பெருங்கதை/3 12 அமாத்தியர் ஒடுங்கியது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

3 12 அமாத்தியர் ஒடுங்கியது

  • முன்பகுதி சிதைந்துபோயிற்று.

1[தொகு]

… வணி நோக்கி
ஆரணங்காகிய அகல் விசும்பு உகக்கும்
தோரண வாயில் துன்னினன் ஆகி
அருமொழி உணரும் பெருமொழி யானைத்
தாக்கரும் தானைத் தருசக குமரன் 5
வேட்கும் விச்சை யாது-என வினவ

… [சிதைவு]

வாயிலோன் விடை[தொகு]

பயந்தோன் படைத்த படைப்பரும் வெறுக்கை
இருந்துழி யிசையா னிகந்தயர்த் தொழிந்தனன்
அன்னவை யறிந ருளரெனி னவர்கட்
கின்னுயி ராயினு மீவ னவனென 10
மன்னவன் மனத்தை யெல்லா மதித்து
நன்மூ தாளன் பன்னினன்மொழிய

உதயணன் கூறல்[தொகு]

வாரி மருங்கற வற்றினு மகவயின்
நீர்வளஞ் சுருங்கா நெற்றித் தாரைக்
கூவலும் பொய்கையுங் கோயில் வட்டத் 15
தெவ்வழி வேண்டினு மவ்வழிக் காட்டும்
ஞான வல்லியத் தரும்பொரு ணுனித்தனென்
ஏனை நூற்கு மேதில னல்லேன்
கரந்துழி யறிய வருங்கல வெறுக்கை
வைத்துழிக் காட்டும் வாய்மொழி விச்சை 20
கற்றுக்கை போகிக் காணவும் பட்டது
கொற்றவ னிவற்றுக் குறையொன் றுடையது
காணவு மமையுங் காணா னாயினும்
காவ லாளனைக் கட்பட லுறுவேன்
காட்டுதல் குறையெனக் கேட்டவன் விரும்பி 25
நல்லவை நாப்பட் செல்வனைச் சேர்ந்தவன்
வல்லவை யெல்லாம் வலிதிற் கூறக்

உதயணன் தருசகனைக் காணல்[தொகு]

கற்றோர்க் காண்ட லாகுங் காவலிற்
பெற்ற பயனென வெற்ற வேந்தனும்
காண்பது விரும்பி மாண்பொடு புணர்ந்த 30
பேரத் தாணி பிரித்த பின்றை
நேரத் தாணி நிறைமையிற் காட்டலிற்
பகையறு குருசிலைப் பண்டுபயின் றன்ன
உவகை யுள்ளமொ டொழிக்க மறாது
கண்ணினுங் கையினு மன்றி நாவின் 35
இன்னுழி யிருக்கென விருந்த பின்றைக்
கற்றவை யெல்லாந் தெற்றென வினாஅய்த்
தானே கேட்டு வியந்துதலை துளக்கி
ஆனாக் கட்டுரை கழிந்தபின் மேனாட்
டள்ளா வென்றித் தம்மிறை வைத்த 40
விள்ளா விழுப்பொரு ளுள்வழி யுணரா
மன்னவன் மற்றிது நின்னி னெய்துவேன்
கற்றறி விச்சையிற் காட்டுதல் குறையென

தருசகனுக்கு உதயணன் நிதியைக் காட்டல்[தொகு]

உற்றன னுரைப்ப வுள்வழித் தெரிந்து
தான்வைத் தனன்போற் காட்டலிற் றருசகன் 45
ஆனாக் காதலொ டாருயி ரன்ன
தோழ னாகித் தோன்றா தோற்றும்
ஞான நவின்ற நல்லோ னிவனென
எனைத்திவன் வேண்டினு மீவ னென்றுதன்
கணக்குவினை யாளரொடு கரண மொற்றி 50
அகத்தே யுறைகென வமைத்த பின்னர்

உதயணன் நீரூற்றுள்ள இடத்தைக் காட்டல்[தொகு]

எப்பான் மருங்கினு ம்பபா னாடி
அகத்துநீ ருடைய வதனது மாட்சி
மிகுந்தநூல் வகையின் மேவரக் காட்டக்
கன்னியங் கடிநகர் காணவா வுடைய 55
இளமரக் காவினுள் வளமைத் தாய
நீர்நல னுணர்ந்து சீர்நலக் குருசிற்
கெழுகோ லெல்லையு ள்ழுமிது நீர்மற்
றன்றியு மதனது நன்றி நாடின்
நாவிற்கு மினிதாய்த் தீதற வெறியும் 60
தண்மையு நுண்மையுந் தமக்கிணை யாவன
தெண்ணீ ரெவ்வழித் தேரினு மில்லை
புகழ்வரை மார்பிற் பூந்தா ரண்ணல்
அகலும் பொழுதி னிகழ்வ கேண்மதி
இருமுழத் தெல்லையுள் வரிமுகம் பொறித்த 65
பொன்னிறத் தேரை போதரும் பின்னர்
மும்முழத் தெல்லையுட் டெண்ணிறங் குயின்றது
தோற்ற மினிதாய் நாற்ற மின்னாப்
பருமண லுண்டது பண்ணுநர் வீழ
உட்கா ழீன்ற வொருகோ லரையின் 70
எட்பூ நிறத்தொடு கட்கா முறுத்தும்
விளங்கறல் வெள்ளியின் வீசுறு மென்றதன்
அகம்புக் கனன்போ லகன்ற ஞானத்தின்
உண்ணெறிக் கருத்தி னண்ணிய தாகிய
மண்ணின் சுவையு மின்னதென் றொழியா 75

தருசகன் செயல்[தொகு]

துரைப்பக் கேட்டே யோங்கிய பெரும்புகழ்த்
திருப்பே ருலகம் பெற்றோன் போல
அகழ்வினை யாளரை யவ்வயிற் றரீஇ
இகழ்வி லத்தொழி லிறைவ னேவப்

உருமண்ணுவா முதலியோர் செயல்[தொகு]

பெருமண் வேந்தனைப் பிழைப்பின் றோம்புதற் 80
குருமண் ணுவாவு முள்ளகத் தொடுங்க
வாய்மொழி யிசைச்சனும் வயந்தக குமரனும்
தேமொழி மாதர் தாய்முதற் கோயிலுள்
தரும நூலுந் தந்துரை கதையும்
பெருமுது கிளவியொடு பிறவும் பயிற்றி 85
நங்கை விழையு நாளணி கலங்கள்
கொங்கணி மலரிற் கூட்டுவன ருய்த்துச்
சென்றுவந் தாடல் செய்வது வலிப்பப்
பிறவுறு தொழிலொடு மறவோ ரெல்லாம்
ஆய்புக ழரசனை யற்றப் படாமற் 90
காவல்புரிந் தனராற் கடிமனைக் கரந்தென்.

3 12 அமாத்தியர் ஒடுங்கியது முற்றிற்று.