பெருங்கதை/2 2 கடிக் கம்பலை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

2 2 கடிக்கம்பலை பொலிந்த சும்மையொடுபொன்னணி மூதூர் மலிந்தகம் புக்கபின் மண்பொறை கூரப் பெறலரும் பெருங்கிளை யிறைகொண் டீண்டி இன்மகி ழிருக்கை யேயர் மகனொடு தண்மகிழ் நெடுங்குழற் றத்தொளித் தாமத்து 5 மதிக்கவி னழித்த மாசறு திருமுகத் தணிக்கவின் கொண்ட வையரித் தடங்கண் வனப்புவீற் றிருந்த வாசவ தத்தை வதுவைச் செல்வம் விதியிற் கூறுவென்

கணியின் சிறப்பு[தொகு]

எண்டரும் பெருங்கலை யொண்டுறை போகிக் 10
கண்ணகன் புணர்ப்பிற் கவின்பெற நந்தி
விண்ணகம் விளங்கு மேதகு நாட்டத்த
நாற்பொரு ளுணர்ந்து பாற்பொருள் பன்னி
நூற்பொரு ணுனித்துத் தீப்பொரு ளொரீஇ
அலகை வேந்தற் குலகங் கொண்ட 15
ஒழுக்க நுனித்த வழுக்கா மரபிற்
புணர்ப்பியல் காட்சியன் புரையோர் புகழ
நிழற்பெருங் குடையு நேரா சனமும்
செருப்பொடு பகுதலுஞ் சேனை யெழுச்சியும்
யானையுந் தானையு மேனைய பிறவும் 20
மண்ணகக் கிழவர் மனக்கோ ளறாது
விண்ணகக் கிழவனின் விழுப்பங் கூரித்
தம்மிற் பெற்ற தவம்புரி தருக்கத்
தரும்பரி சாரத்துப் பெருங்கணி வகுத்த

வள்ளுவன் மணநாளை அறிவித்தல்[தொகு]

நன்னா ளிதுவெனப் பன்னா டறியப் 25
பசும்பொற் பலவார் விசித்து பிணியுறீஇக்
கோதை முத்தொடு தாமந் ததைஇ
ஏற்றுரி போர்த்த விடியுறழ் தழங்குரற்
கோற்றொழில் வேந்தன் கொற்ற முரசம்
பெரும்பணைக் கொட்டிலு ளரும்பலி யோச்சி 30
முற்றவை காட்டிக் கொற்றவை பழிச்சித்
திருநாள் படைநாள் கடிநா ளென்றிப்
பெருநாட் கல்லது பிறநாட் கறையாச்
செலவச் சேனை வள்ளுவ முதுமகன்
நறுவெண் சாந்தொடு மாலை யணிந்து 35
மறுவில் வெண்டுகின் மருங்கணி பெறீஇ
அணைமிசை யமர்தந் தஞ்சுவரு வேழத்துப்
பணையெருத் தேற்றிப் பல்லவர் சூழத்
தேர்திரி மறுகுதோ றூர்முழு தறியப்
பொலிக வேல்வலம் புணர்க பூமகள் 40
மலிக மண்கமகண் மன்னுக மன்னவன்
மல்லன் மூதூர்ப்பல்லவர் கேண்மின்
திருவொடு புணர்ந்து தீயவை நீக்கி
உருவொடு புணர்ந்த வொளியினி ராகுமின்
பல்களிற் றியானைப் படைப்பெரு வேந்தன் 45
மெல்லியற் குலமகண் மிடைமணிப் பைம்பூட்
சிலம்பொலி சீறடிச் சென்றேந்து புருவத்
திலங்கொளி வாட்க ணின்னகைத் துவர்வாய்
வாசவ தத்தையொடு வதுவை கூடிக்
கோல நீண்மதிற் கொடிக்கோ சம்பி 50
மாலை மன்னவன் மணமக னாகும்
காலை யிதுவெனக் கதிர்மணிக் கடிப்பிற்
கண்ணதிர்ந் தியம்ப வின்மொழி பயிற்றிக்
கல்லென வறையு மொல்லென் கம்பலை
அறைந்தறி வுறீஇய பின்றை நிறைந்த 55

வீட்டை அலங்கரிப்பவர்[தொகு]

