புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்/டி. எஸ். எலியட்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

என் வாழ்க்கையைக்
காஃபிக் கரண்டியால் அளந்து
சலித்துப் போனேன்.

 டி. எஸ். எலியட்
(1888-1965)


தாமஸ் ஸ்டெர்ன்ஸ் எலியட் எழுபத்தைந்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர்; நாற்பத்தைந்தாண்டுகள் தீவிர இலக்கியப் படைப்பில் ஈடுபட்டவர்; மிகச்சிறந்த ஆங்கிலக் கவிஞருள் ஒருவராக மதிக்கப்படுபவர். இருபதாம் நூற்றாண்டுப் புதுக் கவிதையுலகில் இவரைப்போல் பாதிப்பை ஏற்படுத்திய கவிஞர் வேறுயாருமில்லை. என்றாலும் இவர் படைப்புக்கள் சாதாரண மக்களைச் சென்றடையவில்லை. இவர் அறிஞர்களின் கவிஞர். இவர் படைப்புக்களில் உள்ள இருண்மையும் (Obscurity) ஆன்மரகசியப் புனைவும் (mystcism) எளிதில் எவரையும் நெருங்க விடுவதில்லை. எனவே இவரைப் பொதுவாக மேலை நாட்டு இலக்கியவாதிகள் ‘அருவக் கவிஞர்’ (the invisible poet) என்று குறிப்பிடுவது வழக்கம்.

எலியட் ஐக்கிய அமெரிக்க நாட்டில் மிஸ்ஸௌரி மாநிலத்தில், செயிண்ட். லூயிஸ் நகரில் 1888-ல் பிறந்தவர், தந்தை ஹென்றி வேர் எலியர் ஒரு தொழிலதிபர்: செங்கல் ஆலை நடத்தியவர். தாய் சார்லெட்ஸ்டெர்ன்ஸ் எழுத்தாற்றலும், கலையார்வமும் மிக்க சமூகசேவகி. தந்தை வழிப்பாட்டனார் செயிண்ட் லூயில் நகரில், இறையொருமைக் கோட்பாட்டுத் திருச் சபையையும் (unitarian church), வாஷிங்டன் பல்கலைக் கழகத்தையும் நிறுவியவர்; சமயச் சார்பான பல நூல்களை எழுதியவர். எலியட் ஓர் எழுத்தாளராகவும் சமயக் கவிஞராகவும் உருப்பெற்றதற்கு அடித்தளமாக அவருடைய பாட்டனாரும் தாயாரும் விளங்கினர். எலியட் சிறந்த வங்கி ஊழியராகவும், பதிப்பாளராகவும் விளங்கியதற்குத் தந்தையின் தொழில் திறமை அடித்தளமாக விளங்கியது.

ஏலியட்டின் இளமைக் கல்வி செயிண்ட் லூயிசில் இடம் பெற்றது. பின்னர் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1906லிருந்து 1910 வரை உயர்கல்வி பயின்றார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே எலியட் சிறந்த மாணவராகக் கருதப்பட்டார். 1900 ஆம் ஆண்டில் இலத்தீன் பாடத்தில் சிறப்பான தேர்ச்சி பெற்றதற்காகத் தங்கப் பதக்கம் பெற்றார். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் விரிவாக மொழி, இலக்கியப் பாடங்களைப் பயின்றார். ஒப்பிலக்கிய ஆய்வில் இளமையிலிருந்தே அவருக்கு விருப்பம் அதிகம். அதனால் கிரீக், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கில இலக்கியங்களை விருப்பப் பாடமாகவும் பயின்றார்.

எலியட்டின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்தவர்கள் இர்விங்பாபிட், ஜியார்ஜ் சாந்தாயணா என்ற இரண்டு பேராசிரியர்கள். பண்டைய மரபுகளில் எலியட் தெளிந்த அறிவு பெற்றதற்கு இவர்களே காரணம். ஆர்தர் சைமன்ஸ் என்பார் எழுதிய ‘இலக்கியத்தில் குறியீட்டு இயக்கம்’ (the symbolist movement in literature) என்ற நூலை 1908-இல் எலியட் படித்தவுடன், பிரெஞ்சுக் குறியீட்டுக் கவிஞர்களின் படைப்பில்- குறிப்பாக லாஃபோர்க்கின் கவிதைகளில்- அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் படிக்கும் காலத்திலேயே அவருக்குக் கவிதை எழுதுவதில் ஆர்வம் இருத்தது. ஹார்வார்டு இதழான 'அட்வகேட்' (advocate)டைப் பதிப்பிக்கும் பொறுப்பானராக இருந்த எலியட் அதில் தமது துவக்ககாலக் கவிதைகனை வெளியிட்டார்.

