உள்ளடக்கத்துக்குச் செல்

பெற்றோர் கொடுத்த பெருங்கொடை/ஜீன்கள்

விக்கிமூலம் இலிருந்து

6. ஜீன்கள்

ஜீன்களே பலவகையான தன்மைகளுக்கும், அங்க அமைப்புக்கும் காரணமாக இருக்கின்றன. அவற்றின் இயல்பைப்பற்றி முற்றும் வரையறுத்துக் கூறுவது மிகக் கடினமான காரியம் என்றாலும், அவற்றால் ஏற்படுகிற பல தன்மைகளைப்பற்றி ஆராய்ந்து கண்டிருக்கிறார்கள். அதற்கு முக்கிய உதவியாக இருந்தது ஒருவகை ஈயாகும் (Fruit Fly).

அடுத்த பக்கத்தில் படத்திலே காணப்படுபவைதான் அந்த ஈக்கள். இடது பக்கத்தில் இருப்பது ஆண் ஈ; வலது பக்கத்தில் இருப்பது பெண் ஈ. அவற்றினுடைய உயிரணுக்களிலுள்ள நிறக்கோல்கள் கீழே காண்பிக்கப்பட்டுள்ளன. ஈயின் விந்தணுவிலும் அண்டத்திலும் நான்கு நான்கு ஜோடி நிறக்கோல்கள் இருக்கின்றன. பெண் ஈயின் நிறக்கோல்களில் ஒவ்வொரு ஜோடியும் ஒரே மாதிரி வடிவங் கொண்டிருப்பதையும், ஆண் ஈயின் நிறக்கோல்களில் ஒரு ஜோடி மட்டும் மாறுபட்டிருப்பதையும் படத்தில் காணலாம். ஒவ்வொரு வருக்கத்தைச் சேர்ந்த உயிர்ப் பொருள்களின் உயிரணுவிலும் ஒரே எண்ணிக்கையுள்ள நிறக்கோல்கள் உண்டென்றும், அவற்றை ஒரேமாதிரி உருவமுடைய ஜோடிகளாகப் பிரித்து வைக்க முடியுமென்றும், சாதாரணமாக விந்தணுவிலுள்ள ஒரு ஜோடி மட்டும் உருவத்தில் மாறுபட்டிருக்கும் என்றும் முன்பே கூறினேன். இந்த மாறுபட்ட ஜோடி சில உயிர்களிலே அண்டத்தில் இருப்பதுண்டு.

ஈயின் கால்கள் ஜோடியாக வளர ஒரு ஜீன் உதவுகிறது; ஒரு ஜீன் அதன் சிறகுகளின் வடிவத்தை அமைக்கிறது. சில ஜீன்கள் கண்ணின் வடிவத்தையும்

ஆண் ஈ,பெண் ஈ,

படம் 2.

நிறத்தையும் நிர்ணயம் செய்கின்றன. இன்னும் சில தேகத்தின் நிறத்தைத் திட்டம் செய்கின்றன.

கண், தலைமயிர் முதலிய வெவ்வேறு உறுப்புக்களுக்கு ஜீன்கள் காரணமாக இருப்பது போல நிறத்துக்கும் அவையே காரணம். அந்தி மல்லிகைச் செடியின் நிறக்கோல்களில் நிறத்துக்குக் காரணமாக ஒரு ஜீன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த ஜீனின் முக்கியத் தன்மை என்னவென்றால், அது ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிறக்கோலில் ஒரு குறிப்பிட்ட பாகத்தில்தான் அமைந்திருக்கும். கலப்பினச் சேர்க்கை ஏற்படும்போது நிறத்துக்கு ஏதுவான ஜீன் என்னவாகிறது என்று இப்போது கவனிப்போம்.

