புது மெருகு/தொல்காப்பியரின் வெற்றி
தொல்காப்பியரின் வெற்றி
1
தென்னாட்டிற்கு அகத்திய முனிவர் புறப்பட்டார்.
தாம் போகிற நாட்டிலே வாழ்வதற்கு அந்த நாட்டு மொழி தெரிய வேண்டாமா? சிவபெருமானிடத்திலே தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். போகிற இடத்தில் காடும் மலையும் அதிகமாக இருப்பதால் தமக்குத் தெரிந்தவர்கள் வேண்டும். 'குடியும் குடித்தனமு'மாக வாழ்வதற்கு வேண்டிய சௌகரியங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக அவர் ' கங்கையாரிடத்தில் காவிரியாரையும், யமதக்கினியாரிடத்தில் திருணதூமாக்கினியாரையும், புலத்தியனாரிடத்தில் உலோபமுத்திரையாரையும், துவாரகைக்குப் போய் பதினெட்டு அரசர்களையும், பதினெண் கோடி வேளிர்களையும் அருவாளரையும் பிறரையும்' பெற்றுப் புறப்பட்டார், ஜமதக்கினியின் புதல்வர் திருணதூமாக்கினி அகத்தியருக்கு மாணாக்கரானார்.
போகிற இடத்தில் தாம் போய் நிலைத்த பிறகு மனைவியை, அழைத்து வரவேண்டும் என்பது அகத்தியர் எண்ணம்போலும். புலத்தியர் கன்னிகாதானம் செய்து கொடுக்க மணந்துகொண்ட அந்த லோபா முத்திரையை அங்கேயே விட்டுவிட்டு, "பிறகு அழைத்துக்கொள்கிறேன்" என்று சொல்லி வந்து விட்டார்.தென்னாட்டுக்கு வந்து அங்குள்ளவர்களை யெல்லாம் வசப்படுத்திப் பொதிய மலையில் தம்முடைய ஆசிரமத்தை அழகாக அமைத்துக்கொண்டார், அகத்தியர். அந்த ஆசிரமத்தை அமைத்துக்கொள்வதற்கு அவர் எவ்வளவோ சிரமப்பட்டார். தென்னாட்டில் இராவணனுடைய தலைமையின் கீழ் அட்டஹாஸம் செய்துவந்த ராட்சசர்களை அடக்கிக் காட்டையெல்யாம் அழித்து நாடாக்கி தம்மோடு அழைத்து வந்தவர்களை அங்கங்கே நிறுவி ஒருவாறு அமைதி பெற்றார்.
நாட்டைப் பிடித்தார்; மலையையும் கைக்கொண்டார்; ஆசிரமமும் கட்டியாயிற்று. வீட்டுக்கு விளக்கு, தர்மபத்தினியாயிற்றே? தம்முடைய பத்தினியாகிய லோபாமுத்திரையின் நினைவு முனிவருக்கு வந்தது. 'அடடா! எத்தனை காலம் மறந்து இருந்து விட்டோம்! கல்யாணம் பண்ணிக்கொண்ட அன்று பார்த்ததுதான்!' என்று ஏங்கினார்.
அவர் மாணாக்கராகிய திருணதூமாக்கினியார் காப்பியக் குடியில் வந்தவர். அவரே தொல்காப்பியர். அகத்தியர் அவரை அழைத்தார்;"புலத்தியரிடத்தில்போய் லோபாமுத்திரையை அழைத்து வா" என்று ஆணையிட்டார். "உத்தரவுப்படி செய்கிறேன்" என்று தொல்காப்பியர் புறப்பட்டார். அதற்குள் அகத்தியருக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ? "நீ எப்படி அவளை அழைத்து வருவாய்?" என்று கேட்டார்.
