உள்ளடக்கத்துக்குச் செல்

புது வெளிச்சம்/ஜோதிசம்

விக்கிமூலம் இலிருந்து

22

ஜோதிசம்


"வேத தர்ம சாஸ்திரங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை” என்கிறார் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள். செப்டம்பர் 1987 தினமணி நாளிதழில் அவருடைய அருளுரை - (ஆம்அந்த உரை தினமணி ஆசிரியருக்கு அருளுரை)யின் தலைப்பில் படித்தறிந்தேன். பாதுகாக்கப்பட வேண்டியவை வேத தர்ம சாஸ்திரங்கள் மட்டும் தானா? மக்கள் தேசம், வாழ்க்கை, கலாச்சாரம், அமைதி, ஆனந்தம் என மற்றுமுள்ள அனைத்தையும் விடப் பாதுகாக்கப்பட வேண்டியவைதானா இந்த வேத தர்ம சாஸ்திரங்கள்?

அப்படியே அவர் அவற்றைப் பாதுகாத்துக் கொண்டு வரட்டும் யாரும் வேண்டாம் எனச் சொல்லவே மாட்டார்கள். ஆனால் அந்த வேதம் தர்மசாஸ்திரங்களைத் தமிழர்கள் எதற்காகக் காப்பாற்றுவதில் பங்கு பற்ற வேண்டும்? என்பதுதான் எனக்கு விளங்குமாறில்லை.

தமிழ்நாட்டை மட்டுமன்று: காஸ்மீரத்திலிருந்து கன்னியாகுமரிவரை, இந்த வேத தர்மசாஸ்திரங்களை நம்பிப் பின்பற்றி இந்து மதத்தினரான நம்மை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அந்நியர்களுக்கு அடிமைப்படுத்திவைத்தது என்பது பொய்யல்லவே. மனித வாழ்வையே சர்வநாச்ப்ப்டுத்தி இன்றளவும் ஏன் நாளைக்கும் கூட அப்படி வைத்திருக்கவே இன்னும் காத்திருக்கிறது என்பதும் பொய்யாகாதே!

ஆம்! இது அருளுரையன்று, தலையிலிருந்து கால்வரையும் தூய மருளுரை என்று சாந்தோக்கிய உபநிசத்து சாட்சி சொல்கிறது

ஜனத்குமாரரை அணுகி நாதமுனிவர் வேண்டிக் கொள்கிறார்!

‘ஐயனே! உபதேசம் செய்தருளும் என்று உமக்கு ஏற்கனவே என்ன தெரியுமோ அதைத் தெரிவியும்; அதற்குப் பின் உமக்கு உபதேசிப்போம்” என்கிறார், ஜனத்குமாரர்.

‘ஐயனே ருக்வேதம் தெரியும்; யஜுர்வேதம், ஸாமவேதம், நான்காவதாக அதர்வன வேதம், ஐந்தாவதாக இதிகாச புராணம், வேதங்களின் வேதமாகிய இலக்கணம், பிதிருகல்பம், கணித சாஸ்திரம், சகுன சாஸ்திரம், காலநிர்ணயம், தர்க்க சாஸ்திரம், நீதி சாஸ்திரம், நிருக்தம், சிட்சையாகிய வேதநூல் பூதவித்காத, போர்முறை, எல்லாம் கற்றுள்ளேன். ஐயனே!

'ஆயினும் நான், ஐயனே! மந்திரங்களை மட்டும் அறிந்தவனேயன்றி ஆத்மாவை அறிந்தவனல்லன். ஆத்மாவை யறிந்தவனே சோகத்தைக் கடப்பான் என்று தேவரீரைப் போன்றவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். நான் சோகத்திற்குட் பட்டிருக்கிறேன். ஐயனே என்னைத் தேவரீர் சோகத்தைத் தாண்டும்படி செய்விக்க வேண்டும்' என்றார்.

நாரதரின் இந்த வேண்டுகோளுக்கு ஜனத்குமார் சொல்வது 

“ஒரு சிறிய வார்த்தை நீர் எதெது கற்றுள்ளிரோ அதெல்லாம் வெறும் பெயர்கள்தாம். ஆம் வெறும் பெயர்கள்தாம்' என்று கூறும் இந்த வேத, தர்ம சாஸ்திரங்களைத்தான் சிருங்கேரி ஜகத்குரு பூரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் கூறும் வேத தர்ம சாஸ்திரங்கள் என்பதை தமிழ் மக்கள் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது. ஏனெனில் இவைகள்தான், நமது சமத்துவ சகோதரத்துவ சுதந்திரத்தின் மகா கொடிய விலங்குகள். இதிலிருந்து விடுபடாதவகையில் நாம் மீட்சியடைய மாட்டோம் என்று கூறிவிட்டு இனி எழுத எடுத்துக்கொண்ட விசயத்துக்கு வருகிறேன். அதன் பெயர் ஜோதிஸம்.

