உள்ளடக்கத்துக்குச் செல்

புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்/சுந்தர ராமசாமி

விக்கிமூலம் இலிருந்து

புதுமைப்பித்தன்:
ஆளுமையும் ஆக்கங்களும்

சுந்தர ராமசாமி

ன்று புதுமைப்பித்தனின் பெயர் தமிழ்ச் சூழலில் நிலைத்துவிட்டது. இந்த நூற்றாண்டில் மேலும் அவர் கவனம் பெற ஏற்ற சூழல் உருவாகி வருகிறது என்று கருதலாம். அவரை ஆர்வத்துடன் கற்கும் வாசகர்கள் அதிக அளவில் நாளை தோன்றவும் செய்வார்கள். புதுமைப்பித்தன் படைத்துள்ள உலகத்திலிருந்து வாசகர்கள் பெறவிருக்கும் அதிர்ச்சியும் விழிப்பு நிலையும், ஊடகங்களால் இன்றுவரையிலும் ஊதி வளர்க்கப்பட்டுள்ள எண்ணற்ற எழுத்துப் பிம்பங்களை உதிரச் செய்துவிடக் கூடும். சிந்தனை சார்ந்த தளம் விரிகிறபோது அசட்டுக் கற்பனைகள் சார்ந்த தளம் சுருங்கத்தான் செய்யும். வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் கூர்மை கொள்ளும்போது வாழ்க்கைத் தளம் அற்று அந்தரத்தில் தொங்கும் ஜோடனைகள் வெளிறிப் போகும். விமர்சனத்தைவிட ஆழ்ந்த விமர்சனத்தை உருவாக்குபவை படைப்புகள்தாம். புதுமைப்பித்தனோ சமூக விமர்சனத்தையே தன் உயிராகக் கொண்ட படைப்பாளி.

இன்று பலர் தங்கள் ஆழ்ந்த உழைப்பைச் செலுத்திப் புதுமைப்பித்தனைப் பற்றிப் பல புத்தகங்களை உருவாக்கி வருகிறார்கள். அவர் பெற்றிருக்கும் கவனத்திற்கு, முன்பு வெளிவந்தவைபோல் கட்டுரைகள் மட்டுமே இன்று போதுமானவையாக இல்லை. மிகக் குறுகிய காலத்தில் நான்கு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன : தொ. மு. சி. ரகுநாதனின் புதுமைப்பித்தன் கதைகள் : சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும், எம். வேதசகாயகுமாரின் புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும், ராஜ் கௌதமனின் புதுமைப்பித்தன் எனும் பிரம்ம ராக்ஷஸ், அ. ராஜ மார்த்தாண்டனின் புதுமைப்பித்தனும் கயிற்றரவும்.

இவ்விமர்சன நூல்கள் வெளிவருவதற்கு முன்பு ஆ. இரா. வேங்கடாசலபதி தொகுத்த புதுமைப்பித்தனின் 'அன்னை இட்ட தீ அவரைப்பற்றிய விமர்சன எண்ணங்களைப் புதுப்பித்துக்கொள்ளப் பலரையும் தூண்டிற்று எனலாம். சூழல் புதுமைப்பித்தன்மீது கொண்டுள்ள புதிய கவனத்திற்கு இந்நூலும் ஒரு பங்காற்றியது என்று நினைக்கிறேன்.

ஒரு படைப்பாளியைப் பற்றி விமர்சன நூல்கள் வெளிவருவது புதிய நிகழ்வொன்றும் அல்ல. பாரதியைப் பற்றி எண்ணற்ற நூல்கள் வந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய விமர்சனத்தில் மிக அதிகமாகப் பேசப்பட்ட ஓரிருவரில் பாரதியும் ஒருவன். ஆனால் பாரதியைப் பற்றி வெளி வந்துள்ள கறாரான விமர்சன மதிப்பீடுகள் மிகக் குறைவு. உணர்ச்சி வசப்பட்ட பாராட்டுகள் மிக அதிகம். விமர்சனம் என்னும் நவீனச் சிந்தனை கேட்டு நிற்கும் திறன்கள் பல. அவற்றில் மிக முக்கியமானது படைப்பாளியைப் பற்றி விமர்சகன் வந்துசேரும் முடிவுகளுக்கு முன்வைக்கும் காரணங்கள். இந்தக் காரணங்கள்தான் விமர்சகனின் இலக்கிய ஆழத்தையும் நுட்பத்தையும் விவேகத்தையும் தன் காலத்துடன் அவன் கொண்டிருக்கும் உறவையும் வெளிப்படுத்துகின்றன. மற்றொன்று விமர்சகன் தன் காலத்தின் முன் படைப்பாளியை நிறுத்தி அவனை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவது.

புதுமைப்பித்தனைப் பற்றிய விமர்சனங்கள் அவரது சாரத்தை ஏற்பலர்களாலும் அதனை மதிப்பீடு செய்து வளர்க்க விரும்புபவர்களாலும் எழுதப்படுவதால் அவை விவாதத்திற்குரியவையாக இருக்கும்போதுகூட வலுவான அடிப்படையைப் பெற்றுவிடுகின்றன. நவீனப் பார்வை சார்ந்தோ நவீனத்துவத்திற்குப் பிற்பட்ட பார்வைகள் சார்ந்தோ புதுமைப்பித்தனை ஒருவர் மதிப்பிடலாம். நவீனத்துவத்திற்கு முற்பட்ட பார்வைகள் சார்ந்து அவரைப் பற்றிய விமர்சனத்தை வலுவாக உருவாக்க முடியாது என்றே நினைக்கிறேன். புதுமைப்பித்தன் யதார்த்தப் பார்வை கொண்டவர் என்று நுனிநாக்கால் சொல்லிவிடுகிறோம். சொற்கள், அவற்றின் பொருளை உணராதவர்களால் வெறும் உச்சரிப்புக்கு ஆட்படும்போது ஜடத்தன்மை அடைந்துவிடுகின்றன. யதார்த்தப் பார்வை என்றால் இரண்டாயிரம் வருட நீட்சி கொண்ட கவிதை மரபிற்கு அடிப்படையாக நின்ற பார்வையுடன் தன் உறவை முறித்துக் கொள்வது என்று பொருள். உடலிலிருந்து ஒரு அங்கம் தன் உறவை முறித்துக்கொண்டு விலகுவதுபோன்றது இது. அங்கம் உறவை முறித்துக்கொண்டது அதிர்ச்சி தரும் ஒரு நிகழ்வு என்றால் முறித்துக் கொண்ட அங்கம் அதற்குரிய வாழ்வை மேற்கொண்டு, நிமிர்ந்து, வடிவம் பெற்று, பிரிந்த உடலுக்கு எதிரே வந்து நிற்பது ஒரு பேரதிசயம். இந்த அதிசயம் முதல்முறையாகத் தமிழ் மரபில நிகழும்போது அதற்குப் பெயர் யதார்த்தம் என்றும், தன் பார்வையின் மூலம் அதற்கு உடலும் உயிரும் தந்த படைப்பாளியைப் புதுமைப்பித்தன் என்றும் அழைக்கிறோம்.

பாரதிக்கு ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான, நேர்மையான விமர்சனத்தை முன்வைத்தவர் புதுமைப்பித்தன். பாரதியைப் பற்றி அவர் தன் கட்டுரைகளில் கூறியுள்ள கருத்துச் சிதறல்களை நான் இங்கு முன்னிலைப்படுத்தவில்லை. அவருடைய புனைவு சார்ந்த படைப்புகள். அனைத்தையும், ஒரு நிலையில், பாரதி பற்றிய விமர்சனமாகவே நினைக்கிறேன். பாரதி ஏற்றுக்கொண்ட வகையிலான புரட்சிகரமான சிந்தனைகளையும் பாரதியின் அதீத கற்பனைவாதம் சார்ந்த வெளிப்பாட்டு முறையையும் முற்றாகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நிராகரித்தவர் புதுமைப்பித்தன். பாரதிக்கு மனிதன் - காலத்தின் - சோதனையால் அவன் எவ்வளவு தாழ்வுற்றிருப்பினும் - ஒரு தெய்வீகச் சுடர்: அந்தச் சுடரைத் தூண்டினால் மனிதனை மேல்நிலைப்படுத்திவிடலாம். இதுதான் பாரதியின் ஆதாரமான கனவு. புதுமைப்பித்தனுக்கோ மனிதன் மிகச் சிக்கலான ஒரு பிராணி. இந்தச் சிக்கலைப் புரிந்துகொள்ளாத வரையிலும் மனிதனை மேல்நிலைப்படுத்தவோ அவன்மூலம் வாழ்வைச் செழுமைப்படுத்தவோ இயலாது. இந்தப் பார்வைதான் இரண்டாயிரம் வருட மரபு கொண்ட தமிழ் இலக்கியத்தின் பிடரியைப் பற்றி அதை நவீனத்துவத்திற்குள் தள்ளுகிறது. வாழ்க்கையைக் கண்திறந்து பார்க்கும் சக்தியை இழந்துவிட்ட ஒரு ஜன சமூகம் சிந்தனைகள் சார்ந்தோ தத்துவம் சார்ந்தோ இலக்கியம் சார்ந்தோ கலைகள் சார்ந்தோ எந்தப் பாதிப்பையும் பெற முடியாது என்பது புதுமைப்பித்தனின் அடிப்படையான நம்பிக்கைகளில் மிக முக்கியமானது.

...இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும் அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிப் பார்க்கவும் கூகூகிறோம். அதனால்தான் இப்படிச் சக்கர வட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக் களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போகப் போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப் போகிறதா? மேலும், இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே. நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், ஸினிமா நடிகை சீதம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் - இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்திரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக்

குறைச்சல் எதுவும் இல்லை (புதுமைப்பித்தன் கட்டுரைகள், 1954).

இந்த நம்பிக்கையை அவரது புனைவுகளில் பரிசீலனை செய்ய விரும்புபவர்களுக்குப் புதுமைப்பித்தன் அளிப்பது ஒரு உலகம். மரபோ, வேறு புறச் சக்திகளோ சொல்லும்படி பங்கு கேட்க முடியாத அவரது ஆளுமையின் வளர்ச்சியிலிருந்து உயிர் பெற்ற ஒரு உலகம். அந்த உலகத்தின் மூலம் இணைக்கப்படும் உறவு மிக முக்கியமானது. அது படைப்புக்கும் வாழ்க்கைக்குமான உறவில் புது ரத்தத்தைப் பாய்ச்சுகிறது. இந்தப் பார்வையில் வாழ்க்கை பற்றிய மயக்கங்கள் சிதறித் தெறிக்கின்றன.

