பெருங்கதை/1 35 நருமதை சம்பந்தம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

1 35 நருமதை சம்பந்தம்

அயலார் கூற்றுக்கள்[தொகு]

கைவைத் தமைந்த கனங்குழைக் கவ்வியாழ்
வைக றோறும் வத்தவன் காட்ட
நிகழ்வதை யுரைக்கும் புகர்ச்சொன் மாக்கள்
ஒன்னலர் நுழையா வுரிமை மாணகர்த்
தன்மக ளொருத்தியைத் தானயாழ் கற்கென 5
ஏதின் மன்னனை யெண்ணான் றெளிந்த
பேதை மன்னன் பின்னுங் காண்பான்
சென்றே யாயினுஞ் சிதையி னல்லது
நன்றொடு வாரா தொன்றறிந் தோர்க்கென
அரச னாசா னரும்பெற்றஃ றந்தையெனக் 10
கல்லாச் சனத்தொடு பல்லோர் சொல்ல
…..ப்புகாஅ ரியல்புணர்ந் தோரென
மதியோர் மொழிந்த திதுவென் றெண்ணி
இன்னவை பிறவுந் துன்னினர் கிளந்து
வேந்திடை யிட்ட வெஞ்சொ லாதலிற் 15
சேர்ந்தோர் மாட்டுஞ் செப்ப றீதென
உரைப்போர் நாவிற் குறுதி யின்மையின்
நினைத்தது மிகையென நெஞ்சுவலி யுறீஇ
மனத்ததை யாக மாந்த ரடக்கலின்
வம்ப மாக்கள் வாயெடுத் துரைக்கும் 20
கம்பலை யினமையிற் கடிநகர் தேறி
ஆங்கன மொழுகுங் காலை யோங்கிய

வயந்தகன் செயல்[தொகு]

மாணிப் படிவமொடு மதிலுஞ் சேனையுள்
ஓதிய காலத் துடன் விளை யாடித்
தோழ மாக்க டொழுதியிற் கூடிப் 25
பால குமரன் பணியி னொருநாள்
மாலையுஞ் சாந்து மடியும் பெய்த
கையுறைச் செப்பொடு கடிநகர்ச் சென்ற
வயந்தக குமரனை நயந்துமுக நோக்கிப்
பண்டியா னிவரைப் பயின்றுழி யுண்டெனக் 30
கண்டறி விலீரெனக் கரந்தவன் மறுப்பக்
…..போல….
இசையா மாக்கண்மு னியல்பில சொல்லி
அன்றுதலைப் பட்ட வார்வலர் போல
இன்றுதலை யாக வென்று மெம்வயின் 35
இவரே வருகென வேயின னருளி
மன்ன குமரன் றன்வயிற் கோடலின்
அரும்பெறற் றோழ னாங்குவந் தொழுகிப்
பெரும்பெற் ற்றையும் பேச்சின னாகி
மாய யாக்கையொடு மதிலகத் தொடுங்கிய 40
ஆய மாக்க ளவன்வயி ன்றிந்து
காவ லாள ரற்ற நோக்கி
மேவன தென்னுஞ் சூழ்ச்சிய ராகிப்
பன்னாள் கழித்த பின்னர் முன்னாள்

உதயணனுக்கு வாசவதத்தைமீது வேட்கை மிகுதல்[தொகு]

எண்மெய்ப் பாட்டினு ளிரக்க மெய்ந்நிறீஇ 45
ஒண்வினை யோவியர் கண்ணிய விருத்தியுட்
டலையத னும்பர்த் தான்குறிக் கொண்ட
பாவை நோக்கத் தாரணங் கெய்தி
முற்றான் கண்ட முகஞ்செய் காரிகை
உட்கொண் டரற்று முறுபிணி தலைஇக் 50
கட்கொண் டாங்குக் களிநோய் கன்றறத்
தீமுகத் திட்ட மெழுகிற் றேம்பியும்
தாய்முகத் தியாத்த கன்றிற் புலம்பியும்
உயலருந் துன்பமொ டொருவழிப் பழகிப்

உதயணன் எண்ணுதல்[தொகு]

பயலை கொண்டவென் பையு ளாக்கை 55
பண்டென் வண்ணம் பயின்றறி மாக்கள்
இன்றென் வண்ண மிடைதெரிந் தெண்ணி
நுண்ணிதி னோக்கி நோய்முத னாடிற்
பின்னிது கரக்கும் பெற்றி யரிதென
மலரே ருண்கண் மாதர்க் கமைந்த 60
அலரவண் புதைக்கு மருமறை நாடித்

உதயணனும் வயந்தகனும் ஆலோசித்தல்[தொகு]

