புத்தர் பொன்மொழி நூறு/1
புத்தர் பொன்மொழி நூறு
பாயிரம்
உலகெலாம் உய்வித்த ஒண்புத்தர்ஈந்த
அலகில் சீர்ப் பொன்மொழிகள் ஆய்ந்தே-இலகிடப்
புத்தரின் பொன்மொழி நூறு புனைந்துரைத்தேன்
இத்தரையோர் வாழ இனிது.
உளமது தூய தாயின்
ஒழுக்கமும் தூய தாகும்;
உளமதில் தீய எண்ணம்
உள்ளதேல், அதன்தொ டர்பாய்
வளமுறு காளை ஈர்க்கும்[2]
வழிசெலும் வண்டி போல
நலமறு துன்பம் வந்து
1
எனையவன் இகழ்ந்து பேசி
எள்ளி[3]யே அடித்தான் என்றும்,
எனையவன் தோற்கச் செய்தே
எய்தினான் வெற்றி என்றும்,
எனதுறு பொருளை அன்னான்
ஏய்த்தனன் என்றும், என்றும்
நினைவதை மறவோ மாயின்
நிலைத்திடும் பகைமைப் பூசல்.
2
நெருப்பினை நீரால் இன்றி
நெருப்பினால் அணைத்தல் இல்லை
சிரிப்பினால் பகைவெல் லாமல்
சினத்தினால் வெல்லல் ஆமோ ?
வரிப்புலி போன்ற மிக்க
வல்லமை கொண்டார் தாமும்
இறப்பது நிலையென் றோரின்[4]
இரிந்திடும் பகைமைக் காய்ச்சல்
3
ஐம்புல[5] இன்பச் சேற்றில்
அளவிலா தழுந்து வோர்கள்
சிம்புகள்[6] சூறைக் காற்றில்
சிதைவது போலத் தேய்வர்
வம்புறு அவாவ றுத்தோர்
வருந்திட ஏது மில்லை;
மொய்ம்பு[7]று மலையைச் சூறை
முட்டியே அழித்தல் ஆமோ?
4
அடைவுற[8]க் கூரை வேயா
அகத்தினில் மழைகொட் டல்போல்
அடைவுற[9]ப் பண்ப டாத
அகத்தினில் அவாக்கள் ஈண்டும்,[10]
நடைமுறை யில்கொள் ளாமல்
நன்மறை ஓதல் மட்டும்
உடையவர், சுரையை ஏட்டில்
உண்டவர்[11] போன்றோ ராவர்.
5
ஓங்கலில்[12] நிற்போன் கீழே
உலவுவோர் தமைக்கா ணல்போல்,
ஓங்குமெய் யறிவாம் வல்ல
உயர்மலை வீற்றி ருப்போன்,
தூங்கியே மிகவும் சோம்பும்
தூங்குமூஞ் சிகளைக் கண்டு
வீங்கவும் இரங்கித் தன்னை
விழிப்பொடு காத்துக் கொள்வான்.
6
உழைப்பிலாப் பரியை முந்தி
ஊக்கமார் பரிவெல் லல்போல்,
விழிப்புடன் ஊக்கம் கொள்வோர்
வீணரை வெற்றி கொள்வர்
விழிப்பினில் மகிழ்வும் சோம்பில்
வெருட்சியும் காண வல்லார்,
அழிப்புசெய் நெருப்பைப் போல
அவாத்தளை[13] எரிப்பர் சுட்டே.
7
3. அடக்க இயல்
உள்ளமோர் உறுதி இன்றி
ஓடிடும் அங்கும் இங்கும்;
தள்ளரு[14] பகையின் தீமை
தந்திடும் அடக்கா விட்டால்,
வில்லினை நிமிர்த்தித் தாங்கும்
வேடனின் செயலைப் போல,
மெள்ளமாய் அடக்கிக் காத்து
மீட்டிடல் நன்மையாகும்.
8
அரித்திடும் உள்ளம் ஓய
அடக்கிடோ மாயின், தீயில்
எரித்ததோர் விறகைப் போல
எதற்குமே பயன்ப டாது.
புரத்தலார் பெற்றோர் சுற்றம்
புரிந்திடும் நலத்தின் மேலாய்
வரித்திடும்[15] உளவ டக்கம்
வழங்கிடும் நன்மை யெல்லாம்.
9
4. மலர்கள் இயல்
பூவிலே மணத்தி னோடு
பொலிவெதும் போகா வண்ணம்
மேவியே தேனு றிஞ்சும்
மிகுதிறல் வண்டே போல,
யாவரும் வருந்தா வாறு
யாண்டுமே நன்மை நாடல்
தாவரு[16] கொள்கை யாகும்;
தரையுளோர் இங்ஙன் செய்க.
10
வண்ணமும் வனப்பும் கொண்டு
வயங்கிடும் மலருங் கூட
நன்மணம் இல்லை யாயின்
நச்சிடார்[17] அதனை யாரும்;
எண்ணமோ தூய்மை இன்றி
இருப்பவர் பகட்டாய்ச் செய்யும்
கண்ணறு செயல்கள் யாவும்
கனவக்குத வாது போகும்.
11
புலர்தலில் நல்லோர் ஈட்டும்
புகழ்மணம் பொன்றா[18] தென்றும்
மலர்தலை உலகம் எங்கும்
மணந்திடும் காலம் வென்றே,
மலர்களின் மணமோ - வல்லே
மறைந்திடு மாறு போல,
உலர்வுறும் மறைத்து தீயோர்
உற்றிடும் போலிச் சீர்த்தி.
12
விழத்திருப் பவன் தனக்கு
விடிவுறா திரவு நீளும்;
உழைத்ததால் களைத்தோ னுக்கோ
உறுவழி[19] நீண்டு செல்லும்,
அழித்திடும் அவாவாம் சேற்றில்
அழுந்தியோர்க் குலக வாழ்க்கை
இழுத்திட் முடியாத் தேர்போல்
இரும்பெருஞ் சுமையாய்த் தோன்றும்
13
தன்னுறு தவறு ணர்ந்தோர்
தக்கநல் அறிஞர் ஆவர்,
தன்னைநல் அறிஞர் என்போர்
தகுதியில் பேதை யாவர்,
தன்னது செல்வம் என்போர்
தணந்திடும் போது தாழ்வர்
துன்னிட[20] அறம்கைக் கொண்டோர்
தூயசீர் பெறுவ துண்மை.
14
ஆழினும் குழம்புக் குள்ளே
அகப்பையோ சுவைக்கா தேதும்;
வாழினும் அறிஞர் நாப்பண்[21]
வன்கணர் அறத்தை ஓரார்.
வீழினும் துளிக்கு ழம்பு
வியன்சுவை உணரும் நாக்கு;
நாழிகை நட்பென் றாலும்
நல்லவர் அறிஞர்ச் சார்வர்.
15
கறந்தபால் உடனே மாறிக்
கலங்கியே தயிரா காது;
திறந்தெரி யாதார் செய்யும்
தீமையும் அன்ன தாகும்,
மறைந்துதான் நீற்றில், பின்னர்
மண்டிடும் நெருப்பே போல,
கரந்திடும்[22] தீமை தானும்
கவிழ்த்திடும் காலம் பார்த்தே.
16