பெரியாரும் சமதர்மமும்/25
25. திராவிடநாடு கோரிக்கை:
ஆங்கில அரசு புறக்கணித்தது
நாட்டு மக்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர்கள் போல், தற்குறிகளாக இருந்தார்கள்; படித்த சிலரும் அறிவு பெறவில்லை; அறியாமை, மூட நம்பிக்கை ஆகியவற்றில் இருந்து விடுவிக்கும் படிப்பைப் பெறவில்லை. அவற்றை நியாயப்படுத்தும் பாடங்களையே படித்தார்கள்; பதவிகளைத் தேடுவதே அவர்கள் குறிக்கோள்.
பொதுமக்கள் சில ஆயிரம் ஆண்டுகளாக, அரசியலில் உள்நாட்டு மன்னர்களுக்கோ, வெளிநாட்டு மன்னர்களுக்கோ அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். மன்னராட்சியை மாற்றி, மக்களாட்சியை உருவாக்க வேண்டும் என்னும் குடியாட்சி உணர்வையே பெறாது இருந்தவர்கள் நம் மக்கள். சமயத்தின் இரும்புக் கரங்கள், நம் மக்களின் சிந்தனையை மரக்க வைத்த அளவு, பிறநாட்டு மக்களின் சிந்தனையை வீழ்த்தவில்லை,
‘ஏழ்மை, கடவுளின் கட்டளை’ என்று நம்பியோர் பிற நாடுகளில் இருந்தாலும், சமுதாயத்தின் நிலைக்கு, ‘பொதுமக்களும் பொறுப்பானவர்கள்—முழுப் பொறுப்பாளர்கள் அல்லாத போதிலும், பெரும் பொறுப்பாளர்கள்’ என்னும் கருத்து பிறநாட்டு அறிஞர்களிடையே அதிகம் பரவிற்று; செயல்பட்டது.
எந்த நாட்டிலும், கூட்டத்திற் கூடி ஆதரிக்கும் அத்தனை பேரும் போராட்ட வீரர்கள் ஆவதில்லை. இருப்பினும் ‘நாட்டத்திற் கொள்ளாத’ மக்கள் நம்மிடையே இருக்கும் பெரும் விழுக்காட்டில், பிற பிரிவினரிடையே இல்லை.
இறை நம்பிக்கையுடைய இஸ்லாமியர்கள் படத்தையோ, உருவத்தையோ அண்ட விடுவதில்லை; எதற்கும் பால் முழுக்கு, இளநீர் முழுக்கு, தேன் முழுக்குப் போட்டு உணவுப் பொருள்களைப் பாழாக்குவது இல்லை.கிறித்துவர்களும், கிறித்துவின் சிலைக்கோ, கன்னிமேரி சிலைக்கோ, பல வகை முழுக்குகள் போடுவதை வழிபாட்டு முறையாகக் கொள்வதில்லை.
மற்றவர்களால், பொருள்களைப் பாழாக்காது வழிபட முடிகையில், இந்துக்களுக்கு மட்டும் அதிகப் பொருட்களைப் பாழாக்குவதே அதிக பக்தியாக, இறை நம்பிக்கையின் வெளிப்படாக இருப்பானேன்? அவற்றை விட்டு விட்டு வழிபடும் பட்டதாரி கூட இல்லையே!
பிற சமயங்களில், தன்னலம், சுரண்டல், ஆதிக்கம் ஆகிய ஒட்டடைகள் கால ஓட்டத்தில் சேர்ந்து போயிருக்கலாம்.
இந்து சமயத்தின் ஊற்றுக்கால்களே நச்சானவை. அவை சிறு கூட்டம், பெருங்கூட்டத்தை அடிமைப்படுத்தி, இழிவு படுத்தி மிதித்து வைக்கும்—பிறவி முதவாளித்துவத்தின் சுரப்புகள் ஆகும். அவற்றின் துணையால், பாட்டாளிகளை, உழவர்களைச் சுரண்டிக் கொண்டு, அவர்கள் வறுமையிலிருந்து விடுபட முடியாமல் அவர்களை அழுத்தி வைக்கவே, இந்து சமய முறைகள் தோன்றின; பயன்படுகின்றன.
