புது டயரி/நாலாவது
சங்கீத வித்துவான்கள் எல்லோருமே, முக்கியமாக வாய்ப்பாட்டுக்காரர்கள், வெற்றிலை பாக்குப் புகையிலை போடுபவர்களாக இருக்கிறார்கள். வெறும் தாம்பூலம் அல்ல; புகையிலையோடு சேர்ந்த தாம்பூலம். புகையிலை வராததற்கு முன்பு வெற்றிலை, பாக்கு இரண்டையும் போடுவார்கள். சுண்ணாம்பு தடவிக் கொள்வார்கள். சுண்ணாம்பு என்று சொல்கிறதில்லை. ‘மூணாவது’ என்று சொல்வார்கள். தாம்பூலம் போடுகிறவர்கள் அதிகமாக, இருந்தால் அவ்விடத்தில், வெளியில், அவர்கள் துப்பிய எச்சில் அவர்கள் திருவாய் குதப்பியதை அடையாளம் காட்டும். சற்றுத் துாரச் சென்று துப்புவார்கள். ஆனால் மற்றோர் அடையாளத்தை எங்கே பார்த்தாலும் காணலாம். சுண்ணாம்பை வெற்றிலையில் தடவி விட்டு மிச்சத்தை அப்படியே கைக்கு எட்டிய இடத்தில் தீற்றி விடுவார்கள். விளக்குக் கம்பமோ, சுவரோ, தட்டியோ எதுவானாலும் சுண்ணாம்பைத் தீற்றுவார்கள். சென்னைக்கு வந்து பாருங்கள். ஒவ்வொரு விளக்குக் கம்பத்திலும் கொஞ்சமாவது சுண்ணும்பின் அறிகுறி இருக்கும். இப்படி அந்த மூணாவது எங்கும் வியாபித்திருக்கிறது.
‘மூணாவது’ என்றவுடன் எனக்கு ஒரு நினைவு வருகிறது. திரிசிபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பல சமயம் பட்டீச்சுரத்தில் இருந்த ஆறுமுகத்தாபிள்ளை என்ற செல்வர் வீட்டில் தங்குவது வழக்கம். ஆறுமுகத்தாபிள்ளைக்கு மகாவித்துவானிடத்தில் தெய்வ விசுவாசம்.
ஒரு சமயம் ஆறுமுகத்தாபிள்ளை, ஒருவரிடம் கடன் வாங்கினார். பத்திரம் எழுதிக் கொடுத்தார். சிலர் சாட்சிக் கையெழுத்துப் போட்டார்கள். அவர்களில் ஒருவர் கும்பகோணத்துக்காரர். அவர் இருந்த தெரு சுண்ணும்புக்காரத்தெரு. அதை நீற்றுக்காரத் தெரு என்றும் சொல்வார்கள். அவர் கையெழுத்திடும்போது, “நீற்றுக்காரத் தெரு என்று போடட்டுமா? சுண்ணும்புக்காரத் தெரு என்று போடட்டுமா?” என்று அருகில் இருந்த மகாவித்துவான் பிள்ளையவர்களைக் கேட்டாராம். அப்புலவர் பெருமான் உடனே, “இரண்டும் வேண்டாம்; “மூணாவது தெரு என்று போடலாமே” என்று சொன்னதைக் கேட்டு யாவரும் சிரித்தார்கள்.
‘சுண்ணாம்பில் இருக்கிறது சூட்சுமம்’ என்று ஒரு பழமொழி வழங்குகிறது. அது எதனால் வந்தது தெரியுமா? ஒரு செட்டியார் வீட்டுப் பெண்ணுக்குத் திருமணத்துக்கு ஏற்பாடு நடந்தது. பிள்ளைவீட்டுக்காரர்கள் பெண்ணைப் பார்க்க வந்திருந்தார்கள். உணவருந்தித் தாம்பூலம் போட்டுக் கொள்ள வேண்டிய நேரம்; பிள்ளை வீட்டுக்காரரில் முக்கியமானவர் ஒரு வெற்றிலையை எடுத்து, கல்யாணத்துக்கு இருக்கும் பெண்ணை அழைத்து, “இதில் சுண்ணாம்பு எடுத்துக் கொண்டு வா, அம்மா” என்றாராம். அந்தப் பெண் அப்படியே கொண்டு வந்து கொடுத்தாள். எல்லாரும் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். பிறகு பெண்ணைப் பார்த்துச் சென்றவர், “உங்கள் பெண் எங்கள் குடும்பத்துக்கு ஏற்றவளாகத் தெரியவில்லை. அவளுக்குச் செட்டும் கட்டுமாக வாழத் தெரியாதென்று தோன்றுகிறது” என்று எழுதிவிட்டார். ஏன் அப்படி எழுதினார் அந்தப் பெண் சிறிது அதிகமாகச் சுண்ணாம்பைக் கொண்டுவந்து தந்துவிட்டாள். இப்படி அளவறியாமல் கொடுப்பவள், வீட்டுச் செலவையும் கணக்காகப் பண்ண மாட்டாள் என்று அவர் தீர்மானம் பண்ணிவிட்டார். அவருடைய தீர்மானத்துக்குக் காரணம் அந்தப் பெண் கொண்டு வந்து அளித்த சுண்ணாம்பு. இதை எண்ணியே, ‘சுண்ணாம்பில் இருக்கிறது சூட்சுமம்’ என்ற பழமொழி எழுந்தது.
