பூவும் கனியும்/எதிர்கால மன்னர்கள்

விக்கிமூலம் இலிருந்து



I
எதிர்கால மன்னர்கள்

பெரியோர்களே ! தங்கைகளே ! தம்பிகளே!

இன்று நீங்கள் எல்லோரும் வெற்றி கண்டு விட்டீர்கள். நான் தோற்றுவிட்டேன். நீங்கள் எல்லோரும் உற்சாகமான வரவேற்புக் கொடுத்ததீர்கள். அது வெறும் சொல் வரவேற்பன்று.

ஒத்துழைப்பு - செம்மைக்கு வழி

நூற்றுக் கணக்கான மாலை உருவிலே, செண்டு உருவிலே எனக்கு வரவேற்புக் கொடுத்து என்னைத் திக்குமுக்காடச் செய்ததீர்கள். அத்தனை மாலைகளை யும் ஒரே சமயத்திலே நான் தூக்கியிருந்தால் தூக்க முடியாமல் மயங்கியிருப்பேன். ஆனல் நல்ல வேளையாகப் பல தோழர்கள் உடன் இருந்து கைகொடுத்தார்கள். அதைப் போலத்தான் என் வேலைகூட என் வேலை பெரிய வேலை; சிறிய வேலை அன்று பெருமைக்காக நான் இப்படிச் சொல்லவில்லை. ஒரு இலட்சம் இரண்டு இலட்சம் குழந்தைகளையல்ல. சென்னை இராச்சியத்தில் உள்ள 63 இலட்சம் குழந்தைகளையும் பள்ளிக்கூடத்திற்குக் கொண்டுவர வேண்டும். நல்ல படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுதான் என் வேலை. பெரிய வேலை தானே!

இதனை ஒருவனால் செய்ய முடியுமா? முடியாது இன்றைக்குப் பல தோழர்கள் என் மலர்ச் சுமையைப பங்கிட்டுக் கொண்டார்கள். இதைப்போல நீங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு, ஒத்துழைத்து, என் வேலையின் பளுவையும் பங்கிட்டு வாங்கிக்கொண்டால்தான் என் வேலை செம்மையாக முடியும்.

இன்று குழந்தைகள் - நாளை ஆளப் பிறந்தவர்கள்

ஏன் இந்த வேலை செம்மையாக முடிய வேண்டும் ? நீங்கள் இன்றைக்குக் குழந்தைகள், பையன்கள், பெண்கள்; ஆனால், நாளை இன்றைய குழந்தைகள்தாம்-இந்த நாட்டின் இளவரசர்கள், இளவரசி கள்தாம் - இந்த நாட்டின் எல்லாப் பொறுப்புகளையும் ஏற்று நடத்தப் போகிறவர்கள். இந்த நாடு நல்ல நிலைக்குப் போக, பெரிய நிலையை அடைய, பெரியவர்களாக உள்ளவர்கள் காலாகாலத்தில் அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்ய வேண்டும்; கல்வியைக் கொடுக்கவேண்டும். அதனை ஒழுங்கானபடி கொடுத்தால், உற்சாகத்தோடு கொடுத்தால், துணிவு குறையாதபடி கொடுத்தால் அவர்கள் நல்லவர்கள் ஆவார்கள்.

பல்லுயிர் ஒம்புதல்

நீங்கள் இன்று அளவு கடந்த வரவேற்புக் கொடுத்தீர்கள். இவ்வளவு பணம் செலவு செய்து இத்தனை மாலை வாங்கி யிருக்கிறீர்களே என்று நினைத்தேன். செலவு செய்வது என்றால் எனக்கு விருப்பமிருப்பதில்லை. நான் கருமி அல்லன். ஆனால் தனி மனிதனுக்கு அதிகம் செலவு செய்யக்கூடாது என்பது என் கொள்கை. ஆகவே எனக்காகச் செலவு பண்ணினதில் எனக்கு வருத்தம் இருந்தது.

வருத்தம் சிந்தனையாக மாறினால்தான் பயன். வருத்தம் வெகுளியாக மாறினால் ஒன்றுக்கும் பயன் இல்லை.

