பெருங்கதை/1 48 மருதநிலம் கடந்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

1 48 மருதநிலம் கடந்தது

பிரச்சோதனன் படைவீரர் செயல்[தொகு]

விழவணி விழுநகர் விலாவணை யெய்த
முழவணி முன்றிலொடு முதுநகர் புல்லென
அழுகை யாகுலங் கழுமிய கங்குல்
மதியா மன்னனைப் பதிவயிற் றம்மென
வெல்போர் வேந்தன் விடுக்கப் பட்ட 5
பல்போர் மறவ ரொல்லென வுலம்பிப்

குதிரைகள்[தொகு]

புடைப்போர்ப் புளகத் துடப்புமறைப் பருமத்துத்
தீப்படு கரணத்துக் கணைவிடு விசைய
செய்வினைத் தச்சன் கைவினைப் பொலிந்த
வேற்றவ ரொல்லென வேற்றினன் பாய்த்துள 10
கண்டிரள் கலினமொடு பிண்டிகைக் கவ்வித்
திரைத்தலைப் பிதிர்வி னுரைக்கும் வாயின
கற்றோர்க் கமைந்த கருவி மாட்சிய
பொற்றா ருடுத்த பொங்குமயிர்ப் புரவி

தேர்கள்[தொகு]

புரவி பூண்ட பொன்னுகக் கொடுஞ்சிப் 15
பரவைத் தட்டிற் பன்மணிப் பலகை
அடிதொடைக் கமைந்த கிடுகுடைக் காப்பிற்
காழமை குழிசிக் கதிர்த் தவா ரத்துச்
சூழ்பொற் சூட்டிற் சுடர்மணிப் புளகத்
தாழாக் கடுஞ்செல லாழித் திண்டேர் 20

யானைகள்[தொகு]

திண்டேர்க் கமைந்த தண்டாக் காப்பிற்
குன்றுகண் டன்ன தோன்றல குன்றின்
அருவி யன்ன வுருவுகொ ளோடைய
ஓடைக் கமைந்த சூழிச் சுடர்நுதற்
கோடில வெழுதியகோலக் கும்பத் 25
திடுபூந் தாம மிருங்கவு ளசைஇப்
படுவண் டோப்பும் பண்ணமை கோலத்து
விண்ணுரு மன்ன வெடிபடு சீற்றத்
தண்ணல் யானை யவையவை தோறும்

படைவீரர் செயல்[தொகு]

மேலாட் கமைந்த காலாட் காப்பிற் 30
கருவிப் பல்படை கடல்கிளர்ந் தெனவுறப்
பரவை யெழுச்சிப் பக்கமு முன்னும்
வெருவரத்தாக்கி வீழ நூறி
நற்றுணைத் தோழ ருற்றுழி யுதவ
அமிழ்தி னன்ன வஞ்சில் கிளவி 35
மதர்வை நோக்கின் மாதரைத் தழீஇ
ஓங்கிய தோற்றமொ டொருதர் னாகி
நீங்கிய மன்னற்கு நிகழ்ந்தது கூறுவென்
சேரா மன்னனுஞ் சேனையம் பெரும்பதிக்
கோரிரு காவத மூரா மாத்திரம் 40

சூரியன் அத்தமித்தல்[தொகு]

விரிகதிர் பரப்பி வியலகம் விளக்கும்
பரிதி ஞாயிறு பல்லவர் காணின்
அற்றந் தருமென வருள்பெற் றதுபோற்
கொற்ற வெங்கதிர் குளிர்கொளச் சுருக்கிக்
குண்டகன் கிடக்கைக் குடகடற் குளிப்ப 45

மாலை வருணனை[தொகு]

வண்டகத் தடக்கிய வாய வாகிக்
கூலப் பொய்கையு ணீலமொடு மலர்ந்த
கோலக் கழுநீர் குழிவாய் நெய்தல்
எழுநீர்க் குவளையொ டின்னவை பிறவும்
தாமரை தலையாத் தன்னகர் வரைப்பகம் 50
ஏம மாகவிவ னெய்துவ னென்றுதம்
தூய்மை யுள்ளமொடு கோமகற் கூப்பும்
குறுந்தொடி மகளிர் குவிவிரல் கடுப்ப
நறுந்த ணாற்றம் பொதிந்த நன்மலர்த்
தடங்கயந் துறந்த தன்மைய வாகிக் 55
குடம்பை சேர்ந்து குரல்விளி பயிற்றிப்
புட்புலம் புறுத்த புன்கண் மாலை
கட்புல மருங்கிற்கலந்த ஞாயிற்று
வெப்ப நீக்கித் தட்பந் தான் செயக்

பிடியின் நிலை[தொகு]

