உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/கனவல்லவே!

விக்கிமூலம் இலிருந்து

32. கனவல்லவே!

வானத்துச் சந்திரன் வெடித்து அமுதமாய்ப் பொழியும் சுகத்தைப் பற்றி ஹரிக்குத் தெரியாது. ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்கள், பாரிஜாத மலர்களாக மாறித் தலையில் பொல பொலவென்று கொட்டினால் ஏற்படுகிற இன்ப உணர்ச்சியை அவன் நுகர்ந்தவனல்ல. ஆனால், எல்லாவற்றுக்கும் மேலானதொரு இன்பத்தில் அவன் மூழ்கிப் போனான்.

சுசீலா அவனைக் காதலிக்கிறாளாம்! ஆம்! இதயக் கதவுகளைத் திறந்து, அதில் அத்தனை காலம் பூட்டி வைத்திருந்த எண்ணங்களை வாரி இறைத்து விட்டாள் சுசீலா!

வாழ்க்கையிலேயே அது ஒரு புனிதமான நாள். புது நிகழ்ச்சி. அந்த அநுபவம் அவனுக்குப் புதிது. எதையும் அவனால் நம்ப முடியவில்லை: நம்பாமலும் இருக்க முடியவில்லை.

விழித்துக் கொண்டே தூங்குகிறோமா அல்லது தூங்கிக் கொண்டே விழித்திருக்கிறோமா என்று அவன் எண்ணிப் பார்த்தான். காதால் கேட்ட வார்த்தைகள் எல்லாம், சுசீலாவின் வாயால் கேட்ட வார்த்தைகள்தாமா என்பதை அவனுடைய செவிகளே ஏற்க மறுத்தன.

கண்ணால் காணும் பொழுதெல்லாம் விரோதியைப் போல் விரட்டிக் கொண்டே இருந்தவளின் உள்ளத்தில் இப்படி ஓர் எண்ணமா? இதைப் பகுத்தறிவு ஏற்குமா? ஹரி யோசித்தான்.

—‘நல்ல பாம்பின் விஷந்தான் நாகரத்தினமாக உருப் பெறுகிறதாமே! அதைப் போல், ஒரு வேளை, இதுவும் அப்படி உருவான காதலோ? யார் கண்டார்கள் இந்தப் பெண்களின் மனத்தை? ஆழம் காண முடியாத கடலைப் போன்றது அவர்களது உள்ளம் என்கிறார்கள். ஆழம் காண முடியாத கடலின் அடிவாரத்தில்தானே நல் முத்துக்களும், பவழங்களும் புதைந்து கிடக்கின்றன?

‘ஆனால், மூழ்குகிறவனுக்குத்தானே முத்துக்கள் கிடைக்கும் என்பார்கள்! கரையில் நிற்பவன் தலையில் முத்துமாரி பொழிந்தால்?’—ஹரி வாய் விட்டே கேட்டு விட்டான்.

‘ஒரு வேளை இதுவும் கடலின் கோபமோ?’—

சுசீலாவின் உள்ளம் இப்படிப் பாகாய் உருக, தான் எந்த அற்புதத்தையும் நிகழ்த்தி விட்டதாக ஹரிக்கு நினைவில்லை. ‘மந்திரவாதிக் கதைகளில் வருகிற மாதிரி, சுசீலாவின் இந்தத் திடீர் மாறுதலுக்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? ஒரு வேளை, காந்தாமணியின் கடிதமாக இருக்குமோ? அதில் அப்படி அவள் என்னதான் எழுதியிருக்க முடியும்?’ என்று யோசித்து யோசித்து, மூளையைக் குழப்பிக் கொண்டானே தவிர, விடை என்னவோ அவனுடைய யோசனைக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது. ஆனால், கடிதத்தைச் சுசீலாவிடம் கேட்க, அவனுக்குத் துணிவில்லை. காயத்திரியிடம் கூறினான். “அது யாரிடம் இருந்தால் என்ன? சமயம் வரும் போது வாங்கித் தருகிறேன்” என்று கூறி விட்டாள்.

சுசீலாவை நம்பி எதிலும் இறங்க அவனுக்குப் பயமாகவே இருந்தது. இத்தனை நாளாக அதட்டிக் கொண்டிருந்தவள், இப்பொழுது குழைந்து, குழைந்து வந்து, அன்பு காட்டிச் சிரித்துப் பேச முன் வந்தாலும், அவன் முன் போலவே, அவளிடம் ஒதுங்கியே பழகினான். பூனை சாதுவாக மாறி விட்டாலும், பிறாண்டுகிற அதன் சுபாவம் மறைந்து விடுமோ?