பாவம்! தவமும் கல்வியும் நிறைந்த அந்தப் பிரம்மசாரிக்கு உலக இயல் தெரியாது. யானையா, குதிரையா, ரதமா, என்ன இருக்கிறது அழைத்துவர? தம்முடைய குருபத்தினிக்குத் தாமே வாகனமாக வேண்டுமானால் அவர் உதவுவார். இந்த யோசனை அகத்தியர் மனத்தில் உண்டாயிற்று. 'இந்தக் கட்டழகுக் காளை, விரைவில் வரவேண்டுமென்று நினைத்து அவளைத் தோளில் தூக்கிக்கொண்டு வந்தால் அவள் பிரஷ்டையாய் விடுவாளே!' என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் ஒரு குழப்பத்தை உண்டாக்கியது. தம் ஆணைக்கு அடங்கிய மாணாக்கனது தூய்மையை அவர் அறிந்தாலும் பெண்களின் சஞ்சல புத்தியை நினைந்து கலங்கினார். "அவளருகில் செல்லாமல் நாலு கோல் தூரம் இடை விட்டு அவளை அழைத்து வா" என்று கட்டளையிட்டுத் தொல்காப்பியரை அனுப்பிவிட்டுத் தம் மனைவியின் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார் முனிவர்.
உத்தம மாணாக்கராகிய தொல்காப்பியர் புலத்திய முனிவரிடம் சென்று தம் ஆசிரியரது கட்டளையைத் தெரிவித்து லோபாமுத்திரையை அழைத்துக்கொண்டு புறப்பட்டார். நாலு கோல் நீளம் இடை விட்டே அழைத்து வந்தார். காடும் மலையும் தாண்டிச் சோழ நாடும் கடந்து பாண்டி நாட்டுள்ளே புகுந்தார். பாண்டி நாட்டினிடையில் வையையைற்றில் இறங்கி அக்கரைக்கு வரும் சமயத்தில் திடீரென்று வெள்ளம் வந்துவிட்டது. தொல்காப்பியர் எப்படியோ கரையேறிவிட்டார். லோபாமுத்திரையால் ஏற முடியவில்லை. வெள்ளம் இழுத்துக்கொண்டு போயிற்று.
"ஐயோ, என்னைக் காப்பாற்று!" என்று லோபாமுத்திரை கதறினாள்.
தொல்காப்பியருக்கு அகத்தியர் இட்ட கட்டளை நினைவுக்கு வந்தது. 'இவரை நான் எப்படிக் கரையேற்றுவது! "நாலுகோல் தூரம் இடை விட்டு அழைத்து வரவேண்டும்" என்று ஆசிரியர் கட்டளையிட்டாரே' என்று மயங்கினார்.ஆனாலும் ஆபத்து வந்தபோது அதையெல்லாம் பார்க்கமுடியுமா?
லோபா முத்திரை ஆற்றோடு போய்க்கொண்டிருந்தாள். "அட பாவி! என்னை வந்து எடுக்கக் கூடாதா?" என்று அவள் அழுதாள். "தாயே, என்ன செய்வேன்!" என்று இரக்கத்தோடு தொல்காப்பியர் வருந்தினார். 'மரம் மாதிரி நிற்கிறாயே; கரையில் இழுத்துவிடத் தெரியாதா?' என்று அவர் நெஞ்சமே கேட்டது.
லோபாமுத்திரை நீரில் மூழ்கிக்கொண்டிருந்தாள். இரண்டு வாய்த் தண்ணீரும் குடித்துவிட்டாள். கண் முன்னே ஒருவர் உயிர்விடும்போது அதைப் பார்த்துக் கொண்டு நிற்பதா? இதைவிட, அமிழ்த்திக் கொலை செய்துவிடலாமே!
'ஆபத்துக்குப் பாவம் இல்லை' என்று துணிந்து விட்டார் தொல்காப்பியர். கரையில் நின்ற ஒரு மூங்கிலை மளுக்கென்று ஒடித்தார். அதை நதியில் நீட்டினார்.லோபாமுத்திரை அதைப் பற்றிக்கொண்டு தட்டுத் தடுமாறிக் கரைக்கு வந்து சேர்ந்தாள். மூங்கிற் கோலை முறித்து நீட்டும் எண்ணம் மின்னல்போல ஒரு கணத்தில் தொல்காப்பியருக்குத் தோன்றியது. 'நாம் குருநாதனுடைய ஆணையை முற்றும் மீறவில்லை. நாலு கோல் தூரம் இல்லாவிட்டாலும் ஒரு கோல் தூரத்துக்குக் குறையவில்லை' என்று சமாதானம் செய்துகொண்டார்.