பெரும்பெயர் மூதூர் விரும்புபு துவன்றிப்
படையமை நெடுமதிற் கடைமுகந் தோறும்
பசும்பொற் றோரணம் விசும்புற நாட்டி
அரும்பொற் றாரோ டணிகதிர் முத்தின்
இரும்பெருந் தாம மொருங்குடன் வளைஇ 60
உத்தம வேழத் துயர்புறம் பொலிய
வித்தக வெண்குடை விரகுளி கவிப்ப
மணிக்கைக் கவரி மரபின் வீசுநர்
புடைக்களி றொருங்குடன் புகூஉ மகலத்
தடைப்பமை பெரும்பொறி யாப்புமுதற் கொளீஇப் 65
பத்திர மணிந்த சித்திரக் கதவின்
வாயி றோறும் வலத்து மிடத்தும்
தாயின் மாடத்துத் தாண்முத லெல்லையுட்
சதிரத் திண்ணைத் தண்பூம் பந்தருட்
பழுக்காய்க் குலையும் பழங்காய்த் துணரும் 70
களிக்காய்ப் பறிநுந் துவர்க்கா யும்பலும்
பளிக்காய்க் குப்பையும் பலம்பெய் பேழையும்
தளிரிலை வட்டியொடு தாதுபல வமைத்துச்
சுண்ணப் பெருங்குடம் பண்ணமைத் திரீஇ
எண்ணா தீயுந ரின்மொழிக் கம்பலும் 75

அறச்சாலை[தொகு]

தண்ணிழற் பொதிந்த வெண்மணற் பந்தர்
கண்ணுறக் கவினிக் கைப்புடை நிறைந்த
செல்வச் சாலையொடு பல்வழி யெல்லாம்
அந்த ணாளரொ டல்லோர் பிறர்க்கும்
அமுதி னன்ன வறுசுவை யடிசில் 80
நெய்ச்சூட் டமைந்த சிற்றூண் பந்தரோ
டெப்பொழு தாயினு ம்பபொழு தீயும்
தூம நவின்ற நாமக் கைவினை
மடைத்தொழில் வழாஅ வாழ்க்கையர் பயின்ற
அறச்சோற் றட்டி லகத்தும் புறத்தும் 85
முரட்கோ லிளைய ராண்மான் டியற்றி
முட்டாது நடாஅ மட்டூண் கம்பலும்

சிறார் ஏவன் மகளிர் முதலியோர் செயல்[தொகு]

பவழப் பட்டத்துப் பளிக்குமணித் தூணிற்
றிகழ்பொற் பொதிகைச் செம்பொற் செழுஞ்சுவர்
வெள்ளி வேயுள் வெள்ளியம் பலகைப் 90
பீடிகை நிரைத்த மாட மறுகிற்
கொடுப்போர் வீழ்த்த குங்குமக் குழையலும்
தொடுப்போர் வீழ்த்த தூவெள் ளலரும்
வேதியர் கடைத்தலை வேள்விச் சமிதையும்
வாதிகர் கடைத்தலை வாசச் சுண்ணமும் 95
கலந்தோ ருதிர்த்த கலவைச் சாந்தமும்
புலந்தோர் பரிந்த புதுப்பூ மாலையும்
சிறாஅர் வீழ்த்த செம்பொற் கண்ணியும்
அறாஅ மறுகி னாவணப் பலியும்
பசுங்காய் தெவிட்டும் பற்கூட் டரத்தமும் 100
இயங்குந ரின்புற வின்னவை பிறவும்
காட்டெனக் கமர்ந்து கூட்டுந ரமைத்த
கலவைக் கொழுங்களி யெழுதுக ளவித்து
வெறிக்களங் கடுப்ப வீதியு முற்றமும்
நிறைப்போது பரப்பி நெடுங்கடை தோறும் 105
அணித்தகை சிதைத்தன ரிவரென வாடும்
முனித்தலைச் சிறாரை முன்னில் வாங்கித்
தாயரைக் காட்டியவர் தவறெடுத் துரைக்கும்
ஏவன் மகளிர் வாய்மொழிக் கம்பலும்

சினாலயமும் அங்கே நடைபெறுவனவும்[தொகு]

