உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியாரும் சமதர்மமும்/26

விக்கிமூலம் இலிருந்து

26. தேர்தலில் நிற்காதீர்கள்
பட்டம் பதவிகளைக் கைவிடுங்கள்

அரசியலில் நிலையான நண்பர்களும் இல்லை; நிலையான பகைவர்களும் இல்லை! இது உண்மையான வழக்கு ஆகும்.

ஆங்கிலேயர்கள், நெடுந் தொலைவிலிருந்து வந்து, இந்தியர்களைச் சுரண்டிக் கொண்டிருந்தார்கள். அதற்கு, எவர், எவர் எப்போது பயன்பட்டார்களோ, அவர்களையெல்லாம் அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டார்கள். தேவைப்பட்டால், ஆதரிப்பவர்களைக் கை விட்டு விட்டு, பகைவர்களோடு உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இந்திய அரசியல் விவகாரங்களில் மட்டுமா இப்படி நடந்து கொண்டார்கள்? இல்லை: பிற நாட்டுத் தொடர்புகளிலும் ‘உடுக்கை இழந்தவன் கை’ போல, நெருக்கடியில் உதவியவர்களை விட்டு விட்டதோடு, அவர்களை எதிர்ப்பவர்களுக்குத் துணையாகி விட்டார்கள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு;

உலகின் முதல் சமதர்ம ஆட்சி, லெனின் தலைமையில், 1917இல் ஏற்பட்டது. இரஷ்யாவில் முளைத்த அம்முறையை, முளையிலேயே கிள்ளி எறிந்து விட, பிரிட்டன் உள்ளிட்ட பதினான்கு முதலாளித்துவ நாடுகள் முயன்றன; நான்கு ஆண்டுகள் போல், இரஷ்யாவைத் தாக்கி, அப்பரந்த நாட்டில் போரிட்டன; இறுதியில் தோற்றன.

இரண்டாவது உலகப் போர் சூடு பிடித்து, நீண்டு கொண்டிருந்த போது, சோவியத் ஆட்சியை அழிக்க முயன்ற பிரிட்டன், சோவியத் நாட்டோடு, கூட்டுறவும், ஒத்துழைப்பும் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆங்கிலேயர், அப்போதைக்காகிலும் பழைய பகையை மறக்க வேண்டியதாக இருந்த போது, சோவியத் நாட்டிற்கும், தோழமை வரவேற்கத் தக்கதாக இருந்தது. இவ்விரு நாடுகளும், அமெரிக்காவும் இணைந்து நின்றே, அப்போரின் பிற்பகுதியில் போரிட நேரிட்டது.

உலக முழுவதற்கும் கேடாக அமையக் கூடிய இட்லரை முறியடிக்க, அத்தகைய, முன்னாள் எதிரிகளின் கூட்டு தேவைப்பட்டது. வெற்றிக்குப் பிறகு, முதலாளித்துவ நாடுகள், சோவியத் ஆட்சியை ஒழிக்கக் கனவு காண்கின்றன. இது பகற் கனவே.

அதே போல், அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னதாக, இந்திய அரசியல் சீர்திருத்தம் பற்றித் தீவிரமாகத் திட்டமிட வேண்டிய நிலையில், தொல்லை கொடுத்த இந்தியக் கட்சிகளோடு, ஆங்கில ஆட்சி உடன்பாடு செய்து கொள்ள வேண்டும்.

இந்தியாவிற்குப் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தோடு, ஆங்கில ஆட்சி, ஓர் உயர் மட்டக் குழுவை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. சர். ஸ்டாபோர்ட் கிரிப்ஸ் தலைமையில் வந்த குழு, இந்தியாவில், காங்கிரசு போன்ற பல அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசிக் கருத்தறிந்தது. ஆட்சிப் பழக்கமுடைய நீதிக் கட்சியை—போர் நெருக்கடியின் போது, ஆதரவு கொடுத்த நீதிக்கட்சியை—அவர்கள் அழைக்கவில்லை.

