உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/பெரிய விலாசம்

விக்கிமூலம் இலிருந்து
30. பெரிய விலாசம்

ஞ்சாவூருக்குப் பாடத்துக்குப் போனவனைக் காணவில்லையே என்று, பாகவதர் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார். அவரோடு சேர்ந்து, வீட்டிலுள்ள அனைவருமே துயரத்தில் ஆழ்ந்திருந்தனர். அந்த துயரத்துக்கு மத்தியில், ஹரியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. போன இடத்தில் உடம்பு சரியில்லாமற் போய் விட்டதென்றும், இப்போது சற்றுக் குணம் என்றாலும், மிராசுதார் வீட்டினர் பிடிவாதமாக இரண்டு நாள் தங்கி, உடம்பை பூரணக் குணப்படுத்திக் கொண்டு போகலாம் என்று வற்புறுத்துவதனால், வியாழன் காலை புறப்பட்டு வருவதாகவும் எழுதியிருந்தான்.

அதைப் படித்ததும் பாகவதர் பதறிப் போனார்.— “கண்காணாத இடத்தில், உடம்பு சரியில்லாமற் எதற்காகத் தங்க வேண்டும்? ஆளை அனுப்பலாம் என்றாலும், விலாசங்கூட அவன் எழுதவில்லையே! அவர்கள் அவனை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டுமே; சங்கீதக் கலைக்கே அவன் பொக்கிஷமாயிற்றே. சுவாமிநாதன்தாம் அவனைக் காப்பாற்றி அனுப்பி வைக்க வேண்டும்” என்று சதா வேண்டிக் கொண்டேயிருந்தார். லட்சுமியாலும் கணவருடைய இதே வார்த்தைகளைத்தான் எதிரொலிக்க முடிந்தது.

காயத்திரி மட்டும், ‘ஹரிக்கு ஒன்றும் நேர்ந்து விடாது. ஒரு குறைவுமில்லாமல் காந்தாமணி கவனித்துக் கொள்வாள். ஹரிக்குப் பெண்களிடம் அபிமானத்தைப் பெற்று விடுகிற ராசி என்றுமே உண்டு. அதிலும் பணக்காரியான காந்தாமணியைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? ஹரிக்கு அங்கே இந்நேரம், ராஜ வைத்தியந்தான் நடக்கும்’ என்று காந்தாமணியைப் பற்றி உயர்வாகவே கற்பனை செய்து, மனத்தைத் தேற்றிக் கொண்டாள்.

வசந்தி, எல்லா விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டுதான், ஊருக்குப் புறப்பட்டாள். ஹரியின் விஷயத்தில், தனக்கும், அம்மாவுக்கும் பங்கு உண்டு; அவனுக்கு ஏற்படும் நல்லது கெட்டதற்குத் தாங்களும் பாத்தியதைப் பட்டவர்கள் அல்லது அதற்காக வேதனைப்படுகிறவர்கள் என்று அங்கே அதிகமாக யாரும் காட்டிக் கொள்ளாதது, வசந்திக்கு உள்ளூற வேதனையை அளித்தது. ஒரு விதத்தில், தன்னையும், அம்மாவையும், அநேகமாக எல்லாரும் மறந்து விட்டதாகவோ, ஏன் ஒதுக்கி விட்டதாகவோ கூட வசந்திக்குத் தோன்றியது. ஆனால், அவள் தன் அநுபவக் குறைவினால், அப்படி எண்ணுவதாகவே, சுந்தரி மகளைக் கண்டித்தாள். ஆனால், அதை வசந்தி ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. ‘வரவர, பெரியம்மாவைத் தவிர, அந்த வீட்டில் நம்மை யாரும் மதிப்பதில்லை’ என்று அவள் கூறினாள்.

“நீ சொல்லுகிறபடியே இருந்தாலும், அதற்காக நாம் அவர்களை ஒதுக்க முடியாது; ஒட்டிக் கொண்டுதான். வாழ்ந்தாக வேண்டும். யார் எப்படி இருந்தாலும், இனி மேல், எனக்கு எல்லாம் ஒன்றுதான். ஆனால், ஹரி எப்படி நம்மிடம் இருக்கிறான் என்பதுதான் நமக்கு முக்கியம்” என்று கூறினாள்.

