உள்ளடக்கத்துக்குச் செல்

புது வெளிச்சம்/கோள்களும் நாள்களும்

விக்கிமூலம் இலிருந்து



23

கோள்களும் நாள்களும்


சுருங்கச் சொன்னால் நான் ஒரு வான சாஸ்திரியல்ல; ஒரு ஜோதிடனுமல்ல. ஆயினும் நான் இங்கு இந்தக் கோள்களைப் பற்றியும் நாள்களைப் பற்றியும் எழுதித்தீரவேண்டியவனாயிருக்கிறேன். வெறும் புத்தகங்களைப் படித்து வயிற்றுப் பாட்டிற்காக மக்கள் வாழ்க்கையை நாசமாக்கும் இதைத் தற்குறி ஜோதிடர்களை விட நான் மங்களபிமானியாகக் காரண காரியங்களைச் சீர்தூக்கி நல்லது கெட்டது கண்டு உண்மையை உரைக்கும் பழக்கத்தை மேற்கொண்டொழுகுபவனாயுள்ளேன். எனவே படித்த நூல்களில் சிந்தித்து செப்பஞ்செய்த கருத்துகளை எனக்குத் தெரிந்த அளவில் கூற என்னை யாரும் தடுக்க முடியாது. நாட்டு மக்களுக்கு நான் செய்து தீரவேண்டிய ஒரு இன்றியமையாத கடமைப்பாடு இது.
நான் பிறந்து அறிவு தோன்றத் தொடங்கிய ஐந்தாம் ஆண்டிலிருந்து காணாத பஞ்சம் (1987) பிரபவ ஆண்டு தொடங்கிய சித்திரை முதல் தேதியிலிருந்து காண முடிகிறது. ஆனால் இந்தப் பிரபவ ஆண்டு பஞ்சாங்கத்தில் ஆதிபத்தியபலன் இப்படியிருக்கிறது. அதிக மழை, சஸ்யதான்யாதிகள் அபிவிருத்தி, பசும் பால் பாக்கியங்கள் அபிவிருத்தியும், கோதுமை, நெல், மொச்சை, துவரை, பயிறு, உழுந்து, கடலை, எள்ளு, கொள்ளு அபிவிருத்தியாவதுடன் பின்பகுதியில் விலை சகாயமாகவும் அமையும்.

பருத்தி, வெண்பட்டு, பீதாம்பரம், ஜரிகை இழைகள், மஸ்லின் துணி வகைகள் அபிவிருத்தியும், எண்ணெய் வித்துக்கள் செழிப்படைதலும், புளி பால், தயிர், வெண்ணெய், தேங்காய், கரும்பு அபிவிருத்தியும் விலை ஸ்ரசமும் உண்டாகும், என்று கோடங்கிப் பேச்சுகள் போல் சுபீட்சத்துக்குரிய சொற்கள் சரளமாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குடிநீரின்றி மக்கள் குலைகாயும் நேரத்தில் ஆரியப் பஞ்சாங்கம் குருடனுக்குத் திருடன் செப்பும் தெளிவுரை போல் பொய்ச் சொற்களை ஏன் அடுக்கிக் கொண்டு ஆர்ப்பரிக்கிறது. ஒன்றாவது இதில் உண்மையுண்டா? தமிழ் மக்களே கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இந்தப் பஞ்சாங்கம் எழுதினவனை என்ன செய்தாலும் நம்மைப் பாவம் பற்றாது என்று தோன்றுகிறது.

சகுனியின் கையிலுள்ள சொக்கட்டான் காய்களை போன்று இந்தக் கோள்களும் நாள்களும் கெளடல்ய சந்ததிகளின் கையில் கிடைத்துள்ளதென கூறின் தவறேயாகாது.

