உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/கணையாழி

விக்கிமூலம் இலிருந்து
33. கணையாழி

சுசீலாவின் இந்த முடிவிற்குப் பிறகு வசந்தியையோ, சுந்தரியையோ காணும் போதெல்லாம் ஹரிக்கு என்னவோ போலிருந்தது. மிகப் பெரிய குற்றத்தைச் செய்வது போல் அவன் உள்ளுணர்வு வருத்தியது.

திருமணம் எப்பொழுது வேண்டுமானாலும் நடந்து விட்டுப் போகட்டும்; ‘வசந்தியை மணந்து கொள்ள அவனுக்குச் சம்மதமா இல்லையா?’ என்கிற ஹரியின் கருத்தைக் கூட அவர்களால் அறிய இயலவில்லை.

எதற்காகத் தன் தந்தை இது விஷயமாக ஹரியைக் கேட்டு, ஒரு முடிவுக்கு வர மாட்டேன் என்கிறார் என்பது வசந்திக்குப் புரியா விட்டாலும், அந்தக் கோபத்தினால் அவள் சுவாமி மலைக்குப் போய் வருவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டாள்.

அப்பாவைப் பார்த்து வர அம்மா போவதே போதும் என்று இருந்தாலும், எப்போதாவது பெரியம்மாவைப் பார்க்க வேண்டுமென்று வசந்தியின் உள்ளத்தில் அடங்காத ஆசை வந்து விடும். பெற்ற தாயை விடப் பெரியம்மாவின் அன்புதான் வசந்திக்குப் பெரிதாகத் தோன்றும். சிறு வயதிலிருந்தே அப்படித்தான். வீட்டுக்குக் காவலாகக் காயத்திரியை வைத்து விட்டு, சுசீலாவுடன் லட்சுமி திருவிடைமருதூருக்கு வாரத்தில் ஒரு நாள் வந்து போவாள். வரும் போதெல்லாம் வசந்திக்கு ஏதாவது தின்பண்டம் கொண்டு வருவாள். அரை நாள் இருந்து விட்டு லட்சுமி ஊருக்குப் புறப்பட்டால், உடனே வசந்தி பெரியம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு, “இங்கேயே இரு; இல்லா விட்டால், நானும் வருவேன்” என்று அழுவாள். சுசீலா அவளைக் கேலி செய்வாள். வசந்தியை சமாதானம் செய்து புறப்படுவதற்குள், லட்சுமிக்குப் போதும் போதுமென்றாகி விடும். சிறு வயதிலிருந்தே, சுசீலா அப்படித்தான். திருவிடைமருதூருக்குப் போனால், அங்கே கிடைப்பதையும் தின்று விட்டு; வரும் போது வசந்தியோடு ஏதேனும் சண்டை போட்டு, அவளை அழவும் விட்டுத்தான் திரும்புவாள்.

இதனாலேயே, பாதி நாள் லட்சுமியம்மாள் சுசீலாவை அழைத்துச் செல்ல மாட்டாள். ஆனால், அங்கே போனதும். குழந்தையை விட்டு விட்டு வந்ததற்காக, லட்சுமியைச் சுந்தரி கோபித்துக் கொள்வாள். வசந்தியும்; முன் தடவை. சுசீலா தன்னைக் கிள்ளியதையோ, தன்னுடைய பலூனைப் பிடுங்கிச் சென்றதையோ மறந்து, “ஏன் பெரியம்மா, அக்காவை அழைச்சுக்கிட்டு வரல்லே? உன் கூட ‘டூ’ போ” என்று அழுவாள்.

“நீதாண்டி என் பொண்ணு; அது பேய்” என்று. லட்சுமியம்மாள் வசந்தியை மார்போடு அணைத்துக் கொள்வாள்.

இப்பொழுது—இன்னும் மும்முரமாக அந்தப் பேயின் ஆட்சிதான் அந்த வீட்டில் நடக்கிறது என்பதை அறிந்து கொண்ட வசந்தி, அங்கே நடந்ததை எல்லாம் தன் தாயிடம் கூறினாள். அதனால், சுந்தரியே, மகளை அங்கே அதிகம் போக வேண்டாமென்று தடுத்து விட்டாள்.