வண்ணக் கலிங்கத்துக் கண்ணறைக் கண்டம் 110
தலையொடு தலைவர விலையடுக் கிரீஇக்
கச்சுவாய் கோடித்து முத்துப்புரி நாற்றி
ஒண்மணித் தாரொடு பன்மணிப் புளகம்
விலங்கு நீளமு மிலங்கித் தோன்றி
மிழற்றுபு விளங்கு மெழிற்பொலி வெய்த 115
வல்லவன் புனைந்த பல்வகைக் கம்மத்து
மவ்கலப் பெருங்கொடி மங்குல்வா னத்துள்
உரற்றுமழை கிழிக்கு மொண்மணி யுச்சிப்
பல்லோர் காணும் பரூஉத்திர ளடியிற்
பன்மணி கண்டத்துக் கண்ணிழற் கலங்கி 120
ஓங்குபு நிமிர்ந்த காம்பொடு கவ்விப்
பயில்பூம் பத்திக் குயில்புரை கொளுவின
வட்டமைத் தியற்றிய வலம்புரி சாற்றி
ஆடகப் பொற்கயிற் றரும்பொறி யாப்பின்
வயிரப் பல்லரிப் பயில்பூம் பத்திக் 125
கிண்கிணித் தாரொடு கலவிய கதிரணி
கொளுவொடு படாஅக் கொடிப்பவ ழத்துத்
தாமந் தாழ்ந்து தலைமுதற் கோத்த
நீலக் காழ்மிசை நெற்றி மூழ்கி
உண்ணுகுப் போலையுட் கண்விரித் தியற்றிய 130
பாத சக்கர மாறெதிர் நீர்தரக்
கோதைத் தாமமொடு கொட்டைமுதற் கோத்த
இலங்கொளி முக்குடை யெந்திரத் தியங்க
அறிவர் சரித முறையிற் சுட்டி
உரையு மோத்தும் புரையாப் புலமைப் 135
பெரியோர் நடாவுந் திரியாத் திண்ணெறி
ஒராஅ வுலகிற் கோங்குபு வந்த
அராஅந் தாணத் தருச்சனைக் கம்பலும்

வீதிகளை அலங்கரிப்பவர்[தொகு]

கண்ணிற் கண்ட நுண்வினைக் கம்மம்
கையிற் புனையுங் கழிநுண் ணாளர் 140
ஏட்டினுங் கிடையினு மூட்டமை கிழியினும்
நாற்றமுந் தோற்றமும் வேற்றுமை யின்றி
ஏற்ப விரீஇய விலையுங் கொழுந்தும்
கொழுந்திற் கேற்ற வழுந்துபடு குலாவும்
குலாவிற் கமைந்த கோலச் சந்தியும் 145
முகிழும் போதும் மகிழ்சுழ லலரும்
அன்னவை பிறவும் பன்மரம் பண்ணித்
தீட்டின ரன்றியு நாட்டினர் நிறீஇக்
கழைமுதற் கொளீஇக் கைபுனை வனப்பின்
இழைமுதற் கொளீஇய வெழில வாகிக் 150
காம வல்லியுங் கதலிகை யணிந்த
தாம வல்லியுந் தண்பெரும் படாகையும்
காலேந் திரமுங் கைவயிற் பிரியா
நூலேந் திரமு நோக்கினர் போகாப்
பத்திப் படாமுஞ் சித்திரக் கொடியும் 155
இன்னோ ரன்ன வென்னோர் சேரியும்
உறப்புணர்த் தார்க்குஞ் சிறப்பொலிக் கம்பலும்

முதியோர் கூற்று[தொகு]

இடியுறழ் முரசி னிறைமக னணியும்
முடியணி யொழிய முற்றணிப் பெருங்கலம்
யாவர் வேண்டினும் யாவரு மீமின் 160
ஈத்ததி னிரட்டி கோத்தரு நுமக்கென
நாற்பெருந் திசையு நகரங் காடியுள்
வாய்த்த செய்தொழில் வாணிகர்க் கறையும்
கோப்பெரு முதியர் வாய்ப்பறைக் கம்பலும்

மகளிர் தம் புதல்வரை அலங்கரித்து விடுத்தல்[தொகு]

குடிக்கணி கொடுக்குங் கொற்றத் தானை 165
இடிக்கண் முரசி னேயர் பெருமகன்
வதுவை நாப்பட் புதுவது புணர்ந்து
நுந்தையர் தம்மொடு செலீஇ யெந்தையர்
வருக வீண்டென வறிதி னோடும்
தம்மமர் புதல்வரைத் தலையடி காறும் 170
கம்மப் பல்கலங் கைபுனைந் தணிந்து
செம்மலின் விடுக்குஞ் சிறந்த சாயல்
அம்மென் கூந்த லரிவையர் கம்பலும்

கள்ளுண்பார் செயல்[தொகு]