1910-ஆம் ஆண்டில் ஹார்வார்டில் பட்டம் பெற்ற பிறகு பாரிசு நகரம் சென்று சார்மோன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஓராண்டுக்காலம் பிரெஞ்சு குறியீட்டிலக்கியங்களைப் பயின்றார். பாரிசில் அப்போது வாழ்ந்த பிரெஞ்சு இலக்கிய வாதிகளோடு நெருங்கிப் பழகி, அவர்கள் படைப்புக்களையும் பயின்றார். பின்னர் பவேரியா, ஜெர்மனி முதலிய நாடுகளுக்குச் சென்று, அங்கே முக்கியமான் சில ஜெர்மன் எழுத்தாளர்களைச் சந்தித்து அவர்களுடைய படைப்புக்களையும் பயின்றார். பிறகு மீண்டும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருத இலக்கியமும் இந்தியத் தத்துவமும் பயின்றார். ஓய்வு நேரங்களில் குத்துச்சண்டை பயின்றார். ஆன் முனையில் (Cape Ann) தம் தந்தை கட்டியிருத்த ஓய்வுக்கால மாளிகையில் தமது விடுமுறை நாட்களைக் கழித்தார். அப்போது படகு ஓட்டும் பயிற்சியில் வல்லவரானார் இவருடைய கவிதைகளில் கடற்பயணம் பற்றிய படிமங்கள் அதிகமாகக் காணப்படுவதற்குக் காரணம் இதுதான்.

முதல் உலகப்போர் துவங்கியதும் எலியட் ஜெர்மனியை விட்டு வெளியேறி இலண்டனில் குடியேறினார் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மீண்டும் தமது கல்வியைத் தொடர்ந்தார். இங்கிலாந்தில் இருந்தபடியே பிராட்லேயின் தத்துவச் சிந்தனைகளை ஆய்வு செய்து ‘முனைவர்’ பட்டம் பெற விரும்பித்தன் ஆய்வுக் கட்டுரையை ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அப்பட்டத்தைப்பெற அவர் ஹார்வார்டு மீண்டும் செல்லவில்லை.

பொருளாதார நெருக்கடி காரணமாக அவர் சில ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், பல ஆண்டுகள் லாயிட்ஸ் வங்கி அலுவலராகவும் பணிபுரிந்தார் இலண்டன் வாழ்க்கை அவருடைய இலக்கிய முன்னேற்றத்துக்குப் பெரிதும் உதவியது. இலண்டனில் அப்போது பல இலக்கிய வட்டங்கள் இருந்தன. அவற்றுள் புளும்ஸ்பரி இலக்கிய வட்டமும், கவிஞர் சிட்வெல்லின் இலக்கிய வட்டமும் குறிப்பிடத்தக்கவை. யேட்ஸ், எஸ்ரா பவுண்ட் போன்ற சிறந்த கவிஞர்களின் தொடர்பு அவரது கவிதையாற்றலைச் சானைபிடித்துக் கொள்ளப் பெரிதும் உதவியது.1915-இல் ‘விவியன் ஹெய்க்’ என்ற நடனமாதைத் திருமணம் செய்து கொண்டு நிரந்தர ஆங்கிலக்குடிமகனாக இலண்டனில் தங்கிவிட்டார்.

1927-ஆம் ஆண்டு தம்மை ஆங்கிலக்குடிமகனாகப் பதிவு செய்து கொண்டபோது, ஆங்கிலிகன் கிறித்தவ சமயத்திலும் சேர்ந்து கொண்டார். அதன் பிறகு அவர் எழுதிய ‘மாகியின் பயணம்’ (The Journey of the Magi) ஆஷ் வெடனெஸ்டே (Ash Wednesday) ஆகிய இரண்டு நூல்களின் குரலும், அவர் புதிதாகச் சேர்ந்த சமயத்தின் உணர்வுகளை ஓங்கி ஒலிக்கக் காணலாம்

எலியட்டின் கல்வி ஆழமானது; அகன்றது. அவர் பன்மொழிப் பயிற்சியும், பல் துறைப் பயிற்சியும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர்; வாழ்ந்த காலத்திலேயே முதல்தரமான இலக்கிய மேதையாக எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பல முறை அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்குச் சென்று இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்திவிட்டு வந்தவர்; சாகும் வரை ஓய்வின்றி எழுதிக் கொண்டிருந்தவர்; உலகின் மிகச் சிறந்த பரிசுகளான ஆர்டர் ஆஃப் மெரிட், நோபெல் பரிசு ஆகியவற்றோடு வேறுபல பரிசுகளும் பெற்றவர்.

அவருடைய முதல் மனைவி நீண்ட நாள் படுக்கையில் கிடந்து 1947-இல் இறந்த பின்னர், தம்மிடம் செயலாளராகப் பணிபுரிந்த ‘வேலரி ஃப்ளெச்சர்’ என்ற மாதை 1957-இல் திருமணம் செய்து கொண்டார். இறுதிக் காலத்தில் அந்த அம்மையார் எலியட்டை அன்போடும் பரிவோடும் கவனித்துக் கொண்டார். 1965 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் நாள் புகழின் உச்சியில் வாழ்ந்தபோது இலண்டனில் எலியட் உயிர்நீத்தார். 17 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்த அவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த ‘ஈஸ்ட் கோக்கர்’ என்ற குக்கிராமத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