நான் என்னை ஒரு கவிஞனென்றோ எழுத்தாளனென்றோ சொல்லிக் கொள்ள அசத்தனாவிருக்கிறேன். எனினும் உள்ளக் கொதிப்பு இப்படி வெண்பாவாக வடிக்க வேண்டியுள்ளது :

"அஞ்ஞானம் பற்றா தருமைக் குறள்தமிழில்
விஞ்ஞானம் பற்றி விளைந்திருந்தும் - இஞ்ஞான்றும்
கஞ்சாவும் கள்ளும் காவுமெனப் பஞ்சாங்கம்
மிஞ்சாமற் கொள்ளும் மெலித்து”.

எனப் பாடச் செய்கிறது. ஆம் இந்தப் பஞ்சாங்கம் எள்ளளவு சத்தியத்தையும் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கவில்லை. பஞ்சாங்கம் பகவர்வதனைத்தும் சுத்த சுத்தமான பச்சைப் பொய்கள் என்பதற்கு என்னிடம் தக்க சான்றுகள் உள்ளன.

'சாத்திரம் பொய்யென்றால் கிரகணத்தைப் பார்' என்ற ஒரு பழமொழி மட்டும் பஞ்சாங்கம் பகர்வது மெய்யென்று கொள்ளப் போதுமானதல்ல; சித்திரை மாதத்துக்குப் பின்னால் வருவது வைகாசி மாதம் எனச் சொல்வது சாத்திரமாகாது. நாளைக் கொண்டும் கோளைக் கொண்டும் வானத்தில் நிகழும் மாற்றங்களை மட்டும் சொல்லக் கூடுமன்றி அதை மனிதனோடு இணைத்து முடி போடல் மகாபாதகம் என்று நான் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

சாணக்கியனது காலம் கி.மு. 4ம் நூற்றாண்டு எனப்படுகிறது. சாணக்கியன் செய்த அர்த்தசாஸ்திரம் காலத்தைப் பற்றிய அளவுப் பெயர்கள் உள்ளவிதம் இது. த்ருடி, லவ, நிமிக காங்டா, கலா, நாழிகை, முகூர்த்தம், காலை, மாலை, பகல், இரவு, பக்சம், மாதம், ருது, அயனம், வருடம், யுகம் மேலும் கொஞ்சம் விவரம்.

நிமிசத்தின் நாளில் ஒரு பாகம் த்ருடி, இரண்டு த்ருடி ஒரு லவ இரண்டு லவ ஒரு நிமிசம், ஐந்து நிமிசம் ஒரு காஸ்டா முப்பது காஸ்டா ஒரு கலா நாற்பது கலா ஒரு நாழிகை.

இவற்றில் நாம் கவனிக்க வேண்டியது கிழமைகள் இருக்கவில்லை; கிழமைகளுக்குப் பெயர்களும் இடப்படாததைக் காண்கிறோம். ஏழு நாள் ஒரு வாரம் என்ற விபரமும் கிடையாது. ஒரு நாளுக்கு இருபத்தி நான்குமணி நேரம் என்பதுவுமில்லை. இதுவுமன்றி அந்தக் காலத்தில் சந்திரனைக்கொண்டு மாதத்தையும், அயனத்தைக் கொண்டு வருடத்தையும் நிர்ணயிக்க வேண்டியிருந்தது. சந்திரனைக்கொண்டு வருடத்தை அளந்தால் 354 ( = 295 x 12) நாட்களே அடங்குவதாயிருந்தன. இந்தக் குறைபாட்டை 30 மாதங்களுக்கு ஒருமாதத்தை 13 மாதங்களுள்ள வருடமாக்கி குறையை நிறைவுசெய்து கொண்டு வர நேரிட்டது. எதற்காக இதைச் சொல்ல நேரிட்டது எனின் சாணக்யன் காலம் வரையிலும் சந்திரன் சூரியன் தவிர, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எனும் கிரகங்கள் இருப்பது இவர்கள் அறியவில்லை. எனவே ஜோதிட சாத்திரம் என்ற பயங்கரமான பீடையும், பஞ்சாங்கம் என்ற மகா பயங்கரமான பிணியும் நாட்டில் இருக்கவில்லை என்பது நிருபணம் செய்து கொள்வதற்காகவேதான்

