புதியதோர் உலகு செய்வோம்/அழிவைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல்

விக்கிமூலம் இலிருந்து
3. அழிவைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல்

‘ஒடும் ரயிலில் பெண் போலீஸை வெட்டி நகைப் பறிப்பு’ ‘பெண்ணிடம் சங்கிலி பறிப்பு’... ‘பல் வலி தாங்காமல் மனமுடைந்த பெண், மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தாள்’... ஒரே நாளில் வெளிவந்த இச்செய்திகள் பெரிதும் சிந்திக்க வைத்தன. சாதாரணமான பெண்ணிடம் நகைபறிப்பு செய்தியில் இல்லாத முக்கியத்துவம், ‘பெண் போலீஸிடம் நகை பறிப்பு, வெட்டும் கொடுமை’ ஆகிய இரண்டு அழுத்தங்கள், இன்றைய பெண்களை நோக்கி அறைகூவல் விடுவதாகத் தோன்றுகின்றன. பல் வலி தாங்காமல் மனமுடைந்த பெண், இரு குழந்தைகளுக்குத் தாய், கணவரிடம் சொல்ல, பொழுது விடிந்து மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று சொன்னார். ஆனால் அவள் தீக்குளித்தாள். அடுப்பெரிக்க மண்ணெண்ணெய்க்கு அதிக விலை கொடுத்தாலும் கிடைக்காத நடப்பியல் வாழ்வில், உயிர்கள் இத்துணை மலிவாகப் போய்விட்டனவா? தீக்குளியல்கள், சர்வ சாதாரணமான செய்திகளாக வருகின்றன. மிகவும் பழகிய செய்தியாக, தொலைக்காட்சித் தொடர்களில், குடும்பங்களில், மாமியார் மண்ணெண்ணெய் ஊற்றி மருமகளை எரிப்பதும் பிள்ளையே பிறக்காது என்று ஒரு (பெண்) டாக்டர் சொல்லிவிட்டதனால், திருமணமான பெண் தீக்குளிப்பதும் பழக்கமானவை. தொலைக்காட்சியின் பயங்கரங்கள் ‘வெறும் பொய்கள்’ என்று மரத்துப்போகச் சமாதானம் செய்து கொண்டாலும் பத்திரிகைச் செய்திகள் உறுத்தலை ஏற்படுத்துகின்றன.

இந்நாட்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், மோசடிகள் இல்லாத செய்திகளே இல்லை.

அண்மைக்காலங்களில், மொத்த இந்திய சமுதாயமும் பல்வேறு வகைகளில் வாழ்வுப் பிரச்னைகளில் சிக்கி நலிந்துபோயிருக்கிறது. விலைவாசி ஏற்றம், நுகர்வுக் கலாசாரத்தின் கிடுக்கிப்பிடிகள், கல்வியும், இளமைத் திறனும் ஆக்கபூர்வமான மனிதவள ஆற்றல் மேம்பாடுகளுக்குப் பயன்படாமல் அழியும் வேலையில்லா, வாழ்க்கையில்லாத சூழல், விரக்திமனப்பான்மையில் நம்பிக்கைத் துளிர்கள் கருகும் சோகங்கள், எல்லாமே கீழ், இடைநிலை மக்களைப் பெரிதும் பாதித்திருக்கின்றன. சட்டங்களும், அறநெறிகளும், செல்லாக் காசுகளாகிவிட்ட இந்த நிலையில், பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவள் பெண்ணே.