ஹரி, தஞ்சாவூரில் பாடத்துக்குப் போன இடத்தில், ஒரு வாரம் உடம்பு சரியில்லாமல் கிடந்து விட்டான் என்று கடிதம் வந்திருப்பதாகக் கேள்வியுற்றதும், சுந்தரியோடு, வசந்தியும் கலங்கினாள்.

ஹரி ஊரிலிருந்து வந்திருப்பான் என்று அறிந்ததும், நேரில் போய்ப் பார்த்து வந்தால்தான் சமாதானம் ஆகும். போல் வசந்தி துடித்துக் கொண்டிருந்த போது—அவனே வந்தான்

ஹரி கூறியதை எல்லாம் சுந்தரி கவலையோடு கேட்டாள். அதற்குள் வசந்தி, “இந்த உடம்போடு இங்கேயும் ஏன் வந்தீர்கள்? திங்கட்கிழமை திருவனந்தபுரம் வேறு போக வேண்டுமென்கிறீர்கள்; அங்கேயே, இருந்து கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொள்ளக் கூடாதா?” என்று கேட்டாள்.

அவள் இயற்கையாக அநுதாபப்பட்டுக் கூறுவதாகத்தான் சுந்தரி நம்பினாள். ஆனால், ஹரியின் மனத்துக்கு, அவள் தன்னைக் கிண்டல் பண்ணுகிறாளோ என்றே தோன்றியது.

எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் என்று ஹரி வசந்தியைப் பார்த்துக் கேட்டான்: “ஏன். நான் இங்கு வருவது உனக்குப் பிடிக்கவில்லையா?”

“ஹூம்! சரணத்திலிருந்து பாட்டை ஆரம்பிக்கிறீர்களே. உங்களுக்குத்தான் இங்கே வருவதென்றால் பிடிக்கவில்லை. அதற்கு, ‘நேரம் இல்லை’ என்கிற உறை போட்டு மறைக்கிறீர்கள். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள். நாங்கள் என்றும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறோம். அன்பை விலைக்கு வாங்க முடியுமா?”

பெண்ணின் துயரம், தாயின் உள்ளத்தில் எதிரொலித்தது. ஹரி ஒவ்வொரு முறை திருவிடைமருதூருக்குப் போய் வரும் போதும், இம்மாதிரியான சம்பாஷணைகளிலேயே மனம் புண்பட்டுத் திரும்புவது வழக்கம். வர, வர அவன் மனம் வெகுவாக வேதனைப்பட்டது.

‘லோக ரீதியான இன்பக் கேளிக்கைகளைப் பற்றியோ; திருமணத்தைப் பற்றியோ நானே எண்ணிப் பார்க்காமல் இருந்து வரும் போது; என்னுடைய திருமணத்தைப் பற்றியே மற்றவர்கள் ஏன் பேசிக் கொண்டு இருக்க வேண்டும்? எனக்குச் சுசீலா என்ன உயர்வு; வசந்தி என்ன தாழ்வு? காந்தாமணி கையில் வந்து விழுந்தவுடன் உதறவில்லையா? வாயைத் திறந்து பாடத் தொடங்கினால், குயில்கள் கூட்டத்துடன் தேடி வந்து, தன் இனம் என்று அவளைச் சூழ்ந்து கொள்ளுமே! அப்படிப்பட்ட காந்தாமணியே, என்னை விட்டுப் போய் விட்டாள். ஆனால், போனவள் உயிரோடு இருந்தால், இந்த உலகத்தின் எந்த மூலையிலும் என்னை நினைத்துக் கொண்டேதான் இருப்பாளே அன்றி, என்னை மறந்து விட அவளால் முடியாது’ என்று ஹரி தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டான்.

திருவிடைமருதூரிலிருந்து புறப்பட்ட ஹரி, நேராகச் சுவாமிமலைக்குப் போய் விடவில்லை. கும்பகோணத்துக்குத்தான் டிக்கெட் வாங்கியிருந்தான். கும்பேசுவரரையும், மங்களாம்பிகையையும் தரிசனம் செய்து வரலாம் என்று எண்ணினான். அத்துடன், அவனுக்கு நகரிலும் முக்கிய வேலை இருந்தது.

