உள்ளடக்கத்துக்குச் செல்

புது வெளிச்சம்/மூன்று அக்கினிகள்

விக்கிமூலம் இலிருந்து

21




மூன்று அக்கினிகள்


ஆப்ரகாம் லிங்கன் கூறிய பழமொழி ஒன்று என் உள்ளத்தில் ஒலிந்து கொண்டே உள்ளது. அதை இன்று இங்கே எழுதிவிட எண்ணுகிறேன். பலரைச் சில காலம் எமாற்றலாம்; சிலரைப் பலகாலம் ஏமாற்றலாம்; ஆனால், எல்லாரையும் எல்லாக் காலங்களிலும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதுதான் அது. அனுபவ ரீதியான உண்மையை வெளிப்படுத்தும் பழமொழி இது என்றுதான் நான் மறக்காமல் உள்ளத்தில் அதைப் பாதுகாத்து வைத்திருந்ததுவும் ஆனால், இன்று சிந்தித்துப் பார்க்கும் பொழுது என் நம்பிக்கை வீண் என்று தெரிகிறது.

ஆயினும், அமெரிக்கர்களின் இயல்பில், இந்தப் பழமொழி

உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், நமது பாரத சமுதாயத்தில் இது நடைமுறைக்கு இன்றுவரையும் பொருந்தி வரவே இல்லை. உதாரணம் வேண்டுமெனில், இந்தக் கட்டுரையின் தலைப்பே போதுமானது என்று சொல்ல விரும்புகிறேன்.

மூன்று அக்கினிகளின் பெயர்கள் : காருகாபத்தியம், ஆகவனியம், தச்சினாக்கினி எனப்படுகிறது. இவற்றின் பெயர்கள் எதுவாகவேனும் இருக்கட்டும்; இவற்றைப் பயன்படுத்திய வகைகள் எவையாக வாயினும் இருக்கட்டும். பிறகு அவையனைத்தும் அவசியமாயின் சிந்திக்கலாம். இப்போது, இம்மூன்று அக்கினிகளையும் ஒரு மனிதன் அறிந்திருக்க வேண்டும்; அதை அக்காலத்தில் அறிந்திருந்தவர்கள் மற்றவர்களுக்கு, அவற்றை விளக்கி அறிவித்திருக்க வேண்டும். இதை அவர் செய்யாது மறைத்தனர். மறைத்ததும் அன்றி இந்த அக்கினிகளின் வாயிலாகவே தங்கள் போக வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் அமோகமாகப் பெற்று அனுபவிக்க முதன்முதலில் அசுரர்களையே சொக்கட்டான் காய்களாக வைத்து ஆட்டம் காட்டினர். அதே வித்தையை அதே விதமாக மற்ற தம் சந்ததிகளுக்கும் கற்பிக்கும் நல்லிடமாகவும் செய்து கொண்டனர்.

'துவிஜர்கள் (இருபிறப்பாளர்கள்) பரமாத்மாவை அக்கினியில் பூஜிக்கின்றனர்', எனும் வாக்கியத்தை நாம் இங்கு நினைவுக்குக் கொண்டு வந்து விடுவது முக்கியம். பரமாத்மாவை - கண்ணால் காண இயலாது. தன்னுள் மறைந்துள்ள ஆத்மாவாகிய தெய்வத்தை அக்கினியின் உதவியால் தம்மைக் காப்பாற்றிக் கொள்கின்றனர் என்பதுதான் இதன் உண்மைப் பொருள்.

பிரமம், தெய்வம், பூதம், பிதிர் (தந்தை வழி) தோன்றியவை மானுடம். இவர்களைக் குறித்துச் செய்யப்படுவதுதான் யாகங்களாம். இவற்றுள் வேதமோதல் பிரமயாகம், ஒமம்பிதிர்யாகம், இரப் போர்க்குணவு முதலியன ஈதல் மானுடயாகம்.