சுசீலாவின் இந்த விசித்திரக் காதலைப் பற்றிக் காயத்திரியிடம் ஹரி கூறினான்.

“நீயும் துணிந்து, அதையே திருப்பிச் செய்து விடு” என்று ஹரிக்கு உற்சாகமூட்டினாள் காயத்திரி. ஹரி மெல்லச் சிரித்தபடிக் கூறினான்:

“சுசீலாவுக்கு வாழ்க்கையே ஒரு விளையாட்டு. அவள் எது வேண்டுமானாலும் பேசலாம்; எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வாள். இன்று காதலிக்கிறேன் என்பாள். நாளை உன்னை நான் பார்த்ததே இல்லை என்பாள். அது போகட்டும்; அவளைத் திருத்த நான் யார்? ஆனால் புலி பாயத்தான் வேண்டும்; பாம்பு சீறத்தான் வேண்டும். இவற்றின் குணம் மாறினாலும், மனிதனுக்கு நம்பிக்கை ஏற்படாது. ஆகவே சுசீலாவை நான் பழைய சுசீலாவாகவே காண விரும்புகிறேன். உண்மையான சுபாவப்படி வாழ்வதுதான் இருவருக்கும் நல்லது. என் உள்ளத்தைப் பொறுத்த வரை, காதலுக்கோ, கல்யாணத்துக்கோ நான் இது வரை இடம் கொடுக்கவில்லை. ஆயுள் முழுவதும், இசைக் கலைக்கே தொண்டு செய்து, காலத்தை ஓட்டி விட வேண்டும் என்பது என் விருப்பம், அந்த விருப்பம் ஈடேறா விட்டாலும், சுசீலா போன்ற பெண்ணை நான் எண்ணிப் பார்க்கக் கூடாது. அது, ஐயாவுக்கும், அம்மாவுக்குமே என் மீது உள்ள நல்ல எண்ணத்துக்கு, மாசு ஏற்படுத்தி விடும். நான் யார் என்று ஒரு போதும் மறந்ததில்லை. சுசீலாவுக்கும், மற்றவர்களுக்கும் வேண்டுமானால், என்னைப் பற்றி அதிகம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், என் வாழ்க்கையைத் தெரிந்து வைத்துள்ள நீங்கள் இப்படிச் சுசீலாவை ஆதரிக்கலாமா?” என்று கேட்டான்.

“உன்னுடைய இந்தப் பேச்சிலிருந்து நீ என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாய் என்பது புரிகிறது ஹரி.”

“நான் தவறாகப் பேசியிருந்தால், என்னை மன்னியுங்கள்.”

“நீ தவற முடியாது ஹரி. நீ கூறிய காரணங்களை நானும் ஒப்புக் கொள்கிறேன். உனக்கு மணமே வேண்டாம். ஆயுள் முழுவதும், இப்படியே ஆனந்தமாகப் பிரம்மச்சாரிப் பாட்டுப் பாடிக் கொண்டே, உன்னால் காலத்தை வென்று விட முடியும். ஆனால், சுசீலாவை நீ ஏற்றுக் கொள்ளா விட்டால், அவள் தன் உயிரையே மாய்த்துக் கொள்வாள். நான் எதையும் மிகைப்படுத்திக் கூறுவதாக நீ எண்ண வேண்டாம். சுசீலாவைப் பிடிக்கா விட்டால், உன்னை நான் வற்புறுத்தப் போவதில்லை. ஆனால், நீ இல்லை என்றால், தான் இல்லை என்ற நிலைக்கு அவள் வந்து விட்டாள். சொல்லாலும், செயலாலும் அவள் இன்று வரை உன் மனத்தை எவ்வளவோ புண்படுத்தியிருக்கலாம். இனி மேலும், இப்படியே அவள் இருக்கலாம். ஆனால், இத்தனைக்கும் புறம்பாக, அவள் உன்னைப் பற்றி ஓர் உள்வாழ்வு வாழ்ந்து வந்திருக்கிறாள். அவளுடைய வாழ்க்கையை என்னைப் போல், யாரும் அத்தனை புரிந்து கொண்டதில்லை.