ஸ்டேஷனை விட்டு வரும் வழியில், குருநாதருக்கு வேண்டிய மருந்துகளை வாங்கிப் பையில் வைத்துக் கொண்டான். டயமண்ட் சினிமா வழியாகக் காந்தி பார்க்குக்கு வந்து, கணபதி அண்ட கோ கடையில், குருநாதருக்கு வறுத்த வாசனைச் சீவலும்; ஒரு டப்பா பட்டணம் பொடியும் வாங்கிக் கொண்டான். அம்மாவுக்காக, எட்டணாவுக்கு நல்ல வாசனை விடயங்களை வாங்கி, நலுங்காமல் பையில் வைத்துக் கொண்டான். அதில் இரண்டை மட்டும் எடுத்துத் தனியாகத் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டான். ‘யாருக்கும் தெரியாமல், சுசீலாவுக்குத் தான் வாங்கிக் கொடுக்கப் போகிற வைர மோதிரத்தை, அந்த விடயத்தினுள் வைத்து அவள் கையில் கொடுத்து; அதை அவள் ஆசையோடு வாயில் போட்டுக் கொள்ளப் போகும் போது, சட்டென்று அவள் கையிலிருந்து தட்டிப் பறிக்க வேண்டும்; விடயத்தைப் பிரித்துப் பார்க்கச் செய்து, “வைரம் கொடுத்து உன்னைக் கொல்லச் சதி செய்த இந்தக் குற்றவாளிக்கு என்ன தண்டனை அளிக்கப் போகிறாய் சுசீலா?” என்று கேட்க வேண்டும். அவள் ‘இதோ இருங்கள்’ என்று மோதிரத்தை எடுத்து, தன் விரலில் அணிந்து கொண்டு விடயத்தை மடித்து, என் வாயில் போட வரும் போது, அதைப் பிடுங்கி அவள் வாயில் போட்டு, ரத்தச் சிவப்பேறிய உதடுகளில் ஒளிரும் புன்னகையைக் கண்டு மகிழ வேண்டும்’ என்றெல்லாம் கற்பனை பண்ணிக் கொண்டே, பெரிய தெருவில் பிரபல வைர வியாபாரியான கோகுல் தாஸ் கடையில் நுழைந்தான். கடைக்காரர், ஒரு பெரிய இடத்திலிருந்து. விலைக்கு வந்தது என்று, உயர்ந்த ப்ளு ஜாக்கர் மோதிரம்: ஒன்றைக் காட்டினார். அதைப் பார்த்தவுடன், அதன் அழகு ஹரிக்கு மிகவும் பிடித்தது. அதற்கான எழுநூறு ரூபாயையும் கொடுத்து, மோதிரத்துடன் நேரே கும்பேசுவரர் கோயிலுக்குச் சென்றான்.

சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு, ஹநுமார் கோயில் வழியாக வந்த போது, ‘தம்பி’ என்று உரக்க அழைத்த வண்ணம், உயரமான ஜவுளிக் கடைத் திண்ணையொன்றிலிருந்து கீழே குதித்த பக்கிரி, ஹரியை நோக்கிச் சிரித்தபடியே வேகமாக வந்தான்.

அந்தச் சமயத்தில், அந்த இடத்தில், சற்றும் எதிர்பாராமல், பக்கிரியைக் கண்டதும் ஹரி, “எங்கே மாமா, இப்படி இவ்வளவு தூரம்? கும்பகோணத்தில் இப்போது ஒன்றும் விசேஷங்கூட இல்லையே?” என்று கேட்டான்.

“ஏன் தம்பி, என்னை நீ, தேர்த் திருவிழாவிலேயே சுத்திக்கிட்டிருக்கிற பேர்வழின்னு நெனச்சே பேசிக்கிட்டிருக்கியே!” என்று குறைப்பட்டுக் கொண்ட பக்கிரி, ஹரியின் கையிலிருந்த பையை வாங்கிக் கொள்ளக் கையை நீட்டினான். ஹரி, “பரவாயில்லை” என்று தானே தூக்கிக் கொண்டு நடந்தான்.