ஆசிரியராகவும், வங்கி அலுவலராகவும் பணிபுரிந்த பத்தாண்டுக் காலம் எலியட் நிறைய எழுதினார். அளவுக்கு மீறி உழைத்ததால் அடிக்கடி நோய் வாய்ப்பட்டார். 1918 இல் கடற்படையில் சேரத் தம்மைப் பதிவுசெய்துகொண்டார்; மோசமான உடல்நிலை காரணமாக நிராகரிக்கப்பட்டார். 1917 லிருந்து 1919 வரை ‘தி எகோயிஸ்ட்’ (The Egoist) என்ற இதழின் துணையாசிரியராக இருந்தார். 1923-இல் கிரிடீரியன் (Criterion) என்ற நாளிதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று இரண்டாம் உலகப்போர் துவங்கும்வரை தொடர்ந்து நடத்திவந்தார். 1925-இல் ஃபேபர் அண்டு ஃபேபர் (Faber aud Faber) என்ற பதிப்பகத்தின் பங்குதாரர் ஆனார். பின்னர் அதன் இயக்குநராகித் தம் வாழ்நாள் இறுதி வரையிலும் அதைத் திறம்பட நடத்தி வந்தார்.

எலியட் கண்ணுக்கு எடுப்பான தோற்றமுடையவர்; ஆடம்பரமாக ஆடை அணிபவர். உயர்ந்து மெலிந்த உடல்வாகு, சிந்தனைத் தேக்கம், அளவான அமைதியான பேச்சு, ஆரவாரமில்லாத நகைச்சுவை-இவற்றின் மொத்த உருவம் எலியட்.

எலியட் கடுமையானவராகக் காட்சியளித்தாலும், பிறரிடம் அன்பும் இரக்கமும் மிக்கவர்; தாராளமானவர்; ஆனால் பார்ப்பதற்குக் கண்டிப்பானவராகக் காட்சியளிப்பார், கீழ்த்தரமான எண்ணமோ, செயலோ இல்லாதவர். ஆழமான கல்வியும், கவிதையாற்றலும், ஆன்மீக உணர்வும் மிக்கவர்; குற்றங்களைக் கேலி செய்பவர்; பாவச் செயல்களை வெறுப்பவர்; பிடிக்காத மனிதர்களைப் பார்க்கவே விரும்பாதவர்; பல்வேறு துறையைச் சார்ந்த குறைந்த நண்பர் வட்டத்தையுடையவர்.

அவர் பெண்களின் கூட்டத்தில் மகிழ்ச்சியாகவும் ஓய்வாகவும் காணப்படுவார். கொள்கைகளைப் பற்றியோ, பிரமுகர்களைப் பற்றியோ பேசத் தயங்கமாட்டார். அப்போது அவர் வெளியிடும் கருத்துக்கள் ஆழ்ந்த சிந்தனையிலிருந்து வெளிப்படும். வெட்டிப் பேச்சை அவர் எப்போதும் விரும்பியதில்லை. சரியான தூய்மையான பழக்கங்களைக் கடைப் பிடிப்பார். அவரிடத்தில் எந்த விதமான ஒழுங்கீனத்தையும் காணமுடியாது.

எலியட் நோய்க்கு அஞ்சும் இயல்புடையவர். விளையாட்டில் விருப்பமில்லாதவர். நீண்ட கைப்பிடியுள்ள குடையை எப்போதும் எடுத்துச் செல்வார். நல்ல உணவு, பீர், ஒயின் ஆகியவற்றைச் சுவைத்துச் சாப்பிடுவார். என்றாலும் பாலாடைக்கட்டி அவருக்கு மிகவும் பிடித்தமான உணவு.

அவர் ஓர் அமெரிக்கராக இருந்தாலும் ஆங்கிலக்குடிமகனாக மாறியபிறகு அந்நாட்டின் சமயத்தையும் பண்பாட்டையும் முழுமையாக ஏற்றுக்கொண்டார். ஆங்கில மக்களைப்போல வரிக்கோடு போட்ட காலுறையும் (Striped Trousers) கருப்பு மேலங்கியும் அணிந்து கைக்குடை தொப்பிசகிதமாகக் காட்சியளிப்பார். மொழியைக்கூட ஆங்கிலேயரைப்போல ஒலிக்கக்கற்றுக் கொண்டார். அமெரிக்கத் தனித்தன்மை உருவாகக் காரணமாக இருந்த சமயக்காழ்ப்பு, குடியேற்றம், சுதந்திரப்போர் ஆகியவற்றை அடியோடு மறந்து நூற்றுக்கு நூறு ஆங்கிலேயராகவே வாழ்ந்தார்.

லீயர் மன்னன் தன்னைப்பற்றித் தானே கூறிக் கொள்வதைப் போல, எலியட்டும் தம்மைப் பற்றிச் சரியான கவிதை ஓவியத்தைக் கீழ்க் கண்டவாறு வரைந்து காட்டுகிறார்:

எழுத்தரின் சாயல்;
கடுகடுப்பான புருவம்;
போலிப் புன்னகை உதடுகள்.

