உள்ளடக்கத்துக்குச் செல்

புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்/சுப்பையா பிள்ளையின் காதல்கள்

விக்கிமூலம் இலிருந்து


சுப்பையா பிள்ளையின் காதல்கள்


வீரபாண்டியன் பட்டணத்து ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஜீவனோபாயத்திற்காகச் சென்னையை முற்றுகையிட்ட பொழுது, சென்னைக்கு மின்சார ரெயிலோ அல்லது மீனம்பாக்கம் விமான நிலயமோ ஏற்படவில்லை. மாம்பலம் என்ற 'செமன்ட்' கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான ஏரியாக இருந்தது. தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம்.

திருநெல்வேலியிலே, ரெயில்வே ஸ்டேஷன் சோலைக்குள் தோன்றும் ஒற்றைச் சிகப்புக் கட்டிடமாக, 'ஜங்க்ஷன்' என்ற கௌரவம் இல்லாமல், வெறும் இடைகழி ஸ்டேஷனாக இருந்தபோது திருவனந்தபுரம் 'எக்ஸ்பிரஸ்' மாலை நாலு அல்லது ஐந்து மணிக்குத் தஞ்சாவூர் மார்க்கமாகச் செய்த நீண்ட பிரயாணத்தின் சின்னங்களுடன் சோர்வு தட்டியது போல வந்து நிற்கும்.

அந்தக் காலத்தில் வீரபாண்டியன் பட்டணத்துக்குப் போகவேண்டும் என்றால், தபால் வண்டியானால் மலிவு; பிரம்மாண்டமான லக்ஷ்மி விலாஸ், கண்பதி விலாஸ் சாரபங்க் ஏறினால் சீக்கிரம் செல்லலாம். அப்பொழுதெல்லாம் திருநெல்வேலி மைனர்கள் ஸ்ரீவைகுண்டம் வைப்பாட்டிமார் வீடுகளுக்கு ஜட்கா வண்டியில் போய்விட்டு இரவு பத்து மணிக்கெல்லாம் திரும்பிவிடுவார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் ஜட்கா என்றால் அவ்வளவு 'மௌஸ்'.

அந்தக் காலத்திலெல்லாம் ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஒரு வாலிபன். ஊரையே வளைத்துக் கோட்டை கட்டி விடும்படிப் பணம் சேர்த்துக் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டவர் இன்னும் ஒரு முறைகூட - அதாவது தம் கல்யாணம், தம்முடைய தகப்பனார் மரணம் இவைகளுக்காக ஐந்தாறு நாட்கள் ரஜா எடுத்துக்கொண்டு அந்தப் பிரதேசத்திற்கு மின்வெட்டு யாத்திரை செய்தது தவிர - மற்றபடி ஒரு முறைகூடச் சென்றதே இல்லை.