இந்த மாலைகள் எல்லாம் பயன்பட வேண்டும் என எண்ணினேன். ஆகையால் `பங்கிட்டுக் குழந்தைகட்குக் கொடுங்கள்' என்றேன். நான் ஒரு தூதன். எதற்குத் தூதன் ? ஒரு பள்ளிக்கூடத்தில் கொடுத்த அன்பை வாரி இன்னொரு பள்ளிக்குத் தரும் தூதன். நம் வாழ்க்கையும் அப்படித்தான் பெருஞ் செல்வம் உள்ளவர்களும் இருக்கிறார்கள், சிறு செல்வம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். ஆனல் எல்லோரும் தூதர்கள்தாம். இங்கே வாங்கி அங்கே கொடுப்பவர்கள்தாம். அதனால்தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது பெரியவர்

'பகுத்துண்டு பல்லுயிர்
ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம்
தலை'

என்று சொன்னர். ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும்? அவரவர் தங்களுக்குக் கிடைத்த சுகத்தை, தங்களுக்குக் கிடைத்த பொருளை, சொத்து சுதந்திரங்களையெல்லாம் மற்றவர்க்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். தனக்காக மாத்திரம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஒருவர் கைக்கு வருவது மற்றவர் கைக்குப் போனால்தான் பலன் உண்டு.

இதற்குப் பள்ளிப் பிள்ளைகள் நல்ல வழி காட்டினார்கள். தஞ்சைப் புயல் நிவாரண நிதிக்குச் சிறு குழந்தைகள் காலணா காலணாவாகச் சேர்த்து என் கையிலே கொடுத்தார்கள். எவ்வளவு பெரிய மனம், பாருங்கள்; எவ்வளவு நல்ல குணம், பாருங்கள். குழந்தைகளிடம் இல்லாத நல்ல குணம் இல்லை. பார்த்தால் நமக்கு மண்ணாங்கட்டி போலத் தோன்றும்; ஆனால் உண்மையில் மண்ணாங்கட்டிக ளல்ல; அவைகள் மாணிக்கங்கள். குழந்தைகள் மாணிக்கங்கள்.

அந்த மாணிக்கம் வெளியே கிடக்காது. ஆழத்திலே இருக்கும். மிக மிக ஆழத்திலே இருக்கும். எல்லோருக்கும் தெரியாத ஆழத்திலே இருக்கும். அதனைக் கண்டுபிடிப்பதுதான் நமது வேலை. யாருடைய வேலை ஆசிரியருடைய வேலை. ஒவ்வொரு குழந்தையும் ஒரு மாணிக்கம்; அறிவுடையது. ஒவ்வொரு குழந்தைக்கும் என்ன என்ன திறமை இருக்கிறது என்பதனைத் தெரிந்து உற்சாகப்படுத்த, ஊக்கப்படுத்த, வளர்க்கப் பாடுபடவேண்டும்.

குழந்தைகள் இன்றைக்கு எவ்ளவு மகிழ்ச்சியாக இருக்கின்றன! ஒன்றாவது சோர்ந்து காணப்படுகிறதா ? இரண்டு மணி நேரத்துக்கு மேலாக வீட்டிலிருந்து நடந்து வந்து, இங்கே காத்திருந்தும் இவ்வளவு உற்சாகமாகத் தோன்றுகின்றனவே. இந்த உற்சாகம் என்றைக்கும் நிலைக்கவேண்டும். ஏன் நிலைக்கவேண்டும்? குழந்தைகள், வளரும் பெண்கள்- வளரும் பையன்கள். அவைகள் காட்டுச் செடிகள் அல்ல. கனகாம்பரப் பூக்கூட அல்ல. குழந்தைகள் அனிச்ச மலர்கள்; குழந்தைகள் நுட்பமான அனிச்ச மலர்கள்; முரட்டுத்தனமாகத் தொட்டால் வாடி வதங்கிப் போகும் மலர்கள். அந்தக் குழந்தைகளை நாம் தட்டிக்கொடுத்து வளர்த்தால்தான், நல்ல குழந்தைகளாக, அறிவுள்ள குழந்தைகளாக நன்றாக வளர்வார்கள், தைரியமாக வாழ்வார்கள்; திறமையோடு வாழ்வார்கள். அதை விட்டுவிட்டு `உங்களுக்கு எங்கே படிப்பு வரும்’ `ஏன் சனியனே தொல்லை கொடுக்கிறாய்ய்?’ `ஏன் என் உயிரை வாங்குகிறாய்?’ மண்டே, மக்கே’ என்று சொன்னால் மாணிக்கமும் மக்காகப் போகும். நம் வாயில் அத்தகைய சொற்கள் வரக்கூடாது. யார் பேரில் வெகுளி இருந்தாலும் அச்சொற்கள் வரக்கூடாது குழந்தைகள் நடுவிலே அவைகளே மறந்துகூடச் சொல்லாதீர்கள். ஏன் என்றால் குழந்தைகள் நம்மைப் பார்த்துத்தான் தூற்றக் கற்றுக்கொள்கிறார்கள்.

