புது மெருகு/நெடுஞ் சுவர்
நெடுஞ் சுவர்
சோழனுடன் ஏற்பட்ட மன வேறுபாட்டால் கம்பர் தம்முடைய கவிதையே துணையாகப் புறப்பட்டு விட்டார்.'எங்கே போவது? என்ன செய்வது?' என்ற தீர்மானம் இல்லாமல் அகில லோகமும் தமக்கு அடிமையென்ற நினைவு கொண்டவரைப் போலச் சோழநாட்டை விட்டு வடக்கே பிரயாணம் செய்யத் தொடங்கினார். அவருடைய புகழ் தமிழ்நாடு முழுவதும் அக் காலத்தில் பரவியிருக்கவில்லை. அவருடைய பெயரை அழியாமல் நிலைத்திருக்கும்படி செய்யும் இராமாயணத்தை அவர் இயற்றாத காலம் அது.கட்டிளமை நிறைந்த பருவத்தில் துணிவும் சுதந்தர உணர்ச்சியும் அவரிடம் இருந்தன.
"இந்த உலகத்தில் உன்னை நினைந்தா தமிழை ஓதினேன்? உலகம் முழுவதுமே சோழ நாடா? வேறு தேசங்களும் அத் தேசங்களுக் குரிய மன்னர்களும் இல்லாமல் உலகம் அஸ்தமித்து விட்டதா? நான் எங்கே போனாலும் என் புலமைச் செங்கோலின் அதிகாரத்தைச் செலுத்த முடியும்" என்று சோழனிடம் வீரம் பேசி வெளியேறினார் அப்புலவர் பிரான். சோழ நாட்டை விட்டு அப்பால் போனபோதுதான் உண்மையான உலகம் அவர் கண்ணுக்குப் புலனாயிற்று. அவர் தன்னந் தனியாகப் புறப்பட்டிருக்கிறார். மாணாக்கர்களோ, தோழர்களோ யாரும் துணை இல்லை. அவரை இன்னார் என்றே பலர் அறிய முடியாது.இந்த நிலையில், 'நான்தான் கம்பர்; சோழ நாட்டுப் பெரும்புலவர்' என்று தாமே சொல்லிக்கொண்டு பிறருடைய ஆதரவைப் பெறுவது என்பது முடியுமா? கால் நடந்த வழியே சென்றார். தர்மம் நிறைந்த தமிழ்நாட்டில் அவர் ஓர் இரவலராகச் சென்றிருந்தால் எவ்வளவோ உபசாரத்தைப் பெற்றிருக்கக் கூடும். அப்படிச் செல்வதற்கு அவர் உள்ளம் துணியவில்லை.
★★★
முகம் அறியாத வேற்று நாட்டில் யாரோ பரதேசியைப் போலப் பிரயாணம் செய்துகொண் டிருந்த அவருக்கு விசித்திரமான எண்ணம் ஒன்று தோன்றியது. 'நாம் ஒருவரிடம் சென்று நம்முடைய புலமையைக் காட்டி உபசாரம் பெறுவது கூடாது. அவர்களாக நம் பெருமை தெரிந்து வந்தால்தான் நமக்கு மதிப்பு. நம்முடைய கவிதையின் உதவி இல்லாமலே நாம் உலகத்தில் வாழ முடியாதா? கவிதையை அடகு வைத்துப் பிழைப்பதைக் காட்டிலும் உடம்பினால் உழைத்துக் கூலி வேலை செய்து பிழைப்பது எவ்வளவோ மேலானது. நாம் எப்போதும் இந்த நிலையில் இருக்கப்போவதில்லையே! யாரும் அறியாமல் சாமான்ய மனிதனைப்போல உலவுவதென்பது நம்மைப் போன்றவர்களுக்குக் கிட்டாத பதவி. இன்னும் சில நாட்களுக்குள்ளே இந்த நாட்டிலும் நமக்கு அன்பர்கள் சேர்ந்துவிடுவார்கள்.
'அத்தகைய மதிப்புக்குரிய நிலை வருவதற்கு முன் நம்மை நாமே சோதித்துக்கொள்ள வேண்டும். நம்முடைய கைகளும் கால்களும் நம்முடைய வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் பயன்படுகின்றன என்று தெரிந்து கொள்ளவேண்டும். நாவைக் கொண்டு பிழைக்கும் கூட்டத்தை நாம் சேர்ந்திருந்தாலும் கூலி வேலை செய்து பிழைக்கும் தொழிலாளர்கள் எப்படி ஜீவனம் செய்கிறார்கள் எனபதை அநுபவத்தால் உணரவேண்டும். அதற்கு ஏற்ற சந்தர்ப்பம் இதோ வாய்த்திருக்கிறது. நம்முடைய வேஷம் குலைவது இன்றோ நாளையோ தெரியாது. அதற்குள், இந்த அருமையான சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் சோதனை செய்து விட வேண்டும். நம்முடைய உடம்பு வணங்கி வேலை செய்து இந்த ஒரு சாண் வயிற்றுக்குக் கஞ்சி பெற்று வாழ முடியுமா? பார்த்து விடவேண்டும்' என்று அவர் சிந்தனை சென்றது.