யாகங்கள் ஆக மொத்தம் பதினெட்டு. அந்த யாகங்களின் பெயர்கள் வருமாறு : சோதிட்டோமம், அங்கிட்டோமம், உத்தியம், சோடசி, வாசபேயம், அத்திராத்திரம், சோமயாகம், சாதுர் மாசியம், பவுத்திகமேதம், செளத்திராமணி, புண்டரீகம், அங்கிசயன், இராசசூயம், அச்சவமேதம், வீச்சுவதித்து, பிரமமேதம், பிரணவ பேதம், பசு பந்தம்.

ஒவ்வொரு யாகத்துக்கும் நாட்களின் கால அளவுகள் உண்டு. மந்திரங்கள் தனித்தனி முறைகள் விதிகள் இன்னும் என்ன வெல்லாமோ இருக்கும். அரசனுக்குப் பின்புறம், முன்புறம், வலபுறம் குழிகள் தோண்டப்படும்.

இதில் அரசனும் அரசியும் உக்கார வசதி செய்து வைக்கப்பட்டிருக்கும் இவர்கள் முதுகுப்புறம் அவ்வவ் யாகத்துக்குரிய விதிமுறைகள்படி அளவிட்ட குழியில் முதல் சமித்துக்கள் போட்டு நெருப்பு மூட்டி இரண்டு பேர் இரண்டு நெய் கலயங்களை அருகில் வைத்துக் கொண்டு அகப்பையில் முகந்து மந்திரம் சொல்லிக் கொண்டு ஊற்றுவார். அடுத்தவர், அடுத்த மந்திரம் சொல்லிக் கொண்டு நெய் ஊற்றுவார். அந்த மந்திரங்கள் முடிந்து அதிலிருந்து எழுந்த நெருப்பை முன்புற முன் குழியில் போட்டு முழக்கி நெய்யை ஊற்றிக்கொண்டே மந்திர கோசம் செய்வர். இது முடிந்தால் வலதுபுறம் குழியில் இதே கதை பின்புறமுள்ள குளி நெருப்புக்குப் பெயர் காருகாபத்தியம் முன்புறமுள்ளது ஆர்வ நீயம், வலது புறமுள்ளதால் பெயர் தச்சினாக்கினி என்பதுவாம்.

இவ்வாறு செய்யும் யாவும் முடியும் காறும் அரண்மனையில் இராச போஜனம். எல்லாம் அவர்களே அவர்களின் விருப்பத்திற்கும் சுவைக்கும் பொருந்தத் தயாரித்துக் கொள்வர். 'பிராமண போஜனம் பிரிய' என்று அக்காலத்திலேயே ஜனங்கள் இந்த விருந்தை அன்புடன் அளித்துப் பாராட்டவும் மறக்கவில்லை.

கடைசியில் யாகம் முடிந்து மங்களாசாசாம் கூறி தத்தம் இருப்பிடங்களுக்கு போகும் போது அரசனுடைய கஜானாவும், பண்டகசாலையும் சம்பூர்ணமாக காலி செய்து விட்டுத்தான் புறப்படுவார்கள். இவ்வளவு சிரம சாத்தியமாக நாட்கணக்கில் விரதமிருந்து யாகம் முடிவு பெறச் செய்து தான தருமம் பண்ணிய அரசனுக்கு என்ன பயன் ஏற்பட்டது எனில் வீண் சிரமமும், பொருளிழப்பும் தவிர வேறில்லை. ஆயினும் அரசனுடைய மனம் நிம்மதியுண்டாக எந்த அளவு அவசியமோ அந்த அளவு வெறும் நம்பிக்கை மட்டும் ஊட்டப்பட்டிருக்கும். நடைமுறைக்குச் சம்பந்தப்படாத காரண காரிய மற்ற வெறும் சடங்குகள், வீண் செலவும் சிரமங்களும் என அறியாது பகல் கனவில் அரசனையும் மக்களையும் இருக்கவைத்து விட்டு வேறு ஏமாந்த மன்னர்களுக்கு அவர்கள் வலைவீச சென்று சேர்வர். இதுதான் இந்து மதத்தின் இந்து அரசர்களின் பண்டைக்காலத்தின் சாதனைகள். குதிரைகள் வாங்கி வர அரசன் பணம் கொடுத்து அனுப்பினால் பிராமண மந்திரி துரமான இடம் போய்ச் சேர்ந்து சிவனுக்குக் கோயில் கட்டிக் கொண்டாடி விட்டு வந்த நிகழ்ச்சிகளும் கூட இந்தத் தமிழ்நாட்டில் வரலாறு நிகழ்ச்சியாக உள்ளது. யாகம் செய்வது, கோயில் கட்டிக் கொண்டாட்டம் போடுவது தவிர நாடும், மக்களும் என்ன ஆகிறார்கள் என்ற பிரச்சனைக்கே இவர்கள் இடம் கொடுக்கவில்லை. அப்படி வேறெதுவேனும் இருந்திருந்தால் ஒரு அரசனுடன் இன்னொரு அரசனைச் சண்டைக்குத் தயார் செய்வது; சாவதற்குக் களம் கோலுவதாகவே ஆகும்.