கிரகங்களே இன்னும் இல்லை என்று ஆகும்போது இருபத்தியேழு நச்சத்திரங்களும் இருந்திருக்காது. அமிர்த யோகம், சித்தயோகம், மரணயோகம்,கரிநாள், தனநாள்-இவைகளெல்லாம் கூடச் சாணக்யன் காலத்தில் இருக்கவே இல்லை. மேச, ரிசப ராசிகளும் இல்லவே இல்லை என்றும் நாம் சொல்லலாம். பிரபவ விபவ, சுக்கில என்று வருடங்களுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டிருக்காது என்றும் கூட நாம் நிச்சயம் செய்து கொள்ளலாம். எனினும் அமாவாசையிலிருந்து, பிரதமை, துதியை, திரிதியை எனும் திதிகள் மட்டும் இருந்தன. இந்தத் திதிகளில் எதேதோ நல்லது கெட்டது அடங்கியிருப்பதாக இன்று மக்கள் பொய் நம்பிக்கை வைத்துக் கொண்டுள்ளனர். இது அறியாமையின் பாற்பட்டது. இந்தத் திதிகளின் பொருள் அமாவாசை அல்லது பெளர்ணமி கழிந்த முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள், நான்காம் நாள் என்பதை தவிர்த்து வேறெதுவுமில்லை. சந்திரன், சூரியன் தவிர வேறு கிரகங்கள் இல்லாதபோது நவகிரகங்கள் பித்தலாட்டமும் இல்லை என்ற கூறலாம்.

பெயரிடப்படாத நாள்களில், திதிகள் எண்ணின் பெயர்களாயிருக்கையில் நட்சத்திரம், யோகம் கரணம் என்று மூன்றும் கூட்டிப் பஞ்சாங்கம் எனப் பெயர் சூட்டி நம்மை இந்து மதத்தினர் என்று பெயரிட்டு மந்தையாக்கித் தம் மனம் போல் ஆளச் செய்ய பின்னிய சூழ்ச்சி வலைகளில் இதுவும் ஒன்று என்று கொஞ்சம் குறிப்பிடுகிறேன்.

கி.மு. எட்டாம் நூற்றாண்டில் பாபிலோனியாவில் இருந்த காஸ்பீயன் எனும் வானசாஸ்திரிதான் ஏழு நாட்கள் கொண்ட வாரத்தையும், இருபத்திநான்கு மணிக் கூறுகள் கொண்ட தினத்தையும் சிந்தித்து வெளிப்படுத்திய முதல் மனிதன். பட்சார்த்தம் 7 ( = 14 / 2 ) தினங்கள் ஆகியிருந்த காரணத்தால் ஆகாசத்திலிருந்த ஏழு ஒளி கிரகங்கள் வெகு பொருத்தமாகவே அமைந்து போயிற்று.



ஸ்திர நட்சத்திரங்களினிடையே புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி எனும் ஐந்து கிரகங்களும் சூரியன், சந்திரன் எனும் இரண்டு வானவிளக்குகளில் பூமியை வியப்புறுத்திக் கொண்டிருக்கும் காட்சியை காஸ்டீபன் ஊன்றி ஆராய்ந்துணர்ந்தார். இந்த ஏழு ஒளிகளின் பெயர்களையும் தாங்கி இனி வழங்கும் சூரிய உதயத்திலிருந்து பகலும், பகல் கழிந்து வரும் இரவும் சேர்ந்தது ஒரு நாளெனவும், காலமாகிய நாள் ஒளிகளின் பெயர் தாங்கி வருவதனால் அவை தெய்வீகமெனவும் அவர் நம்பினார். காலம் அனைத்துக்கும் காரணமாக உள்ளது எனக் கண்ட அவர் காலத்தை தெய்வமாக - அதீத சக்தியுடையதாக நினைத்ததில் தவறு கிடையாது. காலம் வெகு அருமையானது. வீண் செய்யக் கூடாதது. திருப்பிப் பெற முடியாதது. மனிதனின் எல்லாவிதமான சாதனைகளுக்கும் ஆதாரமானது. எனவே, சரியான முறையில் ஒவ்வொரு மனிதனும் அதன் அருமையறிந்து பயன்படுத்தி மகான்களாக வாழ வேண்டி நாட்களை வரிசைக்கிரமம் - அதாவது பூமிக்கும் அந்த வானொளிகளுக்கும் உள்ள துரமறிந்து பெயர் சூட்டிய விதம் நமக்கு வியப்பையூட்ட வல்லதாயுள்ளது.

