பெருங்கதை/3 27 பறை விட்டது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

3 27 பறை விட்டது

கால்வலிளையர் ஆருணிக்குக் கூறுதல்[தொகு]

பெருஞ்சிறப் பெய்தியவ னிருந்த செவ்வியுள்
வண்டார் தெரியல் வருட காரனிற்
பண்டே பயிர்குறிக் கொண்டுநன் கமைந்த
கால்வ லிளையர் பூசல் வாயா
வேல்வல் வேந்தன் விரும்புபு கேட்ப 5
வடுவில் பெரும்புகழ் வத்தவன் மந்திரி
இடவகன் பணியி னேழா யிரவர்
சவரர் புளிஞருங் குவடுறை குறவரும்
குறுநில மன்னரு நிறைவன ரீண்டி
வஞ்ச காந்தையொடு கந்த வதியெனும் 10
குளிர்புன்றஃ பேரியாறு கூடிய வெல்லையுள்
நளிபுன னாட்டக நடுங்கக் கவர்ந்தாண்
டொளிதரு மிருக்கையி னொடுங்கினர் தாமெனப்

வருடகாரன் செயல்[தொகு]

பைந்தளிர்ப் படலைப் பாஞ்சால ராயற்கு
வந்துகண் கூடிய வருட காரன் 15
அருளிக் கேண்மெனத் தெருளக் கூறும்
மாரிப் பெரும்புனல் வருவா யடைப்பின்
ஏரிப் பெருங்குள நீர்நிறை யிலவாம்
அற்றே போலப் பற்றா மன்னற்குத்
தலைவரும் பெரும்படை தொலைய நூறிற் 20
சுருக்க மல்லது பெருக்க மில்லை
கல்லிடை யிட்ட காட்டகங் கடந்து
வெள்ளிடைப் புகுந்த வேட்டுவப் படையினை
ஆட்டுதுஞ் சென்றென வத்திசை மருங்கினும்
வாட்படை வகுத்துச் சேட்படப் போக்கி 25
மறுத்து முரைத்தனன் மன்னவன் கேட்ப
வெறுத்த வேந்தனை வெற்பிடை முற்றி
நாற்பெரும் படையு நம்புறஞ் சூழ
மேற்படை நெருங்கு காலை மாற்றவன்
சில்படை யாளரொடு செல்படை யின்றிக் 30
கூழ்பட வறுப்பப் பாழ்படப் பாய்ந்து
பற்றிய படைஞரு ம்பபாற் படர்தர
உற்றது செய்த லுறுதி யுடைத்தென

ஆருணியின் உட்கோள்[தொகு]

இயற்கை யாக வென்றொழின் மாட்டிவன்
முயற்சி யுடைமையின் முடிக்குவன் றானெனப் 35
பெயர்த்து மவற்கோர் பெருஞ்சிறப் பியற்றிச்
சொல்லிய வெல்லா நல்குவன னாகித்
தன்படை சிறிதே யாயினு மிவன்படை
என்படை யென்னு மெண்ண முண்மையின்
எழுது மென்றவன் மொழியா மாத்திரம் 40

வருடகாரன் செயல்[தொகு]

கருதிய தெல்லாங் கால்வ லிளையரின்
உருவ வெண்குடை யுதயணற் குணர்த்த

உதயணன் செயல்[தொகு]

அடற்கரும் பெரும்படை யற்றப் படாமைப்
படுப்பதோர் வாயில் பாங்குற நாடி
வெம்பரி மான்றேர்த் தம்பியர்த் தழீஇ 45
மதில்வடி வாகிய மலைப்புடை மருங்கே
அதிர்குரல் வேழமும் புரவியு மடக்கி
அவற்றுமுன் மருங்கே யகற்றுதற் கரிய
ஒள்வாட் பெரும்படை யுள்ளுற வடக்கி
அப்படை மருங்கே யயிற்படை நீறீஇத் 50
தரும தத்தனைப் பெருமுகம் பெய்தவற்
கெருத்துப்புடை யாக விடவகற் கொளீஇயவன்
உருத்தெழு பெரும்படைக் கோடுபுறங் காட்டிப்
பவடத்தொழு லாரியி னிடைப்படப் புகுத்தி
உருள்படி போல வருட காரன் 55
போக்கிட மின்றி யாப்புற வடைப்ப
இருங்கணி கார னெண்ண மாக
வரம்பணி வாரியுள் வந்துடன் புகுந்த
அருந்திற லாருணி யென்னும் யானையைப்
படைக்கலப் பாரம் பற்பல சார்த்தி 60
இடுக்கண் யாஞ்செய வியைந்த தின்றென
வாரிப் பெரும்படை மற்றவண் வகுத்து
நேரா மன்னனை நீதியிற் றரீஇப்
பௌரிற் கோடற்குப் புரிந்துபடை புடையா
வார்கழ னோன்றாள் வத்தவ னிருப்ப 65