மரபிலிருந்து வேறுபட்ட யதார்த்தப் பார்வையும், வெளியீட்டுப் பாங்கில் சிந்தனைகள் குமிழியிடும் விமர்சனமும் கொண்ட புதுமைப்பித்தனிடமிருந்து மரபில் ஊறிப்போன பழமைவாதிகளும் நவீனச் சிந்தனையைச் சகித்துக்கொள்ள முடியாதவர்களும் விலகிப் போனதில் வியப்பில்லை. புதுமைப்பித்தன் ஊக்கத்துடன் செயல்பட்ட குறுகிய வருடங்களிலோ மறைவுக்குப் பின் கடந்துபோய்விட்ட இந்த அரை நூற்றாண்டிலோ அவர் தமிழ்ச் சூழலில் போதிய அளவு வரவேற்புப் பெறாமல் போனதற்கு இதுவே முக்கியக் காரணம். நிறுவனங்களின் ஆதரவையோ பல்கலைக்கழகங்களின் கவனிப்பையோ வெகுஜன ஊடகங்களின் அரவணைப்பையோ இன்றுவரையிலும் அவர் பெற்றதில்லை. அரசியல்வாதிகளில் எழுத்தாளர்களின் எண்ணிக்கை தமிழ் மண்ணைப் போல் உலக அளவில்கூட வேறெங்கும் இல்லை. அவர்களது சொற்சிலம்பங்களில் காற்றடைக்கப்பட்ட பல பலூன்கள் வானத்தில் பறந்துகொண்டிருக்கின்றன. துரதிருஷ்டவசமாக அவர்களுடைய கடைக்கண் பார்வையைப் பெறும் பாக்கியம் இன்று வரையிலும் புதுமைப்பித்தனுக்குக் கிடைக்கவில்லை.

புதுமைப்பித்தனைப் பற்றிச் சுயமான மதிப்பீடுகளை உருவாக்கி வாசக மனங்களில் அவருக்கு ஒரு இடத்தைத் தேடித் தந்தவர்களில் முக்கியமானவர்களையேனும் நாம் இப்போது நினைவுகூர வேண்டும். இந்த வரிசையில் முதலில் நம் நினைவுக்கு வருபவர் ரா. ஸ்ரீ. தேசிகன்; புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்புக்கு 1940இல் முன்னுரை எழுதிய ஆங்ங்கிலப் பேராசிரியர். பொய்யான, மிகையான முன்னுரைகளைத் தாங்கிவரும் புத்தகங்களையே இன்று வரையிலும் நாம் அதிக அளவில் பார்த்துக்கொண்டு வருகிறோம். ஒரு படைப்பை மதிப்பிட முயலும் முன்னுரைகள்கூட மிகக் குறைவு. இந்நிலையில் அறுபது வருடங்களுக்கு முன் புதுமைப்பித்தன் கதைகள்மீது விமர்சனப் பார்வையைச் செலுத்த முயன்ற ஒரு முன்னுரையை அவர் நமக்குத் தந்திருக்கிறார். அந்த முன்னுரையில் அவர் பயன்படுத்திய பல சொற்கள் இன்றும் பொருள் செறிவுடன் விளங்குகின்றன. அதிலிருந்து ஒரு சில வாக்கியங்களைப் பார்ப்போம்.

சிறுகதை மர்மங்களை நன்கு அறிந்துள்ள புதுமைப்பித்தனின் கதைகளுக்கிடையே திரியும்போது ஒரு கவி உலகிலே திரிகிற உணர்ச்சி எனக்கு வருகிறது. இவருடைய கதை ஒவ்வொன்றும் ஒரு தனி அனுபவ முத்திரை பெற்றிருக்கிறது. ஒவ்வொன்றிலும் உண்மையின் நாதம் ஒலிக்கிறது....

ஒரு கவி உள்ளம் - சோகத்தினால் சாம்பிய கவி உள்ளம், வாழ்க்கை முட்களில் விழுந்து ரத்தம் கட்டுகிற உள்ளம் கதையின் மூலம் பேசுகிறது.

புதுமைப்பித்தன் என்னும் ஆளுமையின்மீது தமிழ் வாசகர்களின் ஆர்வத்தை மிக அதிகமாகத் தூண்டிய நூல் தொ. மு. சி. ரகுநாதனின் புதுமைப்பித்தன் வரலாறு. 1951இல் வெளிவந்த இந்நூல் ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்பும் சுவையும் கொண்டது. புதுமைப்பித்தனின் வித்தியாசமான ஆளுமைக்கு அழுத்தம் தந்து எழுதப்பட்டது. இந்த வாழ்க்கை வரலாறு மூலமும் புதுமைப்பித்தனைப் பற்றி ரகுநாதன் அதற்கு முன்னும் பின்னும் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் மூலமும் புதுமைப்பித்தன் படைப்புகளைப் படிக்கத் தூண்டுதல் பெற்ற வாசகர்களின் எண்ணிக்கை கணிசமானது என அனுமானிப்பதில் தவறில்லை. அத்துடன் துன்பப்படும் ஜீவராசிகள்மீது புதுமைப்பித்தன் கொண்டிருக்கும் ஆவேசம் கலந்த அக்கறை ரகுநாதனின் கருத்துகள் மூலம் அதிக அழுத்தம் பெற்றுள்ளது. இந்த நூலிலும் வெளியிலும் புதுமைப்பித்தனைப் போற்றும் முகமாக ரகுநாதன் உருவாக்கிய வாக்கியங்கள் தான் புதுமைப்பித்தன்மீதான இடதுசாரிப் பார்வைக்கே ஒரு மொழியை உருவாக்கித் தந்தன என்று சொல்லலாம். இந்த வாக்கியங்களின் கலைத்துப் போட்ட கோலங்களே பொத்தாம் பொதுவாகப் புதுமைப்பித்தனை ஒரு முற்போக்குவாதியாகச் சித்தரித்துக் காட்ட முயன்ற பலருக்கும் எடுத்த எடுப்பில் உதவிக்கு வந்து நின்றன. எழுத்திலும், வசீகரம் மிகுந்த தன் பேச்சுகள் வழியாகவும் புதுமைப்பித்தனைப் படிக்கத் தொடர்ந்து தூண்டிக்கொண்டு வருபவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தனின் மொத்தப் படைப்புகளுமே புதுமைப்பித்தனைப் படிக்க முற்படும் வாசகனுக்கு அவர் எழுத்துகளுடன் ஒரு நல்லுறவை உருவாக்க உதவுபவைதான். அத்துடன் ஜெயகாந்தன் புதுமைப்பித்தனைப் பற்றி முன்வைத்துவரும் சுதந்திரக் கருத்துகளும் அரசியல் இயக்கம் சார்ந்த பார்வை கொள்ளும் அழுத்தங்களோ இறுக்கங்களோ அற்றவை.

புதுமைப்பித்தனின் மொத்தப் படைப்புகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அவரைப் பற்றி ஒரு முழுமையான விமர்சனத்தை உருவாக்கியவர் க. நா. சுப்ரமண்யம். புதுமைப்பித்தனின் காலத்தைச் சேர்ந்த அவரது சகப் படைப்பாளிகளின் சிறுகதைகளையும் மனத்தில் வைத்து அவற்றில் தன்னிகரற்ற சிறுகதைகளை எழுதியவர் புதுமைப்பித்தன் தான் என்ற முடிவுக்கு அவர் வருகிறார். 'கதை சொல்லும் மேன்மையும் சொந்தக் கற்பனை ஆட்சியும் புதுமைப்பித்தனுக்குக் கைவந்திருப்பதுபோல தமிழில், இந்த நூற்றாண்டில், வேறு ஒருவருக்கும் இருந்ததில்லை என்பது சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் நிரூபிக்கப்பட்டுவிட்ட விஷயம்' என்கிறார். இந்தியச் சிறுகதை எழுத்தாளர்களோடும் உலகச் சிறுகதை எழுத்தாளர்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கும்போதும் க. நா. சு.வுக்குப் புதுமைப்பித்தனின் சிறுகதைகள் முக்கியமானவையாகப் படுகின்றன. கு. ப. ரா. போன்ற எழுத்தாளர்களை இலக்கியத்திறன் கொண்டவர்களாகவும் புதுமைப்பித்தனை மேதமை கொண்டவராகவும் க. நா. சு .மதிப்பிட்டிருக்கிறார். புதுமைப்பித்தனை முதல் முறையாகப் படிக்க முற்படும் வாசகனுக்கு, க.நா.க. 'புதுமையும் பித்தமும்' என்ற தலைப்பில் ஐந்திணைப் பதிப்பக வெளியீடான 'புதுமைப்பித்தன் படைப்புகள்' முதல் தொகுப்புக்கு 1987இல் எழுதிய நீண்ட முன்னுரை மிகவும் உபயோகமானது.

புதுமைப்பித்தன் தமிழ்ச் சூழலில் பதினான்கு ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார்: 1934இலிருந்து 1948வரை. இக்குறுகிய காலத்தை மனத்தில் வைத்துப் பார்க்கும்போது புதுமைப்பித்தனின் எழுத்து அளவில் அதிகமானதுதான். நாளிதழ்களில் பணியாற்றியவர் தான் பெற்றிருந்த குறைந்த கால அவகாசத்தில் இந்த அளவுக்கு எழுதியிருப்பது வியப்பைத் தருகிறது. சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம், நாவல், வாழ்க்கை வரலாறு போன்ற படைப்புருவங்கள் அனைத்தும் அவரைக் கவர்ந்து எழுதத் தூண்டியிருக்கின்றன. இருப்பினும் அவருடைய படைப்புகளில் மிக முக்கியமானவை சிறுகதைகள்தான். சமீப காலத்தில் தேடி எடுக்கப்பட்ட சிறுகதைகளையும் சேர்த்து நூற்றுக்கும் சற்று குறைவானவை இன்று படிக்கக் கிடைக்கின்றன. அவர் எழுதத் தொடங்கிய 1934ஆம் வருடத்தில் மட்டும் நாற்பது நாற்பத்தைந்து கதைகள் எழுதியிருக்கிறார். வெகு ஆவேசமான ஆரம்பத்தையே இது காட்டுகிறது. இக்கதைகளில் பெரும்பான்மையானவை பற்றி மிக உயர்வாகச் சொல்வதற்கு இல்லை என்றாலும் அவருடைய மற்ற கதைகள்போல் இவற்றிலும் அவருக்கே உரித்தானபார்வை ஊடுருவி நிற்கிறது எனலாம். நூதனமான தெறிப்புகளும் வீச்சுகளும் கொண்ட அவர் மொழி, கிண்டல், விமர்சனம், அநாயாசமான எழுத்துப் போக்கு, பொருள் சார்ந்தும் வடிவம் சார்ந்தும் மரபை மீறிச் செல்லும் ஆவேசம், எல்லைக் கோடுகளை அழித்துச் செல்லும் கதந்திரத்தின் வீச்சுகள், சகல மதிப்பீடுகளையும் பாரபட்சமின்றிப் பரிசீலனைக்கு உட்படுத்துதல் ஆகிய குணங்களை நெடுகிலும் பார்க்கலாம்.