கனவான் எலியட்டைக்
காணச் சகிக்கவில்லை,
இனிய பேச்சு;
‘ஆனால் , . என்ன . . . கசசிதம்
இருந்தாலும் இருக்கலாம்’
என்ற இடை வெட்டுகள்,

“நான் பழஞ் சிறப்பியவாதி (Classicist); ஆங்கிலோ-கத்தோலிக்கச் சமயவாதி” என்று கூறிக் கொள்வார். புனைவியக் கவிஞர்கள் (Romantic poets) வாழ்ந்த காலத்துக்கும் எலியட் வாழ்ந்த காலத்துக்கும் நிறைய வேறுபாடுண்டு.

பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியும், அறிவியல் வளர்ச்சியும் மக்களைச் சிந்திக்கும்படி தூண்டின. அவர்கள் எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. ‘ஏன்? எப்படி?’ என்ற பகுத்தறிவுக் கேள்விகளைப் போட்டு ஐயங்களைத் தெளிவு படுத்திக் கொள்ள விரும்பினர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் நிலப்பிரபுக்களின் ஆட்சியும், செல்வாக்கும் சரிந்து, தொழிலதிபர்கள் செல்வாக்குப்பெறத் தொடங்கினர். அதனால் கிராமங்களை விடத் தொழில் நகரங்கள் பெரிதும் வளர்ச்சி சேற்றன. நகரங்களை நோக்கி மக்கள் குவியத் தொடங்கினர். அளவற்ற மக்கட் பெருக்கத்தால் நகரங்களில் சுகாதாரக்கேடும், ஒழுக்கக் கேடும், வறுமையும், மணமுறிவும் நிறைந்து காணப்பட்டன.

ஃப்ராய்டு, ஜங் போன்ற உளவியல் அறிஞர்களின் ஆராய்ச்சி முடிவுகள் எல்லாத் துறைகளிலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தின. “எல்லா மக்களும் சிந்தனைத் தெளிவோடு நடப்பதில்லை. நிறைவேறாத விருப்பங்களும் நசுக்கப்பட்ட பாலுணர்ச்சியின் விளைவுகளும ஒரு தனி மனிதனைப் பெரிதும் பாதித்து, அவன்: செயல்களுக்குக் காரணமாகின்றன” என்று அவர்கள் விளக்கினர்.

பாலுறவைப் பற்றிப் பேசுவதோ, எழுதுவதோ, ஆராய்வதோ தவறில்லை என்ற நிலை ஏற்பட்டது. ஃப்ராஸ்டின் ஒடியஸ் உள்ளுணர்ச்சித் (The Oedipus Complex) தத்துவம் [1]அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரிடையே பெரிய பரபரப்பை ஏறபடுத்தியது. இயற்பியல், வானவியல், தத்துவவியல் துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி, இயற்கை, மனிதன், கடவுள் ஆகிய கருத்துக்களைப்பற்றி ஆழமாகச் சிந்திக்க எல்லாரையும் தூண்டியது. பொருள் முதல் வாதமும் (Materialism) மாக்சியச்சிந்தனையும் மக்களிடத்தில் கடவுள்-சமயம் பற்றிய அச்சங்களை அகற்றியதோடு உரிமையுணர்ச்சிகளையும் வளர்த்தன. பழமையை மதித்துப் போற்றும் எண்ணம் மாறியது.

மேலே கூறப்பட்ட காரணங்களால் நீண்ட காலமாக இருந்து வந்த சமூகக் கட்டுக்கோப்பு தளாந்தது; ஒழுக்க நெறிகள் மதிப்பிழந்தன. கடவுளுக்கு ஒப்பாக மதித்துப் போற்றிய ஆண்டைகளை, ஏழைமக்கள் உரிமையுணர்ச்சியோடு எதிர்த்துக் கேள்வி கேட்கத் துணிந்தனர். முதல் உலகப்போர் ஐரோப்பிய மக்களின் உள்ளத்தில் பீதியையும் அச்சத்தையும் கிளப்பி விட்டதோடு, வெறுமையையும் தோற்றுவித்தது. எதிர்காலம் இருண்டு காணப்பட்டது. இருபதாம் நூற்றாண்டுத் துவக்கத்தில் கால் கொண்டிருந்த இத்தனை எண்ணங்களும், உணர்ச்சிகளும், விளைவுகளும் எலியட்டின் படைப்பில் இடம் பெற்றன.

புதுக்கவிதை படைப்போருக்கு மரபிலக்கியப் பயிற்சி தேவையா என்று சிலர் ஐயப்படுவதுண்டு. ஆனால், மரபிலக்கியப் பயிற்சி புத்திலக்கியம் படைப்பதற்கும் புதுக் கவிதை எழுதுவதற்கும் மிகவும் இன்றியமையாதது என்று வற்புறுத்துகிறார் எலியட். கிரேக்க ரோமானியப் பண்டை இலக்கியப் பயிற்சியே எலியட்டின் வெற்றிக்கு அடிப்படையாக விளங்கியது.