குறிப்பிட்டபடி, ஹரி தஞ்சாவூரிலிருந்து வியாழக் கிழமை சுவாமிமலைக்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டவுடன்தான், பாகவதருக்கும், லட்சுமியம்மாளுக்கும் தெம்பு வந்தது.

சுசீலா வாய் ஓயாமல், ஹரியைக் கோபித்துக் கொண்டே இருந்தாள். “மேல் விலாசம் இல்லாமல், மொட்டைக் கடிதம் எழுதிப் போடுகிற பழக்கம் என்ன பழக்கம்? எங்களுக்கெல்லாம் எத்தனை கவலையாய்ப் போய் விட்டது! வந்து ஒரு நடை பார்க்கலாமென்றால் கூட, தஞ்சாவூரில் மிராசுதாரர் கல்யாணராமன் வீடு என்றால் யார் கண்டார்கள்? எங்கே தேடிக் கொண்டு போவது?” என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு ஹரியைத் திணற அடித்தாள்.

ஹரி, அதற்கெல்லாம் சேர்த்து ஒரே பதில்தான் கூறினான்: “நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன். இன்னும் பூரண குணம் அடையவில்லை” என்றான்; ‘உன் தாக்குதல்களை என்னால் தாங்க முடியாது’ என்பதே போல்.

ஹரி ஊரில் இல்லாத போது, வந்த கடிதங்களைக் கொண்டு வரும்படி பாகவதர் கூறினார். சுசீலா அவற்றைக் கொண்டு வந்து, ஹரியினிடம் கொடுத்தாள். முக்கியமான கடிதங்களுக்கு அவன் உடனே பதில் எழுதிப் போட்டான்.

பாகவதரைப் பார்க்க டாக்டர் வந்தார். அப்போது அருகில் இருந்த சுசீலா, ஹரியின் உடம்பையும் பார்க்கும்படி கூறினாள். ஹரியையும் சோதித்து, நீளமான ‘பிரிஸ்கிரிப்ஷன்’ ஒன்றை எழுதிக் கொடுத்தார். “அதிக உழைப்பினால் ஏற்பட்ட பலவீனத்தைத் தவிர, வேறு ஒன்றுமில்லை” என்று சொன்னார்.

“டாக்டர் சொல்லி விட்டுப் போனது ஒரு புறம் இருக்கட்டும்; கச்சேரிக்குப் போய்ப் பாட வேண்டியது தீராத விஷயம். ஆனால், திருவிடைமருதூருக்கும், தஞ்சாவூருக்கும், இப்போது டியூஷனுக்குப் போகா விட்டால் என்ன?” — இதுதான் சுசீலாவின் கேள்வி.

ஆனால், ஹரி செய்கிற காரியத்தில் தலையிடுவதை, பாகவதரும், லட்சுமியம்மாளும் குறைத்துக் கொண்டு, “அவனுக்குத் தெரியாதா? இன்னும் அவன் என்ன பச்சைக் குழந்தையா?” என்று ஒதுங்கியே நடந்து கொண்டார்கள்.

பாகவதர் படுக்கையில் விழுந்ததிலிருந்து, பெருகிய குடும்பச் செலவுக்கு எல்லா வருவாயும்தான் தேவைப் பட்டது. போன நாள், போகாத நாள் என்று, கணக்குப் பார்க்காமல், மாதம் மாதம், நானுாறோ, ஐநூறோ தஞ்சாவூர் மிராசுதார் கொடுத்ததாக, ஹரி கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருக்கிறான். இந்த நிலையில், அறவே டியூஷனுக்கும் போகாமல் இருந்தால் எப்படி?