தெரிவுறு சூழ்ச்சியுளிருவரு மெண்ணிப்
பிறன்பாற் பட்ட பெண்பா னாடி
அவள்பாற் பட்டவார்வஞ் செய்கம்
அன்னா ளொருத்தியை யறிந்தனை வம்மெனப் 65

வயந்தகன் செயல்[தொகு]

பல்வேற் சுற்றம் பணியிற் போகி
நகர்முழு தறிய நாணிகந் தொரீஇ
ஒருவன் பாங்க ருளம்வைத் தொழுகும்
அதன்மி யாரென வாங்கவன் வினவ
இரங்குபொற் கிண்கிணி யிளையோர் நடுவண் 70
அரங்கியன் மகளிர்க் காடல் வகுக்கும்
தலைக்கோற் பெண்டிரு டவ்வை யொருமகள்
நாடகக் கணிகை நருமதை யென்னும்
பாவை யாகுமிப் பழிபடு துணையென
ஒருநூற் றொருகழஞ் சுரைகண் டெண்ணிய 75
கனபொன் மாசை காண வேந்தி
மன்றமு மறுகுங் கம்பலை கழும
வனப்புமுத லாக வழிவர வமைந்து
குணத்துமுறை வகையிற் கோல மெய்தி
வீழ்ந்தோர் நல்கும் வெறுக்கை யன்றிக் 80
காணி கொண்டுங் கடன்றிந் தெண்ணிய
ஒன்றுமுத லாக வோரெட் டிறுத்த
ஆயிரங் காறு மாத்த பரிசத்
தியாழ்முத லாக வறுபத் தொருநான்
கேரிள மகளிர்க் கியறகையென் றெண்ணிக் 85
கலையுற வகுத்த காமக் கேள்வித்
துறைநெறி போகிய தோழித் தூதினர்
அரசர்க் காயினு மடியர்க் காயினும்
அன்றை வைகல் சென்றோர்ப் பேணிப்
பள்ளி மருங்கிற் படிறின் றொழுகும் 90
செல்வ மகளிர் சேரி நண்ணி
வயக்களி றடக்கிய வத்தவர் பெருமகன்
இயக்கரும் வீதியி னெதிர்ப்பட வொருநாள்
நயப்புற் றரற்று நருமதை யென்னும்
நாடக்கஃ கணிகை மாடம் யாதெனத் 95
தாயுறை வியனகர்த் தன்குறை யுரைத்து
வாயி லாகிய வயந்தகன் புகலும்
செந்நூ னிணைந்த சித்திரக் கம்மத்து
வெண்கா லமளி விருப்பி னேற்றி
அணியிழை மகளிரும் யானையும் வணக்கும் 100
மணியொலி வீணையுஞ் சாபமு மரீஇக்
கழறொடி கலைஇய கலம்பொழி தடக்கை
உதயண குமர னுள்ளத் துள்ளெனின்
ஒண்டொடி மாதரு மொருதுணைநோருட்
பெண்டுணை சான்ற பெருமைபெற் றனளென் 105
மருமகற் புகலு மனம்புரி கொள்கை
இருமூ தாட்டி யெனக்கு முண்டெனத்
தூண்டி லிரையிற் றுடக்குள் ளுறுத்துத்
தேன்றோய்த் தன்ன தீஞ்சொ லளைஇப்
பொருளெனக் கருதிப் பொன்னிவண் விடுத்தோன் 110
அருளியு மருளா னடித்தி மாட்டெனக்
காரணக் களிவி நீர கூறித்
தற்பெயர் பெயர்ப்ப மனத்தகைங்கரந்து
பிற்பயங் கருதும் பெருநசைக் கிளவி
இன்னகைத் தோழற் கினிய பயிற்றி 115
ஆங்கினி திருந்த போழ்திற் பூங்குழை

தாய் உதயணனது இயல்பை உரைத்தல்[தொகு]

காமுறப் பட்ட சேணிகர் சிறுதொழில்
கற்றது மில்லாச் சிற்றறி வாளன்
பொய்யொடு மிடைந்த பொருணசைக் கடுஞ்சொல்
மையுண்டு கழுமிய மாசுபடு கலிங்கத் 120
திளையோர் வைகா விழுக்கரு வாழ்க்கையன்
கவறா டாளர்க்குக் கலந்தொலை வெய்திக்
கொடையகத் தோனெனக் கடைகழிந் தோடிக்
கவலையிற் செலலுங் கவ்வையின் விலக்கி
ஐயன் வந்த வாசறு கருமம் 125
கைவளை மாதர் களைந்து சென் றீயென

நருமதை மறுத்தல்[தொகு]