‘1940-இலும் 1942-இலும் சென்னை மாகாண ஆளுநரும், இந்திய வைசிராயும் அழைப்பு விடுத்ததைப் பொருட்படுத்தாது, சென்னை மாகாண முதல் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்து விட்ட, பெரியார் ஈ. வெ. ராமசாமி, வேறு எவ்வகை தாட்சணியத்திற்கும் கட்டுப்பட மாட்டார். திராவிட நாடு கோரி, அடம் பிடிப்பார். அதற்குச் செவி சாய்த்தால், காங்கிரசுக்காரர்கள் ஒத்துழையாமையை மேற்கொள்ளலாம். பாகிஸ்தான் கோரும் இந்திய முஸ்லீம் லீகை அழைத்துக் கலந்து பேசினால், காங்கிரசுக்காரர்கள் அவ்வளவு முரண்டிக் கொள்ள மாட்டார்கள்.’ இப்படி ஆங்கிலேயர் எண்ணியிருக்கக் கூடும். அப்படி நினைத்திருந்தால், அது தவறல்ல; சரியான மதிப்பீடு என்பதைப் பிற்காலப் போக்குகள் காட்டி விட்டன.

பொதுத் தொண்டுக்கு வந்து விட்டவர்கள், தங்களுக்குத் தனிப்பட ஏற்படும் அவமானங்களைப் பொருட்படுத்தக் கூடாது என்பது குறள் நெறி. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய தந்தை பெரியார், சர். ஸ்டாபோர்ட் கிரிப்ஸ்ஸிடம் பேட்டி கேட்டுப் பெற்று, அவரைக் கண்டு, திராவிடநாடு கோரிக்கையை வற்புறுத்தினார். தூதுக் குழுவைப் பொறுத்த மட்டில், அது செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தது.

பெரியார் இயக்கத்தைப் பொறுத்த மட்டில், போரில், ஆங்கிலேயருக்கு ஆதரவு கொடுத்தது, எவ்விதப் பேரத்தின் அடிப்படையிலும் அல்ல; தனிப்பட்டவர்களின் நன்மைக்காகவும் அல்ல.

இட்லர் கட்டவிழ்த்து விட்ட நாசிச, இனவெறிப் போக்கு,. மாந்தர் இனம் முழுவதையும் அடிமையில் ஆழ்த்தி விடும்; எனவே, அப்பெருங் கேட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில், இட்லருக்கு எதிரான நேசக்கட்சிக்கு உதவி வந்தது.

சர். ஸ்டாபோர்ட் கிரிப்சின், அலட்சியப் போக்கையும் பொருட்படுத்தாத பின்னரும், ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து, பெரியாரைப் பின்பற்றியவர்கள், ஆங்கிலேயருக்கு ஆதரவாகப் பணியாற்றினார்கள்.

நூற்றுக்கு எண்பது பேர்களுக்கு மேல், தற்குறிகளாகக் கிடந்த நம் சமுதாயத்தில், உண்மைக்குத் திரையிடப்படுவது எளிது; வாயாடிக்காரர்கள், நினைத்த பொய்களைப் பரப்புவது மிக எளிது.

‘பெரியார் இயக்கத்தவர், ஆங்கிலேயருக்கு வால் பிடிப்பவர்கள்’ என்று ஒரு பக்கம் உளமாரப் பொய்யைப் பரப்பி வந்தார்கள். அவர்களில் பலர், “ஆங்கில ஆட்சி பெரியாரைப் பொருட்படுத்தவில்லை” என்று மதிப்புக் குறைவாகத் தூற்றினர்.

அந்நிலையில், நீதிக் கட்சியின் மாகாண மாநாடு வந்தது. சேலத்தில், 27-8-1944 அன்று, பெரியார் ஈ. வெ. ராமசாமி தலைமையில் கூடிய அம்மாநாட்டில், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக் கட்சி ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது.