“ஏதோ பச்சை தோட்டும், சிவப்பு நோட்டுமா நீ குடும்பத்துக்குக் கொடுத்துக்கிட்டே இருக்கே. அதிலே நானும் பிழைச்சு கிட்டிருக்கேன். எனக்கு என்ன தம்பி குறைவு? ஆனா, உன்னெத்தான் கண்ணிலேயே காணல்லே. அன்னிக்குத் தஞ்சாவூர் ஸ்டேஷன்லே பார்த்தது; அப்புறம் பார்க்கவே முடியல்லே. மாசம் முப்பது நாளும் கச்சேரி. ரெயில்லியே சுத்தறாப்பிலே இருக்கு.”

“ஆமாம், மாசம் முப்பது நாளும் ரெயில்லியே கச்சேரி பண்ணிக் கொண்டிருக்கிறேன். அதிருக்கட்டும்; இப்போ என்னை எதற்காகக் கூப்பிட்டாய்?”

“என்ன தம்பி, மறந்துட்டியா; நீதானே அன்னிக்குத் தங்கச்சி கல்யாணத்தை முடிச்சுடலாமே, பணம் தறேன்னு சொன்னே. நான், ரெண்டு பொண்ணுக்கும் மாப்பிள்ளை கூடப் பார்த்து வச்சுட்டேன். ஒரே முகூர்த்தத்திலே முடிச்சுப்பிட்டா, நமக்கும் செலவு மிச்சம்.”

இருவரும் பேசிக் கொண்டே, காவேரிச் சக்கரப் படித்துறை வரை வந்து விட்டனர். ஹரி யோசனையில் ஆழ்ந்தான்.

பக்கிரி கேட்டான். “எப்பத் தம்பி முகூர்த்தம் வச்சுக்கலாம்?”

“எவ்வளவு செலவாகும் என்று முன்பு சொன்னாய்?”

“ரெண்டாயிரத்திலேயும் செய்யலாம்; மூவாயிரத்திலேயும் செய்யலாம். நாம சிம்பிளா, ஆயிரத்தைந்நூறு ரூபாயிலேயே ரெண்டையும் கட்டிக் கொடுத்திடலாம். எதுக்காகத் தம்பி ஊர்ப் பயலுவளேக் கூட்டிச் சோத்தைப் போட்டுக், காசை வீணாக்கணும்?”

“ஏன் மாமா, ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் எப்படிப் போதும்?” என்று ஹரி கேட்க வாயெடுத்தான்; ஆனால், உடனே கேட்கவில்லை. அவன் யாருக்காகச் செய்யப் போகிறான்? அவனுடைய தங்கைகள் மணமாகாமலே நின்றால்தான், யாருக்கு என்ன வந்து விட்டது? அவன் மட்டும் இத்தனை படாடோபமாக, ராஜ வாழ்வு வாழும் போது அவனுடன் பிறந்த அந்தப் பெண்களுடைய திருமணச் செலவைத்தானா குறைக்க வேண்டும்? பட்டும், வைரமும் போட்டுக் கொண்டா இவர்கள் மினுக்கப் போகிறார்கள்? சட்டி, பானைகளோடு ஆயுள் முழுவதும் போராடப் போகிறவர்களின் வாழ்க்கையில், அந்த ஒரு நாளையாவது, மகிழ்ச்சி மிக்க நாளாக அவனால் ஆக்க முடியாதா?—

“என்ன தம்பி, பணத்தைப் பத்திப் பேசினவுடனே, பெரிசா யோசிக்கக் கிளம்பிட்டே? அது கூட அநாவசியம் தம்பி. இந்தப் பக்கிரியாலே கல்யாணத்தை இன்னும் சிம்பிளா முடிச்சுட முடியும் தம்பி! பசங்க ரெண்டு பேரும் தங்கக் கம்பிங்க. ஐயனார் கோயிலுக்கு இழுத்துக் கிட்டுப் போய்த் தாலியைக் கையிலே கொடுத்து, ‘கட்டுங்கடா’ன்னு சொன்னா; கண்ணை மூடிக்கிட்டுக் கட்டிடுவாங்க. நீ ஒண்ணுக்கும் கவலைப்படாதே தம்பி” என்று பக்கிரி ஆறுதல் கூறினான்.

ஹரி மெல்லச் சிரித்தான்.

