பெருங்கதை/3 4 புறத்து ஒடுங்கியது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

3 4 புறத்தொடுங்கியது

யவனச்சேரி முதலிய சேரிகள்[தொகு]

உள்ளுத லானா துள்ளகஞ் சுருங்கிய
வள்ளிதழ் நறுந்தார் வத்தவன் றன்னொடு
விண்ணுற நிவந்த பண்ணமை படைமதில்
வாயிலு மருங்கிலுங் காவல் கண்ணி
வேந்துபிழைத் தொழுகினுங் காய்ந்துகலக் கறாஅ 5
முழுப்பரி சார முதற்க ணெய்தி
விழுப்பெருஞ் செல்வமொடு வென்றி தாங்கிய
ஐம்பதி னிரட்டி யவனச் சேரியும்
எண்பதி னிரட்டி யெறிபடைப் பாடியும்
அளப்பருஞ் சிறப்பி னாயிர மாகிய 10
தலைப்பெருஞ் சேனைத் தமிழச் சேரியும்
கொலைப்பெருஞ் கடுந்திறற் கொல்லர் சேரியும்
மிலைச்சச் சேரியுந் தலைத்தலை சிறந்து

சித்திரசாலை முதலியன[தொகு]

வித்தக வினைஞர் பத்தியிற் குயிற்றிய
சித்திர சாலையு மொத்தியைந் தோங்கிய 15
ஒட்டுவினை மாடமுங் கொட்டுவினைக் கொட்டிலும்
தண்ணீர்ப் பந்தருந் தகையமை சாலையும்
அறத்தியல் கொட்டிலு மம்பலக் கூடமும்
மறப்போர்க் கோழி மரபிற் பொருத்தும்
விறற்போ ராடவர் விரும்பிய கண்ணும் 20
மறக்களி யானை வடிக்கும் வட்டமும்
கடிசெல் புரவி முடுகும் வீதியும்
அடுத்தொலி யறாஅ வரங்கமுங் கழகமும்
அறச்சோற் றட்டிலு மம்பலச் சாலையும்
தேவ குலனுந் தேசிகப் பாடியும் 25
மாவுந் தேரு மயங்கிய மறுகும்
காவுந் தெற்றியுங் கடவுட் பள்ளியும்
தடவளர் செந்தீ முதல்வர் சாலையும்
வேண்டிடந் தோறுங் காண்டக நெருங்கி
ஆதி யாகி யமைந்தவனப் பெய்தி 30
மயங்கிய மாந்தர்த் தாகி யார்க்கும்
இயங்குதற் கின்னாப் புறம்பணைச் சேரியும்
அந்தண் பாடியு மணுகி யல்லது
வெந்திறல் வேகமொடு விலக்குதற் கரிய
ஐங்கணைக் கிழவ னமர்ந்து நிலை பெற்ற 35
எழுதுவினைத் திருநக ரெழிலுற வெய்தி

பொய்கை[தொகு]

இட்டிகைப் படுகாற் குட்டக் கோணத்
துத்தர மருங்கி னத்தினஞ் சொரிந்த
மணிதெளித் தன்ன வணிநிறத் தெண்ணீர்ப்
பெருந்தண் பொய்கை மருங்கிற் குலாஅய்ச் 40

தாபதப்பள்ளி அமைந்துள்ள இடம்[தொகு]