“சுசீலாவை எல்லாரும் மேலெழுந்த வாரியாகத்தான் பார்த்து வந்தார்களே தவிர, அவளுடைய அந்தரங்கத்தைப் பற்றி யாரும் கவலைப் பட்டதில்லை. அதைப் பற்றி, யாருக்குத் தெரியும்? சிறு வயதிலிருந்தே அவளையும் அறியாமல், உன்னிடம் அவள் தன் உள்ளத்தைப் பறி கொடுத்து விட்டாள். ஆனால், பறி போனதை உணர்ந்து உன்னைத் தேடி அடைய, அவளுக்கு இத்தனை காலம் தேவைப்பட்டதுதான் ஆச்சரியம். அசட்டுக் கர்வத்தினாலும், போலிக் கௌரவத்தினாலும் இறுமாந்திருந்த சுசீலாவின் கண்ணைத் திறந்து விட்டவர்கள் வசந்தியும், காந்தாமணியுந்தாம்.

“அன்று நீ தஞ்சாவூரில் தங்கி விட்டவுடன், அவள் மனம் தவித்த தவிப்பையும், உனக்காக அவள் தனிமையில் சென்று, அழுது தீர்த்து, முகம் வீங்கி வெளி வந்ததையும் நான் காணத் தவறவில்லை. ஆனால், அவளுக்கு உலகத்துக்காக ஒன்று செய்யத் தெரியாது. பச்சைக் குழந்தையைப் போல; சிரிப்பு வராமல் சிரிக்கத் தெரியாது; அழுகை வந்தால், அடக்கிக் கொள்ளத் தெரியாது. இந்தக் குறைக்காக அவளை நீ வெறுத்து விடப் போகிறாயா? அல்லது உன் விவேகத்தினால், இதுவே ‘போலியற்ற’ நிறைவு என்ற உண்மையை உணர்ந்து, ஏற்றுக் கொள்ளப் போகிறாயா?

“நான் என் வாழ்வை இழந்ததைப் பற்றிக் கூட எண்ணி வருந்துவதில்லை. இந்த உலகில், என்னுடைய மிகப் பெரிய கவலைகளில் ஒன்று — சுசீலாவைப் பற்றியது. ‘அவளுடைய இந்த விசித்திரமான உள்ளத்தைப் புரிந்து கொண்டு, அவளை இறுதி வரை வெறுக்காத புருஷனாக அவளுக்கு வாய்க்க வேண்டுமே’, என்பதுதான் அது. சுசீலாவாக விரும்பாத வரையில், அவளை யாரும் எந்த விஷயத்திலும் திருப்பி விட முடியாது. ஆனால், அவள் மனம் உன்னை நாடுகிறது என்பதை அறிந்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனெனில் அவளுக்காக நீ பிறந்திருக்கிறாய்; அதற்காகவே தெய்வம் உன்னை இங்கே கொண்டு சேர்த்திருக்கிறது என்பது என் நம்பிக்கை. ஆகவே, உன் நன்மையைக் கருதி இல்லை என்றாலும்; சுசீலாவைக் கருதியாவது நீ இந்தக் காரியத்தைச் செய்வாய் என்ற என் நம்பிக்கையை நீ தகர்க்க மாட்டாய் என்றே நினைக்கிறேன்.”

எதுவும் புரியாமல் ஹரி விழித்துக் கொண்டிருந்தான்.

சற்றுக் கழித்து அவன் கேட்டான்: “சுசீலாவிடம் நான் யார் என்று விளக்கிக் கூறினீர்களா? நான் அநாதை என்பது அவளுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே தெரியும். ஆனால், விதி வசத்தால் அநாதைகள் ஆன உயர்ந்த அரச குமாரர்களும் உண்டு. அதில் நான் எந்த ரகத்தைச் சேர்ந்தவன் என்பதைக் கூறி விட்டீர்களா?”

“கவலைப்படாதே. சுசீலா, அவ்வளவு அதிகமாக, நீ ஒன்றும் அரசகுமாரனாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படவில்லை. உன்னைப் பற்றிய எல்லாமே இப்போது அவளுக்குத் தெரியும். ஆனால், அப்பாவுக்கும், அம்மாவுக்கும், இதை எப்போது சொல்ல வேண்டுமோ, அப்போது நான் பார்த்துச் சொல்லிக் கொள்கிறேன். அது வரையில், இதைப் பற்றி யாரிடமும் நீ மூச்சு விட வேண்டாம்” என்று காயத்திரி கூறிச் சென்று விட்டாள். அவள் சென்ற திக்கையே வெறிக்கப் பார்த்து நின்ற அவன், நீண்ட பெருமூச்சு விட்டான்.