நான்கு வேதங்களின் அங்கங்களாகவுள்ள வியாகரணம், சிட்சை, நிருத்தம், சந்தஸ், கல்பம், ஜோதிஸம் எனும் ஆறும் நம்மை பிடித்து பீனிக்கிற பீடைகள். இவற்றில் கடைசிப் பீடைதான் இந்தச் ஜோதிசம். மகா கொடிய மலைப் பாம்பின் வாயில் சிக்குண்ட மான்குட்டிபோல் இந்த ஜோதிசத்திடம் நாம் மாட்டிக் கொண்டோம், அல்லது மாட்டப்பட்டுள்ளோம் என்பது அறிவு பூர்ணமான உண்மை.

சூரியன், சந்திரன் இரண்டும் நாமெல்லாரும் அறிந்த ஜடப்பொருள்கள் புதன், சுக்கிரன் , செவ்வாய், வியாழன், சனி வானில் துாரத்தில் உள்ள கிரகங்கள். ராகு, கேது இரண்டும் பெயரளவில் உள்ளவைகள். எல்லாமே ஜடப்பொருள்கள்தாம்.

உலகிலுள்ள எல்லா மக்களையும் விட்டுவிட்டு இந்து மதத்தினரான நம்மை மட்டும் பிடித்து ஆட்டிப் படைக்கும் சக்தி இவைகளுக்கு எங்கிருந்து வந்தது?

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கர்கள் விண்வெளிக்குச் சென்று இதே சந்திரன் மேல் நின்று, காரி உமிழ்ந்து மேலும் அசுத்தப்படுத்திவிட்டு அந்த மண்ணையும் எடுத்துக் கொண்டு வந்தது உலக மக்கள் மறந்துவிடவில்லை.

ஒவ்வொரு திருமணமும் ஜோதிசம் பார்த்து பஞ்சாங்கம் பார்த்து முறைப்படி புரோகிதரே நடத்தி வைத்தவைகளில் பத்துக்கு ஐந்து விழுக்காடு 3, 4 மாதங்கள் முடியும் முன் அமங்கலமாகியோ மண்ணெண்ணைக்கு காதியாகியோ முடிந்து மூழ்கிப்போவதை நாம் இன்று நேரிலும் பத்திரிகை வாயிலாகவும் காண முடிகிறது.

ஒவ்வொரு மனிதனையும் ஆட்டிப்படைக்கும் வல்லமை இந்த ஜடப்பொருளுக்கு இருப்பதுண்மையாயின் அது எல்லா நாட்டவர்க்கும் பொதுவாகவன்றோ இருக்கவேண்டும். இந்த அவலங்களில்லாது இன்றும் எத்தனையோ நாடுகள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் மக்களை வாழ வைத்துக் கொண்டிருப்பதுவும் கண் கூடுதானே.

'உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந் தானுள்ளிய துள்ளப் பெறின்' எனுங் குறளையும் 'தன்னை அறியாது தானே கெடுகின்றான். தன்னையறியத் தனக்கொரு கேடில்லை' எனும் திருமந்திரத்தையும் நம்பி நடந்தால் இந்த கிரகப் பொய்கள் பெட்டிப்பாம்புகளாகி அடங்கிவிடுகிறது என்று என்னைப் போன்றுள்ள அனைவரும் அறிவர். ஆனால் பகுத்தறிவில்லாத பாமர மக்கள் ஜோதிட மூடர்களின் போசகர்களாகி நம்பி நடந்து இன்று படும் துன்பங்களை தொகுத்துக் கூற ஒரு எண் கிடையாது என்று கருத வேண்டியுள்ளது.

ஜோதிசத்தில் நம்பிக்கையிருந்திருந்தால் திருவள்ளுவரோ, திருமூலரோ மனித மேன்மைக்குரிய பாடல்களைப் பாடி இருப்பார்களா? உபநிசத்துக்கள்தான் உண்டாயிருக்குமா? ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிவிலா ஊக்கமுடையானுழை' எனும் குறட்பா தோன்றியிருக்குமா? இவ்வாறு மேலும் நாம் தர்க்க ரீதியாக அலசி ஆராய்ந்தால் இந்த ஜோதிசம் பழங்கால ஆரியர்கள் பாமர மக்களிடம் பறித்துத் தின்பதற்காகச் செய்ததென்று உறுதியாகக் கூறலாம். இதில் துளி ஐயமும் யாருக்கும் வேண்டியது இல்லை. அளவற்ற ஆதாரங்கள் எண்ண எண்ண என் உள்ளத்தில் உதித்துக் கொண்டே உள்ளது.