'தனலட்சுமி பிரொவிஷன் ஸ்டோ ர்ஸ்' பூர்வத்தில் பேட்டைப் பிள்ளை ஒருவரால் பவழக்காரத் தெருவில், அப்பகுதியில் வசிக்கும் திருநெல்வேலை வாசிகளின் சுயஜாதி அபிமானத்தை உபயோகித்துச் சிலகாலம் பலசரக்கு வியாபாரம் நடத்தியது. அந்த வியாபாரத்தில் ஸ்ரீ சுப்பையா பிள்ளையும் பண வசூல், கணக்கு, வியாபாரம் என்ற நானாவித இலாகாக்களையும் நிர்வகித்தார், அதாவது 'மான்ட் போர்ட்' சீர்திருத்தக் காலத்து மாகாண மந்திரிகள் மாதிரி. பிறகு 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸ்' ஜவுளிக் கடையாக மாறி, திருநெல்வேலி மேலரத வீதி ஜவுளி வர்த்தகர்களில் சில்லறைப் பேர்வழிகளுக்கு மொத்தச் சரக்குப் பிடித்துக்கொடுக்கும் இணைப்புச் சங்கிலியாகி, பெரிய வர்த்தகம் நடத்துவதற்குக் காரணம் கம்பெனிக்கு ஆரம்பத்தில் கிடைத்த ஆதரவினால் ஏற்பட்ட லாபம் என்பதுடன், எதிரில் திறக்கப்பட்ட 'மீனாட்சி பிரொவிஷன் அன்ட் பயர்வுட் ஸ்டோ ர்ஸ்' என்பதை மறந்துவிடலாகாது. இது தஞ்சாவூர் ஐயர் ஆரம்பித்த கடை. சர்க்கரையாகப் பேசுவார்; பற்று வரவும் சௌகரியத்திற்கு ஏற்றபடி இருந்தது. அவர் கடையில் கணக்கு வைத்ததால், குடும்பத் தலைவர்கள் வீட்டுத் தேவைகளுக்கு என்று தனி சிரமம் எடுத்துக் கொண்டு வெளியில் காலடி எடுத்து வைக்க வேண்டிய அவசியமில்லாது போயிற்று. மேலும் 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸ்' முதலாளி, தமக்கு அந்தப் பகுதி 'திருநெல்வேலிச் சைவர்களுடன்' ஏற்பட்ட நெருங்கிய தொடர்பால் கடையில் நேரடியாக வந்து வாங்குகிறவர்களுக்கு ஒரு மாதிரி, வீட்டில் இருந்துகொண்டு கணக்குச் சிட்டையை அனுப்பி மாசாமாசம் பாக்கி வைப்பவர்களுக்கு ஒரு மாதிரி என்று நடக்க ஆரம்பித்ததும் இதற்கு ஒரு துணைக் காரணம். விசேஷமாக மண்பானைச் சமையல் என்ற விளம்பரங்களுடன் சைவச் சாப்பாட்டு ஹோட்டல் ஒன்றும் மூடப்பட்டது. அதாவது 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸி'ல் மொத்த வியாபாரம் நடத்திய ஹோட்டல் பிள்ளை, ஊரோடு போய்ச் சௌகரியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் 'ரிட்டயராகி' விட்டார்; சாத்தூர் 'டிவிஷ'னில் அவருடைய மகன் 'ரெவின்யூ இன்ஸ்பெக்டர்' உத்தியோகம் பார்த்ததால் அவருக்கு ஹோட்டல் நடத்துவது அகௌரவமாக இருந்தது. நிலபுலன்களைப் பார்க்கப் போவதாகச் சென்னைக்குச் செலவு பெற்றுக்கொண்டார். இப்படியாகத் 'தனலட்சுமி ஸ்டோர்ஸ்' ஜவுளிக்கடையாக மாறியது.

இந்த மாறுதலால் ஸ்ரீ சுப்பையா பிள்ளைக்கு அந்தஸ்தும் உயர்ந்தது; சம்பளமும் உயர்ந்தது. திருநெல்வேலிக் கடைப்பிள்ளைகள் வரும்போதும் போகும்போதும் காட்டும் சிரத்தையால் உபவருமானமும் ஏற்பட்டது. உடை, நாட்டு வேஷ்டியிலிருந்து மல்வேஷ்டியாயிற்று. பாங்கியில் பணமும் கொஞ்சம் சேர்ந்தது. அதனுடன் அவருடைய குடும்பமும் பெருகியது. குடும்ப 'பட்ஜட்'டில் வீட்டு வாடகை இனம் பெரும் பளுவாக இருந்தாலும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வசதி அளிப்பதாக இல்லை.