வாரி வழங்குவதைத் தவிரக் காயத்திரி அவனிடம் எதையும் யாசித்தவளல்ல; அவனும் ஈந்தவனல்ல. ஆனால் இன்று தங்கைக்காக கை ஏந்தி வந்தவளிடம், ஹரி தன் விருப்பு, வெறுப்பற்ற வாழ்வையே தூக்கிப் போட்டு விட்டான். அவளுக்காக அவன் இதைச் செய்வதில், மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்.

றுநாள், பங்களுர்க் கச்சேரிக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளை ஹரி செய்து கொண்டிருந்தான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு புதிதாகப் போட்ட ‘சாரணி’ தந்தி கூடிக் குறைந்து கொண்டிருந்தது. அதைக் கூட்டிக் குறைத்துத் தந்தியைச் சரி பண்ணி வைத்துக் கொண்டான். அடிக்கடி கக்கிக் கொண்டிருந்த ‘பிருடை’யில் சாக்பீஸைத் தடவி, ஏற்றி இறக்கினான்: மசியவில்லை. பிருடை ஓரங்களில் விரல் நுனியால், சிறிது தண்ணீரை நனைத்தான்; சொன்னபடி கேட்டது.

சுசீலா புதிய பட்டு நூலைத் திரித்துக் கொண்டு வந்து, ஹரியின் கையில் கொடுத்தாள். வியப்போடு அவளையே பார்த்தபடி, அதைப் பெற்றுக் கொண்டு, ‘ஜீவா’ கூட்டினான். ‘ஙொய்’ என்று கிளம்பிய கம்பீர நாதம், அவன் மனத்தை நிரப்பியது.

ஹரி, தோல் பெட்டியைக் காலி பண்ணி வைத்தான். அதில் அவனுக்கு வேண்டிய துணிமணிகளையெல்லால் சுசீலாவே, அழகாக அடுக்கி வைத்தாள். பல்பொடியையும், விபூதியையும் இரண்டு சிறிய மூடி போட்ட பாட்டில்களில் போட்டு நிரப்பி வந்து வைத்தாள்.

பிறகு ஏதோ ஞாபகம் வந்தவளைப் போல், விபூதியை வெளியே எடுத்தாள். ஹரி எப்போதும் விபூதியை, வாரிப் பூசிக் கொள்ளுகிற வழக்கமுடையவன். அதனால்தான், அது போதாது என்று வேறு ஒரு பெரிய டப்பியில், நிறைய விபூதியைப் போட்டுக் கொண்டு வந்து வைத்தாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமியம்மாளுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

வர வரப் பெண்ணின் போக்கு அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது. ‘இதெல்லாம் ஒரு, வேளை ஹரி பாட்டு சொல்லிக் கொடுத்து வந்தானே, அதனால் ஏற்பட்ட குரு பக்தியாக இருக்குமோ? ஆனால், அது என்ன அப்படித் திடீரென்று பொங்கி வழிகிற குரு பக்தி? எப்படியோ ஹரி சௌக்கியமாக இருந்தால் சரி; இப்பொழுதுதான் அவனுக்கு நல்ல தசாபுக்திகள் திரும்பியிருக்கின்றன போலிருக்கிறது. நீடிக்கட்டும்!’ என்று இருந்து விட்டாள் லட்சுமி.

ஹரியோ, ‘நினைத்தால் வாரி வழங்க இயலும் இத்தனை அன்பையும், பாசத்தையும் பூட்டி வைத்துக் கொண்டுதானே, இத்தனை காலம் என்னிடம் கோபத்தையும், சிடுசிடுப்பையும் காட்டிப் போலி வேஷம் போட்டாள்?’ என்று வியப்புற்றான்.

சுசீலா ஸூட் கேஸை மூடி, மூலையில் வைத்தாள். தம்பூராவுக்கு உறையைப் போட்டு வைத்தாள். படுக்கையும், தலையணையும் வைக்க, அப்பாவின் ஹோல்டாலை எடுத்துக் கொண்டு வந்தவுடன், ஹரிக்குத் தூக்கி வாரிப் போட்டது. தன் படுக்கையே போதுமென்று ஹரி அதை அவளிடமிருந்து எடுத்துத் திரும்ப, அதன் இடத்தில் வைக்கப் போன போது லட்சுமியம்மாள், “ஆமாம், இந்தப் பெண் இந்தப் பழசைக் கொண்டு போன போதே நினைத்தேன்: ஹரி, நீ பங்களுருக்குத்தானே போறே? அங்கேயே போய், நல்லதாக ஒன்று வாங்கி வைத்துக் கொள். ரூபாய் தருகிறேன்” என்று அவனிடம் கூறினாள். லட்சுமியம்மாளுடைய அந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஹரிக்கு மனத்தை என்னவோ செய்தது.