குருபத்தினியை வெள்ளத்திலிருந்து கரையேற்றாமற் போயிருந்தால் முனிவர் பிரானிடம் சென்று, 'உங்கள் பத்தினியை வைகைக்கு இரையாக்கிவந்தேன்' என்று சொல்லி நிற்பதா? தம்முடைய பத்தினியை இறவாமல் காப்பாற்றியதற்கு அவர் தம் மாணாக்கரைப் பாராட்டுவாரே யன்றிக் குறை கூறுவாரா? இவ்வளவு காலம் தொல்காப்பியரோடு பழகி அவருடைய இயல்பு முனிவருக்குத் தெரியாதா?- இந்த எண்ணங்கள் ஒன்றன்மேல் ஒன்று தோன்றித் தொல்காப்பியருக்குத் தைரியமூட்டின. ஆனாலும் உள்ளுக்குள்ளே ஒரு பயம் இருக்கத்தான் இருந்தது.
மனைவியையும் மாணாக்கரையும் கண்ட முனிவருக்கு உண்டான மகிழ்ச்சி வைகை வெள்ளத்தை விட அதிகமாக இருந்தது. "சௌக்கியமாக வந்து சேர்ந்தாயா? வழியில் ஒரு குறையும் நேரவில்லையே!" என்று தம் மனைவியைப் பார்த்துச் சாதாரணமாகக் கேட்டார் முனிவர். "நான் பிழைத்தது புனர்ஜன்மம். உங்கள் சிஷ்யன் இல்லாவிட்டால் ஆற்றோடே போயிருக்க வேண்டியதுதான்"
அகத்தியருக்குப் பகீரென்றது. "என்ன செய்தி?" என்று ஆவலோடு கேட்டார். லோபா முத்திரை விஷயத்தைச் சொன்னாள்.
அந்தக் குறுமுனிவருடைய சந்தேகக் கண்களுக்கு எல்லாம் தந்திரமாகப் பட்டது. 'வெள்ளம் வந்தால், இவளுக்கு நீந்தத் தெரியாதா? அல்லது நீரோட்டத்தின் போக்கிலே போய்க் கரையேற முடியாதா? தொல்காப்பியன் இவளைத் தொடவில்லை என்பது என்ன நிச்சயம்? நாம் இவனை அனுப்பியது தவறு' என்றெல்லாம் அவர் எண்ணலானார்.
தம்முடைய மனைவி ஒரு கண்டத்திலிருந்து தப்பி வந்தாள் என்பதாக அவர் எண்ணவில்லை. தம் மாணாக்கன் தமக்குத் துரோகம் செய்துவிட்டதாகவே
"அடே,பாபி! நான் நாலு கோல் இடம் விட்டு அழைத்துவரச் சொன்னேனே! நீ ஏன் இப்படிச் செய்தாய்?" என்று கடுங் கோபத்தோடு உறுமினார் அகத்தியர்.
"ஸ்வாமி, நான் என்ன செய்வேன்! ஆபத்துக் காலத்திலே ஆசாரம் பார்க்கலாமா? இவரை வைகையிலே விட்டுவிட்டு வந்து தேவரீர் முகத்தில் எப்படி விழிப்பேன்! நான் சிறிது நேரம் ஒன்றும் செய்யாமல் தான் இருந்தேன். இவர் என் கண்முன் மூழ்கி உயிர் துறக்க நான் பார்த்திருக்கலாமா? எவ்வளவு கடின சித்தமுடையவனானாலும் அந்தச் சமயத்தில் சும்மா இருப்பானா? நான் மூங்கிற்கோலை நீட்டிக் கரையில் இழுத்துவிட்டேன். வேறு என்ன செய்வது?"
இந்தக் கதையெல்லாம் முழுப் புரட்டென்றே அகத்தியர் தீர்மானித்துக்கொண்டார். ருத்திர மூர்த்தியைப் போலக் கோபம் மூள உடல் துடிக்க எழுந்தார். "நீங்கள் பாபிகள்; பிடியுங்கள் சாபத்தை: உங்களூக்குச் சுவர்க்க பதவி இல்லாமற் போகக்கடவது!"என்று இடிபோலக் குமுறினார்.
தொல்காப்பியர் என்ன செய்வார்! லோபா முத்திரைக்கோ ஒன்றும் விளங்கவில்லை. தாம் நன்மையே செய்திருக்கவும் தம் ஆசிரியர் அதை உணராமல் முனிந்ததைக் கண்ட தொல்காப்பியருக்கும் கோபம் மூண்டது. "நாங்கள் ஒரு பாவமும் அறியோம். எங்களை அநாவசியமாகக் கோபித்த எம் பெருமானுக்கும் சுவர்க்க பதவி இல்லாமற் போகட்டும்!" என்று சொல்லிப் புறப்பட்டுவிட்டார்.