தேச விழிப்பின் முதல் அலையான ஒத்துழையாமை இயக்கம், பின்னர் அதன் பேரலையான உப்பு சத்தியாக்கிரகம் - இவருடைய வாழ்விலோ, மனப்போக்கிலோ மாறுதல் ஏற்படுத்தவில்லை. வீரபாண்டியன்பட்டணத்தின் ஒரு சிறு பகுதியாகவே அவர் சென்னையில் நடமாடினார். ஜீவனோபாயம், பிறகு சௌகரியப்பட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் - எல்லாம் சேர்ந்த உருவம் ஸ்ரீ சுப்பையா பிள்ளை. காலணாப் பத்திரிகைகள் காங்கிரஸின் சக்தியை அவரிடம் கொண்டுவந்து காட்டவில்லை என்றால், பவழக்காரத் தெரு, திருநெல்வேலி மேற்கு ரதவீதி, அப்புறம் நினைவிலிருக்கும் வீரபாண்டியன்பட்டணம் என்ற மூன்று சட்டங்களுக்குள்ளாகவே அவருடைய மனப் பிரதிமை அடங்கிக் கிடந்தது என்று வற்புறுத்துவது அவசியமில்லை.

மின்சார ரெயில் வண்டி அவருடைய வாழ்வில் ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. அவர் வேலை பார்த்த கடையின் பூர்வாசிரமத்தில், அவர் பற்று வரவு நடத்திய பெங்களூர் நாயுடு, ஒரு முழு வாழ்விலும் சம்பாதித்த ஏமாற்றத்தின் சின்னங்களுடன் பழையபடி சொந்த ஊருக்குப் போய்விட விரும்பினார். அவருக்குத் தாம்பரத்தில் ஒரு சின்ன வீடு இருந்தது. ஸ்ரீ சுப்பையா பிள்ளைக்கு அவருடைய வார்த்தைகள் மீது நம்பிக்கை இருந்தது. அதன் விளைவாகப் பிள்ளையவர்களுக்குத் தாம்பரம் - பீச் யாத்திரை பிரதி தினமும் லபித்தது. ஊருக்கெல்லாம் மின்சாரம் வந்தாலும் அவருக்கு அந்தப் பழைய மண்ணெண்ணை (கிரோசின்) விளக்குத்தான்; குழாய் வந்தும் அவருக்குத் தாம்புக் கயிறும் தவலையுந்தாம்.

பிள்ளையவர்கள் இத்தனை காலம் வீட்டு வாடகைக்குச் செலவு செய்தது, இப்பொழுது தனக்கும் தன் மூத்த பையனுக்கும் - அவன் படிக்கிறான் - ரெயில் பாஸுக்குச் செலவாயிற்று. விடியற்காலம் கிணற்றுத் தண்ணீர் ஸ்நானம். பழையது, கையில் பழையது மூட்டை, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை - இந்தச் சம்பிரமங்களுடன் பவழக்காரத் தெருவை நோக்கிப் புறப்படுவார்.

இரவு கடைசி வண்டியில் காலித் தூக்குச் சட்டி, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை, பசி, கவலை - இவற்றுடன் தாம்பரத்திற்குத் திரும்புவார். 'பெண்ணுக்குக் கல்யாணம் காலாகாலத்தில் செய்யவேணும். மூத்தவனுக்குப் பரீக்ஷைக்குப் பணம் கட்ட வேணும். தோற்றுப் போய் வீட்டோ டு இருக்கும் சின்னவனை ஏதாவது ஒரு தொழிலில் இழுத்துவிட வேணும். நாளைக்குப் பால்காரனுக்குத் தவணை சொல்லாமல் பணம் ஏதோ கொஞ்சம், கூடக் குறையவாவது கொடுக்க வேணும்...'

பிள்ளையவர்கள் அநுட்டானாதிகள் முடித்துக்கொண்டு, சாப்பிட்டு முடித்து 'முருகா' என்று கொட்டாவி விட்டபடி திண்ணையில் சரிவதற்குமுன் மணி பன்னிரண்டாகிவிடும். இப்படியே தினந்தோறும்...

