உள்ளடக்கத்துக்குச் செல்

புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்/சணப்பன் கோழி

விக்கிமூலம் இலிருந்து

பதிப்பாசிரியர்: ஆ. இரா. வேங்கடாசலபதி

1596புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும் — சணப்பன் கோழிபுதுமைப்பித்தன்


சணப்பன் கோழி


ரமேச்வரன் ஓர் இலட்சியப் பைத்தியம். கலாசாலையை விட்டு வெளியே வரும்பொழுது, தற்காலத்திய புதுமை இளைஞர்களின் வெறி இருந்ததில் ஆச்சரியம் இல்லை. முதல் முதலாகப் பட்டினி கிடந்தாலும் கவர்ன்மெண்டு வேலைக்குப் போகவே கூடாது என்ற சித்தாந்தம். அவன் நிலைமைக்கு வேலை கிடைப்பது ரொம்ப சுலபம். அப்பா பென்ஷன் உத்தியோகஸ்தர் இவன் சித்தாந்தத்தைக் கேட்டதும் இத்தனை நாள் போஷித்த அப்பாவுக்குப் பலத்த சந்தேகம் - பரமேச்வரனுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டதோ என்று - உண்டாயிற்று. அதிலே தகப்பனாருக்குக் கொஞ்சம் ஏமாற்றம். காலை மடக்கிக் கொண்டு முரண்டு செய்யும் மாடு என்றால் வாலைக் கடித்தாவது எழுப்பலாம்; பரமேச்வரனுக்கு வாலில்லையே!

மனிதனுடைய வாழ்க்கையில் - தென்னிந்தியத் தமிழனுடைய வாழ்க்கையில் - வேலையை எதிர்பார்த்துக் காலத்தைக் கலாசாலையில் கழித்துப் படிக்கவைக்கும் முதல் முக்கியத்திற்குப் பிறகு, பெரிய இடத்துப் பெண்ணை - கை நிறையப் பணம் கொண்டுவரும் பெண்ணை - கலியாணம் செய்து வைப்பது இரண்டாவது முக்கியமான விஷயம். தான் பென்ஷனாவதற்குள், தன் மகனுக்கு வேலை பார்த்துக் கொடுத்துவிட்டு, தன் அந்திமக் கிரியைகளைப் பையன் சரியாக நடத்தும் நிலையில் கொண்டு வந்து வைப்பது மூன்றாவது வேலை.

பரமேச்வரனுடைய தகப்பனாருக்கு முதல் வேலை விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. இரண்டாவதோ, அவருக்குப் பெரிய ஏமாற்றமாகிவிட்டது.

பையன் பெரிய இடத்துப் பெண்ணை, கை நிறையப் பணமும் கழுத்து நிறைய நகையும் போட்டுவரும் பெண்ணை கலியாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டான். பையனது தர்க்கம் தகப்பனாருக்கு விளங்கவில்லை. சுகமாக இருக்க விரும்புவது மனித இயற்கை என்பது தகப்பனார் அனுபவம். அதில் இன்பம் கிடையாது என்பதுதான் பையன் சிந்தாந்தம். தகப்பனாருக்குப் பையன் நடத்தை அர்த்தமாகவில்லை.

ஏழைப் பெண், சிறிது படித்த பெண், முக்கியமாகக் குணசௌந்தரியமுடைய பெண் வேண்டும் என்றான் பையன். முதல் இரண்டு நிபந்தனைகளும் சாதாரணமாக நிறைவேறிவிடும். மூன்றாவது? அதுதான் அதிசயம். பரமேச்வரன் எதிர்பார்த்தபடி, ஆசைப்பட்டபடி ஒரு பெண் கிடைத்தது.

