புதிய பொலிவு/முன்னுரை
முன்னுரை
கிராமீய வாழ்க்கை ஒரு தனித்தன்மை கொண்டது—பொதுவான இயல்புகள் எங்கும் உண்டு என்றபோதிலும். கிராமீய வாழ்க்கையின் இனிமைபற்றிப் பேசும்போதும் எழுதும்போதும், கிராமங்களுக்கென்று அமைந்துவிடும் சில தனித்தன்மை வாய்ந்த எழில் குலையாமலிருக்கும் கிராமத்தை மனதிற்கொள்கிறோம். இது பெரிதும், இன்று கிராமங்கள் உள்ள நிலைமையாக இல்லை. கிராமம் என்ற உடன், மடுவும் மாடு கன்றும், மலரும் மணமும், கள்ளங்கபடமற்ற வாழ்வும் கலகலப்பு ஒலியும், பசுமையும் இனிமையும், நமது மனக் கணமுன் தோன்றுகின்றன. இன்று இந்த நிலை, உருக்குலைந்த ஓவியமாக்கப்பட்டு விட்டிருக்கிறது. இந்நிலையிலும், கிராமத்துக் கவர்ச்சி என்பது முற்றிலும் பொருளற்றதாகி விடவில்லை.
புதிய பொலிவு இத்தகைய ஒரு கிராமத்தில், பாடுபட்டுப் பிழைக்கும் ஒரு குடும்பத்தின் நிலையை மைய்யமாகக் கொண்ட கதை.
கிராமத்தில் இருந்தபடியே தனது நிலையை ஏற்ற முள்ளதாக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் குடையும் மனதினராக உள்ளனர் ஆங்கு உள்ள இளைஞர்கள்.
கிராமத்திலே, எப்போதும்போல இருந்துவந்தால், போதுமான வசதிகளைப் பெறமுடியாது என்ற மனக்குறையும், முறைகளை மாற்றிக்கொண்டாகிலும் புதியநிலை பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைஞன், புதிய பொலிவு பெற, நகரம் செல்கிறான்; அங்கு குறுக்குவழி நடந்து, இருந்த பொலிவும் குன்றிப் போகிறான். கெடுமதி கொண்டவன் அல்ல—கெட்டுப்போனவன் —அவன்பால் இரக்கம் காட்டவே நல்லோருக்குத் தோன்றும்.
அவனுடன் ஓடி ஆடி வந்த எழில் மங்கை, செல்லி. அவனுக்காகவே இவள்! என்று கண்டோர் கூறினர்: அந்தப் பேச்சு அவளுக்குத் தேனென இனித்தது. அந்தச் சுவை தவிர வேறு முறையற்ற செயல் மூலம் சுவைதேட முற்பட்டவளல்ல செல்லி. மாசுபடாத மங்கை.
செல்லிக்கு, எதிர்பாராத முறையில் நகரத்து நல்லிளைஞன் கணவனாக வாய்க்கிறான்—ஓவியன். நகரத்துப் பளபளப்புக்கு மத்தியில் வாழ்ந்தபடி கிராமத்து எழிலை எண்ணி மகிழ்ந்து வந்தவன். அவனைச் சூழ இருந்து வந்தவர்கள் புதுப்பூச்சுகள் நிறைந்த உலகினர்.
இந்த இடம் வந்து சேருகிறாள் செல்லி. புதிய உலகம்! அவள் ஒரு கேலிப் பொருளாக்கப்படுகிறாள் 'நவநாகரிக'க்காரர்களால் அவள் வாழ்வே கருகிவிடும் நிலை கிளம்புகிறது; எனினும், கணவனுடைய உள்ளன்பு அவளைக் காப்பாற்றுகிறது.
கணவன் காட்டும் உள்ளன்புதான், மனைவியின் வாழ்விலே ஒளியைத் தரும் — அந்த ஒளி கிடைக்கப் பெற்றால், புதிய பொலிவு எழும் என்பதை எடுத்துக்காட்ட இந்தக் கதை.
செல்லி, துள்ளி விளையாடும் வயலையும் மடுவையும் காணச் செல்லுங்கள்.