தான் வசிக்கும் ஊருக்கருகிலிருந்த உயர்ந்த ஒரு மலைச் சிகரத்திலிருந்துகொண்டு ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் வானத்தைக் கூர்ந்து பார்த்துக் கிரகங்களின் இயக்க நிலைகளை ஆராய்ந்து கணக்கிட்டார். பூமியானது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றி வர 365 நாட்கள் - 1 வருடம் ஆவது போலவே, பூமிக்கும் மற்ற கிரகங்களுக்கும் உள்ளதுரத்தை அவர் துல்லியமாகக் கணக்கிட்டுக் கண்டறிந்தார். அவருடைய கணிப்பு இது.

29.5 வருடங்கள் - சனி
11.86 வருடங்கள் - வியாழன்
1.88 வருடங்கள் - செவ்வாய்
1. வருடம் - சூரியன்
0.62 வருடம் - சுக்கிரன்
0.24 வருடம் - புதன்
0.07 வருடம் - சந்திரன்

கால்டீபன், சூரியனை மையப்படுத்தி முதன்முதல் ஞாயிற்றுக் குரிமையாக்கினார். எனவே அது ஞாயிற்றுக்கிழமை எனும் பெயர் பெற்றது. பகலுக்குரியது ஞாயிறெனில் பகலோடு சேர்ந்த இரவுக்குரியது சந்திரன். சந்திரன், பூமிக்கு மிகவும் அருகிலிருப்பவன். ஆதலால் ஞாயிற்றுக்கிழமைக் அடுத்த கிழமை சந்திரனுக்கு உரிமை செய்யப்பட்டது. அது திங்கட்கிழமையெனப் பெயர் பெற்றது. சூரியனுக்கு கால அளவில் குறைவான மூன்றில் மிகவும் குறைந்தவனான சந்திரனைக் கவனித்து இரண்டாவது நாளுக்கு உரிமையானவனானார். கால்டீபன் அதற்குப் பிறகு ஏறு முகமாகவுள்ள மூன்று கிரகங்களில் குறைந்த கால அளவினைக் கொண்ட செவ்வாய்க் கிரகத்தை மூன்றாம் நாளாக திங்கட்கிழமைக்கு அடுத்து வைத்தார். நான்காவது நாளை இறங்கு வரிசையில் உள்ள புதனுக்கு உரிமை செய்தார். அதற்கு அடுத்து ஏறு வரிசை வியாழன் ஐந்தாவது நாளுக்கு உரிமையாளனானார். அதே வரிசையில் இருக்கும் ஆறாவது சுக்கிரன் (வெள்ளி) உரிமையாளனானதனால் வெள்ளிக்கிழமை எனப் பெயர் பெற்றது. கடைசியில் பூமிக்கு நெடும் தொலைவிலுள்ளது சனி, கடைசி நாள் சனிக்கிழமையெனப் பெயர் பெற்றது. இதே முறையை, கால்டீபன் ஒரு சக்கர வடம் போட்டு விளக்கியிருப்பதை நாம் தெரிந்து கொள்வதும் நல்லதே.



