உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/இலவு காத்த கிளி

விக்கிமூலம் இலிருந்து

34. இலவு காத்த கிளி

ட்டிலில் முகத்தைப் புதைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள் வசந்தி. உள்ளத்துப் பாரமெல்லாம் கண்ணீராய்க் கரைந்து போகும் வரை அழுதாள். மாடியில் இருந்து வரும் மகளின் விம்மலைக் கீழே இருந்த சுந்தரி கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். பெண்ணைத் தேற்ற வேண்டும் என்ற எண்ணங்கூட இல்லாமல்; எழுந்து செல்லவே தெம்பு இல்லாதவள் போல்; அவள் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. எத்தனை நேரந்தான் அவளாலும் அழ முடியும்?

காய்ந்த இரண்டு கோடுகளாய்க் கண்ணீர், சுந்தரியின் அழகிய முகத்திலும் கரை கட்டியிருந்தது. எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு; மீண்டும் விழுந்த பேரிடியையும் தாங்கிக் கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாள்.

முதல் அடி- அவளுடைய பதினாறு வயதில் விழுந்தது. செல்வச் செழிப்போடு, இளமை அழகும் பூத்துக் குலுங்க, உள்ளத்தில் ஆயிரமாயிரம் கற்பனைகளோடு மகிழ்ந்திருந்த வேளையில்தான் அந்தப் பேரிடி விழுந்தது.

குருவாக எண்ணி அவள் பூஜித்தவர் கணவன் ஸ்தானத்திற்கு விண்ணப்பித்து; பணிவுள்ள சிஷ்யையாக, அடக்கத்துடன் வாழ்ந்து வந்த அவளை, மனைவியின் ஸ்தானத்திற்கு ஆளாக்கி விட்டார்.

அந்த மிகப் பெரிய அதிர்ச்சியை அவள் ஒரு சிறிதும் வெளிக் காட்டிக் கொள்ளாமல், தனக்கென்று எவ்வித விருப்பும் வெறுப்பும் வைத்துக் கொள்ளாமல், கணவரின் மனம் கோணாது; அவரது குடும்பத்தினரின் குண நலன்களையே தனதாகக் கருதி, ஒரு பரிபூர்ண அடிமையைப் போல, இத்தனை காலம் பாகவதரின் இளைய மனைவி என்கிற ஸ்தானத்தை ஈடேற்றி விட்டாள்.

ஆனால் — வசந்தி பிறந்த பிறகு, தன்னுடைய ஆசைகளையெல்லாம் மகள் மீது கொட்டி வளர்த்து—அவளது எதிர்காலம் பற்றி எண்ணற்ற இன்பக் கனவுகள் கண்டு வந்தாள். அவளது கனவுகள், அவள் விரும்பிய வண்ணமே நிறைவேறப் போவதாக; ஹரி-வசந்தி திருமணத்தைப் பற்றி எண்ணி மனம் பூரித்தாள். செய்யும் தொழிலிலும், குணத்திலும் ஹரியைப் போன்ற ஓர் உயர்ந்த பையன் வசந்திக்குப் புருஷனாகவும், தனக்கு மருமகனாவும் வரப் போவதை, ஒரு பூர்வ ஜென்ம புண்ணியமாகவும், இதை விடத் தனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியது பிறிதொன்றுமில்லை என்றும், எண்ணி எண்ணி அவள் மனம் பூரித்திருந்தாள். ஆனால், இப்போது—அவளது மிகப் பெரிய அந்த மகிழ்ச்சியிலும், பேரிடியைத் தூக்கிப் போட்டவர் பாகவதரேதான். இப்படி இடி மேல் இடி விழுந்து, அவள் இடி தாங்கிக் கருவியாகவே ஆகி விட்டாள்.

ஹரியையும், வசந்தியையும் பற்றி ஆண்டாண்டு காலமாய்க் கண்டு வந்த கனவுகளும், இன்பக் கோட்டைகளும் அஸ்திவாரமற்றவை போல், இடிந்து தலை மேல் விழுந்து கொண்டிருந்தன.