வணங்குகின்றவனுக்கும், வணங்கப்படுவதுக்கும் இடையில், தரகனாவது வடமொழியாவது இருக்கக் கூடாதென்றும், வழிபாட்டிற்காகக் காசு, பணம் செலவழிக்கக் கூடாதென்றுந்தானே 1929இல் முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டிலும், 1930இல் இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டிலும் முடிவு செய்தார்கள். அதைக் கூடச் செய்ய முன் வராத, நாணல்களாக அல்லவா தமிழர்கள் வாழ்ந்தார்கள்?
எப்போதோ, பல நூற்றாண்டுகளுக்கு இழந்த உரிமையைக் கடைசியாக வந்தவனிடம் கேட்டது தவறல்ல; கொடுமையல்ல.
அன்றைய அரசியல் உலகில், சென்னை மாகாணத்தை விடச் சிறிய நாடுகள் பல, குறைந்த மக்கள் எண்ணிக்கையுடைய நாடுகள் பல, முன்னர் சிக்கி இருந்த பெரிய ஆட்சிகளிலிருந்து விடுபட்டு, தன்னாட்சி பெற்ற நாடுகளாக இயங்கி வந்தன.
இன்று செய்திகளில் அதிகம் அடிபடும் போலந்து முதல் அமைதியான நேபாளம் வரை, அன்றே ஆட்சி உரிமை உடைய தனி நாடுகள். இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, அவற்றை விடச் சிறு நாடுகள் கூடத் தன்னாட்சி பெற்று விட்டன.இவற்றையெல்லாம் கல்லூரி காணாத தந்தை பெரியாரும், அவரது இயக்கத்தவரும் தெளிவு படுத்தி, பொதுமக்கள் ஆதரவை திரட்ட முயன்றார்கள். இந்தி எதிர்ப்பு உணர்வைச் சாதகமாக்கி, திராவிட நாட்டுக் கொள்கையைப் பரப்ப முயன்றார்கள்.
அன்றையக் காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவராகிய ச. இராசகோபாலாச்சாரியார் ‘தமிழர்கள் மட்டுமே நாட்டை ஆளவாம் என்ற தைரியம் ராமசாமி (நாயக்கரு)க்கு இருக்கிறது. அதிலே தவறில்லை. அயர்லாந்து நம் மாகாணத்தில் 16இல் ஒரு பங்கு இருக்கிறது. டிவேலாரா சுயராஜ்யம் நடத்தவில்லையா? தைரியமிருந்தால் நடத்தலாம்’ என்று பேசினார். எப்போது, எங்கே, அப்படிப் பேசினார்?
1945ஆம் ஆண்டு மே 28ஆம் நாள், இராசகோபாலாச்சாரியார் அப்படிப் பேசினார்; சென்னை கோசுலே மண்டபத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அப்படிப் பேசினார்.
அவரது சீடர்கள் முதலில் இருட்டடிப்பு செய்தார்கள்; பிறகு கிண்டல் செய்தார்கள்; பின்னர் எதிர்ப்பைக் கிளப்பி விட்டார்கள்; தூற்றலை வளர்த்து விட்டார்கள். அப்படியிருக்க, இராஜாஜி இப்படி ஆதரிக்க, எது காரணமாயிருந்தது?
இரண்டாம் உலகப் போரில், பெரியாரைச் சார்ந்தவர்கள், ஆங்கிலேயருக்கு ஆதரவாக இயங்கியது உண்மை. அது தலைவரின் தன்னலம் பற்றியல்ல; கட்சியினரின் தனிப்பட்ட நன்மைக்காக அல்ல. பின் எதனால்?