2

காலை ஏழு மணி சுமாருக்குத் திருவனந்தபுரம் 'எக்ஸ்பிரஸ்' விசில் சப்தம், 'அவுட்டர் சிக்னல்' அருகில் கேட்கும்பொழுது ஸ்ரீ சுப்பையா பிள்ளை தாம்பரம் ஸ்டேஷன் மாடிப் படிகளில் கால் வைப்பார். எதிரில் நிற்கும் டிக்கெட் பரிசோதகன் புது ஆசாமியாக இருந்தால் பாஸை எடுத்துக் காண்பித்துவிட்டு மேலேறுவார். இல்லாவிட்டால், சிந்தனைகளுடன், படிகளில் கால் உயர்ந்தேறிச் செல்லும்; கண்கள் தெற்கு நோக்கி ரெயில் வண்டி வரும் திசையைத் துழாவும்; திருநெல்வேலையிலிருந்து தமக்குத் தெரிந்த யாரும் வந்தால் பார்க்கலாமே என்ற ஆசைதான். 'எக்ஸ்பிரஸ்' புறப்பட்ட பிறகுதான் மின்சார ரெயிலும் புறப்படும். ஆகையால் அந்த நேரத்தில், 'எக்ஸ்பிரஸ் பிளாட்பார'த்திற்குச் சென்று இரவு முழுவதும் கொசுக்களுடன் மல்லாடிய சிரமத்தைச் செங்கற்பட்டு அவசரக் காப்பியில் தீர்த்துக் கொண்ட பாவனையில் ஜன்னல் வழியாகத் தலை நீட்டுபவர்களைப் பார்ப்பதில் ஒரு நாட்டம் பிள்ளையவர்களுக்கு எப்பொழுதும் உண்டு.

இடுப்பில் நாலு முழம் மல், தோளில் ஒரு துவர்த்து, மடியில் சம்புடம் வகையறா, கையில் போசன பாத்திரம் - இந்தச் சம்பிரமங்களுடன் பிள்ளையவர்களை எப்பொழுதும் - மழையானாலும் வெயிலானாலும் பார்க்கலாம். எப்பொழுதும் ஒரு வாரமாக க்ஷவரம் செய்யாத முகம், நெற்றியில் பளிச்சென்ற விபூதி, நனைந்துலரும் தலை மயிரைச் சிக்கெடுக்கும் வலக்கை - இவைகளை நினைத்துக் கொண்டால் சுப்பையா பிள்ளையின் உருவம் வந்து நின்றுவிடும். மழைக் காலமானால் கையில் குடை ஒன்று எப்பொழுதும் விரித்துப் பிடித்தபடி போசன பாத்திரத்துடன் அதிகமாகக் காணப்படும்.

தெற்கு ரதவீதி ஜவுளி வியாபாரிகள் இவரிடம் தப்பித்துக் கொண்டு நேரடியான வியாபாரம் நடத்திவிடுவது துர்லபம்; அப்படி எப்பொழுதாவது நடத்த முயன்றிருந்தால் பிள்ளையவர்களுக்குத் தேக அசௌக்கியம், ரெயிலுக்கு வரத் தாமதமாயிற்று என்பதுதான் கணக்கு. இதனால் பிள்ளையிடம் கடை முதலாளிக்கு வெளிக் காட்டிக் கொள்ளப்படாத தனி வாஞ்சை - 'சுப்பையா இல்லாட்ட நம்ம கையொடிஞ்ச மாருதி' என்பார் முதலாளிப் பிள்ளை. இவ்வளவிருந்தும் பண விஷயத்தில் என்னவோ அவர் வெகு கறார்ப் பேர்வழி.