அவரைக் கவிஞர் என்று அறிந்துவிட்டால் ஊரினர் சும்மா விடுவார்களா? அப்பால் அவர் இஷ்டப்படி போக முடியுமா? வர முடியுமா? பட்டினி கிடக்க முடியுமா? நடக்க முடியுமா? வாழ்க்கையில் அரிய அநுபவங்களைப் பெறும் சந்தர்ப்பங்கள் சில, யாவருக்கும் கிடைக்கின்றன. ஆனால் அந்த அநுபவங்களால் பயன் அடைபவர்கள் மிகச் சிலரே. கம்பர் உலகைத் தம்முடைய கவிதைக் கண்களால் நோக்கி, ஒவ்வொரு கணத்திலும் புதிய புதிய உணர்ச்சிகளைப் பெறுபவர். உலக அரங்கில் உலவும் மக்களின் உணர்ச்சிகளை ஊடுருவிப் பார்த்து, அவர்கள் செயல்களை அறிந்து வியப்பவர். மற்ற மனிதர்களின் வாழ்க்கையைக் கண்டு அதைத் தம் கற்பனைக்குக் கருவியாக்கும் அப் பெரும் புலவர், இப்போது தம்முடைய வாழ்க்கையிலே ஒரு சிக்கலான நிலையில் நின்றார். சக்கரவர்த்தியின் அவைக்களப் புலவராக இருந்தவர் பழக்கமில்லாத மக்களிடையே யாரோ அயலார்போல் நடக்கும் நிலைக்கு வந்துவிட்டார். வந்தால் என்ன? அந்த நிலை யிலும் அவருக்கு இன்பம் இருந்தது; புதுமை இருந் தது; தம் வாழ்க்கையில் கிடைத்தற்கு அரிய செவ்வி அது என்ற உணர்ச்சியும் இருந்தது. ஆகவே தம் எண் ணத்தைச் செயலில் காட்ட முனைந்தார்.
★★★
கூலிக்கு வேலை செய்யும் சிறு கூட்டம் ஒன்றைக் கம்பர் பார்த்தார். "ஐயா, இந்த ஊரில் கூலிக்கு வேலை கிடைக்குமா?" என்று கேட்டார். அவர்கள் அவரை ஏற இறங்கப் பார்த்தார்கள்; கூலி வேலை செய்வதற் காகப் படைக்கப்பட்ட தேகமாகத் தோன்றவில்லை.
"ஏன் அப்பா, நீ எந்த ஊர்? திடீரென்று இங்கே வந்த இடத்தில் கூலி வேலை ஏன் செய்யவேண்டும்?" என்று கேட்டான் ஒருவன்.
அவன் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. "இந்த ஊரில் வேலை செய்து பிழைக்கலாம் என்று வந் திருக்கிறேன். நான் இந்த ஊருக்குப் புதிது. அதனால் தான் கேட்கிறேன்" என்றார்.
அந்த மனிதனுக்கு அவருடைய விடை திருப்தியை அளிக்கவில்லை. 'தம்பி யாரிடமோ கோபித்துக் கொண்டு வந்திருக்கிறான். பார்த்தால் ராஜா மாதிரி இருக்கிறான். இவனாவது, கூலி வேலை செய்வதாவது!" என்ற எண்ணமும் அவன் பார்வையும் கம்பரைச் சுற்றி வட்டமிட்டன.
"வேலை இருந்தால் சொல்லுங்கள்; இல்லையானால் பக்கத்து ஊருக்குப் போகிறேன்.""இல்லை தம்பி; உண்மையைச் சொல்லிவிடு. எதற்காக நீ வேலை செய்யவேணும்? எங்கள் வீட்டுக்கு வா; சோறு போடுகிறோம்."
கம்பருக்கு ஒன்றுமே தோன்றவில்லை. "நான் யார் வீட்டிலும் உண்பதில்லை. என் கையால் சமைத்துத்தான் உண்பது வழக்கம். கூலிக்கு வேலை இருந்தால் சொல்லுங்கள். அதுவே எனக்குச் சோறு போட்டதற்குச் சமானம்" என்றார்.
