பெருங்கதை/3 3 இராசகிரியம் புக்கது

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

3 3 இராசகிரியம் புக்கது

ஊர்களின் சிறப்பு[தொகு]

மன்பெருஞ் சிறப்பின் மகதநன் னாடு
சென்று சார்ந்தபின் வென்றியிற் பெருகி
யாறுங் குளனும் வாய்மணந் தோடித்
தண்டலை தோறுந் தலைபரந் தூட்டி
வண்டிமிர் பொய்கையும் வாவியுங் கயமும் 5
கேணியுங் கிணறு நீணிலைப் படுவும்
நறுமலர் கஞலி யுறநிமிர்ந் தொழுகிச்
சாலி கவினிய கோலச் செறுவிற்
செல்வங் கொடுத்து நல்குத லறாஅ
இன்பங் கெழீஇய மன்பெருஞ் சிறப்பிற் 10
பல்குடித் தொல்லூர் புல்லுபு சூழ

இராசகிரியத்தின் சிறப்பு[தொகு]

உயர்மிசை யுலகி னுருகெழு பன்மீன்
அகவயிற் பொலிந்துத னலங்குகதிர் பரப்பி
நிலப்புடை நிவத்தரு நிறைமதி போலக்
காட்சி யியைந்த மாட்சித் தாகிச் 15

மதில்[தொகு]

சித்திரக் கைவினை செறிந்த கோலத்துப்
பத்திரப் பாம்புரி யத்தகக் கலாஅய்
முற்படை வளைஇய பொற்படைப் படுகாற்
கண்டவர் நடுங்குங் குண்டகழ்ப் பைந்துகில்
தண்டாச் செல்வமொடு தனக்கணி யாக 20
உடுத்துவீற் றிருந்த வடுத்தீ ரல்குல்
மாற்றோர் நுகரப் படாஅ தேற்ற
பன்மணி பயின்ற வொண்முகட் டுச்சி
நலத்தகு ஞாயி லிலக்கண விளமுலைப்
பொறிநிலை யமைந்த போர்ப்பெருங் கதவிற் 25
செறிநிலை யமாந்த சித்திரப் புதவின்
யாப்புற வமைத்த வாய்ப்புடைப் பணதி
வல்லோர் வகுத்த செல்வக் கூட்டத்
தாய்நலக் கம்மத் தழகொடு புணர்ந்து
தீயழற் செல்வன் செலவுமிசை தவிர்க்கும் 30
வாயின் மாடத் தாய்நல வணிமுகத்
தொண்பொற் சத்தித் திண்கொடி சேர்ந்து
விண்ணிற் செல்லும் விளங்கொளி யவர்களை
மண்ணிற் செலவங் காணிய வல்விரைந்
தடைதர்மி னென்னு மவாவின போல 35
வடிபட வியங்கும் வண்ணக் கதலிகைக்
கூந்த லணிந்த வேந்துநுதற் சென்னிக்
கடியெயின் முதுமகள் காவ லாக

படைச்சேரி[தொகு]

நெடுநீர்ப் பேரியாறு நிறைந்துவிலங் கறுத்துப்
பல்வழிக் கூடிய படிய வாகிச் 40
செல்வழி யெல்லாஞ் சிறந்த கம்பலை
கரைபொரு துலாவுந் திரையொலி கடுப்ப
நிறைவளங் கவினிய மறுகிரு பக்கமும்
அந்தி வானத் தகடுமுறை யிருந்த
ஒண்கே ழுடுவி னொளிபெறப் பொலிந்து 45
கண்ணுற நிவந்த பண்ணமை படுகாற்
கைவினை நுனித்த மைதவழ் மாடத்
தரும்படைச் செல்வ ரமர்ந்தினி துறையும்
பெரும்படைச் சேரி திருந்தணி யெய்திக்
கைபுனை வனப்பினோர் பொய்கை யாக 50

பரத்தையர் தெரு[தொகு]

வாணுதன் மகளிரு மைந்தரு மயங்கிக்
காம மென்னு மேமப் பெருங்கடற்
படுதிரைப் பரப்பிற் குடைவன ராடி
அணிதலும் புனைதலு முனிவில ராகிக்
காத லுள்ளமொடு கலத்துண் டாடுநர் 55
போகச் சேரி புறவித ழாகச்

வேளாளர் தெரு[தொகு]