மகளின் திருமணமே, தன் வாழ்க்கையில் மிகப் பெரிய இன்பம் என்று எண்ணியிருந்த சுந்தரிக்கு; இன்று அதை விடப் பெரிய துன்பம் இல்லை என்பது போல்; அது அவள் நெஞ்சைப் பிய்த்தெறிந்து விட்டது.

“அம்மா!” என்ற குரலைக் கேட்டு, சுந்தரி தலை நிமிரவே இல்லை. மீண்டும் வசந்தி தாயை அழைத்தாள். குரல் செவிகளில் விழாத குற்றம் அல்ல; தன்னை ஏறெடுத்துப் பார்க்க விரும்பாத சீற்றமே—என்று வசந்தி எண்ணினாள். அவளுக்குத் தாளவில்லை.

—‘அப்படி நான் என்ன அம்மா தவறு செய்தேன்? உன் விருப்பத்துக்கு மாறாக, விருப்பம் இல்லாத காரியத்தில் இறங்தித் தகாதபடி நடந்து கொண்டேனா? என் நெஞ்சில், சிறுகச் சிறுக ஆசையை ஊட்டிப் பெருநிதி போல் வளர்த்து விட்டு, இன்று கள்ளனைப் போல் ஒருத்தி ஒரே நாளில் கவர்ந்து செல்ல அநுமதித்து விட்டாயே! முடியாது. என்று மறுத்துக் கூடக் கூறாமல் வந்து விட்டாயே. சுசீலாவைப் பற்றி அப்பா கூறியது நியாயம் என்று ஒப்புக் கொள்ள, எப்படி அம்மா உன் மனம் இடம் கொடுத்தது? அப்பட்டமான சுயநலம் அது என்று, பச்சைக் குழந்தை கூடச் சொல்லுமே! நானும் அவருடைய மகள்தானே? என்னுடைய துக்கமும், ஏமாற்றமும் ஏன் அம்மா அவர் கண்ணில். படவில்லை?

நான் சொல்லுகிறேன்—அப்பாவிற்கு சுவாமிமலைக் குடும்பந்தான் ஒசத்தி. என்னதான் நீ உயிராயிருந்தாலும், உரிமை கொண்டாடினாலும்; உனக்கும் எனக்கும் அப்பாவின் உள்ளத்தில் இரண்டாவது இடம்தான்.

இல்லா விட்டால், ஹரி விஷயமாக என் ஆசையையும், உன் விருப்பத்தையும் கேட்டறிந்து கொண்டு—‘நல்ல காரியம்’ என்று ஒப்புக் கொண்ட விஷயத்தை, நிறைவேற்ற வேண்டுமென்று எண்ணாமல் இருப்பாரா?

எல்லாவற்றையும் விட, எனக்குப் போட்டியாகத் திடீரென்று புஸ்வாணம் மாதிரி, ‘நான் ஹரியைத்தான் மணந்து கொள்வேன்’ என்று புறப்பட்டிருக்கிற சுசீலாவை அதட்டி, அடக்காமல்; அல்லது ஹரி யாரை விரும்புகிறான் என்பதைக் கூடக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல், சுசீலாவின் ஆசைக்குப் பச்சைக் கொடி காட்டியிருப்பாரா?

அம்மா, உன்னையும், என்னையும் அவர்கள் நம் பணத்திற்காகத்தான் இத்தனை காலம் ஏமாற்றி வந்திருக்கிறார்கள் என்பது இன்னுமா அம்மா உனக்குப் புரியவில்லை?” என்று வசந்தி படபடப்போடு பேசிக் கோண்டிருக்கும் போதே, சுந்தரி தன்னையும் மீறி, “வசந்தி” என்று பெரிதாகக் கத்தினாள்.

“இன்னும் ஒரு வார்த்தை நீ உன் அப்பாவைப் பற்றி இப்படியெல்லாம் பேசினால்—உன்னை என் மகளென்றும் பாராமல், அடித்து நொறுக்கி விடுவேன்” என்று ஆவேசம் வந்தவளைப் போல் கூறினாள்.