புகையிலை வராததற்குமுன் மூன்றாவதாகிய சுண்ணாம்பு போடுவது நின்றுவிட்டது. இப்போதோ நாலாவது வந்து விட்டது. ஆம்: புகையிலைதான் அந்த நாலாவது.
‘சங்கீத வித்துவான்கள் புகையிலை போடுகிறார்களே: புகையிலைக்கும் சங்கீதத்துக்கும் ஏதாவது தொடர்புண்டா?’ என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது. என் நண்பராகிய சங்கீத வித்துவான் ஒருவரிடமே கேட்டேன். அவர், ‘ஆம்! சாரீரத்தைச் சுத்தப்படுத்துவது புகையிலை, கபம் வந்து அடைக்காமல் அது பாதுகாக்கிறது’ என்றார், அப்படியானால் புகையிலை போட்டால் நல்ல சாரீரம் வருமா? பாட்டுப் பாட முடியுமா?” என்று கேட்டேன். பாட்டுப் பாடச் சுலபமான வழி ஒன்று கிடைக்கும்போது அந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாமே என்பது என் யோசனை. ஆனால் அந்த நண்பர் புகையிலை போட்டால் சங்கீதம் வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்றார்.
அந்த நாலாவது சரக்கான புகையிலையை வெவ்வேறு வகையில் ரசிகர்கள் பயன்படுத்துகிறார்கள். மூக்கில் உறிஞ்சும் பொடியாக, புகை பிடிக்கும் சுருட்டாக, தாம்பூலத்தோடு போடும் பொருளாக உபயோகிக்கிறார்கள். மற்ற இரண்டிலும் புகையிலையின் வடிவத்தைச் சிதைத்து விடுகிறார்கள். ஆனால் தாம்பூலத்தோடு போடுகிறவர்கள் அப்படிச் செய்யாமல் ஆவென்று ஆர்வத்தோடு அதை நுகர்கிறார்கள். வாசனைப் புகையிலை, தூள் புகையிலை என்று சிறிதே அந்தப் புகையிலைக்கு அலங்காரம் பண்ணினாலும் மற்றவர்களைப்போல அல்லாமல், அதை அப்படியே வாயிற் போட்டுக் குதப்பும் ரசிகத்தன்மை புகையிலை போடுபவர்களுக்குத்தான் இருக்கிறது. சிலபேர் புகையிலையைக் கையில் வைத்து அமுக்கி நசுக்கிச் சூடேற்றி அந்த ஸ்பரிசத்திலேயே முதல் இன்பம் கண்டு, பிறகு வாயில் போட்டுக் கொள்வார்கள்; அப்போது அந்தப் புகையிலையினிடம் அவர்களுக்கு எவ்வளவு காதல் இருக்கிறது என்பது தெரியவரும். அதற்கு மஸாஜ் அல்லவா செய்கிறார்கள்?
புகையிலை போடுபவர்களே அதிகமாக அதை ரசிப்பவர்கள் என்று சொன்னல் புகை பிடிப்பவர்களுக்குக் கோபம் வரலாம். ஏனென்றால் வரலாற்றைக் கொண்டு பார்த்தால் இந்த நாலாவது முதல் முதலாகச் சுருட்டிப் புகைக்கத்தான் பயன்பட்டது என்று தெரிகிறது. இதை நிரூபிப்பதற்குப் புத்தகங்களையும் வரலாற்றையும் தேட வேண்டாம். புகையிலை என்று உள்ள அதன் பெயரைப் பாருங்கள். அந்தப் பெயரே அது முதல் முதல் புகைக்கும் இலையாகத்தான் வந்திருக்கவேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கவில்லையா? இப்போது நான் கேட்ட ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது.