பிள்ளையவர்கள் ரெயிலில் ஏறுவதே ஒரு தினுசு. நடுமைய வண்டியில், வாசலுக்கு அருகில் உள்ள வலது பக்கத்து 'ஸீட்டில்', எஞ்சினுக்கு எதிர்ப்புறமாகத்தான் உட்காருவார். அது அவருடைய 'ஸீட்'. புறப்படுகிற இடத்தில் ஏறிக் கடைசியாக நிற்கிற இடத்தில் வந்து இறங்குகிறதால் இந்த இடத்துக்கு அவரிடம் யாரும் போட்டிக்கு வந்ததே இல்லை. வந்திருந்தாலும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள். தாம்பரத்திலிருந்து 'பீச்' வரையில் உள்ள பாக்கங்களிலும், பேட்டைகளிலும் இரண்டிரண்டு நிமிஷம் வண்டி நிற்கும்பொழுதுதான் அவருடைய நிஷ்டை கலையும். வண்டி 'பீச்' ஸ்டேஷனில் வந்து நின்றுவிட்டது என்றவுடனேயே இறங்குவதில்லை. வெளியில் இறங்கியதும் வேஷ்டியை உதறிக் கட்டிக் கொண்டபின் துவர்த்து முண்டை உதறி மேலே போட்டுவிட்டு பிறகு ஜன்னல் வழியாக வண்டிக்குள் தலையையும் கையையும் விட்டு கையில் போசனப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு காலெட்டி வைப்பார் ஸ்ரீ சுப்பையா பிள்ளை. ஆர அமர மெதுவாக, சாவகாசமாக இறங்கி ஸ்டேஷனை விட்டு வெளியே போகும் கடைசிப் பிரயாணி சுப்பையா பிள்ளை. தாம்பரத்திலும் பீச்சிலும் வண்டியில் ஏறும் முதல் பிரயாணியும் அவர்தாம். அவரிடம் சொந்தமாகக் கடிகாரம் ஏதும் இல்லை. அவரே ஒரு கடிகாரம்.

பிள்ளையவர்கள் வண்டியில் ஏறி உட்கார்ந்தாரானால் தலையை வெளி நீட்டாமல் ஜன்னல் பக்கமாகத் திரும்பிவிடுவார். 'பீச் ஸ்டேஷன்' கோட்டைச் சுவர்களில் கண்பார்வை மோதிக்கொள்ளும் வரையில் அந்தப் பாவனையில் கழுத்தே இறுகிவிட்ட மாதிரி உட்கார்ந்திருப்பார். பார்வையில் ஒரு குறிப்பு இருக்காது; அத்திசையில் இருக்கும் பொருள்கள், ஜீவன்கள் அவர் பார்வையில் விழும் என்பதில்லை; விழுவதில்லை என்று சொல்ல வேண்டும்.

ஆனால் இவைகளுக்கெல்லாம் விதிக்கு விலக்கு இந்த மீனம்பாக்கம் ஸ்டேஷன். இதை வண்டி நெருங்கும்பொழுது அவர் கண்கள் உயிர் பெறும். மிரண்டு சோலையுடன் கூடிய கப்பிக்கல் ரஸ்தாவையும் தாண்டி, தூரத்தில் தெரியும் விமான நிலயத்தில் தங்கும்.