ஒரு படைப்பாளியாக மலர்ச்சி பெறப் புதுமைப்பித்தனைத் தூண்டிய அனுபவங்கள் எவை என்ற கேள்வி எழலாம். அவை பற்றித் திட்டவட்டமான முடிவுகளுக்கு வருவது சற்றுக் கடினம்தான். இன்று அவரது படைப்புகள் நம்மிடம், அநேகமாக, முழுமையாகவே இருக்கின்றன. அதற்கு மேல் அவருடைய வாழ்க்கை வரலாறும் முழுமையானது என்று கூற இயலாது என்றாலும் - நம்மிடம் இருக்கிறது. இவ்விரண்டிலிருந்தும் இவற்றின் இணைப்பிலிருந்தும் நாம் பெறும் ஒளிக்கீற்றுகள் புதுமைப்பித்தனின் வாழ்க்கைக்கும் அவரது படைப்புக்களுக்குமான உறவு சார்ந்து எத்தனையோ அனுமானங்களுக்கு நம்மை இழுத்துக் கொண்டு போகின்றன. ஒன்று தெளிவானது. வாழ்க்கையில் தான் பெறும் அனுபவத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் இயல்பு கொண்டவர் அவர். அவரது படைப்புகள் இந்த உண்மையை ஆமோதிக்கின்றன. படைப்புகளில் பளிச்சிடும் அனுபவ முத்திரைகள், ஒரு வாசகனின் மனத்தில் கண்டுபிடிப்புகள் சார்ந்த ரசனையை உருவாக்கிக் கொண்டே போகின்றன. சுய அனுபவம் சார்ந்த தடயங்கள் மறைந்து போகும் அளவுக்கு, அதீதமான கற்பனைகள் கவிழும் கதைகளில்கூட, ஆதாரமான விதை சுய அனுபவம் சார்ந்ததுதான் என்ற உணர்வே ஏற்படுகிறது.

வாழ்க்கை அனுபவங்கள் என்று பொதுவாகச் சொல்கிறோம். ஆனால் சில வகையான அனுபவங்கள் படைப்பாளியின் மனத்தில் ஆழமாகப் புதைந்து படைப்புகளில் மீண்டும் மீண்டும் கழன்று வருகின்றன. இந்த ஆழமான பாதிப்புகளை அடிப்படையாக வைத்துத்தான் அந்த ஆளுமையின் அக்கறைகளை நாம் இனங்கண்டு கொள்கிறோம். இவை தரும் எழுச்சியிலிருந்துதான் அவரது கதைகளில் சில சிகரம் கொள்கின்றன. அவர் பெற்றிருந்த பாதிப்புகளில் முக்கியமானவற்றை சாராம்ச ரீதியாகத் தொகுத்துப் பார்க்கலாம் : ஹிந்து மதம் மனிதனின் சுதந்திரத்தை நெரிக்கும் விதம். ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரம். கிறிஸ்துவச் சபைகளின் செயல்பாடுகள் சார்ந்த விமர்சனம். எதிர்நீச்சல் போடத் தெரியாத அபலைகள்மீது கவியும் கொடுமைகள். மத்தியதர வாழ்க்கையின் பற்றாக்குறை சார்ந்த இழுபறிகள். பிழைப்பின் சுழற்சி மனிதனை இயந்திரமாக்கும் கீழ்நிலை. வறுமையின் கொடிய கோலங்கள். நினைப்புக்கும் நிஜத்துக்குமான வேறுபாடு. மனத்தை மீறும் உடல். ஆன்மீகத்தை ஏமாற்றும் லௌகீகம். புனிதங்களின் ஒப்பனைகள் கலையும் விதம். இன்றைய தாழ்வுகளைப் பாராது பழம்பெருமைகளில் வாழ்தல். தர்மத்திற்குப் பின் நிற்கும் பச்சை அதர்மங்கள்....

புதுமைப்பித்தனின் மொத்தப் படைப்புகளின் சாராம்சத்தையும் ஒற்றைச் சொல்லில் உருவகப்படுத்த ஆசை கொள்வோம் என்றால் 'முரண்பாடுகள்' என்ற சொல்தான் நம் மனத்தில் வரும். முரண்பாடுகளின் எண்ணற்ற கோலங்கள்; வகை பேதங்கள்; விஸ்தரிப்புகள். சகல தளங்களையும் இந்த ஒற்றைச் சொல் ஊடுருவி வாழ்வின் கோலத்தை நிதர்சனப்படுத்திக் கொண்டே போகிறது. இந்த நிதர்சனம் இரண்டாயிரம் வருடத் தமிழ் வாழ்க்கைக்குரிய பெருமிதங்களுக்கெதிராக வைக்கப்பட்டு இலக்கிய ஆர்வத்தைத் தூண்டும் நாடகப் பாங்கில் ஜீவகளை பெறுகிறது. கேலிக்கும் விமர்சனத்துக்கும் இலக்காகும் பெருமைகள் கவிதை மரபு சார்ந்ததாகவோ சமயம், தத்துவம், புராணங்கள், இதிகாசங்கள், நன்னெறிகள், மேற்கத்திய அறிவு அல்லது அறிவியல், கீழைத்தேய நம்பிக்கைகள் போன்ற ஏதேனும் ஒரு துறை சார்ந்ததாகவோ இருக்கின்றன. பரிசீலனைக்கு ஆட்படுத்தப்படும்பகுதிகள் வெவ்வேறு துறை சார்ந்தவையாக இருந்தாலும் விமர்சனத்தில் தாட்சண்யம் என்பது அநேகமாக இல்லை. இத்துறைகள் எவற்றையும் அவர் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை எனில் எவற்றையும் முழுமையாக நிராகரிக்கவும் இல்லை. வாழ்க்கை சார்ந்த அவருடைய அனுபவம் பழமையின் சாரத்தைப் புதுமையின் சாரத்தோடு சேர்த்துக்கொள்ள விரும்புகிறது. கம்பனும், ஜேம்ஸ் ஜாய்ஸும் அவருக்கு முக்கியமானவர்கள். ஆஸ்திகத்தில் நம்பிக்கையற்ற அவரைக் கோபுரங்களின் அழகுகள் கவர்கின்றன. தேசப்பற்று மட்டோ என்று சந்தேகப்படும்போது ஊர்ப்பற்று மிகுதி என்பது உறுதியாகிறது. அவரது விமர்சனத்திற்கு இலக்காகும் ஏதேனும் ஒரு துறையுடன் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு வாசகனின் தன்முனைப்பு அவரால் சிதைவுக்குள்ளாகும்போது தன் மயக்கத்தைக் காணத் தெம்பில்லாமல், 'என் நம்பிக்கைகளை ஏன் சிதைக்கிறாய்?' என்று புதுமைப்பித்தனைப் பார்த்துக் கோபப்படுவது மனித சகஜம்தான் என்றாலும் இலக்கிய விமர்சனமாகாது. புதுமைப்பித்தனுக்கோ தன் செயல்பாடு சார்ந்த பிரக்ஞை தெளிவாகவே இருக்கிறது.

தமிழ் வாழ்வின் வெவ்வேறு கோலங்களைக் காட்டி அதன் முழுப் பரப்பும் தன் அனுபவத்திற்குள் வந்துவிட்டதான பிடிப்பை வாசகனுக்கு அளித்திருப்பது புதுமைப்பித்தனின் மிகப் பெரிய சாதனை. இந்தச் சாதனை சார்ந்த வீச்சு சென்ற நூற்றாண்டில் அவருக்கு மட்டுமே உரித்தானது. வாழ்வில் பெறும் எல்லா அனுபவங்களையும் படைப்புக்குரியதாய் மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை தன்னளவில் பிரச்சினையேதும் தராததுதான். ஆனால் அந்த நம்பிக்கை சார்ந்த செயல்பாடு மிகக் கடினமானது. இந்தச் சவாலைத் துணிந்து ஏற்றவர் புதுமைப்பித்தன். தன் ஆக்கங்களின் தோல்வியை எண்ணி அஞ்சும் படைப்பாளியால் இந்தச் சவாலை ஏற்க முடியாது. புதுமைப்பித்தனுக்குப் படைப்புகளில் கூடிவரும் நிறைவைவிடப் புதிய சோதனைகள் தனக்கும் மொழிக்கும் தரும் ஆற்றல்கள்தான் முக்கியமானவையோ எனச் சந்தேகம் கொள்ள இடமிருக்கிறது. அந்த அளவுக்கு அவரது படைப்புகள் முழுமையை நோக்கமாகக் கொள்ளாத சரிவுகளுக்கு ஆளாகியிருக்கின்றன. இந்நிலைப்பாடு பற்றிய சுயப் பிரக்ஞை இருந்ததால்தான் தன் கதைகளை அவர் 'பரிசீலனைகள்' என அழைத்தார் (02.12.1945 தேதியில் மீ.ப. சோமுவுக்கு எழுதிய கடிதம்).

