புதியதோர் உலகு செய்வோம்/இன்றைய பாரத குமாரி

விக்கிமூலம் இலிருந்து
7. இன்றைய பாரத குமாரி


இன்னுமொரு இளம்பெண் காட்சி ஊடகத்துறையில் கால் வைத்துப் புகழ்பெறும் தருணத்தில் தற்கொலை செய்து கொண்டாள்.

இன்றைய சமுதாயத்தில் ஓசைப்படாமல் நிகழும் பெண் கருவழிப்புகள், பெண் சிசுக் கொலைகளில் இருந்து, இத்தகைய தற்கொலைகள் வரை கணக்கிட்டால், பெண் வாழும் நம்பிக்கையையே இழந்து கொண்டிருக்கிறாள் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

காட்சி ஊடகங்களில் தொழில் உண்மைகளுமே வெளித் தெரிவதில்லை. ‘சமுதாயப் பய’ உணர்வு அவர்களுடைய வாழ்க்கையின் நிதர்சனங்களை இரும்புத்திரையாய் மறைக்கின்றன. அவ்வப்போது வெளித் தெரியும் தற்கொலை முயற்சிகள், தற்கொலைகள் - காதல் தோல்வி என்று ஊடுருவ முடியாத மஞ்சுத்திரையால் மூடப்பட்டு விடுகின்றன.

ஆனால் காட்சி ஊடகங்களின் மையமான வணிகப் பொருளே ‘பெண்’தான். உடல்ரீதியான விளம்பரப் பொருளாக மட்டும் அவள் மதிப்பிடப்படவில்லை. பல்வேறு தலைப்புகளில் பல்வேறு சின்னத்திரை - சானல்களில் காட்டப்படும் மெகா தொடர்களில் பெண்கள் வழக்குரைஞர்களாக, காவல்துறை அதிகாரிகளாக, மருத்துவர்களாக, பத்திரிகையாளராக பல்வேறு வேடங்களில் கவர்ச்சி காட்டுகிறார்கள். ஆனால் அந்தப் பாத்திரங்களின் செயல்பாடு, எந்தப் பெண்ணையும் மரபாசாரங்களை மீறி விழிப்புணர்வு கொள்ள ஓர் இழைகூட இடம் கொடுக்காது. பெண்களே, நீங்கள் எத்துணை மேம்பாடடைந்தாலும் இம்சைகளை வலிந்து ஏற்றுக் கொண்டு, குடும்பம் என்ற கூட்டுக்குள் ஆண் மக்களை வாழவைத்து அவனுக்கு ஆண்வாரிசு அளிப்பதே கடமை என்று மிக அதிகமாக வலியுறுத்துவார்கள்.

இந்தக் குடும்பத் தொடர்களில் பெண்களே பெண்களுக்கு எதிரிகளாகக் கொடுமை இழைக்கிறார்கள். இந்த வன்முறைகளில், உட்காரும் நாற்காலிகளில் குண்டு வைப்பதுவரை இடம் பெறுகின்றன. பச்சிளங்குழந்தையைத் துப்பாக்கி முனையில் வைத்து அச்சுறுத்தும் போக்கிரி, மாமியாரின் கையாளாக இருப்பான். மதுவருந்துதலும் புகை பிடித்தலும் வெட்டுவதும் குத்துவதும் காண்போர் ரத்தம் உறைய வண்டியால் மோதித் தள்ளிக் கொலை செய்வதும், கல்லைத் துக்கிப் போட்டு முகம் தெரியாமல் நசுக்குவதும் கதறக் கதறப் பெண்ணின் மானம் குலைப்பதும் எந்தத் தணிக்கைக்கும் உட்பட்டிருக்கவில்லை. தர்மங்களை விட அதர்மங்கள் வெல்வதே சித்திரிக்கப்படுகிறது.

ஒரு கொடுமைக்காரன் என்றால் அவனுடைய கொடுமைகளுக்கு வரம்பே கிடையாது. வன்முறைகளுக்குப் புதிய புதிய வடிவங்களும் காட்சிகளும் விரியும்போது, மனசாட்சி உள்ளவர்களுக்கு ரத்தம் கொதிக்கும். காவல்துறைக்குக் கற்றைக் கற்றையாக லஞ்சம் அளிப்பதும், சொல்ல முடியாத இம்சைகளுக்குக் காவல் நிலையத்தில் நிரபராதியை ஆளாக்குவதும், இத்தொடர்களை மேலும் பார்க்க வைக்கும் போதை ஊக்கிகள்.

இத்தகைய வன்முறைகளைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது, காந்தி, புத்தர், இயேசு என்று அஹிம்சைப் போதனைகள் பரவிய மண்ணிலா நாம் வாழ்கிறோம்? அவர்கள் பெயரைச் சொல்லும் தகுதி நமக்கு இருக்கிறதா என்று தோன்றுகிறது.