லால்குடிப் பெண். ஏழைப் பிரைமரிப் பள்ளிக்கூடத்து உபாத்தியாயர் வீட்டுப் பெண் சாரதா. அந்த மூன்று நிபந்தனைகளுக்கு மேல் நான்காவது நிபந்தனை ஒன்றையும் நிறைவேற்றிவிட்டாள் சாரதா. அவள் நல்ல அழகி. பரமேச்வரன், கண்டதும் காதல் என்பதெல்லாம் பற்றிப் படித்திருக்கிறான். அதை அசம்பாவிதம் என்று நினைத்தவன்; கலியாணமான பிறகுகூடக் கட்டுக்கடங்காத பாசம் ஒருவனைப் பிடிக்கும் என்பதிருந்தால் பரமேச்வரன் அதற்கு ஓர் உதாரணம். அவன் சாரதாவிடம் தன்னை மறந்த மாதிரி, அவளும் பரமேச்வரனிடமே தன்னை மறந்தாள். இது பக்கத்திலிருப்பவருக்குப் பொறாமைப்படும்படியாக இருந்தது.

பரமேச்வரனுடைய வாழ்க்கைச் சகடம் கலியாணமாகும் வரை 'கிர்ர்' என்ற சப்தமில்லாமல் மையிட்டதுபோல் ஓடிக்கொண்டிருந்தது. கலியாணமான 'பிறகு, முதல் அதிர்ச்சி, தனது சாரதாவின் மனம் கலங்குமோ என்றுதான். கலங்கும் நிலைமையும் ஏற்பட்டது. பறவை பெரிதான பிறகும் கூண்டில் இருக்க, அதுவும் கூட ஒரு ஜோடி சேர்த்துக் கொண்டு இருக்க, பெற்ற குருவிகள் இடம் கொடுக்குமா? இது இயற்கை. சிறிது மனத்தாங்கல், சாரதாவை அவள் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு அவனை வேலை தேடும்படியாக்கிற்று.

2

எங்கெங்கோ அலைந்து கடைசியாகப் பம்பாயில் அவனுக்கு 80 ரூ. சம்பளத்தில் வேலை கிடைத்தது. கிடைத்த மறு மாதம் கூட்டிப் போவதாக எண்ணம். சந்தர்ப்பம் ஒத்துவரவில்லை. எப்பொழுதும் சாரதா தியானந்தான். பக்கத்திலிருப்பவர்கள் பெண்டாட்டிக் கிறுக்கனோ என்று கூட நினைக்கும்படி இருக்கிறதென்று அவனுக்குத் தெரியும். பரமேச்வரன் என்ன யோகீஸ்வரனா, மனத்தை ஒரே இடத்தில் கட்டி வைக்க!

சாரதாவுக்குத் தினம் ஒரு கடிதம். பதிலும் அடிக்கடி வந்து கொண்டிருந்தது - அவளுடைய குதலை எழுத்தில். அதைப் படிப்பதில் அவனுக்கிருந்த பிரேமை இலக்கிய ரஸிகனுக்குக் கம்பனைப் படிக்கும் பொழுது கூட இருந்திருக்காது.

திடீரென்று அவள் கடிதம் வரவில்லை.

முதலில் என்னென்னவோ அபாயங்கள் அவளுக்கு நேர்ந்திருக்கலாம் என்று நினைத்தான். அவள் தகப்பனார் ஏன் எழுதவில்லை? ஏமாற்றத்தினால் அவள் மீது காரணமற்ற கோபம் தோன்றலாயிற்று. அவள் தகப்பனார் மீதும் சிறிது ஓடிற்று. தனது இலட்சியம் என்பதற்காகச் செய்த தனது திருமணத்தை அவமதித்தார்களல்லவா என்ற கோபம். நிலையாகச் சாரதா மீது கோபப்பட அவனால் முடியவில்லை. ஏமாற்றம் வளர வளரக் கோபமும் வளர்ந்தது.

அவளுக்கு ஒரு முரட்டுத்தனமான கடிதம் - அவள் ஹ்ருதயத்தைப் பிளக்கும் கடிதம் - எழுதிக் கொண்டு போய்த் தபாலில் போட்டான். அதனால் சிறிது மானஸிக வெற்றியின் குதூகலம்; குமுறும் நெஞ்சில் பின்னால் சமாதானம் ஏற்படவில்லை.

தகப்பனும் மகளும் வியாதியாகப் படுத்திருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியுமா?

அரை மணி நேரம் கழித்துத் தந்திச் சேவகன் அவன் மாமனார் இறந்து போனதாக ஒரு தந்தியைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.