‘ஹரி படுகிற சிரமத்தைப் பார்த்து, திருவிடைமருதூருக்காவது போவதைக் கொஞ்ச நாள் நிறுத்திக் கொள்ளச் சொல்லலாம் என்றாலோ, அது பெரிய விபரீதமாகி விடும், சுந்தரிக்குப் புரிந்தாலும், வசந்தி சிறிசு; இரண்டுங்கெட்டான். ஏதாவது தவறாக எடுத்துக் கொள்வாள். எல்லாவற்றுக்கும் மேல்; நாளைக்கு அவனையே கட்டிக் கொள்ளப் போகிறவள்’ என்று பலவாறு எண்ணிப் பார்த்த பிறகு, லட்சுமியம்மாள் ஏதும் கூறாமல் இருந்து விட்டாள். அவன், முதல் நாள் திருவிடைமருதூருக்குப் போன போது, கசீலா தடுத்துப் பார்த்தாள். ஹரி அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், அம்மாவிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டுச் சென்று விட்டான்.

வர வரத் தன்னை, ஹரி லட்சியம் செய்வதில்லை என்று சுசீலாவின் உள்ளத்தில், லேசாக உறுத்திக் கொண்டே இருந்தது. பணம், காசை உத்தேசித்துத் தஞ்சாவூருக்குப் போவதாவது அவசியம் என்று அவள் ஒப்புக் கொள்ளத் தயாராக இருந்தாள். ஆனால், ‘திருவிடைமருதூருக்குப் போய், இப்போது வசந்திக்குக் கிளாஸ் எடுத்தால், வயிறா நிறையப் போகிறது? போகா விட்டால், தலை வெடித்து விடுமா, அரங்கேற்றம் நின்று போகுமா?’ என்று மனத்துக்குள்ளேயே பொருமிக் கொண்டாள்.

ஹரிக்குத் தஞ்சாவூரிலிருந்து வந்ததிலிருந்து, மன நிம்மதி இல்லை. காந்தாமணியின் மனத்தை மிகவும் புண்படுத்தி விட்டதாக, உள்ளுணர்வு அவனை உறுத்திக் கொண்டேயிருந்தது.

பார்க்கப் போனால், இதற்கெல்லாம் முதல் குற்றவாளி, தானே என்பதை உணர்ந்தான். ஆதியிலிருந்தே, அவன், தன்னை ஒரு பாட்டு வாத்தியாராக எண்ணிக் கொண்டு, அந்த வீட்டுக்குச் செல்லவில்லை. சத்திரத்தில் தங்கியிருந்தவனை, வருந்தி அழைத்துச் சென்றார்கள்: ராஜ உபசாரம் செய்தார்கள். அவனுடைய பாட்டு, அவர்களுக்குப் பிடித்திருந்தது. பெண்ணுக்கு, ஹரி பாட்டுச் சொல்லிக் கொடுக்க ஒப்புக் கொள்ள வேண்டுமே என்று கவலைப்பட்டாள் காந்தாமணியின் தாய்.

ஆரம்பத்தில், அவனும் பிடி கொடுக்காமல், சற்றுப் பிகுவோடுதான் நடந்து கொண்டான். ஆனால் நாளடைவில், அவனுடைய பிடிகள் எல்லாமே நழுவிப் போய், அவன் அவர்களுடைய அன்புப் பிடியில் வசமாகச் சிக்கிக் கொண்டான். காந்தாமணிக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கப் போவதைக் கச்சேரிக்குப் போவதை விட, முக்கியமாகவும், அதிக மதிப்புள்ளதாகவும் கருதினான். அப்படிக் கருதுவது, அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது: திருப்தியைத் தந்தது. ஆனால், அந்த அதிர்ஷ்டத்தில் திடீரென்று இப்படி இடி விழுமென்று அவன் எதிர் பார்க்கவே இல்லையே!