அரைக்குடம் தழும்புவதைப் போல வேலையில்லா இவன் காலத்துக்குதவாத விவகாரத்தை இழுத்துப் போட்டுக் கொண்டு என்னவெல்லாமோ கிறுக்குகிறான் என்று யாரும் ஆராயாது என்னைப் பற்றி முடிவுகட்டிவிட வேண்டாம். நான் மட்டும் அல்ல, ஒவ்வொரு அறிஞனும் ஒவ்வொரு காலத்தில் இந்த அவல ஆண்டவன், அவல மதச் சடங்குகளைப் பற்றியும் கண்டித்துக் களைந்தெறிய முயன்றிருக்கிறான் என்பதற்கும் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

வேதகாலத்திலிருந்தே உபநிசத்துக்களை மறைத்து வைத்துவிட்டு, ஒவ்வொரு உண்மைக்கும் வேறு போலி உண்மையைப் பொருத்தி உண்மைபோல் காட்டி ஆரியரல்லாத மக்களை நாசம் செய்வதை முதலில், அதாவது வேத காலத்திலேயே எதிர்த்தவர் பிரகஸ்பதி என்று 1982 ஜனவரி 'கஸ்தூரி' பக்கம் 87ல் 'பழமையான பாரதத்தில் தார்மீக எதிர்ப்புகள்' என்ற தலைப்பில், ஆர்.டி.எக்டே என்பவர் இந்த எதிர்ப்புகளைப் பற்றிக் கட்டுரையில் விவரிக்கிறார். 'ருக் வேதத்திலேயே இதற்குரிய குறிப்புகள் உள்ளதெனவும்' அவர் எடுத்துக் கூறுகின்றார். அதில் முதல் பாராவின் கடைசி வாக்கியம் இது : இவ்வாறு உண்மைக்கு மாறுபட்டு ஜாதி மதங்களைப் பிரிவினை செய்து ஏமாற்றுகிற வேதியர்களை எதிர்த்துப் பிரசாரம் செய்தவர்கள் மூன்று பிரிவில் அடங்குவர். முதலில் எதிர்ப்பு தெரிவித்தும் பிரகஸ்பதியின் தலைமையில் போராடினவர்களான பார்கஸ்பதர். அடுத்துத் தொடர்ந்து நீண்ட காலம் எதிர்ப்பு தெரிவித்தவர்கள், உலகாயதர். அதன்பிறகு சார்வாகர்ம் தலைமையில் அந்தப் போராட்டம் உச்சகட்டத்திற்குச் சென்றது. சார்வாகர் கேள்விகள் வேதியர்களை அயரச் செய்வதாயிருந்தது.

சார்வாகரின் பிரதான எதிர்ப்பு, அர்த்தமில்லாத வைதிக சம்பிரதாயங்களிலிருந்து மக்களை விடுவிப்பதாக இருந்தது. சார்வாகரால் தொடுக்கப்பட்டக் கேள்விகள் இவ்வாறிருந்தன. (பக்கம் 83 - 84).