அம்மாநாட்டில், அண்ணாவின் பெயரில், சில புரட்சிகரமான கருத்துகள் முன் மொழியப் படும் என்று தெரிய வந்தது. அத்தீர்மானம், கட்சியில் இருந்த சில பெரிய மனிதர்களுக்கு அதிர்ச்சியூட்டின. எனவே, அப்பெரியவர்கள் மாநாட்டுக்கு முன்னதாக, எதிர்ப்பினைத் திரட்டும் பணியில், சிலரை முடுக்கி விட்டார்கள். கட்சியின் பெயர் மாற்றக் கருத்தையும், ‘ஒத்துழையாமை’ நினைப்பையும் முறியடிக்க, ஏற்பாடு செய்யும்படி ஆணையிட்டார்கள். அம்முயற்சியில் தேவைப்பட்டால், பெரியாரின் தலைமையை மாற்றினாலும் பரவாயில்லை என்பது ‘பெரியோர்கள்’ செயல் வீரர்களுக்குக் காட்டிய குறிப்பாக இருந்தது.

பெரியாரும், அண்ணாவும் தங்களுக்குள் பேசிக் கொண்டே, அத்தீர்மானங்களைக் கொண்டு வந்தார்கள் என்பது, அப்போது பெரியவர்களுக்குத் தெரியாது.

சுறுசுறுப்பாளர்கள், அண்ணாவை அணுகினார்கள். ஏதேதோ அளந்தார்கள். எவர், எவர் மனங்கள் புண்படும்; எவர், எவர் தேவைப்படும் போது, பெரியாருக்கு எதிராக, அண்ணாவின் பக்கம் நிற்பார்கள் என்றெல்லாம் சொல்லி, ஊக்கப்படுத்த முயன்றார்கள். அண்ணா ஏமாறவில்லை. பொறுமையாகக் கேட்டார்; அமைதியாகப் பதில் உரைத்தார். என்ன பதில்?

‘காந்தியார், உயிரோடிருக்கும் வரை, அவர்தான் தலைவர்: அவரை எதிர்த்து வெல்ல முடியாது; ஜின்னா உள்ள வரை, அவரே இஸ்லாமியர்களுக்குத் தலைவர். மற்றோர் தலைவரைக் காட்ட முயற்சிப்பது, பலிக்காது. அதே போல், பெரியார்தான் நமக்கெல்லாம் வாழ்நாள் தலைவர்; அவருக்கு எதிராகப் போக முயல்வது சரியாகாது.

மாநாடு கூடியது; கட்சியின் பெயரை மாற்றும் முடிவு நிறைவேறிற்று. பின் வரும், நீண்ட முடிவும் செய்யப்பட்டது.

‘கால நிலையையும், உலகப் போக்கையும், சர்க்கார் நிலையையும், நம் மக்கள் நன்மையையும், இதுவரை நடந்து வந்ததன் மூலம் ஏற்பட்ட அனுபவத்தையும், அதனால் உண்டான பயனையும், மற்ற ஸ்தாபனங்களுக்கும், சர்க்காருக்கும் இருந்து வரும் நிலைமையையும் நன்றாக, ஜாக்கிரதையாக, ஆலோசித்துப் பார்த்ததில், நம் கட்சியின், சமுதாயத்தின் எதிர்கால நலனைக் கோரியும், நம் தன்மானத்தைக் கோரியும், நமது கட்சியின் பேரால், இது வரை, நமக்கும், சர்க்காருக்கும் இருந்து வரும் போக்கை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளிக் கொண்டு போசு விட்டு விட்டோம்.

‘அதாவது, நம் கட்சி தோன்றிய காலம் முதல் இது வரை நாம், பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒத்துழைத்து வந்ததும், சர்க்காருடன் ஒத்துழையாமை செய்து, சர்க்காருக்குத் தொல்லை கொடுத்து வந்த ஸ்தாபனங்களையும் எதிர்த்துப் போராடி, சர்க்காருக்கு அனுகூலமான நிலையை உண்டாக்க உதவி செய்து வந்ததும் குறிப்பாக சென்ற அய்ந்து வருட காலமாக நடந்து வரும் உலக யுத்தத்தில், நல்ல நெருக்கடியில் நேச நாடுகளின் வெற்றிக்குக் கேடு உண்டாக்கும் நிலையில், நம் நாட்டில் பல ஸ்தாபனங்கள் செய்து வந்த பெருங் கிளர்ச்சிகளையும், நாச வேலைகளையும் எதிர்த்து அடக்குவதிலும், நேச நாடுகளுக்குப் பணம், ஆள், பிரசாரம், முதலியவைகள் நிபந்தனையின்றி, சர்க்காருக்கு உதவி வந்ததும், சர்க்காராலும், பாமர மக்களாலும் நம் கட்சியை இழிவாகக் கருதப்படத் தக்க நிலை ஏற்படுவதற்குப் பயன்பட்டு விட்டது.

