உள்ளடக்கத்துக்குச் செல்

புதியதோர் உலகு செய்வோம்/மாதா - பிதா - குரு

விக்கிமூலம் இலிருந்து

9. மாதா-பிதா-குரு


இன்று குழந்தைகளாக இருப்பவர்களே, நாட்டின் நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றனர். இவர்களுடைய உடல் ஆரோக்கியம், கல்வியறிவு, செயலாற்றும் திறன் ஆகிய செல்வங்களை ஒருங்கே பேணி வளர்ப்பதில்தான், நாட்டின் மனித வள ஆற்றலுக்கான அடிநிலை அமைகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் அன்றைய பாரதப் பிரதமர் நேருவிலிருந்து இன்றைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வரை, பல்வேறு தளங்களில் குழந்தைகளுக்கு ஊக்கம் அளித்து செயல்பட்டு வருகின்றனர்.

குழந்தை, தாயின் கருவில் இருக்கும்போதே அறிவு பெறத் தொடங்கிவிடுகிறது என்று உளவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

தாயின் உயிர்நாடியுடன் பிணைந்து கருவாக வளர்ச்சி பெறும்போது, தாயின் மன, உடல் நலங்களை அது சார்ந்து உள்வாங்கிக் கொள்கிறது. இதனாலேயே கருவுற்ற பெண்கள் அமைதியுடனும் மனநிறைவுடனும் இருக்க வேண்டும் என்பதற்கான சடங்குகள் மரபு வழிப்படுத்தப்பட்டன. தாயின் கருவறையில் இருந்து வெளி உலகுக்கு வந்து தொப்புள்கொடி துண்டிக்கப்பட்ட பின்னும் இப்பந்தம் வேறாகிவிடுவதில்லை. மார்பகம் சுரக்க, சேய்க்கு அமுதூட்டுகிறாள் தாய்.

வெகுநாட்களுக்கு முன் ஒர் உளவியல் மருத்துவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பொன்றைப் படித்தேன். ஒரு சேய் பிறந்து பத்து நாட்களுக்குள் மனிதக் குணஇயல் படிந்துவிடுமாம். சேயின் முதல் உணர்வு பசிதான். உடன் உணவுத் தேடல். சரியான பசி நேரத்தில் அதற்கு அமுது கிடைக்க வேண்டும். சில நொடிகள் தாமதமாகி, பசியுணர்வு விஞ்சிவிட்டால், சேயின் குடலில் இருந்து மலம் இயல்பாக வெளியேறாதாம். பசி உணர்வே தெரியாமல் அடிக்கடி அமுதூட்டுவதும், சீரணத்துக்கு உகந்ததன்று என்பது மட்டுமின்றி, அந்தக் குழந்தை பொறுப்பற்ற ஊதாரியாக உருவாகக் காரணமாகுமாம். ஒரு மனிதனின் முழு குண இயல்பும், ஐந்து வயதுக்குள் அமைந்து விடுவதாக விளக்கியிருந்தார். உணவுக்கான பசி, தேடல், உடனே கிடைத்துவிடுதல் என்ற மூன்று அம்சங்களும் தேவை. திறன், நம்பிக்கை என்று வாழ்வை நிர்ணயிக்கின்றன. எனவே இந்தப் பருவமே மனிதவள ஆற்றல் என்ற நோக்கில் மிக முக்கியமாகிறது.

நாடு சுதந்தரம் பெற்ற இந்த 57 ஆண்டுகாலத்தில் தாய், சேய்நலம் சார்ந்த சிறப்புத் திட்டங்கள் நெறிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த பாரத சமுதாயம் வேறு. மிகப் பெரும்பான்மை மக்களுக்கு அறிவுக்கண் மலர்ச்சியே மறுக்கப்பட்டிருந்த காலம் அது. இன்றைய அறிவியல் சாதனைகள், அந்நாளைய அறிஞர் பெருமக்கள் கனவுகளாகக்கூடக் கண்டிராதவை. மூன்று வயதில் கணினி - தொழில்நுட்ப அறிஞர்களாகவும், இசை மேதைகளாகவும், இலக்கிய வித்தகர்களாகவும், பொது அறிவுக் கருவூலங்களாகவும், நீச்சல் போன்ற விளையாட்டில் சூரர்களாகவும் திகழ்வதை இன்று நாம் அன்றாடம் செய்திகள் வாயிலாகவும் நேரிலும் கண்டும் கேட்டும் வியக்கிறோம்.