ஆருணியின் மனநிலை[தொகு]

வாய்த்த சூழ்ச்சி வருட காரனொ
டியாத்த நண்பினன் யானென வாருணி
மேற்சென் றழித்தன் மேயினன் விரும்ப

தீய நிமித்தங்கள்[தொகு]

அந்தமி லாற்ற லவந்தியன் யானை
வெந்திற னளகிரி தன்படி வாகும் 70
மந்தர மென்னு மத்த யானை
நீல நெடுவரை நெற்றித் தாகிய
கோலக் கோங்கின் கொழுமலர் கடுப்புறு
சூறைக் கடுவளி பாறப் பறந்தெனப்
பட்ட மடுத்த கொட்டையொடு பாறவும் 75
உருமுரழ் முரசின் கண்கிழிந் ததனொடு
சக்கர நெடுங்கொடி யற்றன வாகி
இருநில மருங்கிற் சிதைவன விழவும்
புள்ளு நிமித்தமும் பொல்லா வாக

பூரணகுண்டலன் கூற்று[தொகு]

விள்ளா நண்பின் விறலோ னமைச்சன் 80
பூரண குண்டலன் றாரணி மார்ப
பெயர்த்து நகரம் புகுது மிந்நாள்
அகைத்த தறிந்தனை யருண்மதி நீயேன்
றடையார்க் கடந்து தடைபா டகற்றிய
அறிந்துபடை விடுப்ப தன்னது பொருளெனச் 85
செறிந்த தாகச் செப்பலிற் சீறிக்

வருடகாரன் கூற்று[தொகு]

கொள்ளா ரழிவினைக் கூறு மிவையென
வள்ளிதழ் நறுந்தார் வருட காரன்
ஊக்கங் கொளுவ வாக்கங் கருதி

ஆருணியின் செயல்[தொகு]

ஆருணி யரச னடற்களிறு கடாஅய்க் 90
காரணி முகிலிடைக் கதிரொளி கரந்து
மங்கு மருக்கனின் மழுங்குபு தோன்றச்
சங்கமு முரசுஞ் சமழ்த்தன வியம்பப்
பொங்குநூற் படாகையொடு வெண்கொடி நுடங்க
நிரந்த பெரும்படை பரந்தெழுந் தோடி 95
மாற்றோ னிருந்த மலையக மடுத்துக்

போர் நிகழ்ச்சி[தொகு]

கூற்றா யெடுத்த கோல விற்படை
நாற்றிசை மருங்கினுங் கார்த்துளி கடுப்பக்
கடுங்கணை சிதறிக் கலந்துடன் றலைப்பெய
நடுங்கின ராகி யுடைந்துபுறங் கொடுத்துப் 100
பொறிப்படை புதைந்த குறிக்களம் புகலும்
எண்டிசை மருங்கினு மியமரத் தொலியொடு
விண்டோய் வெற்பொலி விரவுபு மயங்கி
ஆர்ப்பிசை யரவமும் போர்க்களிற் றதிர்ச்சியும்
கார்க்கட லொலியெனக் கலந்துடன் கூடித் 105
திமிரம் பாய்ந்த வமர்மயங் கமயத்துச்
சிலைத்தன தூசி மலைத்தன யானை
ஆர்த்தனர் மறவர் தூர்த்தனர் பல்கணை
விலங்கின வொள்வா ளிலங்கின குந்தம்
விட்டன தோமரம் பட்டன பாய்மரத் 110
துணிந்தன தடக்கை குனிந்தன குஞ்சரம்
அற்றன பாந்தலை யிற்றன பல்கொடி
சோர்ந்தன பல்குடர் வார்ந்தன குருதி
குழிந்தது போர்க்கள மெழுந்தது செந்துகள்
அழிந்தன பூமி விழுந்தனர் மேலோர் 115