“ஹூம்—நீ வேறெ என்னம்மா சொல்லுவாய்? உன்னால் வேறு என்ன செய்ய முடியும்? உன் ஆசை தீர என்னை நீ அடித்தாலும் சரி! என் மனத்திலுள்ளதை, உன்னைப் போல், பயந்து ஒளிக்கப் போவதில்லை—உன்னிடம் நான் சொன்னவற்றையெல்லாம்—ஒரு நாள் அப்பாவிடமே கூறி, நியாயம் கேட்கத்தான் போகிறேன். எனக்கு அவர்களால் ஒரு சமாதானமும் கூற இயலாது.

‘என்னையும், ஹரியையும் இணைத்து, இணைத்துப் பேசி அவர்கள் செய்திருக்கும் கேலிகளுக்கு, மரத்திற்கு கூட உணர்ச்சி உண்டாயிருக்குமே! என் உள்ளம் அதை விட அற்பமானதாய்ப் போய் விட்டதா? ஹரி இல்லா விட்டாலும், வேறு ஒருவனுடன் நான் சந்தோஷமாய் வாழ்ந்து விட முடியும் என்று எந்த அளவுகோல் கொண்டு, அவர்கள் அளந்து பேசினார்கள் அம்மா? ஏமாற்றமே உருவாய், அவமானமே சின்னமாய்ச் சுசீலாவின் எதிரில் நான் கலங்கி நின்றதைக் கண்டும், என் வாழ்விலிருந்து ஹரியைப் பறித்துத் தானம் பண்ண உனக்கு என்ன அம்மா உரிமை இருக்கிறது? நான் தியாகியாக வேண்டுமென்று உன்னிடம் அழுதேனா?

‘கையிலுள்ளது தீர்ந்து, குடும்பத்தில் உள்ள எவ்வளவு சொத்துக்களை நீ விற்று, விற்று அவர்கள் குடும்பத்துக்கும், அப்பாவின் வைத்தியத்துக்கும் செலவு செய்தாய்? அதைப் பற்றி நான் ஏதாவது கேட்டேனா? இறுதியாக, நான் போட்டிருந்த வைர மோதிரத்தைக் கூடக் கொண்டு போய் விற்றாயே அம்மா! ஆனால், அதே மோதிரத்தைச் சுசீலா எப்படியோ வாங்கித் தன் கையில் போட்டுக் கொண்டு, என் எதிரிலேயே வந்து நின்றாளே! அப்போதெல்லாங்கூட உன்னிடம் குறைபட்டுக் கொண்டேனா? மோதிரம் என்ன, இன்னும் அவள் எதைக் கேட்டிருந்தாலும், நானே கொடுத்திருப்பேனே! பொறாமைக்காரி; என் உயிரையே அல்லவா, என்னிடமிருந்து தட்டிப் பறித்துக் கொண்டு விட்டாள்? அதைப் பார்த்தும், ஏன் அம்மா உன் உள்ளம் குமுறவில்லை; இதயம் வெடிக்கவில்லை? உன் பெண்ணின் எதிர் கால நல்வாழ்வு உன் கண் எதிரிலேயே பறி போகிற போது, ஒரு தாய்க்கு இருக்க வேண்டிய சராசரி உணர்ச்சி கூட உனக்கு ஏன் அம்மா அற்றுப் போய் விட்டது?’—

குமுறும் எரிமலையாகத் தன் உள்ளத்து உணர்ச்சிகளையெல்லாம் இப்படி அள்ளிக் கொட்ட வேண்டுமென்று ஆவேசத்துடன் துடித்த வசந்தி, தாயின் முகத்தைக் கண்டதும், அப்படியே துவண்டு விழுந்து விட்டாள்.

“வசந்தி!” என்று தாவி அணைத்துக் கொண்ட சுந்தரியின் ஊற்றுக் கண்களிலிருந்து, மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.

“என்னை மன்னித்து விடு வசந்தி. நானும் ஏமாந்து; உன்னையும் பெரிய ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி விட்டேன். என்னை மன்னித்து விடு, வசந்தி மன்னித்து விடு.”

இதயம், இதயத்திடம் முறையிட; சுந்தரியின் கரங்கள் வசந்தியின் தலையை ஆறுதலாக வருடின.