"சுவர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை. அதுபோலவே பரலோகத்துக்கு இங்கிருந்து போகும் ஆத்மாவும் இல்லை. பிரம்ம, சத்ரிய, வைசிய, சூத்திரர் எனப்படும் நான்கு வருணமும், பிரம்மச்சாரியமாகிய நான்கு ஆஸ்சிரமங்களும் எந்த ஒரு பயனையும் தரமாட்டாது. அக்னி ஹோத்திரம் (யாகங்கள்) வேத மந்திரங்கள், சந்நியாச வேசங்கள் எந்தப் பயனையும் அளிக்காது. நெற்றியில் பஸ்பம் (சாம்பல்) பூசிக் கொள்வது அறிவில்லாத பேடிகள் வாழ்க்கைக்கு உபாயமாகச் செய்துகொண்ட ஒரு தந்திரம் மட்டுமே”.

"சுவர்க்கத்துக்குப் போக ஜோதிஸ்டோமத்தைச் செய்யும் போது அதில் பலி கொடுக்கப்படும் ஆடோ, மாடோ, ஆமையோ, குதிரையோ சுவர்க்கமடைவது உண்மையெனின், யாகம் செய்யும் எஜமானன் தன் தந்தையையே யாகபசுவாகப் பலி கொடுத்து சுவர்க்கத்துக்கே அனுப்பி விடலாமே. ஏன் அவ்வாறு செய்வதில்லை.

"இறந்து போனவர்களைச் சிராத்தத்தினால் திருப்தியடையச் செய்ய முடியுமானால் வீட்டை விட்டுத் தொலைவில் பிரயாணம் செய்யும் தந்தை, தமயன்களின் பசி தாபங்களையும் சிராத்தத்தினால் ஏன் தீர்க்க முடியாது!’ என்பது போன்ற கேள்விகள் மிகப் பலவாயுள்ளன.

"வேலி முள்ளுக்கு கூர்மையான நுனியைக் கொடுத்தவன் யார்? கரும்புக்கு இனிப்பை அளித்தவன் எவன்? எலுமிச்சை பழம் புளிப்புச் சுவைக்கு அருகதையாக்கினவன் யார்? இவை அவ்வப்பொருள்களின் இயல்பு. ஆனால் எப்போதும் யார் கண்ணிலும் படாத ஒரு தெய்வம் இருப்பது நம்ப முடியாத பொய்” என்று சாடுகிறார்.

'மனிதனாகப் பிறந்தால் உலகில் யோக்யனாகி வாழ வேண்டும். நிர்வாணர்களாகி, காசாய சடாதரர்களாகி, திரிதண்யராகி உடம்புக்கு சிரமம் கொடுத்துப் பிழைக்குமாறு யார் இவர்களுக்குப் போதித்தவர்?

அடுத்து சமண மதம், பெளத்த மதங்களெல்லாம் இந்த மாதிரி எதிர்ப்பு மதங்களாகவே தோன்றக் காரணங்களாக இருந்ததற்கு முன்னே கூறிய பாருகங்பதர், உலேகாயுதர் சார்வாகர்களின் எதிர்ப்புகளிலிருந்துதான், என்பதில் ஐயமில்லை.

சுக்கராச்சாரி ஏன் அசுர குருவானார்? பராசசெனும் படவப் பெண்ணை மணந்தார். இந்தப் பொய் மத வேசதாரிகளின் ஏமாறுதல்களைக் கண்டு சகிக்க முடியாததால் தான் வஞ்சகமும், அஜகஜாந்திரக் கட்டுக்கதைகளும் இவர்களுக்குக் கைவந்த கலை எனின் என் அன்புக்குரிய நண்பனே! இந்த உலகம் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறது.