ஒரு செல்வர் வெளிநாட்டுக்குப் போனவர் புதிதாகப் புகையிலையையும் தேயிலையையும் வாங்கிக் கொண்டு வந்தார். புகையிலையைச் சுருட்டிச் சுருட்டாக்கி வைத்திருந்தார். தேநீர் உண்ணுவதும் புகை பிடிப்பதும் தெரியாத காலம் அது. செல்வர் தம் சமையற்காரனிடம் தேயிலையைக் கொடுத்து, “இதைக் கொண்டு போய் வேகவைத்து டீ கொண்டு வா’ என்றார். அவன் அது ஏதோ கீரையென்று எண்ணி அதை நன்றாக வேகவைத்துத் தண்ணீரை இறுத்துவிட்டு வெறும் இலையைக் கொண்டு வந்தான். செல்வருக்குக் கோபம் வந்துவிட்டது. ‘அட முட்டாள்! இதன் தண்ணிர் அல்லவா வேண்டும்?’ என்று சொல்லி மறுபடியும் சிறிது தேயிலையை எடுத்துக் கொடுத்தார். அவன் அதை வேகவைத்துத் தண்ணீரை இறுத்துக் கொண்டு வந்தான்.
அப்போது அந்தச் செல்வர் தாம் வைத்திருந்த சுருட்டைப் பற்றவைத்துப் புகை பிடித்துக் கொண்டிருந்தார். வேலைக்காரன் புகை பிடிப்பதையே பார்த்ததில்லை. தன் எசமானன் முகத்தில் தீயும் புகையும் எழுவதைக் கண்டவுடனே பயந்து போய்த் தான் கொண்டுவந்திருந்த தேனீரை அந்தத் தீயை அனைபதற்கு அவர் முகத்தில் கொட்டிவிட்டானாம்!
ஆகவே, முதல் முதலாகப் புகை பிடிக்கத்தான் அந்த இலை உபயோகப் பட்டிருக்கவேண்டும். அப்படிப் பிடிக்கிறவர் சுருட்டை வாயில் வைத்துக் குடிக்கும்போது அதன் சுவை தட்டுப்பட்டிருக்கவேண்டும். அதன் சாரம் உள் இறங்குகையில் உண்டான கிளுகிளுப்பை அவர் அநுபவித்திருப்பார். பிறகு புகையிலையின் சாரத்தை நுகரும் வழக்கத்தை மேற்கொண்டிருப்பார். அவரைப் பார்த்து மற்றவர்களும் புகையிலைப் பிரியர்கள் ஆகியிருக்க வேண்டும்.
புகையிலை போடுபவர்களே மற்ற இரண்டு வகையினரைவிட — அதாவது பொடி போடுபவர்கள், புகை பிடிக்கிறவர்கள் என்பவர்களை விட — ரசிகர்கள் என்று சொன்னேன். தக்க காரணம் இல்லாமல் அப்படிச் சொன்னதாக எண்ணாதீர்கள். ரசத்தை அறிபவர்கள் ரசிகர்கள். இதை யாராவது மறுக்க முடியுமா? மூக்குப் பொடியில் ரசம் உண்டா? சுருட்டுப் புகையில் ரசம் உண்டா? புகையிலை போடுகிறவர்கள் தாமே உண்மையில் அதன் ரசத்தை, சுவையை உணர்ந்து ரசிக்கிறார்கள்? அப்படியிருக்க அவர்கள் மட்டுமே ரசிகர்கள் என்று சொல்லுவதற்கு என்ன தடை?
புகையிலையை ரசிக்கும் இயல்பு எப்படி உண்டாகிற தென்று ஆராய்ந்து பார்த்தேன். பல்வலி சிறிது உண்டாகி அதனால் அவதிப்பட்டவர்கள் புகையிலையின் பரம ரசிகர்களாக மாறிவிடுகிறார்கள். வயிற்றுவலி வந்த பிறகு அப்பர் சுவாமிகள் பெரிய சிவ பக்தராக மாறிவிட்டார். பல்வலி வந்தால் புகையிலையை வலிக்கும் இடத்தில் வைத்தால் வலி நீங்கும். புகையிலை பின் விறுவிறுப்பான காரம் எவ்வளவு சுகமாக, இதமாக இருக்கும் தெரியுமா? அதற்காகவே பல்வலி வந்தால் நல்லதுபோலத் தோன்றும். இப்படி வலிக்கு இதமாகப் புகையிலையை வைத்து அந்தச் சுகத்தை அநுபவித்தவர்கள் பிறகு, புகையிலைக் காதலர்களே ஆகிவிடுகிறார்கள். புகையிலை போடும் பல பேர்களிடம் நான் கேட்டுத் தெரிந்த கொண்ட உண்மை இது.