“அம்மா, நான் இது பழசு, புதுசு என்று பார்த்துத் திரும்பக் கொண்டு வந்து வைக்கவில்லை. இது ஐயாவினுடைய படுக்கை. பூஜிக்க வேண்டிய பொருள் போல. அதைக் கண்ணில் தொட்டு ஒத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அதில் காலை நீட்டிப் படுத்துக் கொள்ளுகிற, யோக்கியதையும், அந்தஸ்தும் எனக்கல்ல; யாருக்குமே கிடையாது.”

‘தவறுதலாக விரல் கண்ணைக் குத்தி விடுவது போல், நாம் விகற்பமில்லாமல் பேசியதை, இந்தப் பிள்ளை இப்படி அர்த்தம் எடுத்துக் கொண்டு விட்டானே!’ என்று லட்சுமியம்மாளுக்கும் சங்கடமாய்ப் போய் விட்டது.

“உன்னை, நான் அப்படி நினைக்கக் கூடியவன் என்று சொல்லவில்லை. உன் பக்தி விசுவாசம் எனக்குத் தெரியாதா? எங்கே இருந்தாலும், பகவான் உன்னை க்ஷேமமாக வைத்திருப்பார்” என்றாள் லட்சுமியம்மாள். இதைக் கேட்டுச் சுசீலாவின் உள்ளம் பெருமையால் பூரித்தது.

பங்களுருக்குப் புறப்படுவதற்கு முன்பு, திருவிடைமருதூருக்குப் போய்ச் சுந்தரியையும், வசந்தியையும் பார்த்து விட்டு வர வேண்டுமென்று ஹரி விரும்பினான். முன்னைப் போல, அவன் அதிகம் ஊரில் தங்குவதுமில்லை; தங்கினாலும், அந்த ஒரு நாள், இரண்டு நாளில் அவனுக்கு மீண்டும் புறப்படுவதற்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொள்ளத்தான் பொழுது சரியாக இருந்தது. அதற்காக, இப்படியே தள்ளிப் போட்டுக் கொண்டே போகக் கூடாது என்று எண்ணி, அவன் அன்றே திருவிடைமருதூருக்குப் புறப்பட்டுச் சென்று விட்டான்.

அவன் போன சற்றைக்கெல்லாம், மங்களபுரி சமஸ்தானத்திலிருந்து ஹரிக்கு அழைப்பு வந்தது. அவனுடைய பாட்டைக் கேட்டு பரவசமான மங்களபுரி அரசர் ஹரியைக் கௌரவித்து, அவனைத் தம் ஆஸ்தான இசைவாணர்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டிருக்கிறாராம்,

ஹரி வந்ததும், கொடுக்க வேண்டுமென்று, சுசீலா அதை வாங்கிப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டாள்.

அப்பாவிடம் சுசீலாவின் விஷயத்தை இனியும் தெரிவிக்காமல் மூடி வைத்திருப்பது தவறு; அதைச் சரியான சந்தர்ப்பத்தில் தெரிவிப்பதுதான் நல்லது என்று, அதற்கானதொரு சமயத்தைக் காயத்திரி எதிர்பார்த்திருந்தாள்.

ஆனால், ‘சுந்தரியின் செவிகளுக்கு, இந்தச் செய்தி எட்டியவுடன் அவள் மனம் என்ன பாடுபடும்! வசந்தி இதை அறிந்தவுடன், எப்படித் துடிப்பாள்?’ என்பதையும் காயத்திரியினால் எண்ணிப் பார்க்க முடிந்தது. ஆயினும் மரணப் போரில் குதித்தவன், அஞ்சாமல் தன் கடமையைச் செய்து விட வேண்டியதுதானே நியாயம் என்று தீர்மானித்துக் கொண்ட அவள், சரியான சந்தர்ப்பத்தில் தன் தகப்பனாரிடம் கூறி விட்டாள்.

இந்தச் செய்தியைக் கேட்ட பாகவதர் அப்படியே அதிர்ந்து போய் விட்டார்.