பெரியவர்களே வழிகாட்டிகள்

குழந்தைகள் வரவேற்பிலே கேட்டார்கள். வெளி நாட்டிற்குப் போனீர்களே, அங்கே பார்த்தவைகளைச் சொல்லுங்கள்’ என்று கேட்டார்கள். அத்தனையும் சொல்ல நேரம் இல்லை. ஒன்றுமட்டும் சொல்கிறேன். இங்கிலாந்திலே குழந்தைகள் மணி மணியாக இருந்தன; நல்ல பழக்கத்தோடு இருந்தன. பச்சைக் குழந்தைகள்கூட ஒன்றுக்கு இரண்டுக்கு தெருவில் இருப்பது இல்லை. ஏன் இருப்பது இல்லை? அவைகள் மட்டும் அதிசயமான குழந்தைகளா? ஒன்றுக்கு இரண்டுக்கு வராதா ? அவைகளுக்குத் தெருவில் இருக்கக் கூடாது என்று எப்படித் தெரியும் பெரியவர்கள் யாரும் செய்வதில்லை, குழந்தைகளும் செய்வதில்லை. பெரியவர் களைப் பார்த்துத்தானே குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன ! அப்பா அம்மா செய்வது இல்லை; ஆகவே பிள்ளைகளும் செய்வது இல்லை .

திட்டாதீர்கள், வாழ்த்துங்கள்

பெரியவர்களே ! என்ன குறை இருந்தாலும் குழந்தைகளைத் திட்டாதீர்கள். ஆனால் வாழ்த்துங்கள். வாழ்த்த வாழ்த்த நல்ல வளர்ச்சி அடைவார்கள். அதன்மூலம் நாட்டிலே நல்ல மக்கள் ஏற்படுவர். எதிர்கால அரசிகளையும் , அரசர்களையும் இன்று விட்டுவிட்டு, 21 வயது ஆனபிறகு 'உரிமை வந்து விட்டது; அறிவோடு பணி செய்யுங்கள்' என்று சொன்னால், திடீர் என்று அறிவு வருமா ? ஆற்றல் வருமா ? சாமர்த்தியம் வருமா ? துணிச்சல் வருமா ? நிதானம் வருமா ? நாலுபேரைச் சேர்த்துக் காரியம் செய்கின்ற குணம் வருமா ? இவையெல்லாம் பருவத்தே பயிர் செய்ய வேண்டுவன. சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே துணிவு வரும்படி வளர்க்க வேண்டும். இன்றைக்குக் குழந்தைகள் காட்டிய விளையாட்டுக்க ளெல்லாம் மிகச் சிறப்பாக இருந்தன. ஆடல் பாடல் மிகச் சிறப்பாக இருந்தன; துணிச்சலாக இருந்தன. இவைகள் வளர வாழ்த்துங்கள். இந்தக் குழந்தைக ளெல்லாம் எவ்வளவு மகிழ்சி சியாக ஆடினார்கள்! நான் முன்பே சொன்னது போல இவர்கள் பூக்கள். கடினமாகத் தொட்டால் வாடிவிடுவார்கள்; கொஞ்சம் கோபமாகச் சொன்னால் வாடிவிடுவார்கள். ஆகையால் கோபமாகக் சொல்லாதீர்கள். பள்ளிக்கூடத்திற்கும் மகிழ்ச்சியாக வரும்படி செய்யுங்கள். பள்ளிக்கூடத்திலே மலர்ந்த முகத்தோடு இருக்கும்படி செய்யுங்கள்.

