பெருங்கதை/3 2 மகதநாடு புக்கது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

3 2 மகதநாடு புக்கது

தோழர் செயல்[தொகு]

பெருவழி முன்னிப் பெருந்தகை வேந்தனை
உருமண் ணுவாவும் வயந்தக குமரனும்
அருமறை நாவி னந்த ணாளன்
மயக்கமில் கேள்வி யிசைச்சனு மென்றிக்
கடன்றி தோழர் காவல் போற்றி 5
மடநடை மாதர் மாறிப் பிறந்துழி
மீட்கும் வேட்கையொடு சேட்புலம் போகி
விரிகதிர் திங்கள் வெண்குடை யாக
ஒருவயிற் கவித்த லுற்ற வேந்தற்
கருமை யமைச்சர் பெருமலை யேறிக் 10
கொண்டியாந் தருதுங் கண்டனை தெளிகென
நண்புணத் தெளித்த நாடகம் போலப்
படைச்சொற் பாசத் தொடக்குள் ளுறீஇக்
கலாவேற் குருசில் விலாவணை யோம்பி

எருமையின் செயல்[தொகு]

வயல்கொள் வினைஞர் கம்பலை வெரீஇக் 15
கயமூழ் கெருமை கழைவளர் கரும்பின்
விண்ட விளமடன் முருக்கித் தண்டாது
தோகைச் செந்நெல் சவட்டிப் பாசிலை
ஒண்கேழ்த் தாமரை யுழக்கி வண்டுகள்
ஆம்ப லகலிலை குருக்கிக் கூம்பற் 20
குவளைப் பன்மலர் குழைத்துத் தவளைத்
தண்டுறை கலங்கப் போகி வண்டினம்
பாடலோவாப் பழனப் படப்பைக்
கூடுகுலைக் கமுகின் கொழுநிழ லசைந்து
மன்றயற் பரக்கு மருதந் தழீஇக் 25

அருவி[தொகு]

குன்றயற் பரந்த குளிர்கொ ளருவி
மறுவின் மானவர் மலிந்த மூதூர்
வெறிது சேறல் விழுப்ப மன்றெனக்
கான வாழைத் தேனுறு கனியும்
அள்ளிலைப் பலவின் முள்ளுடை யமிர்தமும் 30
திரடாண் மாஅத்துத் தேம்படு கனியும்
வரைதாழ் தேனொ டுகாஅய்விரை சூழ்ந்து
மணியு முத்து மணிபெற வரன்றிப்
பணிவில் பாக்கம் பயங்கொண்டு கவரா
நிறைந்துவந் திழிதரு நீங்காச் செல்வமொடு 35

மகதநாட்டின் சிறப்பு[தொகு]

சிறந்த சீர்த்திக் குறிஞ்சி கோலிக்
கல்லென் கம்மையொடு கார்தலை மணந்த
முல்லை முதுதிணைச் செல்வ மெய்திப்
பாலையு நெய்தலும் வேலி யாக்கஃ
கோல மெய்திக் குறையா வுணவொடு 40
துறக்கம் புரியுந் தொல்லையி னியன்றது
பிறப்பற முயலும் பெரியோர் பிறந்தது
சிறப்பிடை யறாத தேசிக முடையது
மறப்பெருந் தகையது மாற்றோ ரில்லது
விறற்புக ழுடையது வீரிய மமைந்த 45
துலகிற் கெல்லாந் திலகம் போல்வ
தலகை வேந்த னாணை கேட்ப
தரம்பு மல்லலுங் கரம்பு மில்லது
செல்வப் பெருங்குடி சிறந்தணி பெற்றது
நல்குர வாளரை நாடினு மில்லது 50
நன்பெரும் புலவர் பண்புளி பன்னிய
புகய்ச்சி முற்றா மகிழ்ச்சியின் மலிந்த
தின்னவை பிறவு மெண்ணுவரம் பிகந்த
மன்பெருஞ் சிறப்பின் மகதநன் னாடு
சென்றுசார்ந் தனராற் செம்மலொ டொருங்கென். 55

3 2 மகதநாடு புக்கது முற்றிற்று.