‘வசந்தியைத் தனக்குப் பிடிக்கவில்லை என்பதையோ; அல்லது சுசீலாவைத் தனக்குப் பிடிக்கிறது என்பதையோ, ஏன் இந்த ஹரி என்னிடம் இதுவரை சொல்லாமலே இருந்து விட்டான்? இதற்குக் காரணம், என்னிடம் அவனுக்கு உள்ள பயமா, அல்லது மரியாதையா?‘ என்பதை அவரால் ஆராய முடியவில்லை.

சுசீலாவும், வசந்தியும், இரண்டு கண்களே என்றாலும், இதில் எதைக் குருடாக்கிக் கொள்ள அவர் மனம் ஒப்பும்? இந்தச் செய்தியைக் கேட்டால், சுந்தரியின் மனம் என்ன பாடுபடும்? இதை அவரால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. காயத்திரி இந்தச் செய்தியைக் கூறியவுடன், முதல் நாள் அவளிடம் அவரால் எதுவுமே பேச முடியவில்லை.

மனத்தில் தெம்பை ஏற்றிக் கொண்டு, மறு நாள்தான் பாகவதர் காயத்திரியிடம் எல்லாவற்றையும் விவரமாகக் கேட்டார். அதன் பிறகுதான், அவருக்கு ஒரு உண்மை புலனாயிற்று.

—ஹரியைப் பொறுத்த வரை, அவனுக்கு வசந்தியோ, சுசீலாவோ அல்லது வேறு எந்தப் பெண்ணுமோ வேண்டாம். ஏனெனில், அவன் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்கிற கட்சியைச் சேர்ந்தவன். ஆனால், சுசீலாவுக்காகத்தான் இந்தத் திருமணப் பேச்சே இப்போது திசை மாறியிருக்கிறது. அவனை மணந்து கொள்ள வேண்டுமென்று சுசீலா ஒரே துடியாக இருக்கிறாள். ‘ஹரி மறுத்து விட்டாலும், வசந்தியால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியும்; ஆனால், சுசீலாவோ உயிரையே விட்டு விடுவாள்’ என்று கூறிய காயத்திரியின் வார்த்தைகள் அவர் நெஞ்சில் எதிரொலித்தன. சுசீலாவின் குணத்துக்கும், முரட்டுச் சுபாவத்துக்கும் அநுசரித்துப் போக, ஹரியைத் தவிர, எந்தப் புருஷனும் கிடைக்க மாட்டான் என்பதுதான் எவ்வளவு உண்மை?

சுசீலாவைப் பற்றிக் காயத்திரி கூறிய கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்த்த போது; அவளுக்குச் சகல விதத்திலும் ஹரியே ஏற்றவன் என்பதை அவர் மனம் ஆமோதித்தது. ஆனால், இத்தனை பெரிய விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது; ஆரம்பித்த பின், அது எப்படி முடியும் என்னும் கவலையிலேயே பாகவதர் மனம் உழன்று கொண்டிருந்தது.

“இந்த விஷயத்தைப் பற்றி இப்போது பேச வேண்டாம். சமயம் பார்த்து, நானே சுந்தரியிடம் பக்குவமாகப் பேசி, விளக்கி விடுகிறேன்” என்று கூறி விட்டார். காயத்திரி தன் தலையில் இருந்த மிகப் பெரிய பாரம் ஒன்று இறக்கப்பட்டது போல் உணர்ந்தாள்.

இந்த விஷயத்துக்குப் பிறகு சுந்தரியைப் பார்க்கும் போதெல்லாம், பாகவதருக்குத் துக்கம் நெஞ்சை அடைக்கும். தன்னையே நம்பிச் சகலத்தையும் துறந்து நிற்கும் கள்ளங்கபடு அறியாத ஒரு பெண்ணை ஏமாற்றி வருவதாக அவர் நெஞ்சம் உறுத்தும். ஆயினும், வேறு வழியின்றி அந்த உறுத்தலை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

பாகவதர் படுக்கையில் விழுந்ததிலிருந்து, சுந்தரியும் சுவாமிமலைக் குடும்பச் செலவைப் பகிர்ந்து கொண்டு வந்தாள். மாதம் பிறந்தவுடன் முதல் தேதியன்று, செலவுக்கென்று பணம் கொண்டு வந்து கொடுத்து விடுவாள்.