எனவே வாரத்தில் அடங்கியுள்ள நாட்களின் பெயர்கள் அனைத்தும் ஒரு மனிதனின் கற்பனை வானத்திலுள்ள இந்தக் கிரகங்களுக்கும் நாட்களுக்கும் எந்த ஒரு தெய்வீகச் சம்பந்தமுமில்லை. சூரியன் உதித்துப் பகலாக்குகிறான். சந்திரன் இரவில் வானில் தோன்றும் போது நிலவு காணுகிறது. எல்லா மக்களும் பொதுவாக இவற்றை அனுபவிக்கிறார்கள். தனிதனியாகச் சோதிடர்கள் சொல்வதுபோல் இந்தக் கிரகங்களோ நாட்களோ யாரையும் எதுவும் செய்வதில்லை. மக்கள் வாழ்க்கைக்கும், நாள் கோள்களுக்கும் உள்ள தொடர்பு பொதுவானது. நல்ல நேரமும் கிடையாது. நல்ல நாளும் கிடையாது. அதுபோன்றே கெட்ட நேரமும் கெட்ட நாளும் கிடையாது என்பது இதிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

மக்களின் பல்வேறு அலுவல்களின் நிமித்தம் கொடுக்கல், வாங்கல், உழைத்தல், ஒய்தல், உண்ணல், உறங்கல் முதலிய அனைத்துச் செயல்பாடுகளுக்கும் அவசியம் வேண்டிய காலக் குறிப்புகளுக்க நாள், வாரம், மாதம், வருடங்கள் தேவை மட்டுமேயன்றி மக்களை, ஆளும் உரிமை இந்த நாட்கள் கோட்களுக்கு இருக்கவே இல்லை. உள்ளம் சுத்தமில்லாத, உழைத்துண்ண உளங்கொளாத இந்தச் சுரவர்கத்தினரில் பராசரன், ஜைமிலி, வராகமிகிலர் போன்றவர்கள் பஞ்சாங்கமென்ற படு பாதகம் மக்களை அநியாயமாக இதனாலும் அடிமை கொண்டனர் என்று என்னைச் சொல்லவே வைத்துவிட்டனர்.

என்னுடைய சொற்களைக் கேட்க விரும்பிய நண்பனே உண்மையை அறவே ஒளித்து வைத்துவிட்ட ஒரே காரணத்தால் நாடு இன்றும் படும் அலங்கோலத்தை நாம் நேரில் காணலாம். உண்மையைப் பின்பற்றி நாடும் மக்களும் ஒழுகும் போதன்றி உயர்வடையாது.

சிந்தித்துப்பார் அமிர்தயோகம், சித்தயோகம், மரண யோகம், புத பகவான், சனி பகவான், சூரிய பகவான், ராகு காலம், கரி நாள், தனி நாள், குருட்டு நாள் எத்தனை பொய்களை எளிய மக்கள் மேல் சுமத்தி நாசபடுத்தி வைத்துள்ளனர், வருகின்றனர் என்பதைப் பற்றி எண்ணி சரியான முடிவுக்கு வா.

எளிய மக்களுக்கு என்ன வந்தது? இன்று, நம் நாட்டில் உள்ள வக்கீல்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள், இஞ்சினியர்கள்.

பேராசிரியர்கள், மற்றுமுள்ள மந்திரி பிரதானிகள் அனைவருமே இந்த நாள் கோள் எனும் பொய் வலையில் மாட்டிக் கொண்டு படும் அவத்தைக்கு அளவே கிடையாது. அதனால்தான் அறிஞர் பலர் இந்தப் பித்தலாட்டத்தை அந்தக் காலத்திலிருந்தே எதிர்த்து வந்துள்ளனர்.

கர்நாடக தேசத்தில் அண்மைக் காலத்தில் வாழ்ந்த பசுவேசுவரர் என்பவர் கூறினார்: "நாளின் பெயருக்கும் மனிதனின் நல்லது கெட்டதற்கும் இடையில் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

ஒரு நாளில் உள்ள நாழிகைக்கும், நிர்ணயம் செய்து கொண்டுள்ள நல்ல காரியங்களின் வெற்றி தோல்விகளுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

வருடத்தின் பெயருக்கும், அந்த வருடத்தில் உண்டாகும் பலா பலன்களுக்கும் இடையில் எந்தச் சம்பந்தமும் கிடையாது" என்று.