ஆனால் என்னிடம் மட்டும் இது பலிக்கவில்லை.இரண்டு முறை இந்த அற்புதமான மூலிகையின் அநுபவம் எனக்கு ஏற்பட்டது. மிகவும் இளைஞனாக இருந்தபோது ஒரு பெரியவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். அவர் நன்றாகப் பாடுவார்; புகையிலை போடுவார். புகையிலையின் சுவை எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆசை. சின்னப் பையனாகிய நான் அவ்வளவு பெரியவரிடம் போய்ப் புகையிலை கேட்கலாமா? அவர் தம்முடைய செல்லப் பெட்டியிலிருந்து புகையிலையை எடுக்கும்போது, சிந்தினால் அதை எடுத்துப் போட்டுக் கொள்ளலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அவரே ஒரு சிறிய துண்டை வெளியில் எறிந்து விட்டார். ‘நல்ல வேளை! நமக்கு வாய்ப்பாகக் கிடைத்தது’ என்று எண்ணி அதை யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்துக்கொண்டேன். பெரியவர் போனபிறகு அந்தத் துண்டை வாயில் போட்டுக் கடித்து மென்றேன். அது புகையிலைக் காம்பு! என்ன ஆயிற்றுத் தெரியுமா? என் மார்பை அடைத்தது. தலை சுழன்றது. ‘உடம்பெல்லாம் வேர்த்தது. வாந்தி எடுக்க வந்தது. ஆனால் எடுக்கவில்லை. இன்னதென்று சொல்லத் தெரியாத மயக்கமும் வேதனையும் உண்டாயின. என்னைப் பார்த்தவர்கள் பயந்துபோய் விட்டார்கள். நான் மெல்ல உண்மையை வெளியிட்டேன். பிறகு மோர் கொண்டு வந்து குடிக்கச் செய்தார்கள். கண்ணைச் சுற்றியது. மார்பு அடைப்புச் சிறிது வாங்கியது. அப்படியே படுத்து அயர்ந்து உறங்கி விட்டேன்.
மற்றோர் அநுபவம். எல்லாருக்கும் புகையிலையின் மேல் காதல் உண்டாவதற்குக் காரணமான நிகழ்ச்சிதான் அது. பல் இடுக்கில் ஏதோ புகுந்துகொண்டு வலித்தது. கலைமகள் காரியாலயத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது புதுமைப்பித்தன் வந்தார். அவர் எப்போதும் வாயில் புகையிலையைப் போட்டுக் கொண்டு குதப்புவார். பேசும்போது முகத்தைத் துாக்கி வைத்துக்கொண்டு, புகையிலைப் பாஷையில் பேசுவார்; அவர் பேசும்போது ழகரம் அதிகமாக வரும். வாயில் புகையிலை இருந்தால் அப்படித்தான் பேச முடியும்.
வாயில் புகையிலையை அடக்கியபடி தெளிவாகப் பேச முடியாது என்றுதான் நினைத்திருந்தேன். ஓர் அன்பரைக் கண்டபிறகு அந்த நினைப்பு மாறிவிட்டது. அவர் வாயில் தாம்பூலத்தை அடக்கிக் கொண்டு உரையாடுவது மட்டும் அன்று; மேடைப் பேச்சுக்கூட நிகழ்த்துவார். சுதேச மித்திரன் ஆசிரியராக இருந்த அமரர் ஸி. ஆர். சீனிவாசன் இந்த அற்புதமான சாதனையைச் செய்தவர்.
