பெருங்கதை/4 9 விருத்தி வகுத்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

4 9 விருத்தி வகுத்தது

உதயணன் உருமண்ணுவாவுக்கு விருத்தி யளித்தல்[தொகு]

உவகையின் மகிழ்ந்தாண் டுறையுங் காலை
உயர்பெருந் தொல்சீ ருருமண் ணுவாவிற்
கெழுநா டோறும் முழுநகர் புகழப்
படிவ முத்தீக் கடிகைக் கணனும்
ஐம்பெருங் குழுவு மத்தி கோசமும் 5
மன்பெருஞ் சிறப்பின் மனைப்பெருஞ் சனமும்
தேனேர் தீஞ்சொற் றேவி மார்களும்
தானையுஞ் சூழத் தானே யணிந்துதன்
நாம மோதிர நன்னாட் கொண்டு
சேனா பதியிவ னாகெனச் செறித்துப் 10
பன்னூ றாயிரம் பழுதின்று வருவன
மன்னூர் வேண்டுவ மற்றவற் கீத்துக்
குதிரையுந் தேருங் கொலைமருப் பியானையும்
எதிரிய சிறப்போ டெனைப்பல நல்கிப்
பண்பார் சாயற் பதுமா பதிதன் 15
கண்போ றோழி காண்டகு காரிகை
இயைந்த வேற்க ணிராசனை யென்னும்
வயங்கிழை மாதரொடு வதுவை கூட்டிப்
பெருங்கடிச் சிறப்பும் பெயர்த்தொருங் கருளி
இருங்கடல் வரைப்பி னிசையொடு விளங்கிய 20
சயந்தியம் பதியும் பயம்படு சாரல்
இலாவா ணகமு நிலாவ நிறீஇக்
குரவரைக் கண்டவர் பருவர றீர
ஆண்டினி திருந்தியாம் வேண்ட வருகென
விடுத்தவற் போக்கிய பின்றை யடுத்த 25

யூகியின் பேறு[தொகு]

ஆதி யாகிய சேதிநன் னாடு
யூகிக் காகென வோலை போக்கி

இடவகன் பெற்றவை[தொகு]

இடவகற் கிருந்த முனையூ ருள்ளிட்
டடவி நன்னா டைம்பது கொடுத்து
விறற்போர் மன்ன ரிறுக்குந் துறைதொறும் 30
புறப்பது வாரமொடு சிறப்புப்பல செய்து
புட்பகம் புக்குநின் னட்புட னிருந்து
விளித்தபின் வாவென வளித்தவற் போக்கி

வயந்தகனுக்கு அளித்தவை[தொகு]

வயந்தகன் றனக்கு வழக்குப்புற மாகெனப்
பயம்படு நன்னகர் பதினொன் றீத்து 35
வைக லாயிரங் கைவயிற் கொடுத்துப்
பிரியா துறைகென வருடலை நிறீஇ

இசைச்சன் முதலாயினோர் பெற்றவை[தொகு]

இசைச்சன் முதலா வேனோர் பிறர்க்கும்
பயத்தின் வழாஅப் பதிபல கொடுத்துப்
பெயர்த்தனன் போக்கிப் பிரச்சோ தனனாட் 40
டருஞ்சிறைக் கோட்டத் திருந்த காலைப்
பாசறை யுழந்த படைத்தொழி லாளரை
ஓசை முரசி னொல்லெனத் தரீஉ

னெச்சத் தோர்கட் கியன்றவை யீத்து
நிச்ச மாயிர முற்றவை நல்கிப் 45
பக்கற் கொண்டு பாற்படுத் தோம்பி
இலாவா ணகவழிச் சாதக னென்னும்
குலாலற் கேற்பப் பெருங்குய மருளி
அருந்தினி துறைகென விரண்டூ ரீத்து
மகதத் துழந்த மாந்தர்க் கெல்லாம் 50
தகுநல் விருத்தி தான்பாற் படுத்துத்
தத்த மூர்வயிற் சென்றுவரப் போக்கி
ஆய்ந்த சிறப்பி னாதித்ய தருமற்
கோங்கிய சிறப்பி னோரூர் நல்கி
அத்தறு வாயி லாருயிர் வழங்கிய 55
சத்திய காயன் மக்களைக் கூஉய்த்
தந்நிலைக் கெல்லாந் தலைமை யியற்றித்
தொன்றிற் கொண்டு தொடர்ச்சியிற் பழையோர்
ஒன்றிற் குதவா ரென்றுபுறத் திடாது
நன்றி தூக்கி நாடிய பின்றை 60
யூகி தன்னோ டொழிய வேனைப்
பாகியல் படைநர் பலரையும் விடுத்து
மாசின் மாணகக் கோயில் குறுகிக்
குடிப்பெருங் கிழத்திக்குத் தானஞ் செய்கென
நடுக்கமில் சேம நன்னா டருளி 65

உதயணன் தன் தேவிமார்க்கு விருத்தியளித்தல்[தொகு]

வாசவ தத்தைக்கும் பதுமா பதிக்கும்
தேவி விருத்தி யாவன வருளி
ஆடலும் பாடலு மணியினு மிக்கோர்
சேடி மாரையு மிருகூ றாக்கிக்
கொள்கென வருளிக் குறைபா டின்றி 70
நாடா டோறு மானா வுவகையொடு
காட்சி பெருமுத லாகக் கவினிய
மாட்சி நீரின் மாண்சினை பல்கிய
வேட்கை யென்னும் விழுத்தகு பெருமரம்
புணர்ச்சிப் பல்பூ விணர்த்தொகை மீன்று 75
நோயி லின்பக் காய்பல தூங்கி
யாழ வற்புக்கனி யூழறிந் தேந்த
ஓவாது நுகர்ந்து தாவாச் செல்வமொ
டொழிவின் மாநக ரறக்கடந் தாங்கி
ஒழுகுப மாதோ வொருங்குநன் கியைந்தென். 80

4 9 விருத்தி வகுத்தது முற்றிற்று.