ஆனதனால் நல்ல உள்ளமுடைய ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாழிகையும் நல்லதாகவே உள்ளது. கெட்ட நேரம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. நாளிலும், நாழிகையிலும் தெய்வீக சக்தி உள்ளது என்று மக்களை நம்ப வைத்தவர்கள், ஜோதிடர்கள் என்று பேர்வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்கள், திருடர்கள் என்று நான் கூறினால் அதை மறுத்துக் கூற ஒருவனும் முன்வர மாட்டான்.

நாட்டுப்பற்றும், மனிதாபிமானமும் கடுகளவுமில்லாது தம்மை பிரம்மாவின் சிரசிலிருந்து பிறந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு சூழ்ச்சிக்காரக் கூட்டம் இன்றும் நாட்டை நாசப்படுத்தும் அதே போக்கில்தான் சென்று கொண்டுள்ளது. ஆயினும் என்ன? சத்தியம் வென்று தீரவே வேண்டும் என்று நாம் உண்மைகளை மேலும் தேடித் தீர வேண்டும்.

சாதியில், நான் பிராமணன் என்பவன் வேதத்தையே
விரோதித்தவனாகிறான்.

- வெ



மதங்கள்

லகில் உள்ள எல்லா மதங்களும் மனிதனை அவனிடமிருந்து திசை திருப்பி விடுவதாக உள்ளன. அவைகள் சொல்லுகின்றன, "கடவுளைப் பிரார்த்தியுங்கள், கடவுளை நம்புங்கள், அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்" என்று. ஆனால் நமக்குத் தெரிகிறது இந்த ஆயிரக்கணக்கான வருடங்களாக உலகைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கடவுள் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறார் என்றால் செங்திஸ்கான், தைமூர், நாதிர்ஷா, ஹிட்லர், ஸ்டாலின், ரீகன் போன்றோர் தேவையே இல்லையே. கடவுள் கவனித்துக் கொண்டிருந்தால் ஒரு ஹிரோவிமா, ஒரு நாகசாகிகளின் அழிவு ஏற்பட்டிருக்காது. இந்த மூவாயிரம் ஆண்டுகளில் மனிதன் ஐயாயிரம் சண்டைகளை உருவாக்கியிருக்கிறான். ஆகவே உலகை யாரும் நிச்சயமாக கவனிக்கவிலை.

எல்லாவிதமான வியாதிகளும் வளர்ந்து கொண்டே போகின்றன. புற்றுநோய், எய்ட்ஸ் வந்துவிட்டது. கோடிக்கனக்கான மக்கள் இத்தகைய நோய்களால் சிதைந்து போயிருக்கிறார்கள். இதைப்பற்றி கடவுளுக்கோ, மதத்தினருக்கோ எந்தவிதமான கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை.

அமைப்பு மனிதனை எல்லாவிதத்திலும் அழிப்பனவாகவே அமைந்துள்ளது. அவனை அது ஒரு இயந்திரமாக மாற்றிவிடுகிறது. நமது அனைத்து கல்விக்கூடங்களும் மனிதனின் இயல்பை மிக வேகமாக அழிக்கின்ற ஒரு தொழிற் சாலையாக உள்ளது. அவை தீக்கதிரை நட்டமடையச் செய்கின்றன, ஆத்மாவை கொன்றுவிடுகின்றன. மனிதனை இயந்திரமாக மாற்றிவிடுகின்றன. பிறகு மனிதனைப் பற்றிய கவலையை விட்டு விடுகிறது.