சுவாமிமலை டாக்டர் எழுதிய டானிக், நன்றாகவே வேலை செய்தது. ஹரிக்குப் பழைய தெம்பு மீண்டு, மிகுந்த உற்சாகமாகவே காணப்பட்டான். இடையே இரண்டு மூன்று கல்யாணக் கச்சேரிகளுக்கும் போய் வந்தான். மத்தியில், ஒரு வாரத்துக்கு அவனுக்குச் சிறிய ஓய்வு இருந்தது. அதில், தஞ்சாவூருக்குப் போகலாம் என்று: ஹரி முடிவு செய்திருந்தான். அவன் ஊருக்கு வந்த பிறகு, காந்தாமணியிடமிருந்து தன்னைப் பற்றி விசாரித்துக் கடிதம் ஏதாவது வரும் என்றே ஆவலுடன் எதிர்பார்த்தான். ஆனால், அது எத்தனை பெரிய பைத்தியக் காரத்தனம் என்பது அவனுக்குப் பிறகு பட்டது. காந்தாமணியைக் கடிதம் எழுதக் கூடாது என்று எச்சரித்தவனே அவன்தானே?

எப்படியும், மறுநாளே தஞ்சாவூர்ப் பாடத்துக்குப் போய் விட்டு வந்தால்தான், அவன் மனத்துக்கு அமைதி ஏற்படும் போல் இருந்தது. காந்தாமணியைப் பார்க்காமல், அவனால் இருக்க முடியவில்லை. பாகவதர் அவனை நேசிப்பது போல், அவன் காந்தாமணியை நேசித்தான். அன்று அவனுடைய பேச்சு காந்தாமணிக்கு அதிர்ச்சியை அளித்திருந்தாலும், புத்திசாலியான அவள். யோசித்துப் பார்த்து, என்ன முடிவு செய்து வைத்திருக்கிறாள் என்று. அறிந்து கொள்ள வேண்டாமா என்று அவன் மனம் பறந்தது.

மறுநாள் காலை தஞ்சாவூருக்குப் புறப்பட்டது போது, சுசீலா, “போகிற இடத்தின் விலாசத்தைக் கொடுத்து விட்டுப் போங்கள்” என்று குறுக்கே நின்றாள்.

“ஏன், மறுபடியும் நான் அங்கே போய்ப் படுக்கையில் விழுந்து விடுவேன் என்றா? அப்படியெல்லாம் ஒரு நாளும் நேராது. நூறு ரூபாய் டானிக் சாப்பிட்டிருக்கிறேன். ஆறு மாதத்துக்கு கவலை இல்லை; வழியை விடு” என்றான் ஹரி.

உடனே சுசீலா, “உங்களைப் பற்றி இங்கே கவலைப் படுவதாகவா நான் கூறினேன்?” என்றாள் அலட்சியத்துடன்.

“பின், எதற்கு விலாசம் ”

“எல்லாருடைய கவலைக்கும் பாத்திரமாய்ப் படுத்திருக்கும் அப்பாவுக்காகத்தான் கேட்கிறேன், விலாசத்தைச் சொல்லுங்கள்.”

ஹரி பரிதாபமாகத் திரும்பிப் பார்த்தான். காயத்திரி கதவோரமாக நின்று, ‘மாட்டிக் கொண்டாயா?’ என்பது போல் சிரித்தாள்.

“என்ன விழிக்கிறிர்கள்? விலாசம் மறந்து போய் விட்டதா?” சுசீலா ஒரு சொடுக்குச் சொடுக்கினாள். பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, ஹரி அவளை விழித்துப் பார்த்தான்.

“விலாசம் மறந்து விட்டது என்று யார் சொன்னார்கள் சுசீலா? நீ போய்ப் பேப்பரும், பென்சிலும் கொண்டு வா; எழுதிக் கொடுக்கிறேன்” என்றான் ஹரி,

“இதற்குப் பேப்பரும் பென்சிலும் வேண்டாம். சும்மாச் சொல்லுங்கள். நான் மாடிக்குப் போய்க். குறித்துக் கொள்கிறேன்” என்றாள் சுசீலா.