இன்றுபோல் என்றும்

இன்றைக்கு ஒவ்வொருவரும் - குழந்தைகளும் பெரியவர்களும்-உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் இருக்கிறீர்கள். உங்களால் இன்றைக்குச் செய்ய முடிந்தது நாள்தோறும் செய்யமுடியாதா? இந்த முயற்சி, இந்த ஆர்வம், இந்த உற்சாகம், இந்த அன்பு ஆகியவற்றைப் பள்ளிக்கூடத்தில் செலுத்துங்கள். எனக்கு அதுதான் மனநிறைவு கொடுக்கும். இதைக் காணவும் மன நிறைவு ஏற்படுகின்றது. மேலும் மிகுதியாக மனநிறைவு அளிப்பது அதுதான்.

நான் உங்களைக் கேட்டுக்கொள்வ தெல்லாம் உங்கள் பள்ளிக்கூடத்தை எப்போதும் ஒட்டடை இல்லாத பள்ளிக்கூடமாக, " அழுக்கில்லாத பள்ளிக்கூடமாக, அணி செய்யப்பட்ட பள்ளிக்கூடமாக வைத்துக்கொள்ளுங்கள் என்பதே. குழந்தை கள் இருக்கும் இடம் தெய்வம் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். இந்த நடமாடும் தெய்வங்கள் அறிவாளிகளாகப் போகும் தெய்வங்கள் இருக்கும் பள்ளிக்கூடங்கள் அழகாக இருக்கட்டும். அங்கே அன்பு தவழட்டும். அப்போதுதான் நீங்கள் படும் பாட்டுக்குப் பலன் உண்டு.

படிப்பு எல்லோருக்கும் வரும்

எல்லாக் குழந்தைகளும் தேற முடியும். அது நம் கையில் இருக்கிறது. அதற்கு முதல் வேலையாக அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். இரண்டாவது அவர்களுக்குப் படிப்பு வராது என்று சொல்லக்கூடாது. துணிவு கொடுக்கவேண்டும். இங்கிலாந்திலே அறுபது எழுபது பள்ளிகளுக்குச் சென்று பார்த்தேன். சிறு பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிகள்வரை பார்த்தேன். வெகுளி கொள்ளும் ஓர் ஆசிரியரைக்கூடக் காணமுடியவில்லை. அப்படிப்பட்ட ஆசிரியராக நம்மாலும் இருக்கமுடியும். அன்போடு தட்டிக் கொடுத்து, அணைத்துத்தான் திருத்தமுடியுமே தவிர, அடித்துத் திருத்தவே முடியாது. ஆகவே குழந்தைகளை அணைத்து உற்சாகப்படுத்தித் திருத்துங்கள்.

இங்கிலாந்திலே ஆசிரியர் ஒருவர்கூடப் பிள்ளைகளைப் பார்த்து 'உனக்குப் படிப்பு வராது' என்று சொல்வதில்லை. ஆகவே எல்லோரும் வளர்ந்து கொண்டே உள்ளனர். பள்ளிக்கூடத்தை விட்ட பிறகும் படிக்கின்றனர். துணிவோடு படித்து அறிவை வளர்க்கின்றனர். நம் நாட்டிலும் அந்நல்ல பழக்கம் வரவேண்டுமென்றால் நம் குழந்தைகளே நல்ல உற்சாகத்தோடு கற்கும்படி செய்யவேண்டும். துணிவு ஊட்டி நல்ல பழக்க வழக்கங்கள், பிறருக்கு உதவும் பழக்க வழக்கங்கள் உண்டாகும்படி செய்யவேண்டும். அப்படிச் செய்வதால் நல்லறிவு பெற்று, நற்செயல் செய்கிற தென்பு பெற்று நன்மக்களாக வளருவார்கள். தமக்கென வாழாதவர்களாக வளருவார்கள்.