புதுமைப்பித்தன் வந்தார் என்றல்லவா சொன்னேன்? “என்ன, கன்னத்தில் கையை வைத்து உட்கார்ந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். ‘பல்வலி’ என்றேன். “இது தானா? இந்தாருங்கள் மருந்து” என்று தம் கையிலுள்ள டப்பாவிலிருந்து சிறிது புகையிலையை எடுத்துத் தந்து,“இதை வலிக்குமிடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதமாக இருக்கும். பல்வலி நின்றுவிடும்” என்றார். என் இளமையில் நான் பட்ட அநுபவம் நினைவுக்கு வந்ததனால் நான் அதை வாங்கிக் கொள்ளத் தயங்கினேன். “ஒன்றும் ஆகாது. தாராளமாக இதைப் பல்லில் வைத்துக்கொள்ளுங்கள். சாற்றை விழுங்க வேண்டாம். துப்பி விடுங்கள்” என்று பிரயோகத்தை உபதேசித்தார். அவர் சொன்ன உறுதிமொழியைக் குருநாதரிடம் ஞானுாபதேசம் பெறும் சிஷ்யனைப்போலக் கேட்டுப் புகையிலையில் சிறிதளவு எடுத்து, திடீரென்று பல்லில் வைக்காமல், இரண்டு மூன்று முறை வாய்க்குப் பக்கம் கொண்டுபோவதும் திரும்புவதுமாக இருந்து, மறுபடியும் குருநாதர், “பயப்படாமல் வைத்துக் கொள்ளுங்கள்” என்று அடித்துச் சொன்னவுடன், மெல்ல வலிக்கும் இடத்தில் வைத்தேன்.
ஆ! அந்த இன்பத்தை என்னவென்று சொல்வது வலி மாறியது. அது பெரிதன்று. புகையிலையின் சாறு அங்கே பட்டவுடன் நரம்பிலே ஒரு கிளுகிளுப்பு உண்டாயிற்று. பல்லின் வலி கண்ணையும் மூளையையும் தாக்கியது மாறி இப்போது இந்தப் புகையிலையின் ரசம் நரம்பினூடே விறுவிறுப்பை ஏற்றியது. வலித்த இடத்தில் இன்ப உணர்வு தலைப்பட்டது. இப்படியும் ஒரு சுகம் இருக்கிறதே என்ற இரகசியம் தெரிந்தது. வலியினால் தாடையை அழுத்திப் பிடித்துக்கொண்டு மூதேவி பிடித்தவன் மாதிரி இருந்த நிலை ஒரு கணத்தில் மாறிவிட்டது. பல்வலி இன்ப உணர்ச்சியாக மாறியது. முகத்தில் புதிய ஒளி பிறந்தது. பல்லினிடையே அந்தச் சஞ்சீவியைச் சுவைத்துச் சுவைத்து இன்புற்றேன்.
“எப்படி இருக்கிறது?” என்று கேட்டார் குருநாதர்.
“மகானுபாவரே இந்த அநுபவத்தை எப்படி வாயால் சொல்வது அதிசயம் அற்புதம் பிரம்மானந்தம்” என்றேன்.
“இனிமேல் புகையிலையைத் துப்பிவிடுங்கள். இந்தாருங்கள், இந்தப் புகையிலையைப் பத்திரமாக மூடி வைத்துக் கொள்ளுங்கள். மறுபடி வலி ஏற்பட்டால் வையுங்கள்” என்று சிறிதளவு புகையிலையைத் தந்தார்; வாங்கி வைத்துக்கொண்டேன்.
வெற்றிலை பாக்குப் புகையிலையை வைக்கும் பெட்டியைச் செல்லப்பெட்டி என்று சொல்கிறார்கள். பார்ப்பதற்குப் புத்தகத்தைப் போல இருக்கும். அதற்கு ஏன் அந்தப் பேர் வந்தது? செல்வப் பெட்டி என்பதுதான் செல்லப் பெட்டி என்று திரிந்திருக்க வேண்டும். அப்படியானால் அதில் இருக்கும் செல்வம் எது? இப்போது எனக்கு விளங்கிவிட்டது. இந்தப் புகையிலைதான் செல்வம்!
புகையிலையின் அநுபவத்தைப் பெற்ற எனக்கு அன்று மாலையில் சிறிது பல்வலி இருந்தது போலத் தோன்றியது. ஆனால் எனக்கு முன் போல வேதனை உண்டாகவில்லை. இருந்தால் என்ன? புகையிலயைப் போடுவதற்கு அந்தச் சிறிய வலியே போதுமே புகையிலேயை எடுத்துப் பல்லில் வைத்துக்கொண்டேன். விறுவிறுப்பு, கிளுகிளுப்பு எல்லாம் உண்டாயின. ஆனால் அந்த முதல் அநுபவத்தின் சுகம் இப்போது இல்லை. சிறிது குறைவாகவே இருந்தது. ஆனாலும் இதமாக இருந்ததை உணர்ந்தேன். அந்த விறுவிறுப்பை விரும்பினேன்.