“சரி சரி, உன் இஷ்டம். விலாசத்தைச் சொல்லி விடுகிறேன்” என்ற ஹரி, “ஆர். கல்யாணராமன், கேர் ஆஃப் ஆதிநாராயண சேஷ சாயி வைகுண்ட நாதன், பாலஸ் கார்டன்ஸ், 112 / 283 கட்பாலஸ் ரோடு, ஏழாவது சந்து, தஞ்சாவூர்”, என்று கூறி முடிப்பதற்குள், “கொஞ்சம் இருங்கள்” என்று குறுக்கிட்ட சுசீலா, “பெரிய மிராசுதார், ராவ்பகதூர் என்று கூறி விட்டுச் சந்தையும், பொந்தையும் சொல்கிறீர்களே” என்று கூறிக் கொண்டே “பேப்பரும், பென்சிலும் எடுத்து வருகிறேன்”, என்று மாடியை நோக்கி ஓடினாள். வெற்றிப் புன்னகையோடு, ஹரி காயத்திரியைப் பார்த்துச் சிரித்தான்.

.“பிழைத்துக் கொள்வாய்” என்று அவளும் பதிலுக்குச் சிரித்தாள். மறுபடியும் சுசீலா வருவதற்குள், ஹரி புறப்பட்டுச் சென்று விட்டான்.

டுகிற ரெயில் ஜன்னல் வழியே, வெளியுலகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ஹரி.

பண்டாரவாடை ஸ்டேஷன் வந்ததும், ஹரி இரண்டு மூன்று கவுளி, இளம் வெற்றிலையாக வாங்கிப் பையில் வைத்துக் கொண்டான். காந்தாமணியின் தாய், மிகவும் அதிகமாக வெற்றிலை போடும் பழக்கமுடையவள். அது அவளுக்காகத்தான். அதே போல், ஒவ்வொரு முறை போகும் போதும், ஹரி மறக்காமல், காந்தாமணிக்காக சுந்தரப் பெருமாள் கோவில் ஸ்டேஷனிலிருந்து, வெள்ளரிப் பிஞ்சு வாங்கிப் போவது வழக்கம். இம்முறை, அவன் கொஞ்சம் அதிகமாகவே வெள்ளரிப் பிஞ்சுகளை வாங்கிப் பையில் அடைத்துக் கொண்டான். திருவனந்தபுரம் பாஸஞ்சர் தஞ்சாவூர் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது.

ஹரி, வேகமாகப் பையைத் தூக்கிக் கொண்டு, கீழே இறங்கினான். .“அண்ணா நமஸ்காரம்” என்று, இரண்டு கையிலும் காபி டிரேயை ஏந்திய வண்ணம், வி. ஆர். ரூம் பையன் ஹரிக்குத் தலையால் வணக்கம் தெரிவித்தான். அவன் சங்கீத ரசிகன். ஹரியும் பதில் வணக்கம் கூறி, மேலே நடந்தான். சிறந்த சங்கீத ரசிகர்களும், அனேகமாக அனைத்து பிரபல சங்கீத வித்வான்களுக்கும் நண்பரான வி. ஆர். ரூம், உப்புமா ராயருடன், அந்தப் பையனை ஹரி அடிக்கடிப் பாகவதரோடு செல்கையில் பார்த்திருக்கிறான்.

தொடர்ந்து வந்த பையன், ஹரியை மறித்து நின்று கொண்டு, .“காபி சாப்பிடுங்கள் அண்ணா” என்று யாருக்கோ ஸ்பெஷலாக எடுத்துப் போன காபியை ஹரியிடம் நீட்டினான்.

இம்மாதிரியான ரசிகர்களிடம், லௌகிகப் பேச்சோ, மறுத்துப் பேசுவதோ பயன்படாது என்பது ஹரிக்குத் தெரியும். ஏனெனில், அவர்களுடைய உபசாரம் உதட்டிலிருந்து வருவதில்லை; அந்தரங்க சுத்தியுடன் இதயத்திலிருந்து வருவது. ஆகவே, அவர்கள் மனத்தைப் புண்படுத்த ஹரிக்கு விருப்பமில்லை.