இடைநிலை, மேல்தட்டுக் குடும்பங்களில் மகனோ, மகளோ சிறகு முளைத்துப் பறந்து சென்றபின், குடும்பத்தலைவி, தலைவர்களுக்கு இந்தத் தொடர்கள் பொழுது போக்காக இருக்கலாம். அவர்கள் வாழ்ந்து ஓய்ந்த காலத்தில் இந்தத் தொடர்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு அதிகமில்லை. ஆனால், வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆதாரங்களான உணவு, உறையுள், தண்ணீர், எரிபொருள் ஆகியவற்றுக்கும் கழிப்பறை வசதி போன்ற மானம் காக்கும் தேவைகளுக்குமே அலைபாயும் அடித்தட்டு, குடிசை வாழ் பெண்கள், குழந்தைகளின் வாழ்க்கையை இந்த டிவி பூதம் மிச்ச சொச்சம் வைக்காமல் விழுங்கிக் கொண்டிருக்கிறதென்றால் மிகையில்லை.

இவர்களின் சிறார்களுக்கு அளிக்கும் இலவசக் கல்வியில், பேருந்துப் பயண அட்டையும், ஒரு நேர இலவசச் சோறும்தான் உருப்படியானவை. எனவே பன்னிரண்டு வயதைத் தாண்டுமுன் பள்ளி உதிர்த்த பிஞ்சுகளாக மாற, பருவம் எய்தும் நேரமே போதுமானதாக இருக்கிறது. தாமரை இலைகள் போன்ற பள்ளித்தலங்களில் தங்கிய நேரத்தில் எந்த எழுத்தறிவும், இவர்களுக்கு ஒட்டியிருக்காது. பருவமெய்தியதும் அதை விளம்பரப்படுத்தும் மஞ்சள் நீர் மரபாசாரங்களில், செலவு கடன் - மொய் என்ற வணிக லாபக்கணக்கில் குடிசைச் சமுதாயம் மகிழ்கின்றது. பூப்படைந்த பெண் பெற்றோருக்கு பாரம். அவளை வீட்டில் விட்டுவிட்டுப் பெற்றோர் வேலைக்குச் செல்ல முடியாது. இவளை வேலைக்கு அனுப்பும் இடங்களிலோ, கீசகர்களும், கவந்தர்களும் தருணம் பார்த்துக் குதறி- விடுவார்கள். எனவே எவன் வந்து முதலில் கேட்கிறானோ அல்லது தொட்டு விடுகிறானோ அவனுக்கு இருப்பதை இல்லாதவற்றை விற்று, வாழ்க்கையையே அடகுவைத்து வரதட்சிணை, மினுக்குச் சேலை, நகை, விருந்துச் சாப்பாடு என்று மின்னல் மகிழ்ச்சியில் பெண்ணைக் கைகழுவி விடுகிறார்கள். 16,17 வயசில் கர்ப்பம், வயிற்றுக்கில்லா வறுமை, வேலையில்லாக் கணவனின் சாராய போதை; அடி உதை; நோஞ்சான் குழந்தைகள்; இலவச மருத்துவமனைகளின் அத்தியாவசிய அசுரப்பிடுங்கல்கள்...

இந்த இல்லற வாழ்க்கையில் இவர்களுக்குக் களிப்பூட்டும் சாதனம், தொலைக்காட்சி மட்டுமே. தாம் அண்டி உழைக்கும் உயர்குடி மக்களின் வீடுகளில் அவ்வப்போது பார்க்கும் இந்த சொர்க்க சுகம், இந்தப் பெண்களை, சொந்தமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி வைத்துக் கொள்ளும் கனவையே பெரிதும் வளர்த்திருக்கிறது. அதில் வரும் பெண்ணின் துன்பங்கள், நெருக்கடிகள் எல்லாவற்றிலும் அவள் தன்னையே காண்கிறாள். மேலும், தொலைக்காட்சித் தொடர்களில் மறந்தும் அடித்தட்டு யதார்த்தங்கள் விரிவதில்லை; பங்களாக்கள், சொகுசுக்கள், விதவிதமான ஆடைகள், எப்போதும் கசங்காத முகம், கூந்தலில் தொங்கும் மலர்ச் சரம் இதெல்லாம் காண்பதில் ஒர் ஆறுதல் கொள்கிறாள். கணவன் ஏற்கனவே ஒருத்தியை மணந்து குடும்பம் நடத்துபவன் என்றறிந்ததும் அவனுக்காக இரண்டு பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாள் குடிசைப் பெண். உழைத்துப் பிழைக்கும் நிர்ப்பந்தம் குழந்தைகள் இரண்டும் பள்ளியில் படிக்கின்றன. டி.வி. வாங்கும் கனவில் மிதக்கிறாள். குழந்தைகளை ஏதேனும் தரும ஆஸ்டலில் சேர்த்துவிட்டு, டிவி வாங்கி ஆசை தீரக் காண வேண்டும் என்று கனவைச் சொல்கிறாள், இவளே இன்றைய பாரதத் தாய் பாரத குமாரி!

‘தினமணி’,
8.5.2002