மறுநாள் பல்வலி இல்லை. என்றாலும் புகையிலையின் விறுவிறுப்பில் ஆசை உண்டாகி விட்டது. புகையிலையை எடுத்துப் போட்டுக்கொண்டேன்; சிறிதளவுதான். விறுவிறுப்பை அநுபவித்தேன். அதிகமான விறுவிறுப்பை அவாவியது என் வாய். இதுவோ குறைந்திருந்தது.மறுநாள் இருமுறை புகையிலையைப் போட்டேன். விறுவிறுப்புக் குறைந்து கொண்டு வந்தது. அப்போது எனக்கு ஒர் யோசனை வந்தது. ‘இதை இந்த விறுவிறுப்புக்காகத்தானே போடுகிறோம் இதுவோ நாளாக ஆக விறுவிறுப்புக் குறைந்து கொண்டு வருகிறது. இன்னும் நாள் போனால் நாம் விரும்பும் அளவுக்கு இதில் விறுவிறுப்பு இருக்காது. நாம் எதிர்பார்க்கும் விறுவிறுப்பு இல்லாமல் போனால் இதைப்போட்டுப் பயன் என்ன? ஆகவே இதை விட்டுவிடுவோம்’ என்று எண்ணி அதோடு விட்டுவிட்டேன்.
புகையிலைக் காதலனாக மாறும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை.
புகையிலையைப்பிரம்மபத்திரம் என்று சொல்கிறார்கள். நாலாவது என்று சொல்வதற்குக் காரணம் தெரிகிறது. பிரம்மபத்திரம் என்பதற்குக்காரணம் தெரியவில்லை. நானே ஒரு கற்பனை பண்ணினேன். கதையாகவே விரித்து எழுதியிருக்கிறேன். அதன் சுருக்கம் இதுதான்.
கலைமகள், திருமகள், மலைமகள் மூவரும் ஆகாய கங்கையில் நீராடிவிட்டு அருகிலுள்ள நந்தவனம் சென்றார்கள். அங்கே உமாதேவி வில்வம் எடுக்க, திருமகள் துளசியைக் கொய்ய, கலைமகள் சும்மா இருந்தாள். “நீ உன் கணவனுக்குரிய பத்திரம் எடுக்கவில்லையோ?” என்று கலைமகளை மற்றவர்கள் கேட்க, “அப்படி ஒன்று என் கண வருக்கு இருப்பதாக அவா் சொல்லவில்லையே’ என்றாள். மற்றவர்களுக்கு இருக்கும் பெருமை தனக்கு இல்லை என்ற உணர்வோடு, தன் பத்திரம் இன்னதென்று பிரம்மதேவன் சொல்லவில்லையே என்ற கோபமும் சேர்ந்துகொண்டது. வீட்டுக்கு வந்து ஒளபாசனத்துக்கு வேண்டியவற்றை யெல்லாம் எடுத்துவைத்துவிட்டு, “உங்களுக்கு இன்ன பத்திரம் என்று சொல்லாமல் என்னை அவமானம் அடையும் படி செய்து விட்டீர்களே!” என்று சொல்லி உள்ளே ஊடிக்கொண்டு படுத்திருந்தாள்.
நாரதர் பூலோகத்தில் கிடைத்த பெரிய எலுமிச்சம் பழங்களைப் பார்த்துத் திருமாலுக்குக் கையுறையாகக் கொடுக்கலாமென்று வாங்கிக்கொண்டு போனார். ஒரு தட்டில் அந்தப் பழங்களை வைத்துக் குட்டையும் புஷ்டியுமுள்ள ஒரு தேவலோக வாசியிடம் அதைக்கொடுத்துத் தம்முடன் வரச் சொல்லிப் பாற்கடலை அணுகினார். பாற்கடலின் ஒரத்தை அடைந்தபோது அந்தத் தேவலோகவாசி கால் தடுக்கி, தட்டு முன்னே விழக் கீழே விழுந்த எலுமிச்சம் பழங்களின்மேல் விழுந்தான். அதனால் அவை நசுங்கி அவற்றின் சாறு பாற்கடலில் பீச்சி அடித்தது. அந்தப் பகுதி தயிராயிற்று. மெல்ல மெல்ல அதன் சார்பினால் பாற்கடல் முழுவதுமே தயிர்க் கடலாகியது. அதனால் குளிர்ந்த காற்று வீசியது. அது பட்டு ஆதிசேஷனுக்கு ஜலதோஷம் பிடித்து அவன் ஆயிரம் வாயினாலும் தும்மினான். பிறகு கருடன் தும்ம, பிராட்டி தும்ம, பெருமாளே தும்மினார். ஏன் இப்படி ஆயிற்று என்று கருடபகவான் பறந்து சென்று பார்த்து, உண்மையை உணர்ந்து, பூலோகத்துப் பொருளாகிய எலுமிச்சம் பழத்தினால் விளைந்த விளைவு இது என்பதைப் பெருமாளிடம் வந்து அறிவித்தான்.