வாசிப்பும் ஒரு அனுபவம்தான். புதுமைப்பித்தன் வாசிப்பில் ஆங்கிலம் சார்ந்தும் சமகால இலக்கியம் சார்ந்தும், பழந்தமிழ் சார்ந்தும்- மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதை அவரது சகப் படைப்பாளிகள் உறுதி செய்திருக்கின்றனர். வாசிப்பிலிருந்து அவர் பெற்ற பாதிப்பும் திரட்டிக்கொண்ட அறிவுகளும் செய்திகளும் அவரது எழுத்தை நவீனக் காலத்துக்குரியவையாக மாற்ற உதவியிருக்கின்றன. மேற்கத்திய அறிவு சார்ந்த கீற்றுகளும் நம் பண்டைய படைப்புகள் சார்ந்த மின்வெட்டுக்களும் அவர் எழுத்தில் விரவி வருகின்றன. தீவிரப் படைப்பாளிகள் வாசிப்பில் கொள்ளும் ஆர்வம் அபூர்வமானது அல்ல. ஆகவே, புதுமைப்பித்தனின் வாசிப்பை நாம் அதிகம் அழுத்த வேண்டியதில்லை. வாசிப்புச் சார்ந்த ஆர்வம் ஒருபக்கம் இருக்க, மிகக் குறைவான வாசிப்பிலிருந்துக்கூட மிக அதிகமான விஷயங்களை உறிஞ்சிக் கொள்ளும் அவருடைய உணர்வுகள் மிகக் கூர்மையானவை. வாசிப்பில் பேய் வெறி கொண்ட க.நா.சு. புதுமைப்பித்தனின் வாசிப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில் தானும் அவரும் படித்த ஒரு நூலிலிருந்து தன்னைவிட அவர் பெற்றுக்கொள்ளும் விஷயம் அதிகம் என்று பொருள்படக் கூறியிருக்கிறார் (புதுமையும் பித்தமும்,1987). இந்தத் தகவல் ஒரு நுட்பமான செய்தியைத் தருகிறது.

வாசிப்பு முக்கியமானதுதான். கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் குறைவு என்றால் வாசிப்பு தன்னளவில் எதையும் தந்துவிடுவதில்லை. அதிக வாசிப்பு அதிகக் குழப்பத்தையும் தரக் கூடும் என்பதற்கு உதாரணமாக நம்மிடையே இன்று பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். கற்கும் நூல்களைத் தெளிவுறக் கற்பதும் கற்காதவற்றையும் கற்றவை சார்ந்து கற்பனை செய்துகொள்வதுமே படைப்பாளியின் இயல்பு. இந்த இயல்புதான் புதுமைப்பித்தனுக்குப் படைப்பாளியாகக் கை கொடுத்திருக்கிறது. முற்றிலும் அறியாதவற்றைப் பற்றி மௌனம் சாதிப்பதும் விவேகமான படைப்பாளியின் இயல்பாகும். தி.ஜானகிராமனின் கதைகளில் இசையின் நாதங்கள் அடிக்கடி கேட்பதையும் புதுமைப்பித்தன் கதைகளில் இசையைப் பற்றிச் சொல்ல நேரும்போது அவர் சட்டென்று தாண்டிச் சென்றுவிடுவதையும் கவனிக்கலாம்.

பெரும்பான்மையான மக்கள் உண்டு, உடுத்து, தன்மானத்துடன் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள். சாதாரண வாழ்க்கையே மனநிறைவைத் தரும் வாழ்க்கையாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர் புதுமைப்பித்தன். இவ்வளவு குறைந்தபட்ச எதிர்பார்ப்பு கொண்ட மக்களுக்குக்கூடக் கூடிவராத வாழ்க்கைதான் புதுமைப்பித்தனைப் பெரிய அளவில் சங்கடப்படுத்தியிருக்கிறது. 'சாதாரண வாழ்க்கையைச் சென்றடைய முடியாத சாதாரண மக்கள்' என்ற தலைப்புக்குள் அவரது பெரும்பான்மையான கதாபாத்திரங்களை அடக்கிவிடலாம்.

புதுமைப்பித்தனின் படைப்புகள் மூலம் நம் மனத்தில் உருவாகிவரும் உலகின் வீச்சு மிகப் பெரிய அனுபவ உலகத்தை அவர் வாழ்நாளில் தேடிக் கண்டடைந்திருப்பதான தோற்றத்தை நமக்குத் தருகிறது. வாழ்வின் சகல நுட்பங்களையும் ரகசியங்களையும் அறிந்தவர் என்ற பிரமையையும் உருவாக்குகிறது. ஆனால் உண்மையில் புதிய மனிதர்களையும் பல்வேறுபட்ட துறை சார்ந்த அறிஞர்களையும் புதிய இடங்களையும் தன் வாழ்க்கைப் பின்னணிக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களையும் பெறுவதற்கான வாய்ப்புகளை அவர் அதிகம் பெற்றிருக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். முதலில் அவர் வாழ்ந்திருந்த காலமே மிகக் குறைவு. மேற்கத்திய அளவுகோலின்படி பாதி ஆயுள். அவர் பிறந்த வருடத்தில் - 1906 - பிறந்தவர்கள் ஒரு சிலரேனும் இன்றுகூட நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும்.

புதுமைப்பித்தனுக்குப் பரிச்சயமான இடங்கள் என்று செஞ்சி, திண்டிவனம், திருநெல்வேலி, சென்னை, பூனா ஆகிய ஒரு சிலவற்றையே சொல்ல முடியும். பிள்ளைப் பிராயத்திற்குப் பின் அவர் நன்கு அறிய நேர்ந்த இடங்கள் இரண்டுதான். ஒன்று நெல்லை. மற்றொன்று சென்னை. அவர் பயணம் செய்த வாகனங்கள் ரயில், பஸ், டிராம் ஆகியவையே. சைக்கிள் ஓட்ட அவருக்குத் தெரியுமா என்பதுகூட நமக்குத் தெரியாது. சென்னைக்குள் மாறி மாறிப் பல இடங்களில் அவர் குடியிருந்திருக்கிறார். சென்னையில் பணி செய்த இடங்களுக்கு மேலாக ஒரு சில நண்பர்களின் வீடுகள், நல்ல காப்பி கிடைக்கும் ஹோட்டல்கள், பழைய புத்தகங்களோ புதிய புத்தகங்களோ கிடைக்கும் கடைகள் ஆகியவையும் அவருக்குத் தெரியும் என்பது நமக்குத் தெரிகிறது: விரல் விட்டு எண்ணக்கூடிய நண்பர்களே அவருக்கு இருந்திருக்கிறார்கள். இவ்வாறு சிந்தித்துக்கொண்டு போகும்போதும் சரி, நவீன எழுத்தாளர்கள் இன்று பெற சாத்தியப்பட்டிருக்கும் எண்ணற்ற அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதும் சரி, புதுமைப்பித்தன் அறிய நேர்ந்த உலகம் மிகச் சிறியதுதான். இந்தச் சிறிய உலகத்திலிருந்துதான் அவர் ஒரு மிகப் பெரிய உலகத்தைப் படைத்திருக்கிறார். ஒருபிடி விதையிலிருந்து ஒரு கானகம் தோன்றுவது மாதிரி இது. சதா விழிப்பு நிலையிலிருக்கும் படைப்பாற்றல் பெற்ற மனம்தான் இதைச் சாதித்துக் காட்ட முடியும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் முக்கியமானது. ஒரு கணத்துக்குள் இருக்கின்றன பல கணங்கள். ஒரு முகத்துக்குள் ஒளிந்திருக்கின்றன பல முகங்கள். ஒரு அனுபவத்திற்குள் மறைந்திருக்கின்றன எண்ணற்ற அனுபவங்கள். ஒரு உறவு கட்டுகிறது பல உறவுகளை. உயர்வு, தாழ்வு என்ற பேதமில்லாமல் ஏற்க வேண்டியவை, விலக்க வேண்டியவை என்ற பாகுபாடு இல்லாமல் ஒழுக்கம், மதம், ஜாதி சார்ந்த இலக்கணங்களில் மனிதர்களைப் பிரிக்காமல் அனைத்தும் அறிய வேண்டியவையே என்றும், அறிந்த அனைத்தும் பரிசீலிக்கப்பட வேண்டியவையே என்றும், கலை, வாழ்க்கையைப் பரிசீலிப்பதற்கான ஒரு சாதனம் என்றும், அதற்கு மேல் அந்தச் சாதனத்துக்கு எந்தப் புனிதமும் இல்லை என்றும் புரிந்துகொண்டிருந்த மனம் செயல்பட்ட விதம் இது. அறிந்த உலகம் குறுகியதாக இருக்கலாம். ஆனால் அந்தக் குறுகிய உலகத்திலிருந்து கண்டு, கேட்டு, உற்று, உணர்ந்து அறிந்துகொண்ட அனுபவங்கள் மிகப் பெரியவை.


புதுமைப்பித்தன் என்னும் படைப்பு ஆளுமையைப் பற்றி நினைவு கூர்ந்துகொண்ட அளவில் இப்போது புதுமைப்பித்தனின் படைப்புக்குள் நாம் போகலாம். நாம் இங்கு பரிசீலிக்க முயல்வது முக்கியமாக அவருடைய சிறுகதைகளையே. அவற்றில் வெளிப்படும் ஆற்றலைப் புரிந்துகொண்டோம் என்றால் ஒருவிதத்தில் அவரது மொத்தப் படைப்பாற்றலையும் புரிந்துகொண்டதுபோல்தான். முதலில் ஒரு சுற்றில் அவர் சிறுகதைகளில் வெளிப்படும் பொதுக் குணாம்சங்களைத் திரட்டிக்கொள்ள முயலலாம்.