மறுக்காமல், அவன் நீட்டிய காபியை மளமளவென்று குடித்துவிட்டுச் சட்டைப் பைக்குள் கைவிட்டுப் பணத்தோடு ஹரி திரும்பினான்: பக்கத்திலிருந்த பையனைக் காணவில்லை. ‘டாடா’ காட்டிக் கொண்டே, இன்ஜின் வரைப் போய் விட்டான். இப்படிப்பட்ட விசிறிகள் ஹரிக்கு ரெயிலும், பஸ்ஸும் ஓடுகிற மார்க்கத்தில் அனேகர் உண்டு.

அந்தப் பையனை மனத்தால் வாழ்த்திக் கொண்டே, மேம்பாலம் ஏறப் போனான். கையிலிருந்த பையை யாரோ பிடுங்குவது போல இருக்கவே, ஹரி திரும்பிப் பார்த்தான். பக்கிரி மந்தகாசம் புரிந்து கொண்டே, இரண்டு கைகளினாலும் ஹரியிடமிருந்த பையைப் பிடிவாதமாகக் கேட்டு வாங்கி, நாய்க் குட்டி போல் குழைந்து கொண்டே, பின்னாலேயே பாலத்தில் ஏறினான்.

“எங்கே இவ்வளவு தூரம், மாமா?” ஹரி மெதுவாகக் கேட்டான்.

“நாளாயிற்று! உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன்” என்றான் பக்கிரி. இப்போதெல்லாம் பக்கிரி, மருமானை மரியாதை போட்டுத்தான் அழைப்பது வழக்கம்.

ஹரி சிரிக்காமல் கேட்டான்: “சாதாரணமாகவே பேசு மாமா. நமக்குள்ளே மரியாதை எதற்கு? நான் இப்போது இங்கு வருவேன் என்று உனக்கு எப்படித் தெரிந்தது?”

அவன் பதில் சொல்லாததைக் கண்டு, “இந்தச் சிங்கப்பூர்க் கைலியைக் கட்டிக் கொண்டு என் பின்னால் வரக் கூடாதென்று, உனக்கு நூறு தடவையாவது நான் சொல்லியிருப்பேன் இல்லையா மாமா?” என்றான் ஹரி.

“கோவிச்சுக்காதே தம்பி; பொய் சொல்லிப்பிட்டேன். நான் இப்படி இங்கே உன்னைச் சந்திப்பேன்னு நினைக்கவே இல்லை. எதிர்பாராமல் பார்த்தவுடன், தொட்டுக் கூப்பிடணும்னு ஆசையிலே கூப்பிட்டேன்.” பக்கிரி மிகுந்த தாழ்ந்த குரலிலேயே கூறினான்.

இருவரும் பேசிக் கொண்ட, வண்டிப் பேட்டையை அடைந்தனர்.

“சரி, ஊரிலே எல்லாரும் சௌக்கியந்தானே?”,

“எல்லாரும் சௌக்கியந்தான். அப்பாவுக்குத்தான் ரொம்ப டேஞ்சரா இருக்கு. பாவாடை நிதம் ரெண்டு வேளையும் வந்து கவனிச்சு, மருந்துத் தண்ணி வாங்கிக் கொடுக்கிறான்.”

ஹரிக்குச் ‘சுரீர்’ என்றது. பக்கிரியின் பேச்சில் தொனித்த அபஸ்வரம் அவன் மனத்தைக் கலக்கியது. மின்னல் வேகத்தில் பாவாடையோடு, சித்தியின் பழைய நினைவும் அவன் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சியது.

“அப்பனைக் கவனித்துக் கொள்ளப் பாவாடைதான் வேண்டுமோ? ஏன் மாமா, பணம் நான் கொடுக்கிறேன்; உனக்கு வீட்டோடு இருந்து, குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளக் கூட முடியவில்லையா?”

“நீ கொடுக்கிறதைக் கொண்டு மாத்திரம் குடும்பம் நடக்குமா தம்பி?”

“அதுக்காக நீயும் ரெயிலடி, பஸ் ஸ்டாண்டு, சினிமாக் கொட்டகை இங்கே எல்லாம் சம்பாதிக்கப் புறப்பட்டிருக்கிறாயா?”