‘எப்போதும் குளிர்ந்த இமாசலத்தில் இருக்கும் சிவபிரானிடம் இதற்கு மருந்திருக்கும்’ என்று எண்ணித் திருமால் பரிவாரங்களோடு சிவபெருமான நோக்கிச் சென்றார், அதற்கு முன்பே தயிர்க் கடலிலிருந்து வீசிய காற்றுக் கைலாசத்தையும் அடைய, அதுபட்டு அங்கே உள்ளவர்களெல்லாம் தும்மத் தொடங்கினார்கள். தும்மிக்கொண்டே போன திருமால் முதலியவர்களின் தும்மல் ஒலிக்கு எதிரொலிபோல அங்கே ஒலி எழுந்தது. திருமாலும் சிவனும் சந்தித்துத் தும்மிய பிறகு, “இது பூலோக விவகாரம். பிரம்மாவுக்கு இதற்குப் பரிகாரம் தெரிந்திருக்கலாம். மரியாதையைப் பாராமல் அவசரத்தை முன்னிட்டு அங்கே, போகலாம்” என்று இருவரும் பரிவாரங்களுடன் பிரம்ம தேவனுடைய திருமாளிகையை அடைந்தார்கள்.
அவன் எல்லை இல்லா உவகையுடன் அவர்களை வரவேற்க,அவர்கள் தும்மலோடு ஆசி கூறி, ஏதாவது பரிகாரம் உண்டா என்று கேட்டார்கள். “இதோ புதிய பரிகாரக்தையே தருகிறேன்” என்று சொல்லிய பிரம்மதேவன். ஒளபாசன அக்கினியை ஊதினான். புகை எழுந்தது. அதில் ஓர் இலையும் எழுந்தது. அதை எடுத்து அந்த அக்கினியிலே அதை வாட்டிச் சருகாக்கிக் கையில் வைத்துப் பொடிபண்ணி, அதில் ஒவ்வொரு சிட்டிகை எடுத்துத் திருமால் முதலியவர்களுக்குக் கொடுத்தான். அவர்கள் காசியில் உறிஞ்சியவுடன் வெடி வெடித்தது போல் உரத்த, தும்மல்கள் உண்டாயின. அவ்வளவுதான். ஜலதோஷம், போயிற்று, தும்மல் நின்றது!
அப்பால் பிரம்மதேவன், “சரஸ்வதி!” என்று அழைத்தான். அவள் வந்து நின்றாள். இரண்டாம் முறை ஒளபாசன அக்கினியை ஊதினான். புகை எழுந்தது; இலையும் எழுந்தது; அதைக் கலைமகள் கையில் கொடுத்து, “இந்தா இதுவே எனக்குரிய பத்திரம்” என்று கூறினான். இது என்னால் உண்டானதால் பிரம்ம பத்திரம் என்றும் புகையில் உண்டானதால் துாமபத்திரம், புகையிலை என்றும் பெயர் பெறும். கலியுகத்தில் விஞ்ஞானிகள் பதார்த்தங்களைத் திடபதார்த்தம், திரவ பதார்த்தம், வாயுபதார்த்தம் என்று பிரிப்பார்கள். திடபதார்த்தமாகப் பொடி செய்து மூக்கில் உறிஞ்சி அநுபவிக்கவும், திரவ பதார்த்தமாக வாயிலிட்டு ரசத்தை அநுபவிக்கவும், சுருட்டாக்கி வாயுபதார்த்தமாகப் புகையை இழுத்து அநுபவிக்கவும் இந்தப் பத்திரம் உபயோகப்படும்” என்று அதன் மகிமையை உரைத்தான்.
பிரம்மபத்திரம் என்று புகையிலையை ஏன் சொல்ல வேண்டும் என்று ஆராயப் புகுந்து, இப்படிக் கோணலான கற்பனை ஒன்று என் மூளையில் உதயமாயிற்று என்பதற்காக இதை எழுதினேன்.