மேலை நாடுகளில் பெண்கள் வாக்குரிமைக்காக, நூற்றாண்டுகள் போராட வேண்டி இருந்தது. பெண் தன் உடலின் மீதுள்ள சுயஉரிமையைக்கூட இழந்த நிலையில், அறியாமை இருட்டிலிருந்து மீளும் கல்வி உரிமையைப் பெறவே வாக்குரிமை முதல் கட்டத் தேவையாக இருந்தது. ஆனால் இந்த நாட்டில், பெண்களுக்கு வாக்குரிமை எந்தப் போராட்டமும் இல்லாமல் கிடைத்துவிட்டது. கல்வி உரிமை, தொழில் செய்து பொருள் ஈட்டும் உரிமை என்று, தற்சார்புக்கான அனைத்து உரிமைகளும் அவருக்கு இருக்கின்றன. புதிய புதிய துறைகளில், ஆணே கோலோச்சிய நிர்வாகத் துறைகளில், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளில், அவள் தன் ஆற்றலை நிரூபித்தும் இருக்கிறாள்.

எனினும் இந்த 'வசீகரங்கள்' மகளிர் தினங்களில் புள்ளி விவரங்கள் கூறுவதற்கும், பெருமையுடன் பேசிக் கொள்வதற்கும் மட்டுமே பயன்படுகின்றன. முப்பத்து மூன்று சதவிகித ஒதுக்கீடு - அரசியல் சார்ந்த பிரதிநிதித்துவம் பெறுவதற்கு என்ற கோரிக்கை சின்னபின்னமாக இழுக்கப்படுகையில், பல்வேறு பாசாங்குகளும் வேடங்களும் கலைய, ஆணாதிக்கத்தின் கோர உருவங்கள் தெரிகின்றன. பெண்கள் தங்கள் சொந்த அடையாளங்களை இழந்து, ஒர் ஆணுக்கு உரிய அவனுக்குள் அடக்கம் என்ற உரிமை பெற்ற, பெறாத முத்திரைக்குள் அறியப்பட உட்பட்ட நாளிலிருந்தே அந்த அடையாளங்களில் இருந்து மீள வேண்டும் என்ற உணர்வே இல்லாத மனக்கோட்டத்துள் புதைந்து போயிருக்கிறாள். ஒரு நாள், இரண்டு நாட்கள், சில மாதங்கள் அல்ல - நூற்றாண்டு, பலப்பல நூற்றாண்டுகள் அவன் இச்சை, அவன் தலைமை, அவன் அடையாளங்கள் என்று ஊறிப் பதம் பெற்றிருக்கிறாள். ஒரு பெண்ணுக்குத் தாயும் தகப்பனும்கூட உரியவர்களாக முடியாது. அவள் உடலின்மீது, உரிமை கொண்டவன்தான் அவளுக்கு நாயகன். அந்த நாயகன் கயவனோ, காமுகனோ, கண்ணியமானவனோ, எப்படி இருந்தாலும் அவன் மதிப்பை, அவன் உயர்வை அவள்தான் தூக்கிப் பிடிக்கிறாள். அவனுக்காக, அவன் வித்தினால் பெறும் ஆண்மக்களுக்காக அவள் தன்னைத் தேய்த்துக் கொள்வதில்தான் மேன்மை பெறுகிறாள். அவள் பொதுவாழ்வுக்கு வரும் வாய்ப்புகள் நேர்ந்தாலும், கட்டியவன் காப்பாளன் என்ற நிலையில் ஆண்கள் இல்லை என்றாலும் அவர்களின் அடையாளங்களைக் கொண்டு தான் அவள் தலைதூக்க முடியும்.

அரசியல் பிரதிநிதித்துவம் என்று வரும்போது, ஒரு பெண் ஆண் ஆதிக்கத் தடைகளை மீறும் உணர்வுப் பொறிகளைப் பற்றிய பிரக்ஞையே இல்லாதவளாகத்தான் இருக்க முடியும். பல்வேறு துறைகளில் பெண் தன் அறிவாற்றலை நிரூபித்து, பதவிகளை அலங்கரிக்கலாம். இது தனிப்பட்ட ஆற்றலின் வெளிப்பாடாக விளங்குகிறது. ஆனால், குடியரசு நாட்டில், அரசியல் ஆட்சிப் பிரதிநிதித்துவம் என்பது, மக்கள் ஒப்பி அளிக்கும் தீர்ப்பில் நிலைபெறுகிறது.