கண்ணுறு பிறங்கற் கருவரை நுனித்தலை 60
வெண்ணிற வருவி வீழ்ச்சி யேய்ப்ப
மத்தக மருங்கின் மாலையொடு கிடந்த
நித்திலத் தாம நிலையின் வழாமை
வைத்த தலையிற் றாக வலிசிறந்து
வித்தகக் கோலத்து வீழ்ந்த கிழவற்குப் 65
பத்தினி யாகிய பைந்தொடிப் பணைத்தோட்
டத்தரி நெடுங்கட் டத்தை தம்மிறை
ஆணை யஞ்சிய வசைவுநன் கோம்பிக்
கோணை நீண்மதிற் கொடிக்கோ சம்பி
நகைத்துணை யாய மெதிர்கொள நாளைப் 70
புகுத்துவ லென்பது புரிந்தது போலப்
பறத்தரல் விசையினும் பண்ணினு மண்மிசை
உறப்புனைந் தூரு முதயணன் வலப்புறத்
தறியக் கூறிய செலவிற் றாகிக்
கோடுதல் செல்லாது கோமகன் குறிப்பறிந் 75
தோடுதல் புரிந்த வுறுபிடி மீமிசைக்
கூந்தலுங் கூந்தல் வேய்ந்த கோதையும்
ஏந்திளங் கொங்கையு மெடுக்க லாற்றாள்
அம்மென் மருங்கு லசைந்தசைந் தாடப்
பொம்மென வுயிர்க்கும் பூநுதற் பாவையைக் 80
கைம்முதற் றழீஇக் காஞ்சனை யுரைக்கும்

காஞ்சனையின் கூற்று[தொகு]

கட்டி லாள ருட்புகன் றுறையும்
நாகத் தன்ன நன்னகர் வரைப்பின்
ஏகத் திகிரி யிருநிலத் திறைவன்
நீர்ப்பருங் காத னிற்பயந் தெடுத்த 85
கோப்பெருந் தேவியொடு கூடிமுன் னின்று
பொற்குடம் பொருந்திய பொழியமை மணித்தூண்
நற்பெரும் பந்நருண் முத்துமணற் பரப்பி
நல்லோர் கூறிய நாளமை யமயத்துப்
பல்லோர் காணப் படுப்பிய லமைந்த 90
செந்தீ யந்தழ லந்தணன் காட்டச்
சேதா நறுநெய் யாசின்று குத்திச்
செழுமலர்த் தடக்கையிற் சிறப்பொடு மேற்படக்
கொழுமலர்க் காந்தட் குவிமுகை யன்னநின்
மெல்விரன் மெலிவுகொண் டுள்ளகத் தொடுங்கப் 95
பிடித்துவலம் வந்து வடுத்தீர் நோனபொடு
வழுவில் வாலொளி வடமீன் காட்டி
உழுவ லன்பி னுதயண குமரன்
அருமறை யாளர்க் கருநிதி யார்த்திப்
பெருமறை விளங்கப் பெற்றனன் கொள்ளக் 100
கொடுத்தில னென்பது கூறி னல்லதை
அடுத்தனன் கண்டா யணிமுடி யண்ணல்
வையத் தேனோர் வல்ல ரல்லாத்
தெய்வப் பேரியாழ் கைவயிற் றரீஇ
எழுவியல் கரணம் வழுவிலன் காட்டுநின் 105
ஆசா னிவனென வருளிய வச்சொற்
றூசார்ந்து துளும்புங் காசுவிரி கலாபத்துப்
பைவிரி யல்குற் பாவாய் மற்றிது
பொய்யுரை யன்றிப் புணர்ந்தன் றதனால்
பொருளென விகழாது பொலங்கல மடவோய் 110
மருளெனக் கருதிய மடியுறை கேண்மதி

யானையின் வேகத்தால் தோன்றும் விம்மிதத்தைத் தெரிவித்தல்[தொகு]

எண்டிசை மருங்கினு மெதிரெதி ரோடி
மண்டில மதியமொடு கதிர்மீன் மயங்கி
நிலைக்கொண் டியலா வாகித் தம்முள்
தலைக்கொண் டியலுந் தனமை போலக் 115
கண்ணகன் மருங்கின் விண்ணகஞ் சுழலும்
மண்ணக மருங்கின் விண்ணுற நீடிய
மலையு மரனு நிலையுற னீங்கிக்
கடுகிய விசையொடு காற்றென வுராஅய்
முடுகிய விரும்பிடி முகத்தொடு தாக்கிய 120
எதிரெழுந்து வருவன போலு மதிர்வொடு
மண்டிணி யிருநில மன்னுயிர் நடுங்கத்
துளக்க மானா தாசி னிலை திரிந்து
கலக்கங் கொண்டு கைவரை நில்லா
தோடுவன போன்ற வாதலின் மற்றுநின் 125
நீடுமலர்த் தடங்கண் பாடுபிறழ்ந் துறழ
நோக்கல் செல்லா திருவென நுதன்மிசை

