புது டயரி/பேசத் தெரியாதவர்களும் தெரிந்தவர்களும்

விக்கிமூலம் இலிருந்து



பேசத் தெரியாதவர்களும் தெரிந்தவர்களும்

“பேசப் போகிறாயா, சாகப் போகிறாயா” என்று ஒரு பழமொழி உண்டு. ‘மேடையிலேறிப் பேசுவது சங்கடம்; அதைவிடச் சாவது மேல்’ என்ற கருத்தை உடையது அது. ஆனால் சில பேர் சாமானியமாக ஒருவரோடு ஒருவர் பேசும்போதே உளறிக் கொட்டிக் கிளறி மூடுகிறார்கள். இன்னும் சிலபேர் பேசும்போது, “ஏண்டா இவன் பேசுகிறான்?” என்று நினைக்கும்படி, சந்தர்ப்பத்துக்கு ஒவ்வாதபடி பேசுகிறார்கள். சில சமயங்களில் அசம்பா விதமாகவே பேசிவிடுகிறார்கள். அப்படிப் பேசி வருகிறவர்களைப் பார்த்தால், ‘யாகாவாராயினும் நாகாக்க, காவாக்கால், சோகாப்பார் சொல்லிழுக்குப் பட்டு’ என்று சொன்ன திருவள்ளுவர் வாயில் ஒரு வீசைச் சர்க்கரையை, மன்னிக்க வேண்டும், ஒரு கிலோ சர்க்கரையைப் போட வேண்டுமென்று தோன்றுகிறது.

ஒரு மனிதர் தம்முடைய பெண்ணுக்குக் கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்தார். பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண்ணைப் பார்ப்பதற்கு ஒரு நாளைக் குறிப்பிட்டு எழுதினார்கள். பெண்ணைப் பெற்றவர் அந்த நாள் செளகரியப் படாதென்றும், அடுத்த வாரம் ஒரு நாளில் வரலாமென்றும் எழுதினர். அப்படியே அவர்கள் பெண்ணைப் பார்க்க  மறு வாரம் வந்தார்கள். பேச்சுவாக்கில், “போன வாரம் வேறு வேலை இருந்ததோ?” என்று பெண்ணைப் பெற்ற தகப்பனாரைக் கேட்டார், பிள்ளையைப் பெற்றவர். அந்த மனிதர், “அந்த இழவை ஏன் கேட்கிறீர்கள்? என் பங்காளி ஒரு பிசாசு வந்து சேர்ந்தான். ஏதோ ஒரு கேஸ் சம்பந்தமாக இங்கே வந்து உட்கார்ந்துகொண்டு என் பிராணனையே வாங்கிவிட்டான். அவனை அனுப்புவதற்குள் என் தாலி அறுந்து போயிற்று” என்று ஆத்திரத்தோடு சொன்னார்.

பிள்ளை வீட்டுக்காரர்கள் இந்தப் பேச்சைக் கேட்ட பிற்பாடு அங்கே சம்பந்தம் செய்ய விரும்புவார்களா? மணம் பேச வந்தவர்களிடம் இழவு என்றும் தாலி அறுந்து போச்சு என்றும் பேசின பிறகு அங்கே அவர்கள் இருக்கத் தான் முடியுமா?

பாலக்காட்டுப் பக்கம் ஒரு பிராமணச் செல்வர் வைதிக சிரத்தை உடையவர். வேத அத்தியயனம் பண்ணாவிட்டாலும் வேத பாரங்கதராகிய ஒரு முதியவரிடம் உப நிஷத் முதலியவற்றைத் தெரிந்து கொண்டார். அந்தப் பெரியவரைத் தம்முடைய குருவாக மதித்து மரியாதை காட்டி வந்தார்.

அந்தச் செல்வர் ஒரு பெரிய வீடு கட்டினார். நிறைய மூங்கில்களைக் கொண்டு வீட்டை அமைத்தார். வீடு கட்டின பிறகு கிருகப்பிரவேசத்தன்று தம்முடைய குருவை வருவித்து உபசரித்தார். வீட்டின் பகுதிகளைக் காட்டினர். எங்கே பார்த்தாலும் மூங்கில் மயமாக இருந்தது. அந்தப் பெரியவர் சம்ஸ்கிருதம் கலந்தே பேசுகிறவர். மூங்கிலுக்கு வம்சம் என்று வடமொழியில் பெயர். அவர், “நிரம்ப வம்சக்ஷயம் ஆகியிருக்கும்போல் இருக்கிறதே” என்றார். “நிறைய மூங்கில்களை வெட்டிக் கொண்டு வந்திருப்பீர்கள்” என்ற அர்த்தத்தில் அப்படிப் பேசினார். ஆனால் அதற்கு 

அமங்கலமான பொருள் ஒன்றும் இருப்பதை அவர் கவனிக்கவில்லை. அவருக்குச் சமஸ்கிருதச் சொற்களே உபயோகிப்பதில் அவ்வளவு ஆசை .