நன்றி : ஓசோ டைம்ஸ், ரஜினிஸ் பவுண்டேஷன்

தேசப்பிதாவின் வேதங்கள் பற்றிய
சீரிய சிந்தனைகள்

வ்வளவுதான் சிறந்ததாயினும் அறிவுக்கும் (கவனிக்க) ஒழுக்கத்திற்கும் பொருந்தாத எந்த விளக்கத்தையும் நான் ஏற்றுக்கொள்ள இயலாது.

வேதங்களின் தனிப்பட்ட தெய்வீகத்தன்மையை நான் நம்பவில்லை. பைபிள், குரான், செந்த் அவஸ்தா ஆகிய புனித நூல்களும் வேதத்தைப் போலவே ஆன்மீகத் தொடர்புடையவை என்று நான் கருதுகிறேன்.

இன்றைய சாஸ்திரிகளும், சங்கராச்சாரியார்களும் அவர்கள் எவ்வளவுதான் அந்த நூல்களில் ஆழமான புலமை பெற்றிருப்பினும் இந்து மதத்தின் புனித நூல்களைப் பற்றி மிகவும் துல்லியமான விளக்கம் கொடுப்பதாகக் கூறினால், அதை நான் கடுமையாக மறுக்கிறேன். இதற்கு மாறாக இந்தப் புனித நூல்கள் பற்றிய நம்முடைய அறிவு பெரும்பாலும் குழப்பமான நிலையில் உள்ளது என்பதை நான் நம்புகிறேன். ஏனெனில் அஹிம்சையிலும், சத்தியத்திலும், பிரம்மச் சாரியத்திலும் எவன் முழுவெற்றி அடைகிறானோ, பொன்னாசை, மண்ணாசை ஆகியவற்றை எவன் முழுவதுமாக துறக்கிறானோ அவன்தான் சாத்திரங்களைப் பரிபூரணமாக உணர்ந்து கொள்ள முடியும், என்னும் முதுமொழியை நான் உறுதியாக நம்புகிறேன்.



குரு, சிஸ்டிய பாரம்பரியத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனாலும் இந்தக் காலத்தில் லட்சக்கனக்கானவர்களுக்குத் தனித்தனியாக குரு இருக்க முடியாது. ஏனெனில், ஆழ்ந்த அறிவுத்தாகத்தையும் பரிபூரணத் தூய்மையினையும் ஒருசேரக்கான முடியாது. குறிப்பிட்ட ஒரு மதத்தினுடைய உண்மையினை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டிய தில்லை. ஏனைய பெரிய மதங்களைப் போலவே இந்து மதத்தின் அடிப்படை கொள்கைகளும் என்றும் மாறாதவை.

கோயில்களில் நடக்கும் குறைபாடுகளை நான் அறிவேன். சொல்லொணாத குறைபாடுகள் பல இருந்தபோதிலும் அவற்றை நான் நேசிக்கிறேன். முழுக்க முழுக்க நான் சீர்திருத்தவாதியே. ஆயினும் என் சீர்திருத்த உணர்வு இந்து தர்மத்தின் மிகச்சிறந்த குறிக்கோள்களைப் புறக்கணிக்கவில்லை. விக்கிரக ஆராதனையை நான் மறுக்கவில்லை. எனினும் விக்கிரகமானது என்னுள் எந்தவிதமான வழிபாட்டு உணர்ச்சியினையும் எழுப்பவில்லை.

நேஷனல் புக் டிரஸ்ட்டின், “எது இந்து மதம்” என்ற நூலிலிருந்து தமிழில் முனைவர், பழனி அரங்கசாமி.

நன்றி மஞ்சளி

பிரார்த்தனைகளால் பலன்
இருக்கிறதா?

பிரார்த்தனைகளால் பலன் இல்லை என்கிறது ஜான் பெம்ப்ள் : பெலின் ஃபௌன்டேஷன்

11 கோடி ரூபாய் செலவிட்டுச் செய்த ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ள இந்த முடிவு, தெய்வ நம்பிக்கை உள்ளவர்களை கொஞ்சம் தடுமாறச் செய்யும். குருமார்களையும் சாமியார்களையும் ஏதாவது சமாதானம் சொல்லித் தப்பிக்க வைக்கும்.