தர்க்க ரீதியாக நான் எடுத்துக் காட்டும் ஆதாரங்கள் சரியல்ல எனின் விட்டுத் தள்ளுங்கள். ஆம். தமிழ் வல்லுநர்கள் மறுக்கவே முடியாத ஆதாரங்களும் வேண்டிய அளவு என்னால் எடுத்துக்காட்ட முடியும். ஜோதிசத்தைக் கூடாதென மறுத்து ஒதுக்கியவர் ஆதிகாலாடி சங்கராச்சாரி என்றால் நீங்கள் முகம் சுளிப்பீர்கள், நம்பவும் மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் சிந்தனையாளர்களல்ல. ஆயினும் என்ன? நான் இங்கு உண்மைகளை மட்டுமே எழுதுகிறேன். நீங்கள் நம்பாவிட்டாலும் உங்களுடைய சந்ததிகள் நம்பித்தானாக வேண்டும். சங்கராச்சாரியின் வாயிலிருந்து அவசியத்தை முன்னிட்டு வந்த சூத்திரம் இது.

"அத்யாஷ்டமிதி நவமிதி சதுர்தசிதி ஜோதிஷ்க வாஜோ பவசந்தி பக்த்யா! ஸ்ருதேஸ்த்வஹோ தத்துவ மசிதி வாக்யம் ந விஸ்வ சம்த்யத்புதே வேத தேவா இந்தச் சூத்திரத்தின் பொருள் இதுவே இன்றைய தினம் அஷ்டமி, நாளைய தினம் நவமி, இன்று சதுர்தசி. என்கிற ஜோசியர்களின் சொற்களைக் கேட்டு அதை அப்படியே நம்பி உபவாசம் மேற்கொண்டு ஒழுகுகின்றனர் இந்த மக்களனைவரும்! ஆனால், சுருதியின் “தத்துவமசி” எனும் வாக்கியத்தில் நம்பிக்கை வைத்து நடக்காமலிருப்பது உண்மையாக ஆச்சரியமாகவுள்ளது.

தமிழ் விற்பன்னர்கள் இதைச் சற்று மனதிற்கொண்டு சிந்தித்துச் செயல்படின் குதிரைக்கு கால் தளையிட்டிருப்பது போன்ற இந்தக் கொடிய ஜோதிடத்தளையிலிருந்து மக்களை விடுவித்துவிடலாம்தான். ஆனால் தமிழ் நாட்டில் கிளிப்பிள்ளை விற்பன்னர் தானேவுள்ளனர். அவர்களும் காசுக்காக வேசங்கட்டிக் கொண்டல்லவா இன்று மேடையேறுகிறார்கள். பாவம் அவர்கள் மீது நான் தவறு சுமத்தமாட்டேன்.

எட்டிக்காய் அடியிலிருந்து நுனிவகையில் உள்ளே வெளியே உள்ளதனைத்தும் கசப்பது போல் இந்தச் சோதிசம் முழுவதுமே முழுப்பொய் என்றுரைத்தால் அது உண்மையை அஞ்சாமற் சொன்னதேயாகும். இந்த வாக்கியத்தை நிரூபணம் செய்ய இங்கு இரண்டு சாட்சியங்களை எடுத்து வைக்கவும் முயல்கிறேன்.

முதலாவது சாட்சி; கிரகங்களின் இயக்க நியதிகளில் சில மாறுதல்கள் ஏற்படும்போது நம்முடைய ஜோதிடர்கள் சுமார் இருபது வருடங்களுக்கு ஒரு தடவை, அறிவு சூனிய வாதோன்மத்தர்களாவது உலகம் ஏற்கனவே நேரில் கண்டிருக்கிறது. கடந்த 1962 பிப்ரவரி மாதத்தில் உண்டான அஷ்டக்கிரகங்கள் ஒன்றிய நிலையின் விளைவு மிக பயங்கரமாக இருக்கும் என்று நமது ஜோதிடர்கள் ' டாம் 'போட்டு எவ்வளவு பயங்கரத்தையூட்டினர் என்பதை எண்ணிப்பாருங்கள். அவர்கள் ஊட்டிய பயங்கரம் என்ன ஆயிற்று? ஒன்றுமே ஆகவில்லை என்பதை நாமனைவரும் கண்டிருக்கிறோம்.