நிதியங் காட்டப் பொதியொடு சிதறிக்
குறையொடு வந்தவக் குமரன் கேட்க
சிறியனேன் வந்தவச் சிறுநில மன்னற்
கம்மனை நயந்தியா னவ்வயிற் சேறல் 130
எம்மனை மருங்கி னில்லெனச் சீறித்
தன்துறைக் கொவ்வாத் தகையில் கிளவி
பைந்தொடி மாதர் பண்பில பயிற்றத்
தாயப் பெண்டிருந் தந்துணை யோருமென்
றோரி லெழுகிளை யுடன்றொக் கீண்டிப் 135
பழமையிற் பசையாது கிழமையிற் கெழுவாது
தவந்தீர் மருங்கிற் றிருமகள் போலப்
பயந்தீர் மருங்கிற் பற்றுவிட் டொரீஇ
இட்டதை யுண்ணு நீலம் போல
ஒட்டிடத் தொட்டு முறுதி வாழ்க்கையுட் 140
பத்திமை கொள்ளார் பைந்தொடி கேளென
எடுத்தியல் கிளவியோ டேதுக் காட்டித்
தொடிக்கேழ் முன்கைத் தொகுவிரன் மடக்கி
மாநிதி வழங்கு மன்னரிற் பிறந்து
…..வேண்டியது முடிக்கும் 145
கால மிதுவெனக் காரணங் காட்டும்
ஆர்வச் சுற்றத் தவர்வரை நில்லாள்
தாய்கை விதிர்ப்பத் தலைபுடைத் திரங்கி
ஏயது மறுக்கலு மிருந்தோற் கூய்நின்
அடியரிற் பற்றி யாணையிற் கொள்கெனக் 150
கடிதியல் வையங் கவ்வையி னேற்றிக்
கொடியணி கூலங் கொண்டன்னஃ போவுழி

நருமதையின் கூற்று[தொகு]

வலிதி னென்னை வத்தவர் பெருமகன்
கொலிய செய்வது குழுக்கள் காண்கெனப்
பூசற் குளவி சேயிழை பயிற்ற 155

கண்டோர் கூற்று[தொகு]