புதிய சமுதாயம் உருவாக

நம்முடைய நாட்டிலே புதிய சமுதாயத்தை நாம் உண்டாக்க வேண்டும். இதுவரை எத்தனையோ சண்டை; இன்றுகூடப் பல சண்டைகள் உண்டு. அந்தச் சண்டைகளுக் கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

இப்போது, உச்சிக் குடுமி வைத்தவரை எங்காவது ஒருவரைத்தான் பார்க்க முடியும். அநேகமாக எல்லோரும் கிராப் வைத்துக்கொண்டோம். இதற்காகச் சண்டை பிடிக்கவில்லை. சண்டை பிடித்திருந்தால் கிராப் ஆகியிருக்குமா ? சண்டைதான் நடந்து இருக்கும். நமக்குக் கிராப் பிடித்தது. `திட்டுகிற வர்கள் திட்டிக்கொண்டே இருக்கட்டும் என உடனே சென்று கிராப் வைத்துக்கொண்டோம். இதைப்போலத்தான் வேண்டாத பழைய வழக்கங்களும் எப்படியோ தொலையட்டும். அதற்காகச் சண்டை போடக் கூடாது. அவர்கள் அறிவற்றவர்கள் என்று சொல்லக் கூடாது. அவர்கட்கு ஒன்றும் தெரியாது என எண்ணக்கூடாது. சண்டையிலே காலம் கழியக்கூடாது. நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் வீடும், ஊரும் நன்றாக இருக்கும்; நாடும் நன்றாக இருக்கும். 'இவன் இன்னான், நான் இன்னான்' என்று சொல்லாமல் எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற நிலை வரப் பாடுபடுவோம். நாம் எல்லாம் இந்நாட்டு மன்னர்தாம். குடிசையிலே இருந்தாலும் மாட மாளிகையிலே இருந்தாலும் எல்லோரும் மன்னர்கள்தாம்.

இந்த நிலைமையை நினைவுபடுத்திக்கொண்டு, நமக்குள் வேறு எவ்விதமான வேற்றுமை இருந்தாலும், அவற்றைத் தனிப்பட்ட காரியமென விட்டு விட்டு நாட்டுக் காரியத்துக்காக, பொதுச் செயல்களுக்காக நல்ல குழந்தைகள் வளரவேண்டும் எனப்பாடுபட வேண்டும். உங்களுக்குத் தனிப்பட்ட கொள்கை வேற்றுமைகள் இருக்கலாம். அவை பள்ளிக்கூடத்திற்கு வெளியே. பள்ளிக்கு உள்ளே அவற்றிற்கு இடமில்லை. அங்கே படிப்புச்சொல்லிக் கொடுக்க வேண்டும். உற்சாகமாகச் சொல்லிக் கொடுக்கவேண்டும். ஒரு குழந்தையைத் தட்டிக் கொடுத்து, மற்றெரு குழந்தையை `முட்டாள்.' என்று சொல்லக்கூடாது. இந்த நாட்டிலே அறிவுள்ள குடிகள், ஆண்மையுள்ள குடிகள், 'தொல் லுலக மக்களெல்லாம் ஒன்றே’ என்று எண்ணும் குடிகள் அப்போதுதான் ஏற்பட முடியும். அம்மாதிரியான உலகத்திற்கு வழி காட்டும் குடிகளை உண்டாக்குமாறு உங்களை வேண்டிக்கொண்டு; என் நன்றியைக் கூறி, மக்களுக்கு மெய்யாகப் பயன்படுகிற வகையில் என் பணிகளே ஆற்றுவேன் எனச் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.


***


(குழந்தைகள் அணிவகுத்து வரவேற்புக் கொடுத்தபோது ஆற்றிய சொற்பொழிவு)