“மரபு என்பது தொடர்ச்சியான வளர்ச்சியுடையது; இடையிடையே மாற்றம் அடைவது, ஒவ்வொரு புத்திலக்கியமும் தனககு முற்பட்ட இலக்கியங்களின் தொடர்பும், அவற்றினின்று சிறப்பான முன்னேற்றமும் மாறுதலும் கொண்டது. எழுத்தாளன் தன் உழைப்பால் மரபைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மரபையும், புதுமையையும் சுவைத்து மகிழ வேண்டுமானால், இலக்கியத்தின் தொடர்ந்த வராற்றறிவைப் பெற்றிருக்க வேண்டும்” என்று மரபின் உயர்வை எலியட் எடுத்துக் கூறுகிறார்.

எலியட் மரபை மதித்துப் போற்றிய அதேநேரத்தில், மரபின் குறைகளையும் எடுத்துவிளக்கினார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆங்கிலக் கவிதை மரபு தேய்ந்து இற்றுப் போன நிலையில் இருந்தது. கவிஞர்கள் தேய்ந்த பழம்பாதையிலேயே சலிப்பின்றி நடந்தனர். புதிய சிந்தனையோ தனித் தன்மையோ அவர்கள் படைப்பில் இல்லாமல் போயிற்று. வோர்ட்ஸ்வொர்த் பாடிய வானவில்லையும், குயிலையும், ஏரிக்கரை மலர்க் கூட்டத்தையும் திரும்பத்திரும்பப் பாடிக் கொண்டிருந்தனர். இப்பாடல்கள் எளிமையோடும் கற்பனையழகோடும். இனிய சந்த நயத்தோடும் இயற்கையையே சுற்றிச் சுற்றி வந்தன. கவிதைகள் நிறைய எழுதப்பட்டன. ஆனால், அவற்றின் தரம் மிகத்தாழ்ந்திருந்தது.

எளிதான இப்போக்கை மாற்றி தீவிரமான ஒரு கவிதைப் போக்கை உருவாக்க நினைத்தார் எலியட். கவிதை, சிக்கனம், சுருக்கமும், நுணுக்கமும், சிக்கலும் உடையதாக இருக்கவேண்டும் என்று கருதினார். ஒரு சிலரே புரிந்து கொண்டாலும், கவிதை தரமாக இருக்கவேண்டும் என்பது அவர் கருத்து. எனவே கவிதையின் உள்ளடக்கத்திலும், உருவத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினார்.

காதலும், வீரமும், இயற்கையும் மட்டுமே கவிதையின் பாடு பொருள் என்ற நிலையை மாற்றி, அவர் வாழ்ந்தகாலத்தில் அவரைச் சுற்றியிருந்த ஒவ்வொரு பொருளைப்பற்றியும், அவரைப்பாதித்த ஒவ்வோர் உணர்வையும் பாட்டில் வடிக்க விரும்பினார். “கவிஞன் தனக்குப் பாடு பொருளாக அழகான உலகை மட்டுமே தேடிச் செல்லக் கூடாது. அழகு, அழகற்ற தன்மை இரண்டையும் ஆராய வேண்டும். புகழ், சலிப்பு, அருவருப்பு யாவையும் அவன் பாடலில் இடம்பெற வேண்டும்” என்று கவிதையின் பயன் (The use of Poetry) என்ற தமது நூலில் எலியட் குறிப்பிடுகிறார்.

பேருந்துகளின் பேரிரைச்சலும், டிராம் வண்டிகளின் கடகட வொலியும், வான ஊர்திகளின் பெருமூச்சும் அவர் பாடல்களில் எதிரொலிக்கின்றன. போரின் கொடுமைகளையும், நகரமக்களின் அவலங்களையும், போலி நாகரிகத்தின் அலங்கோலங்களையும், ஏமாற்றத்தாலும் ஏக்கத்தாலும் பாதிக்கப்பட்டு மனநோயாளிகளாகத் திரியும் மக்களின் துயரங்களையும், சமயத்தின் போலித்தனங்களையும் பாடு பொருளாக்கினார். சாதாரண மக்களின் இன்பதுன்பங்களை, அவர்கள் பேச்சிலேயே கவிதையாக்கினார். தமக்கு முன்னோடியாகச் சில கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து, அவரிடமிருந்த சிறந்த கவிதைப் பண்புகளைத் தாம் வர்த்துக் கொண்டார். போதலேரின் கருத்துச் செறிவையும், ஜான்டன்னின் ஆழ்ந்தகன்ற பல்துறை அறிவாக்கத்தையும், லாஃபோர்க்கின் சுருக்கத்தையும், தாந்தேயின் செட்டான கவிதை நடையையும், பவுண்டின் படிம உத்தியையும் தம் படைப்பில் ஏற்றுக் கொண்டார்.

பிற கவிஞர்களின் படைப்புக்கள் மட்டுமன்றி இசை, சிற்பம், ஒவியம் போன்ற கலைகளின் நுட்பங்களும் உத்திகளும் அவற்றின் புதிய வளர்ச்சிகளும் எலியட்டின் படைப்பைப் பாதித்தன. அவருடைய ‘பாழ் நிலம்’ (Waste Land) என்ற கவிதையில் காணப்படும் சந்த வேறுபாடுகளும், மடக்குகளும், சேர்ந்திசையாக ஒலிக்கும். எனவே ஐ. ஏ. ரிச்சர்ட்ஸ் என்ற அறிஞர் எலியட்டின் கவிதைகளைக் ‘கருத்திசை’ (the music of ideas) என்று குறிப்பிடுகிறார்.

