்டிப் பார்ப்பார்கள்.
சிலர் எனக்கு
உணவு கொண்டு வருவர்.
கிழவன் எஸ்...
பரிசுக் குரிய்
ஒரு காட்சிப் பொருள்

என்று உருக்கமாக எழுதுகிறார்.

பிறகு பவுண்ட் விசாரணையின் நிமித்தம் வாஷிங்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைச் சோதித்த மருத்துவர்கள், அவரை ஒரு மனநோயாளி என்று முடிவு செய்தனர். அதனால் விசாரணையிலிருந்தும், மரண தண்டனையிலிருந்தும் விடுபட்டு, செயிண்ட் எலிசபெத் மன நோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அவர் இருந்தபோது அவருடைய சிறைக் கவிதைகளுக்கு (Pisan cantos) அமெரிக்க நூலகப் பேராயத்தால் (Fellows of library) போலிங்கன் பரிசு (Bollingan prize) வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு எதிரான அரசியல்வாதிகளும இலக்கிய வாதிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்தப் போராட்டம் பல மாதங்கள் நீடித்தது.

பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, அவருடைய தள்ளாமை கருதி, மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் மீது சாட்டப்ப்ட்ட குற்றங்கள், அவருடைய புத்தி பேதலிப்பின் விளைவு என்று கருதி அமெரிக்க அரசாங்கம் அவர் மீதிருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. மருத்துவ மனையை விட்டு வெளியேறியதும் பவுண்ட் மீண்டும் இத்தாலிக்கே திரும்பிவிட்டார்.

“சுதந்திர பூமி என்று சொல்லப்படும் அந்த நாட்டிலிருந்து விடுதலை பெற்றதற்காக நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்; அமெரிக்கா ஒரு பயித்தியக்கார விடுதி” என்று அறிவித்தார் பவுண்ட்.


  1. ஜப்பானிய நாடகம் ஃபென்னலோசாவின் கையெழுத்துப் பிரதிகளில் இந்நாட்கங்கள் கிடைத்தன. பவுண்ட் இவற்றைச் செப்பனிட்டு வெளியிட்டார். ‘நோ’ நாடகங்களிலிருந்து பவுண்ட் கற்றுக் கொண்ட பல செய்திகள் ‘படிமம்’ பற்றிய அவருடைய கோட்பாடுகளை உருவாக்கின
  2. பிரெஞ்சு நாட்டில் provencal என்ற பகுதியில் வாழ்ந்த பாடகர்கள். இப்பகுதியில் வழங்கிய பிரெஞ்சு மொழிமரபுக்கு ஏற்ப எழுதப்பட்ட இவர்களுடைய நாட்டுப்பாடல்களைப் பவுண்ட் மிகவும். விரும்பிப்படித்தார். துவக்ககாலப் பவுண்டின் கவிதைகளில் இப்பாடல்களின் தாக்கம் இருந்தது.
  3. 'Canto' என்பது காப்பியப் பகுப்பு. இதை சமஸ்கிருதத்தில் 'காண்டம்' என்று குறிப்பிடுகிறோம்.