'எப்பவாவது ஒரு தரத்துக்கு அஞ்சு ரூபாயை வீசி எறிந்துவிட்டு ஆகாசக் கப்பலில் ஏறிப் பார்த்துவிட வேணும்' என்பது அவரது தினசரி உத்தேசம் - பிரார்த்தனை. எப்பவாவது... மீனம்பாக்கத்தில் சிவில் விமான ஏற்பாடு அமைக்கப்பட்டதிலிருந்து நாளது தேதி வரை, அந்த 'எப்பவாவது' என்ற எல்லைக்கு முடிவுகாணவில்லை. வண்டி இரண்டு நிமிஷம் நின்று சென்னையை நோக்கிப் புறப்படும் வரையில் தில்லை நோக்கிய நந்தன் தான். வண்டி, 'ஸ்டேஷன் பிளாட்பார'த்தை விட்டு நகர்ந்து வேகமெடுக்குமுன், இவரையும் வண்டியையும் வழியனுப்பிப் பின் தங்கி, மறுபடியும் தென்படும் விமான நிலயக் கட்டிடங்கள் பிள்ளையவர்களின் இரத்தவோட்டத்தைச் சிறிது துரிதப்படுத்துவதுதான் மிச்சம். அடுத்த ஸ்டேஷன் வருவதற்குமுன் அவருடைய மனம் ஜப்பான் சீட்டிகளிலும் புடைவைகளிலும் முழுகி மறைந்துவிடும். முக்குளித்து வெளிவரும்போதெல்லாம், மனமானது பெண்ணுக்கு வரன் தேடுவது, மேயன்னா விலாசத்துப் பாக்கிக்காக இன்னொரு தடவை கடுதாசி போடுவது, இந்த வருசமாவது வைகாசிக்குக் காவடி எடுத்துவிட வேணும் என்று நிச்சயிப்பது - இவ்விதமாக 'பீச் ஸ்டேஷனை' நெருங்கிக் கொண்டிருக்கும். ஒரு முறை திருநெல்வேலிப் பக்கமாகப் போனால் பெண்ணுக்கு வரன் நிச்சயிப்பதுடன் காவடியையும் எடுத்துவிட்டு, சின்னப் பயலுக்கு ஏதாவது ஒரு வழி செய்துவிட்டு வரலாம். ராதாபுரத்துப் பிள்ளை கொளும்புக்குப் போகையில் தாக்கல் எளுதுவதாகச் சொன்னார்கள். வந்து ஆறு மாசம் ஆச்சே, போனதும் எதுக்கும் ஒரு கடுதாசி போட்டுவிட்டு மறு வேலை பார்க்கணும். இந்தச் சேட்டுப் பயலைப் பார்த்துக்கிட்டு நேரா கடைக்குப் போயிட்டா அப்புறம் வெளியிலே போக வேண்டியிருக்காது; முதலாளியையும் பாத்துப் பேச அப்பந்தான் சௌகரியம்... அவுஹ என்னமோ ஊருக்கு ஒரு மாசம் போயிட்டு வரணுமாமே - விதிதான்... எப்படியும் கேட்டுப் பாக்கது...'

வண்டி மாம்பலம் வந்து நின்றது. 'பிளாட்பார'த்தில் ஜனக்கூட்டம்; ஏக இரைச்சல். கூடைக்காரிகளும் ஆபீஸ் குமாஸ்தாக்களும் அபேதமாக இடித்து நெருக்கிக் கொண்டு ஏறினார்கள். இந்த நெருக்கடியில், இவர் பார்வையில் விழும் வாசலில் பெரிய சாக்கு மூட்டையும் தடியுமாக ஏறிய கிழவனாருக்குப் பின் பதினாறு வயசுப் பெண் ஒருத்தி 'விசுக்' என்று ஏறிக் கிழவனாருக்கு முன்னாக வந்து காலியாகக் கிடந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள். 'பொம்பிளையா மாதிரியாக் காங்கலியே; நெருக்கித் தள்ளிக்கொண்டு மின்னாலே ஓடியாந்து உட்கார்ந்து கொண்டாளே; பொம்பிளை வண்டியில்லே' என்று ஆச்சரியப்பட்டார் பிள்ளை.

வந்து உட்கார்ந்தவள் ஒரு மாணவி. வைத்தியத்துக்குப் படிப்பவள். கழுத்தில் 'லாங் செயி'னுடன் ஒரு 'ஸ்டெதாஸ்கோப்'பும் அலங்காரத்துக்காக (?) தொங்கிக் கொண்டிருந்தது. இன்ன வர்ணம் என்று நிச்சயமாகக் கூறமுடியாத பகல் வேஷ வர்ணங்களுடன் கூடிய ஒரு புடைவை. அதற்கு அமைவான 'ஜாக்கெட்'. செயற்கைச் சுருளுடன் கூடிய தலை மயிரைக் காதை மறைத்துக் கொண்டையிட்டிருந்தாள். காதிலிருந்து ஒரு வெள்ளிச் சுருள் தொங்கட்டம். கையில் புஸ்தகமோ, நோட்டோ அவர் நன்றாகக் கவனிக்கவில்லை. நெற்றி உச்சியை உள்ளங்கையால் தேய்த்துத் தினவு தீர்த்துக் கொண்டார். கண்களைக் கசக்கிக் கொண்டு, ஒரு வாரமாகக் கத்தி படாத முகவாய்க் கட்டையை தடவிக் கொடுத்துக் கொண்டு, ஜன்னல் வழியாக எதிர்ப்பக்கத்தில் தெரியும் வீடுகளைப் பார்த்தார். பார்வை மறுபடியும் அந்தப் பெஞ்சுக்குத் திரும்பியது.