மாரியுந் திருவு மகளிர் மனமும்
தக்குழி நில்லாது பட்டுழிப் படுமெனும்
கட்டுரை யன்றியுங் கண்டனம் யாமென
விச்சையும் வனப்பும் விழுக்குடிப் பிறப்பும்
ஒத்தொருங் கமைந்த வுதயண குமரனைப் 160
பெற்றன ளாயினும் பிறர்க்குநைந் தழுவோள்
பெண்ணிலி கொல்லோ பெரியோர்ப் பிழைப்பதோர்
கண்ணிலி யாகுமிக் கணிகை மகளெனக்
கூத்தி மருங்கிற் குணம்பழிப் போரும்
ஆற்றற் கொற்றமொ டரசுவழி வந்ததன் 165
காத்துயர் தொல்குடிக் கதுவா யாகப்
பண்பில் சிறுதொழில் பயின்றதை யன்றியும்
தன்னொடு படாளைத் தானயந் தரற்றிக்
கண்ணற் றனனாற் காவலன் மகனென
அண்ணன் மருங்கி னறிவிழிப் போரும் 170
எள்ளியு மிழித்து மின்னவை பயிற்றி
முள்ளெயி றிலங்கு மொள்ளமர் முறுவலர்
பட்டி மாக்கள் கட்டுரை பகரும்
பெருங்கலி யாவணம் பிற்படப் போஒம்
வையத் தவளொடும் வயந்தகன் கேட்பத் 175
=கணிகையரூடலும் நம்பியர் உணர்த்தலும்
விடர் முதலியோர் கூற்றும்=
தேன்கவர் வோப்பித் திருநுதல் சுருக்கிப்
பூநறுந் தேறல் பொலன்வள்ளத் தேந்தி
ஒழுகி நிலம்பெறாஅ தொசிந்து கடைபுடைத்
தெழுதுநுண் புருவ மேற்றி யியைவித்
திலமலர்ச் செவ்வா யொப்ப விதழ்விடுத்து 180
நரம்பிசை தள்ளி வறிதினிற் சுவைத்து
மகிழின் மம்ம ரெய்தி முகிழின்
கால மன்றியுங் கையி னெரித்த
கழுநீர்க் குவளைப் பெரும்பொதி யவிழ்ந்த
வள்ளிதழ் வகைய வாகி யொள்ளிதழ் 185
செஞ்சிவப் புறுத்த சிதரரி மழைக்கண்
கொழுங்கடை யிடுக நோக்கி மணிபிறழ
விருப்புள் கூர விம்மி வெய்துயிர்த்
தெருத்தஞ் சிறிய கோட்டி ய்ம்மினும்
திருத்தஞ் சான்றநுந் துணைவியில் செல்கெனப் 190
புலவித் தண்டந் தமர்வயி னேற்றி
இல்லை யாயினுஞ் சொல்வகை செருக்கித்
தண்டிக் கொண்டு பெண்டிரைப் பொறாது
செயிர்வுள் ளுறுத்த நோக்கமொடு நறவின்
வாசங் கமழு மோசைய வாகிக் 195
கிளிபயி ரன்ன களிப்பயின் மழலை
எய்தா வொழுக்கமொ டைதவட் பயிற்றி
எயிறு வெளிப்படா திறைஞ்சி ஞிமிறினம்
மூசின கரிய கோதையிற் புடைத்துப்
பூங்குழை மகளிர் புலவிகொ டிருமுகம் 200
தேர்ந்துணர் காட்சியிற் றிரிந்துநலங் கரியப்
பூந்துகிற் றானை பற்றிக் காய்ந்தது
காட்டினை சென்மோ மீட்டின தெளிகெனப்
படிற்றியல் களைஇப் பணிமொழிக் கிளவி
நடுக்குறு துயரமொடு நயவரப் பயிற்றிக் 205
குவிப்பூங் கையிணை கூப்பித் திருக்குழல்
நானப் பங்கி கரமிசைத் திவளப்
பரட்டசை கிண்கிணிப் பக்கம் புல்லி
அரத்தகத் தீரத் தைதுகொண் டெழுதிய
சீறடிச் சுவட்டெழுத் தேறிய சென்னியர் 210
நாட்போது நயந்த வேடகைய வாயினும்
முகைப்பதம் பார்க்கும் வண்டினம் போலத்
தகைப்பருங் காமத்துத் தாம்வீழ் மகளிர்
நகைப்பதம் பார்க்கு நனிநா கரிகத்துச்
சொல்லி னுண்பொருள் காட்டி யில்லின் 215
படுகாழ்ப் படுத்துத் தேய்வை யுறீஇக்
கலுழி நீக்குங் கம்மியர் போல
மகர வீணையின் மனமாசு கழீஇ
நகர நம்பியர் திரிதரு மறுகின்
ஆணையிற் கொண்டுதன் னரசியல் செய்தோன் 220
காம விருந்தினன் கலையிற் கிகந்தன்னஃ
பிழைக்கவும் பெறூஉம் பெண்டிர் மாட்டென
உரைத்தகு கிளவி யோம்பார் பயிற்றி
நடநவின் மகளிர் நலத்திடை நம்பி
விருந்தினன் போன்மெனப் புரிந்தலர் தூற்றி 225
விடருந் தூர்த்தரும் விட்டே றுரைப்பத்
தரும நுவலாது தத்துவ மொரீஇக்
கரும நுதலிய கள்ளக் காமம்
எத்துறை மாக்களு மெய்க்மொளப் பரப்பி
வனப்பு மிளமையும் வரம்பில் கல்வியும் 230
தனக்குநிக ரில்லாத் தன்மைய னாதலிற்
பொருந்தாப் புறஞ்சொ னிறம்பார்த் தெறிய
வான்மயிர் துடக்கிற் றானுயிர் வாழாப்
பெருந்தகைக் கவரி யன்ன பீடழிந்து
நெடுவெண் ணிலவி னீர்மைக் கிரங்கி 235
முறுவன் மகளிர் முற்ற நிற்பப்
பசுங்கதிர் சுருங்கிய பசலைத் தாகி
விசும்பெழத் தேயும் வெண்மதி போல
வலியிற் றீரா தொளியிற் குன்றிப்
பெருநல் கூர்ந்த பெருவரை யகலத் 240
தெவ்வ மறைத்தல் வேண்டி வையத்து
வலிதிற் றந்த வால்வளைப் பணைத்தோள்
ஒருமனம் புரிந்த நருமதை கேட்ப
வேட்கைக் கிளவி வெளிப்படப் பயிற்றிச்
சேட்படு குருசில் சேர்தொறும் பொறாஅள் 245
நச்சுயிர்ப் பளைஇய நாகம் போல
அச்சுயிர்ப் பளைஇ யமரா நோக்கமொடு
சில்லைச் சிறுசொன் மெல்லியன் மிழற்ற
அவ்விரு ளடக்கி வைகிருட் போக்கிப்
போற்றா மாக்க டூற்றும் பெரும்பழி 250
மேற்கொண் டனனான் மின்னிழை பொருட்டென்.

1 35 நருமதை சம்பந்தம் முற்றிற்று.