வழக்கம் போல், அந்த மாதமும் சுந்தரி வந்தாள். பணத்தை இரண்டாம் பேருக்குத் தெரியாமல், லட்சுமியின் கையில் கொடுத்து விட்டுப் பாகவதரைப் பார்த்து விட்டுப் புறப்பட்டுப் போனாள். இதைப் பற்றி, லட்சுமியம்மாளுக்கு ஒன்றுமே தெரியாது. அவள் பேசாமல், வாங்கி வைத்துக் கொண்டாள்.

ஆனால், பாகவதருக்குச் சுந்தரியின் பணத்தை இனியும் ஏற்றுக் கொள்வது தர்ம விரோதமாகவும், நம்பிக்கைத் துரோகம் போன்ற பாவமாகவும் தோன்றியது.

‘ஹரி என் சிஷ்யன்; எல்லாவற்றுக்கும் மேலாக நான் வளர்த்த பையன்; என்னுடையவன். நாளை வசந்தியை மணந்து கொள்ளுவதன் மூலம், இரு குடும்பத்தின் உறவும் மேலும் ஒன்றாகி, பலப்படப் போகிறது. பாங்கிலுள்ள ஹரியின் பணங்கூட நாளை வசந்திக்குத்தானே சேரப் போகிறது? அதனால், சுந்தரியின் உதவிகளை எத்தனை ஏற்றுக் கொண்டாலும் தவறில்லை’ என்று அவர் அதுவரை எண்ணி வந்தார். ஆனால் அந்தச் சமாதானம் எல்லாம் இன்று எங்கே?—

சுசீலாவும், ஹரியும் அன்று சண்டை போட்டுக் கொண்டது போலவே, இன்று அவருடைய கண் எதிரிலேயே சிரித்துப் பேசி, மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருவரை ஒருவர் மணந்து கொள்ளப் போகிறவர்கள் என்கிற முடிவில், அவர்களுடைய நடைமுறை இருந்தது. கொஞ்ச நாளைக்குப் பிறகு, லட்சுமியம்மாளுக்கும் இந்த விஷயம் தெரிந்தவுடன், அவள் அப்படியே துடித்துப் போனாள். வசந்திக்கு ஏற்படப் போகும் ஏமாற்றத்தை எண்ணி, சுந்தரி கூட அப்படிக் கவலைப்பட்டு உருக மாட்டாள்: லட்சுமியம்மாள் அப்படித் தவித்துப் போனாள்.

சமாதானம் சொல்ல வந்த காயத்திரியை, லட்சுமியம்மாளுக்குக் கன்னத்தில் அறைந்து அனுப்ப வேண்டும் போலிருந்தது; தன் கணவரிடம் ஒர் ஆவர்த்தனம் அழுது தீர்த்தாள்.

“இது அடுக்குமா? கூப்பிட்டுக் கண்டிக்காமல், பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே! சுந்தரிக்குத் தெரிந்தால், பிராணனையே விட்டு விடுவாளே!” என்று துடித்தாள்.

“நான் என்ன செய்ய லட்சுமி? கால் ஒடிந்து, படுக்கையில் கிடக்கிறேன். கடையாணி இல்லாத வண்டி போல், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு இந்த குடும்ப வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. என்றைக்கு இடையில் குடை சாய்ந்து, எல்லாருமாக விழப் போகிறோமோ, அது வரை சவாரி நிற்கப் போவதில்லை. உனக்காக வேண்டுமானால், ஹரியையும் கூப்பிட்டு விசாரிக்கிறேன். உன் பெண்ணைக் கூப்பிட்டுக் கண்டிக்கிறேன். ஆனால், திருத்துவதற்கு நீயோ, நானோ யார்?”

ஹரியைக் கூப்பிட்டு விசாரித்தார். அவன் அந்த ஒரே பதிலைத்தான் குருவினிடமும் கூறினான்.

“என்னைப் பொறுத்த வரையில், திருமணம் என்பது நான் விரும்பாத ஒன்று. ஆனால், எப்போதும் எல்லா விஷயத்தையும் போலவே, நான் என்னுடைய இந்தத் திருமண விஷயத்திலும்; தங்கள் உத்தரவுப்படியே நடக்கச் சித்தமாக இருக்கிறேன்.”