சாக்கு மூட்டையுடன் திண்டாடிய கிழவனார் அதைத் தனது முழங்காலருகில் சரிய விட்டுவிட்டு இரண்டு கைகளாலும் தடியைப் பிடித்துக் கொண்டு கொட்டாவி விட்டு அசை போட்டபடி பெஞ்சின் மூலையில் ஒண்டி உட்கார்ந்திருந்தார். பெண்ணோ சாவகாசமாகச் சாய்ந்து வண்டியில் நிற்கும் மற்றவர்கள் மீது ஒரு தடவை பார்வையைச் சுழற்றி விட்டு, தனது கைப்பையைத் திறந்து அதற்குள் எதையோ அக்கறையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். வண்டி புறப்பட்டது...

கோடம்பாக்கத்தின் 'செமன்ட்' சதுரக் கட்டிடங்களில் அவர் கண் விழுந்தது. 'பெத்துப் போட்டா போதுமா...' என்று அந்த நேரத்தில் வீட்டுக் கிணற்றடியில் தண்ணீர் சுமக்கும், வரன் நிச்சயிக்க வேண்டிய தமது மகளைப் பற்றி நினைத்தார். அவளைப் போல இவளையும் பெண் என்ற ரகத்தில் சேர்த்துக் கொள்ள அவர் மனம் மறுத்தது.

'ஷாக்' அடித்ததுபோல் பிள்ளையவர்கள் கால்களைப் பின்னுக்கிழுத்தார். கூட்டத்தின் நெருக்கத்தால் அவளது செருப்புக் காலின் நுனி அவரது பெருவிரல் நுனியைத் தொட்டது. பரக்க விழித்த பார்வையுடன் பிள்ளையவர்கள் கால் உடல் சகலத்தையும் ஒடுக்கிச் சுருக்கி 'ஸீட்டு'க்குள் இழுத்துக் கொண்டார். அந்தப் பெண்ணும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கையிலிருந்த புஸ்தகத்தில் ஆழ்ந்து விட்டாள். சிந்தனை அதில் விழவில்லை. அந்தப் பார்வை பிள்ளையவர்கள் மனசுக்குள் எதையோ தூண்டில் போட்டு இழுத்தது. நெற்றியில் வியர்வை அரும்ப ஜன்னல் வழியாக வலப்புறத்து வயல் - கட்டிடக் குவியல்களைப் பார்த்தார்.

மனம் எப்பவோ நடந்த கல்யாண விஷயத்தில் இறங்கியது. வீரபாண்டியன்பட்டணத்துக் கருக்கு மாப்பிள்ளை - மேளதாளக் குறவைகளுடன் வீட்டில் குடிபுகுந்த ஸ்ரீமதி பிள்ளையின் மஞ்சள் அப்பி சுத்துருவில் மருக்கொழுந்துடன் கூடிய நாணிக் கோணிய உருவம், பிறகு தேக உபாதையையும் குடும்பச் சுமையையும் தூக்கிச் சென்ற நாள், சங்கிலிகள், குத்துவிளக்கை அவித்துவைத்த குருட்டுக் காமம்...

சடபட என்ற பேரிரைச்சலுடன் எதிர் லயனில் ஒரு மின்சார ரெயில் விரைந்து நெருங்கியது. வண்டிகள் ஒன்றையொன்று தாண்டிச் செல்லும் சில விநாடிகளில் காதையும் மனதையும் குழப்பும் கிடுகிடாய்த்த சப்தம்; எதிரே ஓடிமறையும் ஜன்னல்களில் தோன்றி மறையும் தலைகள் - அப்பாடா! வண்டி சென்றுவிட்டது. சப்தமும் தூரத்தில் ஒடுங்குகிறது.