புதுமைப்பித்தனின் படைப்புலகத்துக்குள் முதலில் காலடி எடுத்து வைக்கும் வாசகனைக் கவர்வது அவரது மொழி. அவரது மொழி, சுயமானது ; அவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்றெல்லாம் நாம் கூற விரும்புகிறோம். மண்ணில் பிறந்து விழுந்த குழந்தை அதன்பின் கற்றுக்கொள்வதெல்லாம் அதன் வாழ்க்கைச் சூழலிலிருந்துதான் என்ற நியதியை மறந்து நாம் புதுமைப்பித்தனைப் பற்றிப் பேச முடியாது. சில சமயம் பெற்றுக்கொள்பவற்றை ஒரு ஆளுமை மாற்றும் விதம் பெற்றுக் கொள்ளப்பட்டவற்றின் மூலங்களையே கண்டுபிடிக்க முடியாமல் அடித்துவிடுகிறது. புதுமைப்பித்தனோ பெரிய ரசவாதி. இருப்பினும் வீராசாமிச் செட்டியார் (விநோத ரசமஞ்சரி), அ. மாதவய்யா (பத்மாவதி சரித்திரம்) ஆகியோரின் வசன நடையின் பாதிப்பு அவரிடம் நிழலாடுவதை உணர முடிகிறது. ஆங்கில வாக்கியங்களின் அழகில் ஈர்க்கப்பட்ட மனத்தால் அவர் பல தமிழ் வாக்கியங்களை இதமாக உருவாக்கியிருக்கிறார். (சுப்புவய்யரின் வீடு ஜன்னல்களுக்குப் பெயர் போனதல்ல. கலியாணி). மொழியின் மரபில் அவருக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அவ்வாக்கியங்கள். முதலில் சற்று விலகி நின்றன என்றாலும் பின்பு வித்தியாசம் காட்டாமல் தமிழில் கரைந்துவிட்டன. மரபு மீறப்படுவதும் மீறப்பட்ட மரபின் ஒருபகுதி மரபில் இணைந்து கொண்டு விடுவதும் மற்றொரு பகுதி உதிர்ந்து போய்விடுவதும் சமூக நியதியாகவே இருக்கின்றன. அவரது நடையில் அவருடைய ஆளுமை வெளிப்படும் கோலங்கள் நூதனமானவையாகவும் எண்ணற்ற வகை பேதங்கள் கொண்டவையாகவும் வெளிப்படுகின்றன. எழுத்து மொழியின் பாதிப்பைப் பெற்றிருந்த அளவுக்கு அவர் பேச்சு மொழியின் பாதிப்பையும் ஏற்றுக்கொண்டிருந்தார். இதன் பொருள் மொழி உருவானதில் அவரது கண் ஆற்றிய பங்கை அவரது செவியும் ஆற்றியிருக்கிறது என்பதுதான்.

நெல்லைப் பேச்சில் புரண்டு வலுவேற்றிக்கொண்ட சொற்கள் அவர் நடையில் விரவி வருகின்றன. பேச்சுத் தமிழுக்கு முற்றிலும் மாறுபட்டு நிற்கும் பண்டைத் தமிழ்ச் சொற்களையும் பழக்கத்திற்கு வந்துவிட்ட சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகள் சார்ந்த சொற்களையும் அவர் சேர்த்துக்கொண்டு தன் மொழியை வலிமைப்படுத்துகிறார். இது உண்மையில் ஒரு ஜனசமூகத்துக்குப் படைப்பில் இடம் தந்து அவர்களது இருப்பை மண்ணில் உறுதிப்படுத்துவதாகும். படைப்பு சென்னைத் தமிழிலோ அல்லது தஞ்சைத் தமிழிலோதான் சாத்தியம் என்ற அன்றிருந்த மயக்கத்தை உடைத்த தமிழ் இது. மொழியைப் பண்டிதர்களின் சிறைச்சாலைகளிலிருந்து விடுவித்து மக்களுக்குச் சொந்தமாக்கும் பெருமுயற்சியில் பாரதிக்கு ஈடான சாதனை இது. மொழி எந்தளவுக்கு மனித மனங்களுடன் நெருங்குகிறதோ அந்தளவுக்குத்தான் அது படைப்பு மொழியாக உயிர்ப்பு கொள்கிறது என்ற உண்மையின் வற்புறுத்தல் இது. 'செல்லம்மாள்' சிறுகதையில் செல்லம்மாள் 'அது சதிதான்; இப்பவே சொன்னாதானே அவுஹ ஒருவளி பண்ணுவாஹ' என்கிறாள். இந்தக் கொச்சை அன்று தந்திருக்கக்கூடிய அதிர்வை இன்று நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. நகைப்பும் அதற்குப் பின் கவர்ச்சியும் அதற்குப்பின் அங்கீகாரமும் பெறுகிறது இது. அன்றைய பிராமணக் கொச்சைக்கு வேறுபட்ட தனக்குரிய கொச்சையைப் புதுமைப்பித்தன் பயன்படுத்தும்போது அவர் படைப்பாளியை நோக்கி விடுக்கும் செய்தி முக்கியமானது: 'நீ உன் தமிழைப் பயன்படுத்தும் சுதந்திரத்தில் திளை. இந்தச் சுதந்திரம்தான் உன்னை உறுதிப்படுத்துகிறது' என்பதுதான். அவரது செயல்பாடு உருவாக்கிய சுதந்திரப் பாதையில் நடைபோட்ட எண்ணற்ற படைப்பாளிகள் கடந்த அறுபது வருடங்களில் பல வண்ணங்களும் கோலங்களும் நூதனங்களும் கொண்ட எவ்வளவோ சொற்களையும் வாக்கியங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் தந்து தமிழை வாழும் மொழியாக உறுதிப்படுத்திக்கொண்டு போகிறார்கள். எண்ணற்ற மீறல்களையும் அழிப்புகளையும் இன்றைய படைப்பாளி வைதீகத்தினுடையவோ பண்டிதத்தினுடையவோ இருப்பு சார்ந்த ஓர்மைகூட இல்லாமல் சரமாரியாகப் பயன்படுத்துகிறான் என்றால் அவை புதுமைப்பித்தனுடையவும் புதுமைப்பித்தனால் பாதிக்கப்பட்டவர்களுடையவும் செயல்பாடுகளின் விளைவு என்பதை உணர வேண்டும்.

வெவ்வேறு காலங்களுக்குரிய செய்திகளை ஒரே வாக்கியத்தில் இணைப்பதும் பழமையான செய்தியை ஒட்டி ஒரு புத்தம் புதிய செய்தியை இணைப்பதும் அவருக்குக் கைவந்த கலை. அவரது எழுத்தில் வெகு தீவிரமான சிந்தனைகளும் தெறிப்புகளும் அநாயாசமாக வெளிப்படுவது நம்மைக் கவர்கிறது. நடையில் நிகழ்த்தும் ஜாலங்களுக்கு நான் உதாரணங்கள் தரத் தொடங்கினால் அது சுலபத்தில் முடியும் காரியமாக இருக்காது. அறுபது வருடங்களுக்கு முன்னால் அவர் உருவாக்கிய தமிழ் இன்றும் பெரும்பாலும் அலுப்பின்றிப் படிக்கக்கூடியதாகவே இருக்கிறது. நேற்றையத் தமிழ் என்ற அனுதாபத்தை நாம் அதற்கு வழங்க வேண்டியதில்லை. படைப்புச் சார்ந்த தன் நம்பிக்கைகளை, விளைவுகளைப் பற்றிய அச்சம் சிறிதும் இன்றி முன்வைக்கும்போது அச்சொற்கள் கொள்ளும் உணர்ச்சியில் அவை உச்சாடனத்திற்குரிய மந்திரம்போல் மாறிவிடுகின்றன. இப்பகுதிகள்தான் விமர்சகர்களால் மீண்டும் மீண்டும் சலிப்பின்றி மேற்கோள் காட்டப்பட்டு வருகின்றன.

அவர் கதை சொல்லும் பாங்கில் பொருள் சார்ந்த மீறலுக்கான ஒரு வாய்ப்பை வாசக மனம் எதிர்நோக்கிக் கொண்டே இருக்கிறது. பல சமயங்களில் இந்த மீறல் நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது. அதிர்ச்சி ஆர்வத்தை ஊட்டுகிறது. 'உணர்ச்சியின் அடிமைகள்' என்ற கதையில் கதாநாயகனுக்குக் கல்யாணமாகி இன்னும் மூன்று நாட்கள்கூட ஆகவில்லை. அவனது மனநிலை பற்றி ஒரு வருணனை: 'ஏடுகள் (அவன் கையில்) புரண்டு கொண்டிருக்கின்றன. கண்கள் கனவு கொண்டிருக்கின்றன. மனம் சிருஷ்டித்தொழிலைக் கைக்கொண்டால் பிறகு எவ்விதம் இருக்கும்?' கண்கள் கனவு கொண்டிருப்பதை அடுத்துப் பச்சையாக ஒரு வாக்கியம் தொப்பென்று வந்து விழுகிறது. அன்றைய எழுத்தில் இச்சுதந்திரம் அபூர்வமானது. காதலுக்கு அடிப்படையாக மனத்தை மட்டுமே கண்டு அழுத்தும் எழுத்துமுறைக்கு எதிரான மனோபாவம் இது. கணவன் இருக்க காதலனிடம், 'இங்கேயே இருந்துவிடுங்கள்' என்கிறாள் கலியாணி (கலியாணி). கௌதமர், இந்திரனுடன் உடல் உறவு கொள்ள நேர்ந்துவிட்ட அகல்யையை, 'மனத்தூய்மை தான் கற்பு. சந்தர்ப்பத்தால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்?' என்கிறார் (அகல்யை). மருதி தன் குழந்தையைக் கணவன் எடுத்துச்செல்ல, 'அது அவனுக்குப் பிறந்ததுதான்' என்று உறுதியளிக்கிறாள் (துன்பக்கேணி). அம்மாளு தன் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்ப்பதற்காக சோரம் போகிறாள் (பொன்னகரம்). ராமு என்ற எட்டு வயது சிறுவன் தான் காணும் கனவில் தன் கையிலிருக்கும் தடிக்கம் பால் பூகோள வாத்தியாரைத் தாக்குகிறான் (மோட்சம்). ரிக்ஷாக்காரன் குப்பன் தன்னை அலட்சியம் செய்த கிராக்கி தன்னைத் தேடி வந்ததாகப் பகற்கனவு கண்டு அதில், '...வேண்ணா வெளிலே ரிக்ஷா நிக்குது; இஸ்து பொயிச்சுக்கோ...' என்கிறான் (குப்பனின் கனவு). பழம்பெருமையைத் தாக்கும் பார்வைகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. வேதாளம் சொன்ன கதை'யில் வேதாளம், 'முன்னே திரிபுரத்தை எரித்தாரே இந்தச் சிவன், இப்போ அவராலே அந்தக் குருவிக் கூட்டைக்கூட எரிக்க 'முடியாது' என்கிறது. இதுபோல் பழமையைச் சொடுக்கும் வாக்கியங்கள் பல கதைகளில் வருகின்றன.