முதலில் கலப்பில்லாத ஒரு சுயமான வெள்ளைப் பூப் பூக்கும் அந்தி மல்லிகையை எடுத்துக் கொள்வோம். அதன் உயிரணுவிலே பல நிறக்கோல்கள் இருக்குமல்லவா? அவற்றை யெல்லாம் உருவத்தில் ஒத்திருக்கும்படியான ஜோடிகளாகப் பிரித்து வைக்கலாம் என்பதும் நமக்குத் தெரியும். அப்படி வைத்தால் ஒத்த ஜோடிகளிலே உள்ள இரு நிறக்கோல்களில் ஒன்று ஆண் தன்மையிலிருந்தும் மற்றொன்று பெண் தன்மையிலிருந்தும் கிடைத்தவையாகும். ஒவ்வொரு ஜோடியிலும் ஒரே மாதிரியான தன்மைக்குக் காரணமான ஜீன்கள் இருக்கின்றன. அதாவது, ஒரு ஜோடியிலுள்ள இரண்டு நிறக்கோல்களிலும் ஒரே தன்மைக்குக் காரணமான ஜீன்கள் ஒரே அளவில் இருக்கும். நிறத்துக்குக் காரணமாக ஒன்றில் ஒரு ஜீன் இருந்தால் மற்றொன்றிலும் ஒரு ஜீன் இருக்கும். ஆதலால் இந்தச் சுயமான வெள்ளை அந்தி மல்லிகையில், நிறத்துக்குக் காரணமான ஜீன்கள் ஏதாவது குறிப்பிட்ட ஒரு ஜோடிநிறக்கோல்களில் ஒவ்வொன்றிலும் ஒன்று வீதம் மொத்தமாக இரண்டு இருக்குமென்று நாம் அறியலாம். வெள்ளை நிறத்துக்குக் காரணமான ஜீனை வெ என்ற எழுத்தால் சுருக்கமாகக் குறிப்பிட்டால் அவை இரண்டையும் வெ வெ என்று எழுதிக் காட்டலாம். இதே மாதிரி சுயச் சிவப்புப் பூப் பூக்கும் அந்தி மல்லிகையில் உள்ள நிற ஜீன்களை சிசி என்று எழுதிக் காட்டலாம். கலப்பினச் சேர்க்கையில் அவை எவ்வாறு அமைகின்றன என்று இனிக் கவனிப்போம்.

விந்தணுவும் அண்டமும் முதிர்ச்சி அடைந்து கருவுண்டாவதற்குத் தகுதியடைகின்ற காலத்தில் அவைகள் ஒவ்வொன்றிலும் முதிர்ச்சி பெறாத அணுவிலிருந்த நிறக்கோல்களில் பாதிதான் இருக்கும். அந்தப் பாதியானது ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் ஒவ்வொன்றாக வந்து அமைந்தது. ஆதலால், அந்தி மல்லிகையின் உயிரணுவில் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்துக்கான ஜீன் எது இருந்தாலும் முதிர்ச்சிபெற்ற விந்தணுவிலோ அல்லது அண்டத்திலோ ஒவ்வொன்றுதான் இருக்கும். அவை சேரும்போது வெண்சிவப்பு நிறம் ஏற்படுகிறது. இதை மூன்றாவது படம் நன்கு காட்டுகிறது.

வெண் சிவப்புப் பூவுள்ள அந்தி மல்லிகையின் நிறக்கோல்களில் ஒரே உறுவமுள்ள ஒரு ஜோடியில் பழையபடி நிறத்துக்கான ஜீன்கள் இரண்டு இருக்கும்.

ஆனால் அவைகளில் ஒன்றில் இருப்பது சிவப்பு நிறத்துக்கான ஜீன்; மற்றொன்றில் இருப்பது வெள்ளை நிறத்துக்கான ஜீன். ஆகவே, வெண்சிவப்பு அந்தி மல்லிகைகள் தமக்குள்ளே ஒரே இனச் சேர்க்கையாகும்போது என்னவாகும் என்று கவனிப்போம்.

படம் 3.

அவற்றின் உயிரணுக்களில் கருவுண்டாகக் காரணமான அணுக்கள் முதிரும்போது விந்தணுவிலும் அண்டத்திலும் வெள்ளை நிறத்துக்கான ஒரு ஜீனோ அல்லது சிவப்பு நிறத்துக்கான ஒரு ஜீனோதான் இருக்கும். ஆதலால் அவை சேர்ந்து கருவாகும்போது கீழ்க்கண்டவாறு புதிய பூச்செடிகள் தோன்றுகின்றன. முதிராத அணுவில் உள்ள நிற ஜீன்களில் ஒன்று வெள்ளைக்கானது; மற்றொன்று சிவப்புக்கானது. அவற்றை வெசி என்று குறிப்பிடலாம். அணு முதிரும் போது அதில் வெ அல்லது சி மட்டுந்தான் இருக்கும். அப்படி உண்டான விந்தணுவும் அண்டமும் கலந்து எவ்வாறு புதிய செடிகள் உண்டாகின்றன என்பதை 4-வது படத்தில் காணலாம்.

வெண்சிவப்புப் பூக்கள் இரண்டின் ஒரே இனச் சேர்க்கையால் எவ்வாறு 1:2:1 என்ற விகிதத்தில் வெள்ளை, வெண்சிவப்பு, சிவப்பு நிறப்பூக்களைத் தரும் அந்தி மல்லிகைகள் உண்டாகின்றன என்பதை இந்தப் படம் விளக்குகிறது. இவற்றில் வெவெ ஜீனுடைய பூச்செடிகளை அவற்றிற்குள்ளேயே சேர்த்தால் வெள்ளைப் பூவே உண்டாகும். சிசி ஜீனுடைய செடிகளைச் சேர்த்தால் சிவப்புப் பூவே உண்டாகும். வெசி வெசி ஜீனுடைய செடிகளைச் சேர்த்தால் படத்தில் கண்டவாறு மூவகைப் பூக்கள் உண்டாகும்.