உலகப் போரில் இட்லர் வெற்றி பெற்றால், மனித குலம் முழுவதுமே அடிமைப்பட்டு விடும் என்பது பெரியாரின் மதிப்பீடு. எனவே, இட்லர் வெற்றி பெறுவதைத் தடுக்க வேண்டும் என்பது நோக்கம். பிந்தைய நிகழ்ச்சிகள், அம்மதிப்பீடும், நோக்கமும் சரியானவையென்று காட்டி விட்டன.
சோவியத் நாட்டோடு, அமைதி உடன்படிக்கை செய்து கொண்டிருந்த இட்லர், முன்னறிவிப்பின்றி திடீரென, மிக அதிகமான படை கொண்டு, சோவியத் நாட்டைத் தாக்கினான். அக்கடும் போர் நான்காண்டுகள் நீடித்தன. அக்காலத்தில், மற்றோர் சதித் திட்டம் அம்பலத்திற்கு வந்தது. அது என்ன?
சோவியத் நாட்டைப் பிடித்த பிறகு, இட்லரின் படைகள் பெர்சியா வழியாக, இந்தியாவைத் தாக்கி, அடிமைப்படுத்த வேண்டும் என்பது சதித் திட்டம்.இட்லரின் குறிக்கோள், அய்ரோப்பாவை அடக்கி ஆள்வதோடு நிற்காது, அதற்கு அப்பாலும் பாயும் என்பதைப் பலருக்கும் முன்னதாகவே, பெரியார் உணர்ந்திருந்தார். எனவே பேராதரவுக்கு முன் வந்தார்; ஆர்வத்தோடு, ஆதரவு திரட்டினார். இதில் என்னக் குற்றங் காண முடியும்? மதிப்பீடும் தவறல்ல;நோக்கமும் நல்லதாக முடிந்தது.
1940இல் தந்தை பெரியாரை அழைத்து, சென்னை மாகாண அமைச்சரவையை அமைத்து நடத்தும்படி, அப்போதைய ஆளுநர் கோரினார். தனி நாட்டை உருவாக்கப் போராடிக் கொண்டிருந்த பெரியார், பதவி ஆசை கொள்ளவில்லை; முதல் அமைச்சராக மறுத்து விட்டார். இராசகோபாலாச்சாரியார் தலையிட்டு, பெரியார் முதல் அமைச்சரானால், தாம் ஆதரிப்பதாகக் கூறியும், மறுத்து விட்டார். பிறகு வைசிராய் பேசி, முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டினார். பெரியார் இணங்கவில்லை.
மீண்டும் 1942இல் ஓர் முறை ஆளுநர், தந்தை பெரியாரை, முதல் அமைச்சராக வரும்படி அழைத்தார். அதையும் பெரியார் மறுத்து விட்டார். பிறகு வைசிராயே கேட்டார். அப்போதும், மறுத்து விட்டார். இப்படி பெருந் தியாகங்களைச் செய்த பெரியாரை ‘ஆங்கிலேயரின் பல்லக்குத் தூக்கி’ என்று பத்திரிகையுலகம் கட்டுப்பாடாக, உளமார்ந்த பொய்யைப் பரப்பிற்று; புரோகித உலகம் கயிறு திரித்தது; அரசியல்வாதிகள் அவதூறு செய்தனர்.
திராவிட இயக்கத்திற்கு எதிர்ப் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. தமிழர்களைப் பிடித்து முன்னிறுத்தி, திராவிடநாடு கோரிக்கையை எதிர்க்கச் செய்தார்கள். சென்னை தொழில் அதிபர்கள், திராவிட நாடு கோரிக்கையைக் காட்டி தொழிற்சலுகை பெற்றார்கள்.
இன்றைக்கும் ‘மதவுரிமை அடக்கப்பட்ட சோவியத் நாட்டைக் கூட ஆதரித்தார்’ என்று விழாக்களில் மேடையேறி முழங்கும் பெரியவர்கள், அறிவாளிகளாகக் கருதப்படும் போது, அந்நாளில் பெரியாரின் பேரில், பொய்யான பழிகளைச் சுமத்தியது வியப்பல்ல.