ஒரு பாடகனின் வரிசைப் படுத்தப்பட்ட இசைத் தொடர்கள், நமக்குக் கருத்துக்களை உணர்த்துவதை விட, இடையீடில்லாத இன்ப உணர்ச்சியில் நம்மை ஆழ்த்தி மெய்மறக்கச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன. ‘ஒரு நல்ல கவிதை புரிந்து கொள்வதற்கு முன்பாகவே, படிப்பவரின் உள்ளத்தில் நுழைந்து விட வேண்டும்’ என்று எலியட் குறிப்பிடுவது இதைத்தான். மையக் கருத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே, அக்கவிதையில் உள்ள படிமங்கள், குறியீடுகள், சந்தநயம் ஆகியவற்றை உள்ளத்தில் நன்கு, படியவிட்டுப் படிப்படியாக அதன் முழுமையை நெருங்க வேண்டும்.

எலியட்டின் கவிதையிலுள்ள இருண்மை வேண்டுமென்றே அவர் விரும்பி மேற்கொண்டது தான். அவர் தம் கவிதைக் கருத்துக்களைக் குறிப்பாகவும், மறை முகமாகவும், சிக்கலாகவும், மேற்கோள்கள் நிறைந்ததாகவும் வெளிப்படுத்துவார். சிலசமயங்களில் தம் கருத்து வெளிப்பாட்டிற்கு ஆங்கிலம் போதவில்லை என்று கருதினால், வேறு மொழிகளையும் இடையிடையே கையாளுவார். சில சமயங்களில் சொற்களின் பொருளையே கூட மாற்றி வடுவார். ஹோமர் முதல் தற்காலப் படைப்பாளர் நூல்களிலிருந்தும், இந்துமதம், புத்தமதம் பிற கீழைநாட்டு மதங்களிலிருந்தும், தொன்மையான புராணங்களிலிருந்தும், விவிலியத்திலிருந்தும், விளம்பரமில்லாத கட்டுக்கதைகளிலிருந்தும், பலதுறைத் தத்துவங்களிலிருந்தும் மேற்கோள்களையும், மரபுத் தொடர்களையும் அள்ளித் தெளித்துக் கொண்டு போவார். படிப்பவர் அவற்றில் முட்டிமோதிக் கொண்டு மூச்சுத் திணறுவர். ‘பாழ் நிலம்’ என்ற கவிதையில் மட்டும் இருபத்தைந்து வேறுபட்ட எழுத்தாளர்களின் மேற்கோள்களும், ஆறு வேறு மொழிகளில் எடுத்தாளப்பட்ட பகுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. எலியட்டின் செறிவான இக்கவிதைப் பாணியை ஐ.ஏ ரிச்சர்ட்ஸ் கவிதைச் சுருக்கெழுத்து (Poetic Shorthand) என்று குறிப்பிடுகிறார். கவிதையைப் படைப்பவனும், கவிதையைப் படிப்பவனும் கடுமையான மூளையுழைப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பது எலியட்டின் கருத்து.

எலியட் தாம் வாழ்ந்த காலச் சூழ்நிலைக்கு ஏற்பப் பல்வேறுபட்ட சிக்கலான பொருள்களைத் தமது கவிதைக்குரிய பாடு பொருள்களாக மேற்கொண்டது போலக் கவிதையின் வடிவத்தையும் தமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டார். கவிதை இலக்கணத்தைத் தளர்த்திக் கட்டற்ற கவிதை வடிவத்தைப் பயன்படுத்தினார். செதுக்கிய இலக்கியச் சொற்களை ஒதுக்கிவிட்டு, பேச்சு வழக்கில் உள்ள நடைமுறைச் சொற்களையும், கொச்சைச் சொற்களையும் கூடப் பயன்படுத்தினார். ஆங்கில யாப்பில் இன்றியமையாததாகக் கருதப்பட்ட இயைபுத் தொடைகளைக் கைவிட்டுவிட்டுக் கருத்துக் கேற்பவும் உணர்ச்சிக் கேற்பவும் தொடைகளை அமைத்தார். சொற்களின் ஓசை வேறுபாடுகளை வைத்துக் கொண்டே, உணர்ச்சி வேறுபாடுகளை உருவாக்கினார்.