மேலே சம்பாஷணை வளர்ந்தது. வேலைக்காரனுக்கு ஏற்றபடி பேசத் தெரியாதா கம்பருக்கு? கடைசியில் அந்த மனிதன், "அதோ ஊர் ஓரத்தில் வேலி என்ற தாசி வீடு இருக்கிறது. அவள் வீட்டுப் புறக்கடையில் ஏதோ ஒரு சுவர் இடிந்திருக்கிறதாம். ஒருவேளை வேலை செய்தால் அதை அடைத்துவிடலாம்" என்று சொல்லிப் போய்விட்டான்.
கம்பர் வேலியின் வீட்டிற்குப் போனார். அவளிடம் சுவர் வைக்க இவ்வளவு நெல் என்று பேசிக்கொண்டார். அதிகமாகப் பேச்சுக் கொடுக்கவில்லை. அவள் வீட்டிலே மண் வெட்டி, குடம் எல்லாம் வாங்கிக் கொண்டார். வேலையில் முனைந்துவிட்டார்.
மண்ணை வெட்டிக் குழைத்தார்; துவைத்தார். சுவர் வைக்க ஆரம்பித்தார். சொல்லையும் பொருளையும் குழைத்து மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் கட்டத் தெரியுமே அன்றி மண்ணைக் குழைக்கும் வேலை அவருக்கு எப்படித் தெரியும்? அதிகமாகத் தண்ணீரைக் கொட்டிவிடுவார். அதனால், மண்ணை எடுத்துச் சுவர் மேல் வைத்தால் அது வழிந்துவிடும். தண்ணீர் போதாமல் மண்ணை வெட்டி அப்புவார். பொல பொலவென்று அப்படியே உதிர்ந்துவிடும். உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் போயிற்று. கைகள் கன்றிப் போயின. தொடர்ந்து ஒரே மூச்சாக வேலை செய்ய அவரால் முடியவில்லை. இடையிடையே சிறிது நேரம் உட்கார்ந்துகொண்டார்.
வெயில் ஏறிக்கொண்டு வந்தது. கம்பர் இன்னும் ஒரு படைகூட எழுப்பினபாடில்லை. "சுவர் வைக்கத் தெரியாத நாம், கவிதையினால் புதிய உலகைப் படைக்கிறோம். நம்முடைய கைகளால் எழுத்தாணி பிடிக்கத்தான் முடியும்; மண்வெட்டிக்கும் இவைகளுக்கும் வெகு தூரம்" என்ற விஷயம் அவருக்கு அப்பொழுது தான் புலப்படலாயிற்று.
மறுபடி எழுந்து முயன்றார். சிரமம் அதிகமாயிற்று. மீண்டும் உட்கார்ந்தார். அவர் உள்ளம் பிரயாணம் செய்யத் தொடங்கியது. சோழ மகாராஜனுடைய அரண்மனையில் அவருக்கு இருந்த செல்வாக்கு என்ன! அவருக்கு நடந்த உபசாரம் என்ன! இப்போது சுவர் வைக்க நேர்ந்த காலத்தின் கோலம் என்ன! நெற்றி வேர்வையை வழித்துக்கொண்டார். அப்போது ஏதோ பேருக்கு இரண்டு மண்வெட்டி மண் எடுத்து அப்பியிருந்தார்; அதுவும் படபடவென்று சரிந்துவிட்டது.
எழுந்து நின்று ஆத்திரத்தோடு ஐந்தாறு முறை மண்ணை வெட்டி வீசி ஒழுங்குபடுத்தினார். வழுக்கு மரத்தின்மேல் வெகு வேகமாக ஏறும் ஒருவன் அதே வேகத்தோடு சருக்கிவிட்டு இறங்குகிறானே, அதே போல அவ்வளவு மண்ணும் மடமடவென்று சரிந்து விட்டது. கம்பருக்கு இப்போது மலைப்பு வந்துவிட்டது. சோர்ந்துபோய்க் கீழே உட்கார்ந்தார்.
★★★
சக்கரவர்த்தி திருமுன்னர்ப் புலவர் கூட்டத்திடையே கம்பர் அமர்ந்திருக்கிறார். சோழ மன்னன் புன்னகை பூத்தபடி சிங்காதனத்தில் வீற்றிருக்கிறான். அருகில் இள நங்கையர் கவரி வீசுகின்றனர். கம்பர் மேனியில் கவரிக் காற்று மெல்லெனத் தவழ்கிறது. முதல் நாள் பாடிய ஒரு பாட்டின் சுவையைப்பற்றி அரசன் வியந்துகொண் டிருக்கிறான். கம்பருக்கு உண்டான பெருமிதம் கட்டுக்கு அடங்கவில்லை. "கம்பர் இந்த நாட்டுக்கு விளக்கு; நம் அவைக்களத்திற்கு நடு நாயக மணி; தமிழ் உலகத்திற்கே தனிப்பெரும் புலவர்" என்று மன்னன் வாயாரப் பாராட்டுகிறான். அங்குள்ள புலவர்களெல்லாம் உவகைக் குறிப்போடு தலையை அசைக்கின்றனர்.