தமிழ் நாட்டில் வைதிகர்கள் புகையிலை போடுகிறார்கள்; பொடி போடுகிறார்கள்; ஆனால் சுருட்டுக் குடிப்பதில்லை. சுருட்டுக் குடிப்பதை ஆசார விரோதமாகக் கருதுகிறார்கள். புகையிலையே கூடாதென்றால் வேறு இரண்டு வகையில் மட்டும் அதை உபயோகிக்கலாமா? யோசித்த பிறகு உண்மை தெரிந்தது. அந்தக் காலத்தில் எச்சில் கூடாது என்று கவனமாக இருப்பார்கள் வைதிகர்கள். எதையும் தூக்கிக் குடிப்பார்கள். பொடியாகப் போடும்போதோ, புகையிலையாகப் போடும் போதோ எச்சில் தோஷம் உண்டாவதில்லை. சுருட்டுப் பிடிக்கும் போது அதை எச்சிலாக்கிக் கையில் எடுக்கிறோம்; மறுபடியும் பிடிக்கிறோம். ஆகையால்தான் அதைமட்டும் ஆசார விரோதம் என்று தள்ளிவிட்டார்கள்.
“புகையிலை விரித்தால் போச்சு, பொம்பளை சிரித்தால் போச்சு” என்று ஒரு பழமொழி வழங்குகிறது. புகையிலையை மூடிவைத்துக் கொள்ளவேண்டும். அதை விரித்தால் அதன் காரம் போய்விடுமாம். விரித்த புகையிலைக்குத் தியாகராச சாஸ்திரிகள் என்பவர் ஒர் உவமை சொல்வாராம். என் ஆசிரியப்பிரான் அதைச் சொல்வதுண்டு. சாஸ்திரிகள், அந்தக் காலத்தில் புதுக்கோட்டையில் இருந்த தமிழ் வக்கீல். வடமொழி, சங்கீதம் நன்கு அறிந்தவர், “எண்ணெய் வாணியன் கெளபீனம் போலே” என்று விரித்த புகையிலைக்கு உபமானம் சொல்வாராம். விரித்த புகையிலை சாரமற்றது. ஆனால் அதற்குச் சொன்ன உபமானம் சாரமுள்ளதாக இருக்கிறது.
பழனியில் தண்டாயுதபாணிக்கு அர்த்த சாமத்துப் பூஜையில் புகையிலையையோ சுருட்டையோ நிவேதனம் செய்வதாகச் சொல்கிறார்கள். அதன் உண்மை எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று தெரியும். புகையிலையை ஒரு புலவர் பழனியாண்டவனிடம் துாது போகும்படி பாடியிருக்கிறார். அதற்குப் புகையிலை விடுதூது என்றுபெயர். அதை மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் பதிப்பித்திருக்கிறார்கள். புகையிலையின் பெருமைகளை அந்தச் சிறு நூல் அழகாகச் சொல்கிறது.
புகையிலை சமதர்ம உணர்ச்சியையே உண்டாக்கிவிடுகிறது. ஓர் அரசன் பல்லக்கில் போய்க் கொண்டிருந்தானம். அவன் புகையிலை போடுகிறவன். சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது புகையிலை போட எண்ணினான். கைவசத்தில் இல்லை. அருகே வயலில் உழுகிற உழவன் ஒருவன் வெற்றிலைப் பையை அவிழ்த்துப் புகையிலை போட்டுக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த மன்னன் பல்லக்கை நிறுத்தச் சொல்லி அவனிடம் போய்க் கையை நீட்டிப் புகையிலை கேட்டு வாங்கிப் போட்டுக் கொண்டானாம். காட்டைக் காக்கும் மன்னனும் மாட்டை
ஒட்டும் உழவனும் புகையிலைக்கு முன்னே சமமாகி விட்டார்கள்!
மன்னன் என்ன? வாக்குசாதுர்யம் உள்ள புலவர்களானலும் அப்படித்தான் செய்வார்கள். சொற்களைச் சமத்காரமாகப் பேசித் தம் புலமையை மிடுக்குடன் காட்டுபவராக இருந்தாலும், புகையிலை தேவையாகும்போது இன்னர் இனியார் என்று பாராமல் யாரிடமும் கைநீட்டிப் பல்லைக் காட்டுவாராம். புகையிலை அப்படிச் செய்துவிடுமாம். புகையிலை விடுதூது அந்தக் காட்சியைக் காட்டுகிறது.
- சொல் காட்டும் நல்ல
- துடிகாரர் ஆரையும் போய்ப்
- பல் காட்ட வைத்த
- பழிகாரா!
‘பழிகாரா!’ என்றது செல்லமாகத் தட்டிக் கொடுத்து உணர்ச்சியோடு சொல்லும் வார்த்தை. ‘அட போக்கிரி’ என்று நம்முடைய குழந்தையைத் தட்டிக் கொடுத்துச் சொல்கிறோம் அல்லவா?