புதுமைப்பித்தன் கதைகளில் பல்வேறுபட்ட கதாபாத்திரங்கள் வருகிறார்கள். கணவர்கள், மனைவிகள், மாணவர்கள், குழந்தைகள், உழைத்து ஓடாகிப் போனவர்கள், துன்பத்திலும் துயரத்திலும் அழுந்திப் போனவர்கள், வேசிகள், பிச்சைக்காரர்கள், எழுத்தாளர்கள், வாழ்க்கைச் சோதனைகளைத் தாங்க முடியாத அபலைகள், கிராமவாசிகள், சாமியார்கள், முதியோர்கள், வெவ்வேறு ஜாதி மதங்களைச் சேர்ந்தவர்கள், சீர்திருத்தக்காரர்கள், புரட்சிவாதிகள் என்று பலர் வருகிறார்கள். புராணக் கதாபாத்திரங்களும் அதீத கற்பனை உலகங்களில் வாழ்பவர்களும் கடவுள்களும் வருகிறார்கள். வேதாளம், பதுமைகள், கட்டில், பிரம்மராக்ஷஸ், முயல், நரி, நாய் இவற்றை எல்லாம் கதாபாத் திரங்களாக்கிப் புதுமைப்பித்தன் உலாவ விட்டிருக்கிறார்.

இவ்வாறு பல்வேறுபட்ட கதாபாத்திரங்களைப் படைத்து நடமாட விடும் புதுமைப்பித்தனிடம் அவரது சுய அனுபவம் சார்ந்து இரண்டு உலகங்கள் தெள்ளத் தெளிவாக மேலெழுந்து வருகின்றன. ஒன்று நெல்லை மண். மற்றொன்று சென்னை நகரம். இவ்விரு உலகங்கள் சார்ந்த அனுபவங்கள் கதைகளில் பிரதிபலிக்கும்போது அவை பொதுவாக அழுத்தம் கொள்கின்றன. அவரது உணர்வுகள் சார்ந்து இந்த உலகங்கள் எதிரும் புதிருமாக இருக்கின்றன. நெல்லை ஆசை சார்ந்த உலகமாகவும் சென்னை நிராசை சார்ந்த உலகமாகவும் உருவாகின்றன. நெல்லையில் காலம் மனிதனுக்குச் சேவகம் செய்யும்போது சென்னையில் காலம் அவனை முடுக்கி ஓரிடத்தில் நிற்கவிடாமல் விரட்டியவண்ணம் இருக்கிறது. நெல்லை மண்ணுக்குரிய சாலைகளில் இரட்டைக் காளை வண்டிகள் ஜல்ஜல் என்று ஓடும்போது சென்னையில் டிராமின் கணகணப்பு; மோட்டாரின் ஓலம்; பஸ்சின் இரைச்சல். நெல்லையில் தாமிரவருணி; சென்னையில் கூவம்.

சுமார் பன்னிரண்டு வயதில் நெல்லை மண்ணுக்கு வந்து தனது இருபத்தைந்தாவது வயதுவாக்கில் குடும்பப் பின்னணி சார்ந்த மன முறிவுகளுக்கு ஆட்பட்டு அவர் நெல்லையை விட்டு நிர்ப்பந்த வெளியேற்றம் கொள்கிறார் என்றாலும் நெல்லையை மனத்தில் வைத்துத் தான் அவர் சென்னையையும், ஒரு எல்லை வரையிலும் வாழ்க்கைக் கஷ்டங்களையுமே சகித்துக்கொண்டிருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. நெல்லை பசுமையாக அவர் மனத்தில் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. நோய்வாய்ப்பட்ட நிலையில் செல்லம்மாள் 'ஊருக்கு ஒருக்க போய்ப் போட்டு வரலாம்' என்கிறாள் (செல்லம்மாள்). புதுமைப் பித்தனின் குரலும் இதற்குள் இருக்கிறது. 'கலியாணி' கதையில் சுப்புவய்யர் பதினேழு வயது கலியாணி கண் முன் இருக்க மறைந்து போய் விட்ட மூத்தாளை நினைத்துக் கொண்டிருப்பதுபோல் சென்னை வாழ்வில் நெல்லையின் ஞாபகம் அவரை வாட்டுகிறது என்றே சொல்லலாம். சுலோசன முதலியார் பாலம், குறுக்குத்துறை, சிந்துபூந்துறை, மாவடியாபிள்ளை வளைவு, சிங்கிகுளம் போன்ற இடங்களைப் பற்றியெல்லாம் அவர் கூறும்போது வெறும் இடங்களின் பெயர்களைச் சொல்வதாக நமக்குத் தோன்றுவதில்லை. அவையெல்லாம் அவரது நினைவுகள் சுவைக்கும் கரும்புகளின் அடிக் கணுக்களாக நம் மனத்தில் விரிகின்றன.

இவ்வளவு கனவுகள் இருந்தும் ஏதும் மிகையின்றி நெல்லை மண்ணின் குணங்களை மட்டுமல்ல குறைகளையும் தீவிரப் பரிசீலனைக்கு இலக்காக்குவதுதான் அவரது தாட்சண்யமற்ற படைப்புப் பார்வை. இருப்பினும் நிறையும் குறையுமான நெல்லைதான் அவருக்கு வாழ்வின் குறியீடு. நம் கைக்கு மீறிப் போகும் ஏதோ ஒன்று நம்மீது வந்து கவியப் போகிறது என்ற கலவரம் சென்னைமீது அவருக்கு இருக்கிறது. மேற்கத்திய அறிவியல் சென்னையில்தான் நம் பண்பாட்டின் கதவை நொறுக்குகிறது என்று கற்பனை செய்துகொண்டாரோ என்னவோ. மனித உறவுகள் சிதைவது அவரைச் சங்கடப்படுத்துகிறது. ('சென்னையிலே தர்ம சிந்தனை ஒரு போகவஸ்து' - நம்பிக்கை). அறிவியலின் ராட்சசக் குறுக்கீடுகளான எந்திரங்கள் அவரைச் சதா சீண்டிக் கொண்டிருக்கின்றன ('எக்காளச் சிரிப்பு மாதிரி எங்கோ ஒரு பக்கத்திலிருந்து டிராமின் கணகணப்பு!'-கவந்தனும் காமனும்). ரேடியோ என்பது ஒரு அதிசயப் பொருளாக இருந்த முப்பதுகளிலேயே ஒரு கதையில், 'நல்ல வேளை ரேடியோ முடிந்தபின் கடற்கரைக்குப் போனேன்' (சித்தம் போக்கு) என்று ஒரு வரி வருகிறது. இரண்டாம் உலகப்போரின் வன்முறை சென்னையை எட்டிப் பார்க்க ஆயத்தம் கொண்டபோது மக்கள் உள்ளூர அடைந்த பீதியைப் 'படபடப்பு' என்ற சித்திரத்தில் அவர் உருவகப்படுத்துகிறார். அறிவியல் பேய் பற்றிய தன் முன்கூட்டிய சந்தேகங்கள் நிஜங்களாகத் தொடங்கிவிட்டன என்று அவர் கருதியிருக்கக்கூடும்.

விபசாரக் கொடுமை பற்றி அவர் அறியாதவர் அல்ல. ஆனால் அவரும் பி. எஸ். ராமையாவும் சென்னையில் மிக மோசமான விபசாரத்தைத் தெருவில் பார்க்கிறார்கள் (மணிக்கொடி காலம், பி. எஸ். ராமையா). 'கவந்தனும் காமனும்', 'பொன்னகரம்' ஆகிய கதைகள் நம் நினைவுக்கு வருகின்றன. பிச்சைக்காரர்களின் இருப்பு அவருக்குத் தெரியும் என்றாலும் ஜனங்கள் ஏகமாக நடமாடும் நடைபாதையில் ஒரு பிச்சைக்காரன் 'சாவகாசமாகச்' செத்துக்கொண்டிருப்பது கொடுமையில் மேலும் நிகழும் ஒரு சரிவாகிவிடுகிறது (மகாமசானம்). தனக்கு அதிர்ச்சியும் ஏமாற்றமும் தந்த அனுபவங்களைப் படைப்புக்குள் கொண்டு போகும்போது மொழியில் ஒலமிடுபவர் அல்ல புதுமைப்பித்தன். தான் நன்கு அறிந்திருக்கும் விஷயங்களை வாசகர், தம் சுரணை கெட்டதனத்தால் இன்னும் புரிந்துகொள்ளாதிருக்கும் நிலை தன் பொறுமையைச் சோதிப்பதுபோன்ற பாவனையை அவர் பல கதைகளிலும் மேற்கொண்டிருக்கிறார். குத்தலும் கிண்டலும்தான் அவரது சொல்முறைகள். வாழ்க்கையின் அவலங்களை எண்ணிக் கதைக்குள் ஓலமிடுவது அல்ல; அனைத்து விமர்சன அதிர்வுகளையும் வாசகனின் தார்மீக ரோஷத்தைத் தூண்டும் வகையில் செலுத்திக்கொண்டிருப்பதே படைப்பாளியின் பணி. கதாபாத்திரங்களின் அவலங்களுக்காகப் படைப்பாளி நெஞ்சில் அடித்துக்கொள்ளத் தொடங்கும்போது விவேகமான வாசகன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு விலகி நிற்கிறான்.

கதாபாத்திரங்களாக வரும் பெண்களுடன் புதுமைப்பித்தன் கொண்டிருக்கும் உறவு அவர்களை இக்கட்டில் மாட்டிக்கொண்டிருக்கும் ஜீவன்களாகப் பார்க்க வைக்கிறது. இந்தப் பார்வை அவரது வழக்கமான, கறாரான பரிசீலனைகளிலிருந்து அவர்களுக்கு விலக்களிக்கிறது. அவர் பல சமயங்களில் அவர்களின் நிலையை எண்ணித் தார்மீகக் கோபத்தில் சமநிலையை இழந்துவிடுவதையும் நாம் பார்க்கலாம். அலமுவின் மார்பிலிருந்து கொட்டுகிறது ரத்தம். ‘'இந்த ரத்தத்தை அந்தப் பிரம்மாவின் மூஞ்சியில் பூசிடுங்கோ!'’ என்கிறாள் அவள் (வழி). பெண்களின் தத்தளிப்பையும் உணர்வுகளையும் முழுமையாக ஏற்று அவற்றுக்கு அழுத்தம் தருகிறார். ஒரு படைப்பாளியாக அவருக்கு ஆக அருவருப்பானது வக்கீல் வாதம்தான். ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து வாதங்களைத் தொகுப்பது. ஆனால் பெண்களின் உணர்வுகளை மதிப்பதனாலேயே ஒரு நீதிபதியைச் சமநிலைப் பார்வை அற்றவர் என்று சொல்லிவிட முடியாது.