உதயணன் செயல்[தொகு]

இப்படி நிகழ்ந்த காலை வெப்பமொடு
பெரும்படைச் செற்றத் திருங்கடன் மாந்திக்
குஞ்சரக் கொண்மூக் குன்றடைந்து குழீஇக்
காலிய லிவுளிக் கடுவளி யாட்ட
வேலிடை முடைந்து வாளிடை மின்னக் 120
கணைத்துளி பொழிந்த கார்வரைச் சாரல்
ஒருபெருஞ் சிறப்பி னுதயண குமரன்
பொருபடை யுருமிற் பொங்குபு தொடரத்

ஆருணியின் செயல்[தொகு]

தாரணி மார்ப னாருணி யரசனும்
காந்தா ரகனுங் கழற்காற் சாயனும் 125
தேந்தார்ச் சூரனுந் திறற்பம சேன்னும்
இந்நாற் றலைவரு மெரிகான் றெதிர்ப்பச்
செந்நே ராகச் செல்வுழி யெதிரே

கடகபிங்கலர் செயல்[தொகு]

காந்தா ரகனைக் கடக பிங்கலர்
தேந்தார் மார்பந் திறப்ப வெய்ய 130
ஆழ்ந்த வம்போ டழிந்தன னாகி
வீழ்ந்தன னவனும் வீழ்ந்த பின்னர்
…..

ஆருணியின் கூற்று[தொகு]

பெய்கழ லாருணி பிறந்த நாளுட்
செவ்வாய் விருச்சிகஞ் சென்றுமே னெருங்க
ஆற்றல் சான்ற வடல்வே லாருணி 135
ஏற்றோர் யாவ ரீண்டுவந் தெதிர்க்கெனச்

உதயணன் செயல்[தொகு]

சீற்றத் துப்பிற் சேதியர் பெருமகன்
கழலணி நல்வா ளழல வீசித்
தாங்கருங் காதற் றம்பியர் சூழப் 140
பூங்கழற் றோழர் புடைபுடை யார்தர
ஒன்னப் பகையா னுதயண னென்போன்
இன்னா மன்ன நின்னுயி ருணீஇய
வந்தனெ னென்றே சென்றுமே னெருங்க

ஆருணியின் செயல்[தொகு]

அடுகளி யானை யெதிர்கண் டாங்குருத் 145
தடுதிற லாருணி யவனுரை பொறாஅன்
பன்மயி ரணிந்த பத்திச் சேடகம்
மின்னொளிர் வாளொடு பின்னவன் வாங்கக்

உதயணன் செயல்[தொகு]

காதி வெவ்வினை கடையறு காலைப்
போதி பெற்ற புண்ணியன் போல 150
வீதல் சான்ற வெகுளி முந்துறீஇ
எதிர்த்த மன்னனைச் செயிர்த்தனன் றலைப்பெய்
தியாவரும் வேண்டா விதன்பின்மற் றிவனை
வீய நூறி வெஞ்சினந் தணிகென
ஏயர் பெருமக னெதிர்வது விரும்ப 155

தருமதத்தன் ஆருணியரசனைக் கொல்லல்[தொகு]

