உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/1 49 முல்லைநிலம் கடந்தது

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

1 49 முல்லை நிலங் கடந்தது

வயந்தகன் =கூறல்[தொகு]

இருளிடை மருங்கி னிருநிலந் தழீஇய
அருமதிற் படப்பை யருட்ட நகரகம்
உருள்பட லொற்றி யூடெழுப் போக்கிக்
கருங்கட் பம்பை நெருங்கக் கொட்டி
அழற்படு சீற்றத் தஞ்சுவளிச் செலவிற் 5
கழற்கா லிளையர் கலங்காக் காப்பின்
இயற்றப் பட்ட வியற்கை யிற்றென
வியத்தகு நோன்றாள் வயந்தக குமரன்
ஆழ்கடற் பௌவத் தருங்கல மியக்கும்
நீயான் போல நெஞ்சுணர் மதிப்பினன் 10
தெய்வப் பேர்யாழ் கைவயி னீக்கி
வீக்குறு புரோசை வாய்ப்பொற் பந்தத்து
யாப்புற வமைத்துக் காப்புறு தொழிலின்
நீர்நிறைக் கொளீஇய தாமரைக் கம்மத்துக்
கூரிலைக் கொலைவாள் வார்மயிர் வட்டத்துச் 15
சேடக வரணமொ டீடுபட விரைஇ
இறைமகன் கேட்ப விற்றென வுரைக்கும்
துறைவளங் கவினிய நிறைவளப் படுவிற்
செல்வ மருதத் தெல்லையு ளிருந்த
தொல்லருஞ் சிறப்பினிம் மல்லன் மாநகர் 20
அகப்பட் டியங்குந ரச்ச நீக்கிப்
புறப்பட் டியங்குநர்ப் புன்கண் செய்யும்
காப்புவினை யுடைத்தே யாப்புற விதனை
இடத்திட் டேகுதுமெனினே யெங்கும்
முடத்தாட் டாழை மொய்த்தெழு முழுச்சிறைத் 25
தோட்டமும் படுவுங் கோட்டகக் கோடும்
பிரம்பெழு பெரும்பா ரடைந்துமிசைச் செற்றிச்
செதும்புபரந் தெங்குஞ் சேற்றிழுக் குடைத்தாய்
வாய்க்கா னிறைந்த போக்கரும் பணையொடு
வரம்பிடை விலங்கி வழங்குதற் கரிதாய் 30
நிரம்பாச் செலவி னீத்தருஞ் சிறுநெறி
நலத்தகு புகழோய் நடத்தற் காகாது
வலத்திட் டூர்ந்து வழிமுதற் கோடுமென்

உதயணன் செயல்[தொகு]

றுரைப்பக் கேட்டே யுதயண குமரன்
குறிவழிக் காட்டிய கொலைத்தொழி னகரம் 35
அறித லஞ்சி யடியிசை கேட்கும்
எல்லை யகன்று வல்லைமருங் கோட்டி
முதநெறிக் கொண்டு முந்நாற் காவதம்
கதழ்வொடு கடக்குங் காலை யவ்வழி

வயந்தகன் கூறல்[தொகு]

ஒருபாற் படாதோ ருள்ளம் போல 40
இருபாற் பட்ட வியற்கைத் தாகிய
நெறிவயி னேதங் குறிவயிற் காட்டி
வடுவி னண்பின் வயந்தக னுரைக்கும்
இடுகன் முதலன விடவயிற் கிடந்த
தின்னாப் பேர்தே ரியற்கைத் தெண்மதி 45
ஒன்னா மன்னற் குற்றது செய்யும்
யாப்பி லாளர் காப்பிற் றாகி
ஏற்றமு மிழிவு மிடையிடைப் பல்கி
ஊன நாடு முளவழிச் சில்கி
நீரு நிழலு நீங்கிற் றாகி 50
வெவ்வினை யாள ரல்லது விழுமிய
செவ்வினை யாளர் சேரார் நம்பதிக்
கணித்து மன்றது மணிப்பூண் மார்ப
வலத்திற் கிடந்த வழிவகை தானே
வளைந்த செலவிற் றாகித் தலைத்தலைக் 55
கடுஞ்சின வென்றிக் காவ லாடவர்
கொடுஞ்சிநற் றேருங் குதிரையும் யானையும்
காலாட் குழாத்தொடு நால்வகைப் படையும்
ஓருநிரல் செல்லு முள்ளகல் வுடைத்தாய்த்
திருநிலை பெற்றுத் தீயோ ருன்னார் 60
நருமதை காறு நாட்டக ம்பபால்
வஞ்சர் வாழு மஞ்சுவரு தீநிலத்
தகலிடந் தானும் பகலிடத் தியங்குநர்க்
கின்ப மாகிய வேம வெண்குடை
மன்பெருஞ் சிறப்பின் மண்ணகக் கிழமை 65
ஒருகோ லோச்சிய திருவார் மார்பநின்
முன்னோர் காலைப் பன்னூல் பயிற்றிய
நல்லிசை நாட்டத் துல்லியன் கண்ட
குளமும் பொய்கையுங் கூவலும் வாவியும்
அளவிறந் தினியவை யசைவிடத் துடைத்தாய்ப் 70
பயப்பறு பாலை நிலனு மொருபால்
இகக்க லாகா விரண்டினு ளுவப்பதை
ஓட்டுக வல்விரைந் தென்றலி னுதயணன்