“… … …”

“ஏன் மாமா பேசவில்லை?”

“… … …”

“உன்னாலே பேச முடியாது மாமா. உனக்குத்தான் இப்போவெல்லாம் வெட்கம், மானம் எல்லாம் புரிய ஆரம்பித்து விட்டதே!”

“கோபிச்சுக்காதே தம்பி. இனிமே இந்தப் பாவாடைப் பயல் வீட்டுக்குள்ளாற நுழைஞ்சான்னா, காலை முறிச்சுப் புடறேன். வெளையாட்டில்லே, சத்தியமாகச் சொல்லறேன் தம்பி!”

“ஏன் மாமா, சத்தியம் பண்ணினவுடனே, ‘விட்டேன் விட்டேன்னு’ அலறுவாயே. இப்போது பண்ணின சத்தியத்தை மாத்திரம், கெட்டியாய்ப் பிடிச்சுக்கப் போறியா?”

பக்கிரி குனிந்தபடியே, சிரித்துக் கொண்டான். ஹரி பையிலிருந்து, நாலைந்து வெள்ளரிப் பிஞ்சுகளை எடுத்து அவன் கையில் கொடுத்தான். பக்கிரி அதை அம்மன் கோயில் பிரசாதத்தைப் போல், பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான்.

“பணம் இருக்கிறதா, தீர்ந்து விட்டதா?”

“இன்னுமா தம்பி அது இருக்கும்? உன்னைப் பார்த்தே ஒரு மாசத்துக்கு மேலே ஆவுதே. அதுக்கும் முந்தித்தான் நூறு ரூவா கொடுத்தே?”

“ஏன் மாமா, நான் கணக்கா கேட்டேன்?”

“அதுக்கு இல்லே தம்பி; நீயும் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறே; நல்ல எண்ணத்தோட கொடுக்கிறே. அத்தெ, நாங்க ஆழும் பாழும் ஆக்கலேன்னு சொல்லறேன்.”

“மாமாவோட பேச்செல்லாம் பிரமாதமாகத்தான் இருக்கு. ஸென்ட் பூசுவதெல்லாம் இன்னும் இருக்கிறதா: இல்லே… விட்டாச்சா?”

“ஸென்டாவது, மண்ணாவது தம்பி! கல்யாணத்துக்கு நிக்கிற ரெண்டு அக்கா பெண்ணுங்களையும், மானம் போகாமே கட்டிக் கொடுத்தாப் பத்தாதா? நான் ஒண்ணு சொன்னாக் கோவிச்சுக்க மாட்டியே?”

“சும்மாச் சொல்லு மாமா!”

இருவரும் நடந்தே, கடைத் தெரு வரை வந்து விட்டனர். பக்கிரி மெதுவாகக் கூறினான்: “எங்கனாச்சும், ஒரு ஆயிரம் ரூபாய் புரட்டிக் கொடுத்தியானா, ரெண்டையும், எவன் கையிலாவது பிடிச்சுக் கொடுத்திடலாம். பின்னாலே, நமக்குப் பெரிய, மலையத்தனை பாரம் குறைஞ்ச மாதிரி.”

“ஆயிரம் ரூபாய்”?—ஹரியின் உதடுகள் முணுமுணுத்தன. அதில், இரண்டு பேருடைய வாழ்க்கை மலருகிறது. தன் சகோதரிகளுக்காக, அவன் இது கூடச் செய்ய வேண்டாமா?

“என்ன தம்பி யோசிக்கறே? கல்யாணச் செலவைப் பத்தியா?”

“ஆமாம்.”

“அதைப் பத்தி இப்போ என்ன தம்பி? உங்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி வச்சேன். சௌகரியப்படும் போது பார்த்துக் கிட்டாப் போவுது. இதுக்காக நீ வீணாக் கஷ்டப்படக் கூடாது.”