எலியட் சிறந்த கவிஞர் மட்டும்ல்லர், திறனாய்வாளர் திறமையான நாடகாசிரியர். நகர வாழ்ககையின் கொடுமைகளும், முதல் உலகப் போரின் பின் விளைவுகளும் எலியட்டின் உள்ளத்தில் ஆழமான காயங்களை ஏற்படுத்தின. அக்காயங்கள் ஆறாத புண்களாக அப்படியே நிலைத்துவிட்டன. ஐரோப்பியச் சமுதாயத்தின் மீது அவருக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது. மக்கள் நேர்மையும், ஒழுக்கமும் அற்றவர்களாக அவருக்குத் தென்பட்டனர். ஆன்மீக உணர்வு மக்கள் உள்ளத்தில் பட்டுப் போயிருந்தது. பொய், ஏமாற்று, களவு, விபசாரம், போலித்தனம் எங்கும் மலிந்திருந்தன. இந்த இழிநிலையிலிருந்து மீளவேண்டுமானால், மக்கள் தாங்கள் செய்த குற்றங்களுக்காக வருத்த வேண்டும்; கடவுளிடம் முறையிட வேண்டும்; ஆன்மீக நெறியில் தங்களைக் கொண்டு செலுத்த வேண்டும், என்று எலியட் கருதினார். அவருள்ளத்தில் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு வடிகாலாகப் பாழ்நிலம் அமைத்தது.

“ஒரு கவிஞனின் திறமையை அவன் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்குவதை வைத்தே புரிந்து கொள்ளலாம்; வளராத கவிஞர்கள் பிறரைப் போல எழுதுவர்; வளர்ந்த கவிஞர்கள் பிறர்கருத்தைத் திருடுவர்; மோசமான கவிஞர்கள் திருடியதை மாற்றுவர்: நல்ல கவிஞர்கள் பிறர் கருத்தை மேன்மைப்படுத்துவதோடு, பிறிதொன்றாகவே படைப்பர்” என்று எலியட் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். பாழ்நிலம் பிறர் கருத்துக்களை மேன்மைப் படுத்துவதோடு பிறிதொன்றாகவும் எலியட்டால் படைக்கப்பட்டுள்ளது.

பாழ்நிலத்தில் எலியட் தமது உள்ளத்துணர்ச்சிகளை நேரடியாக வெளிப்படுத்தாமல், அவற்றிற்குப் புறநிலை ஒப்பீடுகளாகத் (Objective Co-relative) தொன்மங்களிலும், கட்டுக் கதைகளிலும் இடம்பெற்ற பாழ்நிலங்களை, பாத்திரப் படைப்புகளையும், நிகழ்ச்சிகளையும் கோவைப் படுத்திக் காட்டுகிறார். சமுதாயத்தில் எல்லாத் துறைகளிலும் நிலவிய மலட்டுத் தனமே பாழ்நிலமாக உருவகிக்கப்படுகிறது, கவலையும், ஏமாற்றமும், பாலுணர்வு வக்கிரமும், அறிவுப் பேதலிப்பும் ஏற்ற பாத்திரப் படைப்புகள் மூலம் திறமையாக வெளிப்படுத்தப்படுகின்றன, இக்குறைகள் நீங்கிப் பாழ்நிலம் செழிக்கச் சில முயற்சிகளும் சடங்குகளும் மேற்கொள்ளப் படுகின்றன. அச் சடங்குகளின் இறுதியில் வானத்தில் மேகங்கள் திரள்கின்றன. இடிமுழக்கம் கேட்கிறது. மழை வரும், நாடு செழிக்கும் என்ற நம்பிக்கையோடு காப்பியம் முடிகிறது. பாழ்நிலத்தில் எலியட் பாலுணர்வை அருவருப்போடும், அதன் எழுச்சியைத் துன்பத்தோடும் சித்தரிப்பதோடு, அதைக் குறிப்பிடும் இடங்களிலெல்லாம் முகஞ்சுளித்துத் திரும்பிக் கொள்கிறார்.

எலியட்டின் பாழ்நிலம் பற்றிப் பல்வேறு விதமான முரண்பட்ட கருத்துக்கள் இலக்கிய அறிஞர்களால் பேசப்படுகின்றன. இக்கவிதை சிலரால் சரியாகவும், சிலரால் தவறாகவும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. “உலகப் போருக்குப் பின் வாழ்ந்த, சமுதாயத்தின் மனமயக்கத்தையும், குழப்பத்தையும், ஆன்மீக வறட்சியையும் இக்கவிதை குறிப்பிடுகிறது” என்று அறிஞர் எஃப். ஆர். லீவிஸ் எழுதுகிறார்.

“இக்கவிதை சமுதாயத்தில் நிலவிய கோளாறுகளின் சோதனையே அன்றித்தீர்வு அன்று; இது மறைந்து போன புகழையெண்ணி விடுகின்ற இலக்கியப் பெருமூச்சு” என்றும். ‘இது புலமையுடன் இணைக்கப்பட்ட இலக்கிய மரவேலை’ என்றும், ‘படித்த முட்டாள் தனத்தின் தொகுப்பு’ என்றும் பலவாறாகப் பல்வேறு அறிஞர்களால் கண்டனம் செய்யப்பட்டுள்ளது.

இக் கண்டனங்களுக்கு மாறாக ‘இதுவொரு சமுதாயச் சான்றுப் பட்டயம் (a Social document); நடப்பு உலகத்தினர் உண்மையான மறுபதிப்பு’ என்று பாராட்டிக் கூறுவோரும் உளர்.