கலியாணி (கலியாணி), மருதி (துன்பக் கேணி), அம்மாளு (பொன்னகரம்), அகல்யை (சாப விமோசனம்), செல்லம்மாள் (செல்லம்மாள்), ஸரஸு(வாடா மல்லிகை), சங்கரிப் பாட்டி (பாட்டியின் தீபாவளி), லக்ஷ்மி (கோபாலபுரம்), திருமதி பால்வண்ணம் பிள்ளை (பால்வண்ணம் பிள்ளை), ராஜம் (இரண்டு உலகங்கள்), மீனாட்சி (கோபாலய்யங்காரின் மனைவி), ருக்மிணி (ஆண்மை), முறுக்குப்பாட்டி முத்தாச்சி (சங்குத் தேவனின் தர்மம்), மருதாயி (காலனும் கிழவியும்). ஜெயா (புதிய கூண்டு), பல கதைகளிலும் கமலா என்ற பெயரிலும் சாரதா என்ற பெயரிலும் வரும் மத்தியதர வர்க்க மனைவிகள் : இவர்களும் இவர்களைப் போன்ற பிற பெண் கதாபாத்திரங்களும் பொதுவாக ஆண்துணையின் ஆதரவு தரும் நம்பிக்கையைப் பெறாமல் தனிமையில் பரிதவிப்பது போன்ற சித்திரமே நம் மனத்தில் உருவாகிறது. துணை தரும் அதிசயமான ஆகவாசத்தைப் பெறுகிறவள் விதிவிலக்காகச் செல்லம்மாள் மட்டும்தான். காலனையே ஒரு கை பார்க்கத் துணிந்துவிட்ட கிழவி (காலனும் கிழவியும்) வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிமிர்ந்து நிற்பதில் வியப்பில்லை. பொதுவாக எல்லாப் பெண் கதாபாத்திரங்களும் உணர்ச்சியின் தளத்தில் தங்கள் இயற்கை தாய்மை சார்ந்து, பாலியல் உறவு சார்ந்து, குழந்தைகள் சார்ந்து, பிற ஆசைகள் சார்ந்து கசிவதைச் சங்கடத்துடன் எதிர் கொள்கிறார்கள். இவர்களில் ஒருத்திகூட வாழ்க்கை சார்ந்த பேராசை கொண்டவள் அல்ல. பெரும் கனவுகள் கொண்டவள் அல்ல. குடும்பம், அக்குடும்பத்தில் தங்கள் எளிய கனவுகள் நிறைவேறும் சூழல் இவ்வளவுதான் அவர்களுக்குத் தேவை. செல்லம்மாளுக்கு ஒரு கனவு இருக்கிறது. 'வருகிற பொங்கலுக்கு வீட்டு அரிசி சாப்பிடவேணும். வருகிறபோது நெல்லிக்காய் அடையும் முருக்க வத்தலும் எடுத்துக் கிட்டு வரணும்' இவ்வளவுதான். இந்த எளிய ஆசை கூட அவளுக்கு நிறைவேறவில்லை.

தனது சமநிலைப் பார்வை என்ற சுட்டெரிக்கும் வெயிலில் எல்லாக் கதாபாத்திரங்களையும் நீக்கமற, புதுமைப்பித்தன் காயப்போட்டுக் கொண்டிருப்பதாகத் தோன்றலாம். இவ்வாறு நம்புவது அவர் காட்டும் பாவனைகளில் ஏமாந்துபோவதன் விளைவு. படைப்பாளியான அவர் நுட்பமானவராகவும் உணர்வுகளில் கூர்மை கொண்டவராகவும் எதிர்மறைகளில் இருக்கும் உண்மை பற்றிய உணர்வுகள் கொண்டவராகவுமே இருக்க முடியும். முழுத் தீமை என்று எதுவும் இல்லை. விஷமும் சிறிய அளவில் மருந்தே. இலக்கியம் சார்ந்து ஆழமற்ற அக்கறைகள் கொண்ட அரசியல்வாதிகளிடமிருந்தோ இயக்கவாதிகளிடமிருந்தோ நற்சான்றிதழ் பெறுவதல்ல அவர் வேலை. வாசக மனத்தில் நுட்பமான, வலிமையான, ஆழமான அதிர்வுகளை எழுப்பி அவர்களது அனுபவங்களை எல்லையற்று விரித்துக்கொண்டு போவதே அவரது நோக்கம்.

புதுமைப்பித்தனின் படைப்புகளில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர்கள் தரப்பில் சேர வேண்டிய நியாயங்களை அவர் தயக்கமின்றி அளித்துக்கொண்டு போகிறார். கதாபாத்திரங்களைக் கறுப்பு வெள்ளையாகப் பிரிக்க அவரது படைப்புப் பார்வையில் இடம் இல்லை. அவர் வாழ்ந்திருந்த காலத்துப் புதிய உளவியல் அறிவுகளும் மனிதனை மறுபரிசீலனை செய்துகொண்டிருந்த நவீன அறிவுகளும் எந்த மனித ஜீவனையும் நன்மையின் உருவமாகவோ தீமையின் உருவமாகவோ பார்க்க இடம் தரக்கூடியவை அல்ல. இலக்கிய, புராண, சமயச் சிந்தனைகளின் நீட்சியாக இருந்து புதுமைப்பித்தனின் காலத்துக்கு முற்பட்ட நாவல்கள் வரையிலும் வந்த கதாநாயகன்- வில்லன் கருத்தாக்கம் அதன் சிந்தனை சார்ந்த சகல சங்கேதங்களுடனும் புதுமைப்பித்தன் படைப்புகளால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இந்த இலக்கிய, புராண, சமயச் சிந்தனை சார்ந்த கறுப்பு-வெள்ளை கருத்தாக்கம்தான் இன்றுவரையிலும் நம் அரசியல் சூதாட்டங்களையும் திரையுலகச் சூதாட்டங்களையும் தீர்மானித்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

புதுமைப்பித்தன் எழுதியுள்ள சிறுகதைகளின் எண்ணிக்கையை வைத்தும் மிகச் சிறப்பான கதைகள் பலவற்றையும் அவர் உருவாக்கியிருப்பதை வைத்தும் சிறுகதை விற்பன்னர் என்றே நாம் அவரை அழைக்க விரும்புகிறோம். ஆனால் அவரது மொத்தக் கதைகளையும் படித்துப் பார்க்கிறவர்களுக்குச் சிறுகதையைவிட நாவலுக்குரிய குணங்கள்தான் அவரிடம் முனைப்பாகச் செயல்படுகின்றனவோ என்ற எண்ணம் ஏற்படக்கூடும். தன் இயற்கைக்குரிய சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொள்ளும்போது சிறுகதைகளை மீறிய சித்திரங்களையும், உருவம் கூடிநிற்கும் சிறுகதைகளைப் படைக்கும்போது தன்னை முடக்கிக்கொள்ளும் அசௌகரியத்தையும்தான் அவர் பெற்றிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. கதைச் சரடிலிருந்து விலகிச் செல்லும் பக்கவாட்டுச் சஞ்சாரம் என்பது பல கதைகளிலும் கட்டுப்படுத்த முடியாத மீறல்களாக வெளிப்பட்டிருக்கிறது. தன் மன ஓட்டத்தில் குமிழியிடும் விமர்சனங்களைக் கதையின் குறிக்கோள் கேட்காத இடங்களிலும் அவர் பதிவு செய்யவே விரும்புகிறார். 'சங்குத் தேவனின் தர்மம்' சிறுகதையில் கதையைத் தொடங்கியதுமே ஹிந்து தர்மத்தின் கட்டுப்பாடுகளைப் பற்றிய விளாசல் சற்று விரிலாகவே இருக்கிறது. இத்தனைக்கும் அது சிறுகதை உருவத்தை மதிக்கும் நோக்கம் கொண்டு எழுதப்பட்ட ஒரு கதை. கதையின் சரடிலிருந்து விலகிச் சென்றாலும் உறுத்தலின்றி மீண்டும் சரடைப் பிடித்துவிடலாம் என்பதில் அவரது நம்பிக்கை அலாதியானது. பொருந்திவராத இடங்களிலும் இந்தப் பக்கவாட்டுச் சஞ்சாரம் தன்னளவில் சுவையாக இருப்பதால் வாசகன் பெறும் மகிழ்வு, விலகல் சார்ந்த உறுத்தலைப் பெரும்பாலும் காணாமல் போய்விடச் செய்கிறது. இடம், மனிதர்கள் சார்ந்த பொது வருணனைகள், கதைத் தேவைக்கு மேலாகத் தன்னளவில் அவருக்குப் பெரும் உற்சாகத்தைத் தருபவை. மூன்றரை பக்கங்கள் கொண்ட 'பொன்னகரம்' கதையில் முக்கால் பங்கு வருணனை; கால் பங்கு கதை. ஒற்றை நோக்கை மையமாக வைத்துச் சிறுகதைகள் அமையவேண்டும் என்பது அந்த உருவம் சார்ந்த ஒரு பொது விதி. பல கதைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நோக்குகளுக்கு இடம் தந்து கதையை அமைக்கிறார் புதுமைப்பித்தன். வெளி சார்ந்த சஞ்சாரம் அடிப்படைத் தேவையாக இருக்கும் படைப்பாற்றல் புதுமைப்பித்தனுடையது. சிறுகதை எனும் ஒற்றையடிப்பாதை அவருக்குப் பல சமயங்களில் போதுமானதாக இல்லை. பத்திரிகைகளின் முதல் தேவையாகச் சிறுகதைகள் இருந்த காலம். படைப்புக் கனவை மேற்கத்தியச் சிறுகதைகளின் சிகரங்கள் தூண்டிக்கொண்டிருந்த காலம். இந்தக் காலத்தின் தேவையைப் புதுமைப்பித்தன் பூர்த்தி செய்திருக்கிறார். அவர் பூர்த்தி செய்த விதம் நீச்சல் குளத்திற்குள் ஒரு திமிங்கலம் வாலை அசைத்துக்கொண்டிருப்பதுபோல் இருக்கிறது.