“கஷ்டம் ஒன்றும் இல்லை, மாமா. இந்தக் கல்யாணத்தைச் சீக்கிரமே நடத்தி விட வேண்டியதுதான். எனக்கு வேண்டியவர்கள் இந்தத் தஞ்சாவூரிலேயே இருக்கிறார்கள். நான் கேட்டால், எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பார்கள். அவர்களைக் கேட்டுத்தான், ஐயாவுக்குப் பெரிய வைத்தியமே செய்யலாம் என்று இருக்கிறேன்.”

“எந்த ஐயா? வாத்தியாருக்கா?”

“ஆமாம். அப்படியே கூட ஆயிரம் வாங்கி, உன் கையில் கொடுத்தால், நீ எல்லாவற்றையும் கச்சிதமாக முடித்து விட மாட்டாயா?”

“நிச்சயமா, தம்பி.”

ஆயிரம் ரூபாய் அப்போதே தன் கைக்கு வந்து விட்டது போலவும்; தன் மேற்பார்வையில் அரசூரே கிடுகிடுக்கும்படி இரண்டு கல்யாணங்களையும் நடத்தி வைப்பது போலவும் பக்கிரி மகிழ்ந்தான்.

குறுக்கே போன ஜட்கா ஒன்றை, ஹரி கை தட்டிக் கூப்பிட்டான். பக்கிரி, தன் கையிலிருந்த பையை அதில் வைத்தான். ஹரி ஏறி உட்கார்ந்ததும், கம்பியைப் போட்டு விட்டு, ‘என்ன செய்ய வேண்டும்?’ என்ற பாவனையில் உத்தரவுக்காகக் காத்திருந்தான்.

ஹரி, பக்கிரியின் சாப்பாட்டுச் செலவுக்கு ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தான். “ராத்திரி என்னை ஸ்டேஷனில் சந்தி மாமா. உனக்கு ஏதாவது முடிவு சொல்லுகிறேன்” என்று பக்கிரியை விடை கொடுத்து அனுப்பினான். பிறகு, குதிரை வண்டி ஹரியின் உத்தரவுப்படி, காந்தாமணியின் வீட்டை நோக்கி வேகமாக ஓடியது.

பக்கிரியோடு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததனால், ஹரிக்கும் நன்றாகப் பசித்தது. சுவாமிமலையில் சாப்பிட்ட இட்டிலியும், காபியும், எப்போதோ ஜீரணமாகி விட்டன. ஆனால், பக்கிரியுடன் ஹோட்டலுக்குள் நுழைய அவன் விரும்பவில்லை. நடு வழியில் வண்டியை நிறுத்தி, ஹோட்டலுக்குள் நுழையவும் அவன் விரும்பவில்லை. ஏனெனில், ஹரியின் தலையைக் கண்டதுமே, முதலில், தட்டில் பலகாரத்தைக் கொண்டு வந்து வைத்துச் சாப்பிடச் செய்த பிறகுதான், காந்தாமணியின் தாய் வேறு பேச்சைத் துவக்குவாள். ஆகவே, ‘வழியில் பணத்தையும் செலவு செய்து; அவர்கள் மனஸ்தாபத்தையும் ஏன் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்?’ என்று எண்ணி, பையிலிருந்த வெள்ளரிப் பிஞ்சை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். அது, உப்பும், நீரும், இனிப்பும், கலந்த மாவாய் அவன் வாயில் கரைந்தது. அதற்குள் குதிரை வண்டி காந்தாமணியின் வீட்டு வாசலில் வந்து நின்றது.

மகிழ்ச்சியோடு, வண்டியிலிருந்து பையுடன் இறங்கிய ஹரி, வாசற்படியருகில் சென்றதும், அப்படியே பேய் அறைந்தாற் போல் திடுக்கிட்டு நின்றான். காந்தாமணியும், அவள் தாயும் அவனை வரவேற்பதற்குப் பதில்; கதவில் பெரிதாகத் தொங்கிக் கொண்டிருந்த அலிகார் பூட்டுத்தான் ஹரியை வரவேற்றது. ஹரிக்கு ஒரு நிமிஷம் ஒன்றுமே புரியவில்லை. அவன் மனத்தை என்னமோ செய்தது.