★★★
காட்சி மறைந்தது. படை பதைக்கும் வெயில்; எதிரே சுவர் அவரைப் பார்த்துப் பரிகசித்துக்கொண்டு நிற்கிறது. இங்கே கவரி இல்லை, காற்று இல்லை. வெயில், வேர்வை, சோர்வு எல்லாம் இருந்தன. அவரைக் கவிஞரென்று தெரிந்துகொண்டவர் யாரும் இல்லை.
இரண்டையும் ஒப்பிட்டு நோக்கின கம்பர் உள்ளம் உணர்ச்சி வசமாயிற்று. சாதாரண மனிதனாக இருந்தால் அந்த உணர்ச்சி அழுகையாக வெளிவந்திருக்கும். அவரோ கவிஞர். அவர் உணர்ச்சி ஒரு கவிதையாக வெளியாயிற்று. உட்கார்ந்தபடியே அவர் பாடினார். அந்தச் சுவரையே முன்னிலைப் படுத்திப் பாடலானார்.
"மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்தேன்;
சொற்கொண்ட பாவின் சுவையறிவார் ஈங்கிலையே!
விற்கொண்ட வாணுதலாள் வேலி தருங்கூலி
நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே"
என்று வந்தது பாட்டு. சுவர் உண்மையில் குறுஞ் சுவர் தான். அவர் அதை நெடுஞ்சுவராக்கும் வேலையை ஒப்புக்கொண்டு வந்தார். அவர் கைகளுக்கு அந்தத் திறமை இல்லை. இப்போது அவர் நாவினால் அது நெடுஞ் சுவராகிவிட்டது. வேலியோ 'விற்கொண்ட வாள் நுதலாள்'(வில்லைப் போன்று வளைந்த ஒளியையுடைய நெற்றியைப் பெற்றவள்) ஆனாள்.
பாட்டு உணர்ச்சியோடு வந்தது. நெடுஞ்சுவரைப் பார்த்து அவர் பாடினார்; அதற்குக் காதா இருக்கிறது, கேட்க? ஆனால் விற்கொண்ட வாணுதலாளாகிய வேலியின் காதில் இது விழுந்தது.
'என்ன இது! இந்தக் கூலிக்காரன் பாட்டுப் பாடுகிறானே! இவன் வேலை செய்வதே விசித்திரமாக இருக்கிறதே!' என்று கவனித்தாள். 'நம்மைப் பாடுகிறானே; அடே! இதென்ன! இவன் வேலை செய்கிற தொழிலாளி அல்ல. யாரோ புலவர்' என்று எண்ணினாள். ஓடி வந்தாள். கம்பர் தம்மை மறந்து நெடுஞ்சுவரைப் பிரார்த்தித்துக்கொண் டிருந்தார். அவர்முன் போய் நின்று கைகுவித்தபடி, "புலவரே!" என்றாள் வேலி. கண்ணை விழித்தார் கம்பர். முன்னே வேலி நின்றாள். "ஐயா, நான் தாங்கள் சுவர் எடுப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். வேலை செய்த பழக்கம் தங்களுக்கு இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். இப்போது தான் உண்மை வெளிவந்தது. தாங்கள் யார்? தாங்கள் இந்த மாதிரி செய்யத் தகாத கூலி வேலையை ஏற்றுக் கொள்வானேன்?" - கேள்விகள் சரமாரியாக வந்தன. கம்பர் மௌனமாக இருந்தார். அவர் கவிதை கலைத்துவிட்டதே!
★★★
வேலி அவரை உள்ளே அழைத்துச் சென்றாள். காலில் விழுந்து வணங்கினாள். கம்பர் உண்மையைச் சொல்லும்படி நேர்ந்து விட்டது. வேலிக்குத் தூக்கமும் வியப்பும் ஆனந்தமும் மாறி மாறி வந்தன. "என் பாக்கியம் மகத்தானது!" என்று குதித்தாள். "ஐயோ! தங்களைக் கூலி வேலை செய்யும்படி ஏவினேனே!" என்று துடித்தாள். "நான் செய்த பிழையைப் பொறுக்க வேண்டும்" என்று அழுதாள்.
அன்று கம்பர் அங்கே உணவு உட்கொண்டு தங்கி மறுநாள் புறப்பட்டுவிட்டார். நிச்சயம் இல்லாத லட்சியத்தை நோக்கி.