கேட்ட செல்வர், 'இதென்னடா அபசகுனமாக இருக்கிறது; இவர் வம்சக்ஷயம் என்று சொல்கிருரே' என்று உள்ளுற வருந்தினர். பிறகு உபசாரம் செய்து குருநாதரை அனுப்பி விட்டார்.

குருநாதர் கூறிய வார்த்தைகள் கூரிய வாளாக அவர் உள்ளத்தை அறுத்தன. தம்முடைய வம்சம் நாசமாகி விடுமோ என்று பயந்தார். ஆகவே அந்த வீட்டை விற்று விட்டு வேறு ஒரு புதிய வீடு கட்டினர். அந்த வீட்டில் எல்லாம் தேக்குமரங்களேயே பயன்படுத்தினர். ஒரு மூங்கில் கூட இல்லை. . --

வீடு கட்டி முடிந்ததும் கிருகப் பிரவேசம் நடந்தது. அப்போதும் தம்முடைய குருநாதரை அழைத்து வந்து காட்டினர். "இதில் ஒரு மூங்கில்கூட இல்லை' என்று சொன்னர். அந்தப் பிராமணர் என்ன சொன்னர் தெரியுமோ? "அப்படியா? இந்த வீடு நிர்வம்சமாக இருக் கிறதா?" என்ருர், மூங்கிலே இல்லாதது என்ற பொருளில் தான் அவர் சொன்னர். ஆல்ை அவர் முன்னே சொன்ன வார்த்தையில் சனி இருந்ததென்ருல் இந்த வார்த்தையில் நஞ்சல்லவா இருக்கிறது?

ஒரு வீட்டில் ஏதோ விருந்து; சிறிய விருந்துதான்;. ஐந்தாறு பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வேறு ஒரு நண்பர் கட்டியிருக்கும் பங்களாவைப் பற்றிய பேச்சு வந்தது. “அந்தப் பங்களாவில் வரவேற்பு அறை இருக்கிறதே, அதை இன்றைக்கெல்லாம் பார்த்துக்

கொண்டிருக்கலாம்' என்ருர் ஒருவர். "அவர் பூஜை

அறையைப் பார்த்தீர்களோ? அது ஒரு சிறிய கோவில். அப்  படியே விழுந்து நமஸ்காரம் பண்ணத் தோன்றும்” என்றார் மற்றொருவர். “அவர் புத்தகங்களுக்காகவே ஓர் அறையை வைத்திருக்கிறார், சுவரோடே அலமாரிகளைப் பொருத்தியிருக்கிறார். அங்கே போனால் ஏதோ நூல் நிலையத்துக்குள் இருப்பதுபோலத் தோன்றும்” என்றார் வேறொருவர். அப்போது ஒருவர் சொன்னர்: “அதெல்லாம் இருக்கட்டும் ஐயா! அந்தக் கக்கூஸைப் பார்த்தால் போதும், ஆ! எத்தனை வசதி...”

மற்றவர்களுக்குச் சாப்பாடு செல்லுமா? எப்போது எதைப் பேசுவது என்று தெரிந்து பேசுகிறவரா அவர்? அவர் சொன்னது உண்மையாக இருக்கலாம். ஆனால் சாப்பிடுகிறபோது நினைப்பூட்டுகிற செய்தியா அது?

பழைய காலத்திலிருந்து வழங்குகிற கதை ஒன்று உண்டு. ஒரு செட்டியாரும் ஒரு முரடனும் பயணப்பட்டுப் போனார்கள். செட்டியார் மடி நிறையப் பணம் வைத்திருந்தார். முரடன் தன் மேல்துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்திருந்தான்.