2
தொல்காப்பியர் அகத்தியரைப் பிரிந்து வந்தாலும் தமிழைப் பிரியவில்லை. அகத்தியர் இயற்றிய அகத்தியம் என்னும் நூல் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணம் வகுப்பது. அது பரந்து விரிந்து கிடந்தமையாலும் முதல் இலக்கணமாகையாலும் அதில் சில விஷயங்கள் ஒன்றனோடு ஒன்று கலந்திருந்தன. தொல்காப்பியர் தம்முடைய ஆசிரியரைப் பிரிந்தும் அவர் திருவடியை மறவாமல் தியானித்துத் தமிழ் நூல்களை ஆராய்ந்துவந்தார். இயற்றமிழுக்குத் தனியே ஓர் இலக்கணம் செய்யவேண்டும் என்ற கருத்து அவருக்கு உண்டாயிற்று. பல நாள் சிந்தித்து இயற்றலானார். அறிவும் அன்பும் உடைய அவர் கருத்து நிறைவேறியது. தமிழ் மொழியின் இலக்கணத்தை ஒழுங்காகத் திரட்டி அமைத்த, 'தொல்காப்பியம்' என்னும் பேரிலக்கணத்தை அவர் இயற்றி முடித்தார்.
அக்காலத்தில் பாண்டிநாட்டில் பாண்டியன் மாகீர்த்தி என்பவன் அரசாண்டு வந்தான். தொல்காப்பியர் அக்கால வழக்கப்படி, தொல்காப்பியத்தை அரசன் அவைக்களத்தில் பல புலவர் முன்னிலையில் அரங்கேற்ற எண்ணினார். அதனை அறிந்த அரசன் அதற்கு உரியவற்றை ஏற்பாடு செய்தான். அதங்கோடு என்ற ஊரில் ஒரு சிறந்த புலவர் வாழ்ந்து வந்தார். அவர் அந்தணர். வேத சாஸ்திரங்களிலும் தமிழிலும் தேர்ந்தவர் யாரும் அப் பெரியாருடைய சொந்தப் பெயரைச் சொல்லுவதில்லை.'அதங்கோட்டு ஆசான்' என்றே சொல்லிவந்தனர். அரங்கேற்றுகையில் அவசபைத்தலைவராக இருக்கும்படி அரசன் கேட்டுக்கொண்டான்.
தொல்காப்பிய அரங்கேற்ற விழா நெருங்கியது. அரசன் அகத்திய முனிவருக்கும் செய்தி அனுப்பினான். சமாசாரத்தைக் கேட்டாரோ இல்லையோ, எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போல அவர் கோபங்கொண்டார். ' வஞ்சகன், துரோகி, என் ஆணையை மீறியதோடு, நான் செய்த இலக்கணத்துக்கு எதிரிலக்கணம் வேறு செய்துவிட்டானா?' என்று படபடத்தார்; பல்லை நெறித்தார்; தரையில் ஓங்கி அறைந்தார். 'அதங்கோட்டாசானா அதைக் கேட்கப்போகிறவன்? பார்க்கலாம் அவன் கேட்பதை! இப்போதே சொல்லி அனுப்புகிறேன்' என்று எழுந்தார்.
அகத்தியரிடமிருந்து ஆள் வந்ததென்றால் அதங்கோட்டாசிரியர் நிற்பாரா? நேரே பொதியமலைக்குப் போய் அகத்தியரைத் தொழுது வணங்கினார். "முனிவர்பிரானே, என்னை அழைத்தது எதற்கு?" என்று கைகட்டி வாய் புதைத்து நின்றார்.
"அந்தத் தொல்காப்பியன் செய்த இலக்கணத்தை நீ கேட்கக்கூடாது. அவன் மாகா பாதகன், குருத் துரோகி!"