சால்பெனக் கிடந்த கோலப் பெருநுகம்
பொறைக்கழி கோத்துப் பூண்டன ராகி
மறத்துறைப் பேரியாற்று மறுகரை போகி
அறத்துறைப் பண்டி யசைவிலர் வாங்கி 60
உயர்பெருங் கொற்றவ னுவப்பினுங் காயினும்
தவிர்க்கவும் போக்கவும் படாத தன்மையர்
நன்புலந் தழீஇய மன்பெருஞ் செய்கைக்
காரணக் கிளவிப் பூரண நோக்கிற்
பெருங்கடி யாள ரருங்கடிச் சேரி 65
புறவிதழ் மருங்கிற் புல்லித ழாக

வாணிகர் தெரு[தொகு]

மதியுறழ் சங்கின் வாய்வயிற் போந்த
நிதியம் பெற்ற நீர்மையர் போல
அதிரா வியற்கை யங்கண் ஞாலத்துக்
குதிரை மருப்புங் கொளற்கரி தாகிய 70
அழலுமிழ் நாக நிழலுமிழ் மணியும்
சிங்கப் பாலுந் தெண்டிரைப் பௌவத்து
மூவா வமரர் முயன்றுடன் கொண்ட
வீயா வமுதமும் வேண்டிற் போய்த்தரும்
அரும்பெறற் பண்ட மொருங்ககத் தடக்கி 75
விட்டன ரிருவா முட்டில் செல்வத்துப்
பல்விலை வாணிகர் நல்விலைச் சேரி
புல்லிதழ் பொருந்திய நல்லித ழாக

அந்தணர் தெரு[தொகு]

மேன்முறை யியன்ற நான்மறைப் பெருங்கடல்
வண்டுறை யெல்லை கண்டுகரை போகிப் 80
புறப்பொரு ளல்லா வறப்பொரு ணாவின்
ஒளிகண் கூடிய நளிமதி போல
ஓத்தொடு புணர்ந்த காப்புடை யொழுக்கின்
உலகப் பல்லுயிர்க் கலகை யாகிப்
பெருந்தகை வேள்வி யருந்தவப் படிவமொடு 85
தந்தொழி றிரியாத் தரும நெஞ்சின்
அந்தணர் சேரி யகவித ழாக

அமைச்சர் தெரு[தொகு]

இருநில வரைப்பி னெதிர்ப்போ ரின்றி
அருநிலை யுலகி னாட்சி விறப்பினும்
பெரும்படைக் கொற்றம் பீடழிந்து சுருங்கா 90
அரும்படை மன்ன ராற்றலி னெருங்கக்
தலைமையின் வழீஇய நிலைமை யெய்தினும்
உற்றது முடிக்கு முறுதி நாட்டத்துக்
கற்றுப்பொரு டெரிந்த கண்போற் காட்சி
அருமதி யமைச்சர் திருமதிற் சேரி 95
மாசில் மைந்தாது சுமந்த மத்தகத்
தாசில் பன்மல ரல்லி யாகச்

அரண்மனை[தொகு]

சுடுகதி ரணிந்த சூழ்கதிர்ச் செல்வன்
விடுசுடர்ப் பேரொளி விமானம் போலச்
சேணொளி திகழு மாண்வினை மாடம் 100
வேண்டிய மருங்கிற் காண்டக நெருங்கிச்
செஞ்சுடர் மணிமுடி திகழுஞ் சென்னிப்
பைந்தலை நாகர் பவணங் கடுப்பக்
காப்பின் றாயினுங் கண்டோ ருட்கும்
யாப்புடைப் புரிசை யணிபெற வளைஇ 105
அருமணிப் பைம்பூ ணரசகத் தடைந்து
வாயி லணிந்த வான்கெழு முற்றத்துக்
கோயில் கொட்டை யாகத் தாமரைப்
பூவொடு பொலியும் பொலிவிற் றாகி
அமையாச் செய்தொழி லவுணர்க் கடந்த 110
இமையாச் செங்க ணிந்திர னுறையும்
அமரா பதியு நிகர்தனக் கின்றித்
துன்ப நீக்குந் தொழிலிற் றாகி
இன்பங் கலந்த விராச கிரியமென்
றெண்டிசை மருங்கினுந் தன்பெயர் பொறித்த 115
மன்பெருச் சிறப்பின் மல்லன் மாநகர்

உதயணன் இராசகிரியம் புகுதல்[தொகு]

சாரச் சென்றதன் சீர்கெழு செல்வமும்
விள்ளா விழுச்சீர் விச்சா தரருறை
வெள்ளியம் பெருமலை யன்ன விளங்கொளி
மாட மறுகின் மயங்கொளிக் கழுமலும் 120
நீடுபுகழ்க் குருசி னெஞ்சிடை நலிய
வள்ளிதழ்க் கோதை வாசவ தத்தையை
உள்ளுபு திருநகர் புக்கன னுலந்தென்.

3 3 இராசகிரியம் புக்கது முற்றிற்று.