பிரார்த்தனைகளின் உதவியால் நோய் நீங்குமா, நிவாரணம் கிடைக்குமா ? சாகக் கிடப்பவர்கள் பிழைத்துக் கொள்வார்களா? என்பதைக் கண்டுபிடிக்க மிகப்பெரிய அளவில் 3 வருடங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து மேற்கூறிய முடிவை அடைந்துள்ளது.

1800 பைபாஸ் சர்ஜரி நோயாளிகளுக்கு இரண்டு கிறித்துவ சர்ச் குழுக்கள் 2 வாரங்கள் தொடர்ந்து பிரார்த்தனை நடத்தியது. ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக 2 வார பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகள் அறுவைச்சிகிச்சைக்கு உட்படும் முன்னரும், பின்னரும் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. முடிவு :

பிரார்த்தனை செய்யப்பட்டவர்களிலும், செய்யப்படாதவர் களிலும் எந்தவிதப் பெருத்த வேறுபாடுகள் காணப்படவில்லை. பிரார்த்தனை வழங்கப்பட்டவர்கள் எந்த விதத்திலும் வழங்கப் படாதவர்களிலிருந்து பெரிய முன்னேற்றத்தை அடையவில்லை.

இதில் அதிர்ச்சிமிக்க செய்தி என்னவென்றால், தனக்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்ட நோயாளிகள் முன்னேற்றத்திற்குப் பதிலாக மோசமாகத்தான் போனார்கள்.

இத்தனைபேர் கூடி நமக்கு பிரார்த்தனை செய்யப் போகிறார்களே! நமது நோயின் தீவிரம் அதிகமோ! என்ற கவலையிலேயே அதிக டென்சன் ஆகி அதிகப் பாதிப்புக்கு உள்ளாகி விட்டார்களாம்.

நன்றி : மஞ்சரி, டிசம்பர்
கவிஞர் வெள்ளியங்காட்டான்


புரட்சிக் கவிஞராய்ப் புறப்பட்ட
வெள்ளியங்காட்டான் அவர்களின் இன்னொரு
பரிமாணம் இந்த நூல். மதப் போர்வை
போர்த்துக் கொண்டு உலவும் பல புராதனச்
சொற்களுக்கு, மதச் சார்பற்ற, கடவுள் சார்பற்ற,
புதிய விளக்கங்களை, உண்மையான தத்துவ
விளக்கங்களை, கவிஞர் தமது வடமொழிச்
சாத்திரப் புலமைகொண்டு இந்நூலில்
விளக்கியிருக்கிறார்.

பலப்பல சமயத் தொடர்களுக்கு மெய்விளக்கம்
தருவதற்கு, ஏராளமான உபநிடதங்களையும்,
சமய சாத்திரங்களையும், தமிழ் நூல்களையும்
ஆதாரமாகக் கொண்டு மேற்கோள் காட்டுகிறார்.
'சோதிடம் சுதந்திர மக்களுக்கு மாட்டப்பட்ட
விலங்கு' என்பது கவிஞரின் தெளிவான முடிவு.

கவிஞர் புவியரசு



"கவிஞர் வெள்ளியங்காட்டானின்
கருத்தியல் சிந்தனையின் மற்றொரு
புதிய பரிமாணம் புது வெளிச்சம்.

கவிதை மொழியில் சமூகத்தின் சகல
பிம்பங்களையும் விசாரணைக்கு
உட்படுத்தியவர். கட்டுரையின் ஊடே
கனத்த உள்ளீடுகளால் கவனப்படுத்துகிறார்.

இந்நூல் இறையியல் சார்ந்த
கருத்துருவாக்கமல்ல... வாழ்வியலின்
இயல்பு நெறியியல் சார்ந்த அறிவுத் தேடல்".

தங்க. முருகேசன்