வத்தவ ரிறைவன் வதுவையு ணம்மோ
டொத்தவர் வரிசை யொத்துப் புகுதலிற் 175
பத்திபட நிரைத்த பைங்குலைத் தாறும்
தெங்கி னூறலுந் தேம்பிழித் தேறலும்
தாங்கரும் பெண்ணைப் பூங்குலை யமுதமும்
மதுவுஞ் சீதமும் புதுமலர் வேரியும்
உக்கிர வூறலுஞ் சிக்கரத் தெளியலும் 180
…..காஞ்சியத் தெளிவும்
கரும்பி னூறலும் பெரும்பொதித் தேனும்
இவையும் பிறவுஞ் சுவைதெரி யாளர்
விட்டுண லாற்றா மட்டுமலி நறுங்கள்
பெய்ம்மின் றம்மி னீமின் பிறர்க்கெனத் 185
தம்மி றோறு முண்மகிழ்ந் துரைக்கும்
கள்ளுண் ணாள ரொள்ளொலிக் கம்பலும்

யானைப்பாகர்[தொகு]

மாற்றுத்தொழின் மன்னர் மயங்கிய ஞாட்பினுட்
கூற்றுத்தொழி லிளையர் குடர்சூடு மருப்பின
வெம்படை மிகப்பலர் மெய்ம்மிசை யெறியினும் 190
தம்படைக் கொல்காப் பண்புடன் பயிற்றி
மூத்தோர் பெண்டிர் நீத்தோர் மகாஅரென
நாற்பா லோரையு நூற்பாற் செய்தொழிற்
பாகர் வேண்டினும் பையுள் செய்யா
வேக வுள்ளத்து வேழந் தெரிந்து 195
நிரந்தன காட்டிய நேயந் தோன்றப்
பார்படு முத்தொடு தாருடன் பூட்டி
ஐவகை வண்ணத்துக் கைவல் கம்மியர்
கொடியும் பத்தியும் வடிவுபட வெழுதிச்
சூழியு மோடையுஞ் சுடர்மசிக் கோவையும் 200
ஊழறிந் துயர்த்த வுத்தம வுயர்ச்சிய
மண்ணுநீர் சுமக்கற்குப் பண்ணுமுறை பிழையாக்
கோல யானை நாலிரண்டு மிகையா
ஆயிர மணிந்தவை கோயிலுட் டரூஉம்
பாகிய லுள்ளத்துப் பாகர் கம்பலும் 205

மஞ்சனநீர் கொணர்தற்குரிய மகளிர்[தொகு]

மணியரி யடக்கிய மாண்வினைப் பகுவாய்
அணிமிழற் றரவத் தம்பொற் கிணகிணி
சிலம்பொடு சீறடிப் புறம்புதைத் தரற்றவும்
அம்மென் மருங்கு லசைய வடிபரந்த
கொம்மை கொண்ட தன்மைய வாகிக் 210
கோங்கரும் பழித்த வீங்கிள மென்முலை
உட்பட விட்ட வட்ட நுடக்கத்துச்
கண்ண விலேகை வண்ணஞ் சிதைய
மண்ணிய நித்தில வடத்தொடு புரளும்
பல்கலஞ் சுமத்த லாற்றாது பையென 215
ஒல்குபு நுடங்கு மொருபிடி நுசுப்பினர்
மண்ணக மருங்கின் மதிபல பயின்றன
விண்ணக மென்னையும் விடுக்குங் கொல்லென
மதியகம் வெள்க வனப்பொடு புணர்ந்த
கதிர்விடு திருமுகத் தெதிர்வன போலச் 220
சென்றுவந் துலாவுஞ் சேயரிக் கண்ணினர்
ஈன்றோர் மாட்டு மெதிர்முக நோக்காது
மான்றோங் கூறு மம்மர் நோக்கினர்
பொன்னணி கொண்ட பூந்தண் சிகழிகைக்
கன்னி மகளிர் கண்ணணங் குறூஉம் 225
ஒவ்வா வணியின ரொப்பக் கூடி
மண்ணகக் கிழவற்கு மண்ணுநீர் சுமக்கும்
புண்ணிய முடையீர் போதுமி னீங்கென
வாயி றோறும் வந்தெதிர் கொள்ளப்
போர்வை மடக்கார் பொலியப் புகுதரும் 230
கோயின் மகளிர் கோல மெல்லடி
நூபுரங் கலந்த பாடகக் கம்பலும்
அன்னவை பிறவும் பன்னூ றாயிரம்
ஒடிவில் கம்பலை யொருங்குதலைக் கூடிக்
கடிகமழ் செல்வங் கலந்தன்றா னகரென். 235

2 2 கடிக்கம்பலை முற்றிற்று.