மனிதவள ஆற்றல் என்பது எல்லாக் குழந்தைகளிடமும் சாம்பலுள் பொறி போல் உயிர்த்திருக்கிறது. அதை ஊதி, ஒளிவிளக்காக்கி, சமுதாயத்தில் மீண்டும் இருளைப் போக்கி மனிதப் பண்புகளை மலரச் செய்கிறோமா அல்லது வேறு வகையில் அப்பொறிகள் ஊக்கப்படுத்தப்படச் சூழல்கள் அமைகின்றனவா என்பதுதான் முக்கியம். இன்றைய வணிகச் சூழல் பணத்தையே இலக்காக்கியிருக்கிறது.

இன்றைய தாய்... அவளுக்கே அவள் தொலைந்து போனவளாக, பெரும்பாலும் ‘மம்மி’ என்ற குரலுக்கு விடையளிக்க வேண்டியவளாக இருக்கிறாள். காலத்தின் கட்டாயத்தில் பொருளாதாரம் சார்ந்த வசதித் தேவைகளுக்காக அன்றையத் தாய் தொலைந்து போனாள்.

அந்நாட்களிலும் உழைப்பாளித் தாயார் இருந்தனர். முற்றத்தில் சாணம் தெளித்துத் தூய்மை செய்தபின் பழங்கஞ்சியைக் குடித்து விட்டுப் பால் குடிக்கும் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு வயலுக்குப் போவாள். பிள்ளை மரக்கிளையில் பழைய சீலைத் தொட்டிலில் கிடக்கும். அதற்குப் பசி எடுக்கும் நேரம் அறிந்து வந்து அமுதூட்டுவாள். பிள்ளைகளோ, பெண்களோ, திறந்தவெளிகளில் மண்ணில் இஷ்டம் போல் விளையாடி மகிழ்ந்தார்கள். ஆடு மாடு மேய்த்த காலங்களில் கண்ட கனவுகளில்கூட தாய் அருகில் இல்லை என்ற வெற்றிட உணர்வுக்கு இடமிருந்திருக்கவில்லை. திருவிழாக் காலங்களில் வறுமையில் மலர்ந்த பொட்டுக்கடலை மிட்டாயும், ரோஸ்ரிப்பனும் ஊதாங்குழலும் பெருநிதியம் கிடைத்த மகிழ்ச்சிச் சிறகுகளாய் விரியும்.

இந்நாட்களில் அந்தக் குழந்தைப் பருவங்கள் எங்கொழிந்தன? அம்மாவின் வயிற்றில் கரு உருவாகும் போதே போராட்டம் தொடங்கிவிடுகிறது. இது, பெண்ணா, பிள்ளையா? தாய் வெளிக்குத் தெரியாமல் உருகி அலைபாய்கிறாள். பொருளாதார வாய்ப்புகளையும் வசதிகளையும் முன்னிறுத்தி, முதல் பேற்றையே தள்ளிப்போட கருக்கலைப்பு இந்நாட்களில் அசாதாரணமன்று. மக்கள் பெருக்கக் கட்டுப்பாடு இன்றியமையாத ஒன்றுதான். ஆனால், அது முதல் பலியாக வாங்கியவை தாய்மைக்குரிய அகப்பண்புகள்தாம். திட்டமிட்டு ஒன்றோ, இரண்டோ பெற்றாலும், பாலூட்டிச் சீராட்டி வளர்க்க நேரம் எங்கே? பிள்ளைகளோ காப்பகக் கூண்டுகளிலும் பின் மழலைப் பள்ளிகளிலும் தாயின் நெருக்கமான உயிர்சூட்டைக் கனவு காண்கிறார்கள். தாய்மொழி பழகாத சூழலில் அன்னியப்படும் ‘பிஞ்சு, மம்மி எனக்கு ஒருநாள் லஞ்சு எடுத்திட்டு வரியா?’ என்று கேட்டுத் தாயை வேதனைப்படுத்தும். இந்த வளர்ப்பில், பொறுப்பை அநேகமாக ‘பிதா’ கண்டு கொள்வதே இல்லை.