3

பரமேச்வரனுக்கு நெஞ்சில் சம்மட்டியால் அடித்ததுபோல் பட்டது. மாமனார் மரணத்தில் கூட வருத்தம் ஏற்படவில்லை. அந்தக் கடிதம் - அது அவளை என்ன செய்யும்! அதைத் தடுக்க வேண்டும். பம்பாயிலிருந்து லால்குடி என்ன பக்கத்துத் தெருவா? அல்லது பெட்டியில் போட்ட காகிதத்தை எடுக்க முடியுமா? ஒரே ஒரு வழி. கடிதம் மத்தியானந்தான் கிடைக்கும் அதற்கு முன்பு நேரில் சென்று விட்டால்?

லீவு எழுதிப் போட்டுவிட்டு ரயிலுக்குச் சென்றான். வழி முழுவதும் கடிதமும் சாரதாவும் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தனர். தனது முட்டாள்தனத்திற்கு நொந்து கொண்டான். தனது குற்றத்தை அவள் மன்னிப்பாளா? அவள் மன்னிப்பாள் பரமேச்வரன் மனம் மட்டும் அவனை மன்னிக்க மறுக்கிறது.

பரமேச்வரனும் மாமனார் வீடு வந்துசேர்ந்துவிட்டான். வரவேற்பு அழுகையும் துக்க விசாரணையும் ஓய்ந்தன. சாரதா கதவின் பக்கம் வந்து நின்றாள்.

பரமேச்வரன் கண்களைத் துடைத்துக் கொண்டான். துக்கமும் தேக அசௌகரியமும் அவளை உருமாற்றிவிட்டன. துயரத்தின் உரு! முந்திய அழகின் சாயை! பரமேச்வரனுக்குத் துக்கம் நெஞ்சையடைத்தது. கண்கள் கலங்கிவிட்டன.

"சாரதா!" என்றான். கூப்பிடும்பொழுதே கடிதத்தின் நினைவு வந்தது.

"எனக்கு உடம்புக்குக் குணமில்லாமல் இருந்தது. நீங்கள் ஏன் காயிதம் எழுதலே? உடம்புக்கென்ன? இளைத்திருக்கிறீர்களே!" என்றாள்.

"வேலை ஜாஸ்தி!" என்றான், கடிதத்தை நினைத்துக்கொண்டே.

"நான் உனக்குக் கடிதம் எழுதியிருந்தேனே!" என்று அவன் வாய் தவறிச் சொல்லியது.

"வரவில்லை!" என்றாள் சாரதா.

தடுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பரமேச்வரனுக்குக் குதூகலம்.

"நான் வெளியே போய் வருகிறேன்!" என்று, தபால்காரனை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வந்தான் பரமேச்வரன்.

தபால்காரன் வழியிலேயே சாரதாவின் தம்பியிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டது அவனுக்குத் தெரியாது. தபால்காரன் பேசாமல் போய்விடவே சாயங்காலம் வரும் என்று சிறிது அசட்டையாக இருந்தான்.

அவன் வரும்பொழுதெல்லாம் அவனுக்கு மாமனார் வீட்டில் ஒரு சிறிய அறை, அதிலே தான் அவன் தங்குவது.

மத்தியானம் சாப்பிட்டுவிட்டு அங்கு வந்தான். அப்பொழுது அதை நினைக்கவில்லை. கடிதம் கிடைக்கவில்லை என்ற நினைப்பில் உள்ளே வந்ததும் திடுக்கிட்டு நின்றான்.

தலைவிரி கோலமாக அவன் படத்தின் முன்பு கையில் கடிதத்துடன் கிடந்தாள் சாரதா.

"சாரதா!" என்று எடுத்தான்.

"உங்கள் கடிதம் வந்தது!" என்றாள். உள்ளிருந்த துயரம் பொங்கி ஓலமிட்டுவிட்டாள்.

"சாரதா!" என்றான்.

அவள் முகம் அவன் மார்பில் மறைந்தது. ஏங்கி, ஏங்கி அழுது அவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.

அவன் மனது தணலாக வெந்தது. அவள் மன்னிப்பாளா?

"சாரதா?"

"என்னை உடன் கூட்டிப் போங்கள்!" என்றாள். கடிதத்தின் காரணம் அவளுக்குத் தெரிந்துவிட்டது.

அவள் பெண்.


மணிக்கொடி, 16.12.1934