தமிழ் வாழ்வைப் புரிந்துகொள்வதற்குப் புதுமைப்பித்தன் ஆற்றியுள்ள பங்கு மிக முக்கியமானது. அவருடைய மொழி, மரபின் ஜீவனையும் மண்ணின் சாரத்தையும் இணைத்தது. படைப்புக்கு வலு சேர்க்க உதவிய அவரது ஆற்றல்கள் பல்வேறு தளங்களைச் சார்ந்தவை. இலக்கியம், புராணம், சமயம், ஜாதி,சமூகம், குடும்பம் போன்ற எந்தத் தளத்தில் செயல்படும்போதும் அந்தத் தளத்திற்குரிய வாசனைகளை ஏற்றி மிகுந்த நம்பகத்தன்மையை அவரால் வாசகனின் மனத்தில் உருவாக்கிவிட முடிகிறது. அவரது படைப்புகள் தமிழ்க் கலையின் சாதனை என்று பெருமைப்படும் வகையில் இருக்கின்றன.

இருப்பினும் மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது அவரது ஆற்றல்கள் அவர் போய்ச் சேர்ந்திருக்க வேண்டிய உயரத்திற்குப் போய்ச் சேரவில்லையோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது. தன் படைப்பாற்றலில் அளவுக்கு அதிகமான நம்பிக்கை அவர் கொண்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம். வேகமாகச் செயல்பட்டாலும் தன் எழுத்தாற்றல் கலையைத் திரட்டிவிடும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்திருக்கலாம். மொழிமீது அவருக்கு இருந்த அபூர்வமான பிடிப்பு மொழியாற்றலையும் தாண்டிச் சிறுகதைகளின் நிறைவுக்குத் தேவையான சில கவனங்களைக் கொள்ள அவரைத் தூண்டாமல் போய்விட்டது. நிறைவு கூடாத பல கதைகளின் விதைகளைப் பார்க்கும்போது அவற்றிற்குரிய கவனங்கள் அளிக்கப்பட்டிருந்தால் அவை மிகச் சிறந்த கதைகளாக மலர்ச்சி கொண்டிருந்திருக்கலாம். அவற்றைப் பேணி வளர்க்கும் சிரமத்தை அவர் மேற்கொண்டிருந்தால் தமிழ்ச் சிறுகதையின் முகமும் சரி அவரது ஆளுமையும் சரி மற்றொரு தளத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்கும்.

எந்தப் படைப்பாளியும் பலமும் பலவீனங்களும் கொண்டவன்தான். அவன் பிறக்கும் மண்ணும் அவனது பின்னணியும் மிகப் பெரிய பாதிப்பை அவனிடம் செலுத்துகின்றன. சுய அனுபவம் சார்ந்தும் வாசிப்புச் சார்ந்தும் தன்னைச் சுயப் பரிசோதனைக்கு ஆட்படுத்திப் பக்குவப்படுத்திக்கொள்ள முயலும் படைப்பாளியிடமும் அவன் பின்னணி சார்ந்த சில பலவீனங்கள், வெல்ல முடியாதவையாக மரணம் வரையிலும் எஞ்சிவிடுகின்றன. இந்நிலைக்குப் புதுமைப்பித்தன் ஒரு விலக்கல்ல.

நிறையும் குறையும் கொண்ட மனிதனாகத்தான் படைப்பாளி எப்போதும் வரலாற்றில் பார்க்கப்பட்டு வந்திருக்கிறான். நவீன அறிவுகளுக்குரிய இடதுசாரிச் சிந்தனைகள் ஓங்கி வளர்ந்த காலத்தில் சமூகத் தளம் சார்ந்த செயல்பாடுகள் முக்கியத்துவப்படுத்தப்பட்டு படைப்பாளிமீது அவன் ஏற்க விரும்பாத பல்வேறுபட்ட பொறுப்புகளும் குணங்களும் சுமத்தப்பட்டன. படைப்பாளியை எதிர்மறை விமர்சனத்துக்குள் தள்ளிய சூழல் இது.

புதுமைப்பித்தனும் பிற படைப்பாளிகள்போல் பலமும் பலவீனங்களும் கொண்டவர்தான். அனைத்து மதிப்பீடுகளையும் விமர்சிக்க அவருக்கு உரிமை உண்டென்றால் அவர் எழுத்துகள் உள்ளிட்ட அனைத்தையும் விமர்சிக்க நமக்கும் உரிமை உண்டு. ஒரு படைப்பாளியின் நிறையையோ குறையையோ சுட்டும்போது மொத்தப் படைப்புகள் சார்ந்து அந்தப் படைப்பாளி கொண்டுள்ள பார்வைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்தப் பார்வையை ஏற்றுப் படைப்பாளியை மதிப்பிடத் தெரிந்த எவனும் தன் பார்வை சார்ந்து படைப்பாளியின் குறைகளை ஆராய்ந்து தன் மறுபரிசீலனையை உருவாக்கலாம். படைப்பாளியின் அடிப்படைப் பார்வையை மறைத்துவிட்டுக் குறைகளை மட்டும் தொகுக்க யாருக்கும் உரிமை கிடையாது.


புதுமைப்பித்தனின் சாதனைகளாக வெவ்வேறு கதைகள் வெவ்வேறு வாசகனுக்குத் தோன்றுவது இயற்கையே. வாசகன் தன் ஆழ்ந்த வாசிப்புச் சார்ந்து புதுமைப்பித்தனின் ஆற்றலை மதிப்பிடுவதே சிறப்பானது. கடந்த ஐம்பது வருடங்களாக அவர் எழுத்துகள்மீது அக்கறை கொண்டிருக்கும் வாசகன் என்ற அளவில் எனக்கு முக்கியமான கதைகளைக் - எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் - கூறுகிறேன். காஞ்சனை, புதிய கூண்டு, மகாமசானம், சுப்பையா பிள்ளையின் காதல்கள், வேதாளம் சொன்ன கதை, ஒரு நாள் கழிந்தது, கலியாணி, சிற்பியின் நரகம், துன்பக் கேணி, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், மனக்குகை ஓவியங்கள், நினைவுப் பாதை, காலனும் கிழவியும், சங்குத் தேவனின் தர்மம், இது மிஷின் யுகம்!, மனித யந்திரம், தெரு விளக்கு, சித்தி, கயிற்றரவு. சிகர சாதனை களாகச் சொல்லத்தக்கவை சாப விமோசனமும் செல்லம்மாளும். சிற்பியின் நரகம் சிறுகதையைப் பலரும் மிகச் சிறப்பாக மதிப்பிட்டிருக்கிறார்கள். அறிவுபூர்வமான ஒரு கேள்விக்கு மிகச் சிக்கனமாகக் கதையில் விடைகாணும் முயற்சியை மேற்கொண்டதில், சிக்கனம் தருக்கம் சார்ந்து கடுமையாகிவிட்டதாலேயே உணர்ச்சியின் தளம் இங்கு உறைந்துவிட்டதாகப் படுகிறது. ஒரு உண்மையை அழுத்துவதற்காகச் சற்றுக் கோணலாகச் சொன்னால் பைலார்க்கஸ் எழுதிய கதை போல் இருக்கிறது 'சிற்பியின் நரகம்'.

செல்லம்மாள் கதையைத் தமிழ்ச் சிறுகதையின் ஒப்பற்ற சாதனை என்று சொல்லலாம். வாழ்க்கை சார்ந்த துக்கத்தின் குறியீடுபோல் அது இருக்கிறது. இது ஒரு பக்கம். மற்றொரு கோணத்தில் தமிழில் எழுதப்பட்டுள்ள காதல் கதைகளில் ஆகச் சிறப்பானதும் இதுதான். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பரஸ்பரம் எதற்கென்று தெரியாத நிலையில் நேசிப்பதுதான் காதல் என்றால் அந்தக் காதல் பிரமநாயகம் பிள்ளைக்கும் செல்லம்மாளுக்கும் கைகூடியிருக்கிறது. தமிழ் மண்ணில் இதன் சாத்தியத்தைப் புதுமைப்பித்தன் மூலம் மனதார நாம் நம்புகிறோம். காதல் கதைகள் என்ற பெயரில் நம் வாழ்வுக்கு ஒவ்வாத கணக்கற்ற ஜோடனைகளை இன்று வரையிலும் உருவாக்கியிருக்கும் சகல எழுத்தாளர்களும் இந்தக் கதையை நினைத்து மனத்துக்குள் வெட்கப்பட வேண்டும்.


நான் ஆராய்ச்சித் துறை சார்ந்தவன் அல்ல. இந்நிலையில் நவீன ஆராய்ச்சி அறிவு சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள 'புதுமைப்பித்தன் சிறு கதைகள்' என்னும் இப்பதிப்பின் சிறப்புகளை முழுமையாக மதிப்பிட எனக்குத் தெரியும் என்று தோன்றவில்லை. என்றாலும், ஆராய்ச்சி சார்ந்து ஒரு படைப்பின் செம்மையான பதிப்பை உருவாக்கும்போது அதில் சாதாரண வாசகர்களின் பயன்பாட்டுக்கு எவ்விதக் குறுக்கீடும் இருக்கக்கூடாது என்ற ஆ. இரா. வேங்கடாசலபதியின் கண்ணோட்டம் எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. அத்துடன் பல கதைகளிலிருந்த குழப்பங்களையும் மூலப்பாடங்கள் சார்ந்து அவர் தீர்த்து வைத்திருக்கிறார். சலபதி என் நண்பர். அவர் இப்பதிப்பைச் சிறப்பாக உருவாக்கும் பொருட்டு எடுத்துக்கொண்ட முயற்சிகள் எனக்குத் தெரியும். மேற்கொண்ட அலைச்சல்களும் பட்ட வேதனைகளும் தெரியும். செலுத்திய உழைப்புத் தெரியும். இப்பதிப்பின் சிறப்பைத் தமிழ் உலகம் ஏற்றுக்கொள்ளும் என்றால் அது அவர் உழைப்புக்குக் கிடைத்த பரிசு. ஒரு படைப்பாளிமீது ஒரு ஆராய்ச்சியாளன் கொண்ட பெரும் மரியாதைக்கான அங்கீகாரம்.