இந்தத் தீர்ப்பில், பெண்ணின் தனிப்பட்ட ஆற்றல் தேவையில்லை. அவள் எழுதப்படிக்கத் தெரியாதவளாக இருக்கலாம். அவளைத் தேர்ந்தெடுக்கும் மக்களே முக்கியமாகின்றனர். ஏனெனில், ஆணாதிக்கக் கட்டுமானத்தின் ஒரு முக்கியமான கூறாக இந்தப் பிரதிநிதி விளங்க வேண்டும்.

கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்வுக்கு நிறுத்தப்படும் பெண்கள், கணவன், சகோதரன், மாமன், அல்லது கட்சி சார்ந்த (ஆண்) ஆதிக்கங்களின் பிரதிநிதிகளாகவே விளங்குகின்றனர். என்றாலும், முற்றிலும் இருள் சூழ்ந்த ஒர் அறையில், கூரையினுடே வரும் ஓர் ஒளிக்கதிர்போல் பெண்களுக்கு இது சுயஉணர்வைப் பற்றிய பிரக்ஞையை அவர்களறியாமலே ஏற்படுத்தலாம். அந்த ஒளிக்கதிரில் துரசுகளும் மாசும் பளிச்சென்று தெரிந்தாலும் அது ஒளிக்கதிர்.

ஆனாலும், ஆணாதிக்க அடையாளங்களை அவள் தாங்கியே நிலைக்க வேண்டி இருக்கிறது. ஏனெனில், பாலியல் சார்ந்த அவதூறுகளோ, (உண்மைகளோ) அவள் உட்காரும் பீடத்துக்கடியில் ஒரு தீக்குச்சிக் கொள்ளி பெரும்பான்மை கரியச் செய்யப் போதுமானது. இந்தக் காரணங்களால், ஒரு பெண் ஆட்சியதிகாரங்களை எப்படியேனும் பெற்றாலும்கூட ஆணாதிக்கத் தடத்தில் நிலைபெறும் சர்வாதிக்காரக் கூறுகளுடன்தான் நிலைக்க முடிந்திருக்கிறது.

எந்த நிலையிலும், ஓர் ஆணினால், ஒரு பெண் சமமாகவோ, விஞ்சியோ அதிகாரம் பெறுவதைப் பொறுக்க முடிவதில்லை. நல்ல நீரினுள், அசுத்தங்கள் கலக்கும்போது கொப்புளங்கள் தோன்றுவதுபோல், கண்ணியத்துக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுபவர் நாவிலிருந்தும்கூட, கூட்டமாக இருக்கும்போதோ மோதல்கள் நேரும்போதோ பெண்ணைக் குறிக்கும் இழிவான வகைச் சொற்கள் தெறித்து விழுகின்றன. பெண் மீதான வன்முறைகள், பொதுவான பெண் முன்னேற்ற வளர்ச்சியை ஏற்க முடியாத ஆதிக்க சமுதாயத்தின் வெளிப்பாடுகள் என்று கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்நாட்களில், எல்லாத் தளங்களிலும் வன்முறைகள் கட்டவிழ்வதும், பொதுச் சொத்துகளும், உயிர்களும் கோரமாக அழிக்கப்படுவதும் அன்றாட நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. ஆக்கத்துக்கான பயன்பாடுகளை விளைவிக்கக்கூடிய உத்தரவாதம் இன்றைய ஆட்சித் தலைமைகளில் இல்லை.

ஆனால் இன்றைய இந்திய சமுதாயம் வன்முறைகளில் இருந்தும் ஆதிக்கப் போட்டிகளின் விளைவான பகையுணர்வுகளில் ஏற்படும் அழிவுகளில் இருந்தும் மீள வேண்டுமானால், பெண்களின் சுயமான உணர்வுகளின் வெளிப்பாடுகளில் குவியும் ஆற்றல் அவசியமாகிறது. இது பழிக்குப் பழி வாங்கும் அழிவாற்றல் அல்ல.