'இதைச் சொல்லவா இவ்வளவு அவசரமாக அழைத்தார்!' என்று அதங்கோட்டாசிரியர் வியந்தார்; அவர் நூலை அரங்கேற்ற வேண்டும் என்று பாண்டியன் உத்தரவு இட்டிருக்கிறானே!" என்றார்
பாண்டியன் வேண்டிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். தொல்காப்பியர் எத்தனை தடவை அவரிடம் வந்து பணிவோடு விண்ணப்பம் செய்து கொண்டிருக்கிறார்! அவர்பேச்சிலே எத்தனை பணிவு! நடையிலே எவ்வளவு அடக்கம்! தமிழிலே எவ்வளவு அன்பு! அவருடைய மதிநுட்பந்தான் எவ்வளவு அருமையானது! தொல்காப்பியருடைய இயல்பிலும் அறிவிலும் ஈடுபட்டு அவருடைய வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காகவே தொல்காப்பிய அரங்கேற்றத்தில் தலைமை வகித்து அதைக்கேட்க அதங்கோட்டாசிரியர் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் அகத்தியர் இப்படிச் சொன்னால் அவர் என்ன செய்வார்?
"அவர் பேரில்என்ன குற்றம், சுவாமி?"
"அதெல்லாம் உனக்கு என்ன? அவன் என்னிடம் வருவதே இல்லை. என்னிடம் பாடம் கேட்டுவிட்டு என் இலக்கணம் இருக்கும்போது அவன் ஓர் இலக்கணம் இயற்றலாமா?"
"முனிவர் பிரானே, அடியேன் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. வளருகிற பாஷைக்கு வளர வளர இலக்கணங்கள் உண்டாவதில் என்ன பிழை? தேவரீருடைய இலக்கணம் எல்லாவற்றிற்கும் அடிநிலையாக இருக்குமே.தொல்காப்பியர் நன்றாகக் கற்றவர். அவருடைய முயற்சியைப் பாராட்ட வேண்டுவது நம் கடமையல்லவா?"
அகத்தியருக்கு மேலும் மேலும் கோபம் வந்ததே யொழிட அதங்கோட்டாசிரியர் வார்த்தை ஒன்றும் அவர் காதில் ஏறவில்லை;"இந்த நியாயமெல்லாம் இருக்கட்டும்.அந்தக் கயவன் செய்த இலக்கணத்தை நீ கேட்கக் கூடாது."
இந்தப் பிடிவாதத்துக்கு மருந்து எங்கே தேடுவது? "சுவாமி, அடியேனைத் தர்ம சங்கடமான நிலையில் மாட்டிவிடக் கூடாது. நான் கேட்பதாக ஒப்புக் கொண்டுவிட்டேன். இனிவார்த்தை பிசகக்கூடாது."
"நான் சொல்வதை நீ கேட்க மாட்டாயா?"
"எப்படிச் செய்தால் நான் அபவாதத்துக்கு ஆளாகாமல் இருக்க முடியுமோ அப்படிச் செய்யச் ....... .......
"நீ கேளாமல் இருக்க முடியாதா?"
"முடியாதே"
அகத்திய முனிவருடைய கோபம் மேலே மேலே படர்ந்ததே ஒழியத் தணியவில்லை. அவருக்குப் பேச வாய் எழவில்லை.அதங்கோட்டாசிரியரும் மௌனமாக இருந்தார். முனிவரது முகத்தைப் பார்த்தால் அங்கேயே அவரைச் சுட்டுச் சாம்பலாக்கி விடுவார் போல இருந்தது. 'இதற்கு என்ன வழி?' என்று ஆசிரியர் யோசிக்கலானார். சிறிது நேரம் கழிந்தது.
"சுவாமி, ஒரு வழி தோன்றுகிறது. கட்டளையிட்டால் விண்ணப்பித்துக் கொள்கிறேன்-" என்று மெல்ல ஆரம்பித்தார்.
முனிவர் இன்னும் கோபக் கடலில் திளைத்திருந்தார். "ஹூம்!" என்று கனைத்தார்.
"சொல்லட்டுமா?"
"சொல்"
"அரங்கேற்றத்தின்போது தொல்காப்பியத்தில் அங்கங்கே குற்றம் கண்டுபிடித்துக் கேள்வி கேட்கிறேன். பல பல கேள்விகள் கேட்டுத் தொல்காப்பியரைத் திணற வைக்கிறேன்."
அகத்தியர் இந்த வார்த்தைகளைக் கவனித்தார்; யோசித்தார்."நல்ல யோசனை! நாலு பேருக்கு நடுவில் அவன் முகத்தில் கரியைத் தீற்றி அனுப்புவது சரியான தண்டனை. நல்லது. உன் அறிவுக்கேற்ற தந்திரம். நல்ல காரியம்."