இத்துடன் இந்தச் ஜோதிடர்கள் நின்றார்களா? நாம் சொன்னது பொய்யாய்விட்டது என்று கூச்சம் அல்லது வெட்கமாவது இருந்ததா? எதுவும் கிடையாத சோற்றுப் பிண்டங்கள்தான் இவர்களனைவரும் என்பது நமக்குப் புரிகிறதல்லவா?

இஃதொன்றுடன் இவர்கள் நின்றுவிடவில்லை, மீண்டும் 1982ஆம் ஆண்டும் முரசு கொட்டினர் 'உலகம் அழிந்து விடப் போகிறது; கிரகங்கள் நம்மைச்சர்வ நாசம் விளைக்க இந்த நாளைத் தேர்ந்தெடுத்துள்ளதை நாங்கள் அறிந்து கூறுகிறோம்'. என்று.

இந்தச் சுயநல மாமேதைகள் புலி வருகிறது புலி வருகிறது என்று போட்ட கூக்கூரல் வீணாகும் என்பது அவர்கள் அறிந்தே இருந்தனர். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் உலகத்திற்கு எந்த ஒரு கெடுதலும் ஏற்படாமல், தாங்களே மிகவும் முயன்று முறையாகப் பிரார்த்தனைகள், ஜபங்கள், உருவ வழிபாடுகள், யாகங்கள் என மக்களைக் கொண்டு நடத்திவைத்து எல்லா அதிஷ்டங்களும் நீக்கிவிட்டதாகவும் வெற்றி முரசு கொள்ளச் செய்தனர்.

1980 ஜனவரி மாதம் நடந்த லோக் சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனதா கட்சியைப் பற்றி மகத்தான எதிர்கால பலாபலன்களைச் சொல்லாமல் இந்த வெட்கமற்ற ஜோதிடர்களால் சும்மா இருக்க முடியவில்லை.

"ஜனதா சர்க்கார் மேலும் அமோகமாக உறுதிநிலை பெற்று நாட்டை முன்னேற்றி மக்கள் நலனை முழுமையாக்குவதுவுமன்றி உலகம் காணாத புகழுக்கும் உரியதாகும்" என்றெல்லாம் தவளைக் கூச்சலிட இவர்கள் தவறவே இல்லை; ஆனால், இவர்கள் கூறியது அனைத்தும் பொய்யாகி ஜனதா சர்க்கார் குறைப்பிரசவமாகிப் போனதை உலகமே கண்டது என்று நான் நாட்டு மக்களுக்கு நினைப்பூட்டுகிறேன்.

தேசநலன் கருதாது வயிற்று பசியை உழைக்காது உண்டு தீர்க்கும் ஒபாராசர்ன், ஜைமினி, வராகமிகிரன் போன்ற அரைகுறை வான சாத்திரக்காரர்கள், இதை சமணர் காலத்தினிலேயே சத்தமும் சோதிடமுமென்றா இவை பிதற்றுப் பித்தரில் பேதையாரில் எனக் கண்டிக்கப்பட்டிருக்கிறது. எங்கேயோ வானத்தில் இருக்கும் ஒரு கிரகம் ஒரு மனிதன் மீது ஆட்சி செய்கிறது என்பதறிவீனம் என்று சேக்ஸ்பியர் ஜோதிடத்தைக் கண்டித்திருப்பதாகவும் கேள்விப்படுகிறேன்.

இறுதியாக நான் சொல்வதிது “சதாப் ஹி சர்தேக பதேசு வஸ்துசு பிரமான மந்தஃகரண பிரவிர்த்தியே" - சத்தியசீலனுக்குச் சமுசயமுண்டானால் அவனுடைய உள்ளம் சொல்லுவதே அறம் என்கிறபடி ஜோதிடம் சுதந்திர மக்களின் அறிவுக்கு மாட்டப்பட்ட விலங்கு எனச் சொல்லி முடிக்கிறேன்.



எங்கு சுதந்திரம் இருக்கிறதோ அங்கு தர்மம் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், சுதந்திரத்தின் தரம் குறைந்து விடும். காசு தேடும் நூல்களுக்கு மட்டும் ஒரு மொழி இடம் தருமானால், அம்மொழி மாசுபடிந்து விட்டதாகும்.

-வெ

மதம், நம்மை கை விட்டாலும் ஒழுக்கம் நம்மை ஒன்று சேர்த்து வாழவைக்கும்.

- ஸ்ரீ கண்டய்யா

தெளிவில்லாத ஞானம் இருமடங்கு மூர்க்கத்தனமானது.

- சம்பாஜோசி

"https://ta.wikisource.org/w/index.php?title=புது_வெளிச்சம்/ஜோதிசம்&oldid=1637796" இலிருந்து மீள்விக்கப்பட்டது