“அப்படி நீ என் சொற்படியே, உன் திருமண விஷயத்திலும் மனப்பூர்வமாக நடக்கச் சித்தமாக இருந்தால், உன் விசுவாசத்தைப் பாராட்டுகிறேன். நான் இது வரை உன்னைக் கூப்பிட்டு, இது விஷயமாகப் பேச முடியவில்லையே தவிர; வசந்திக்கே நீ என்பது நாங்கள் என்றோ முடிவு செய்த விஷயம். வசந்தியை மணந்து கொள்ள உன் சம்மதத்தை இப்போது நீ என் எதிரிலேயே கூறி விட்டால், பிறகு, நான் என் விஷயத்தை முடித்து விடுகிறேன்” என்று பாகவதர் கூறிக் கொண்டிருக்கும் போதே, அங்கே சுசீலா வந்தாள்.

“அப்பா, எங்களுக்குள் இது முடிந்து போன விஷயம். ஒரு தரம் முடிவான விஷயத்தைப் பற்றி மீண்டும், என்ன அப்பா சம்மதம் கேட்கப் போகிறீர்கள்?”

இதைக் கேட்டதும், அருகிலிருந்த லட்சுமியம்மாளுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.

“என்னடீ முடிந்து போன விஷயம்? எது முடிந்து போன விஷயம்? வசந்தியை ஹரிக்குத்தான் கொடுக்கிறதாக எத்தனையோ நாளாக நாங்கள் எல்லாரும் பேசிக் கொண்டிருப்பது, உன் காதில் இன்றுதான் புதிதாக விழுந்ததோ? வீணாக, அந்த அப்பாவிப் பெண்ணின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதே. இது வரை, இரண்டு குடும்பத்துக்கும் சண்டை, சச்சரவு இல்லாமல் இருந்து வருகிறது. இத்தனை நாளைக்குப் பிறகு, ஹரி இல்லை என்று ஆனால், அம்மாவும், பெண்ணும் மனம் உடைந்து பிராணனையே விட்டாலும், விட்டு விடுவார்கள். அந்தப் பெண் ஹரியின் மீது உயிரையே வைத்திருக்கிறாள்” என்று லட்சுமியம்மாள், மகளிடம் ஆத்திரத்தைக் கொட்டினாள்.

சுசீலாவுக்கும் இதைக் கேட்டதும், கோபம் அதிகமாக. வந்தது.

“ஆமாம், ஹரி இல்லாமல் என்னாலும்தான் வாழ முடியாது. ஆனால், அதற்காக, ஹரியை இழந்து உயிரை விட்டு விட எனக்கு விருப்பமில்லை; சண்டை போட்டாவது, ஹரியை நான் அடைந்தே தீருவேன்.”

“தூ! பேசாதே. நீ ஹரியின் மீது உயிரை வைத்திருக்கிற லட்சணந்தான் தெரிகிறதே. அவன் வந்ததிலிருந்து — எட்டு வயதில் பாவாடை கட்டிக் கொண்டு ஆரம்பித்த சண்டை; இன்று பத்து வருஷம் ஆகியும் ஓயவில்லை. இனி மேலும், வசந்தியைக் கட்டிக் கொண்டு, எங்கே ஹரி சுகப்பட்டு விடப் போகிறானோ என்றுதான், நீ இப்போது இப்படி ஆரம்பித்திருக்கிறாய். உன் கெட்ட எண்ணம் யாருக்குத் தெரியாது?”

“நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள். எனக்கு அதைப் பற்றி, ஒன்றும் கவலையில்லை.”

“உனக்கு எதைப் பற்றித்தான் கவலை? எதைப் பற்றியாவது கவலைப் படுகிறவளாக இருந்தால், உன்னால் இப்படித் திட்டம் போட்டுக் கொண்டு பேச வருமா? பாவி! நான் இனி எந்த முகத்தோடு சுந்தரியைப் பார்ப்பேன்?” என்று அழுது கொண்டே லட்சுமியம்மாள் உள்ளே சென்று விட்டாள்.

“அம்மா!” என்று அரற்றிக் கொண்டே நின்ற சுசீலாவின் முதுகைத் தட்டி, “கவலைப்படாதே” என்று தேற்றினாள் காயத்திரி.

இதையெல்லாம் பார்த்த பாகவதர் முடிவுக்கு வந்து விட்டார். உள்ளே சென்ற லட்சுமியை அழைத்தார்.

“சுந்தரியையும், வசந்தியையும் நான் சமாதானம் செய்து கொள்கிறேன். சுசீலாவின் திருமணம் நடக்கட்டும்” என்று கூறி விட்டு, ஹரியின் பக்கம் திரும்பினார். “ஹரி, உனக்குச் சுசீலாவை மணந்து கொள்ளச் சம்மதமா?” என்றார்.

“உங்கள் விருப்பம்” என்றான் ஹரி.