அகத்தியர் ஆனந்தக்கூத்தாடினார். தொல்காப்பியத்தையும் தொல்காப்பியரையும் அடியோடு வீழ்த்தி விட்டோம் என்பது அவர் ஞாபகம்.
3
தொல்காப்பிய அரங்கேற்ற விழாவுக்குரிய நாள் வந்தது. பாண்டியன் சபையில் நடப்பதென்றால் சொல்ல வேண்டுமா? இடைச்சங்கப் புலவர்கள் எல்லோரும் கூடினர். இலக்கணம் வகுப்பதற்கு எவ்வளவோ திறமை வேண்டும். ஆயிரம் இலக்கியங்கள் எழுந்தால் ஓர் இலக்கணம் உண்டாகும். அவ்வளவு பெரிய காரியத்தைத் தொல்காப்பியர் சாதித்திருக்கிறார்.
பாண்டியன் மாகீர்த்தி உயர்ந்த ஆசனத்தில் வீற்றிருக்கிறான். அவனுக்கு அருகே மற்றோர் உயர்ந்த இருக்கையில் அதங்கோட்டாசிரியர் எழுந்தருளியிருக்கிறார். எங்கும் புலவர் கூட்டம்; தமிழ் பயில்வார் தலைகள்.
அரங்கேற்றம் முறைப்படி தொடங்கியது. கற்றுச் சொல்லி ஒருவன் தொல்காப்பியச் சூத்திரத்தை வாசித்தான். தொல்காப்பியர் பணிவோடு உரை கூறலானார். அவ்வளவு பேரும் ஒலியடங்கிக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஒரு சூத்திரம் முடிந்தது. அதங்கோட்டாசிரியர் மெல்ல அந்தச் சூத்திரத்தில் ஒரு தடையை எழுப்பினார்.புலவர்களெல்லாம் திடுக்கிட்டனர்; "இதென்ன? ஆரம்பிக்கும் போதே இப்படிக் கண்டனம் செய்கிறாரே!"என்று அஞ்சினர். ஆனால் அடுத்த கணத்தில் தொல்காப்பியர் தக்க விடையைக் கூறவே, சபையினர் தம்மை அறியாமலே ஆரவாரம் செய்தனர்.
அந்த முதற் சூத்திரத்தில் ஆரம்பித்த தடையை அதங்கோட்டாசிரியர் நிறுத்தவே இல்லை. மேலும் மேலும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போனார். அவற்றுக்கு உடனுக்குடன் தக்க விடைகளைச் சொல்லி வந்தார் தொல்காப்பியர். அந்த வினாவிடைப் போரில் தொல்காப்பியருடைய அறிவுத் திறமை பின்னும் ஒளி பெற்றது. சிங்கக்குட்டி துள்ளி எழுவது போல அவருடைய விடைகள் பளீர் பளீரென்று அவர் வாயிலிருந்து எழுந்தன. அதங்கோட்டாசிரியர் அவர் கூறும் விடைகளைக் கேட்டு அகத்துள்ளே மகிழ்ச்சி பூத்தார். அவர் கேட்கும் கேள்விகள் அகத்தியருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றத்தானே? அறிவின் ஒளியைக்கண்டு போற்றுவதில் உண்மை அறிவாளியாகிய அந்தப் பெரியார் தாழ்ந்தவர் அல்லவே?