எலியட், கவிதைகள் மட்டுமன்றி, நுட்பமான இலக்கியத் திறனாய்வு நூல்களும், நல்லநாடகங்களும் எழுதியிருக்கிறார். என்றாலும் அவருக்கு அழியாப் புகழையும், நோபெல் பரிசையும் தேடித் தந்தது பாழ்நிலமே. துவக்க காலத்தில் எலியட். எழுதிய ‘ப்ருஃப் ரோக்கின் காதற் பாடல்’ The Love, Song of Alfred Prufrock மிகவும் விளம்பரம்பெற்றது, எல்லாராலும் விரும்பிப் படிக்கப்படுவது. இதைப்பற்றி எஃப். ஆர். லீவிஸ் குறிப்பிடும்போது, “இக்காதற் கவிதை 19-ஆம் நூற்றாண்டு இலக்கிய மரபிற்கு முற்றிலும் மாறானது; புரட்சிகரமானது. இது எலியட்டின் புதிய பாணிக்கும், மொழிநடைக்கும், கவிதை உத்திக்கும் சிறந்த எடுத்துக் காட்டு. குறியீடுகளையும் அருவியாக உணர்ச்சிகளையும் கொட்டி எலியட் இதை வெற்றிப் படைப்பாக ஆக்கியிருக்கிறார்” என்று எழுதுகிறார்.

இப்பாடலின் தலைப்பே குறும்புத்தனமானது. இப்பாட்டுடைத் தலைவன் ப்ரூஃப்ராக் இலண்டன் நாகரிக வாசி; பிஞ்சிலே வெம்பிப் போன நடுத்தர வயதுக் கனவான். இப்பாடலின் தலைப்பைப் பார்த்ததும், ஏதோ காதல் நிகழ்ச்சி தான் இதில் இடம் பெற்றிருப்பதாக எல்லாரும் பொதுவாகக் கருதுவர். ஆனால் உண்மை அதற்கு மாறானது. ப்ருஃப்ராக்கிடம் காதலும் கிடையாது; காதலை வெளிப்படுத்தும் வீரமும் கிடையாது; தயக்கமும், குழப்பமும், நரம்புத் தளர்ச்சியும் மிக்க அவன் பெண்ணை நெருங்குவதற்கே அச்சப்படுகிறான்; பின்னர் காதலை எங்ஙனம் வெளிப்படுத்துவான்? இப்பாடல் எலியட் காலத்தில் லண்டனில் வாழ்ந்த நாகரிகக் கனவான்களின் போலித்தனத்தையும் கையாலாகாத் தனத்தையும் எள்ளி நகையாடுகிறது.

நேரடியாகப் பங்கு கொள்ளத் திராணியற்று, வாழ்க்கையை ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்துச் சலித்துப் போன அவன்,

‘என் வாழ்க்கையைக்
காஃபிக் கரண்டியால்
அளந்து-
சலித்துப் போனேன்’

என்று கழிவிரக்கத்தோடு பேசுகிறான்

‘மேசை மீது
மயக்கம் கொடுத்துப்
படுக்க வைத்திருக்கும்
நோயாளியைப் போல
விண்ணின் எதிரே
பரப்பி வைக்கப்பட்டிருக்கும்
இந்த மாலை நேரத்தில்
நீயும் நானும் புறப்படுவோம்’

என்ற மாலை வருணனையோடு பாடல் துவங்குகிறது. உணர்வும் மயக்கமும் கலந்த நிலையில் இருக்கும் நோயாளியைப் போல, ப்ருஃப்ராக்கும் அறிந்தும் அறியாதவனாக இருக்கும் அவல நிலையை இந்த அழகிய படிமம் குறிப்பாக விளக்குகிறது.

‘வானம்பாடிகளின் நடுவே ஸ்வினி’ (Sweeny among the Nightingales) என்ற கவிதையில் ஆன்மீகத்தில் ஏற்பட்ட நம்பிக்கைக் குறைவாலும், பாலுணர்வு வக்கரிப்பாலும் சீர் குலைந்த நகர வாழ்க்கையைக் குறியீடுகளால் விளக்குகிறார் எலியட். ‘திருச் சபைக் கோவில் கொலை’ (Murder in the Cathedral) ‘குடும்பத்தின் மறுபிணைப்பு’ (The Family Reunion) என்பவை அவர் எழுதிய சிறந்த நாடகங்கள்.

எலியட் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் அதிகமாக விமர்சனம் செய்யப்பட்டவர்; வாழும் காலத்திலேயே பெரும் இலக்கிய மேதையாக மதித்து ஏற்றுக் கொள்ளப்பட்டவர்; இருபதாம் நூற்றாண்டின் ஆங்கிலக்கவிதை நடையை அடியோடு மாற்றி வைத்தவர். இவருடைய வாசகர் வட்டம் சிறிது. ஆனால் புகழ் வட்டம் பெரியது.


  1. ஒரு தாய்க்கும் மகனுக்கும். தந்தைக்கும் மகளுக்கும். இடையே நிலவும் பாலுணர்வுக் கவர்ச்சிக்கு உளவியல் நிபுணர் ஃப்ராய்டு, வைத்த பெயர்