“நான் இப்போது பணத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை மாமா! சிம்பிளா இல்லாமல், கொஞ்சம் நல்லபடியாவே செய்ய வேண்டுமென்றால், எத்தனை ரூபாய் வேண்டும் என்கிறாய்?”

“சுமார் இரண்டாயிரம், மூவாயிரம் இருந்தால் போதும். பிரமாதப்படுத்திப் பிடுவேன்.”

ஹரி முடிவுக்கு வந்தான். “சரி, என்னை அடுத்த மாசம் 24-ம் தேதி வந்து பாரு, மாமா.”

“பணத்துக்காகவா?”

“ஆமாம்.”

“எங்கே பார்க்கலாம்?”

“மாயூரம் பட்டமங்கலத் தெருவில், ஒரு கல்யாணக் கச்சேரிக்கு வருகிறேன். ராத்திரி ரெயில்வே ஸ்டேஷனில் சந்திக்கலாம்.”

“சரி, அப்படியே ஆகட்டும். நான் நின்னுக்கறேன் தம்பி.”

“ஏன்? கும்பகோணத்திலே வேலை இருக்கிறதா?”

“ஆமாம். நம்ம ஊரு பத்தரோடு வந்திருக்கேன்.”

“சரி, நான் வருகிறேன்.”

“நில்லு தம்பி. வண்டி கூட வச்சுக்காமெ; இப்படியே நடந்தா போவப் போறே?”

“இல்லை மாமா. ஏதோ ஞாபகம். ஒரு வண்டி பாரு.”

பக்கிரி ஜட்காவைக் கூப்பிட்டு நிறுத்தினான். வண்டி சுவாமி மலையை நோக்கி ஓடியது. பக்கிரி மீண்டும் பாலத்தைத் தாண்டிப் பஜாரை நோக்கி நடந்தான்.

டுகிற வண்டியோடு போட்டிப் போட்டுக் கொண்டு ஹரியின் சிந்தனைப் புரவியும் பறந்தது. தங்கைகளின் திருமணத்துக்காகப் பக்கிரிக்கு வாக்களித்த ரூபாயை எப்படிக் கொடுப்பது என்பது பற்றி அவன் யோசித்துக் கொண்டிருந்தான். இந்தச் சமயத்தில், அவன் மனம் அவனையும் அறியாமல், காந்தாமணியைப் பற்றி நினைத்தது.

அவள் இருந்தால், அவனுக்குப் பணத்துக்குப் பஞ்சம் ஏது? ‘இரண்டாயிரமோ, மூவாயிரமோ தேவை; இத்தனை மாதங்களில் திருப்பித் தருகிறேன்’ என்று ஒரு வார்த்தை கூறினால் போதும்; ஏன் எதற்கு என்று கேட்காமல், பணம் கைக்கு வந்து விடும். அதை நம்பித்தான், ஹரி பக்கிரிக்கு அத்தனை துணிச்சலுடன் முன்பு வாக்குக் கொடுத்திருந்தான். ஆனால்—

தங்கள் வீடு விற்பனைக்குக் கூட அவர்கள் வராததோடு; அதிலுள்ள சாமான்களையும் அவர்கள் எடுத்துச் செல்லவில்லையாம்! அப்படியே, வீட்டோடு, ஒட்டு மொத்தமாக யாரோ ஒரு சேட்டுக்கு விற்று விட்டதாகக் கேள்விப்பட்டான். அவனுக்கு இது அதிசயமான செய்தியாக இருந்தது. இதற்கெல்லாம் காரணம் என்ன? -

‘இனி மேல், அதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. பக்கிரி கல்யாணத்துக்காக மாப்பிள்ளை முதற்கொண்டு பார்த்து வைத்து விட்டான். நம்மால் தாமதம் கூடாது’ என்ற முடிவுக்கு வந்தான் ஹரி.

ஹரியின் சம்பாத்தியத்தை பாங்கில் அவன் கணக்கில் பாகவதர் போட்டு வைத்து; ஒரு பெரும் தொகையாகச் சேர்த்து வைத்திருந்தார்.

ஹரி இப்போது அதைத்தான் நினைத்துக் கொண்டான். பங்களூரிலிருந்து வந்த பிறகு, தங்கைகளுடைய திருமண விஷயமாகக் குருநாதரிடம் பேசலாம் என்று முடிவு செய்தான்.