போகும்போது இருட்டிவிட்டது. ஒாிடத்தில் இரவைக் கழிக்க எண்ணினார்கள். செட்டியார் மறைவாக ஓரிடத்தில் படுத்துக் கொண்டார். முரடன் திறந்த வெளியில் படுத்துக் கொண்டான். நள்ளிரவில் திருடர்கள் அந்த வழியே வந்தார்கள், இருட்டு அதிகமாக இருந்தது வழியில் படுத்திருந்த முரடனை ஒரு திருடன் இடறினான். “இங்கே ஏதோ கட்டை கிடக்கிறது” என்றான். விழித்துக் கொண்ட முரடன் ரோஷத்துடன், “கட்டைதான் ரூபாயை முடிந்து கொண்டு கிடக்குமோ?” என்று கேட்டான். திருடன் அவனை அடித்து அந்த ரூபாவை அவிழ்த்துக் கொண்டான். அந்தத் திருடன் அந்த ரூபாய் செல்லுமா என்று தட்டிப் பார்த்தானம். தான் வைத்திருந்த ரூபாயைச் சந்தேகிக்கிறான் திருடன் என்று எண்ணி மனம் பொறாமல் முரடனுக்குக் கோபம் வந்தது. “ஏய், என்ன ஐயா பார்க்கிறாய் செல்லும் செல்லாததற்குச் செட்டியாரைக் கேள். அதோ அங்கே அவர் படுத்திருக்கிறார்” என்றானாம். மேலே என்ன நடந்தது என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அந்த முரடன் சொன்னது எல்லாம் உண்மை. ஆனால் சொல்ல வேண்டியது அவசியந்தானா?

பேராசிரியர் சுந்தரராமையர் என்பவர் பெரிய மேதாவி; கும்பகோணம் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். காந்தியடிகள் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த காலத்தில் அவரைச் சுந்தரராமையருக்கு அவ்வளவாகப் பிடிக்காது. ஏதோ ஒரு கூட்டத்தில் அவர் பேசினார். “இந்தக் காந்தி என்ன சொல்கிறான் என்றால் இப்படி யெல்லாம் சொல்கிறான்” என்று காந்தியடிகளை ஒருமையாகச் சொன்னார். கூட்டத்தில் இருந்த ஒருவர் அப்படிப் பேசக்கூடாது என்று சொன்னார். அப்போது பேராசிரியர், “நான் கடவுளேயே அவன் இவன் என்றுதான் சொல்கிறேன்” என்றார். ஆட்சேபித்தவர் உடனே, “டேய், சுந்தரராமா பேசினது போதும், உட்கார்டா” என்றார். பேச்சுக்குப் பதில் பேச்சு வந்துவிட்டது!

இப்படி இல்லாமல் சிலருடைய பேச்சுக் கேட்கக் கேட்க இனிமையாக இருக்கும். விரோதம்போல முதலில் தோன்றிப் பிறகு வியப்பையும் இன்பத்தையும் உண்டாக்கும்படி பேசுவர் சிலர். அந்தப் பேச்சில் முதலில் எத்தனைக் கெத்தனை ஐயமும் கோபமும் உண்டாகுமோ பிறகு அவ்வளவும் மாறி மகிழ்ச்சியும் மதிப்பும் உண்டாகும்.

திருவாவடுதுறை ஆதீனத்தில் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் என்பவர் பரமாசாரியராகத் திகழ்ந்த காலம் அது. மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை ஆதீன வித்துவானாக விளங்கினார். மகாமகோபாத்தியாய ஐயரவர்கள் மாணவராக அந்தக் கவிஞரிடம் படித்து வந்தார்.

சுப்பிரமணிய தேசிகர் எப்போதும் கற்றவர்கள் இடையில் இருந்து காலத்தைக் கழிப்பார். ஒரு நாள் வடமொழி தென்மொழிப் புலவர்கள் சூழ ஆதீனத் தலைவர் வீற்றிருந்தார். அவர் கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், பக்தி, கொடை யாவற்றிலும் சிறந்தவர். அவையில் இருந்தவர்கள் தத்தமக்குத் தோன்றியபடி அவரைப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அவருடைய தமிழ்ப் புலமையை ஒருவர் புகழ்ந்தார்; வடமொழி அறிவை மற்றொருவர் எடுத்துரைத்தார்; பூஜை செய்யும் சிறப்பை வேறொருவர் பாராட்டினார். இப்படி ஐந்தாறு பேர் சிறப்பித்துப் பேசினார்கள்.

அந்தக் கூட்டத்தில் அக்கினிலிங்க சாஸ்திரிகள் என்ற ஒருவர் இருந்தார். அவர் முதியவர். அவர் ஒன்றும் பேசவில்லை. அருகில் இருந்த ஒருவர், “நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே?” என்று அவரைக் கேட்டார். “எல்லோரும் சொல்லட்டும்; பிறகு சொல்கிறேன்” என்றார். பலரும் பேசி முடித்த பிறகு அவர் பேசத் தொடங்கினார்.

“இதுவரைக்கும் எல்லாரும் நம் மகா சந்நிதானத்தின் பெருமைகளையே எடுத்துச் சொன்னார்கள். எல்லாம் சரிதான். ஆனால் இவர்களால் முடியாதது ஒன்று உண்டு. அந்த விஷயத்தில் இவர்களைவிட முன் இருந்த சந்நிதானம் கெட்டிக்காரர்” என்றார்.