காஞ்சனை செயல்[தொகு]

வேர்த்துளி துடைத்து வித்தக வீரன்
அருவரை யகலத் தஞ்சுவன ணீட்டித்
திருவளர் சாயலைத் திண்ணிதிற் றழீஇ 130
உவணப் புள்ளினஞ் சிவணிச் செல்லும்
சிறக ரொலியிற் றிம்மென வொலிக்கும்
பறவை யிரும்பிடிப் பாவடி யோசையின்
அவணை போத லஞ்சி வேய்த்தோள்
வாளரித் தடங்கண் வாலிழை மாதர் 135
கேள்விச் செவியிற் கிழித்துகிற் பஞ்சி
பன்னிச் செறித்துப் பற்றினை யிருவெனப்
பிடியிடை யொடுங்குங் கொடியிடை மருங்கின்
நோய்கொள லின்றி நொவ்விதிற் கடாவலென்
றாய்புக ழண்ண லசைதல் செல்லான் 140

மருதநில வருணனை[தொகு]

அங்க ணகல்வய லார்ப்பிசை வெரீஇய
பைங்க ணெருமை படுகன் றோம்பிச்
செருத்தல் செற்றிய தீம்பா லயல
அருவ வன்னமொடு குருகு பார்ப்பெழப்
பாசடைப் பிலிற்றும் பழனப் படப்பை 145
அறையுறு கரும்பி னணிமடற் றொடுத்த
நிறையுறு தீந்தே னெய்த்தொடை முதிர்வை
உழைக்கவின் றெழுந்த புழற்காற் றாமரைச்
செம்மல ரங்கட் டீயெடுப் பவைபோல்
உண்ணெகிழ்ந் துறைக்குங் கண்ணகன் புறவிற் 150
பாளைக் கமுகும் பணையும் பழுக்கிய
வாழைக் கானமும் வார்குலைத் தெங்கும்
பலவும் பயினு மிலைவளர் மாவும்
புன்னையுஞ் செருந்தியும் பொன்னிணர் ஞாழலும்
உன்னவை பிறவு மிடையற வின்றி 155
இயற்றப் பட்டவை யெரிகதிர் விலக்கிப்
பகலிருள் பயக்கும் படிமத் தாகி
அகல மமைந்த வயிர்மண லடுக்கத்துக்
காறோய் கணைக்கதிர்ச் சாறோய் சாலி
வரம்பணி கொண்ட நிரம்பணி நெடுவிடை 160
அழவ ரொலியுங் களமர் கம்பலும்
வளவய லிடையிடைக் களைகளை கடைசியர்
பதலை யரியல் பாசிலைப் பருகிய
மதலைக் கிளியின் மழலைப் பாடலும்
தண்ணுமை யொலியுந் தடாரிக் கம்பலும் 165
மண்ணமை முழவின் வயவ ,ரார்ப்பும்
மடைவாய் திருத்து மன்னர் சும்மையும்
இடையற வின்றி யிரையாறு தழீஇ
வயற்புலச் சீறூ ரயர்புலத் தணுகி
மருதந் தழீஇய மல்லலம் பெருவழி 170

உதயணன் அருட்ட நகரத்தை யணுகுதல்[தொகு]

ஒருநூற் றிருபத் தோரைந் தெல்லையுள்
வலப்பா லெல்லை வயல்பரந்து கிடந்த
அளற்றுநிலைச் செறிவி னகனிலங் கெழீஇ
இடப்பான் மருங்கிற் பரற்றலை முரம்பிற்
புன்புலந் தழீஇய புகற்சித் தாகி 175
வன்றொழில் வயவர் வலிகெட வகுத்த
படைப்புறக் கிடங்குந் தொடைப்பெரு வாயிலும்
வாயிற் கமைந்த ஞாயிற் புரிசையும்
இட்டமைத் தியற்றிய கட்டளைக் காப்பின்
மட்டுமகிழ் நெஞ்சின் மள்ளர் குழீஇய 180
அருட்ட நகரத் தல்கூ ணமயத்
தஞ்சொன் மகளி ரடிமிசை யரற்றும்
பைம்பொற் பகுவாய்க் கிண்கிணி யொலியும்
மையணி யிரும்பிடி மணியும் பாடவித்
தெய்தினன் மாதோ லிருளிடை மறைந்தென். 185

1 48 மருதநிலங் கடந்தது முற்றிற்று.