இம்மூன்று அக்கினிகளையே எடுத்துக் கொள்வோம். உபநிசத்துகளே இந்த மூன்று அக்கினிகளை நையாண்டி செய்கிறது என்றால் அதையுமா புறக்கணிக்க வேண்டும்? முண்டகோபநிசத்து சொல்கிறது : “பதினாறு ருத்வித்துக்களைக் கொண்டு எஜமானனும் எஜமானியுமாக இருந்து செய்யும் 18 வகைப்பட்ட யாக கருமங்கள் விரிவுபட்டதெனினும் தாழ்ந்தது. இது, பரமல்லாத வித்தை, யக்ஞரூபமான இப்படகுகள் திடமற்றவை. எவர்கள் இதையே பெரும்பேறாகக் கொண்டு களிக்கிறார்களோ அந்த மூடர்கள் பிறப்பிறப்பை மீண்டும் அடையவே அடைகிறார்கள்".

"அவித்தையினுள் (பரமல்லாத வித்தை) ஆழ்ந்து கிடக்கும் மூடர்கள் தாமே தீரர்கள் என்றும் பண்டிதர்கள் என்றும் தங்களை நினைத்துக் கொண்டு துன்பங்களால் பீடிக்கப்பட்டு தடுமாறுபவர்களாய்த் திருடர்களால் வழிகாட்டப்பட்ட குருடர்கள் போல சுற்றிச் சுற்றி வருகின்றனர். 

"அவித்தையில் வெகுவாக ஆழ்ந்தவர்களும் அறிவிற் சிறியோருமாகிய இவர்கள் தம்மை கிருதார்த்தர்களாக மதித்துக் கொள்கின்றனர். ஆசைவயப்பட்டமையால் காமிய கருமத்தில் பற்றுள்ளவர்கள் உண்மையை உணர்வதில்லை. அக்காரணத்தால் துன்பத்தால் பீடிக்கப்பட்டவர்களாய், அழியும் சுவர்காதி உலகங்களை அடைந்து மீண்டும் அங்கிருந்து கீழே நழுவுகின்றனர்".

இவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும் தமிழ்ப் புலவர்கள். இந்த காருகாபத்தியம், ஆகவநீயம், தட்சணாக்கிணி என்பவை முழு பொய்தானா? எனின் இல்லை; இதிலும் உண்மை அறவே மறைக்கப்பட்டது. விபரம் இது:

சடாக்கினி (ஜீரணார்கனி) பிராணாக்கினி, ஞானாக்கினி எனும் இந்த மூன்று அக்கினிகளையும் நாம் சதா ஒத வேண்டும். இவை அவியவோ குறையவோ விடக் கூடாது. நூறாண்டு காலம் நோய்நொடியின்றி வாழ, நல்லமுறையில் நம்முடலைக் காப்பாற்றிக் கொள்ளச்செரிமானசக்தியிருந்தால்தான் பிராணன் சக்தியுடையதாக இருக்கும். இவ்வாறிருக்க உள்ளம் மாசுபடியாது, துாய்மையானதாக இருக்க அறிவு வழியில் ஒழுகல் அவசியம். சத்தியம் அதற்கு அத்தியாவசியம். இது ஞானாக்கினி. சத்தியம் - ஞான சூரியன். அறவழி வாழ்க்கைப் பாதை. இதற்கு உடல் ஆரோக்கியம் அவசியமல்லவா?

உடல், உயிர், உள்ளம் செம்மைப்பட்டிருந்தால் நாம் மகானாகிறோம். அதாவது தெய்வமாகப் போற்றப்படுகிறோம். இந்த உண்மையை எந்த அரசனுக்கும் இவர்கள் சொன்னவர்களே அல்ல! வெளியே நெருப்பில் நெய்விட்டு எரித்து வேடிக்கைக் காட்டிவிட்டு வேதியர்களென தம்மை அழைத்துக் கொண்டுத் திரியும் இவர்களால் நாடு இன்றும் அமைதி காணாது அல்லல்பட்டுக் கொண்டுள்ளது. எனவே ஜீரணார்க்கினி, பிராணாக்கினி, ஞானாக்கினி இம்மூன்றும் உலகில் என்றும் நிலவுக. உண்மை வெல்க.