அதைக் கேட்டு எல்லோரும், “என்ன இப்படிப் பேசுகிறார்?” என்று அவரையே உற்றுப் பார்த்தார்கள்.  அவர் சற்றே கனைத்துக்கொண்டார். பிறகு, “நான் சொல்வதைக் கேட்டு, இப்படிப் பேசுவது அநுசிதம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் உண்மையைச் சொல்லத் தானே வேண்டும்? எனக்கு மூடி மறைக்கத் தெரியாது” என்று சொல்லிச் சிறிதே நிறுத்தினார்.

மற்றவர்களுக்கு ஆவலும் ஆத்திரமும் ஒருங்கே எழுந்தன. அவர் தொடர்ந்தார்:

“இவர்களைக் கண்டுபிடித்துத் தமக்குப்பிறகு பண்டார சந்நிதிகளாக வரவேண்டுமென்று முன் இருந்த மகாசந்நிதானம் தேர்ந்தெடுத்ததே, அது எவ்வளவு பெரிய காரியம்? அப்படி இவர்களால் செய்ய முடியுமா? இவர்களைப்போல வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியுமா?” என்று கேட்டபோது அவையிலுள்ள அத்தனை பேரும் ‘ஹாஹா!’ என்று ஆரவாரித்தார்கள். அத்தனை பேருடைய பாராட்டையும் அந்தக் கிழவர் பேச்சு விழுங்கிவிட்டது.

சுப்பிரமணிய தேசிகரே மிகவும் இனிமையாகப் பேசுகிறவர். ஒருசமயம் திருவாங்கூர் திவானாக இருந்த மாதவராவ் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு வந்திருந்தார். ஆதீனத் தலைவர் அவரை வரவேற்று உபசரித்தார். பொன்னாடை போர்த்துக் கவுரவித்தார். பிறகு, “ராயரவர்கள் எத்தனையோ இடங்களில் எவ்வளவோ மரியாதைகளைப் பெற்றிருக்கக்கூடும். ஆனால் நாம் போர்த்திய இந்த ஆடையே எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கும். அப்படி இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்” என்றார்.

அதைக் கேட்ட திவானுக்குச் சற்றே முகம் சிணுங்கியது. ‘என்னடா இவர் தம்முடைய பொன்னடையைத் தாமே பாராட்டிக் கொள்கிறார்?’ என்று நினைத்தார்.

அப்போது, “ராயரவர்கள் நாம் சொன்னதைப்பற்றி ஆலோசிக்கிறாற்போல் இருக்கிறது. தாங்கள் பெற்ற  தோடா, பொன்னாடை முதலியவற்றையெல்லாம் வைத்துக் கட்ட இது உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்தைத்தான் சொன்னோம். எவ்வளவோ அருமையான துப்பாட்டாக்களை யெல்லாம் வாங்கியிருப்பீர்களே! அவற்றைக் கட்டுவதற்குச் சாமான்யமான ஆடை ஒன்று வேண்டாமா?” என்றபோதுதான் தேசிகருடைய சாதுர்யம் அங்கிருந்த யாவருக்கும் புலப்பட்டது.

ஒருவன் வீட்டில் தன் மனைவி உணவு படைக்க உண்ணுகிறான். அப்போது கடுக்கென்று கல் அகப்படுகிறது. கோபத்தால், “என்ன இப்படிக் கல்லப் போட்டிருக்கிறாய்?” என்றால் அந்தப் பெண்மணி முகம் வாடி விடும். அவள் கண்ணில் நீர் துளிக்கும்.

சுவையாகப் பேசுகிறவன் ஒருவன் அத்தகைய சந்தர்ப்பத்தில் என்ன சொன்னான் தெரியுமா! “ஆஹா! அந்தக் காலத்தில் அநசூயை நாரதர் கொடுத்த இரும்புக் கடலையை வறுத்துத் தந்தாளாம். நீ கல்லையே சமைத்து விடடாயே!” என்றான். அதைக் கேட்ட அந்தப் பெண்மணி புன்முறுவல் பூத்து, “போங்கோ” என்று கூறி, தலையைத் திருப்பிக் கொண்டாள். அப்போது அந்த முகத்தில் நாணமும் மலர்ச்சியும் விரிந்தன.

இரண்டு ஆடவர்களும் சொன்ன கருத்து ஒன்றுதான்; உணவிலே கல் இருக்கிறது என்பதைத்தான் இருவரும் சொன்னார்கள். ஆனால் முன்னவன் சொல்லையே கல்லாகப் போட்டான். பின்னவனோ கல்லையே குழைத்துச் சுவை ஊட்டிவிட்டான். அவனல்லவா பேசத் தெரிந்தவன்?