இந்நாள் நம் சமுதாயத்தைப் பிடித்து ஆட்டும் அவலங்களில் ஒன்று மதவெறி மற்றது சாதி வெறி.

‘மதநல்லிணக்கம்’ என்ற கருத்தைத் தலைவர்கள் முன் வைக்கும்போது, “எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன. உன்னைவிட அயலானை நேசி என்றே சொல்கின்றன. பிறருக்குத் துன்பம் விளைவித்து உன் மதத்தின் ஆதிக்கத்தைப் பெருக்க வேண்டும் என்று கூறவில்லை” என்று விளக்கம் தருகின்றனர். உண்மை அதுவாக இருக்கலாம்.

ஆனால், பெண் என்று வரும்போது எந்த ஒரு மதமும் அவளுக்குச் சம மனித உரிமை அளித்திருக்கவில்லை என்பதே தெளிவு.

தன்னுடைய கொல்லும் வில்லாலும், ஏகாதிபத்தியத்துக்கான வேள்வியினாலும் முதன்மை பெறும் நாயகன் அறிந்து பூரண கர்ப்பிணியான மனைவியைக் கானகத்துக்கு அனுப்பி வைத்தான். அவளை மண்ணுக்குள் அனுப்பும் வரை, அவளிடம் புதல்வர்கள் தன்னுடையவர்கள்தாம் என்பதற்கு சான்று கேட்டான். அவள் மண்ணுக்குள் மறைந்த பின்னரே, ஐயம் தெளிந்து மக்களை ஏற்றான். இந்த நாயக தெய்வம் அடையாளமாகிப் போன சமய அடையாளம் பெண்ணுக்குத் தேவையா? முகத்திரை இடவில்லை என்றால் அக்கினித் திராவகம் என்ற சமய அடையாளம் பெண்ணுகுக்குத் தேவையா? பெண்ணே பாவம் செய்யத் தூண்டுபவள் என்று முத்திரையிடும் சமய அடையாளம் பெண்ணுக்குத் தேவையா? சமயம் கற்பிக்கும் வருண பேத சாதிப் பிரிவுகளின் பெண் வருக்கம் தன்னை குதறிக் கொள்வது தேவையா? ஆதிப் பெண்ணின் பூப்புக்குருதி, ஆதி மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், பெண், மனிதனின் பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தின் நெருக்கடிகளையும் துன்பங்களையும் சுமைகளையும் அநுபவித்தவள்.

குரூரங்களையும் கொலைகளையும் அன்பும் கருணையும் வளரும் உள்ளங்களில் ஏற்கப் பழகியவள். இன்றும், நாய், பூனை போன்ற விலங்குகள், முதற்குட்டியின் முகம்கூடப் பாராமல் கவ்விக் கொன்று பசி தீர்ந்து வலிமை பெற்ற பிறகே அடுத்த குட்டிகளை ஈன்று நக்கிக் கொடுத்துப் பாசத்தைக் காட்டுகின்றன. இந்தப் பெண்மையை வெல்ல, ஆண் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, முயன்று வெற்றி பெற்றிருக்கிறான். மதங்கள், புராணங்கள், தத்துவங்கள் எல்லாம் மனங்கவரும் ஆண் ஆதிக்கக் கோட்பாடுகளைச் சாரமாகக் கொண்டவை. எனவே தன்னை ஒன்றுமில்லாத பூச்சியங்களாக்கும் அடையாளங்களை உதறித் தள்ளிவிட்டு, பெண்கள் முன்வர வேண்டும். பெண்களுக்குச் சாதி, மதம், இல்லை. அழிவைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு. சாதி, மதம், ஆண் ஆதிக்க அடையாளங்களான அரசியல் கட்சிகள் ஆகிய அனைத்துப் பிரக்ஞைகளையும் உதறிவிட்டு, அழிவைத் தடுத்து நிறுத்த ஒன்று திரள வேண்டும்.


‘தினமணி’,
22.3.2003