சேறுபடு செறுவி னாறுநடு கடைசியர்
கழிப்புநீ ராரலொடு கொழுப்பிறாக் கொளீஇய
நாரைச் சேவல் பார்வலொடு வதிந்த
எழிற்பூம் புன்னைப் பொழிற்புடை நிவந்த
வள்ளிதழ்த் தாமரை வான்போ துளரி 45
முழுத்திரட் டெங்கின் விழுக்குலை நெற்றி
அகமடல் வதிந்த வன்புபுரி பேடை
நரல்குர லோசை யளைஇ யயல
கணைக்காற் கமுகி னிணைப்பொதி யவிழ்ந்த
அம்மென் பாளையு ளசைந்த வண்டினம் 50
மம்மர் வைகறை மருங்குதுயி லேற்ற
அனந்தர் முரற்சி யளைஇப் புதைந்த
பூங்கண் முற்றிய புறத்துப்புடை யாடித்
தேங்கட் டும்பி தீங்குழ லிசைப்ப
இயல்பிற் கெழீஇய வின்றுணைப் பிரிந்தோர்க் 55
கயலரி தாக வூழூழ் கவற்றும்
வயலுந் தோட்டமு மயல்பல கெழீஇய
தாமரைச் செங்கட் டமனிய விணைக்குழைக்
காமன் கோட்டத்துக் கைப்புடை நிவந்த
இளமரக் காவி னிணைதனக் கில்லாத் 60
தூபத் தொழுக்கத் தாபதப் பள்ளி
தமக்கிட மாக வமைத்த பின்றை

அமைச்சர் செயல்[தொகு]

வீழ்துணை மாதர் விளிவுநினைந் திரங்கி
வாழ்த லாற்றான் வாய்மொழி யரசன்
உற்றவ னாருயி ருய்தல் வேண்டி 65
இற்றவள் பிறந்துழிக் கான்னு மந்திரம்
கற்றுவினை நவின்றனென் காட்டுவெ னினக்கென
வஞ்ச மாயினு நெஞ்சுவலி யுறுக்கெனக்
கண்கவர் பேரொளிக் காகதுண் டகனெனும்
அந்த ணாளனை யமைச்சர் தருதலின் 70

காகதுண்டக முனிவன் கூற்று[தொகு]

அருமதி யண்ணற் கவனிது கூறும்
இருமதி யெல்லை யியைந்த விரதமொ
டிரக்க மின்றி யிருக்கல் வேண்டும்
அத்துணை யிருந்தபி னருங்காட் டகவயின்
மொய்த்தழ லீமத்து முன்னர்க் காட்டிய 75
தவாஅ வன்பிற் றவமா சாதனை
போகிய பொழுதி னாகிய நலத்தொடு
மேலை யாகிய வடிவின ளாகி
மற்றவ ளடைவது தெற்றெனத் தெளியெனக்
கற்புடை மாதரைக் கைப்படுத் தன்னதோர் 80
கட்டுரை வகையிற் பட்டுரை யகற்றி
ஆப்புடை யொழுக்க மறியக் கூறிக்
காப்பொடு புணரிற் காணலு மெளிதெனக்
காவல குமரற்கு மேவன வுரைத்து
விடுத்தவன் போகிய பின்றை மடுத்த 85

உருமண்ணுவா முதலியோர் கூற்று[தொகு]

இருநிலம் புகுதலு மொருவிசும் பிவர்தலும்
வருதிரை நெடுங்கடல் வாய்க்கொண் டுமிழ்தலும்
மந்தர மேந்தலு மென்றிவை பிறவும்
பண்டியல் விச்சை பயிற்றிய மாக்களைக்
கண்டு மறிதுங் கண்கூ டாகச் 90
செத்தோர்ப் புணர்க்கும் விச்சையொடு புணர்ந்தோர்க்
கேட்டு மறியலம் வீட்டருஞ் சிறப்பிற்
புண்ணிய முடைமையி னண்ணின னாமிவன்
ஒருதலை யாகத் தருதல் வாயென
உறுதி வேண்டி யுருமண் ணுவாவும் 95
மருவிய தோழரு மன்னனைத் தேற்றி
மாய வொழுக்கமொடு சேயதை நோக்கி
மிகுதிக் காதன் மகத மன்னனொடு
சுற்ற மாக்குஞ் சூழ்ச்சிய ராகிக்
கொற்ற வேந்தன் குறிப்புவழி யோடி 100
அகத்துறைந் தொடுங்குதல் செல்லா ரகன்மதிற்
புறத்தொடுங் கினராற் பொருள்பல புரிந்தென்.

3 4 புறத்தொடுங்கியது முற்றிற்று.