‘விழுங்குணவை விழுங்குவதற்கும் உணர்ச்சியற்றார்’ என்று பாரதிதாசனால் இடித்துரைக்கப்பட்ட தமிழ் மக்கள், அப்பழிகளைச் சாக்காகச் சொல்லி, ஒதுங்கிப் போனது, சமதர்மப் பயிர் வளர்வதைத் தள்ளிப் போட்டது.
திராவிட நாடு கோரிக்கைக்குப் பின், கிளம்பிய பாகிஸ்தான் கோரிக்கை சூடு பிடித்ததைக் கண்டே, இராஜாஜி, ‘தைரியமிருந்தால் தமிழர்களே ஆளலா’மென்று ஆசை காட்டினார்.திராவிட நாடு கோரிக்கை, தமிழகத்திற்கு அப்பால் இருந்த அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது.
ஒரு முறை, அலிகார் பல்கலைக் கழக மாணவர் கூட்டத்தில் பேசிய சர். பிரேஷ்கான் நூன் என்ற இஸ்லாமியத் தலைவர்,
‘இந்தியா விடுதலை பெறும் போது, அய்ந்து அரசுகளாகப் பிரிக்கப்பட வேண்டும். அந்த அய்ந்து அரசுகளின் பிரதிநிதித்துவம் கொண்ட ஓர் இந்தியக் கூட்டாட்சி ஏற்பட வேண்டும். அக்கூட்டாட்சி பாதுகாப்பு, நாணய முறை ஆகியவற்றிக்குப் பொறுப்பாயிருக்க வேண்டும்’—என்று கூறினார். அந்த அய்ந்து அரசுகளில் ஒன்றாக, திராவிடநாடு (சென்னை மாகாணம்) அமைய வேண்டுமென்று கோடிட்டுக் காட்டினார்.
திராவிடநாடு கோரிக்கை பற்றி, அனைத்திந்திய முஸ்லீம் லீக்கின் தலைவர் ஜின்னா அவர்கள் கூறியது வருமாறு:
‘திராவிடப் பொதுமக்களே! நீங்கள் திராவிட நாட்டைத் தனியாக நிறுவ உங்கள் சொந்த இலட்சியப்படி, வேலை செய்யுங்கள். திராவிடத்தைத் தனி நாடாக்குவதில், என்னாலியன்ற எல்லா உதவிகளையும் செய்கிறேன். திராவிட நாட்டில் வசிக்கும் 7 சத முஸ்லீம்களும் உங்களுடன் தோழமை பூண்டு ஒழுகுவார்கள்’ என்றார்.
இந்தியச் சட்டசபையில் 17-3-1942இல் பேசிய அனைத்து இந்திய முஸ்லீம் லீக் பொதுச் செயலாளர் ஜனாப் லியாக்கத் அலிகான்: இந்தப் போர் முடிந்ததும் நிர்மாணிக்கப்படும் இந்திய அரசியலில், பாகிஸ்தானும், திராவிடஸ்தானும் கண்டிப்பாய் அமைந்து தீர வேண்டும் என்று கூறினார்.
தனி நாடு என்னும் புரட்சியான பலன் கேட்டுப் பெறுவது அல்ல; தோழமை கட்சிகள் பரிந்துரைக்கப் பெறுவது அல்ல; சொந்த வலிமையால் விளைய வேண்டியது. சொந்த வலிமை போதுமானதாக இருந்ததா?
பாகிஸ்தான் கோரிக்கைக்குப் பின்னால் பொங்கியெழுந்த ஆதரவு போல, அலைகள் திராவிட நாட்டிற்கு எழவில்லை. எனவே, இந்திய அரசியல் உரிமை பற்றி தலைவர்களைக் கலந்தாலோசிக்க வந்த ‘சர். ஸ்டாபோர்டு கிரிப்ஸ் குழு’ பெரியாரின் கட்சியைப் பொருட்படுத்தவில்லை.