அநேகமாக மழலைப் பள்ளிகளில் ஆசிரியைகளே கற்பிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள், பிள்ளைகளின் உள்ளங்களில் எத்தகைய பண்புகளை - பண்புகள் சார்ந்த பிம்பங்களைப் பதிக்கின்றனர்? சலுகைகள், ஒருபக்க நீதிகள் எல்லாம் பிள்ளைகளுக்குள் போட்டி, பொறாமை உணர்வுகளை உசுப்பிவிடுவதும் நடப்பியல் உண்மைகள். இந்த ‘மிஸ்’கள் நூற்றுக்கு நூறு ஆசிரியைகளா? இருக்க முடியாது. திருமணமாகு முன் கிடைக்கும் வேலையைப் பற்றிக் கொள்வது என்ற கோணத்தில் பார்க்கலாம். அதிகம் அலைச்சல் இல்லாமல் கிடைத்த பள்ளி வேலை. முதிர்கன்னி நிலை திணிக்கப்பட்டதால் வேறு வழியில்லாமல் இப்படி ஒரு பணி. திருமணமான பின் ஆசிரியப் பொறுப்பை நிரந்தரமாக்கிக் கொண்ட பெண்களிடமும் இந்தப் பிள்ளைகளை உருவாக்கும் மாதிரிப் படிமங்களைப் பெரும்பாலும் காண முடியாது. அவள் சொந்த வீட்டை, தாய்மைப் பொறுப்பை குடி தண்ணீர், தோசைமா, காய்கறி, போன்ற சில்லறைக் கடன்கள் சுமத்தும் அழுத்தங்களை நினைத்துக் கொண்டே பணியாற்ற வேண்டும். இதில் அரசுப் பள்ளிகளானால் அதிகாரிகளின் கெடுபிடிகள், மாற்றல் உத்தரவுகள் போன்ற கிடுக்கிப் பிடிகளும் உண்டு. தனியார் பள்ளிகளில் வணிகச் சூழல்; எல்லா வசதிகளும் குறைவு. மழலை தாண்டிய பருவப் பிள்ளைகளுக்குத்தான் ஆண் ஆசிரியர்கள் கற்பிக்க வருகிறார்கள். இந்த வளர் பருவ மாணவர்களுக்கு பள்ளிக்கு வெளியே கவர்ச்சிகள் அதிகம். ஒன்பதாம் வகுப்பு மாணவன் மதுவருந்திவிட்டு, வகுப்புக்கு வந்தால் ஆசிரியர் என்ன செய்வார்? அது அவனுக்கு ஜனநாயக உரிமை!

வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வாதாரத் தேவைகளுக்காக நெருங்கி மிதிபடும் குடும்பக் குழந்தைகளுக்குத் தான் ‘பிதா’ என்ற மொத்தையான பிம்பம் மனத்தில் பதிகிறது. இவன் அன்றாடம் குடித்துவிட்டு வந்து, உழைத்துப் போடும் தாயை அடிக்கிறான். ஆண் குழந்தைக்கு அவனுடைய ‘பவர்’ மனத்தில் பதிகிறது. அவனும் குடிக்கலாம்; அடிக்கலாம்; திட்டலாம். பெண் குழந்தை ஆணின் எந்த ஆதிக்கத்துக்கும் புழுவாக மிதிபட வேண்டும் என்று உணர்ந்து கொள்கிறது. கேள்வி கேட்கத் தெம்பில்லாதவளாக உழைக்க வேண்டும்.

இத்தகைய சூழல்களில் இருந்தே பல்வேறு களங்களில் தங்கள் மனிதவள ஆற்றலை நல்க, நல்ல சமூகத்துக்கு அன்னியப்படும் வன்முறைகள் பழக, ஒடுக்கல்களுக்கு உட்பட குழந்தைகள் மலர்ச்சி பெறுகிறார்கள்.

‘தினமணி’
13.11.2003