வேற்று வேந்தனை வீழ நூறுதல்
மாற்றா தெனக்கு மன்ன வருளெனக்
கரும மாதல் காரணங் காட்டித்
தரும தத்த னென்னுங் கடுந்திறல்
அருமுரட் கலுழனி னார்த்துமே லோடிப் 160
பொருமுர ணழிக்கும் புனைபடை பயிற்றி
இமைப்போர் காணா விகற்றொழிற் றிரிவொடு
பலர்க்குப் பதமின்றிப் பாஞ்சால ராயனைத்
தனக்குப் பதமாகத் தலைப்பெய் தேற்றலின்
வார்கவுள் வேழமும் வசத்த தன்றியவன் 165
ஊர்வழிச் செல்லா தொல்குபு நிற்றரக்
கூர்கெழு வச்சிரங் கொண்டு வானவன்
கார்கெழு மாமலைக் கவினழித் த்துபோற்
றாரணி மார்பன் யானையை வீழாக்
கனல்சொரி மலையிற் கவிய நூறித் 170
தார்கெழு மார்புந் தலையுந் தகர
முடியணி யார முத்துநிரை துளங்கத்
தொடியணி திண்டோ டுணிந்துநிலஞ் சேரப்
பணிவில னெறிதலிற் படைக்கலஞ் சோரத்
தறுக ணிமையான் றருக்கினொ டுறுதியேய் 175
பிறுமுனை மருங்கி னேடுபடத் திருகி
மான்முதல் வகையி னான்மறை யாளன்
மழுவே றுண்ட மன்னவன் போலக்
கொழுநிணக் குருதியுட் குஞ்சரத் தோடும்
அழிவுகொண் டாருணி யவிந்தனன் வீழ்தலிற் 180

உதயணன் செயல்[தொகு]

கொற்றம் பெற்றனன் குருகுலத் திறையென
வெற்ற முரசம் வேழ மேற்றி
நகரினு நாட்டினும் பகர்வன ரறைகெனப்
பின்னுரை போக்கி யொன்னாற் குறுகிப்
படைத்தொழில் வதுவை நம்மாட் டெய்த 185
முடித்தன னென்று சமழ்த்தன னோக்கி
நடுக்கமில் வேந்தனை நாமு முன்னின்
றடக்கற் பாலமென் றியாழறி வித்தகன்
அமரார் புகழத் தமரி னடக்குவித்
தீம மேற்றியவ னுரிமைச் சனத்திற் 190
கேம மீகென் றிடவகற் போக்கி

வருடகாரன் செயல்[தொகு]

வரிகழ னோன்றாள் வருட காரன்
இரியற் படையொ டியைந்தொருங் கீண்டிக்
கொடிக்கோ சம்பிக் கொற்ற வாயில்
அடுத்தனன் குறுகி யஞ்சன்மின் யாவிரும் 195
வடுத்தீர் பெரும்புகழ் வத்தவர் கோமான்
படுத்தனன் கண்டீர் பாஞ்சால ராயனை
அடைத்தனிர் வையா தகற்றுமின் கதவென

நகரமாந்தர் கூறுதல்[தொகு]

நகரத் தாளர் புகரறக் கூறுவர்
தொல்வழி வந்தவெம் பெருமக னெழுதிய 200
வெல்பொறி யோலை விடுத்தபி னல்லது
புகுதர விடோமிந் நகர்வயின் யாமென

யாவரும் நகர் புகுதல்[தொகு]

உடனுயிர்ப் பிரிய வுதயணன் மந்திரி
இடவகன் வந்தமை யிசைத்தலும் விரும்பிக்
கொடியும் படாகையும் வடிவுபட வுயரிச் 205
செறிந்த கதவந் திறந்தன ரெதிர்கொள
வென்றியொடு புக்கு நின்ற மறவருட்
டலைவ னாகிய தொலைவில் விழுச்சீர்ப்
பாடுசால் சிறப்பிற் பாஞ்சால ராயன்
கண்மணி யன்ன திண்ணறி வாளன் 210
கும்பனென் போனை வெம்ப நூறி
இன்று மற்றிங் கிவன்றம ருளரெனிற்
குன்றா ரவரைக் கோறு நாமெனக்
கழிப்புறு வெள்வாட் டெழித்தன ருரீஇ
ஒழுக்கஞ் சான்றோர் பிழைப்பில ரோம்ப 215
மலைத்தொகை யன்ன மாட வீதியுட்
சிலைப்பொலி தடக்கைச் சேதியன் வாழ்கென
அலைகடல் வைய மறிய வெங்கும்
பிறைமருப் பியானைப் பிணரெருத் தேற்றிப்
பறைவிட் டன்றாற் பகைமுத லறுத்தென். 220

3 27 பறை விட்டது முற்றிற்று. மூன்றாவது மகத காண்டம் முற்றுப் பெற்றது.