‘இந்திய அரசியல், சமூக இயல் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில், சர்க்கார், நம் கட்சியையும் நம் இலட்சியமாகிய திராவிட நாட்டுப் பிரிவினையையும் அலட்சியம் செய்து வருகிறார்கள்.’

‘இந்திய மக்களின் அரசியல், சமுதாய இயல் சம்பந்தமான ஸ்தாபனங்களில், நம் ஸ்தாபனம் குறிப்பிடத்தக்கதாகவும், நீதி நெறி உடையதாக இருந்து, ஒழுங்கு முறைக்கும் கட்டுப்பட்டு, சர்க்கார் மெச்சும்படி நடந்து வந்ததும், நம ஸ்தாபனம் சர்க்காரால் மற்ற சாதாரண ஸ்தாபனங்களோடு ஒன்றாகக் கூட சேர்த்துப் பேசுவதற்கில்லாததாக, அலட்சியப் படுத்தப்பட்டு விட்டது.

‘நம் கட்சிக்கு அடியிற் கண்ட திட்டம், உடனே அமுலுக்குக் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமும், அவசரமும் ஆன காரியமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

(அ) நம் கட்சியிலிருக்கும் அங்கத்தினர்களும், இனியும் வந்து சேர இருக்கும் அங்கத்தினர்களும், சர்க்காரால் மக்களுக்கு அளிக்கப்பட்ட எந்தவிதமான கவுரவப் பட்டங்களையும், உடனே சர்க்காருக்கு வாபஸ் செய்து விட வேண்டும்; இனி ஏற்றுக் கொள்ளவும் கூடாது.

(ஆ) அது போலவே, அவர்கள் யுத்தத்திற்காகவும், மற்றும் சர்க்கார் காரியங்களுக்காகவும், மத்திய சர்க்காராலோ, மாகாண சர்க்காராலோ, எந்த வித கமிட்டியில் எப்படிப்பட்ட கவுரவ ஸ்தாபனம், அங்கத்தினர் பதவி, ஆலோசகர் பதவி, அளிக்கப்பட்டிருந்தாலும், அவைகளை எல்லாம் உடனே ராஜினாமா செய்து விட வேண்டும்.

(இ) ‘தேர்தல் அல்லாமல்’, ஸ்தல ஸ்தாபனம், அதாவது ஜில்லா போர்டு, முனிசிபல் சபை, பஞ்சாயத்து போர்டு ஆகியவைகளின் தலைவர், உப தவைவர், அங்கத்தினர் ஆகிய பதவிகளில் சர்க்காரால் நியமனம் பெற்ற அல்லது நியமனம் பெற்ற அங்கத்தினர்களால் தேர்தல் பெற்றோ, இருக்கிறவர்கள் யாவரும் தங்கள், தங்கள் பதவியை உடனே இராஜினாமா செய்து விட வேண்டும்.

(ஈ) சர்க்காரால் தொகுதி வகுக்கப்பட்ட எந்தவிதமான தேர்தலுக்கும், கட்சி அங்கத்தினர்கள் நிற்கக் கூடாது. இதை ஏற்று, ஒரு வாரத்தில் இதன்படி கட்டுப்பட்டு நடக்காதவர்கள் எவரும் தங்களுக்கு, இக்கட்சியில் இருக்க இஷ்டமில்லையென்று கருதி, கட்சியை விட்டு நீங்கிக் கொண்டவர்களாகக் கருதப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.

கெடுவைப் பொறுத்த மட்டில், 31-3-1945க்குள்ளாகத் தமிழ் நாட்டில் 10,000க்குக் குறையாமல் உறுப்பினர்களைச் சேர்த்து, மாவட்ட, வட்ட சங்கங்களை நிறுவி, தனி மாநாடு கூட்டி, தெரிவித்து அன்று முதல் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்னும் திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/26&oldid=1691009" இலிருந்து மீள்விக்கப்பட்டது