உதயணன் செயல்[தொகு]

காட்டுப் பெருவழி கடத்தன் மேவான்
நாட்டுப் பெருவழி நணுகக் காட்டிப் 75
பொருள்வயிற் பிரிவோர் வரவெதி ரேற்கும்
கற்புடை மாதரிற் கதுமென வுரறி
முற்றுநீர் வையக முழுது முவப்பக்
கருவி மாமழை பருவமொ டெதிரப்
பரவைப் பௌவம் பருகுபு நிமிர்ந்து 80
கொணமூ விதானந் தண்ணிதிற் கோலித்
திருவிற் றாம முருவுபட நாற்றி
விடுசுடர் மின்னொளி விளக்க மாட்டி
ஆலி வெண்மண லணிபெறத் தூஉய்க்
கால வனப்பிற் கோடணை போக்கி 85
அதிர்குரன் முரசி னதிர்த லானாது
தூநிறத் தண்டுளி தானின்று சொரிந்து
வேனி றாங்கி மேனி வாடிய
மண்ணக மடந்தையை மண்ணுநீ ராட்டி
முல்லைக் கிழத்தி முன்னரு ளெதிரப் 90
பல்லௌர் விரும்பப் பரந்துகண் ணகன்று
பொருள்வயிற் பிரிந்து பொலங்கல வெறுக்கையொ
டிருள்வயின் வந்த வின்னுயிர்க் காதலன்
மார்பக மணந்த நேரிழை மடந்தையர்
மருங்குல் போலப் பெருங்கவி னெய்திய 95

முல்லைநில வருணனை[தொகு]

சிறுகொடி யூமூழ் பரப்பி மற்றவர்
முறுவ லரும்பிய முல்லை யயல
குரவுந் தளவுங் குருந்துங் கோடலும்
அரவுகொண் டரும்ப வறுகால் வண்டினம்
அவிழ்பதம் பார்த்து மகிழ்லன முரலக் 100
கார்வளம் பழுனிக் கவினிய கானத்
தேர்வளம் படுத்த வெல்லைய வாகி
உறங்குபிடித் தடக்கை யொருங்குநிரைத் தவைபோல்
இறங்குகுர லிறடி யிறுங்குகடை நீடிக்
கவைக்கதிர் வரகுங் கார்பயி லெள்ளும் 105
புகர்ப்பூ வவரையும் பொங்குகுலைப்பயறும்
உழுந்துங் கொள்ளும் கொழுந்துபடு சணாயும்
தோரையுந் துவரையு மாயவும் பிறவும்
அடக்க லாகா விடற்கரு விளையுட்
கொல்லை பயின்று வல்லை யோங்கிய 110
வரையி னருகா மரையா மடப்பிணை
செருத்தற் றீம்பால் செதும்புபடப் பிலிற்றி
வெணபூ முசுண்டைக் பைங்குழை மேயச்
சிறுபிணை தழீஇய திரிமருப் பிரலை
செறியிலைக் காயா சிறுபுறத் துறைப்பத் 115
தடவுநிலைக் கொன்றையொடு பிடவுதலைப் பிணங்கிய
நகைப்பூம் புறவிற் பகற்றுயி லமரா
வரித்தா ரணிந்த விரிப்பூந் தொழுதிப்
புல்லுத ளினத்தொடு புகன்று விளையாடும்
பல்லிணர்ப் படப்பை படியணை பெருங்கடி 120
பகர்விலைப் பண்டமொடு பல்லோர் குழீஇ
நகரங் கூஉ நாற்ற நந்திப்
பல்லாப் படுநிரைப் பயம்படு வாழ்க்கைக்
கொல்லைப் பெருங்குடிக் கோவலர் குழீஇய
முல்லைப் பெருந்திணை புல்லுபு கிடந்த 125
ஐம்பதி னிரட்டியொ டையைந் தெல்லையுள்
மன்பெருஞ் சிறப்பின் மாலை யாமத்துச்
சென்றது மாதோ சிறுபிடி விரைந்தென்.

1 49 முல்லைநிலங் கடந்தது முற்றிற்று.