பெருங்கதை/1 39 புனற்பாற்பட்டது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

1 39 புனற்பாற்பட்டது

பிரச்சோதனன் செயல்[தொகு]

நம்பியர் கூடிய நாளவை மருங்கிற்
கம்பலைப் பந்தர்க் காழகில் கழுமிய
திருநா ளிருக்கைத் திறல்கெழு வேந்தன்
பெருநீ ராட்டணி பெட்கும் பொழுதெனச்
செம்பொற் படத்துப் பேறுவலித் திருந்த 5
மங்கலக் கணிகண் மாதிர நோக்கிப்
புரைமீன் கூடிய பொழுதியல் கூற
இருப தியானையு மெண்பது புரவியும்
ஒருநூ றாயிரத் தொருகழஞ் சிறுத்த 10
தமனிய மாசையொடு தக்கணை யுதவிக்
கடவது நிறைந்த தடவளர் செந்தீ
ஒடியாக் கேள்விப் பெரியோ ரீண்டிய
படிவக் குழுவினு ளடிமுதல் வணங்கி
ஆசை மாக்களொ டந்தணர் கொள்கென 15
மாசை வாரி மன்னவ னாடி
அறிநர் தானத் தாயிரம் பொற்பூக்
கருவிநிலைப் பள்ளிக்குத் தொழுதனன் போக்கிச்
சுண்ணம் விரவிய சுரியிரும் பித்தைக்
கண்ணி நெற்றி வெண்சூட் டேற்றித் 20
தூத்துகி லுடுத்துத் தொடியுடைத் தடக்கைக்
கோத்தொழி லிளையர் பூப்பலி கொடுத்துச்
செம்பொ னெல்லின் செங்கதிர் சூட்டி
வெண்டுகி லிட்ட விசய முரசம்
பண்டிய லமைந்த படுகட னெல்லாம் 25
தண்டொழிற் செங்கோ றலைத்தலை சிறக்கென
வெந்திறல் வேந்தன் விட்டிவை கூறக்
கண்டொரு பாணியிற் கடல்கிளர்ந் ததுபோற்
பல்படை மொய்த்த மல்லற் பெருங்கரை
மழைமலைத் தன்ன மாணிழை மிடைந்து 30
வம்புவிசித் தியாத்த செம்பொற் கச்சையர்
மாலை யணிந்த கோல்செய் கோலத்துப்
பூப்போ துறுத்த மீப்பொற் கிணகிணி
இடுமணிப் பெருநிரை நெடுமணிற் கிடைஇ
இரும்பறம் புதைய வெழின்மறைந் திருந்த 35
கருங்காற் கானத்துக் கண்மணிக் குழாத்திடை
ஏற்றரி மாவின் றோற்றம் போல
மின்னிழை மகளிரொடு மன்னவன் தோன்றி
விசைய வேழத் திசையெருத் தேற்றிப்
பெருவிரல் வேந்தன் சிறுவரை யெல்லாம் 40
ஓடுநீர்ப் பெருந்துறை யுள்ளம் பிறந்துழி
ஆடுக போயென் றவர்களை யருளி
உதயண குமரனு முவந்துழி யாடித்
துறைநகர் விழவின் றோற்ற மெல்லாம்
பரந்த செல்வங் காண்கெனப் பணித்துப் 45
புரிந்த பூவொடு பொற்சுணங் கழும
எழுந்த வார்ப்பொ டியம்பல துவைப்பப்
புண்ணியப் பெருந்துறை மன்னவன் படிந்தபின்

நகரமாந்தர் செயல்[தொகு]

இறைகொண் டீண்டிய வேனை மாந்தரும்
துறைதுறை தோறு முறைவிடம் பெறாஅர் 50
தண்புன லாட்டின் றக்கணை யேற்கும்
அந்த ணாள ரடைக விரைந்தெனப்
பநினூ லாளரைப் பயிர்வனர் கூஉய்க்
கவர்வனர் போலக் காதலி னுய்த்து
நன்கல மேற்றி நாளணி யணிந்து 55
மங்கல வேள்வியுண் மகளீ வோரும்
செம்பொற் புரிசை வெண்சுதை மாடத்
துழைக்கலம் பரப்பி யுருவிய மகளிரொ
டிழைக்கல நிறீஇ யில்லீ வோரும்
ஆலைக் கரும்பு மரியுறு செந்நெலும் 60
பாளைக் கமுகின் படுவுஞ் சுட்டிப்
புயல்சே ணீங்கினும் பூவளங் குன்றா
வயலுந் தோட்டமும் வழங்கு வோரும்
நாகுசூ னீங்கிய சேதாத் தொகுத்துக்
குளம்புங் கோடும் விளங்குபொன் னுறீஇத் 65
தளையுந் தாம்பு மளைகடை மத்தும்
கழுவுங் கலனும் வழுவில பிறவும்
பைம்பொனி னியன்றவை பாற்பட வகுத்துக்
குன்றாக் கோடி கொடுத்துவப் போரும்
இன்னவை பிறவு மென்னோர்க் காயினும் 70
உடையவை தவா அக் கொடைபுரி படிவமொ
டிலமென் மாக்களை யிரவொழிப் பவர்போற்
கலங்கொடை பூண்ட கைய ராகி
வெண்டுகில் பூட்டிய வேழக் குழவியும்
ஒண்படை யணிந்த வண்பரிப் புரவியும் 75
உண்டியு முடையுங் கொண்டகஞ் செறித்த
பண்டியு மூர்தியுங் கொண்டன ருழிதந்
தந்தணர் சாலையு மருந்தவர் பள்ளியும்
தந்தற மருங்கிற் றலைவைப் போரும்
நிலம்பெய் வோரு நிதிபெய் வோரும் 80
களிறுபெய் வோரும் பரிபெய் வோரும்
பெய்வோர் பெய்வோர் பெயர்வறக் குழீஇக்
கொள்வோ ரறியாக் குரல ராகி
மணற்கெழு பெருந்துறை மயங்குபு தழீஇ
வனப்பொடு புணர்ந்த வகையிற் றாகிப் 85
புனற்பாற் பட்டன்றாற் பூநகர் புரிந்தென்.

1 39 புனற்பாற்பட்டது முற்றிற்று.