பிள்ளையவர்களின் மனம் ஓசையின் பின்பலத்தால் வேறு ஒரு திசையில் சஞ்சரிக்கிறது. 'பிராட்வே' முனையில் டிராமும் மோட்டாரும் மோதிக்கொள்ள நெருங்கிவிட்டது. இடையில் அந்தப் பெண். பிள்ளையவர்கள் அவளை எட்டி இழுத்து மீட்கிறார். 'தனியாக வந்தால் இப்படித்தான்' என்கிறார். மீண்டும் ஓரிடத்தில் ஒரு ரிக்ஷாவில் அதே பெண்; சக்கரத்தின் கடையாணி கழன்று விழுகிறது. ஓடிப்போய் வண்டியைச் சரிந்துவிடாமல் தாங்கிக் கொள்கிறார். கூட்டம் கூடிவிடுகிறது. கூட்டத்திலே போராடி மல்யுத்தம் செய்து அவளை மீட்டுக்கொண்டு வருகிறார்... பிள்ளையவர்களின் மனசு சென்று சென்று அவள் உருவத்தில் விழுகிறது. முகத்தை ஜன்னல் பக்கம் திருப்புகிறார். 'எழும்பூர் தாண்டிவிட்டதா' என்று ஆச்சரியப்படுகிறார்.

பார்க் ஸ்டேஷன்!

கூட்டம் ஏகமாக இறங்குகிறது. பிள்ளையவர்கள் பார்த்தபொழுது எதிர் 'ஸீட்' காலியாக இருந்தது. கிழவனும் மூட்டை முடிச்சுக்களுடன் இறங்கிவிட்டான். அந்தப் பெண் எப்போது இறங்கினாள்? வந்த அவசரம் மாதிரிதான் போன அவசரமும்... வண்டியில் பெரும்பான்மையான கூட்டமும் இறங்கிவிட்டது. இவர் பெட்டியில் எல்லா இடங்களும் காலி.

மின்சார விசில்...

வண்டி புறப்பட்டுவிட்டது. தலையை நீட்டி எட்டிப் பார்த்தார். அப்பாடா! ஒருத்தருமில்லை. காலை எதிர்ப் பெஞ்சில் நீட்டிக் கொண்டு பிடரியில் இரு கைகளையும் கோர்த்து அண்டை கொடுத்துக் கொண்டு கண்களை அரைவாட்டமாகச் சொருகி யோசனையில் ஆழ்ந்தார். மறுபடியும் அந்தப் பெண்ணின் உருவம் மனசில் வந்து கூத்தாட ஆரம்பித்தது. விரல்களை வாயருகில் சொடக்கிவிட்டு 'சிவா' என்றபடி கொட்டாவி விட்டார்.

கோட்டை தாண்டி ரெயில் 'தகதக'வென்ற கடலின் பார்வையில் ஓடிக்கொண்டிருந்தது. 'வரும்போது ஞாபகமா பால்காரனுக்கு வழி பண்ணனும்... அடுத்த சீட்டை எடுத்தால் திருநெல்வேலி போய்வரச் செலவுக்குக் கட்டுப்படியாகிவிடும்...திருச்செந்தூரிலே ஒரு கட்டளை ஏற்படுத்திவிட்டால், முருகன் திருநீறாவது மாசா மாசம் கிடைக்கும்...'

வண்டி ஊதியது...

'அந்தச் சின்னப் பையனுக்கு வேட்டி எடுக்கவா? போன மாசந்தானே ஒரு சோடி வாங்கினேன்... பயலெக் கண்டிக்கணும்.'

வண்டி வந்து நின்றது.

கீழே இறங்கி வேட்டியை உதறிக் கட்டினார். மேல்துண்டை உதறிப் போட்டுக் கொண்டார். ஜன்னல் வழியாக எட்டிப் போசனப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கால் எட்டி வைத்தார்.

டிக்கட் இன்ஸ்பெக்டர் சரிபார்த்த கடைசிப் பிரயாணி ஸ்ரீ சுப்பையா பிள்ளை.

1949க்கு முன்பு