ஒரு நாள், இரண்டு நாள், பல நாட்கள் அரங்கேற்றம் நடைபெற்றது. தமிழின் இலக்கணத்தை மூன்று அதிகாரங்களாகத் தொல்காப்பியர் வகுத்துச் சொல்லியிருந்தார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற அந்த மூன்றுள் ஒவ்வொன்றிலும் ஒன்பது ஒன்பது இயல்களை அமைத்திருந்தார். எழுத்ததிகாரம் அரங்கேற்றி முடிந்தது; அதன் ஒழுங்கான அமைப்பு, புலவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. சொல்லதிகாரம் நடந்தது; அதிலுள்ள முறை வைப்பும், வகையும் அறிஞர்களுக்கு வியப்பை உண்டாக்கின. பொருளதிகார அரங்கேற்றம் தொடங்கியது. தமிழ் மொழிக்கே சிறப்பைத் தரும் பொருள் இலக்கணத்தைத் தொல்காப்பியர் எப்படி இயற்றியிருக்கிறார் என்று தெரிந்து கொள்வதில் புலவர்களுக் கெல்லாம் மிகுதியான ஆர்வம் இருந்தது. அகப்பொருளையும் புறப்பொருளையும் பற்றி விரிவாக இலக்கணம் வகுத்திருந்தார். தமிழ்ச் செய்யுளின் பரப்பை அளவிட்டுச் செய்யுளியலைச் செய்திருந்தார். உவம இயல், மெய்ப்பாட்டியல் முதலியவற்றில் மிகவும் நுட்பமாக உவமானத்தின் வகைகளையும் சுவைகளையும் மெய்ப்பாடுகளையும் உணர்த்தியிருந்தார்.
இவ்வளவையும் கேட்டவர்கள், 'இவர் தெய்வப் பிறப்பு' என்று பாராட்டினர். 'நூல் இயற்றியது பெரிதன்று; இதை இங்கே அரங்கேற்றியதுதான் பெரிது. இந்த ஆசிரியர் கூறும் கண்டனங்களுக்குத் தக்க சமாதானஙகளைத் தைரியமாகச் சொன்னாரே; இவருக்கு எவ்வளவு அறிவுத் திறன் இருக்கவேண்டும்!' 'விஷயம் கருத்தில் தெளிவாகப் பதிந்திருக்கும்போது யார் எத்தனை கேள்வி கேட்டால் என்ன? மலையைப் போல இருக்கும் இவர் அறிவை எந்தக் காற்றால் அசைக்க முடியும்?' என்பன போலப் பல பல வகையாகத் தொல்காப்பியருக்குப் புகழுரைகள் எழுந்தன.
நல்ல வேளையாக அரங்கேற்றமே முடிந்தது. அதங்கோட்டாசிரியர் தொல்காப்பியரை வாயாரப் பாராட்டினர். "இந்த நூல் தமிழுக்கு ஒரு வரம்பு. சங்கப் புலவருக்கு இதுவே இலக்கணமாக இருக்கும் தகுதியுடையது. தொல்காப்பியர் ஆசிரியரென்ற சிறப்புப் பெயர் பெறும் தகுதி உடையவர்"என்று உள்ளங்குளிர்ந்து கூறினார். பாண்டியன் மாகீர்த்தி, "என்னுடைய அவையில் அரங்கேற்றும் பேறு எனக்கு இருந்தது. என் பெயர் மாகீர்த்தி என்பது தங்கள் நூலினால்தான் பொருளுடையதாயிற்று. இனி ஆசிரியர் தொல்காப்பியர் என்றே தங்களை உலகம் வழங்கும்." என்று வாழ்த்திப் பரிசில்களை அளித்தான்.
அன்று முதல் திருணதூமாக்கினி,ஆசிரியர் தொல்காப்பியர் ஆனார்.
இந்த அரங்கேற்றம் நிறைவேறின போது தொல்காப்பியத்திற்கு ஒரு புலவர் சிறப்புப் பாயிரம் பாடினார். அதன் பிற்பகுதி வருமாறு:
"நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவில் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே."
[மாற்றாரது நிலத்தைக் கொள்ளும் போர்த் திருவினையுடைய பாண்டியன் மாகீர்த்தி அவையின்கண்ணே, அறமே கூறும் நாவினையுடைய நான்கு வேதத்தினையும் முற்ற அறிந்த, அதங்கோடென்கிற ஊரின் ஆசிரியனுக்குக் குற்றமற ஆராய்ந்து கூறி, எழுத்து, சொல், பொருள் என்னும் மூவகை இலக்கணமும் மயங்கா முறையால் செய்கின்றமையால் எழுத்திலக்கணத்தை முன்னர்க் காட்டி, கடல் சூழ்ந்த உலகின்கண்ணே ஐந்திர வியாகரணத்தை நிறைய அறிந்த பழைய காப்பியக் குடியிலுள்ளோனெனத் தன் பெயரை மாயாமல் நிறுத்தி, பல புகழ்களையும் இவ்வுலகின்கண்ணே மாயாமல் நிறுத்திய தவவேடத்தை உடையோன்.
—நச்சினார்க்கினியர் உரை.]