பெற்றோர் கொடுத்த பெருங்கொடை/ஆணா பெண்ணா
9. ஆணா பெண்ணா?
குழந்தை ஆணாகவோபெண்ணாகவோ பிறப்பதற்கு அதன் தாய் காரணமல்லவென்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதோடு குழத்தையின் தகப்பன் தான் அதற்குக் காரணம் என்றால் இன்னும் ஆச்சரியம் அதிகமாகும். ஆண் அணுவிலுள்ள 24 ஜோடி நிறக்கோல்களில் உருவ வேறுபாடுள்ள நிறக்கோல்கள் தான் ஆணாவதற்கும் பெண்ணாவதற்கும் காரணம். பெண் அணுவிலுள்ள 23 ஜோடி நிறக்கோல்களை உருவ ஒற்றுமைப்படி ஆண் அணுவிலுள்ள 23 ஜோடிகளுடன் பொருத்தி வைக்க முடியும். அப்படி வைத்தால் எது பெண்ணிடத்திலிருந்து வந்தது. எது ஆணிடத்திலிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு உருவ ஒற்றுமை இருக்கிறது. மீதியுள்ள 24-ஆம் ஜோடியிலும் பெண் அணுவிலுள்ள இரண்டு நிறக்கோல்களிலும் ஆண் அணுவிலுள்ள ஒரு நிறக்கோலும் ஒரே மாதிரி உருவம் பெற்றிருக்கும். இவற்றிற்கு எக்ஸ் (X) நிறக்கோல்கள் என்று பெயர். உருவத்தில் மாறுபட்டிருக்கும் ஆண் அணுவிலுள்ள மற்றொரு நிறக்கோலுக்கு ஒய் (Y) நிறக்கோல் என்று பெயர்.
அண்டத்தில் எப்போதும் 'எக்ஸ்' நிறக்கோல் ஒன்று இருக்கும். ஆனால் விந்தணுவிலே எப்போதும் 'எக்ஸ்' நிறக்கோல் இருக்குமென்பதில்லை; சிலவற்றில் 'எக்ஸு'ம், சிலவற்றில் 'ஒய்'யும் இருக்கும். 'எக்ஸ்'ஐக் கொண்ட விந்தணுப் பாய்ந்து அண்டம் பூரித்தால் பெண் குழந்தை பிறக்கும். 'ஒய்'யைக் கொண்ட விந்தணுப் பாய்ந்து அண்டம் பூரித்தால் ஆண் குழந்தை உண்டாகும்.
நிறக் குருடாவதும் நிறக்கோல்களின் தன்மையாலேயே இந்தக் குறைபாடு ஆண்களிடமே அதிகமாகக் காணப்படுகிறது. பெண்களிடம் மிகக் குறைவாகவே தோன்றும்.